வென்றியும் நன்றியும்

Tuesday, 13 October 2020 09:40 -ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - கவிதை
Print

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

நன்றி ஒருவர்க்கு நாமியற்றிப் போகுங்கால்
அன்பில் இறுகும் அதுவுமொரு பண்பாமே !

சென்ற நிலையைச் சிதறவைத்தல் போலாகி
ஒன்றை இழத்தல் உறவில்லைக் காணீரோ !

என்றும் இனிமை இதயமொடு நேசித்தல்
மன்றில் இதுவே மகத்துவமே தானாகும் !

தன்னை நிகர்த்த தரத்தினொடு ஒப்பிட்;டுக்
கன்னைக் கெனவே கணக்கிடுதல் வேண்டாமே !

இதயம் பரந்ததுகாண் ஏற்றம் மறந்துநெறிக்
கதையை வகையின்றிக் காணல் அறமில்லை !

அற்றம் வகுத்து அறநெறியை நீக்காதே
சுற்றம் தனையில்லாச் சீவியம் பொல்லாதே !

தமிழால் உயர்ந்தோனே தாரணியில் மிக்கோனே
கமழ்தல் அவர்க்குண்டு காட்டும் சிறப்புண்டு !

செய்யாத போதும் சிறப்பாம் திறம்பேசல்
மெய்ம்மை யதுவே விளங்கும் பொறையாகும் !

ஆபத்தில் சென்று அருகிப் பணியாற்றல்
தீபம் தனையேற்றும் தேவன் செயலாகும் !

பொறாமை தனைக்கொண்டு பேதம் எடுக்காதே
திறமை தனைப்பேசு தெய்வம் துணைநிற்கும் !

உலகப் பயிர்செப்பும் ஒத்தாசை வாழ்க்கையடா
கலகமிலாத் தேசம் கருத்தாளம் நன்றியம்மா!

நன்றியே செய்வாய் நலமே தனையேற்று
வென்றிட ஆகும் விதமே புவியாகும் !

மரங்களிடும் நன்றி வழங்கும் பழமாம்
உரமாக்கும் நன்றி உணவே கொடையாமே !

வென்றியும் நன்றியும் மீட்டும் சமுதாயம்
அன்றில் அழியுமே அற்பப் பெரும்வாழ்வு !

தென்றல் உலவும் சிலவும் கதிரோனின்
மன்றில் நிகழுமாம் மறுவாழ்வுக் கார்மழையே !

தெய்வத் திருக்கதவம் செப்பும் வினையாடல்
பொய்வினை போக்கிப் பெருவாழ்வு காட்டுமே !

நன்றாய்ப் படித்திடிலே நல்;கும் பணிவாழ்வு
ஒன்றே கல்வியின் ஓர்நன்றி என்பதே !

தேசப் பணியே சுவறுமொரு நன்றியே
வாசம் உடையநற் வாழ்க்கைக் கணியாகும் !

போரின்றி வாழ்தல் புரிதல் மனுக்குலத்தின்
தாரின்றி வாழ்தல் தகவம் திறக்காதே !

நன்றிப் பெருங்கடனே நாயகமே யாக்குமடா
அன்புப் பெருந்தேசம் ஆட்சிக் கணிகலனே!

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 13 October 2020 09:46