மகாஜனா கல்லூரி முன்னாள் அதிபர்  பொ. கனகசபாபதி  ( 1935 - 2014)  நினைவலைகள்: விஞ்ஞானத்தில் பிறந்த விண்ணாணம் பற்றி எழுதிய விலங்கியல் ஆசிரியர் ‘வாணி, உன் வீடும் வளவும் அறிவேன். அக் காணி முழுவதும் கலகலப்பே அல்லவோ?’-  கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி எழுதியிருக்கும் இந்தக்கவிதை வரிகள், யாழ். மகாஜனாக்கல்லூரியை நினைவுகூருகிறது.   யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய  நண்பர் என். சண்முகலிங்கன், " சமூக மாற்றங்களிடையும் பண்பாட்டின் செழுமையான கூறுகளைக் கைவிடாத இந்தப்புலத்தின் சிறப்பினைக்கண்டுதான் படைப்புச்சக்தியாய்ப் பண்பாடு கண்ட கலைத்தெய்வமான வாணியும் தன்வீடாக மகாஜனாவைத் தேர்ந்தெடுத்து, தென்தமிழ் யாழ் மீட்டிச் சிரித்தபடி வீற்றிருக்கிறாள். – என்று தமது கட்டுரையொன்றில் பதிவுசெய்துள்ளார்.  சமூக மாற்றங்களுக்கு பிரதானமாகத்திகழும் கல்வியும் கலை, இலக்கியங்களும் உருவாகும்-வளரும் ஸ்தாபனம் மகாகவி குறிப்பிடும் கலகலப்பான கலாசாலைதான்.

இலங்கையில், தமிழ் கலை,இலக்கியவளர்ச்சிக்கு ஆரோக்கியமான செழுமையைத்தந்த பாடசாலைகளின்- கல்லூரிகளின் வரிசையில் மகாஜனாவும் ஒன்று என்பதில் அபிப்பிராய பேதமிருக்காது.  எனக்கு- எனது தாயகத்தில் பல பாடசாலைகளுடன் நீண்டகாலமாக தொடர்புகளிருந்தபோதிலும் மகாஜனாவுடனான உறவு சற்று வித்தியாசமானது. அதற்குக்காரணம் பலவுண்டு.  1972 ஆம் ஆண்டு ஜூலைமாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங்கரித்த படம் மகாஜனாக்கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களுடையது. அந்த இதழில்தான் எனது முதலாவது சிறுகதையும் வெளியாகி ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகமானேன். ஒவ்வொருவரது வாழ்விலும் முதலாவது நிகழ்வு மறக்கமுடியாததல்லவா...?

யாழ்ப்பாணத்தில் 1975- 1986 காலப்பகுதியில் பல இலக்கியக்கூட்டங்களிலும் பேசியிருந்தபோதிலும் அந்தக்குடாநாட்டில் முதலும் - இறுதியுமாக நான் பேசிய ஒரேயொரு கல்லூரி மண்டபம் மகாஜனா மாத்திரமே. 1984 ஆம் ஆண்டு அச்சமயம் அங்கே அதிபராகவிருந்த எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் அக்கல்லூரியில் நடந்த திருமதி கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை கதைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில்தான் இந்த முதலும் இறுதியுமான  நிகழ்வுநடந்தது. மகாஜனாவின் இலக்கியப்பாரம்பரியத்தை பார்த்தோமேயானால் அது ஒரு நீண்ட வரலாறாக விரியும். க. சின்னப்பா, நா. சிவபாதசுந்தரன், செ. கதிரேசர் பிள்ளை,  அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், மகாகவி, சண்முகசுந்தரம், மயிலங்கூடலூர் பி. நடராசன்,  சிவநேசச்செல்வன், சோமகாந்தன், பார்வதிநாதசிவம், சண்முகலிங்கன்,  குகசர்மா, குரும்பசிட்டி சிவகுமாரன், மாவைநித்தியானந்தன், கோகிலா மகேந்திரன், சேரன், ஆதவன், விஜயேந்திரன், சபேசன்,  ஊர்வசி, ஒளவை, த. கனகரத்தினம், க. சண்முகலிங்கம், ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, இப்படியாக முதலாம் இரண்டாம் மூன்றாம் தலைமுறை கலை-இலக்கியவாதிகளும்  இந்த வரிசையில் இணைந்துள்ள சிட்னி எழுத்தாளர் பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா, மகேந்திரராஜா பிரவீணன், அவுஸ்திரேலியாவில் கலப்பை சஞ்சிகை வெளியிட்ட  டொக்டர் கேதீஸ்வரன், மெல்பன்  சகோதரி திருமதி உஷாசிவநாதன் ஆகியோர் அனைவருக்குள்ளும் ஒருவராக  விளங்கியவர்  எனது மதிப்பிற்குரிய பொ.கனகசபாபதி. இங்கு குறிப்பிடப்பட்டவர்களில் சிலர்  இலக்கிய ரீதியாகவும் வாழ்வுறவு ரீதியாகவும் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களே.

