மக்கள் வாழ்வியல் பேசும் சீவக சிந்தாமணி

Tuesday, 01 December 2015 22:16 -- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- - நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

தலைசிறந்த காப்பியங்கள் அனைத்தும் கற்பனைக் களஞ்சியமாகவே தோன்றுகின்றன. கற்பனையின் சொல்லாற்றல் இலக்கியமாகின்றது. அந்த இலக்கியங்கள் சிறந்த காப்பிய நூலாய் மிளிர்கின்றன. அக் காப்பியங்களுள் தலை சிறந்தது சீவக சிந்தாமணியாகும். இது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றானது. இதைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருத்தக்க தேவர் எனும் புலவர் யாத்துத் தந்தனர். இக் காப்பியத்தின் தலைவன் சீவகன் என்ற அரசன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திருமணம் புரிந்து அவர்களுடன் ஒன்றுபட்டுக் கூடி மகிழ்வுற்று  ஏமாங்கத நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தில் இருந்து அரசாண்டு வந்தான் என்று கதை நீண்டு போகின்றது. இனி, கதைப் போக்கைத் தவிர்த்து, வாழ்வியல் தொடர்பில் சீவக சிந்தாமணி பேசும் பாங்கினையும் பார்ப்போம்.

மாநகரின் சிறப்பு:- மலைகள், குன்றுகள், பொய்கைகள், குளங்கள், வாவிகள், ஏரிகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், மரங்கள், சோலைகள் ஆகிய இயற்கை வளங்கள் நிறைந்துள்ள நாடுகளையும் காண்கின்றோம். நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீது பல்வேறு போர்க் கருவிகள், மதில்களைச் சூழ்ந்து அகழிகள் போன்றனவும் அமைத்திருந்தனர். அந்நகரத்தைக் கடைநகர், இடைநகர், உள்நகர் என மூன்று பிரிவாக வகுத்துள்ளனர். கடைநகரில் யானையின் மருப்பிற்குப் பூண் இடுவோர் வாழும் வீதிகள் அமைந்திருந்தன. அங்கு தேர் ஏறும் இடமும், வாட்போர் பயிலும் இடங்களும் இருந்தன. இடைநகரில் அழகிய மாடங்கள், அதன் உச்சியில் நீல மணியால் செய்யப்பட்ட அழகிய இடங்களும் அமைந்திருந்தன. உள்நகரில் பரத்தையர் சேரி அமைந்திருந்தது. கடைகளின் தரையை நாள் தோறும் மெழுகி, அகிற்புகை, சந்தனப் புகை இட்டு, குலதெய்வங்களை வணங்கி நிற்பர்.

அரசன் அரண்மனையைச் சுற்றி ஆழமான அகழி அமைந்துள்ளது. தற்பாதுகாப்பிற்காக அந்த அகழியில் முதலைகள் நிறைந்திருக்கும். கால்வாய்களில் எவரும் விழாதபடி என்றும் மூடப்பட்டிருக்கும். அரசன் தங்குவதற்குப் பூங்காவில் பள்ளிமாடம் அமைந்திருக்கும். ஆங்கே கண்கவர் சிலைகள் காணப்படும். அரசன் அரண்மனையில் என்றும் இன்னிசை, யாழ் ஒலி, முரசொலி, நடன ஒலி நிறைந்திருக்கும்.

கமத்தொழில்:- ஏமாங்கத நாட்டு மக்கள் பெரும்பாலும் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். உழவர்கள் எருதுகளையும், எருமைகளையும் ஏர்களிற் பூட்டி நிலங்களை உழுது விதைப்பர். உழத்தியர் வயல்களில் நாற்றுகளை நடுவர். உழவர்களின் தளர்ச்சி நீங்க உழத்தியர் மதுவை வார்த்து அவர்களுக்குக் கொடுப்பர். முற்றிய நெற்பயிர்களை அறுவடை செய்து போராகக் குவித்து வைத்து, அவற்றை எருதுகளால் மிதித்து, நெல்லை எடுப்பர். இன்னும் உழவர்கள் வயல்களில் கரும்புகளை நட்டு, அவை முற்றியதும் வெட்டி, ஆலைகளில் இட்டுச் சாற்றைக் காய்ச்சிக் கற்கண்டாக்கிப் பாவிப்பர். வாணிகம்:- உழவர்கள் தெங்கு, கமுகு, மா, பலா, வாழை, வெற்றிலை, அவரை, துவரை ஆகிய விளை பொருள்களை உண்டாக்கி அவற்றை வண்டிகளில் ஏற்றி நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர். மக்களும் தம் வாழ்கைக்கு வேண்டிய எல்லாப் பொருட்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தனர்.

