அத்தியாயம் ஒன்று: அம்பிகை

வே.ம.அருச்சுணன் – மலேசியா  “பார்த்திபா  ……!  பார்த்திபா…..!’’ 
                       
 “என்னம்மா......?”

“படுக்கைய விட்டு எழுந்திரிக்காம.....இன்னும் நீ என்ன செய்யுற?”

அம்மா அம்பிகை அதட்டுகிறார்.

“அம்மா.....!” சிணுங்குகிறான்.

“சின்னப்பிள்ளையா நீ....?’’

 “அம்மா....சாயாங் இல்ல.... கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேம்மா....பிளீஸ்!”

 “நீ கொஞ்சினது போதும்......! தினம்....உன்னை எழுப்புறதே எனக்குப் பெரும்  பாடாப் போவுது...!”

“ஏம்மா....கோவிச்சிக்கிறீங்க....? நான்தானே உங்களுக்கு ஒரே பிள்ளை?”    

“அதெல்லாம் இருக்கட்டும்....!.இன்றைக்குத் திங்கட்கிழமை தெரியுதா உனக்கு!”   

“எனக்குத் தெரியும்மா....!”

“தெரிஞ்சிக்கிட்டா....இன்னும் படுக்கையை விட்டு எழாம இருக்கே...?”

“அம்மா....ஆபிஸ்  எட்டு மணிக்குத்தாமா!”    

“பார்த்திபா.....இப்பவே மணி ஆறரை ஆயிடுச்சு!”  

“நேரத்துக்கு ஆபிஸ் போயிடுவேம்மா!”

“அதுக்குச் சொல்லப்பா....அரக்க பரக்கக் காரை ஓட்டி,வீணா விபத்துலச் சிக்கிக்கொள்றதைக் காட்டிலும் ஆறவமர வேலைக்குப் போனா மகிழ்ச்சியா இன்றைய வேலையே தொடங்கலாம் இல்லையா...?”

“நான்  வேகமா   போனாலும்   கவனமுடன்தான்    காரை ஓட்டுவேன்....!”

“இளங்கன்று பயமறியாதுன்னு சொல்லுவாங்க, வயசுப்பிள்ளைகள் பொறுமை இல்லாம  சாலையில் கண்மண் தெரியாமல் கார்களை ஓட்டுறதால அதிகமான விபத்துகள் ஏற்படுறதா பத்திரிக்கைகள் தினம் செய்தி போடுறாங்களே அதை மறுக்க முடியுமா....?”
 
“அம்மா...நான் உங்கப்பிள்ளை.நிச்சயமா அந்த மாதிரியான தப்பு தண்டாக்களைச் செய்ய மாட்டேன் நீங்க கவலைப் படாம வேலைக்குப்புறப்படுங்க!”

“நான் கவலைப் படலப்பா......! போன வாரம் வெள்ளிக்கிழமை நீ செஞ்சது  சரியா?"

“மன்னிச்சிடுங்கம்மா....... அவசரத்தில போயிட்டேன்!”

“இப்பத்தான சொன்னேன்.....! உண்மையை நீ ஒத்துக்கிட்டியா?"

“மெனக்கெட்டு காலையிலேயே  எழுந்து பசியாற செஞ்சி வெச்சா, சாப்பிடாம வெறும் வயிற்ரோடு வேலைக்குப் போகலாமா?”

“இதோ..... நான் இப்பவே  எழுந்திரிக்கிறேன்மா….!”

“மறக்காம சாப்பிட்டுட்டு வேலைக்குப் புறப்படு” ஒரே மகன் என்றுகூட பாராமல் அதட்டல் சொற்களால் எச்சரித்து  விட்டு தன் அலுவலகம் செல்கிறார் அம்பிகை.
 
அம்மா போட்டப் போட்டில் கதிகலங்கிப் போயிருந்த பார்த்திபன் காலையிலேயே  முகம்   கடுப்பாகிப்   போன   அம்மாவின்        முகத்தைப்பார்த்தவனுக்கு வேப்பெண்ணை குடித்தவன் போலாகிவிட்டான்! முகம் வாடிப்போன பார்த்திபன் இரவெல்லாம் தன்  உடம்போடு இறுக்கமாக ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த போர்வையைச் சட்டென்று உதறிவிட்டு படுக்கையை விட்டு துள்ளி  எழுகிறான்.
        
