மகளிரை விழிப்புடன் வைத்திருக்கும் அணிகலன்கள்

Friday, 17 August 2012 20:38 -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

ஆண் பெண்ணை விரும்புவதுபோல், பெண்ணும் ஆணுக்கு அடுத்தபடியாகப் பொன்னை விரும்புகின்றாள். மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய மூவாசைகளை மனிதன் நாடித் தேடி ஓடுவது வழக்கமாகும். பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை எல்லாப் பெண்களும் விரும்பி அணிகின்றனர்.  பெண்களைக் குளிர வைக்க ஆண்கள் அணிகலன்களுடன் முந்தி முதல் வரிசையில் அணி வகுத்து நிற்கின்றனர்.  மகளுக்குப் பெற்றோரும், மனைவிக்குக் கணவனும், தாய்க்கு மகனும் வேண்டிய பொன்னாபரணங்களை வாங்கிக் கொடுத்து, அணிவித்துப் பார்த்து மகிழ்வர். ஆண் பெண்ணை விரும்புவதுபோல், பெண்ணும் ஆணுக்கு அடுத்தபடியாகப் பொன்னை விரும்புகின்றாள். மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய மூவாசைகளை மனிதன் நாடித் தேடி ஓடுவது வழக்கமாகும். பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை எல்லாப் பெண்களும் விரும்பி அணிகின்றனர்.  பெண்களைக் குளிர வைக்க ஆண்கள் அணிகலன்களுடன் முந்தி முதல் வரிசையில் அணி வகுத்து நிற்கின்றனர்.  மகளுக்குப் பெற்றோரும், மனைவிக்குக் கணவனும், தாய்க்கு மகனும் வேண்டிய பொன்னாபரணங்களை வாங்கிக் கொடுத்து, அணிவித்துப் பார்த்து மகிழ்வர். 

தங்கம், பித்தளை, வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைப் பெண்கள்  அணிகின்றனர்.  ஆனால் தமிழ்ப் பெண்கள்  தங்கத்தினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைத்தான் விரும்பி அணிவர். உலோகங்களினாற் செய்யப்பட்ட அணிகலன்களில் உள்ள ஈர்ப்புச் சக்தி அணிபவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுவர். பித்தளையால் செய்யப்பட்ட வளையல்களை கீல்வாத நோயாளிகள் (arthritic) அணிவதையும் நாம் பார்த்திருக்கின்றோம். 

சங்க இலக்கிய நூல்களில் ஆபரணங்கள் அணிந்த பெண்களைப் பற்றிப் புலவர்கள் பாடிய பாடல்கள் நிறைய உள்ளன.  திருக்குறள், சிலப்பதிகாரம், கலித்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, நாலடியார், பரிபாடல் ஆகிய நூல்களில் 'கனங்குழை மாதர்', 'ஆயிழாய்', 'சுடர்த்தொடீஇ', 'திருந்திழாய்', 'நிறைதொடீஇ', 'அணியிழையார்', போன்ற பதங்கள் ஆபரணங்கள் அணிந்த பெண்களையும், 'சிலம்பு', 'தலைக்கோல்', 'வளை, 'மேகலை', 'புனை இழை', 'கடகம்', 'ஆரம், போன்றவை மாதர் அணியும் ஆபரணங்களையும் குறித்து நிற்கின்றன.

தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) 680 ஆம் (கி.மு. 711) ஆண்டில்; தோன்றிய தொல்காப்பியனார் யாத்த தொல்காப்பியம் என்ற நூலில் 'காதொன்று களைதல், ஊழணி தைவரல்' (பொருள். 258)- காதணியைக் கழற்றுதல், முறையாக அணிந்துள்ள அணிகளைத் தடவுதல் என்றும், 'அணிந்தவை திருத்தல்' (பொருள். 259) – அணிந்தவைகளை ஒழுங்கு செய்தல் என்றும் கூறியுள்ளார். 

இன்னும், திருமூலர் யாத்த திருமந்திரம் என்னும் நூலில் ~~கோல் வளையார்|| (மந்திரம் 483) – திரண்ட வளையல் அணிந்த பெண்கள் என்றும், 'கோல் வளை' (மந்திரம் 484 ) – வளையல் அணிந்த பெண் என்றும், கூறுகின்றார்.