நான் அந்தக்கல்லூரியில் படித்தவனில்லை. ஆனால், அக்கல்லூரியின் கல்வி மற்றும் கலை இலக்கிய பாரம்பரியத்தை செழுமையுடன் வளர்த்த சிலருடனாவது இலக்கிய நட்பைத் தொடர்ந்து பேணிவருகின்றேன்.  அந்தவரிசையில்  கனகசபாபதி எனது இனிய நண்பர்.  அவரை நான் இதுவரையில் இரண்டு சந்தர்ப்பங்களில்தான் கண்டு பேசியிருக்கிறேன்.  சில வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவில் மகாஜனா விழாக்களுக்காக வந்திருந்த சமயம் அவரை, அவர்  மெல்பனில் தங்கியிருந்த ஒரு நண்பரின் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன். ஏற்கனவே அவரது எழுத்துக்களை மாத்திரம் படித்துவைத்துக்கொண்டு அவரைச்சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டேன்.
இது முதலாவது சந்திப்பு.

2007  இறுதியில்  கனடா சென்றிருந்தபொழுது மீண்டும் சந்தித்தேன். இது இரண்டாவது சந்திப்பு.  அவரிடமிருந்த அதேசமயம் அவர்மீது மற்றவர்கள் கண்டிருந்த சிறப்பான குணாதிசயங்களை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாகவிருக்கும் என நம்புகிறேன்.  முன்மாதிரி- சுயவிமர்சனம் என்றெல்லாம் நாம் அடிக்கடி எழுத்தூழியத்தின் போது பாவிக்கும் இரண்டு முக்கியமான வார்த்தைப்பிரயோகங்கள்  இருக்கின்றன.  மெல்பனில் நான் அவரை முதல் முதலில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபொழுது. ஒரு இளம் யுவதி அவரைப்பார்க்கவந்து,  “சேர் நான் உங்களிடம் படிக்கவில்லைத்தான். ஆனால்,  என்னை ஆசீர்வதியுங்கள் " -எனச்சொல்லிக்கொண்டு நின்றார்.

கனகசபாபதி அவர்களுக்கோ  இந்தப்பிள்ளை யார் என்று தெரியவில்லை. " நீங்கள் யாரம்மா? " - எனக்கேட்டார்.  உடனே அந்தப்பிள்ளை, " சேர், நான் உங்களிடம் பாடசாலைப்போட்டியொன்றின்போது பரிசு வாங்கியிருக்கிறேன்."  என்றார்.  " ஆ…அப்படியா. மகிழ்ச்சி. எங்கே இருந்தாலும் எனது வாழ்த்துக்கள் என்றும்  உண்டு"  எனச்சொல்லி அவர் அந்த யுவதியை வாழ்த்தினார்.  பின்னர்தான் நான் அறிந்துகொண்டேன் அவர் வேறுயாருமில்லை. எங்கள் நண்பர் கலப்பை ஆசிரியர் டொக்டர் கேதீஸ்வரனின் மனைவி சிவரதி.    அவர் தற்பொழுது சிட்னியில் பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

