எழுத்தாளர் டொமினிக் ஜீவாஎழுத்தாளர் முருகபூபதியாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் (இன்றைய கனகரத்தினம் கல்லூரி) நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த (1962 )காலத்தில் எங்கள் ஆண்கள் விடுதியின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த டொமினிக் ஜீவாவை வெள்ளை நேஷனல், வெள்ளை வேட்டியுடன்தான் முதல் முதலில் பார்த்தேன். இந்த ஆடைகள் அவருடைய தனித்துவமான அடையாளமாகவே இன்றுவரையில் இருந்துவருகிறது.

அப்பொழுது அவர் எழுத்தாளராக இருந்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளின் பின்னர் அவரை 1971 இல் நீர்கொழும்பில் எதிர்பாராதவிதமாக சந்தித்தபொழுது, அவர் மல்லிகை இதழின் ஆசிரியராகவே எனக்கு அறிமுகமாகி, அன்று முதல் எனது பாசத்துக்குரிய நேசராகவும் குடும்ப நண்பராகவும் திகழ்கின்றார்.

என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது மல்லிகை ஜீவாதான் என்பதை தொடர்ச்சியாக பதிவுசெய்துவருகின்றேன். அவர் பற்றிய விரிவான மல்லிகை ஜீவா நினைவுகள் நூலையும் 2001 இல் எழுதியிருக்கின்றேன். அதற்கு முன்பும் பின்னரும் அவர் பற்றிய பல கட்டுரைகளை பத்திரிகைகள், இலக்கியச்சிற்றேடுகள், இணைய இதழ்களிலெல்லாம் எழுதியுள்ளேன். அவை இலங்கை, தமிழகம், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலிருந்து வெளியான ஊடகங்களில் பதிவுபெற்றுள்ளன.

அதனால் மீண்டும் அவர் பற்றி இலக்கிய ரீதியில் புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது...? என ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில், இலக்கியத்திற்கு அப்பால் அவர் ஆழ்ந்து நேசித்த பறவை பற்றிய நினைப்பு வந்தது. நூற்றுக்கணக்கான வகைகளைக்கொண்ட பறவை இனம் புறா மீது அவருக்கு அளவுகடந்த பிரியம். உலகில் சமாதானத்தின் சின்னமாக கருதப்படும் புறா, முற்காலத்தில் நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றத்திற்கும் உதவியிருக்கிறது. நாமறிந்த புறா இனங்கள்: மணிப்புறா, மாடப்புறா, விசிறிப்புறா, ஆடம்பரப்புறா. ஆனால், இதற்கு மேலும் பல புறா இனங்கள் உலகெங்கும் வாழ்கின்றன. அவற்றில் சில படிப்படியாக மறைந்து வருகின்றன.

மல்லிகை ஜீவா யாழ்ப்பாணத்தில் ரயில் நிலையத்திற்கு அருகில் வசித்தார். இன்றும் அவரது யாழ்ப்பாணம் இல்லம் தினமும் ரயிலின் ஓசையை கேட்டவண்ணமே அங்கு இருக்கிறது. அந்த இல்லத்தின் பின்புறத்தில் ஒரு கூடு அமைத்து பல புறாக்களை வளர்த்தவர் ஜீவா. அன்றாடம் வீட்டில் சமையலுக்கு உணவுப்பொருட்கள் இல்லாத நெருக்கடியான நிலை வந்துற்றபோதிலும் தாம் வளர்த்த புறாக்களுக்கு உணவளிப்பதை தவிர்க்காமல் அவற்றை நேசமுடன் பராமரித்து வளர்த்தவர் ஜீவா என்பது வெளியுலகில் பலருக்கும் தெரிய நியாயம் இல்லை. புறா இனத்தின் வகைகள், அவற்றின் உயிர்வாழும் காலம், அவை விரும்பி உண்ணும் தானியங்கள், நினைவு தப்பாமல் பறந்து சென்று மீண்டு வரும் அதன் இயல்பான ஆற்றல் பற்றியெல்லாம் துல்லியமான அறிவுகொண்டிருந்தவர் ஜீவா என்றால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால், அதுதான் உண்மை.

