காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே -"

Tuesday, 03 March 2020 13:47 - ஊர்க்குருவி - கலை
Print

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே -"இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

அக்காட்டுப்பகுதியில் அக்காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் தற்காலிக முகாம்களை அமைத்துத் தங்கியிருந்தனர். சில சமயங்களில் நீண்ட தடிகளைக் கால்களில் கட்டி ஒரு சிலர் நடந்து சென்று மாணவர்களான எங்களுக்கு விளையாட்டுக் காட்டுவார்கள். நாமும் செல்லும் வழியில் அவர்கள் இவ்விதம் நடப்பதை வியப்புடன் பார்த்துச் செல்லுவோம்.

அவ்விதமானதொரு நாளில்தான் இப்பாடலும் வவுனியா நகரசபைப்பக்கமிருந்து ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. நகரசபை மண்டப அரங்கில் சில வேளைகளில் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்விதமான சமயங்களில் இவ்விதம் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்போடுவார்கள். அம்மண்டப அரங்கில்தான் ஒரு முறை நாடகமொன்றும் அப்பாவுடன் சென்று பார்த்திருக்கின்றேன். அதன் பெயர் "உடையார் சம்பந்தம்". இந்நகர சபை மைதானத்தில்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஜேவிபியினரின் முதலாவது புரட்சியின் போது இலங்கை வான் படையினரின் ஹெலிகொப்டர்கள் அடிக்கடி இம்மைதானத்தில்தான் வந்திறங்கிச் செல்வது வழக்கம்.

இப்பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம்? இப்பாடல் இடம் பெற்றுள்ள படத்தில் நடித்துள்ள ஜோடிகளில் ஒரு ஜோடி ஜெமினி * ராஜஶ்ரீ ஜோடிதான். அப்பொழுது இவர்களைப்பற்றி கிசுகிசுக்கள் குமுதம் போன்ற வெகுசனச் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவருவதும் வழக்கம்.

பாட்டும் முதல் தடவையிலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போனது. காரணங்கள்: இசையும், டி.எம்.எஸ்ஸின் குரலும், பாடல் வரிகளும்தாம். கவிஞர் வாலி ஒரு பெண்ணைத் தமிழகமாக உருவகித்திருப்பார். இவ்விதம் இப்பாட்டைக் கேட்கும் ஒவ்வொரு சமயமும் அவை அனைத்துமே என் நினைவுக்கு வந்துவிடுவது வழக்கம்.

படம்: பாலச்சந்தரின் 'பூவா தலையா?'
இசை: எம்.எஸ்.வி
பாடல் வரிகள்: கவிஞர் வாலி
பாடகர்: டி.எம்.எஸ்
நடிப்பு: ஜெமினி & ராஜஶ்ரீ
https://www.youtube.com/watch?v=WGqOzDnetDE

பாடல் முழுமையாக:

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
.
காஞ்சித் தலைவன் கோவில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?
திருமகளே உன் புன்னகையோ?
.
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
.
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?

புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?

குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

Last Updated on Tuesday, 03 March 2020 13:56