கனடாவுக்குப்போயிருந்த பொழுது அவருக்கு நாங்கள் வெளியிட்ட அவுஸ்திரேலியா எழுத்தாளர்களின் கதைத்தொகுப்பான உயிர்ப்பு நூலைக்கொடுத்தேன்.  அதில் உஷா சிவநாதனும் எழுதியிருக்கிறார். அதனைப்பார்த்துவிட்டு யார் இந்த உஷா என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு,  என்னிடம் அவரது தொலைபேசி இலக்கத்தை கேட்டுபெற்று உஷாவுடன் தொடர்பை ஏற்படுத்தி உரையாடியிருக்கிறார்.  சற்று யோசித்துப்பாருங்கள். இது சிலருக்கு சின்னவிடயமாகவிருக்கலாம்.  வழக்கமாக என்ன நடக்கும்....?  இவவும் எழுதுறாவோ என்று அலட்சியமாக  ஒரு  குறுஞ்சிரிப்பை  உதிர்த்துவிட்டு போய்விடுபவர்களும் எம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால், கனகசபாபதியிடம்  ஈகோ இல்லாத உயர்ந்த பண்புகள் இருந்தன. ஒரு மூத்ததலைமுறையைச் சேர்ந்த ஒரு ஆசான், தனக்குத்தெரிந்த இளம்தலைமுறைப்பிள்ளை  எழுத்துத்துறையிலும்  ஈடுபட்டிருக்கிறார் என  அறிந்ததும் உடனே தொடர்பு கொண்டு  சுகம் விசாரிக்கின்றார்.  இதுதான், நான் முதலில் குறிப்பிட்ட  முன்மாதிரி.  அவர் முன்மாதிரியான ஒரு ஆசான் என்பதனால்தானே அவர் இல்லாமலேயே அவரது மாணாக்கர்களினால் வேறு ஒரு நாட்டில் அவரது  நூலுக்கு  அறிமுகம்  நடத்தப்பட்டது.  எனவே அவர் எப்படி எங்களுக்கெல்லாம் முன்மாதிரியானவரோ, அப்படியே மகாஜனா கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் முன்மாதிரியானவர்களே. எனச்சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

கனகசபாபதி அவர்கள் தாம் கற்பித்த கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராகப்பணியாற்றியவர் என அறிகின்றேன். அதனால்தான் அவரால் தமது  திறவுகோல் என்ற நூலுக்குரிய பல கட்டுரைகளை எழுத முடிந்திருக்கிறது.  மூத்த இலக்கியவாதிகளின் எழுத்திலும் பேச்சிலும் கேலியும் கிண்டலும் குசும்பும் நகைச்சுவையுணர்வும்  இருப்பதை அவதானித்திருக்கிறேன். அந்த வரிசையில் கனடாவிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம்,  அவுஸ்திரேலியாவிலிருக்கும் கவிஞர் அம்பி, லண்டனிலிருந்த  இளவாளை அமுது மற்றும் எஸ். பொ. இப்படியாக சிலரைச்சொல்லமுடியும். அவர்களின் வரிசையில் கனகசபாபதியும் இடம்பெறுகிறார்.