சுவர் கடிகாரத்தைப் பார்க்கிறான். ம்.....! அலுவலகத்திற்குச் செல்ல இன்னும் சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்தது. சிறிது நேரம் நிம்மதியாகத் தூங்கியிருக்கலாம்.அம்மா சுத்த மோசம்! சீக்கிரத்திலேயே எழுப்பிவிட்டு விட்டார்களே! ஆனால், தான் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திரிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இங்கு ஒரு பிரளயமே எழுந்திருக்கும்!
       
அதுமட்டுமல்ல,அம்மா  தன்னுடன் அடிக்கடிப் பகிர்ந்து கொள்ளும் கருத்து தனக்குப் சலிப்பைத் தந்தாலும் அவர் கூறுவதிலும் உண்மை இருப்பதை அறிந்து அம்மா மீது தனி மரியாதை உண்டாவதை அவனால் உணர முடியாமல் இல்லை. அவரது சமூகக்கடப்பாட்டை எண்ணி வியந்து போவான். அப்படி ஒரு நாள் அம்மா அவரது எண்ணத்தை எடுத்துரைத்தார்.
      
“நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்ட வேளையில், இந்த நாட்டிற்கு இந்தியர்கள் போல்,வயிற்றுப் பிழைப்பிற்காகக் குடியேறிய மலாய்க்காரர்களும் சீனர்களும் இமயத்தைத் தொடும் வகையில் அவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கி விட்டதற்குச் சோம்பலின்றி உழைத்ததே காரணம்!”
 
“சிறப்புச் சலுகைகள் மூலம் மலாய்ச் சமூகத்தை உயர்த்தியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை பத்து வயது பிள்ளையைக் கேட்டாலும் தடுமாற்றம் இல்லாமல் சொல்லுமே!” என்று அம்மா என்னை நோக்கி பார்க்கும் போது நான் மௌனியாகிவிடுவேன்.


அத்தியாயம் இரண்டு:  பார்த்திபன்
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாதொடர்ந்து அவரது சமூகப்பார்வையின் முன் ஏதும் கூறமுடியாமல் தவித்துப் போவேன். “சீன சமூகத்தைப் பார்த்தால்,அவர்கள் அநாவசியமாகத் தூங்குவதே இல்லை! சதா உழைப்பு, உழைப்புதான். வாழ்க்கையில் உயர்வை நோக்கியே பயணிக்கிறார்கள். சோம்பல் அந்தச் சமூகத்திற்கு அகராதியில் இல்லாதச் சொல்! நமது முன்னேற்றத்திற்கு நமது முன்னோர்கள் சொல்லி வைக்காத அறிவுரைகளா?’’   “ஊக்கமது கைவிடேல்’ என்று ஔவைப் பிராட்டி இதமாக எடுத்தியம்பவில்லையா?  ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை வான்புகழ் வள்ளுவர் நயம்படக்கூறவில்லையா? மானிட வாழ்வுக்கு வள்ளலார் வழிகாட்டவில்லையா? நமக்கு  நேரிய வழியில் எழுந்து நிற்க சமய சான்றோர்களும்,சித்தர்களும்,யோகிகளும் துணை நிற்கவில்லையா? தமிழர்களின் பல சிறப்புகளுக்குக் காரணக் கர்த்தாக்களாக இருந்த நமது வீரம்,விவேகம் எங்கே விலை போனது? இந்நாட்டில் அடிமைச் சமூகமாக வாழ்வதற்கு நாம் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டோமா என்ன?” ஆவேசத்துடன் கேட்பார்.
      
“தூங்கிக்கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’’ என்ற வரிகளை அம்மா சொல்ல ஆரம்பித்துவிட்டால் அன்று நான் வேலைக்குப் போன மாதிரிதான்.அதனால்தான் அம்மா எழுப்பிய உடனே நான் எழுந்து விட்டேன்! அம்மாவின் அறிவுரையால் நான் அதிகமாகவே அதிர்ந்து போயிருக்கிறேன்! முடிந்தவரை அம்மாவின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வான்.   
 
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள்  விடுமுறை என்பதால் நீண்ட  நேரம் நன்றாகத் தூங்கி எழுவான்.அந்த விடுமுறை நாட்களில் காலையில் அம்மா அவனை எழுப்புவதில்லை.பத்து மணிவரையிலும் தூங்கி எழுவான்.
 
