உயிரினப் பிறப்பும் இறப்பும்!

Saturday, 12 September 2015 17:47 - நுணாவிலூர் கா. விசயரத்தினம், இலண்டன் - நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில், பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் பிறக்கின்றன் வாழ்கின்றன் இறக்கின்றன. மற்றைய எட்டுக் கோள்களில் உயிரினங்கள் வாழமுடியாது. பூமிக்கு இஃது ஒரு தனிச் சிறப்பாகும். இதனால் பூமியானது ஒரு பூவுலகாய் மிளிர்கின்றது. பூமியில் உயிரினங்கள் இல்லையெனில் அஃது ஒரு வனாந்தரமே. உயிருள்ள ஒன்றுதான் பிறக்கவும், இறக்கவும் முடியும். உயிரில்லையெனின் பிறப்பும், இறப்பும் இல்லை. மனிதன் மட்டும்தான் பிறக்கின்றான், இறக்கின்றான் என்றில்லை. ஓரறிவுள்ள புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிலிருந்து ஆறறிவுள்ள மனிதன்வரை பிறப்பதும;, இறப்பதும் உலக நியதியாகும்.

பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன் என்பர். அவன் அருவானவன்; உருவற்றவன். மனிதன்தான் அவனுக்கு உருவமைத்தவன். தன் சிந்தைக்கெட்டியவரை தன்னைப்போன்ற ஒரு மனித உருவமைத்துக் கடவுளுக்குக் கொடுத்தவன் மனிதன்தான். இறைவனுக்குப் பிறப்பு உண்டென்றால் அவனும் நம்மைப்போல் இறப்பவனாகி விடுவான் அல்லவா? எனவேதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிவபெருமான் பெயர் சொல்லி அழைக்காமல் 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று கூறியுள்ளார். இன்னும் 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்பது அருணகிரியார் வாக்கு. பிறப்பும் இறப்பும் இல்லாதவனிடம் சென்று சேர்ந்தால் நமக்கும் பிறப்பும் இறப்பும் அறும் என்று கூறுகின்றார் பட்டினத்தார்.


'பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்
கடற்படாவகை காத்தல் நின் கடனே.'

பிறப்பு, இறப்புப் பற்றித் திருமூலர் கூறும் திருமந்திரங்களின் பாங்கினையும் காண்போம். 'முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தவன்' (20) என்றும், 'பிறவா இறவாப் பெருமான்' (25) என்றும், 'பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னை' (86) என்றும், 'முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்... பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடு அறியீரே!'  (163) என்றும், 'பகலும் இரவும் போலப் பிறப்பும் இறப்பும்' (164) என்றும், 'பிறப்பின் நோக்கம் பெருமானை வணங்குதல்' (190) என்றும், 'பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி' (789) என்றும், 'பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்' (1524) என்றும், 'இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி' (1614) என்றும், 'பிறப்பறியார் பல பிச்சைசெய் மாந்தர் ... பிறப்பினை நீங்கும் பெருமை பெற்றாரே' (1626) என்றும், 'பிறவா நெறிதந்த பேரரு ளாளன்' (1803) என்றும் கூறிய திருமூலர் முதல்வன் முக்கண்ணன் திருவடிக்கு எம்மையும் ஆற்றுப்படுத்திச் செல்கின்றார். நீரோடு கலந்து நிற்கும் இப் பூவுலகில் உயிர்த்திuள்கள் தோன்றி வாழும். தாமரைப் பூவின்மேல் வீற்றிருக்கும் பிரமன் உடலோடு உயிரைப் பொருத்தி வைப்பவன். உயிரளிப்பவன் பிரமன். இறைவன் எமக்கு ஆயுளைத் தரும்போது இத்துணை ஆண்டு, மாதம், நாள் என்று கணித்துத் தருவதில்லை. அவன் இத்துணை எண்ணிக்கையான மூச்சுகள் என்றுதான் தருகின்றான். அதனைக் கூட்டுவதும் குறைப்பதும் நம் கையிற்றான் உள்ளதென்று கூறுகின்றார் திருமூவர். இச் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர் யோகிகள். அவர்களிடம் தியானப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் இருப்பதை நாம் அறிவோம். மூச்சுக்கலையை 'பிராணாயாமம்' என்றழைப்பர்.