கல்வித்துறையில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் நகைச்சுவையுணர்வு மிகவும் அரிதாகத்தான் வெளிப்படும்.  தமிழ்இலக்கியம், வரலாறு, அரசியல்,சமயம் முதலான கல்வித்துறைகளில் நகைச்சுவைக்கு குறைவே இருக்காது.  கணித, விஞ்ஞான, உயிரியல், இரசாயனவியல்,பௌதிகவியல், தாவரவியல், விலங்கியல் முதலான பாடத்துறைகளில் போதிக்கவருகின்ற ஆசிரியர்களிடம்  இந்த நகைச்சுவையுணர்வு இல்லையென்றால் அவர்களிடம் கற்கின்ற மாணவர்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள்தான்.   இது என்னடா விண்ணாணம் பேசுகிறான் என்று யோசிப்பீர்கள். கனகசபாபதி அவர்களின் திறவுகோல் நூல்கூட, இந்த நூலை பதிப்பித்து தந்திருக்கும் வெற்றிமணி வெளியீட்டக பதிப்பாளர் திரு சிவகுமாரன்   சொல்லுமாப்போல் ஒரு விண்ணாணம்தான்.  இந்த விண்ணாணம் என்ற சொற்பதம் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் பேசுபொருள். நீங்கள் தமிழ்நாட்டில் இதனைச்சொன்னால் அது அவர்களுக்குப்புரியாது. அர்த்தம் தெரியாது.  இதுபற்றி ஒருதடவை  கனகசபாபதி அவர்களுடன் உரையாடினேன்.  தாம் நீண்ட காலத்துக்கு முன்னர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கத்தின் இலக்கிய இன்பம் நூலைப்படித்திருப்பதாகவும், அதிலே ஓரிடத்தில், விஞ்ஞானம் என்ற சொல்லிலிருந்துதான் விண்ணாணம் பிறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பதாகச்சொன்னார். எதனையும் துருவித்துருவி ஆராய்ந்து தீர்மானத்துக்கு அல்லது முடிவுக்கு வரும் முயற்சியையும் விண்ணாணம் என்று பொருள் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.    இந்த விண்ணாணம் என்ற சொல்லைப்போன்று, அந்த நாட்களில் எனது சிறுவயதில் வானொலி-மற்றும் மேடை நாடகங்களில் மற்றுமொரு சொற்பதத்தை  அடிக்கடி கேட்டிருக்கின்றேன். அதாவது அடியடா புறப்படலையில எண்டானாம். எனக்கு இன்று வரையில் இதற்கான அர்த்தம் தெரியாது.  பிரதேச மொழி வழக்குகள் தொடர்பாக இலங்கையில் இது வரையில் ஒரு முழுமையான அகராதி வெளிவரவில்லை என்று நினைக்கின்றேன்.    சரி, விண்ணாணம் என்றால் என்ன...? சிவகுமாரன் தரும் விளக்கம்:- ஊரிலே புரியாத-தெரியாத விடயங்களைப்பேசும்போது என்ன விண்ணாணம் பேசுகிறாய் என்பார்கள். என்று அவர் தரும் விளக்கத்தை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.  விஞ்ஞானம் தொடர்பான விளக்கங்களை புரிந்துகொள்ளத்தக்கதாக சொல்லும்போழுது, விஞ்ஞான ரீதியாகவே முயன்றால் படிப்பவர்களுக்கு சோர்வு ஏற்பட்டுவிடும்.

ஒரு விஞ்ஞான – விலங்கியல் துறை ஆசிரியராக  கனகசபாபதி அவர்கள் பணியாற்றியிருந்தமையால் இந்தத் தொடர்கட்டுரைகளை எழுதும்பொழுது, பாயசத்துக்கு முந்திரிப்பருப்பு சேர்த்ததுபோன்று சுவைகூட்டி மெருகேற்றியுள்ளார்.
அவரது மாணவரும் இன்று இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானவருமான எழுத்தாளர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா, இந்நூலுக்கு மதிப்புரை வழங்கியிருக்கிறார். மிகவும் பொருத்தமான ஒருவரைத்தான் நூலாசிரியர் மதிப்புரை எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கந்தராஜா அவர்களும் ஒரு உயிரியல் தொழில்நுட்ப பேராசிரியர். சிட்னியில் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விவசாய பீடத்தில் பணியாற்றியவர். வெளிநாடுகளில் சில பல்கலைக்கழகங்களுக்கு விருந்தினர் அடிப்படையில் விரிவுரையாற்றச்செல்பவர்.  அவர் சொல்கிறார்:- ‘சிக்கலான விஞ்ஞான கோட்பாடுகளை விளக்க கனகசபாபதி ஆசிரியர் அன்று கையாண்ட உதாரணங்களும் நகைச்சுவை கலந்த மொழி நடையும் எனது பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு பெரிதும் உதவுகின்றன.”

