பதிவுகளில் அன்று: கருமையமும் மையமற்றுச் சுழன்ற சில நாடகங்களும்!

Friday, 13 September 2019 08:07 - என்.கே.மகாலிங்கம் - 'பதிவுகளில்' அன்று
Print

'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


பதிவுகள் ஏப்ரல் 2007 இதழ் 88

- என்.கே.மகாலிங்கம் -கருமைய நாடக நிகழ்வுக காட்சி..கருமையத்தின் 3வது ஆண்டு நாடக நிகழ்வுகள் மார்ச் 31 சனிக்கிழமையே பார்க்கக் கிடைத்தன. பெண்கள் பயிற்சிப் பட்டறையிலிருந்து மூன்று நாடகங்களும் செழியன், தர்சன் ஆகியோரின் இரு நாடகங்களும் சுதர்ஷனின் நாட்டிய நாடகமும் நிகழ்ந்தன. ஏறக்குறைய இரண்டரை மணித்தியாலங்கள். பெண்கள் பட்டறையின் நாடகங்கள் சிறியவை என்றாலும் தாம் சொல்ல வந்த செய்தியை சுருக்கமாக நடித்துக் காட்டி விடை பெற்றன.

முதலாவது நாடகம், இன்னும் எங்கள் காதில். தனா பாபுவின் ஆக்கம், நெறியாள்கை. தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் சிலரின் இரட்டை வேடத்தையும் போலித்தனத்தையும் புட்டுக் காட்டியது இந்நாடகம். யுத்தத்தில் இறக்கும் தம் உறவினரின் பெயரை வைத்துத் தாம் ஏதோ செய்ததாகப் பீத்திப் பெருமை கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதை இது. தன் மகனை யுத்தத்திற்கு அனுப்ப நொண்டிச் சாக்குக் காட்டுவதும், இயக்கத்தில் இருந்து வெளியேறிய பெண் என்றவுடன் திருமணம் செய்ய அஞ்சி ஒதுங்கும் மகனையும் பெற்றோரையும் காட்டும் கதை இது. தம் கருத்தைச் சுருக்கமாகவே வெளிப்படுத்தி எம் மக்களின் மனங்களை போலித்தனங்களை விமர்சித்து விட்டு, தீர்ப்புக் கூறாமல் விலகிச் செல்கிறது நாடகம். அந்தளவில் அது வெற்றியே.

தாலாட்டு நாடகம் இரண்டாவது. பெண்களின் நுண் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளைப் பெறும் பொறியாகப் பெண்களை நடத்துவதைக் காட்சிப்படுத்தியது நாடகம். அதில் இறுதியாக வந்து குழந்தைகளையும் பெண்களையும் அருமையான, இனிமையான, சோகமான குரலில் தாலாட்டுப் பாடினார் அம்மா யோகேஸ் பசுபதி. அவர் பாடிய குரலும் பாட்டும் பெண்களின் சோகத்துக்கு உயிரூட்டியதுடன் பார்வையாளர்களையும் அதனுடன் ஒன்றச் செய்தது. நாடகத்திற்கும் உயிர் கொடுத்தது. அதீதாதாவின் தாலாட்டுப் பாடல் இனித்தது.

அடுத்தது, சுயம் என்ற சிறிய நாடகம். ஆரம்பத்தில் அசையாமல் உறைநிலையில் பல நிமிசங்கள் நின்றபோதிலும் அந்நிலையிலிருந்து மீள வெளிக்கிட்டவுடன் அது நாடகமாக உருவெடுத்தது. இளம் பெண்களை அப்படி நிற்காதே, இப்படி நிற்காதே, இப்படி உடுக்காதே, அப்படி அழகுபடுத்தாதே என்று கட்டுப்படுத்துவது எம் சமூகம், ஆனால் மறுதலையாக, ஆண்கள் விரும்புவது பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து ஆட்டம் போடும் நடனங்களையே. இது என்ன இரட்டை வேடம்? அதையே சுயம் என்ற இந்நாடகம் தெளிவாகவும் நாடகத்திற்கேற்ற அளவுடனும், சிறந்த உத்திகளுடன் மையக் கருத்தை விட்டு நகராமல் சுருக்கமாக மனதைத் தைக்கக் கூடியதாக மௌனமாகக் கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறது. ஆக்கி அளித்த பெண்கள் பயிற்சிப் பட்டறைக்கு ஒரு கைதட்டல். பாராட்டு.

