கவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்

இரவு வானில் கெக்கலிக்கும் சுடர்க்கன்னியர்கள்தம்
நகைப்பில்
எனை மறத்தலைப்போல் ஓரின்பம் வேறுண்டோ?
பால்யத்திலிருந்து இன்றுவரை பொழுதுபோக்குகளில்
முதற்பொழுதுபோக்கு அதுதான்.
சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி தொலைவுச்சுடர்தனில்
தனை மறந்திருப்பாரென் எந்தை.
சாறத்தைத் தூளியாக்கித் தொலைவுச்
சுடர்களை, விரி வானினை இரசிப்பதில்
எனை மறந்திருப்பேன்.
விடை தெரியா வினாக்கள் பல எழும்.
அவற்றுக்கப்பால் இருப்பவை எவையோ?
எனைப்போல் அங்கொன்றும்
தனை மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருக்குமோ?
எண்ணுவேன்.
வானியல் சாத்திர நூல்கள் பல வாங்கினேன்;
வாசித்தேன். சிந்தை விரிவு பெற்றேன். ஆயினும்
வினாக்களுக்கு விடைதானின்னும் கிடைக்கவில்லை.
இருப்பினும் கேள்விக்கான பதில் நாடி
என் பயணம் தொடரும்.
இருப்பிருக்கும் வரையில் இப்பயணமும் தொடரும்
என்பது எனக்கும் தெரியும்.
ஏனென்றால் பரிமாணச்சிறைக்கைதி நான் என்பதும்
அறிந்ததால்தான்.

இவ்விருப்பில் வினாக்கள் இவையும்
இல்லையென்றால் இருப்புக்குமுண்டோ அர்த்தம்.
எந்தையின் வழியில் என்றுமென்னிருப்பும்
இவ்விதமேயிங்குஇருக்கும்.
இதில்தானிங்குண்டு அர்த்தம்.
இதை அன்றே விளங்கியதால் இன்றுவரை அன்றுபோல்
இரவுகளில், விழிப்புடன் இருக்கையில் இருக்கின்றேன்,
எங்கோ எனைப்போல் இருக்கும் சாத்தியம் மிக்க
நண்பரை அல்லது
என்னிலும் மேலான பரிமாணச் சாத்தியங்கள் மிக்க
தோழரை நான் அறியும் வரை
விடைகளற்ற வினாக்களுடன் இருப்பேன்.
இவ்விதமிருப்பதிலுண்டே என் களிப்பு.
ஆம்! அவ்வேளை வரும் வரையில்
இவ்விதமே இருப்பேன் இங்கே நான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.