இலண்டன் தமிழ் நாடக விழா 2014: அடக்குமுறைக்கு எதிரான சரித்திர பிரசித்தி பெற்ற  குரல்  -சமூக விரோதி (1882) நாடகம் க பாலேந்திரா மிழ் அவைக்காற்று கலைக் கழகம் இலங்கையில் 1978 இல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து இயங்கும் ஒரே தமிழ் நாடக அமைப்பு;  இலண்டனில் மையம் கொண்டு உலகில் பல நாடுகளிலும் நாடக விழா நடத்தி வருகின்றது . எதிர் வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வருடாந்த லண்டன் நாடக விழா வடக்கு இலண்டன் பகுதியிலே வாத்போர்ட் பம்ப் ஹவுஸ் அரங்கில் நிகழவிருக்கிறது.  இவர்களது இந்த  விழாவில் இரண்டு வெவ்வேறு சுவை தரும் நாடகங்கள் மேடையேறுகின்றன. முதலாவதாக லண்டன் தமிழ்  நாடக பள்ளி சிறுவர்கள் நடிக்கும் "அரசனின் புத்தாடை ' என்ற மாவை நித்தியானந்தனின் நாடகம் இடம் பெறுகின்றது. அடுத்து மிகவும் காத்திரமான உலகப் புகழ் பெற்ற "சமூக விரோதி " என்ற நாடகம் பேராசிரியர் சி சிவசேகரம் அவர்களின் பிரதியாக்கத்தில் அரங்கேறுகிறது. இரு நாடகங்களையும் தமிழ் நாடக உலகு நன்கு அறிந்த நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்துகிறார்.

அரசனின் புத்தாடை நாடகம் ஒரு  இசை கலந்த  நாடகமாக,  லண்டனில் பாலேந்திரா -ஆனந்தராணி ஆகியோரால் கடந்து பத்து வருடங்களாக நடத்தப் படும் இலண்டன் நாடகப் பள்ளி மாணவர்கள், அழகு தமிழில் முறையான அரங்கப் பயிற்சியுடன் , நிகழ்த்தும் வர்ணங்கள் நிறைந்த மேடை நிகழ்வு. நகைசுவையுடன் கூடிய  நாடகத்தில் , லண்டன் சிறுவர்கள் ஆடி பாடி கலகலப்பாக தோன்றுகின்றனர். துசி தனு சகோதரிகள் மற்றும்  ஜனன இசை வழங்க விஜயகுமாரி , தர்ஷினி ஆகியோர் பாடல்களை பாடுகின்றனர் நடக்க ஆசிரியர் மாவை நித்தியானந்தன் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது பின் வருமாறு கூறுகிறார்:

 "தமிழில் நல்ல கலைப் படைப்புகளின் தேவை, முன்னெப்பொழுதையும் விட இப்பொழுது அதிகமாக உணரப்படுகிறது என்று சொல்லலாம். பழைய, தரமற்ற வாய்பாட்டுத் தமிழ்ப் படங்கள் எவ்வளவோ மேல் என மெச்சக்கூடிய அளவுக்கு, இன்றைய வெகுஜனத் தமிழ்ச் சினிமா உள்ளடக்கத்திலும், வெளிப்பாட்டிலும் கேவல நிலையை அடைந்துள்ளது. தென்னிந்தியத் தமிழ்த்தொலைக்காட்சி நாடகங்களோ வீடுகளுக்குள் புகுந்து கொண்டு குடும்பங்களுக்குள்ளும் மனங்களுக்குள்ளும் நஞ்சை விதைக்கின்றன. தென்னிந்தியாவில் எப்படியோ தெரியாது; ஆனால் போரின் கொடிய பாதிப்புகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஈழத்து மக்களின் வாழ்க்கையையும் கலாசாரத்தையும் இந்த நாடகங்களும் சினிமாவும் சீர்குலைக்கின்றன என்பதில் ஐயமில்லை. வெளி நாடுகளிலும் இதே போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய பின்னணியில் வைத்துத் தான் பாலேந்திரா போன்றவர்களின் கலைத் துறைப் பங்களிப்பையும் அதன் பெறுமதியையும் நாங்கள் பார்க்க வேண்டும். செழுமையான, ஆரோக்கியமான நாடக ரசனையைத் தமிழர்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதற்கு இன்று நேற்றல்ல; கடந்த நாற்பது  வருடங்களாக பாலேந்திரா சளைக்காமல் உழைத்து வந்துள்ளார். அவரும், அவருடன் இணைந்து தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தில் பங்கு கொண்ட ஆனந்தராணி உட்பட ஏனைய யாவரும் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இலங்கையில் தொடங்கி, பின்னர் லண்டனில் மையம் கொண்ட இந்தப் பங்களிப்பின் மற்றொரு பரிமாணமாக பாலேந்திரா நெறிப்படுத்தித் தொடர்ச்சியாக வழங்கி வரும் சிறுவர் நாடகங்கள் மிளிர்கின்றன. எமது எதிர் காலச் சந்ததியினரை ஆரோக்கியமான நாடக ரசனைக்கு அறிமுகப்படுத்துவது உயரிய பங்களிப்பாகும். லண்டன் தமிழ் நாடகப் பள்ளி இன்று பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் கட்டத்துக்கு வளர்ந்துள்ளமை பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது."

