நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)ஆரம்ப காலந்தொட்டுப் பெண்களை விட ஆண்களின் ஆற்றல் மேம்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது. இதைக் கருத்திலெடுத்த அன்றைய ஆன்றோரும் சான்றோரும் ஆண்களுக்கென்று புறம் சார்ந்த சில இயல்புகளையும், பெண்களுக்கென்று அகம் சார்ந்த சில இயல்புகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளனர். இதன் பிரகாரம் ஆண்கள் தம் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்தல், பொருளீட்டல், போரிட்டு நாட்டைக் காத்தல், இனத்தைக் காத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அதே நேரம் பெண்கள் சமைத்தல், வீட்டு வேலைகளைக் கவனித்தல், கணவர் பிள்ளைகளைப் பேணல், உற்றார் உறவினரை அரவணைத்து விருந்தோம்பல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். இவ்வண்ணம் பெண்கள் வீட்டோடு இருந்து கொள்ள, ஆண்கள் வெளி உலகத்தோடு பழகத் தொடங்கினர். இது ஆண், பெண் ஆகியோருக்கிடையில் ஏற்ற இறக்கம் உருவாவதற்கு ஏதுவாயிற்று. அக்காலப் பெண்களும் வீட்டோடு முடங்கிக் கிடக்கப் பழகிக் கொண்டனர். இதைப் பழக்கப் பட்டனர் என்றும் கூறலாம். ஆண் உதவியின்றிப் பெண்களால் தனித்து ஒரு கருமமும் ஆற்ற முடியாதிருந்தது. அவர்களுக்கு உதவத் தகப்பன், சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என்று பலர் தயாராயிருந்தனர். 'பெண் தன்னை அழகுபடுத்தக் கூடாது, தனித்து வீட்டுக்கு வெளியில் வரக் கூடாது, பிற ஆடவர் கண்களில் படக் கூடாது' என்ற கடும் கட்டுப்பாடுகள் அன்றைய பெண்களை வாட்டி வதைத்தன. அவர்களும் நாளடைவில் இவற்றிற்கு அடிமையாயினர்.

இனி, சங்ககால இலக்கியங்கள், சங்கமருவியகால இலக்கியங்கள், மனுநீதி நூலார், நீதிநெறி நூல்கள் போன்றவை ஆண், பெண் ஆகிய இரு பாலாரின் ஏற்றத் தாழ்வுகளை அந்தந்தக் காலத்தில் நிலைத்திருந்த முறையில் எடுத்துக் கூறும் பாங்கினையும் ஈண்டுக் காண்போம்.

தொல்காப்பியம்

(1) இடைச் சங்க காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் (கி.மு. 711) யாத்த தொல்காப்பியம் எனும் நூலில் ஆண், பெண் ஆகிய இருவரையும் முறையே 'தலைவன், தலைவி' என்றும் 'கிழவன்' கிழத்தி' என்றும் அடங்கலும் சிறப்பித்துக் காட்டி, இருவருக்கும் சமத்துவம் கொடுத்த பெருமை தொல்காப்பியரைச் சாரும்.

(2) குலப் பெருமையுடனும் அறிவு மேம்பாட்டுடனும் இருத்தல் ஆண்மகனுக்குரிய சிறப்பியலெனப் 'பெருமையும் உரனும் ஆடூஉ மேன' (பொருள். 95) என்று சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர். இங்கு ஆணின் சிறப்பும் பெருமையும் பேசப்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.

(3) அச்சம், நாணk;> பேதைமை ஆகிய இம்மூன்றும் எஞ்ஞான்றும் முதன்மைபெற்று நிற்றல் பெண்களுக்கு உரித்தான இலக்கணமாம் என்று தொல்காப்பியர் கூறுவர். இவ்வாறான அச்சம், நாணம், பேதைமை ஆகிய குணதிசயங்கள் பெண்களைக் கட்டிக் காப்பாற்றி நிற்கின்றன.

                   'அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
         நிச்சமும் பெண்பாற் குரிய என்ப'    -   (பொருள். 96)

(4) தலைவன் கடல்கடந்து பிரியும் பொழுது தன் தலைவியையும் அழைத்துக்கொண்டு செல்வது என்பது என்றும் கிடையாதென்கிறார் தொல்காப்பியர். எனினும் நிலவழிப்பிரிவில் தன் தலைவியையும் அழைத்துச் செல்லலாம் என்றவாறு. அக்காலத்தில் பெண்கள்மேல் அதி கூடிய கவனம் வைத்துள்ளனர் என்பதும் புலனாகின்றது.