பள்ளிப் பிள்ளைகள் இரண்டு நாட்கள் விடுமுறையில் நன்கு தூங்கியப்பின் அடுத்துவரும் திங்கட்கிழமை அன்று பிள்ளைகள் காலையில் எழுந்து பள்ளிச் செல்லச் சிரமப்படுவார்கள் அந்த நாளைத்தான் ‘கறுப்புத்திங்கள்’ என்பார்கள். பார்த்திபனுக்கும் வேலை நாளான திங்கட்கிழமை காலை ஆறரை மணிக்கே எழுந்திருப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தது! பள்ளி நாட்களில் அவன் பட்ட அனுபவம் இன்றும் அவன் நினைவில் நிழலாடும்!
        
மறக்காமல் அறையின் குளிர்சாதனத்தை நிறுத்துகிறான்.  அறையின் குளிர்சாதனத்தை நிறுத்த மறந்து ஒரு நாள், மாலையில் அம்மா வந்து அதனை நிறுத்திய அம்மாவிடம் வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டதை அவன் நினைத்துக் கொள்கிறான்!
 
“பார்த்திபா......உன் மனசில நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே....?” பார்த்திபன் அப்போதுதான் களைப்புடன்  வேலையிலிருந்து திரும்பியிருந்தான்.வழக்கம் போல் வீட்டிற்கு நேரத்தில் திரும்பிவிடுபவன், அலுவலகத்தில் வேலை இருந்ததால் சற்று தாமதமாகத் திரும்ப வேண்டியதாயிற்று. திரும்பியதும் திரும்பாததுமாக அம்பிகை மகனை வசைபாடத் தொடங்கிவிட்டார்!
 
“ஏம்மா......வந்ததும் வராததுமாக என்னைத்  திட்றீங்க?” அம்மாவின் கோபத்திற்குக் காரணம் தெரியாமல் வினவுகிறான் பார்த்திபன். 
 
“நீ...பொறுப்பில்லாமச் செஞ்சிட்டுப் போனக் காரியத்துக்குத் திட்டாம பின்ன வாழ்த்தியாப் பாடுவாங்க?
 
“வாலும் தெரியாம தலையும் தெரியாம பேசினா நீங்க கேட்கிறக் கேள்விக்கு நான் என்னென்னு பதில் சொல்றது? கொஞ்சம் விளங்கும்படியா சொல்லுங்கம்மா?” பணிவுடன் கேட்கிறான்.

“காலையில வேலைக்குப்போகும் போது உன்னோட அறையில இருக்கிற ஏர்க்கோனை அடைச்சியா....?”    முகத்தில்     கோபக்கனல்     வீசுகிறது!

“ஐயோ....!அம்மா….! அவசரத்தில ஏர்கோனை அடைக்க மறந்துட்டேன்! என்னை மன்னிச்சிடுங்கம்மா!”
 
“நான்.... மன்னிக்கிறது இருக்கட்டும்.இப்ப மணி ஏழு. நேற்று இரவு பத்துமணிக்குப் போட்ட ஏர்க்கோன்  இருபத்தொரு மணி நேரம் வரையில்     வீணா ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று நீயே ஒரு முடிவைச் சொல்லு?” என்று அம்மா கோபமாகக் கூறுகிறார்!

“இதற்குத் தண்டனையா இந்த மாத ‘கரண்ட் பில்லை’ நான் கட்டிடுறேன்! இதற்கு மேல என்னைத் திட்டாதிங்கம்மா!” பயபக்தியுடன் கூறி அம்மாவின் வாயை மூட எண்ணுகிறான்.
 
“ஏதோ....இப்போதைக்குச் சமாளித்துவிட்டதாக நினைக்காதே மீண்டும் இப்படி நடக்காமப் பார்த்துக்க!” 

“சரிங்கம்மா.....அடுத்து இப்படி ஆகாமப் பார்த்துக்கிறேன்!”

“சரி...சரி...! தேநீர் கலக்கி வைச்சிருக்கிறேன் வந்து குடி....!” 

அம்மாவை சமாளிக்கப் போதும் போதும் என்றாகிவிட்டது! அம்மாவின் நினைவு மின்னல் கீற்றாய்த் தோன்றி மறைகிறது!
 
குளிர்சாதனத்தை மறந்துவிடாமல் நிறுத்துகிறான். பெரிய மழை பெய்துவிட்டது போல் திடீரென்று ஓர் அமைதி நிலவுகிறது.ஒரு வீட்டுக் குளிர்ச்சாதனப்பெட்டியின்சத்தமே இவ்வளவு என்றால்,இந்தக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் வீடுகள் உள்ளனவே? நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வெளிப்படும் சத்தத்தால்தான் இரவிலும் உலகம் அமைதி இழந்து காணப்படுகிறதோ? அதர்ச்சியுடன் எண்ணிப்பார்க்கிறான்!      

[தொடரும்]