கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1
வந்து விழுந்த
சூரியக் குழந்தை
அழுது ஆர்ப்பாட்டம் செய்தது,
கண் குளத்தின் தண்ணீர்
ஊற்று பொங்கி வழிய
இதய வானில் அன்பு
ஆவேசமானது
எதையாவது கொடுத்து
அழுகையை நிறுத்திவிட
முயற்சிகள் எல்லாம்
அழுகையின் வீரியத்தில்
அடங்கிப் போயின.
கையறு நிலையோடு நின்ற
என்னைக் கள்ளப் பார்வை
பார்த்து மீண்டும் மீண்டும்
அழுகையின் உச்சத்திற்குச் சென்றது.
உடல் சோர்ந்து மனம் அயர்ந்து
அமைதியின் மடியில் அகப்பட்டு
கண்ணை முடினேன்
காதுகளுக்கு அழும் ஓசையின்
சுவடுகூட தென்படவில்லை
ஆழ்ந்த பெருமூச்சோடு கண் திறக்க
மன மற்று இருக்கும் வேளையில்
பிரகாசமான அகஒளியில் நான்.
வெறுமையின் நிறைகுடத்தில்
ததும்பி வழிகிறேன்.
2
கையில் பிடுங்கிய
தென்னை மரம்
பல் துலக்க எண்ணி
துலங்க மறுக்கும் பல்லோடு
துவண்டு விழுந்தேன் நானும்
அரசமர இலையின் ஓசையில்
விழுந்து புரண்டோடும் நதியின் பாஷையில்
ஆயிரம் புத்தகங்கள் சொல்லாத
எத்தனையோ பக்கங்கள்
வாசிப்பின் ஆழத்தில் சோகத்தின்
இருமாப்பும் இழப்பின் கர்வமும்
சலசலத்து ஓடும் ஆற்றின் படிக்கட்டில்
காலநதி ஓடிக்கொண்டே இருக்கிறது
மானுட வரலாற்றின் ஒவ்வொரு
திறப்பும் இயற்கையின் கருணை
தன் நீரில் கலந்துவிட எண்ணி
காலமெல்லாம் காத்திருந்தேன்
எந்நீரும் உனக்கில்லை
பிழைத்துப்போ படித்துறை கல்வெட்டாய்
காலம் சொன்னது கனமான வார்த்தைகளை
எண்ணித் துணிய எண்ணமில்லை
காலத்தைத் தாண்டி காற்றோடு கலந்துவிட ஆசை
நட்சத்திரங்கள் அழைக்கும் ஓசை
விட்டு விடுதலையாகு மனமே
பிள்ளைகளின் சிரிப்பொலி கேட்கிறது
சற்றுப் பொறுங்கள்
வாழ்ந்து விட்டு வருகிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.