                       'முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை' -  (பொருள். 37)
                       (முந்நீர் -----  ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர்)

 (5); காதல் வயப்பட்டு அது கைகூடாதவிடத்து 'மடலேறும்' வழக்கம் ஆண்கள் மத்தியல்;  தொல்காப்பியர் காலத்தில் இருந்துள்ளது. ஆனால் பெண்களைப் பொறுத்த மட்டில் இது ஓர் அழகுதரும் செயல் அல்லாமையினால், எக்குலப் பெண்களும் மடலேறுதல் என்னும் ஒழுகலாற்றினை மேற்கொள்ளக் கூடாது என்று வரையறை செய்துள்ளது தொல்காப்பியம். இங்கு பெண் பெருமையும், சிறப்பும் பேசப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.

                 'எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
        பொற்புடை நெறிமை இன்மை யான.'  ---  (பொருள். 38)

(6) ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த ஆண்டும், ஒத்த அழகும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் ஆகிய பத்து வகையும், தலைவன் தலைவியர் ஆகிய இருவரிடத்திலும் இருக்கவேண்டிய ஒப்புமைப் பகுதிகளாகுமென்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இங்கே தலைவன் தலைவியர் ஒத்திருக்க வேண்டுமென்பதால் அவரிருவருக்கும் சமத்துவம் கொடுத்த சிறப்பையும் காண்கின்றோம்.

                 'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
        உருவு நிறுத்த காம வாயில்
       நிறையே அருளே உணர்வொடு திருவென
       முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.' --- (பொருள். 269)

குறுந்தொகை

கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை என்ற நூலில்,  'தொழிலில் ஈடுபட்டுள்ள ஆடவர்க்கு ஒளிபொருந்திய நுதலையுடைய மகளிர் உயிராவார்' என்றும், 'மனைக்கண் உறையும் மகளிர்க்கு ஆடவர் உயிராவார்' என்றும் பாலைபாடிய பெருங்கடுங்கோ எனும் புலவர் கூற்று ஆண் பெண் ஆகிய இருபாலாரின் சமத்துவத்தைக் காட்டி நிற்கின்றது.

                 'வினையே ஆடவர்க்குயிரே வாணுதல்
        மனையுறை மகளிர்க்கு ஆடவ ருயிரென...' (பாடல். 135)

புறநானூறு

(1) எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு என்ற வீரதீர நூலில் 'நாடென்றால் என்ன, காடென்றால் என்ன? மேடென்றால் என்ன, பள்ளமென்றால் என்ன? எவ்விடத்திலே ஆடவர் நல்லவராக விளங்குகின்றனரோ, அவிவிடத்திலே, நிலனே, நீயும் நன்றாக விளங்குவாய்.' என்ற ஒளவையார் பாடல் ஆடவரைச் சிறப்பித்து 'ஆண்கள் உலகம்' என்று காட்டுகின்றது.

                   'நாடா கொன்றேர்  காடா கொன்றேர்
        அவலா கொன்றேர்  மிசையா கொன்றேர்
        எவ்வழி நல்லவர் ஆடவர்,
        அவ்வழி நல்லை;  வாழிய நிலனே!' ---- (பாடல். 187)

(2) பழந்தமிழ்க் குடியினர் கடமை உணர்வோடு வாழ்ந்துள்ளனர். ஒரு மறக்குடித் தாயின் கூற்றொன்றைப் பார்ப்போம். 'என் முதன்மையான கடமை பெற்று வளர்த்து வெளியே அனுப்புதல். தந்தையின் கடமை அவனைச் சான்றோனாக ஆக்குதல். வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனின் கடமையாகும். நல்ல முறையில் அவனுக்குப் போர்ப்பயிற்சி அளித்தல் வேந்தனின் கடமையாகும். இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிபொருந்திய வாளினைக் கையில் எடுத்துப் போர்க்களத்தில் மாற்றான் களிற்றினைக் கொன்று குவித்தல் வளர்ந்த காளையான என் மகனின் கடமையாகும். இதனை அறிவீராக!' என்று அத்தாய் கூறுவதாகப் பொன்முடியார் என்னும் புலவர் பாடியுள்ளார். இதில் ஒரு பெண்ணான தாய், நான்கு ஆடவரான தந்தை, கொல்லன், வேந்தன், காளை ஆகியோரின்  கடமை, உணர்வு, சிறப்பு ஆகியவற்றைக் காண்கின்றோம்.
           
             'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
      சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
      வேல்வடித்துக் கொடுத்தல்  கொல்லற்குக் கடனே;
      நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
      ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
      களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.' ---- (பாடல். 312)

திருக்குறள்

(1) திருக்குறளை யாத்த திருவள்ளுவர் (கி.மு. 31) 'வாழ்க்கைத் துணைநலம'; என்ற அதிகாரத்தில் பெண்மாட்சி பற்றிக் கூறுவதையும் காண்போம். இல்வாழ்க்கைக்கு ஏற்றவளாகித் தன் கணவன் பொருள் வளத்துக்கேற்ற வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைக்குத் துணை ஆவாள்.       

              'மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் 
      வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.' – --  (51)

(2)  இல்வாழ்க்கையில் கற்பு நெறியுடைய பெண் ஒருவனுக்F மனைவியாய் அமைந்து விட்டால் அதைவிடச் சிறந்த பெருமை அவனுக்கு வேறொன்றும் இல்லை.

              'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மையுண் டாகப் பெறின.;'    ----- (54)

(3)  வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகத் தொழுதெழுபவள் பெய் என்றால் மழை பெய்யும். இங்கே இப் பெண்ணும் தெய்வமாகின்றாள்.

                      'தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
          பெய்யெனப் பெய்யும் மழை.'   ------ (55)

(4) இனி, திருவள்ளுவர் ஆண் சிறப்புப் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம். இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான்.

'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
           நல்லாற்றின் நின்ற துணை.'   -------  (41)

(5)  தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் அறநெறி பேணுதல் இல்லறத்தானுடைய சிறந்த கடமையாகும்.

              'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
       ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.' -----  (43)

(6)  உலகில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.

                                  'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
               தெய்வத்துள் வைக்கப் படும்.'  -------  (50)

திருவள்ளுவர் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமத்துவம் கொடுத்துப் பாராட்டியமை போற்றற்குரியது.

திருமந்திரம்

(1) இது தொடர்பில் திருமந்திரத்தை யாத்த திருமூலர் கூறும் கூற்றையும் காண்போம். 'உடம்பு அழிந்தால் உயிரும் உடலைவிட்டு நீங்கி விடும். அதன்பின் மெய்ஞ்ஞானமாகிய பரம்பொருள் சிந்தனையில் ஈடுபடவும் இயலாது. அதனால் உடம்பை அழியாது காக்கும் உபாயம் அறிந்து அதிலுள்ள உயிரைக் காப்பதற்காக உடம்பை வளர்த்து வரலானேன்' என்று கூறுகின்றார்.

                                'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
              திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
              உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
              உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.' ---- (724)

(2) 'இந்த உடம்பை முன்பெல்லாம் தாழ்ந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி நினைத்துக் கொண்டிருந்த நான், இந்த உடம்புக்குள்ளே இருக்கின்ற சிறந்த செல்வத்தைக் கண்டேன். பின்பு இந்த உடம்புக்குள்ளே உத்தமனாகிய பரம்பொருள் கோயில் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அறிந்தேன். அதன் பின்புதான் நான் இந்த உடம்பினைப் பேணிப் பாதுகாத்து வருகின்றேன்.' என்று கூறியுள்ளார் திருமூலர்.

                            'உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
             உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
             உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
             உடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே.'  ------  (725)

(3) உள்ளத்தைப் பெருங்கோயிலாகவும், ஊனுடம்பை ஆலயமாகவும், பரம்பொருளைச் சென்று வழிபட கோபுரம் வாசலாகவும், தெளிவான மனநிலை உள்ளவர்க்குச் சீவன் சிவலிங்கமாகவும், ஐந்து புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன கோயிலின் ஐந்து பெரிய அழகிய விளக்குகளாகவும் கண்டவர் திருமூலர்.

                             'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
             வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல்
             தௌ;ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
             கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.'  ------  (1823)

ஆலய அமைப்பும், இறைவன் இருப்பும் ஆண், பெண்ணாகிய உடம்பிலேயே உள்ளதெனச் சிறப்பித்துக் கூறிய திருமூலர் ஒரு தெய்வப் பிறவியாவார்.

மனுநீதி நூல்

மனு என்பவர் எழுதிய மனுநீதி நூலில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்குப் பிறிதொரு நீதி என்ற வகையில் அமைந்துள்ளதையும், ஆண் வர்க்கத்தினரை ஏற்றிப் போற்றுவதையும,; அவர்களுக்குச் சகல வசதிகளையும் கொடுத்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

(1) 'பெண் திருமணமாகுமுன் தந்தையின் பாதுகாப்பிலும், திருமணமானபின் கணவனின் ஆதரவிலும், முதுமையில் ஆண்பிள்ளையின் அனுசரணையிலும் தங்கியிருத்தல் வேண்டும். அவள் சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள்.' - ( IX : 03)