அடுத்த நாடகமான மொழிப்பாடு நாடகத்தின் பிரதியாக்கம் செழியன். நெறியாள்கை, நடிப்பு சபேசன், செழியன். ஒரு ஹோம்லெஸ், அதாவது வீடற்ற, நாடற்ற, மனநலம் இழந்தவன் போலக் காணப்படும் நடுத்தெரு தமிழன். அவனுடைய மனத்தைப் பிரதிபலிக்கும் இன்னொருவன். இருவரும்தான் பாத்திரங்கள். நடுத்தெரு மனிதன் மேடையின் வலது மூலையில் கிழிந்த உடையுடையுடனும், பேணி, உண்டு முடிந்த காய்ந்த உணவுப் பொட்டலம், அவர் எழுதிய கவிதைப் புத்தகம் இத்யாதியுடன் இருக்கிறான். ஹோம்லெஸ் மனிதனுக்குரிய அவலட்சணங்கள் உள்ளன. அவனுடைய மனம் ஆரம்பத்தில் மேடையின் நடுவில் அதிக நேரம் முயன்று பிறப்பெடுக்கிறது. அதேபோல அவனுடைய பேச்சும் பேதலித்த மனம் ஒன்றின் அல்லாடலைப் போல நெடுநேரம் மையமின்றி அலைகின்றது. பேசுகின்றது. பேசிக் கொண்டே அல்லது பிதற்றிக் கொண்டே இருக்கின்றது. உண்மையான உருவம் இடைக்கிடை நெடுநேரத்திற்குப் பிறகு கவிதை வாசிக்கின்றது. பாடுகின்றது. பொன்மொழிகளை உதிர்க்கின்றது. பிதற்றலில் தமிழ் மொழி வருகின்றது, மாமன் மாமி கதை வருகின்றது, மனைவி வருகிறாள். மச்சாள் வருகிறாள். எல்லாமே மனம் பேதலித்தவனுடைய உளறல்கள் போல எல்லையின்றி வந்து போகின்றன. முடிவில் திரும்பவும் மனம் உள்ளே போகின்றது.

கருமைய நாடக நிகழ்வுக காட்சி..

எம் பொறுமையைச் சோதிக்கவென்றே போடப்பட்ட நாடகம் இது. செழியனால் கூட எப்படி அத்தனை நேரம் கிழிந்த காற்சட்டையிலிருந்த நூலைப் பிடுங்கிக் கொண்டும், பேப்பரிலிருந்து துண்டுகளைக் கிழித்துக் கொண்டு பைக்குள் போட்டுகக் கொண்டும் இருக்க முடிந்ததோ? சபேசனின் குரலில் தெளிவே இருக்கவில்லை. என்ன சொல்கிறார் என்றே பலவேளைகளில் புரியவில்லை. மையமற்று ஓரங்களில் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்த நாடகம், கடைசியில் அப்பாடா இந்தா முடியப் போகிறது என்று எதிர்பார்;த்த வேளையிலும் முடியாமல் தொடர்ந்தது.

செழியன் ஒரு நல்ல சிறுகதையாக தன் அழகான மொழி நடையில் எழுதியிருக்க வேண்டிய கதையை நாடகமாக்கி மேடைக்குப் பொருத்தமற்றதாக்கி விட்டார்.

மெய் இழந்தபோது... என்ற அடுத்த நாட்டிய நாடகம் சுதர்ஷனுடையது. சுதர்;ஷனுடைய முத்திரை பதிந்துள்ள பேச்சு மொழியற்ற நாட்டியம் இது. உடல் மொழியை மட்டும் நம்பி காட்சிப் படுத்திய நாடகம் இது. ஆரம்பத்தில் ஒரு பெண் ஐயோ அம்மா என்று குழறியபடி ஓடி வந்து கவலையுடன் மேடையின் நடுவில் ஒளி வட்டத்தில் விழுகின்றார். முகமும் முடியும் சோகத்தை அள்ளி வீசியது. பின்னர் நாட்டியம் ஆரம்பமாகின்றது. மூன்று பெண்களும், மூன்று ஆண்களும் வெள்ளை உடையில் ஒத்திசைவுடன் ஆடினார்கள்.