அக்காலத் திருமணம்:- சிந்தாமணிக் காலத்தில் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு கதைத்துக் காதல் கொண்ட பின்புதான் அச் செய்தி பெற்றோர் செவிக்குச் சென்றடையும். அதன் பின்புதான் இரு பக்கப் பெற்றோரும் சேர்ந்து பேசி மணம் முடித்து வைப்பர். சீவகனின் எட்டு மணங்களும் இவ்வாறுதான் நடந்தன. சாதகம் பார்த்துத் திருமணம் முடிவு செய்வது அக்காலத்து வழக்காயிருந்தது.

சோதிடன் குறித்த நன்னாளில் மணக்கோயிலில் மங்கையர் வாழ்த்;துக் கூறி மணமக்களாகிய சீவகன், பதுமை ஆகியோர் முன் கைகளில் காப்புநாண் கட்டி, மகளிர் யானைமேல் ஏற்றி வந்த நீரால் அவர்களை நீராட்டி, இருவரையும் அலங்கரித்தனர். பின்பு பதுமையின் பெற்றோர் அவ்விருவர்க்கும் திருமணம் நடாத்தி முடித்தனர். இன்னும் மணமகனின் தந்தை மணமகனுக்குத் தன் மகளைக் கொடுக்கும் போதே சீதனம் கொடுப்பதும் அக்கால வழக்காயிருந்தது. குபேரமித்திரன், குணமாலையைச் சீவகனுக்கு மணமுடித்துக் கொடுத்த பொழுது இளைய மகளிர் எழுநூற்றுவருடன் கோடி பொன்னும், வேறு சீதனங்களும் கொடுத்த செய்தியையும் காண்கின்றோம்.

அணிகலன்கள்:- தேவர் கால மக்கள் கடகம், குழை, ஆரம் ஆகிய அணிகலன்களை அணிந்தனர். மகளிர் மகர குண்டம், தோடு, பொன் ஓலை, மணி மகரம், முத்துவடம். குரங்குச் செறி, கிண்கிணி, பாடகம், சிலம்பு, மோதிரம், பொன்மாலை, மேகலை, வெள்வளை ஆகியவற்றை அணிந்தனர். அலத்தகக் குழம்பினைப் பெண்கள் தம் அடி, அகங்கை இதழி, நெற்றி, நகம் ஆகியவற்றிற்குத் தீட்டிக் கொள்வர். பருத்தி நூலாலும், பட்டாலும், எலி மயிராலும், செய்யப்பட்ட ஆடைகளை மக்கள் அணிந்தனர். போர் வீரர்கள் வட்டுடை என்னும் ஆடையை அணிந்தனர்.

சில பழக்கவழக்கங்கள்:- திருத்தக்க தேவர் அக்காலப் பழக்கவழக்கங்கள் சிலவற்றைத் தந்துள்ளார். ஆடவர்க்கு இடக்கண் துடித்தால் தீங்கு வரும் என்பதும், காக்கை கரைந்தால் நன்று என்பதும், எரியும் விளக்கைத் தலையில் வைத்து நடக்கச் செய்வதை ஒரு வகைத் தண்டனை என்று கொள்வதும், பாம்பின் கடிக்கு மந்திரம் ஓதி விடம் தீர்க்க முயல்வதும் நீல மணிகளின் தன்மையைப் பாலால் அறிந்து கொள்ளும் முறையும் அன்று நிலவியிருந்துள்ளன. இவற்றை இக்காலத்திலும் நாம் காணக் கூடியதாகவுள்ளன. மேலும் அன்று கனவு காணல், தெய்வம் உருவெடுத்து உதவல், வேறுரு எடுத்தல், சாதக நம்பிக்கை, கணிகர் எதிர்வு கூறல், மகளிர்க்குச் சீதனம் கொடுத்தல், ஊழ்வினை நம்பிக்கை போன்றவற்றையும் மக்கள் மத்தியிற் காண்கின்றோம்.

பாலமிர்தம்:- அரிசி, காய் முதலியவற்றை நெய்யுடனும், தயிருடனும் கலந்து ஆக்கப் பெறும் 'பாலமிர்தம்' என்பது ஒரு சிறந்த உணவாக அன்று கருதப்பட்டு யாவரும் விரும்பி உண்டனர். இதை உண்டபின் வெற்றிலைப்பாக்குப் போடும் பழக்கமும் அக்காலத்தில் இருந்தது. இதைத் திருத்தக்க தேவர் 'முகவாசம்' என்று கூறியுள்ளார்.