(2)  'பெண்கள் ஆண்களின் வயதையோ அழகையோ எதிர்பார்க்கக்கூடாது. ஆண் என்ற ஒரு தன்மையே போதுமானது. பெண்கள் ஆண்களை முழுமையாக ஏற்றுத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.'– (IX : 14)

(3) 'படைப்புக் கடவுள் பெண் குணநலமறிந்து ஆண்களின் கடுங்கண்காணிப்பில் இருக்குமாறு அவர்களைப் படைத்துள்ளான்.' – (IX : 16)

(4) 'மனைவி இறந்தவிடத்து கணவனானவன் அவளின் ஈமக்கிரியைகளை முடித்தபின் அவன் மீண்டும் மீண்டும் திருமணம் செய்யலாம்.' ---- (V-168)

(5) கல்வி கற்பதும், மத தீட்சை பெறுவதும் இரு பிறப்பாளரான பிராமணர், சத்திரியர், வைசிகர் ஆகியோருக்கேயன்றி நான்காம் வர்ணத்தினரான சூத்திரர்களுக்கோ அல்லது மற்ற மூன்று உயர் வர்ணத்துப் பெண்களுக்கோ அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

நீதிநெறி நூல்கள்

மக்கள் நேர்மையாகவும், பண்பாளர்களாகவும் வாழ வேண்டுமென்ற பெருநோக்கோடு சில ஆன்றோரும், சான்றோரும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய இலகுவான நெறிமுறைகளை நீதி நூல்களிற் கூறியுள்ளனர். அவைகள் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளதையும் நாம் அறிவோம். தாய், தந்தையரைச் சமநிலையில் வைத்துப் பாராட்டிய முறை இவையாகும்.

(1) 'தாய் தந்தை பேண்', 'மேன் மக்கள் சொல் கேள்', 'மைவிழியார் மனை அகல்'-    
                                                                                                                                                       -  (ஆத்திசூடி),
(2) 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்', 'உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு', 'காவல் தானே பாவையர்க்கு அழகு', 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை', 'தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை', 'துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு', 'தூற்றும் பெண்டிர் கூற்று எனத்தகும்', 'பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்', 'பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்', 'மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்.' – (கொன்றை வேந்தன்)

(3) 'பெண;;டிற்கு அழகு பேசாது இருத்தல்', 'குலமகட்கு அழகு கொழுநனைப் பேணுதல்', 'உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்', 'கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்.' - (வெற்றி வேற்கை)

பழமொழிகள்

இலக்கியங்களை ஏட்டு இலக்கியம், நாட்டு இலக்கியம் என வகுக்கலாம். நாட்டு இலக்கியம் தொன்மை வாய்ந்தது. பழமொழிகள் நாட்டு இலக்கியத்தில் அடங்கும். பழமொழிகள் கிராமப் பகுதிகளில் மக்கள் மத்தியில் மலிந்து காணப்படுவதைக் காணலாம். பெண்கள் பற்றிய பழமொழிகள் அதிகப் புழக்கத்தில் உள்ளன. 

'பெண் என்றால் பேயும் இரங்கும், மனைவி உள்ளவன் விருந்துக்கு அஞ்சான், மனைவி அமைவதெல்லாம் இறைவன் வகுத்த வரம், பெண் பாவம் பொல்லாதது, பெண்ணாய்ப் பிறப்பதும் பாவம் பெண்ணோடு கூடிப் பிறப்பதும் பாவம், பெண்ணில்லா வீடு வாளியில்லாக் கிணறு, ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பெண் புத்தி பின் புத்தி, பொம்புளை சிரித்தால் போச்சு பொயிலை விரித்தால் போச்சு, மாமியார் மெச்சிய மருமகளும் இல்லை மருமகள் மெச்சிய மாமியாரும் இல்லை, அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்' என்பன ஒரு சில பழமொழிகளாகும். இவற்றால் ஆண்களுக்குப் பெண்கள்மேல் ஓர் இரக்கம் ஏற்படுகின்றது.

திருவாசகம்

'வாள் தடம் கண் மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான், முத்து அன்னவெள் நகையாய்!, ஒள் நித்திலம் நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ! வண்ணக் கிளிமொழியார் உல்லாரும் வந்தாரோ!, பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய், உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம், அன்னவரே எம் கணவராவார், அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம், காதுஆர் குழை ஆடப் பைம்பூண் கலன் ஆடக் கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட, வார் உருவம் பூண் முலையீர்!, கொங்கு உண் கரும்குழலி!, அண்ணாமலையான் பெண் ஆகி ஆண் ஆய் அலியாய் விளங்குகின்றான், எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்! எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க! எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க! கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க!' என்பன ஆண், பெண் ஆகிய இரு பாலாரின் சிறப்பினை மாணிக்கவாசகர் (கி.பி. 3-ஆம் நூற்றாண்டு) கடவுள் வழிபாட்டுக்காகத் தாம் யாத்த திருவாசகத்தில் ஒரு பகுதியான திருவெம்பாவை என்பதைத்  திருவண்ணாமலையில் பாடியருளினார்.

