மண்டூர் மகேந்திரன் தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்துள்ளது.

1970 இல் உருவான ஶ்ரீமா – என். எம். பெரேரா – பீட்டர் கெனமன் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஜனநாயக சோஷலிஸ குடியரசை நிறுவியதையடுத்து., சட்டமேதை என நன்கு அறியப்பட்ட கொல்வின் ஆர். டீ. சில்வா எழுதிய புதிய அரசியல் அமைப்பின் எதிரொலியாக , அதுவரையில் சமஷ்டி கோரிவந்த தமிழரசுக்கட்சியினரும் தமிழ் இளைஞர் பேரவையினரும் அந்த அரசியல் அமைப்பினை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினர்.

அதே சமயம் , அந்த கூட்டரசாங்கம் சில முற்போக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கியதுடன், பல நிறுவனங்களை அரசுடைமையாக்கி இலங்கை வானொலியை – ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக்கியது. திரைப்படக்கூட்டுத்தாபனம் அமைத்து உள்ளுர் சிங்கள – தமிழ் சினிமாவுக்கும் ஊக்கம் கொடுத்தது.

அத்துடன் தென்னிந்திய வணிக இதழ்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால், இலங்கையில் பல தமிழ் சிற்றிதழ்களும் வெளிவரத்தொடங்கின. வீரகேசரி நிறுவனமும் மாதம் ஒரு நாவல் திட்டத்தில் பல ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிடத்தொடங்கியது.

அஞ்சலி, ரோஜாப்பூ , மாணிக்கம் , தமிழமுது, பூரணி முதலான கலை இலக்கிய இதழ்களும் வெளிவரத்தொடங்கின.

இக்காலப்பகுதியில் கொழும்பில் இயங்கிய தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் இணைந்து இயங்கியவர்தான் மண்டூர் மகேந்திரன்.

அச்சமயம் கொழும்பில் புதுக்கடை பிரதேசத்தில் இயங்கிய இலங்கை வங்கிக்கிளையில் பணிபுரிந்த இணுவையூர் இரகுபதி பால ஶ்ரீதரனும் அவ்விளைஞர் பேரவையில் முக்கிய பங்கெடுத்திருந்தார்.

இவர் கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர். இவருடன் அதே வங்கியில் பணியாற்றிய கைலாசபிள்ளை என்பவரின் மனைவி சரோஜினியும் கலை, இலக்கிய ஆர்வத்துடன் மாணிக்கம் என்ற மாத இதழை தொடங்கினார்.

இந்த இதழ் கொழும்பு பாமன்கடையில் கல்யாணி வீதியில் அமைந்திருந்த கைலாசபிள்ளை – சரோஜினி தம்பதியரின் இல்லத்திலிருந்து வெளிவந்தது.

பிரதம ஆசிரியராக திருமதி சரோஜினி கைலாசபிள்ளை பேருக்கு இருந்தபோதிலும், ஈழத்து இரத்தினம் என்ற திரைப்பட வசனகர்த்தாவும் பாடலாசிரியரும்தான் எழுத்து – மற்றும் செம்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

பின்னாளில் மூத்த பத்திரிகையாளர் எஸ். டி. சிவநாயகமும் அதன் ஆசிரியராக பணியாற்றியவர்தான்!

தமிழ் இளைஞர் பேரவையைச்சேர்ந்த இரகுபதி பாலஶ்ரீதரனுடைய நண்பரான மண்டூர் மகேந்திரனும் பல தடவைகள் எங்கள் நீர்கொழும்பூர் வீட்டுக்கு வந்துசெல்வதுண்டு. அச்சமயம் கலை, இலக்கியம், அரசியல் குறித்தும் நாம் பேசிக்கொள்வோம். பாலஶ்ரீதரன் வரும்போது மாணிக்கம் இதழின் பிரதிகளும் எடுத்துவருவார். எங்கள் ஊர் சைவ ஹோட்டல்களில் அவற்றை விற்பனைக்கு வைப்போம். மகேந்திரனும் உடன் வருவார்.

எங்கள் வீட்டுக்குச் சமீபமாகவே கடற்கரை இருந்தமையால் எமது கலந்துரையாடல்கள் அங்கும் தொடரும். அந்த நண்பர்களிடம் அச்சமயத்தில் உருவாகியிருந்த கனவு தனித்தமிழ் ஈழம்தான்.