பண்டைத் தமிழ்ப் பெண்கள் 29 வகையான ஆபரணங்களை அணிந்துள்ளனரென முனைவர் வே. வரதராசன் அவர்கள் படத்தோடு எடுத்துக் காட்டியுள்ளார்.  இந்த 29 அணிகலன்களையும் மகளிர் எவ்வாறு அணிந்தனர் என்பதைப் பற்றிக் காண்போம்.

1. தலை, காது அணி   - (1) வலம்புரிச் சங்குஃ மத்தகமணி, (2) புல்லகம் (தென்பல்லி),
                    (3) புல்லகம் (வடபல்லி), (4) பூரப்பாளை,  (5) தொய்யகம்,
                    (6) செவிப்பூ, (7) அளகச் சூடம், (8) ஏகதளம், (9) குதம்பை,

2. கழுத்து அணி      -  (10) சவடி, (11) காறை, (12) வாகுமாலை, (13) முத்தாரம்,

3. தோள், கை அணி   -  (14) தோள்வளை,  (15) வீரச்சங்கிலி,  (16) தோள்வளை,
                    (17) வாளைப்பகுவாய் மோதரம், (18) பரியகம், (19) சூடகம்,
                    (20) பவழ வளை,  (21) ஆடைக்கட்டு,  (22) கடக வளை,


4. இடுப்பு அணி      - (23) முத்தரை (விரிசிகை) முத்துவடம்,  (24) உடைதாரம்,
                   (25) குறங்குச் செறி,

5. கால் அணி       - (26) நூபுரம் (சிலம்பு),  (27) பாடகம்,  (28) குறங்குச் செறி,
                   (29) பரியகம்.

இன்று பெண்கள் மூக்கில் மூக்குத்தி அணிவதுபோல் அன்று மூக்கு அணி இருக்கவில்லை.  மேலும், கால் விரலில் அணியும் மெட்டியும் அன்று இருக்கவில்லை என்பதும் நோக்கற்பாலது.

இன்னும், ஓர் அறிஞர் ஐம்பெருங்காப்பியங்களை மகளிர் அணியும் அணிகலன்களாக்கி அவற்றைத் தமிழன்னையின் காதில் குண்டலமாக குண்டலகேசியையும், கழுத்தில் சிந்தாமணியாகச் சீவக சிந்தாமணியையும், கையில் வளையலாக வளையாபதியையும், இடுப்பில் மேகலையாக மணிமேகலையையும், பாதத்தில் சிலம்பாகச் சிலப்பதிகாரத்தையும் அணிவித்து மகிழ்வதுடன், அவ்வருங் காட்சியை நம் பார்வைக்கும் நிறுத்தியுள்ளார்.

மகளிரை இப்படியான அணிகலன்களினால் அலங்கரிப்பதன் நோக்கம் என்ன?  இதன் விடைதான் இக் கட்டுரையின் கருப்பொருள்.  பெண்கள் அழகாக இருப்பதைப் பெண்களும் விரும்புவர்;: ஆண்களும் விரும்புவர். அணிகலன்களினால் பெண்கள் அழகாகத் தோற்றமளிக்கின்றனர். ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான். இதற்கு மறுப்பேதுமில்லை.

ஆனால், இதற்கும் மேலான வேறோர் உண்மையும் உண்டு.  தாலி பெண்ணுக்கு வேலி என்பர். அவ்வாறே அணிகலன்கள் பெண்ணைக் காக்கும் தெய்வங்கள். அவை பெண்களை என்றும் உணர்ச்சி, விழிப்பு, உசார், தயார் ஆகிய நிலைகளில் வைத்திருக்கின்றன.  எனவே அவர்கள் என்றும், எதற்கும் தயார் நிலையில் உள்ளனர்.

அன்று தமிழ்ப்பாடசாலைகளில் ஆசிரியர்  மந்த நிலையில் உள்ள மாணவரைத் தலையில் குட்டி, காதில் முறுக்கி, வயிற்றில் கிள்ளி அவர்களை உணர்ச்சி நிலைக்கும், உசார் நிலைக்கும் கொண்டு வர மாணவர்கள் உடனே ஆசிரியர் கேள்விகளுக்கு விடையளித்து நிற்பர் என்பதையும் நாம் அன்று கண்ட கட்சிகளாகும்.

