கவிதை: காடு வளம் பேணு!

Monday, 05 October 2015 23:49 - மெய்யன் நடராஜ் - கவிதை
Print

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

காடு வளந்தன்னை கண்போன்றுக் காக்கின்ற
நாடு வளங்கொள்ளும் நற்பேறு –கூடும்
அதுவல்லா மண்மேல் அழிகின்ற வித்து
மெதுவாகக் கொல்லும் எமை.

காயும் இயற்கைக் கனலால் உயிரெல்லாம்
ஓயும் தருணத்தை உண்டாக்க  -நோயும்
நொடியுமாய் நொந்து நுடங்கிடும் நீயோர்
கொடிநாட்டு தோன்றும் வனம்.

தண்ணீர்த் தவமிருக்கும் தாரணி சிந்துகின்றக்
கண்ணீர்த் துடைபதற்கு காடுவளம் –மண்ணும்
அடைந்தாலே வற்றாத நீர்நிலை எங்கும்
கொடையாகும் என்றுணர்ந்து கொள்.

தவமிருக்கும் மாமுனிக்கும், வாழ்வில் நிகழும்
அவமானம் தாங்காமல் தூக்கில் –தவழவும்
தொட்டிலுக்கும், கட்டில் சவப்பெட்டி என்றுன்னோ
டொட்டும் மரமாய் வனம் 

காக்கை மலம்வழி காயா விதைதூவி
ஆக்கும் வனத்தின் அழகினை –நோக்கி
தினமும் மகிழும் மனிதா முடிந்தால்
வனத்தின் வளத்தை பெருக்கு

மதம்வளர்க்கும் காலம் மரம்வளர்த்தே வையம்
இதமாகச் செய்தால் இயற்கை -விதவிதமாய்
எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் என்றுணர்ந்து கொண்டாலே
புல்பூண்டும் வாழ்த்தும் உன்னை.


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Tuesday, 06 October 2015 00:21