அடுத்து சமூக விரோதி என்ற நாடகம் நோர்வே நாட்டை சேர்ந்த நாடக மேதை இப்சன் 1882 இல் எழுதியது. அமெரிக்க நாடக மேதை ஆர்தர் மில்லர் 1950 களில் அந்த காலங்களில் அமெரிக்காவில் நிகழ்ந்த கம்யுனிச எதிர்ப்பு காரணமாக நிகழ்ந்த அடக்குமுறையை மனதில் வைத்து ஆங்கில பிரதியை ஆக்கினார். பேராசிரியர் சி சிவசேகரம் தமிழில் ஆக்கிய நாடக பிரதி தற்போது முதல் முறையாக மேடைக்கு வருகிறது.

முதல் முறையாக மேடையேறும் 'சமூக விரோதி' பாலேந்திராவின் நாடகங்களிலே மிகவும் முக்கியமானது என்று கருதபடுகிறது.இந்த நாடகத்தின் சாராம்சம் இது தான்:

"உடலுக்குநலனும் உள்ளத்திற்கு உவகையும்; அளிக்கக் கூடிய நீரூற்றுக்கள் ஓர் ஊரில் கண்டு பிடிக்கப்படுகின்றன. ஓய்வும், உற்சாகமும் நாடிவரும் மக்கள் நீராடிச் செல்ல, நீரூற்றுக்களிலிருந்து குழாய் வழியே நீரை எடுத்து வந்து நீராடு நிலையங்களை நகராட்சிஅமைக்கின்றது. வெளியூர்ப் பயணர் பலர் விரும்பி வந்ததால், ஊருக்குப் பேரும் பணமும் கிட்டுகின்றன. அந்நிலையில் நீர்நிலைக்கு எடுத்து வரப்படும் தண்ணீர் மாசடைந்தது-  நச்சுத்தன்மை பொருந்தியது என்ற பயங்கர உண்மையைப் பரிசோதனைகள் பலநடத்திய நகராட்சியின் மருத்துவஅதிகாரி  நல்லதம்பிஅறிகிறார். அந்தத் தீங்கினைக் களைய தண்ணீர்க் குழாய்களைப் பெயர்த்தெடுத்து, வேறுநிலம் வழியாகக் கொண்டு வர வேண்டுமெனப் பரிந்துரை கூறுகிறார்.

நீர் நிலையத்தை மாற்றி அமைக்க, இரண்டாண்டுகள் அவற்றை மூட வேண்டும், ஏராளம் செலவாகும் என்று வாதிட்ட நகரமேயர், மருத்துவஅதிகாரி கருத்தை எதிர்க்கிறார். நகரமேயர்-(ராசலிங்கம்), மருத்துவஅதிகாரியின் சொந்தஅண்ணன்தான். தறுதலைத் தம்பியால் தம் தலைமைப் பதவிக்கு ஆபத்து வருமே என்று அஞ்சுகிற அண்ணன், உறவையும் மறந்து, ஊர் நலனுக்காக உடன்பிறந்தானையே எதிர்ப்பதாகத் தர்மவேடம் தாங்குகின்றார். பொதுநலனுக்குப் போராடுவதாகப் புறப்பட்ட பத்திரிகையும். பதவியில் உள்ளவர்களைப் பகைத்துக்கொள்வதன் பாதகங்களை உணர்ந்து, வெற்றிகரமாகப் பின்வாங்குகிறது. கோழைத்தனத்தை மறைக்க  கொள்கைப் பிரசனையைஎழுப்பிக் குழப்புகிறது. தொடக்கத்தில் துணைநின்ற சிலர்,செல்வத்தின், செல்வத்தின்  சீற்றமிக்க தாக்குதலுக்குப் பணிந்து அவரைக் கைவிடுகின்றனர். திரைவிழுவதற்கு முன்,எத்தனை சாகசத் திரைகள், சதிததிரைகள், சாபத் திரைகள் சமூகத்தில் விழுந்துள்ளன என்பதைச் சித்திரித்துக் காட்டிவிடுகிறது நாடகம்.

