தமிழ்த்திரையுலகில் இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ் ( 1933-2009)! ஆயிரம் படங்களுக்குமேல் அயராமல் நடித்த அபூர்வ கலைஞன்! இன்று ஜனவரி 31 நினைவு தினம்!

Saturday, 01 February 2020 08:41 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print

தருமியாக திருவிளையாடல் திரைப்படத்தில்...“ தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனதில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலா நோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்  “ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ்.  சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரஸிகர்களை தனது அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர் நாகேஷ். நாகேஷ், தமிழ்நாடு,தாராபுரம்பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில்   1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி  பிறந்தார். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மறைந்தார்.

ஆங்கில திரைப்பட உலகில் புகழ்பெற்ற ஜெர்லூயிஸைப் போன்று தமிழ்த்திரையுலகில் தனது ஒடிசலான தேகத்தையும் அம்மைத்தழும்புகள் ஆக்கிரமித்த முகத்தையும் வைத்துக்கொண்டு அஷ்டகோணலாக உடலை வளைத்தும் நெளித்தும் கருத்தாழமிக்க வசனங்களை உதிர்த்தும் தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாகத் திகழ்ந்த நாகேஷ்  அவர்கள் , கமல்ஹாஸன் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிரேதமாகவும் நடித்தவர்.

குண்டுராவ் என்ற இயற்பெயரைக்கொண்ட நாகேஷ், நடித்த முதல் திரைப்படம் தாமரைக்குளம்.  ஆரம்பத்தில் மேடைநாடகங்களில் நடித்தும் திருமண வைபவங்களில் நகைச்சுவைநிகழ்ச்சிகளை நடத்தியும் வாழ்க்கையைச்சிரமப்பட்டு ஓட்டிய நாகேஷை தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாற்றிய பெருமை பாலச்சந்தர் மற்றும் ஜெயகாந்தனையே சாரும்.  பாலச்சந்தரின் நீர்க்குமிழி,  எதிர்நீச்சல், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான்  என்பன அவரது குணச்சித்திர நடிப்புக்குச்சிறந்த சான்று. ஸ்ரீதரின் காதலிக்கநேரமில்லை, ஊட்டிவரை உறவு, ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள்  மற்றும் சர்வர் சுந்தரம் உட்பட பல நூறு படங்கள் நாகேஷின் தனித்துவமான நடிப்பாற்றலுக்கு சான்று பகர்பவை.

நடிகர் சிவகுமார் நடிகர் மட்டுமல்ல. சிறந்த ஓவியரும், இலக்கியப்பிரக்ஞைமிக்க எழுத்தாளருமாவார். நூல் விமர்சனங்கள் எழுதியிருப்பவர். பல தமிழக இலங்கை எழுத்தாளர்களுடன் நட்புறவுடன் பழகுபவர். இவர் ஜூனியர் விகடனில் முன்பு எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ தொடரில் நடிகர் நாகேஷ் பற்றியே  ஒரு தனி அத்தியாயம் எழுதியிருக்கிறார்.

உலகப்புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லிசப்லின் தனது வாழ்க்கையில் சந்தித்த அவமானங்கள், வேதனைகள், சோதனைகள் போன்று தமிழ்த்திரையுலக நாகேஷ்  எதிர்நேக்கிய இன்னல்கள் ஏராளம்.  ஆயினும் தன்னம்பிக்கையுடன் திரையில் மட்டுமல்ல தன் சொந்த வாழ்விலும் எதிர்நீச்சல் போட்டவர்.   சில வெளிநாட்டு ஊடகங்களில் (புலம்பெயர்ந்தவர்கள் நடத்தும் வானொலிகளில்) நாகேஷ் நடித்த முதல் திரைப்படம் நவக்கிரகம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்தத் தகவல் தவறு. தாய் நாகேஷ் என்ற பெயருடன் அவர் தோன்றிய முதல் திரைப்படம் தாமரைக்குளம். 1960 களில் இத்திரைப்படம் வெளியானது.