அவர்கள் இருவரும் வட – கிழக்கினை பூர்வீகமாகக்கொண்டிருந்தவர்கள். அன்றைய புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கியதையிட்டு, தமிழ் ஈழம்தான் தமிழர்களுக்கு சரியான அர்த்தமுள்ள தீர்வு என்று என்னுடன் வாதிடுவார்கள்.

நான் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, மற்றும் தோழர்கள் வி. பொன்னம்பலம், விஜயானந்தன், எழுத்தாளர்கள் சிவா. சுப்பிரமணியம், மு. கனகராஜன், பிரேம்ஜி ஞானசுந்தரன் முதலானோருடன் நெருக்கமான தோழமையுடன் உறவாடிய காலம். மகேந்திரன் – இரகுபதி பாலஶ்ரீதரன் ஆகியோர் எதிர்பார்க்கும் தமிழ் ஈழத்தின் வரைபடத்திற்குள் எனது பூர்வீக பிரதேசம் இல்லாதமையாலும், தோழர் வி. பொன்னம்பலம் முன்மொழிந்த பிரதேச சுயாட்சிதான் சரியான தீர்வாகும் என்று அந்த இரண்டு நண்பர்களுடனும் வாதிடுவேன்.

பிரிவினைக்கோஷம் இறுதியில் மேற்குலக வல்லரசுகள் இலங்கையில் கால் ஊன்றுவதற்குத்தான் வழிகோலும் என்ற தோழர் சண்முகதாசனின் தீர்க்கதரிசன கருத்தியலுடன் நான் நெருக்கமாகியிருந்தமையாலும் அவர்களுக்கு எதிர்வினையாற்றுவேன்.

எமது கருத்து முரண்பாட்டு விவாதங்கள் சிநேகபூர்வமாகவே தொடரும்.

தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினர்கள் சிலரது கொழும்பு மேடைப்பேச்சுக்கள் மிகவும் தீவிரமாகியிருந்த காலம். சில தமிழ் இளைஞர்கள் கைதாகி நீர்கொழும்பு சிறையிலும் தடுத்துவைக்கப்பட்டனர்.

உணர்ச்சிக்கவிஞர் ( ? ) காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா முதலானோர் மகேந்திரன் போன்ற அதி தீவிர தமிழ் உணர்வுகொண்ட இளைஞர்களுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தார்கள்.

இவர்களில் முத்துக்குமாரசாமி இரகுபதி பால ஶ்ரீதரனின் தம்பி உட்பட மேலும் சிலர் நீர்கொழும்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

ஒருநாள் மகேந்திரனும் பாலஶ்ரீதரனும் எங்கள் வீட்டுக்கு வந்து மதிய உணவருந்திவிட்டு, நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அங்கிருப்பவர்களை பார்க்கச்சென்றபோது நானும் உடன் சென்றிருந்தேன்.

அப்போது மகேந்திரன் சொன்ன வார்த்தை இன்றளவும் நினைவில் தங்கியிருக்கிறது.

“ நண்பரே… நானும் விரைவில் கைதாகலாம் . அதற்கும் தயாராகத்தான் இருக்கின்றேன் “

அவரது வாக்கு சில நாட்களில் பலித்தது. மாவை சேனாதிராஜாவும் கைதாகி அதே சிறையில் தடுத்துவைக்கப்பட்டார்.

நான் அச்சமயம் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில் அங்கத்தவனாகவும் வீரகேசரி பத்திரிகையின் பிரதேச நிருபராகவும் இயங்கியமையால், அந்த சிறைச்சாலைக்கு அடிக்கடி சென்று வருவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

அந்தச்சிறைச்சாலையில் எனது நீர்கொழும்பூர் இந்து தமிழ் மூதாதையர்களினால் ஒரு கண்ணன் கோயில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கிருக்கும் இந்து – தமிழ் கைதிகளுக்கு சமய சொற்பொழிவாற்றுவதற்கும், கைதிகளை ஆற்றுப்படுத்துவதற்குமாக சீர்மியத் தொண்டராக சாமிசாஸ்திரியார் என்ற ஒரு பெரியாரை மன்றம் முன்னர் வாராந்தம் அனுப்பியிருக்கிறது.

அந்தத் தொடர்பாடலினால், தைப்பொங்கல், சித்திரைப் புதுவருடம், தீபாவளி முதலான பண்டிகை தினங்களிலும் அச்சிறையில் இருக்கும் கண்ணன் கோயிலில் மாலைவேளையில் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குருவையும் அழைத்துச்சென்று பூசையும் நடத்திவிட்டு இந்து – தமிழ் கைதிகளுக்கு பொங்கல், வடை, மோதகம் முதலான பிரசாதங்களும் வழங்குவோம். நானும் சிறைச்சாலையின் வாகனத்தில் அய்யரையும் மன்ற உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு செல்வேன்.

