வளர்பிறை அனுபவங்கள்

Tuesday, 26 March 2013 20:45 - சுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை  மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு.தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை அவர் கவிதைகள்  எப்போதும் கொண்டிருக்கிறது.கவிஞர் கதிர்பாரதிசுப்ரபாரதிமணியன்கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை  மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு.தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை அவர் கவிதைகள்  எப்போதும் கொண்டிருக்கின்றன. இத்தொகுப்பில் கவிதைகளில், கவிஞன் பற்றி நிறையவே எழுதியுள்ளார். கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி என்கிறார். எப்படியாகினும் கடத்தி விட வேண்டும் என்கிற ஆசையைச் சொல்கிறார். துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பென்று.  துப்பாக்கிக்குள் ரவை நிரப்பியதைப் போலாகிறது. அழவைத்து விட்ட நிறைவும் வந்து விடுகிறது. நவகவிஞனின் தினப்படி வாழ்க்கையின் அவலத்தை “  மகாகவி கவிதை எழுதுகிறான்”என்று குறிப்பிட்டு அவனின் எதிர்வினையையும் சொல்கிறார். கதிர்பாரதியின் கனவுகளை கொள்முதல் செய்து கொண்டு போன வாசகனின் கண்களில் ஒளி பெருகத் தொடங்கச் செய்கிறார். இவரின் பாழடைந்த வீட்டை கடந்து செல்பவனின் அனுபத்தை  வாசகன் கவிஞனை கடந்து செல்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் அவன் என்ன செய்து விட முடியும் என்பதில் ” ஆவல் ”கவிதையில் கூடக் குறிப்பிடுகிறார்.வாழ்க்கையே கொலைக்களமாகி வருவதைச்  சொல்லும் அனுபவங்கள் உண்டு.  வாழ்க்கையில் கவிதைக்கு இடமில்லாமல் போய் விடுகிற துயரத்தையும் மேலிட்டு எடுத்துக் காட்டுகிறார்.யாருடைய அனுபவங்களோ, வார்த்தைகளோ கூட  தனக்குள் வரித்துக் கொண்டதாகி பின் கவிதை வரிகளாகின்றன்.

நீள் கவிதைகளில் மகாகவி கவிதை ஒருவகை நிகழ் முரண் என்றால் குளத்தில் அலைகின்றகவிதைகள்  அகத்தூண்டுதலாய் விரிகிறது.உள்ளுணர்வுடன் தொடரும் கவிதை மனம் சுற்றுச் சூழலையும் நிகழ் காலத்தையும் சரியாகவே கணித்து நகர்கிறது. உருக்கமான காதல் புலம்பலோ பெண்ணிடம் கெஞ்சுவதோ கூட சாவை ஒத்த துயரத்தின் உச்சபட்சானுபவமாக எழுதுகிறார்
( மோகினியிடம் இருக்கு மூன்று அரளிப்பூக்கள் ) குழந்தைகள், ஆண்கள் , பெண்கள், மிருகங்கள், சாத்தானும் கடவுளும் கவிதைகளில் அலைக்கழிந்து  அதிகாரத்திற்கு எதிரான குரலாகவும், அன்பினால் வார்த்தைகள் குழைந்ததாகவும் மாறுகிறது.மரண வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கதிர்பாரதியின் யானை கும்கிகள்தான். ஆனால் ஆசீர்வாதம் வாங்கும், ஆசீர்வாதம் தருபவை.பொம்மையை உருவாக்கி விட்டு  புன்னகையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள்,  மகன்களும் மகன்களின் நிமித்தமும் தரும் அனுபவங்கள் ,போன்றவற்றில் உட்சபட்சமான விளையாட்டைத் தொட்டு விடுகிறார்.” மகனால் நனைகிறது அப்பாவின் பால்யம் “ குழந்தைகளின் குறும்புகளும், நடவடிக்கைகளும் கதிர்பாரதியின் மனிதிற்குள் உட்கார்ந்து கொண்டு வாசிப்பாளனை குழந்தை மனம் கொண்டவனாக்கி விடுகிறது. வாசக் அனுபவங்களையும் நேர்மையானதாக்குகிறது. நேர்மையான அனுபவத்திற்கு கவிதை மொழி அதன் சாத்தியங்களை எல்லையற்றதாக்கிக் கொண்டே போவதற்கு இயல்பான வார்த்தைப் பிரயோகங்களும் நிகண்டிலிருந்து வார்த்தைகளை தேடி எடுக்காததும் சவுகரியப்படுத்துகிறது. உண்மையின் பக்கம் எப்போதும் நின்று கொண்டேயிருக்கிறார்.கட்டற்ற காதலை உடம்பின் ஏதோ ஒரு பாகமாக்கி நிலை நிறுத்தி விடுகிறார்.  மச்சங்கள் வழியே மீளும் காதலோ வாழ்வோ  ஜீவத்துடிப்புடன்  விரிந்து கொண்டே இருக்கிறது. புகைப்பட கலைஞனை கொன்று விட்டு கடவுளாக்கிக் கொள்கிற சமூகம், ஹிட்லர் சமாதனத்தூதுவராகிறார். இவற்றை அங்கீகரிக்கிற சமூகம் பிரிவை துரத்துகிறது. நிலம் பற்றிய சிந்தனைகளும், அக்கறையும் கனவுகளாய் அவரைத்துரத்திக் கொண்டே இருக்கிறது.” அதனால் உப்புச் செடிகள் இரண்டை வளர்கிறார்”  கண்களில், நிலத்திற்கு ஆனந்தி என்று பெயர் சூட்டி ஆனந்திக்கிறார்.பசப்புகளும், பாசாங்குகளும் மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும் என்ற அக்கறை இன்னொரு பரிமாணமாய் விசுவரூபிக்கிறது. ” வழி தவறிய மனுஷ்ய குமாரனின் மறியை / பிதாவின் பெயரால் பலி கொடுத்து விட்டு / வீச்சமடிப்பது அதன் மாமிசம்தான் என்கிறோம்” கிராமிய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் எத்தனங்கள் நிறையவே உண்டு.கடவுள் பற்றிய  குறிப்புகளில்  விலகுதல் பகுத்தறிவுப் பார்வைக்கும் கொண்டு செல்கிறது.நவீன நுகர்வு வாழ்க்கை தந்திருக்கும் பலி பற்றி இது போல் நிறையவே அக்கறையும், பயணப்படவும் முடிகிற இவரால்.  தனிமையை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது கூட ஊர் சுற்றுபவனைப்போல் எல்லாவற்றையும் தனக்குள் கொண்டு வந்து விடுகிறார். சமூகத்தின் எந்த அங்கத்திலிருந்தும் பிய்த்துக் கொண்டு போய் விடுகிறவராக இல்லை.