இதேபோல் மகளிரின் ஒவ்வொரு அசைவுக்கும் அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் ஆடி, அசைந்து அவர்களுக்கு உணர்வைக் கொடுத்து, உசார் நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இதனால் ஆண்களை விடப் பெண்கள் என்றும் உசார் நிலையில் உள்ளனர்.

மகளிரை உணர்ச்சி வசப்படுத்த தலையணி, காதணி, மூக்கணி, கழுத்தணி, தோளணி, மார்பணி, கையணி, இடுப்பணி, காலணி, போன்றவை அவர்களுடன் என்றும் ஒட்டி உறங்கா நிற்கின்றன. இதன் காரணமாக அவர்கள் ஒரு பிரச்சினை வந்தக்கால் அதிலிருந்து சுலபமாகத் தப்பித்து விடுவர்.  ஆனால் ஆண்களோ பிரச்சினைக்குள் புகுந்து வேண்டாத தொல்லைகளில் மாட்டுப்பட்டு வருந்துவர்.

கணவர் தம் மனைவியருக்குத் திருமணநாளன்;று கழுத்தில் கட்டிய தாலியைப் புனிதப் பொருளாகப் பூசித்து, வணங்கி, துதித்து அத்தாலியைத் தெய்வமாக்கி வருகின்றனர் பெண்கள்;. மேலும், “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்” – ‘வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள்’ என்று வள்ளுவர் பெண்களைப் போற்றுகின்றார். நம் தமிழ்ப் பெண்கள். கட்டிய தாலியை என்றும் தம் கழுத்திலிருந்து கழற்றமாட்டார்கள்.

தம் கணவர் சில நாட்கள் வேலை நிமித்தம் தம்மைப் பிரிந்திருந்தாலும் அவர்கள் தம்முடன் இருப்பதாக நினைந்து தம் தாலியைத் தொட்டுப் பார்த்து மகிழ்வர். இது அவர்களுக்கு உற்சாகத்தையும், உறுதியையும், மன நிறைவையும் கொடுக்கின்றது. இன்னும், அவர்கள் கற்பு நெறியிலிருந்து சற்றும் பிறழாதிருக்கவும் இவை உறுதுணையாயிருக்கின்றன.  இவ்வாறான ஒரு கலாசாரம் தமிழர் மத்தியில் மட்டும்தான் காலாதிகாலமாக நிலைத்து வந்துள்ளதையிட்டு நாம் பெருமைப்படவேண்டும்.

அன்று ஆண்களும் காதில் கடுக்கனும், கழுத்திலும் கையிலும் சங்கிலியும் அணிந்திருந்தனர்.  ஆனால் இன்று அப் பழக்கம் அருகி இல்லாதொழிந்து விட்டது. அன்றைய ஆண்மகனும் உணர்ச்சியுடன் தயார் நிலையில் இருந்திருக்கலாம்.  இப்பொழுது மேலை நாட்டு இளைஞர் ஒரு சிலர் ஒரு காதில் காதணி, கையிலும் கழுத்திலும் சங்கிலி போன்ற அணிகலன்களை அணிகின்றனர். 

அன்றைய கடுக்கன் அணியும் முறை மீண்டும் ஆண்கள் மத்தியில் நிலவி வரக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றே கூறலாம்.  பின், பெண்களைப் போல் ஆண்களும் விழிப்புணர்ச்சி பெற்று, எதற்கும் தயார் நிலையடைந்து, இருவரும் சீர்பெற்ற வாழ்க்கையை அமைத்து இன்புறுவர்.

பழையவை புதியவையாகவும், புதியவை பழையவையாகவும் மாறி மாறிச் சுற்று வட்டத்தில் சுழன்று கொண்டு உலகை உய்விக்கும் பொழுதில் நாமும் அந்தந்தச் சுழலுக்கேற்றவாறு வாழ்க்கையை அமைத்துச் சிறப்புற்றிருப்பது நம்மனைவரின் கடமையாகும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 09 September 2013 19:16