பாரதியார்

இனி, மக்கள் கவிக் குயில் பாரதியார் (11.12.1882 – 10.09.1921) கூறுவதையும் காண்போம்.
'நாம் எல்லாரும் இந்நாட்டு மக்கள், பெண்மை வாழ்கென்று கூத்திடுவோம், ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம், கற்பு நிலையென்று சொல்லவந்தால் அது இருவருக்கும் பொதுவில் வைப்போம், மாதர்க்கு உண்டு சுதந்திரம், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம், எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு, பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டி பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?, ஆண்மை தவறேல், அச்சம் தவிர், தெய்வம் நீ என்றுணர், தையலை உயர்வு செய், சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்று ஆண், பெண் ஆகிய இருவரையும் சமநிலையில் வைத்துப் பொன் மொழிகளால் பூசிக்கும் பெருநோக்கினைப் பாரதியார் கவிதைகள் எடுத்தியம்புகின்றன.

கண்ணதாசன்

'கேளாய் மகனே, கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே!, காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை, வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?, மகனென்ற இரத்த பாசம், கண்ணிரண்டு கடவுள் தந்தான் தங்கையைக்காண - இரு கையிரண்டில் வலிவுதந்தான் தங்கையைக் காக்க, கூடினாள் இன்றித் துவள்கிறேன் தோழி! இன்பத்துக் கிருவர் வேண்டும், என்னைத் தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோயில,; அவளே என்றும் என் தெய்வம், கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்' எனப் பாட்டிசைத்த மக்கள் கவி கண்ணதாசன் (24.06.1927 – 17.10.1981) ஆண், பெண் ஆகிய இருவரையும் பாக்களில் உலாவ விட்டு அவர்களின் சிறப்பினை எடுத்துக் காட்டியுள்ளார்.

முடிவுரை

இதுகாறும் ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் பற்றித் தொல்காப்பியம், குநற்தொகை, புறநானூறு, திருக்குறள், திருமந்திரம், மனுநீதி நூல், நீதிநெறி நூல்கள், பழமொழிகள், திருவாசகம், பாரதியார் கவிதைகள், கண்ணதாசன் பாடல்கள் ஆகிய நூல்கள் கூறியுள்ளவற்றைப் பார்த்தோம்.

முதல் நூலான தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் வைத்துக் காட்டப்படவில்லை என்பதை உணர முடிகின்றது. அதன் பின்னெழுந்த நூல்களில் ஆண்களையும் பெண்களையும் சமநிலையில் வைக்க வேண்டுமென்ற ஓர் உந்தல் தொனிப்பதையும் நாம் காண்கின்றோம். நிலைமை என்றும் ஒரே சீரில் நிலைத்திருப்பதில்லை என்பதற்கிணங்கப் பெண்களும் முகத் திரைகளை நீக்கி வெளியுலகைப் பார்க்கத் தொடங்கினர்.

தற்பொழுது பெண்கள் ஆண்களுக்குச் சமனாக எல்லாத் துறைகளிலும் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். அவர்கள் காவல்துறை, படைத்துறை, வான்படை, கடற்படை, பாராளுமன்ற அங்கத்தவர், கணக்காய்வுச் சேவை, நிர்வாகச் சேவை, காணக்காளர் சேவை, மருத்துவர், முனைவர், பேராசிரியர், பொறிவலாளர், விரிவுரையாளர், ஆய்வாளர், ஆசிரியர் சேவை, மந்திரி பதவி, குடியரசுத் தலைவர், கல்லூரி முதல்வர், இலாகாத் தலைவர் ஆகிய பல துறைகளில் ஆண்களுக்குச் சமனாகத் தொழிலாற்றி வருகின்றனர். இவ்வண்ணம் அமைந்த நாடுகள் முன்னணியில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. ஆண், பெண் ஆகியோரிடையில் பேதம் காட்டாது சமநிலையில் வேலை வாய்ப்புக் கிடைத்துப் பணியாற்றின் நாடு செழிக்கும்,   அவர்கள் பொருளாதாரம் சிறக்கும், அவர்கள் வாழ்வியலும் மேம்படும், குடும்பமும் குதூகலிக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.