தொல்காப்பியர் (கி.மு.711) யாத்த தொல்காப்பியப் பெருநூலில் எழுத்ததிகாரத்தின் மூன்றாம் இயலான பிறப்பியல் எனும் பகுதியில் எழுத்துக்கள் பிறத்தல், உயிரெழுத்துக்கள் பிறத்தல், மெய்யெழுத்துக்கள் பிறத்தல், சார்பெழுத்துக்கள் பிறத்தல் ஆகியவற்றையும், பொருளதிகாரத்தின்  ஒன்பதாம் இயலான மரபியல் என்னும் பகுதியில் இளமைப் பெயர்கள் (545), ஆண்பாற் பெயர்கள் (546), பெண்பாற் பெயர்கள் (547), ஆகியன பற்றிப் பிறப்பின் பின்னான பெயரிடுதல் முறைகளைச் சூத்திரம் அமைத்து இற்றைக்கு மூவாயிரம் (3000) ஆண்டுகளுக்கு முன் பதிவாக்கம் செய்த சிறப்பினையும் ஈண்டுக் கண்டு மகிழ்கின்றோம்.

புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியனவுக்கு உயிர் இல்லை என்று கூறுவோர் பலர்.  இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை ஜே.சி. போஸ் (30.11.1858 – 23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்வு, அறிவு உள்ளதென்பதை நிரூபித்துக் காட்டிப் பரிசும், பாராட்டும் பெற்றவர். ஆனால் இதற்கு முன்பாகவே தொல்காப்பியனார் உயிரினங்களை ஓரறிவிலிருந்து ஆறறிவுவரையாக வகுத்து விவரமாக எடுத்துக் கூறிச் சூத்திரம் அமைத்துள்ளார் என்பதையும் காண்கின்றோம். இதனாலன்றோ தொல்காப்பியர் தமிழன் மனங்களில் உறைந்துள்ளார்.   

' ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.' – ( தொல். பொருள். 571)

மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறுகின்றார்.


' புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர்ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். '

எல்லா உயிர்களும் தாயின் கருவறையிலிருந்துதான் பிறக்கின்றன. ஓருயிரான புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றுக்குப் பூமிதான் தாய். எனவே அவைக்குக்  கருவறையும் பூமிதான். நாம் ஒரு விதையை நிலத்தில் நாட்டித் நீர் ஊற்றிவிட்டால், அது நாலு, ஐந்து நாட்களில் உயிர் பெற்று வெளியே வந்து வளரத் தொடங்கிவிடும். இவ்விதையை வெளியில் போட்டால் இவ்வண்ணம் வராது இறந்துவிடும். பூமித் தாயின் கருவறை மகிமை கண்டோம்.

பட்டினத்துப் பிள்ளையார் பிறப்பு, இறப்புப் பற்றிக் கூறிய செய்திகள் இவையாகும். 'பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்' என்றும், 'தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்' எனவும், 'பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்' என்றும், 'பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்' என்றும், 'பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி' என்றும், 'பிறக்கும்  பொழுது கொடுவந்த  தில்லைப் பிறந்து  மண்மேல்  இறக்கும்  பொழுது கொடுபோவ தில்லை' என்றும், 'பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்து விட்டால் இறவாதிருக்க வரம் வேண்டும்' என்றும், 'ஒளியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுழன்றநெஞ்சே!' என்றும், 'இப்பிறப்பை நம்பி யிருப்பயோ நெஞ்சகமே!' என்றும், 'சூலாகிப் பெற்றாள், வளர்த்தாள், பெயரிட்டாள், பெற்றபிள்ளை பித்தானால் என் செய்வாள் பின்?' என்றும் கூறிச் சிதம்பரம், திருக்காஞ்சி, திருக்காளாத்தி முதலிய தலங்களுக்குச் சென்று சிவபிரானைப் பாடிப் பணித்துத் திருவொற்றியூர் வந்து சிவலிங்கமாக உருமாறினார் பட்டினத்துப் பிள்ளையார்.

'வீணே பிறந்திறந்து வேசற்றேன்.' என்று தான் பிறந்து, இறந்து சோர்வடைகின்ற நிலையினைக் குறிப்பிடுகின்றார் தாயுமானவர். மேலும் அவர் எத்தனை பிறப்போ, எத்தனை இறப்போ எளியேனுக்கு என்று தான் எடுத்த பல பிறவிகளை நினைந்து கசிந்து மனமுருகி இப் பாடலை வடித்துள்ளார்.

'எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ
எளியனேற் கிதுவரை அமைத்த
தத்தனை யெல்லாம் அறிந்தநீ அறிவை
அறிவிலி அறிகிலேன் அந்தோ.. '

அக்காலத்தில் அரச மகளிர் மந்திரம் உச்சரித்தும், முனிவர்கள் மூலமும் மகப்பேறு பெற்ற அதிசயச் செய்திகளையும் காண்கின்றோம். வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். குந்தியானவள் துர்வாச முனிவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை உச்சரித்ததால் கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன் ஆகியோர் வந்துதித்தனர்.  மாத்ரி அந்த மந்திரத்தை  உச்சரிக்க  நகுலன், சகாதேவர் என்னும் இரட்டையர் பிறந்தனர்.

மகப்பேறு சிக்கலற்ற முறையில் நடந்தேற வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்போர் பலர். எல்லாம் விதிப்படி நிகழுமென்று ஒதுங்கி நிற்போர் வேறு பலர். இவை இயற்கை வழியது என்று அமைதி கொள்வோர் ஒரு சிலர். மகப்பேறு பரிணாம வளர்ச்சி என்று கூறுவர் வேறு சிலர். இதை உயிர் மலர்ச்சி என்பர் வேறு பலர். இதை அறிவியலோடு அணுகுவர் இன்னொரு சிலர். சுகப்பிரசவம் வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவர் சாமிச் சார்புடைய சிலர். இவ்வண்ணம் மக்கள் பல திசைகளையும், முறைகளையும் நாடிச் செல்வதை நாம் காண்கின்றோம்.

நாம் பிறக;;;;கும் பொழுது எமக்கு வலியொன்றும் ஏற்படுவதில்லை. எல்லா வலிகளையும் தாயானவள் ஏற்றுக் கொள்கின்றாள். பிறக்கும் குழந்தைக்குத் தான் பிறந்து விட்டேன் என்றும் தெரிவதில்லை. குழந்தை எதற்கும் அழுது கொள்ளும். அப்பொழுது தாய் குழந்தையைத் தூக்கிப் பால் கொடுத்து, நித்திரை கொள்ள வைத்து விடுவாள். நித்திரை முடிந்ததும் மீண்டும் அழும். தாய் குழந்தையைத் தூக்கி வைத்துச் சீராட்டுவாள். தாய் குழந்தையைப் பார்த்துச் சிரிப்பாள். இதைப் பார்த்துக் குழந்தையும் சிரிக்கப் பழகிக் கொள்ளும். இப்பொழுது குழந்தை அழவும், சிரிக்கவும் பழகிக் கொண்டது. அழுது விட்டால் சாப்பாடு கிடைக்கின்றது என்றும் தெரிந்து விட்டது. குழந்தை சிரித்தும் மற்றவர்களை மயக்கி விடும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டது.

நாளடைவில் தாய்தான் குழந்தைக்கு எல்லாம் ஆகிவிடுகின்றாள். தாய் கூறித்தான் தன் தாயைக் குழந்தை அறிந்து கொள்கின்றது. தாய் கூறுவதை முற்றும் நம்பி விடுகிறது. தாய் கூறித்தான் தன் தகப்பனையும் அறிந்து கொள்கின்றது. இப்பொழுது குழந்தைக்குத் தாயும், தந்தையும் ஆகிய இருவரும் நண்பர்களாகி விடுகின்றனர். எனவே குழந்தையின் செல்லம் அதிகரித்து விடுகின்றது. தான் நினைத்ததைச் செய்தும் விடுகின்றது. அதன்பின் குழந்தையின் சகோதர சகோதரிகளை அறிந்து கொள்கின்றது. அதன் பிறகு குடும்பத்து உறவினர்களையும் தெரிந்து கொள்கின்றது. பன்னிரண்டாம் ஆண்டளவில் குழந்தைக்குப் பார் மணம் தெரியுமென்பர். அதன் பிற்பாடு குழந்தையின் போக்கு முற்போக்காய் மாறிக் கொண்டே செல்லும்.

இக்காலத்தைப்போல், அக்காலத்தில் மகப்பேற்றுக்காக மருத்துவமனையை நாடிச் செல்வதில்லை. அன்று பிள்ளைப் பேற்றுக்குத் தாய் வீட்டுக்குப் போய்விடுவர். அங்கு தனி இடம் அமைத்துப் பிள்ளைப்பேறு நடக்கும். இதை அந்தந்தக் கிராமங்களிலுள்ள மருத்துவச்சியர் ('பள்ளி' என்று அழைப்பர்) வந்து நின்று பிள்ளைப் பேற்றை நடாத்தி வைப்பர். இவர்கள் இத்துறையில் கற்றவர்களில்லை. ஆனால் அவர்கள் பரம்பரையாக இத் தொழிலில் ஈடுபட்ட அனுபவமுள்ளவர்கள். எனினும் சிக்கலுள்ள பிரசவத்தை இவர்களாற் கையாளமுடியாத நிலையில்தான் உள்ளனர். அன்று இரத்தப் பெருக்காலும், பிரசவிக்க முடியாமலும் பல கற்பிணிப் பெண்கள் இறந்து மடிந்த கதைகளையும் கேட்டறிந்தோம்.