இரவுபகலாக ஒய்வு ஒழிச்சலின்றி நடித்த நாகேஷ், ஏழ்மையிலும் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தாயாரைத் திருப்திப்படுத்தி சந்தோஷமாக வைத்திருக்கவேண்டுமென்பதற்காக கடினமாக உழைத்து பணமும் சம்பாதித்து சொந்தமாக காரும் வாங்கிக்கொண்டு தாயாரைத் தேடிச்செல்லும்போது தாயார் இறந்து அக்கினியில் சங்கமமாகிக்கொண்டிருந்தார்.  அவரது வாழ்வில் மீளமுடியாத சோகத்தைத் தந்தது இந்தச்சம்பவம்தான் என்று அவர் தெரிவித்திருப்பதாக நடிகர் சிவகுமார் தமது கட்டுரையில் வாசகரை நெகிழச்செய்யும் விதமாக எழுதியிருக்கிறார்.

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் குறுநாவலை திரைப்படமாக்க விரும்பிய இயக்குநர் ஸ்ரீதர், அதற்கான அனுமதியை கேட்டபொழுது ஜெயகாந்தன் மறுப்புத்தெரிவித்து, குறிப்பிட்ட கதையில் வரும் திருட்டுமுழி ஜோஸப் பாத்திரத்துக்கு நகேஷை தேர்வு செய்து படப்பிடிப்பையும் தொடங்கினார். வசூலைப்பொறுத்தவரையில் பெரிய லாபத்தை அந்தத் திரைப்படம் ஜெயகாந்தனுக்கு கொடுக்காது போனாலும் தரமான தமிழ்த்திரைப்படங்களின் வரிசையில் யாருக்காக அழுதான் இன்றும் பேசப்படுகிறது.

ஜெயகாந்தனின் யாருக்கா அழுதான் திரைப்படத்தில் கே.ஆர்.விஜயாவுடன்...

ஜெயகாந்தனின் பார்வையில் நாகேஷ்:-    “  நாகேஷின் நடிப்பு தமிழ்த்திரைப்பட உலகிற்கு, இதன் தகுதிக்கு மிஞ்சிய ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லவேண்டும். நல்லவேளையாக டைரக்டர்களின் ஆளுகை தன்மீது கவிழ்ந்து அமிழ்த்தி விடாதவாறு பாதுகாத்துக்கொள்ளும் அதேசமயத்தில் ஒரு நடிகனுடைய எல்லைகளை மீறி நடந்துகொள்ளாதவர். தனது பாத்திரத்தைத் தன் கற்பனையினால் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எதிர்பாராத முறையில் மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்கிற ஒரு புதுமையான கலைஞராகவும் இருந்தார்.  “  ( நூல்: ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்)

நாகேஷும் ஜெயகாந்தனும் நல்ல நண்பர்கள். ஜெயகாந்தனின் யாருக்காக அழுதானில்  கதாநாயகனாக நடித்த நாகேஷ்தான் பாலச்சந்தரின் எதிர்நீச்சல் நாடகத்திலும் கதாநாயகன். (இந்நாடகமும் பாலச்சந்தரின் இயக்கத்தில் பின்பு படமாகியது.)
இரண்டு கதைகளுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக சில சினிமாவிமர்சகர்கள் குசும்புத்தனமாக பேசத்தொடங்கிவிட்டதனால் பாலச்சந்தர் கவலைப்பட்டிருக்கிறார். ஆனால் .  ஜெயகாந்தனிடம் அத்தகைய அபிப்பிராயம் இருக்கவில்லை. எனினும் ஜெயகாந்தனுக்கும் பாலச்சந்தருக்கும் நல்ல நண்பராகத்திகழ்ந்த நாகேஷ்,   அவர்கள் இருவருக்குமிடையில் பகைமை தோன்றிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஜெயகாந்தனின் இருப்பிடத்திற்கு ஒருநாள் காலை வேளையிலேயே வந்து, ஜெயகாந்தனை குறிப்பிட்ட எதிர்நீச்சல் நாடகத்துக்கு அன்று மாலையே அழைத்துச்சென்றுள்ளார். நாடகத்தைப் பார்த்த ஜெயகாந்தன், தனது கதைக்கும் எதிர்நீச்சலுக்கும் எந்தவொரு  சம்பந்தமும் இல்லையென்று நாடக அரங்கின் பின்புறம் சென்று அவர்கள் இருவருக்கும் தெரிவித்து  சங்கடத்தைப் போக்கியுள்ளார்     

