பதிவுகளில் அன்று: பெண்ணியாவின் ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’

Friday, 13 September 2019 07:50 - ஊர்வசி (இலங்கை) | அனுப்பியவர்: ரஞ்சி (சுவிஸ்) - 'பதிவுகளில்' அன்று
Print

பெண்ணியாவின் கவிதைகள்... 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


பதிவுகள் டிசம்பர் 2006 இதழ் 84

இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் ஒரு நேசமான தடவலைப்போல பெண்ணியாவின் கவிதைவரிகள் ஆங்காங்கு மனதைச் சிலிர்க்கச் செய்கின்றன. வீடு, வேலை, முற்றம, சுற்றம் என்று மட்டும் வட்டங்களிடப்பட்ட பெண்களின் வாழ்வில், இயல்பான நேசத்துடன் உணர்வுச் சூழல்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்புக்காக ஏங்குவதே வழக்கமாகி விட்டபின், நம்பிக்கையான நட்பாகுபவை இரண்டுதான். ஒன்று மொழி புரியாத குழந்தை மற்றையது இயற்கை. முற்றத்து மரங்களுக்கும் பெண்களுக்கும் உள்ள நேசம் அலாதியானது. மிக இயல்பானது. அவற்றில் வந்து தங்கும் பறவைகளும் அணில்களும்தான் ஆத்மார்த்த நண்பர்கள். வீட்டிலுள்ள உறவினர்க்கும் புரியாத உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொண்டவையும் கூட. இப்படித்தான் பெண்ணியாவின் முதலாவது கவிதை ‘நேசம் அல்லது நெல்லிமரம்’ வெளிப்படுகின்றது. அடக்கி வளர்க்கப்பட்ட பெண்களின் உணர்வுப் பிரதிபலிப்பாக தன்மீதே நம்பிக்கையிழந்த வாழ்வின் கருத்தாக ஆரம்பிக்கின்றது.

‘என்னையே பார்க்கும் நெல்லிமரம்
என்ன வடிவாய்த்தான் உள்ளது.
என் முகத்தை விட!’
(நேசம் அல்லது நெல்லிமரம்)


என்கிற வரிகள்.

இன்றைய சமூகத்தில் பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் திகழ்வது வெளிப்படை எனினும் பெரும்பாலான நடுவயதுப் பெண்களிடையே இத்தகைய உணர்வுகளே காணப்படுகின்றன. இங்கு தொனிக்கும் சோக உணர்வை ஊசலாடும் நம்பிக்கையின்மையை இன்னும் வலிதாக வெளிப்படுத்துகின்றன.

ஒரு உருண்டையின்
நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்’

(மாதராய்ப் பிறந்திட)

என்ற வரிகள்.

உருண்டைக்கு நுனி இருக்காது. இருந்தாலும் வலுவாகப் பற்றிக் கொள்ளக் கூடியதாக அமையாது. அதில் தொங்கும் ஒரு மனதில் ஊசலாடும் நம்பிக்கைகளும் மிக மெல்லியவையே.வீட்டிற்குள் மனைவி, தாய், தாதி என்ற வகைகளில் வளைய வரும்போது, பழக்கப்பட்ட ஒரு தடத்தில் எந்த மாற்றமும் இல்லாத வாழ்க்கை முறையில் இயங்கும் மரத்துப்போன உள்ளத்திலும் ஒரு தேடல்; என்னவென்றே இனம்புரியாத தேடல். சராசரியாக எல்லாப் பெண்களின் வாழ்விலும் காணப்படக்கூடிய உணர்வுதான். மாற்றங்களை எதிர்பார்த்த போதும் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்போது சமூகத்திற்கான அச்சம் அவர்களை சிலையாக்கிவிடும்.

 

‘சில சமயம் அவள் உணர்ந்தாள்
தான் ஒரு
சிலையாக்கப்பட்டிருப்பதாக.’

(கல்)

ஆயினும் பெண்களைக் கல்லாக்கி அடக்கி ஒடுக்கும் சமூகத்தைப் பார்த்துக் கெஞ்சுகிறார்.

‘சம்பிரதாயக் கயிற்றில் எனைத்
திரித்து வதை செய்ய வேண்டாம்
அதனுள் அழுகிய மனுஷியாய் வாழுதல்..
அழிந்து அமிழ்ந்து போதல்
என்னால் இயலாது.’

(முட்களின் கதைகள்)
என்று.

இதனால் நிஜங்களை நேசிக்கிறார். வாழ்தலையும் மரணித்தலையும் தனக்காகவே செய்து கொள்வதற்கு ஒவ்வொரு பெண்ணையும் தூண்டுகிறார்.

‘என் முயல்வுகளும் சிந்தனைகளும்
தோற்கடிக்கப்படலாமென உணர்ந்தும்
நான் போரிடுகிறேன்.
உங்களுள் ஒருத்தியாய் அல்ல
ஓர் உன்னத பிறவியாய்.’

(முட்களின் கதைகள்)

என்று தன் இலட்சியங்களுடன் மேலெழுந்து நிற்கிறார் பெண்ணியா. தன்னைச் சூழ உள்ளவர்கள்

‘எல்லாவற்றினதும் செய்கைகளின் பின்னும்
ஒளிந்து மறைந்து கிடக்கும்
பெருமையின் தேடலை
பொய்மைத்தனத்தை உணர்கிறேன்.’

(வெறுமை)

என உணர்தலினூடாக

‘வாழ்தலுடன் கூடிய நடிப்புத்திறன்
எனக்கிருப்பதாய் மார்தட்டிக்கொள்ள
நான் நிஜங்களைப் பொய்ப்பிப்பவளல்ல’

(முட்களின் கதைகள்)

என்று தன்மீது பொய்மைத்தனத்தின் நிழல்கூட படிந்துவிடாதபடி எவ்வித பாசாங்குகளுமற்று மிக வெளிப்படையான இயல்புகளுடன் வெளிப்படும் பெண்ணியா

‘நான் யதார்த்தத்தை அவாவுகிறேன்
அதை எங்கெங்கும் காண்கிலேன்’
(இருட்டு)

என யதார்த்தத்தை தேடி ஏமாற்றமடைந்து வெதும்புகிறார்.

அநீதிகளை சகித்துக் கொண்டு வாழ முனைதலில்

ஆனால் நான்
மீண்டும் ஒருமுறை
இறக்கப் போவதில்லை.
என் புது உணர்வு எழுகின்றது.
நான் வீழ்த்தப்படுவதை
தகர்த்தெறிய’
(படியோலையின் குரல்)
எனவும் கூறுதலுடன் நின்றுவிடாது

‘என் பயணம் ஆரம்பித்தாயிற்று.
முட்களற்ற இலக்கை நோக்கி.
தனித்தாயினும் பயணிப்பதே இயன்றவரை.
என் சிறகுகளின் மீது நீளும்
எல்லாக் கைகளுக்கெதிராகவும்
என் கனவுகளின் மீது
கொடூரங்களை வரைய நீளும்
எல்லாத் தூரிகைகளுக்கெதிராகவும்.
(என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!)
என உறுதியுரைக்கிறார் பெண்ணியா.

‘வாழ்வேன்
வாழ்வேன்
வாழ்வேன் நான்.’


என்று தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டு தனக்கான பாதையை வகுத்துக் கொண்டுள்ளார். இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ ஒலிக்கிறது.

பதிவுகளுக்கு அனுப்பியவர்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 13 September 2019 08:06