உலகமே காமுறுகிற வகையில் கவிதை எழுதும் எத்தனம் ஆச்சர்யமானது . துரோகம், வஞ்சகம், அதிகாரத்திற்கெதிரான குரல் என்று  சப்தமிடும் (மெல்லியகுரலில் தான் ) கதிர்பாரதியின் எதிர்வினை சிறுநீராய் முகத்திலும் , வாயிலும் தெறிக்கிறது.அன்றாட நிகழ்வுகளின் உள் ரகசியங்கள் விரித்து வைக்கப்படுகின்றன. கவிதை கேளிக்கையாகி  எண்ணற்ற படிமங்களை நிரப்புகிறது.கதிர்பாரதியின் கவிதை என்றைக்கும் புதிதாகவே இருக்கிறது. கவிதைக்குள் அவர் புதுமைமேதையாகவே இருக்க சாத்தியங்களை இத்தொகுப்பு உருவாக்குகிறது.இவரின் கவிதை மீதான் பலவீனங்கள் சுலபமாகச் சரிபவை.

“ ஒரு பிரியம் திரும்பப் பெறப்பட்டதும்
சிறகிலிருந்து உதிர்ந்து வீழ்கின்ற சிறகொன்றை
சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கு
இடையே சுழற்றியபடி
 மொட்டைமாடி நிசியொன்றில்
மல்லாந்து துயில் முயல்கிறான் அவன்.
அப்போது
அவள் பாதரட்சையின் எழிலெடுகும்
பிரயாசையில்
தொற்றுத் தோற்றுச் சரிகிறது
மூன்றாம் பிறை ”

கதிர்பாரதியின் கவிதை அனுபவம் நினைக்க நினைக்க வளர்பிறையாகவே மிளிர்பவை.( இது சம்பிரதாயமான வரிகளே என்றாலும்.)ஒரு பத்திரிக்கையாளனாக இருக்கும் மனோநிலை மீறி அதன் பிரபல்யம் பூசாமல், நீர்த்துப்போகும் தன்மையுடன் அவசரம் காட்டாமல்   அவர் கவிதைகள் உயிப்புடன் தொடர்ந்து  இருப்பதற்கு திடமான அசாத்தியமான படைப்பு  மனம் வேண்டும்

(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், கதிர்பாரதியின் கவிதைத் தொகுதி,ரூ 60, புது எழுத்து, காவேரிப்பட்டிணம்).

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 23 August 2013 19:21