பூமியில் 400 கோடி ஆண்டளவில்  உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதில் 20 இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் தோன்றினான். அவன் பல இலட்சம் ஆண்டுகளாக மிருக வாழ்வையே நடாத்தி வந்தான். அதனையடுத்து இரண்டு (02) இலட்சம் ஆண்டளவில் உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான நாகரிகப் பண்பாடுடைய மனிதன்  தோன்றினான். அவன் எல்லா உயிரினங்களையும் உற்று நோக்கி, அவற்றின் கருவறைக் காலம், பிறப்பு, வளர்ச்சி, ஆற்றல், இயக்கம், வாழ்வியற் காலம், இறப்பு ஆகியவற்றைக் கணித்துப் பதிவாக்கமும் செய்துள்ளான். இவை சில உதாரணங்களாகும்.

சில உயிரினங்களின் கருவுற்றிருக்கும் காலம்:- மனிதன்- 10 மாதம், யானை – 21-22 மாதம், ஒட்டகம்-13 மாதம், குதிரை–11 மாதம், குரங்கு – 8 மாதம்,  ஆடு – 6 மாதம், வெளவால் - 7 மாதம்,  சிங்கம் - 4 மாதம்,  புலி – 3 மாதம் 15 நாள்,  நாய் - 2 மாதம்,  அணில்- 1 மாதம், முயல் - 25 நாள், சுண்டெலி – 21 நாள், தவளை – 5 – 20 நாள்.

சில உயிரினங்களின்; வாழ்நாட் காலம் (ஆண்டுகளில்):-  மனிதன் - 80-90, கோழி – 10, பூனை – 13, கொக்கு – 24, மாடு – 25, குதிரை – 27, புறா – 28, மயில், வானம்பாடி – 30, ஒட்டகம், நாய், சிங்கம் - 40, வாத்து, கிளி – 50, நாரை – 60, ஒட்டகம், காகம், அன்னம் - 100, கழுகு – 200, முதலை, ஆமை – 300, திமிங்கிலம் - 500 முதல் 1000 வரை.

மரங்களின் வாழ்நாள்:- சிந்தூர மரங்கள் (oaks)  500 ஆண்டுகளுக்கு மேலும், ஜெயன்ட் செகுஒய்ய என்ற மரங்கள் 2,500 ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. இன்னும் கலிவோனியாவிலுள்ள பிரிஸ்ரிள்கோன் பயின் (Bristlecone Pine)  என்ற மரத்தின் வயதை 2012-இல் 4,844 ஆண்டுகள் என்று கணித்துள்ளனர். இந்த மரத்தின் உள்மையப் பகுதிவரை துளையிட்டு அதிலுள்ள ஆண்டு வளh;ச்சி வளையங்களைக் கணக்கிலெடுத்து இம்மரத்தின் வயதெல்லை கணிக்கப்பட்டுள்ளது.  

இதுகாறும் உயிரின் பிறப்புப் பற்றிப் பார்த்தோம். இனி உயிரின் இறப்பினையும் சற்று விரிவுபடுத்திக் காண்போம். சில உயிரினங்களான ஆடு, மாடு, மான், மரை, பன்றி, முயல், உடும்பு, தாரா, கோழி, மீன;, நண்டு, இறால் போன்றவை மக்களின் உணவாக அமைந்துள்ளன. எனவே உயிர்க் கொலைகள் நாளாந்தம் நிகழ்கின்றன. மக்கள் யுத்தத்தால் பெருமளவு இறக்கின்றனர். இராமாயணத்தில் இராவணனும் அவன் 3,000 கோடி வீரர்களும் இறந்தொழிந்தனர். மகாபாரதப் போரில் 39,36,600 படைவீரர்கள் மடிந்தனர். இவற்றில் பொதுமக்கள் அடங்கவில்லை. 