சகோதரர்கள் இடையில் நிகழும் வாதத்தின் ஒரு பகுதி இதோ : நல்லதம்பி: இந்த ஊரை ஆர் அதிகமா நேசிக்கினம் எண்டு காட்டத்தான் போறன். சனங்களும் இந்த ஊழலின்ரை நாத்தத்தை முழுசா அறியத்தான் போயினை. அதுக்குப் பிறகு தெரியவருந்தானே இந்த ஊரை ஆர் நேசி;ச்சவை எண்டு. ராசலிங்கம்: உன்ரை நேசமெல்லாம் இந்த ஊரின்ரை முக்கியமான செல்வத்தை குருட்டுத்தனமா, மூர்க்கன் மாதிரி அறுத்துக் கொட்டப்பாக்கிறது தானே. நல்லதம்பி: அந்த ஊற்று நஞ்சாப் போட்டுது. பாவம்! அறியாத சனங்களுக்கு அழுகலையும் ஊழலையும் விற்று நாங்கள் கொழுக்கிறம். ராசலிங்கம்: தம்பி, இது அபிப்பிராய வித்தியாசம் எண்ட நிலைமையைத் தாண்டி வேறை எங்கையோ போட்டுது. இந்த மாதிரி குற்றச் சாட்டுகளை அள்ளி வீசுறவன் சமூக விரோதியில்லாமை வேறை என்ன?

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆசை காட்டியும் அச்சுறுத்தியும்,தங்கள் ஆதிக்கப் போக்குக்கு ஆள் சேர்க்கும் அவலநிலை: நகரமக்கள் கவனத்தைத் திருப்பிக் கருத்தைகுழப்பி, நல்லது, கெட்டது என்ற பாகுபாட்டுக்கே இடமில்லாமல் செய்யும் பயங்கரப் போக்கு. உலைப்பானை பொங்காது என்று அச்சுறுத்தி, ஊர் வாயை அடக்கமுயன்று, வெற்றியும்; காணும் விபரீதம்" - இவையெல்லாம்  நாடகத்திலே அம்பலமாகின்றன. இதன் உள்ளடக்கம் காரணமாக ஆரம்ப காலங்களில் சில நாடுகளில் தணிக்கை செய்யபட்டது.தற்போது உலகெங்கும் கொண்டாடபடுகிறது.லண்டனில்  பிரமாண்டமான பர்பிக்கன் அரங்கில் ஜேர்மன் தயாரிப்பு ஒன்று சர்வதேச இப்சென் விழாவில் மேடையேறுகிறது.இலங்கையில் இவ்வருட ஆரம்பத்தில் கௌசல்யா பெர்னாண்டோ என்பவரால் இளைஞர் நடிப்பில் சிங்களத்தில் மேடையேறி உள்ளது .தமிழில் இதுவே முதல் முறையாகும்.1989 இல் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே அவர்களால் ஜன சத்துரு என்ற தலைப்பில் திரைப்படமாக தழுவப் பட்டது. அடக்குமுறைக்கு எதிரான அரங்க குரல் இந்த நாடகம்.நாடகத்திற்கு தமிழ் வடிவம் கொடுத்த சி சிவசேகரம் கருத்து  தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறுகிறார்: நாடகத்தில் நவீனத்துவத்தின் நிறுவகர்களுள் ஒருவரான ஹென்றிக் இப்ஸன் (Henrik Ibsen 1828-1906) நவீன நாடக முன்னோடிகளில் அதி முக்கியமான ஒருவர். அவரைப் பலர் நாடக யதார்த்தவாதத்தின் பிதா என்பர். அவரது ஆக்கங்கள் பலவாறு விளக்கப்பட்டுள்ளபோதும், பேராசிரியர் பியோர்ண் ஹெமர் (Bjorn Hemmer) இப்ஸனைப் பற்றிக் கூறுவன அவரது படைப்புக்களின் முக்கியத்தை உணர்த்தும்: 'ஷேக்ஸ்பியருக்குப் பின் அரங்கம் தவறவிட்ட அறத்தின் முக்கியத்தையும் உளவியல் ஆழத்தையும் சமூக முக்கியத்தையும்  ஐரோப்பிய பூஷுவா நாடகத்துட் கொண்டுவந்ததன் மூலம், அவர், வேறெவரையும் விட அதிகமாக அரங்கக் கலைக்கு ஒரு புதிய உயிர்ப்பை வழங்கியுள்ளார். இவ்வாறு, பண்டைய கிரேக்கத் துன்பியல் நாடகங்களுடன் ஒப்பிடத்தக்க உயிர்ப்பையும் கலைத் தரத்தையும் ஐரோப்பிய நாடகம் பெற இப்ஸன் வலுவான பங்களித்தார்;.'