“  நேரடியாக விடயத்தைச்சொல்லாமல் நாகேஷ் சமயோசிதமாக சிக்கலை அவிழ்த்துவிட்டார்  “ - என்று சொல்லி நாகேஷின் உயர்ந்த பண்பைப் பாராட்டுகிறார் ஜெயகாந்தன்.  பாலச்சந்தரின் எதிர் நீச்சல் ஒரு வங்க நாடகக்கதையின் தழுவல் என்பதுதான் ஜெயகாந்தனின் அபிப்பிராயம்.

திருவிளையாடல் படத்தில் ஏழைப்புலவன் தருமியாகத் தோன்றி அசத்தியவர் நாகேஷ். அதில் சிவனும் (சிவாஜி) தருமியும் (நாகேஷ்) தோன்றும் காட்சி மிக முக்கியமானது. இந்தப்படப்பிடிப்பு முடிந்ததும் அதனை சிவாஜிக்கு, படத்தின் இயக்குநரும் வசனகர்த்தாவுமான ஏ.பி.நாகராஜன் போட்டுக்காண்பித்தாராம். நாகேஷின் நடிப்பினால் சிலிர்த்துப்போன சிவாஜி, அந்தக்காட்சிகளில் கத்திரிக்கோலை வைக்கவேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டாராம்.  குறிப்பிட்ட திருவிளையாடல் காட்சியை எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் மேடைநாடகமாக நடிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தின் ஈழத்தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழாவில் இங்குள்ள உயர்தர வகுப்பு மாணவர்கள் அந்தத்திரைப்படக்காட்சியை நாடகமாக்கியபொழுது பார்த்து ரசித்திருக்கிறேன்.

வாழ்வில் ஏற்ற-இறக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் சந்தித்த நாகேஷுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சோதனையான காலமும் தோன்றியது.  அவரது மனைவி ரெஜினாவின் சகோதரன் ஒருவனின் மர்ம மரணம் அவரது குடும்பத்தில் பெரும் புயலையே ஏற்படுத்திவிட்டது. நாகேஷின் மனைவி உட்பட சில குடும்ப உறுப்பினர்கள் பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது நாகேஷ்  எச்சமயத்திலும் கைதாவார் என்ற வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அதனால் ஏ.பி. நாகராஜன் தனது 'தில்லானா மோகனாம்பாள்' படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் ஒத்திவைக்கத் தீர்மானித்தார். காரணம்: குறிப்பிட்ட படத்தில் தரகராக வரும் வைத்தி பாத்திரத்துக்கு நாகேஷைத் தவிர பொருத்தமான வேறு ஒருவர் இல்லை என்பதுதான் நாகராஜனின் அபிப்பிராயம்.  எனினும் அந்த கொலைச்சம்பவத்தில் நாகேஷுச் சம்பந்தம் இருக்கவில்லை. தமிழக ‘கிசு கிசு திரைப்பத்திரிகை’ உலகம் எதிர்பார்த்த ‘அவல்’ சப்புவதற்கு கிடைக்காமல்போனது நாகேஷின் நல்ல காலம்தான்.

