‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Thursday, 02 January 2020 13:36 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன் - கவிதை
Print

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தன்மதிப்பு

நாங்கள் ஆளுக்கு நான்கு பிரம்மாண்டக் கப்பல்களின் அதிபதிகள்

என்கிறார்கள்.
அப்படியா என்று கேட்டு அப்பால் நகர்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குத் தலைசுற்றுவதுபோலிருக்கிறது.
இன்னொருவர் அதிர்ச்சியில் தடுக்கிவிழப் பார்க்கிறார்.
மூன்றாமவர் என்னை அப்படி முறைக்கிறார்.
நான்காமவர் நிதானமிழந்து வேகவேகமாய்த் தொடர்ந்துவந்து
ஆகாயவிமானங்கள் கூட எங்களிடமிருக்கின்றன என்கிறார்.
ஆளுக்கு நாலாயிரமா என்று கேட்கிறேன்
சலிப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு.
அத்தனை மண்டைகனமா என்று ஆத்திரத்துடன் கேட்டபடி
அடிக்கவருகிறார்கள்
அப்படியில்லை, என்னிடமிருப்பதை நீங்கள் அறியவில்லையே

என்ற ஆதங்கம் என்கிறேன்.
”அப்படி யென்னதான் வைத்திருக்கிறாய் பெரிதாக?”
”என்னை” யென்றபடி பிரதிசெய்யமுடியாத
வரிரூபமாகிறேன்.

தேனீரின் ருசியும் ஒரு செல்ஃபியில் அடங்கும் வாசிப்பும்

அற்றைத்திங்கள்
வழக்கம்போல் தயாரித்த சுமாரான தேனீரை
சப்புக்கொட்டிக் குடித்தபடி சொன்னார் அத்தையன்பர்
”தேனீரின் உச்சம் இதுவே என்பர்!”

அது உண்மையில்லையென்பது
உள்ளங்கைநெல்லிக்கனி யென்றாலும்
உண்மைதானோ என்று அரைக்கணம்
பேதலித்தது மனம்.

அன்றொருநாள் நாங்களெல்லோரும் போன இடத்தில்
இன்னொருவர் தந்த தேனீரையும்
அதேபோல் அவர் உச்சம்தொடவைத்தபோது
தெளிவாகியது _
அவருடைய வார்த்தைகள் கண்ணியச் சொல்லாடல்
ஒருவித இரக்கத்தில் பிறந்தவை என்று சொல்வதும் பொருந்தும்;
மற்றபடி அதில் மனமில்லை மெய்யில்லை
மண்ணாங்கட்டியுமில்லை.

புத்தகக் கண்காட்சியில் ஒரு படைப்பாளியிடம் சென்று
அவருடைய ஆரம்பகால இடைக்கால தற்கால
எதிர்கால எழுத்துகளை அப்படிப் புகழ்ந்து
அவரோடு தோளொட்டி தலைசாய்த்து
ஆயத்தப் புன்னகையோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்

ஒரு வாசகர்.

படைப்பாளியின் கண் பனிக்காமலிருக்குமா?
பத்துக்கும் குறையாத நோபல் பரிசுகளை
அவருடைய கைகள் ஏந்திக்கொண்டன.

இன்றிரவுக்குள் குறைந்தபட்சம் இருபது படைப்பாளிகளிடம்
அதே வார்த்தைகளை மொழிந்து
அதேவிதமாய் செல்ஃபி எடுத்து
அவர் பொழுது கழியும் என்பது
சர்வநிச்சயமாய்ப் புரிய _

என் சுமாரான தேனீர் என்னைப் பார்த்துக்
கண்சிமிட்டுகிறது!


பெரியவர்களின் கையிலுள்ள பலூன்கள்


பிள்ளைகள் சிலர்
அவரவர் கையிலிருந்த பலூனை
வாயால் ஊதி ஓரளவுக்கு உப்ப வைத்தபின்
பலூனின் வாயை வாகாக சிறுநூலால் கட்டி
அதைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறார்கள்
கையில் பிடித்து அழகுபார்க்கிறார்கள்.