'மல்லிகை' ஜீவாவுடன் எழுத்தாளர் முருகபூபதி

ஒரு சமயம் வழக்கப்போல் ஜீவா புறாக்கூட்டுக்குள் தானியம் வைக்கும்பொழுது அதன் உள்ளேயிருந்து ஒரு புடையன் பாம்பு சீறியிருக்கிறது. நல்லவேளை ஜீவா கையை எடுத்துவிட்டார். அப்பொழுது புறாக்களும் அக்கூட்டில் இருக்கவில்லை என்பது அவருக்கு கிடைத்த பெரிய நிம்மதி. ஜீவா தனக்கும் தான் வளர்த்த புறாக்களுக்கும் இடையே நீடித்த சாசுவதமான உறவைப்பற்றி எங்காவது எழுதியிருக்கிறாரா...? என்பதும் தெரியவில்லை. மல்லிகை ஜீவாவும் பறவைகளைப்போன்று சுதந்திரமாக பறக்காதுபோனாலும் நடமாடித்திரிந்தவர். கால் நடையாகவே மல்லிகை இதழ்களை சுமந்துகொண்டு வந்து வாசகர்களுக்கு சேர்பித்தவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியான காலத்தில், ஒவ்வொரு மாதமும் மல்லிகை அச்சாகியதும், பிரதிகளை யாழ். மாவட்டத்தில் விநியோகித்துவிட்டு, வெளியூர்களுக்கு தபாலில் அனுப்பிவிட்டு, தாமதமின்றி ரயிலேறி கொழும்புக்கு வந்துவிடுவார். வருமுன்னர், தான்வரவிருக்கும் திகதியை தெரிவித்து எனக்கு ஒரு அஞ்சலட்டையும் அனுப்பிவிடுவார். கொழும்பு மூன்றாம் குறுக்குத்தெரு அங்காடிகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வரும் லொறிகளில் மல்லிகை இதழின் பொதியும் வந்துசேரும். கொழும்பில் ஜீவாவை சந்தித்து, அவருடன் அந்த மாநகர வீதிகளில் அலைந்திருக்கின்றேன். இலக்கியக்கூட்டங்களுக்காக பயணித்திருக்கின்றேன். போர்க்காலத்தில் அச்சடிக்கும் காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு வந்தபோது, பாடசாலை அப்பியாசக்கொப்பித்தாள்களிலும் மல்லிகையை அச்சிட்டு விநியோகித்த சாதனையாளர்தான் எங்கள் ஜீவா.
அப்போது இன்றைய நவீன கணினியுகம் இல்லை. கைத்தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப் இல்லை. குறைந்த வளங்களுடன் அவர் மல்லிகையை நடத்தியதை இன்று நினைத்துப்பார்க்கும்போதும் பேரதிசயமாகத்தான் இருக்கிறது!

இவ்வாறு அதிசயங்களை நிகழ்த்திய ஜீவா, தற்போது கொழும்பின் புறநகரமான மட்டக்குளியாவில் ஏக புதல்வன் திலீபனின் இல்லத்தில், மெளனமாகியிருக்கிறார். சமகாலத்தில் நாமெல்லோரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலினால் வீடுகளுக்குள் முடங்கி அடங்கியிருக்கின்றோம். ஆனால், ஜீவா இத்தகையாதோர் அசாதாரண வாழ்க்கைக்கு சில வருடங்களுக்கு முன்பே பழக்கப்பட்டு, தனிமைப்பட்டுவிட்டார்.

தாயகம் செல்லும்வேளைகளில் இலக்கிய நண்பர்கள் மேமன்கவி, மற்றும் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் ஆகியோருடன் ஜீவாவை பார்க்கச்செல்வேன். கடந்த ஆண்டு நடுப்பகுதியில் ஶ்ரீதரசிங்குடன் சென்று பார்த்தவேளையில்தான் ஒரு அதிர்ச்சிதரும் துயரமான செய்தியையும் அறிந்தேன். இன்றைய ஈஸ்டர் ஞாயிறுபோன்று அன்று கடந்த 2019 ஆம் ஆண்டில் வந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில்தான் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் சென்ற, ஜீவாவின் பேத்தியின் கணவரும் கொல்லப்பட்டார்!
ஜீவா, பிரியமாக வளர்த்த புறா இனங்கள் என்றும்போல் இன்றும் வானத்தில் சுதந்திரமாக பறந்துகொண்டிருக்கின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.