பண்பு பாராட்டும் உலகு

Tuesday, 04 June 2019 07:29 - அரிகை. சீ. நவநீதராம கிருஷ்ணன் - கவிதை
Print

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அறம் பொருளின்பமென்று முப்பால் முலையெடுத்து
புறம் அகம் நிகழ்வதத்தனையும் - இகம் பரமென்று
எங்குள்ளார்க்கும் புகட்டிப் புவிதனில் புகழொடு 
தோன்றிப் புகழொடு மறைந்தான் திரு வள்ளுவன் !

ஒன்று தெய்வமென்றுணர்தல் வேண்டுமென்று ஓதி
ஒற்றுமையின் வலுவுரைக்க ஓயாது பாடிப் - பெண்ணடிமை
தீருமட்டும் கவியெடுத்துச்சாடி களிறிடரித்தான்  விழுந்து
கண்ணணோடு உறைந்தான் கவி பாரதி !

அன்பாயுதமெடுத்து அஹிம்சையென்னும் உறையிலிட்டு
துன்பம்வரும் வேளையிலும் மலர்ந்து - காலன் வரும்
காலம்வரை நடந்து கருப்பு வெள்ளைக் கலகமோய
கணைகள் வாங்கிச் சரிந்தான் மகான் காந்தி !

நோயடித்த பிள்ளைகளின் துயர்துடைத்தோர் கருணைத்
தாயென்றணைத்து நின்றாள் - அவள் கரம்பட்டுத்
தலைதெறிக்க ஓடியதாம் பிணிகள்; தம்சேவை தேவையென
தேவனழைக்கச் சென்றாள் அன்னை தெரசா !

இசைக்கின்ற போது இவள் இசையருவிதான் இவளை
இசையென்றே இறைவன் அறிவித்தான் - திசையெட்டும்
புகழ்பரப்பியது போதுமென்றோ இந்த கீதம் காற்றை
நிறுத்திக் கலந்து காற்றில்? (எம் .எஸ் . சுப்புலக்ஷ்மி)!

நயனொடு உரைக்க வேண்டின் பலர்க்கு நாம்
நன்றி உரைத்தல் வேண்டுமன்றோ ? - புகழ் புரிந்த
பயனுடையார் தமைப் போற்றிப்பரவிட நம்
பண்பு பாராட்டும் உலகு ! ஆம் ஐயமில்லை !


திருக்குறள்:

நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும், உலகு. 994.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 04 June 2019 07:31