ஶ்ரீராம் விக்னேஷ்

அகிலத்தில் அதிகம்
“ஆளுமை” செய்தோர்,
ஆண்கள் எனப்பட்டனர்…!
பெருமை பலதைப்
“பேணிக்” காத்தோர்,
பெண்கள் எனப்பட்டனர்…!

குணமும், செயலும்
கொள்கையும் கூடிப்,
பெயரை வகுத்தனவாம்…!
பெயரே மிச்சம்,
பெயர்ந்தன எச்சம்..,
பின்னர் யாரெவராம்…?

“ஆளுமை” தெரியா
அறிவிலி பலரிங்கு,
ஆணாய்ப் பிறப்பதுண்டு…!
“பெண்மை”யின் பண்பைப்
பேணத் தெரியார்,
பெண்ணாய்ப் பிறப்பதுண்டு…!
விதியின்  “வழி”யை
விழிவைத்துப் பார்ப்போர்,
வெட்கிப் போவதுண்டு…!
விதிவிலக் கென்றே
ஏற்றுக் கொண்டால்,
விளங்கிடும் உண்மைநின்று…!

ஆளுமை செய்யும்
ஆண்மை,  “அன்பால்”
அடிமைப் படுத்திடலாம்…!  - பெண்மையை,
ஆக்கிர  மித்திடலாம்…!   - அந்த
அன்பே அதிகம்..,
கிடைத்தால்   பெண்மை..,
அடிமை ஆகிவிடும் …!  – தானே,
அடங்கி ஒடுங்கிவிடும்…!

பட்டங்கள்  ஆளவும்,
சட்டங்கள்  செய்யவும்,
பாவையர்  தலை நிமிர்ந்தார்…!  - தம்மைக்:
கட்டி  நெரிப்பது,
“அன்புக்  கயிறு”  என்றால்,
அவரே  தமைக்கொடுப் பார்…!

பெண்விடு   தலையொடு
பெண்ணுரி  மையென்ற,
பேச்சினில்  என்ன உண்டு…?  - அந்தப்,
பெண்ணே  இவையெதும்
பெரிதல்ல   என்றிடப்,
பிறிதோர்   வழியுமுண்டு…!

ஆண்தரும்  அன்பினில்
ஆழம்  மிகுந்திடில்,
பெண்ணே  சிறைபுகு வாள்…!  - தன்
கண்ணுள்  நிறைந்தவன்,
நெஞ்சுள்  அடங்கலே...,
தன்னுரிமை  என்பாள்…!

அன்பின்  வலிமையை
அகிலத்திற்  குணர்த்தியோர்,
அவதரித்த  மண்ணில்..,
அருட்பெரும்  ஜோதியே
தனிப்பெரும்  கருணையாய்,
அணையாது  எரியும் மண்ணில்..,

அறிவும், திறமையும்,
அன்பிற்கு  முன்தனில்,
அடங்கிச்  சுருண்டுவிடும்…! – அந்த,
அன்பின்  வலிமையை,
அடக்கிட  இ(ன்)னுமொரு..,
அன்பால்  தான்முடியும்…!

அறிவும், திறமையும்
அகிலத்தில்   இருப்பது..,
ஆண், பெண்  இருஇட  மே…! – இதில்,
ஆளுமை  செய்ய
ஆண்மட்டும்  நினைப்பது..,
அறிவின்  பூச்சியமே…!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.