முதலாம் உலக யுத்தத்தில் (1914-1918) 20 மில்லியன் மக்கள் இறந்தனர். இரண்டாம் உலக யுத்தத்தில் (1939-1945) 73 மில்லியன் மக்கள் மடிந்தனர். இவற்றில் நவீன விஞ்ஞான ஆயுதங்களான துப்பாக்கி, ஏவுகணை, குண்டு, எரிகுண்டு, அணுக்குண்டு, எறிகுண்டு போன்றவற்றுடன் யுத்தம் நடைபெற்றது.  இந்த யுத்தங்களால் எய்திய நன்மைகள் பூச்சியமே. நாடும் அழிந்து பொது மக்களும் மாண்டதுதான் கண்ட மிச்சம்.

கொடுங் குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையாக அரசுகளால் மரண தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.  தற்பொழுது நடைமுறையில் உள்ள மரண தண்டனை முறைகளையும் நிரல்படுத்திக் காண்போம்.

தலையை வெட்டுதல் -  Decapitation

மின்சாரம் செலுத்திக் கொல்லல் -  Electrocution

துப்பாக்கி-பீரங்கி வேட்டுப் படையினர் சுட்டுக் கொல்லல் - Firing  
Squad

எரி வளி அறையில் விட்டுக் கொல்லல் – Gas Chamber

தூக்கிலிட்டுக் கொல்லல் -  Hanging

சுட்டுக் கொல்லல் -  Shooting

கல்லால் எறிந்து கொல்லல்  -  Stoning

நோவின்றிக் கொல்லும் ஊசிமருந்து –    Lethal Injection


முற்காலத்தில் நடைமுறையில் உள்ளனவும், இக்காலத்தில் முற்றாக அருகியுள்ள மரண தண்டனை முறைகள் சிலவற்றையும் பார்ப்போம்.

விலங்கை ஏவிக் கொல்லல் -  Bestiary

கொதி நீரிலிட்டுக் கொலை –   Boiling

சிலுவை ஏற்றம் -  Crucifixion

குடல் பிதுங்கக் கிழித்துக் கொலை –   Disembowelment

கசக்கிப் பிழிந்து கொல்லல் -  Crushing

எரித்துக் கொலை –     Burning

உறுப்பு வெட்டிக் கொலை –    Dismemberment

மூழ்கடித்து மாளச்செய்தல் -  Drowning

குரல்வளை நெரிப்புத் தண்டனை –    Garrotte

கழுவேற்றிக் கொலை –    Impalement

உயிருடன் மண்ணில் புதைத்தல் -  Live burial

மூச்சுத் திணறச் செய்து சாக்காட்டல் -  Suffocation in ash

ஒரு மரம் இறந்து விட்டால், அருகிலுள்ள மரங்கள் அழுது கவலை தெரிவித்துத் துக்கப்படுகின்றன. ஒரு விலங்கினம் இறந்தால் மற்றைய விலங்கினங்கள் ஒன்று சேர்ந்து வந்து துக்கம் விசாரித்துச் செல்கின்றன. காகம் ஒன்று இறந்து விட்டால் மற்றைய காகங்கள் வந்து கரைந்து விட்டுச் செல்கின்றன. மனிதன் இறந்தால், உற்றார், உறவினர், அயலார் யாவரும் வந்து மரண நிகழ்வுகளில் கலந்து, அழுது புலம்பிச் செல்வர். இறப்பு என்பது யாவர் மனதையும் தைத்து நிற்கின்றது.  மேலும் மனிதக்கொலை, கருணைக்கொலை, நரபலியிடல்,  உடன்கட்டையேறல், தற்பலியூட்டல் ஆகியவற்றால் மனித இறப்பு மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதையும் காண்கின்றோம். 

உலக உயிரினங்கள் அனைத்தும் இப்பூவுலகப் பந்தில் வாழத்தான் விரும்புகின்றன. ஓருயிராயினும் சாக விரும்பமாட்டா. வாழ்வின் வசந்தத்தைக் கண்டும், அனுபவித்தும் வாழத்தான் விரும்புகின்றன. பிறக்கும் உயிருக்கு ஆற்றல் உண்டு. அதனால் அது இயங்கிக் கொண்டு வளர்கின்றது. அதன் வாழ்நாள் எல்லையை அணுகும் பொழுது, அதன் இயக்கம் குன்றி, செயலிழந்து, இறப்பை நாடிச் சென்று விடுகின்றது. பிறப்பதும், இறப்பதும் சாதாரண உலக நிகழ்வாகும். இவையிரண்டும் என்றும் செயற்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இன்றிருப்பதுபோல் சிறந்த உலகம் நிலைத்திருக்கும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 12 September 2015 17:49