- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1.   உறங்காத பயணத்தில்........

சொற் சுரங்கத்தில் அள்ளும்
அற்புத மணிகள் தினம்
உற்பத்தி செய்யும் படிமம்
கற்பிக்கும் பாடம் உலகிற்கு
நற்பேறு ஈயும் கடமையுண்டு.

ஆழ்மனதில் பூத்த எண்ணம்
வீழ்ந்து பரவி நதியூற்றாகி
வாழ்ந்திட உயிர் தருகிறது

தாழ்ந்திடாத அன்பின் சிலிர்ப்புகளில்
மலரும் மென்மொழிகளாக
கரங்களைப் பற்றுதலாக
இதயத்தை ஆதரவாய் ஒற்றுகின்றன

அடைகாக்கும் அன்பு மொழிகள்
ஆனந்தக் குஞ்சு பொரிக்கட்டும்

இதயக்  கடலில் நினைவுகள்
இறகாக அசைந்து  சிறகு விரித்துப்
படகாகிறது.
உறங்காத பயணமல்லவா இப்புரள்வு!

(  படிமம்  - பிரதிமை ,  வடிவம்)


2-     இறகுகளால் அணைத்து வாழும்

மோகங்கொண்டு ஆடம்பரமாய் உயர
மேகக் கடலின் வெண்ணுரையாய்
ஆகப் பெரிய பொய்களை
தாகமாய்ப் பரத்துகிறார் பனிமலையாக.
உறவும் பாரமாகி உதாசீன
உச்சியிலமர்கிறார் சுயநலச் சிகரத்தில்

ஒட்டியுறவாடல் துளிர்க்காது வாரிசுகளைப்
பாலைவனத்தில் தள்ளுகிறார்.
காட்டு மிருகமாகிறான் மனிதன்
வீட்டுவாசல் மடிய இடுகாடுதானே!
இறகுகளால் அணைத்து வாழும் உறவு மறக்கிறான்

17-6-2019


3.  தகுதி

மலரின் வாசனை இயற்கை
புலன் அறியாது மறைக்க முடியாது.

மலர் மலர்ந்தால் வாசனை.
மனிதன் பிறந்தால் திறமை.

தொகுதியாம் மரபணு மனிதனின்
தகுதி மாபெரும் அற்புதம்

உள்ளத்தில் நல்லது நிறைந்தால்
பிறருக்குத் துன்பம் நேராது.
இது தான் வாழ்வின் சூத்திரம்.

25-6-2019


4- நதிப் பேச்சு

மென் மேகங்களின் கவிதை மனம்
அன்ன தொகை மழைக் கவிதைகளை
அழகுறப் பொழிகிறது மகா சமுத்திரத்தில்
சலதோசப் பயம் கடலுக்கு இல்லை.
நதி பேசுகிறதா பேசுவது இல்லையா!
குதியிடும் அதன் சிறகுகள் தரும்
அதி இலயமிடும் ஆனந்த ஒலி
சுதிகூட்டும் இசைப் பேச்சுத் தானே!

 


14-8-2019

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.