நூலாசிரியரின் மற்றுமொரு மாணவரான எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன், சொல்கிறார்:-“ விண் தொட நிமிர்ந்த மனிதர். ஆதலால் பல அரங்குகளை அணிசெய்யும் தலைவர். சொல்வதெல்லாம் பயனுள்ள சொல்லாகச் சொல்லிட வந்ததால், இன்று எழுதுவதெல்லாம் பயன் உள்ள எழுத்தாய் அமைகிறது”

இந்நூலின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமது ஆக்கங்களைப்பற்றிய மதிப்புரையையோ எண்ணங்களையோ பதிவு செய்வதற்கு அந்நியப்பட்ட எவரையும் நூலாசிரியர் நாடவில்லை. தமது மாணவர்களிடமிருந்தே கருத்துக்களை கேட்டறிகிறார். இது ஆசிரியர்- மாணவர்களுக்கிடையே  நெருக்கத்தையும்  புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான முன்மாதிரி.

எழுத்தாளர்களாக கலைஞர்களாக வளரும் - உயரும் பல கல்வித்துறை ஆசான்களிடம் இந்த நல்ல குணாம்சத்தை அவதானித்துள்ளேன். நண்பர் கவிஞர் அம்பி அவர்களும் இதற்குச்சிறந்த உதாரணம். நண்பர் மாவை நித்தியும் அம்பியின் ஒரு மாணவர். அவரும் ஒரு கவிஞர்-கலைஞர். அம்பி-மாவைநித்தியின் புரிந்துணர்வுமிக்க நட்பை அருகிருந்து பார்த்திருக்கின்றேன். இதுபோன்ற வாழ்வியல் குணாம்சங்கள் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன்.
எவ்வளவோ எழுதியிருப்பவர் கனகசபாபதி அவர்கள். விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம் என்று அடிக்கடி எழுதியும் பேசியும் வரும் இவர், இந்த நூலில் தமது என்னுரையின் இறுதி வரிகளை இப்படி முடிக்கின்றார்:-“ வாசகர்களாகிய உங்களுக்கு எனது அன்பினைத்தெரிவிக்கின்றேன். நீங்கள் இல்லாவிட்டால் நானில்லை.”

ஒரு நிறைகுடத்திடமிருந்துதான் இத்தகைய வார்த்தைகள் வரும்.

பெரும்பாலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் கடந்துசென்ற காலங்களிலும் அறிவியலில் தோன்றிய மாற்றங்களையும் மனித மனங்களில் ஏற்பட்ட சிந்தனைகளையும் தொடர்ச்சியாக வாசித்தும் கேட்டுமறிந்து தானும் அவைகுறித்த தீவிர தேடுதல்களிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வானொலி-தொலைக்காட்சி-பத்திரிகைகள்-இணையத்தளங்கள் ஊடாக தினமும் புதிய புதிய செய்திகளும் சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. நாங்களும் பார்க்கின்றோம்- கேட்கின்றோம். பார்த்தவர்களும் கேட்டவர்களும் சொன்னவற்றை அறிந்து ஆ…அப்படியா. என்று ஆச்சரியமுடன் புருவம் உயர்த்துவோம். அல்லது இது கலிகாலம், உலகம் அழியப்போகிறது. என்று சுடலை ஞானம் பேசுவோம்.

மனித முட்டைகள் விற்பனைக்கு வருகிறது என்ற செய்தியைப்படித்தவுடன், ஆண் இல்லாமல் ஒரு பெண் பிள்ளை பெற முடியும் என்ற தகவல் வெளியானவுடன், பிள்ளையை சுமக்க வாடகைத்தாய் வேண்டும் என்ற விளம்பரம் வந்தவுடன் உலகம் அழியப்போகிறது என்ற விண்ணாணம் பேசுபவர்களைப்பார்த்திருக்கிறோம். இங்கு நான் சொல்லும் விண்ணாணத்திற்கு வேறு அர்த்தம்.

ஆனால்,  கனகசபாபதி என்ன செய்தார்...? ஒரு விஞ்ஞானபூர்வமான கண்டுபிடிப்பைப்பற்றிய தகவல் அறிந்தவுடன் அது தொடர்பாக தேடுதலில் ஈடுபட்டார். அதற்காக பல உசாத்துணை நூல்களை கருத்தூன்றி கற்றார். பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வந்து தமது இலக்கிய மொழி நடையில் தமிழ் வாசகர்களுக்கு பதிவுசெய்தார்.

