தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள் ஒரு கண்ணோட்டம்

Saturday, 30 December 2017 13:20 - வெலிகம ரிம்ஸா முஹம்மத் - கலை
Print

அல்ஹாஜ் முஹம்மது எஸ். முஹ்ஸீன்தாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.

இதையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்று கடந்த வருடங்களாக பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடான அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் மீது, தான் கொண்ட பற்றினால் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள்.

அந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் "வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி"யை தொகுத்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சியானது கடந்த மூன்று வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி நேயர்களது மனம் கவரும் வகையில்; அமைந்திருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும்.

கலை இலக்கியம் சார்ந்த விடயங்களும், சமூக அக்கறை சார்ந்த விடயங்களும் நிகழ்ச்சியை அலங்கரித்து மேலும் வலு சேர்க்கின்றன. தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் நம் நாட்டிலுள்ள பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜனாப். முஹம்மது எஸ். முஹ்ஸீன், வானொலிக் கலைஞர்களான ஏ.ஜே. ஷஹிம், பாத்திமா ரிஸ்வானா, மரீனா இல்யாஸ் சாபி, சைபா அப்துல் மலீக், பஸ்மினா அன்ஸார், பாத்திமா பர்ஸானா ஆகியோரின் அயராத உழைப்பில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக தொடர்ந்தும் இடம்பெற வேண்டுமென்பதே நேயர்களது பேரவா.

''ஆக்கங்கள் தரமானதாகவும் எந்தவொரு சமயத்தையோ ஓர் இனத்தினையோ அனுவளவேனும் தாக்காமல் இருப்பதும் மிக முக்கியமானது என்பதே அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் நோக்கமாகும். வளர்பிறை நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம் இஸ்லாமிய சகோதரத்துவ மற்றும் இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதாகும். அதுவே இஸ்லாம் கூறும் வழிமுறை மற்றும் வாழ்க்கை முறையுமாகும். இந்த வரம்புகளுக்குள்ளிருந்து எழுதப்படும் ஆக்கங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் என்றும் எந்தவொரு தனிமனிதனையோ அல்லது சமூகத்தினையோ நிந்திப்பதோ புண்படுத்துவதோ எமது நோக்கமல்ல'' என்று நிகழ்ச்சியாக்கம் பற்றிய நேயர்களுக்கான கருத்தாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஏ.ஜே. சஹிம் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

தற்போது இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல இலக்கியவாதிகளாலும், ஆர்வலர்களாலும், பல நேயர்களாலும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகின்றது. மட்டுமல்லாமல் பல தமிழ் நேயர்களும் இந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்கின்றனர். நிகழ்ச்சியின் இடையிடையே வரும் இஸ்லாமிய கீதங்கள் தொடர்ந்து கேட்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகின்றதெனலாம்.

இன்று நாடகங்கள் அருகிப் போய்விட்ட நிலையில் 161 ஆவது வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சியில் மரீனா இல்யாஸ் சாபி அவர்களால் எழுதப்பட்ட ''கடிவாளமில்லாத குதிரைகள்'' என்ற நாடகத்தை செவிமடுக்க முடிந்தமை மகிழ்வூட்டியது.

நாம் இஸ்லாமிய கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்ந்து வந்தாலும் நமது சமூகத்தின் ஒரு பகுதியினர் மேலைத்தேய கலாசாரங்களில் மூழ்கி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய கருப்பொருளை சுமந்ததொரு நாடகம் இதுவாகும். அதில் ஸெய்த்தூன் என்ற பெண் தன் மகனான ஜவ்பரை மிகவும் செல்லமாக வளர்க்கின்றாள். ஸெய்தூனின் கணவர் இவற்றை மிகவும் கண்டிக்கின்றார். நாம் வாழும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது தவறில்லை என்ற எண்ணப்பாட்டில் வாழும் ஸெய்த்தூன், ஜவ்பர் ஒரு ஆங்கிலப் பெண்ணை திருமணம் முடிப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றாள். அவளை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றினால் சரியென நினைக்கிறாள். ஆனால் அந்த ஆங்கிலப் பெண்ணோ ஒரு நாத்திகவாதி என ஜவ்பர் சொல்லும்போது அதை கேட்டுக்கொண்டிருந்த ஸெய்தூனின் கணவருக்கு ஏற்படும் அதிர்ச்சி, நேயர்களான எமக்கும் தொற்றிவிடுகின்றது. இன்று இலங்கையில் வாழும் பலரும் மேலைத்தேய கலாசாரங்களைப் பின்பற்றி தமது வாழ்க்கைப் பாதையைத் திசைமாற்றிக் கொண்டிருப்பது கண்கூடு. அத்தகையவர்களுக்கு இந்த நாடகம் வழிகாட்டியாக அமையும் என்று ஆணித்தரமாகச் சொல்லாம்.

கவிதைகள் பொதுவாக எல்லா தலைப்புகளிலும் உள்ளடக்கபட்டுள்ளதோடு முக்கியமான நூல் விமர்சனங்களையும் வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சியில் செவிமடுக்கக் கூடியதாக இருக்கின்றது. நூல் விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் நமது தமிழ் சகோதரர்களின் நூல்கள் பலவற்றையும் இந்நிகழ்ச்சிகளில் கேட்கக் கூடியதாக இருந்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோல வரலாற்றுச் சம்பவங்கள் அழகிய முறையில் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி. மேலும் இதில் கிராத், நபிமொழி, குர்ஆன் விளக்கம், சிறுகதை, அனுபவப் பகிர்வு, படித்ததும் சுவைத்ததும், உரைச் சித்திரம், கவியரங்கு ஆகிய விடயங்களும் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை செவிமடுக்க விரும்புபவர்கள் http://www.atbc.net.au/ என்ற இணையத்தள முகவரியினூடாக கேட்டு மகிழலாம். ஏற்கனவே ஒலிபரப்பான பழைய நிகழ்ச்சிகளை Valarpirai என்று youtube இல் தேடி கேட்கலாம். அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆக்கங்களால் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் கூட This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தனது ஆக்கங்களை அனுப்பி வைக்க முடியும்.

தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தொகுத்து வழங்கப்படும் மற்றுமொரு வானொலி நிகழ்ச்சி "வளர் பிறை லண்டன் முஸ்லிம் குரல்" என்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியையும் அல்ஹாஜ் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள் தயாரித்து வழங்க, பாத்திமா ரிஸ்வானா மற்றும் மரீனா இல்யாஸ் சாபி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றார்கள். பல இலக்கியவாதிகளின் ஆக்கங்கள் இந்த நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. கடந்த மூன்று வாரங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் ஷஷவளர் பிறை லண்டன் முஸ்லிம் குரல்|| என்ற நிகழ்ச்சியும் பெருந்திரளான நேயர்களைக் கவர்ந்ததொரு நிகழ்ச்சியாகக் காணப்படுகின்றது. இதில் முக்கியமான துறைகளில் சாதனை புரிந்த ஆளுமைகளின் நேர்காணல்கள் ஷஷசந்திப்பு|| என்ற பெயரில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வழமை போன்று இதிலும் கவிதைகள், ஹதீஸ்கள், சொற்பொழிவுகள், நூல் விமர்சனங்கள், இஸ்லாமிய கீதங்கள் இடம்பெற்று வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்துகொண்டு தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் ஒலிபரப்பாகும் இவ்விரு வானொலி நிகழ்ச்சிகள் மென்மேலும் சிறப்பாக இடம்பெறுவதற்கு வாழ்த்துவதோடு, உள்நாட்டுக் கலைஞர்களுக்கு களம்கொடுத்து உதவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்!!!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 30 December 2017 13:27