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் நாகேஷின் நெருங்கிய உறவினரும் பேத்தி முறையானவருமான இலக்கிய வாசகி திருமதி விஜி இராமச்சந்திரன் அவர்களுடன் நாகேஷ் பற்றி சில தகவல்களை கேட்டுத் தெரிந்துகொண்டேன். இவரது தந்தையாரும் நாகேஷ் அவர்களும் பால்யகாலத்தில் தாராபுரத்தில் சேர்ந்து விளையாடுவார்களாம். தனது தயாரிடத்தில் மிகுந்த பிரியம்கொண்டிருந்தவர் நாகேஷ் தாத்தா.  அந்தப்பிரியம் எத்தகையது என்பதை அவர் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் பார்க்கமுடியும்  “ எனக்கூறிய விஜி இரமச்சந்திரன் நாகேஷ் தங்கள் உறவினர்களுடன் கலந்துகொண்ட  சில குடும்ப நிகழ்ச்சிப்படங்களையும் எமக்கு காண்பித்தார். 

நாகேஷ், தனது உழைப்பில் சென்னை பாண்டிபஜாரில் நாகேஷ் திரையரங்கம் ஒன்றையும் அமைத்து, அச்சமயம் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. ஆரை அழைத்து திறந்துவைத்தார். பின்னாளில் இத்திரையரங்கம் திருமண மண்டபமாகியது.  அதே பெயரில் அந்தத்  திரையரங்கை மையமாக வைத்து சில வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படமும் வெளியானது.

நாகேஷ் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்.  “  தான் திரையில் தோன்றியதுமே ரஸிகர்கள் சிரித்து ஆரவாரம் செய்கிறார்கள். அதற்காக மகளிர் மட்டும் படத்தில் பிரேதமாகவும் தோன்றிப்பார்த்தாராம். அதற்கும் ரசிகர்கள் அழாமல் சிரித்தார்களாம்.  “
நாகேஷ் தத்துவார்த்தமாக அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பேச வல்லவர். நண்பர்களுடனான சந்திப்புகளில் அவர் உதிர்க்கும் தத்துவக்கதைகள் பொருள் பொதிந்தவை.   நாகேஷ் சொன்ன பல துணுக்குகளில்  இரண்டு வாசகர்களுக்கு:-

1.    தெருவோரத்தில் கிடந்த மலத்தைப் பார்த்தவர்கள் மூக்கைப்பொத்திக்கொண்டு அருவெறுப்போடு சென்றார்களாம். அதனைப்பார்த்த அந்த மலம் சொன்னதாம். ‘நான் முன்பு ஒரு பலகாரப்பட்சணக்கடையில் அழகிய கேக்காக கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்தேன். உங்களைப்போன்ற ஒரு மனிதன்தான் என்னை வாங்கி உண்டு,  இப்படி இந்தக்கதியில் விட்டுப்போய்விட்டான். கண்ணாடிப்பெட்டிக்குள் நறுமணத்துடன் சுவையாகத்தான் நான் இருந்தேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன் மனிதன்தான்.

2.    குதிரை ரேஸ் நடக்கும் மைதானத்தில் இலட்சக்கணக்கான மனிதர்கள் குதிரைகளின் மீது பணத்தைக் கட்டிவிட்டு அவற்றின் ஓட்டத்தைப்பார்ப்பார்கள். ஆனால்,  குதிரைகளுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது.

தாமரைக்குளம் முதல் தசாவதாரம் வரையில் ஓயாமல் நடித்துவிட்டு,  நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்ட நாகேஷ், கடந்த 2009 ஆம் ஆண்டு நிஜவாழ்வில் உண்மையாகவே பிரேதமாகிவிட்டவர். ஆனால்,  இந்தக்காட்சி நடிப்பல்ல. அதனால் அவரது ரசிகர்கள் சிரிக்கவில்லை.

'திருவிளையாடல்' திரைப்படத்தில் தருமியாக நாகேஷ்

தருமியாக திருவிளையாடல் திரைப்படத்தில்...

https://www.youtube.com/watch?v=zjuzJwo_1Y8

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 01 February 2020 12:27