இந்த நூல் எமக்குமட்டுமல்ல இலங்கையில்- தமிழகத்தில் மற்றும் தமிழ்கற்கும் தேசங்களிலெல்லாம் மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடிய நூல். நிறையத்தகவல்கள் இருப்பதனால் வெறும் தகவல்தொகுப்பாகவோ தகவல் களஞ்சியமாகவோ அவர் இந்நூலைப்படைக்கவில்லை. தேவைப்படும் அளவுக்கு எமது முன்னோர்களின் சிந்தனைகளையும் மிகவும் பொருத்தமாகச் சேர்த்துக்கொண்டவர்.

திருஞான சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சர்வதேச சகோதரத்துவத்தை தாரக மந்திரமாகச்சொன்ன கணியன் பூங்குன்றனார், பாரதியார், அருணந்தி சிவாச்சாரியார், திருவள்ளுவர் முதலானோரின் கருத்துக்களையும் இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளுடன் ஒப்பு நோக்குகிறார்

முளைவகையாக்கள்  முயற்சியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு ஒரு செம்மறியாட்டை உருவாக்கியபோது- இது போன்று மனித உயிரிலும் செய்துபார்க்க முடியுமா என்ற சிந்தனை எழுந்ததும் ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனுஷனைக் கடிக்கும் முயற்சி என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

தேனீக்களைப்பற்றி குறிப்பிடும்பொழுது ஆண் தேனீக்கள் படு சோம்பேறிகள் என்ற தகவலைச்சொல்கிறார். உடனே எனக்கு நண்பர் அ.முத்துலிங்கம் எழுதிய சிறுகதையொன்றுதான் ஞாபகத்துக்கு வந்தது. அதிலே அவர் பெண் தேனீக்களுக்குத்தான் கொட்டும் இயல்பு உண்டு என்று எழுதியதுடன் நின்றிருக்கலாம். அவர் அதற்கும் மேலே சென்று பெண் உயிரினங்களுக்கெல்லாம் இந்த இயல்புதானோ...? என்றும் எழுதியுள்ளார்.  குளிர்காலத்தில் கூட்டுக்கு வெளியே வந்த ஆண்தேனீக்கள் குளிரில் விறைத்து தனது சிறகுகளை இழந்து இறந்துவிட, வசந்தகாலம் வரும்போது ராணித்தேனீக்கு ஆள் தேவைப்படுகிறது. உடனே ராணித்தேனீ சில முட்டைகளை இட்டு ஆண்களாக்கி தேவையை பூர்த்தி செய்து கொள்கிறதாம்.

நூலாசிரியர் அந்தக்கட்டுரையை இப்படி முடிக்கிறார்;:- “ எப்படி இருக்கிறது கதை. ஆண் இனம் அந்த அளவு கேவலமாகப்போய்விட்டது."

படித்துக்கொண்டு போகும் பொழுது பல இடங்களில் நீங்கள் வாய்விட்டுச்சிரிக்கமுடியும்.

2050 ஆம் ஆண்டுகளில் மரணவீதம் குறைந்துவிடலாம் என்ற ஆராய்ச்சிதொடர்பாக  எழுதும்பொழுது, ‘அப்பொழுது மனித குலம் வாழ்வதற்கு மற்றுமொரு கோள் அவசியமாகலாம்’ எனச்சொல்லிவிட்டு கட்டுரையை முடிக்கவில்லை. அதற்கும் மேலே ஒரு படி சென்று, இடையிடையே அவதார புருஷர்களாகிய ஒஸாமா பின்லேடன், ஜோர்ஜ் புஷ் போன்றோர் தோன்றி துஷ்டநிக்கிரக பரிபாலனம் செய்து பூமாதேவியின் பாரத்தைக் குறைப்பார்கள் என நம்புவோமாக. என்று முடிக்கிறார்.
அந்த இருவருடன் மேலும் சிலரது பெயர்களையும் அவர் சேர்த்திருக்கலாம்.

