என்னிடமிருக்கும்
அனைத்தையும்
அளந்துவிட்டுச் சென்ற
என்னவளாய் இருந்தவளுக்கு
இந்தக் கவிதை படையல்.
மணமான பிறகும்
இன்னும் மனமாகாமலே
காலத்தைத் தள்ளும்
சமூகச் சட்டகத்தில்
இடம்பிடித்த
புதுவிதத் தம்பதிகள்
நாம்.
மணவுறவு இல்லை
மனவுறவும் சரியில்லை.
இடையில் ஊசலாடும்
உடற்பசிக்குச் சோறில்லை.
காதலையும் காமத்தையும்
ஒன்றுச்சேர்க்க முயல்கிறேன்
உன்னிடத்தில்.
கடமையும் காத்திருத்தலையும்
ஒன்றுச்சேர்க்க முயல்கிறாய்
என்னிடத்தில்.
காலம் ஓடுகிறது.
காதல் கலங்குகிறது.
காமம் கரைகிறது.
நாட்கள்
வாரங்களாகுகின்றன.
வாரங்கள்
மாதங்களாகுகின்றன.
மாதங்கள்
வருடங்களாகுகின்றன.
இதோ!
புது வருடப் பிறப்பும்
வந்துவிட்டது.
இனியும்
நாம் பிரிந்தே
இருக்க வேண்டிய
நாட்களும்
வாரங்களும்
மாதங்களும்
வருடங்களும்கூட
தொலைத் தூரத்தில்.
இது
விதி விளையாட்டா?
இல்லை
சதி விளையாட்டா?
இது
என் விளையாட்டா?
இல்லை
உன் விளையாட்டா?
ஒத்துக்கொள்கிறேன்
தப்புச் செய்தவன்
நான் தான்.
தெரியாமல்
தப்பும் செய்தவனும்
நான்தான்.
ஒத்துக்கொள்கிறாய்
தெரியாமல்
தப்புச் செய்தவள்
நான் தான்.
தெரிந்தும்
தப்புச் செய்கிறவளுள்
நான்தான்.
நானா? நீயா? போட்டியில்
விஜய் டி.வி
நீயா? நானா? கோபிநாத்தே
குழம்புவார்
யார் பக்கம் சாய்வதென்று.
தயவுசெய்து
என்னிடம் சேர்ந்து விடு.
தயவு தாட்சணையின்றி
சேர்ந்து விடுகிறேன்
உன்னிடம்.
ஒன்றாய் வாழ்வோம்.
இல்லையேல்
ஒன்றுபட்டுப் பிரிவோம்.
என்னுடைய முடிவு
உன் வாழ்வின் தொடக்கம்.
உன்னுடைய முடிவு
என் வாழ்க்கையின் தொடக்கம்.
போதும்
போதும்
நமக்குண்டான
தலைகணம்.
மீட்டிக் கொள்வோம்
விவாகத்தை
அல்லது
முடித்துக் கொள்வோம்
விவாகரத்தை.
இ-மெயில்:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|