நான் ஒன்றும் பெரிய பக்திமான் அல்ல! அங்கிருந்த அரசியல் கைதிகளை பார்த்துப்பேசுவதுதான் எனது உள்நோக்கம். அவர்கள் தங்கள் பாசமிகு குடும்பத்தினரை, உறவினர்களை விட்டு விட்டு, தமிழ் உணர்வின் மீதான அர்ப்பணிப்போடு இயங்கியதனால் சிறைக்குள் தள்ளப்பட்டவர்கள்.

அவர்களின் குடும்பத்தினர் வடக்கிலும் கிழக்கிலும் வசிப்பவர்கள். அந்தத் தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து கடிதங்களைப்பெற்று வெளியே எடுத்துவந்து தபாலில் அனுப்புவதுதான் எனது தார்மீக ஆதரவு.

பின்னாளில் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற அறப்போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளேன். இதுபற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். அதில் நீர்கொழும்பு சிறைச்சாலையும் இடம்பெற்றுள்ளது.

ஒரு நோக்கத்திற்காக அவர்கள் அன்று கைதானவர்கள். அவர்களில் மண்டூர் மகேந்திரன் உருவத்தில் மெலிந்தவர். ஊதிவிட்டால் விழுந்துவிடுவாரோ…? என்ற தோற்றத்திலிருந்தவர். அதிர்ந்து பேசமாட்டார். எனினும் அவரது உள்ளத்தில் தமிழ் ஈழம்தான் நெருப்பாக கனன்றுகொண்டிருந்தது.

விடுதலையானதன் பின்னரும், அந்தக்கனவைச் சுமந்தவாறு வாழ்ந்தவர். அவரிடத்தில் ஆயுதம் மீதான மோகம் இருக்கவில்லை. அகிம்சை வழியைத்தான் பின்பற்றினார். அறப்போராட்டங்களில்தான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

தந்தை செல்வநாயகம், அவரது மகன் சந்திரகாசன், மற்றும் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணிகள் கே. கந்தசாமி , செல்வத்துரை ரவீந்திரன் ( இவர் தற்போது மெல்பனில் வாசி ) முதலானோருடன் நெருக்கமாக இருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபட்டார். அக்காலப்பகுதியில் வாரம் தோறும் தந்தை செல்வா தமது அல்பிரட் ஹவுஸ் கார்டன், இல்லத்தில் நடத்தும் சந்திப்புக்கூட்டங்களை ஒழுங்குசெய்வதிலும் சம்பந்தப்பட்டிருந்தார்.

வண்ணை ஆனந்தன், புஸ்பராசா, புஸ்பராணி, கி.பி. அரவிந்தன் போன்று இவரும் அய்ரோப்பிய நாடுகளுக்குச்சென்றிருக்கலாம். அதற்கான வாய்ப்பு அப்போது இருந்தது.

இலங்கையில் இனிமேலும் தங்கியிருக்கமுடியாது எனப்புறப்பட்ட ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என புலம்பெயர்வதற்கு வசதியாக விசா இல்லாத அனுமதியும் இருந்த காலம். விமானக்கட்டணத்திற்கான பணம்தான் தேவைப்பட்டது.

அத்தகைய சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாமல் அவர் எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஈழ மண்ணிலேயே இறுதிவரையில் வாழ்ந்து மறைந்துள்ளார்.

“ கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள் “ என்ற ஒரு பாடல் வரியை நாம் கடந்து வந்துள்ளோம். தமிழ் உணர்வாளர் மண்டூர் மகேந்திரனின் வாழ்வும் பணிகளும் தமிழ் ஈழக்கனவுடன் இரண்டறக்கலந்திருந்தது.

அந்தக்கனவை நனவாக்குவதற்காக ஆயிரக்கணக்கில் தமது இன்னுயிர்களை துறந்தவர்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் வலிகளை மனதில் சுமந்துகொண்டிருந்த மகேந்திரன், அந்த நீடித்த வலியிலிருந்தும் விடுதலை பெற்றுச்சென்றுவிட்டார்.

தொலைவிலிருந்தவாறு, அந்த நண்பருக்கு எனது இரங்கல் பதிவின் ஊடாக அஞ்சலி செலுத்துகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.