வவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி

Tuesday, 07 April 2020 14:58 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print

வவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவிஅவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை 06 ஆம் திகதி வவுனியாவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

கடந்த 32 வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா மாவட்டத்தின் நீண்ட கால தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் நேற்றைய தினம் அதன் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் மாணவர்களின் தாய்மார் அழைக்கப்பட்டு, உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள பணிமனையில், முகாமைக்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், அறிவழகன், கள உத்தியோகத்தர் திருமதி பிரேமா ஆகியோர் குறிப்பிட்ட தன்னார்வத் தொண்டு அமைப்பின் பணியாளர்களுடன் இணைந்து இதனை வழங்கினார்கள்.

அரிசி , கோதுமை மா , பருப்பு , சீனி , தேயிலை, சோயா மீட், கடலை , சமபோசா முதலான உலர் உணவுகள் மற்றும் சோப்கட்டிகளும் பொதிசெய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. சமகாலத்தில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும் கொரனோ வைரஸ் தாக்கம் தொடர்பாக தாய்மாருக்கு விழிப்புணர்வு விளக்கமும் அளிக்கப்பட்டது.
வவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி
இலங்கையில் நீடித்த போரில் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களினதும் கடந்த சில வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களினதும் கல்வி இடைநிறுத்தப்படலாகாது என்ற நோக்கத்துடன் தங்கு தடையின்றி இயங்கி, ஆதரவுக்கரம் நீட்டிவரும் அவுஸ்திரேலியா வாழ் அன்பர்களுக்கும் கல்வி நிதியத்திற்கும் நேற்றைய நிகழ்வில் மாணவர்கள் – தாய்மார் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 07 April 2020 15:13