"நடுத்தர வர்க்கத்தையும் அதன் அன்றாட வாழ்வு குழம்பும்போது அதன் ஆழ்ந்த அல்லற்பாடுகளையும் இப்ஸன் தனது சமகால யதார்த்த நாடக மாந்தர் மூலம் முன்வைத்தாரென ஹெமர் கூறுகிறார். நடுத்தர வர்க்கத்தின் குருட்டுப் போக்கு அவர்களை எவ்வாறு நெருக்கடிகளுட் தள்ளுகிறது எனச் சித்தரித்த இப்ஸனின் சொற்கள் இவை: 'மேலோங்கிய சில சமூக நிலைமைகளதும் நோக்குக்களதும் அடிப்படையில் மனிதரையும் மனித மனநிலைகளையும் மனித ஊழையும் சித்தரிப்பதே எனது பிரதான இலக்கு.'

சரியான கருத்துக்கள் பலவும் சிறுபான்மைக் கருத்துக்களாகவே உருப்பெறுகின்றன. அவை பெரும்பான்மையினரைக் கவரும் போது, அவை சமூகத்தை முன்னோக்கி உந்துகின்றன. பெரும்பான்மையின் நலன் அல்லது பெரும்பான்மைக் கருத்து என்ற பெயரில் மாற்றுக் கருத்துக்களை நசுக்கும் போக்கு அடக்குமுறை ஆட்சிகட்கு மட்டுமுரியதல்ல என விடுதலை இயக்கங்கள் முதல் ஊடகத் துறை வரை பலவிடத்தும் கண்டுள்ள தமிழ்ச் சூழலுக்கு இந்த நாடகம் மிகவும் பொருந்துகிறது.

1999 அளவில் பாலேந்திரா ஆதர் மிலரின் பிரதியைத் தழிழாக்கும்படி என்னிடங் கேட்டார். இத்தகைய பிரதியின் நேரடித் தமிழாக்கம் பார்வையாளர்களை எட்டுவதன் இடர்பாடுகளைக் கருதி அதைத் தமிழிற் தழுவ முற்பட்டேன். 'மக்களின் எதிரி' என்பதை விட 1980கள் தொட்டு நமது வழக்கிற் பரவியிருந்த 'சமூக விரோதி' என்ற தலைப்புப் பொருந்தும் என்பதால், அத் தலைப்பில் எனது பிரதியை ஆக்கினேன். அதை தேசிய கலை இலக்கியப் பேரவை 2002ம் ஆண்டு வெளியிட்டது. ஆதர் மிலரின் பிரதியின் தமிழ் வடிவை மேடையேற்றும் நோக்கம் அவைக்காற்றுக் கலைக் கழகத்தினருக்கு 1999 தொட்டே இருந்த போதும் அது இப்போது தான் கைகூடியுள்ளது. கடந்த தசாப்பத்தில் அதன் மேடையேற்றத்துக்கான தேவை வலுத்துள்ளது என்பது என் மதிப்பீடு.

சுமார் இருபது பேர்  பங்கு பெறும் இந்த நாடகத்தில் பாலேந்திராவே மருத்துவ அதிகாரி நல்லதம்பியாக நடிக்க அனுபவம் மிக்க நடிகர்களான ஆனந்தராணி, குமரகுரு, ரமேஷ்,சுகுண  சபேசன், கணேசலிங்கம, சதீசன் , மானசி ,ஆதிசங்கரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியாவின் பிரபல நாடக ஆசிரியர் பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி தனது நாடக விழா வாழ்த்து செய்தியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "அன்புள்ள பாலேந்திராவுக்கு, நாடக விழா நடக்க  இருப்பது அறிய மகிழ்ச்சி. லண்டனில் தமிழ் நாடகமேடை உங்கள் குழுவினால்தான் ஒளி பெற்றுத் திகழ்கிறது. கடினமான நாடகங்களைச் சவால்களாக ஏற்றுத் தமிழ் நாடக மேடைக்குப் புறச் சூழ்நிலையில் இலக்கணம் வகுத்து வருகிறீர்கள். உங்கள் பணி வெல்க."