எனது வயது 150,0000 (பதினைந்து கோடி) என்றால் நம்புவீர்களா...? என்ற கட்டுரைதான் இந்த நூலின் மகுடமான கட்டுரை என நான் கருதுகிறேன். மனித இனம் தோன்றிய காலம் முதல் இன்று நாம் வாழும் காலம் வரையில் முதல் மனிதனுக்கும் இன்று வாழும் எனக்கும் உங்களுக்கும் ஒரே உயிர்க்கலம்தான் என்ற உண்மையைச்சொல்லி ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து வளர்ந்த இனமே மனித இனம் என்ற முடிவுக்கு ஆதாரங்களுடன் வருகிறார்.  இடையில் வந்ததுதான் மொழி, மதம் , சாதி, பிரதேசவாதம், ஏற்றதாழ்வு, நிறவேற்றுமை, இனப்பாகுபாடு முதலான குறுகிய சிந்தனைவயப்பட்ட வாழ்வுக்கோலங்கள் என்ற தெளிவை இந்த ஆக்கம் மிகவும் நுட்பமாகவும் அற்புதமாகவும் வெளிப்படுத்துகிறது.  இனரீதியாக- மொழிரீதியாக- நிற ரீதியாக – சாதி ரீதியாக- பிரதேச ரீதியாக மக்களைப்பிரித்துவைத்து அரசியல் ஆதாயமும் சொந்த நலன்களும் பேணுபவர்களுக்கு இந்தக்கட்டுரையை சமர்ப்பணமாக்கலாம். நூல் கிடைத்தால்  படித்துப்பாருங்கள்.

ஒவ்வொரு கட்டுரையும் அறிவுத்தேடலின் வெளிப்பாடு. அதற்கான உழைப்பில் ஈடுபட்டு இந்த அரிய நூலைத்தந்தவர் இன்று எம்மிடையே இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. கனடாவுக்கு நான் சென்றிருந்த சமயம் அங்கிருந்த வானொலி நிலையத்திற்கு   என்னை அழைத்துச்சென்றவர் சகோதரி ஶ்ரீரஞ்சனி. வழியில் கனகசபாபதி சேரையும் ஏற்றிக்கொள்வோம் என்றேன். அவ்வாறே அவரிடம் என்னை அழைத்துச்சென்றார்.

எம்முடன் வானொலி கலையகத்திற்கும் வந்து எனது நேர்காணலை வெளியிலிருந்து செவிமடுத்தார். அதன்பின்னர் ஸ்காபரோவில் நடந்த நடேசனின் நாவல் வெளியீட்டு நிகழ்வுக்கும் வந்தார். பின்னர் லோகேந்திரலிங்கம் எனக்காக ஒழுங்குசெய்திருந்த ஒரு இராப்போசனவிருந்திலும் கலந்துகொண்டு என்னை வாழ்த்திப்பேசினார். இவ்வாறு என்னுடன் இணக்கமாக உறவாடிய கனகசபாபதி சேரிடமிருந்து ஒரு நாள் மின்னஞ்சல் வந்து என்னை அதிர்ச்சியடைய வைத்தது. அவர் எங்கோ பயணத்தில் தனது உடைமைகளை பறிகொடுத்து நிர்க்கதியாக நிற்பதாகவும் தாமதமின்றி உதவுமாறும் கேட்டிருந்தார். அதனை நான் நம்பிக்கொண்டு, எதற்கும் அவருடைய தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தால் அவர் வீட்டிலிருப்பவர்கள் ஏதும் தகவல் சொல்வார்கள் என நினைத்தேன். தொடர்புகொண்ட வேளை கனடாவில் நடுச்சாமம். அவரே தொலைபேசியை சலித்துக்கொண்டு  எடுத்தார். எனது அதிர்ச்சியை  சொன்னதும், " அந்த மின்னஞ்சல் உங்களுக்கும் வந்ததா...? இதுவரையில் பலரும் என்னை விசாரித்து தூக்கத்தை குழப்பிவிட்டார்கள்" என்றார். அவரது மின்னஞ்சலை எவனோ திருடிவிட்டு இந்தத்திருவிளையாடலை காண்பித்திருக்கின்றான். அந்தச்சம்பவம் பற்றி அவர் ஏதும் சுவாரஸ்யமான கட்டுரை எழுதியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. அவரைப்பற்றிய நினைவுகள்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.