சிலர்
நூலின் முனையை ஒரு கையால் பிடித்து
சற்றே உயரப் பறக்கவிடுகிறார்கள்.

சிலர்
விரல்களில் சுற்றியிருந்த நூலைத் தளர்த்தி
பலூனை சுதந்திரமாக
ஆகாயம் நோக்கிப் பறக்கவிட்டு
அதையே அண்ணாந்துபார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.

வேறு சில குழந்தைகளோ
வாயால் ஊதி ஊதி
அவரவர் கையிலிருந்த சின்ன பலூனைப்
பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பலூன் உப்ப உப்ப அவர்களுக்கு
வாயெல்லாம் சிரிப்பு.

கண்கள் மின்ன இன்னுமின்னும்
ஊதுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பலூன் வெடித்துக் கிழிய
மொழிக்கப்பாலான குதூகலம் அவர்கள்
முகங்களில் நிறைந்து வழிகிறது.

குழந்தைகளின் உலகத்தில் எல்லாமே
குதூகலத்திற்கானவை.

குழந்தை வளர்வது இயல்பு.
வளர்ச்சி இன்றியமையாதது.

எனில் _
பெரியவர்கள் உலகத்தில் சிலர்
பலூன்களாக சகவுயிர்களை பாவித்து
பொய்களையும் புனைசுருட்டுகளையும்
அவர்களுடைய மூளைகளுக்குள் ஊதி ஊதி
அவற்றை ரத்தக்கட்டிகளாய் உப்பச் செய்து
உடையவைத்தவண்ணமே….
உயிர்குடித்தவண்ணமே……..


எழுத்தின் உயிர்

ஒரு நல்ல புத்தகம் நூறு தலைவர்களுக்கொப்பானது.
தலைவரின் கடைக்கண் பார்வை நம்மீது படுமா என்று

நாம் தவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
அத்தனை எளிமையாய் நம் புத்தக அடுக்கில்

ஓர் ஓரமாய் ஒதுங்கியிருக்கும்.
அல்லது ஒரு முக்காலியில் கிடக்கும்
அல்லது ஒரு கை உணவு உண்டுகொண்டிருக்க
மறுகையில் அலட்சியமாய் ஏந்தப்பட்டிருக்கும்.
ஆசானாய் காதலியாய் நண்பனாய் குழந்தையாய்

அன்பளிப்பாய் அந்திப்பொழுதாய் அகிலாண்டகோடியாய்
அடைக்கலம் தந்திருக்கும்.
நம்மை சிறு பறவைகளாய் பாவித்து
அது பாட்டுக்குப் புதுப்புது அர்த்தங்களை
வழியெங்கும் இறைத்துக்கொண்டே போகும்.
சூரியனில் இறைமை தன்அடையாளமற்றுக்
கலந்திருப்பதுபோல் புத்தக ஆசிரியர்.
வாசிக்கும் நேரம் வலது கை கொடுப்பதை
இடது கை யறியாத திறம் நூலாசிரியம்.
காலம் மீறி வாழ்வது நல்லெழுத்தின் அடையாளம்
எல்லாமறிந்தும் புத்தகங்களைப்

புதைகுழியிலிட்டுப் பார்ப்பவர்
பிரசவிக்கக்கூடும் இறந்த குழந்தைகளை.


தமிழுக்கு……..

எத்தனை பேர் பாடினாலும் தீராது
தமிழின் பெருமை.
எத்தனை குரல்களில் கேட்டாலும்
தமிழுக்குண்டு தனி இனிமை!

***

அட்சயபாத்திரம் தமிழ்.!
யாசகமாய்ப் பெற்றதில் பசியாறியதுபோக
சில நட்சத்திரங்களும் கிடைத்தன
வசிப்பிடங்களாக!

***

எழுதும் கவிதை யொவ்வொன்றும்
வழிப்போக்கன் எனக்குத்
தமிழ் வழங்கிய பொற்கிழி!
வரிகளே வரங்களாக
அருள்பாலிக்கும் எம் மொழி!


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 02 March 2020 10:23