வழக்கமான பரிச்சயமான தமிழ் நாட்டியமல்ல. முகபாவங்களும் அங்க அசைவுகளும் வெட்டுதல்களும் ஒட்டுதல்களும் ஓடுதல்களும் விழுதல்களும் எழுதல்களும உள் நுழைவுகளும் வட்டமிடுதல்களும் நிகழ்கின்றன. அவை என்னவென்னவெல்லாமோ குறியீடுகளாக இருக்கலாம். ஆண்டவனுக்கும் சுதர்ஷனுக்கும் தான் வெளிச்சம். சவம் ஒன்றைக் காவிக் கொண்டு போகும் காட்சி மட்டும் மரண வீட்டையும் மரணத்தையும் குறிக்கின்றது தெளிவாகத் தெரிகின்றது. இந்நாட்டிய நாடகத்தில் வாழ்வு, மரணம், காமம், பிறப்பு என்றெல்லாம் இருக்கின்றன என்று ஊகிக்க முடிகின்றது. (பிரபஞ்சம், மெய் இழப்பு என்பன எல்லாம் இந்நாட்டியத்தில் உள்ளன என்று சொல்கின்றது. எங்கே என்று எனக்குப் புரியவில்லை. அங்கு இருக்கலாம்.) ஊகம் நிச்சயமற்றது அல்லவா? ஊகம் உண்மையாகக் கூட இருக்க வேண்டிய அவசியமும் இல்லை, அல்லவா? ஆகவே, இதன் வியாக்கியானத்தைக் கேட்க விமர்சனக் கூட்டத்திற்குப் போக இருக்கிறேன்.

நவீன கவிதை, நவீன ஓவியம் போன்ற ஒன்றுதான் இந்த நாட்டிய நாடகமும். புரியாது. இறைவனுக்கும் எழுதியவனுக்கும், பாக்கியவான்களுக்கும் மட்டுமே புரியக் கூடியது. என் போன்ற சராசரிகள் இருளுக்குள் கையை விட்டு துழாவி கறுத்தப் பூனையைத் தேட வேண்டியதுதான்.

பின்னணி இசை இந்நாட்டியத்தில் உச்சம். ஆனால் இதில் பறையும் இணைந்திருந்தால் இன்னும் அதிக வலிமை பெற்றிருக்கும்.

கடைசி நாடகம் பனியில் ஒரு நடை. பியர் றூடோவின் சொற்றொடரான A Long Walk in the Snow ஐ எனக்கு ஞாபகம் ஊட்டியது. பனி பெய்கிறதாகக் கேள்விப்பட்ட றூடோவும் பனியில் நடையை மேற்கொண்டவர். எல்லாவற்றையும் மறந்து. அரசியலில் இருந்த ‘வெளியாள்’ அவர். இந்நாடகம் தர்சன் சிவகுருநாதனின் படைப்பு. இன்று பலராலும் பேசப்படும், தேவைப்படும், சுற்றுச் ச+ழலின் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காக எழுதப்பட்டுள்ள நாடகம். நல்ல பிரதியாக்கம். மூன்று பாத்திரங்கள். நேரடியாகச் சொல்லாமல் நண்பர்கள் இருவர் உரையாடுவதும் நடிப்பதுமாக இது நடக்கின்றது. சுதந்;திரம், அரசியல், குதர்க்கம் போன்றவை களையப்பட்டு இன்னும் நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தால் நாடகம் இன்னும் உயர்ந்திருக்கும். மையத்தை விட்டு அதிக தூரம் நகராத நாடகம் இது. நடித்த பாபு, ஜீவன், பவானி மூவருமே தங்கள் பாத்திரத்தை நன்றாகவே செய்துள்ளார்கள். தர்சனுக்கு என் பாராட்டுக்கள்.

என்.கே.மகாலிங்கம்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 13 September 2019 08:12