இயற்கையை உறவாகக் காணும் பண்பு – ரஜிதாவின் “மணல் கும்பி” கவிதைகள் “ஆழ்ந்த அமைதி நிலையில் நினைவு கூரப்பட்ட உணர்ச்சிகள் கவிதைகள்” என்பர் கவிதையியலாளர். ரஜிதா இராசரத்தினமும் “மணல் கும்பி” என்ற கன்னிக் கவிதைகளோடு தன் வாழ்வனுபவங்களை ஆழ்ந்த அமைதி நிலையில் அசைபோட்டு, கவிதைகளாக்கி உங்கள் முன் தந்துள்ளார்.

வாழ்தல் ஒரு போராட்டம். அது இன்பம் தருவது, சமவேளையில் துன்பத்தையும் தருவது. அந்த அலையோட்டத்தில்தான் நாங்கள் வாழப் பழகிக் கொள்கிறோம். கவிஞர் தான் வாழும் சமூக மாந்தர்களின் வாழ்வின் ஊடாகவும், கண்டு கேட்டு வாழ்ந்து பழகிக் கொண்ட அனுபங்களின் திரட்டாகவும்  இக்கவிதைகளைத் தந்துள்ளார்.

ஏழ்மைத்துயரில் வாடும் மனிதர்கள், ஏமாற்றத்தைத் தரும் அறிந்தும் அறியாத முகங்கள், காலவோட்டத்தோடு எதிர்த்துப் போராடி வாழ்வை வெற்றிகொள்ள முனையும் மாந்தர்கள், மன இருட்டின் மாறாத வடுக்களை மூடி மறைத்து வாழத் தலைப்படும் மனித மனங்கள் என பல்வேறுவிதமாகவும் வாழ்வின் சாத்தியப்பாடுகளை எட்டமுனையும் எத்தனங்களை தன் கவிதைகளில் ரஜிதா இராசரத்தினம் தந்துள்ளார்.

நாள்தோறும் பற்றாக்குறைகளோடு வாழும் மனிதர்கள் உழைப்பின் உச்சத்தை எட்ட முடியாத அவலத்தை,

“இந்தப் புதுவருடமாவது
என் குழந்தைகளுக்குப்
புதுத்துணி வாங்கித் தருவதாக
வாக்குக் கொடுத்தேனே
அதுவும் இல்லை.”


என அழுகின்ற இழகிய மனங்களை தன் கவிதை வரிகளில் காட்டுகிறார். பாரம்பரியத்தையும் பண்பட்ட வாழ்வையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவிட்டு வாழச் சபிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணங்களையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

“தொலைத்ததைத் தேடுகிறோம்
தேடியும் கிடைக்காதவை
எத்தனை எத்தனையோ?”


என்ற வார்த்தைகளில் உள்ளமுங்கியிருக்கும் தேடல்கள்தான் எத்தனை? இந்த நிலையில்தான் இரசிக்கத் துளியளவும் திராணியற்றது இவ்வெளிர் நிலவு என மனத்துக்கு இன்பமும் குளிர்ச்சியும் தரும் நிலவை வெறுப்பாகக் கவிஞர் நோக்குகிறார்.
இயற்கையை உறவாகக் காணும் பண்பு முக்கியமானது. இது சவுக்கம் காடுகளும் மணல் கும்பிகளும் என்ற கவிதையில் வெளிப்படுகிறது.

“பரந்திருக்கும் இப்பெரும்
வெண்மணற் போர்வையில்
உருண்டு புரள்தலின் சுகத்தையும்
படுத்திருந்தே பறித்து
நாசியேறக் கனிந்திருக்கும்
நாவற்பழங்களின் சுவையையும்
இவைதான் மலைகளென
தொடர் தொடராய்
எதிர்கண்ட மணற்கும்பிகளின் பேரழகை
தினம் தின்று தீர்த்தும்
கொண்டாடி வாழ்கின்றோம்.”

காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர்க் கதைகளும், புதைக்கப்பட்ட குழிகளில் இருந்து எலும்புகளைத் தோண்டியெடுக்கும் அவலமும் சமகாலக் கவிதையோட்டத்தின் தளத்தில் பயணிக்கும் கவிதைகளாகத் திகழ்கின்றன.

“மூன்று வயதில் பார்த்தது
முகங்கூட நினைவில் இல்லை.
தேடிக் கண்டுபிடிக்கக் கோரி
பல இடம் கொடுத்த
நிழல் படம் ஏராளம்.”


அன்பும் ஆதரவும் நினைவும் தொடரும் வகையில்தான் வாழ்தலின் சுகம் இருக்கிறது. அந்த வாழ்வின் சுவை மெல்லத்துளிர்க்கும் என்பதும் பல கவிதைகளில் காட்டப்படுகிறது.

தொடர்ந்த வாசிப்பும் தேடலும்; கட்டிறுக்கமான மொழிக் கையாள்கையும் எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்போது கவிதையில் பல்வேறு சாத்தியப்பாடுகளை எட்டிப்பிடிக்கும் வல்லமை வாய்க்கப்பெறுவார் என்பதற்கு சில கவிதைகள் கட்டியங்கூறி நிற்கின்றன. அவ்வகையில் “பேரன்பு”  என்ற கவிதையில் வாழ்வின் ஒளியை அவாவும் முயற்சி மிக நன்றாகப் பதிவாகியுள்ளது.

“ நான் நட்ட கன்றொன்று
பற்றிப் படர்ந்து பயனறிந்து
நிழல் பரப்பி
உதிரும் இலையை உரமாக்கி
உற்ற நேரம் தரும்
ஒப்பற்ற நேசமொன்றே.”

இயற்கையை உறவாகக் காணும் பண்பு – ரஜிதாவின் “மணல் கும்பி” கவிதைகள்

இதுபோன்று மனிதசாதி, ஏழையின் ஒருநாள், சவுக்கம் காடுகளும் மணல் கும்பிகளும் முதலான கவிதைகளும் கவிஞரின் கவிதை ஈடுபாட்டை நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.

பாரதியின் கவிதைகள் முதல் இன்றைய கவிஞர்களின் கவிதைகள் வரை மொழியின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளை பலர் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். கவிதையின் மொழி சாட்டையடிபோல் விழவேண்டும் என்றும், அது பல பரிமாண சாத்தியங்களை எட்டவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜிதாவின் கவிதைகள் சமகாலத்தில் மாந்தர் எதிர்கொள்ளும் அவலங்களையும், ஆறாத காயங்களாக உறைந்து போய்விட்ட மனிதர்களின் மனப்போராட்டங்களையும், இயற்கையின் மீதான நேசிப்பையும், வாழ்வின் மீதான  பிடிப்பையும் சித்திரிக்கின்றன. 

இத்தொகுப்பு முயற்சியைப் பாராட்டி, தேடலும் பதித்தலும் இலக்கிய வானில் மேலும் தொடரவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.