குலமுறை:- குலமுறையும் தேவர் காலத்தில் வழக்கில் இருந்தது. அன்று சீவகன் ஆனிரையை மீட்டு வந்தான். ஆதற்காக ஆயர் தலைவன் நந்தகோன் தன் மகள் கோவிந்தையைச் சீவகனுக்குக் கொடுத்தான். கோவிந்தை தன்னிலும் தாழ்ந்த குலத்தவள் என்ற காரணத்தால் அவளைத் தன் தோழன் பதுமுகனுக்கு மணமுடித்து வைத்தான். ஆனால் சீவகன் வணிககுலப் பெண்களை மணம் புரிந்து கொண்டான். இதனால் தன் குலத்திற்;கு அடுத்த குலப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தேவர் காலத்தில் நிலைத்திருந்ததும் தெளிவாகின்றது.

கலைப்பயிற்சி:- தேவர் காலத்தில் குழந்தைகளுக்கு முதன் முதல் கல்வி தொடங்கும்போது பெற்றோர் ஆசிரியர்க்குக் குருதட்சணை கொடுக்கும் வழக்கம் இருந்தது. சீவகனுக்குக் கல்வி தொடங்கியபோது அவனின் வளர்ப்புப் பெற்றோர் ஆசிரியர் அச்சணந்திக்குக் குறுணி அளவு பொன்னும், மணியும், முத்தும், பொற்காசும் கொடுத்தனர். சீவகன் பொன் ஓலையில் பொன்னாலான எழுத்தாணி கொண்டு எழுதித் தன் கல்வியைத் தொடங்கினான்.

அன்று மக்கள் கல்வியோடு வில், வாள் முதலிய பயிற்சியும், பல நுண் கலைகளில் தேர்ச்சியும் பெற்றனர். மேலும், குரல் இசை, யாழ், குழல், முரசு ஆகிய இன்னிசை, நடனம், ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். காந்தருவதத்தையின் யாழ் போட்b அனங்கமாலை, தேசிகப்பாவை ஆகியோரின் நடனங்கள், சீவகனின் ஓவியத் திறன் முதலியவற்றால் அன்றைய நுண்கலைப் பயிற்சியின் திறன் புலனாகின்றது.

மக்கள் விளையாட்டு:- அன்று, ஆடவர் விற்போர், வாட்போர் முதலிய பயிற்சிகளில் ஈடுபட்டு விளையாடுவர். இப்போர்களில் பயிற்சி பெறுவதற்கு இராசமாபுரத்துக் கடைத் தெருவில் இடங்கள் இருந்துள்ளன. நீராடல், ஊசலாடல், கழங்காடல், பந்தாடல் ஆகிய விளையாட்டுகள் மகளிர்க்கு உரியனவாகத் தேவர் குறிப்பிடுகின்றார். விமலையின் பந்தாட்டத்தை அவர் சிறப்புறக் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு:- தேவர் காலத்தில் சுண்ணம் செய்வது இள நங்கையருக்கு இன்பப் பொழுது போக்காக அமைந்துள்ளது. உயர்ந்த இடத்திலிருந்து நீர் நிலையில் குதிப்பதும், நீந்துவதும், விசிறி கொண்டு ஒருவர் மீது ஒருவர் நீர் வீசுவதும் நங்கையர் மகிழ்ந்தாடும் விளையாடலாகும். சீவகன் தன் மனைவியர் எண்மரோடு நீரில் குதித்தும், நீந்தியும், விசிறி கொண்டு நீர் வீசியும் விளையாடினான் என்று சிந்தாமணியில் தேவர் கூறுகின்றார். மலர் கொய்தல், மாலை தொடுத்தல், மலையிலிருந்து கூவி எதிரொலி கேட்டு இன்புறுதல், மலையருவியில் குதித்தல், தம் பாவைக்குத் திருமணம் செய்தல் ஆகியன மங்கையரின் பொழுது போக்காயிருந்தன.

முடிவுரை
சீவக சிந்தாமணியில் அமைந்த மாநகரின் சிறப்பு, கமத்தொழில், வாணிகம், அக்காலத் திருமணம், அணிகலன்கள், சில பழக்கவழக்கங்கள், பாலமிர்தம், குலமுறை, கலைப்பயிற்சி, மக்கள் விளையாட்டு, பொழுது போக்கு ஆகியவற்றின் சிறப்பினைப் பார்த்தோம். மேற் கூறியவற்றால் தேவர் காலத்து மக்கள் உழவுத் தொழிலையும், வாணிகத்தையும் முன்னிலைப் படுத்தியுள்ளனர் என்பதையும், அவர்தம் நகரங்களைக் கட்டுக்கோப்பாக அமைத்துள்ள திறத்தினையும் தெரிந்து கொண்டோம். அக்காலத்தில் திருமணங்கள் நடந்தேறிய முறைகளையும் அறிந்து கொண்டோம். மக்களின் கலைப் பயிற்சி, மகளிரின் பந்தாட்டம், அவர்களின் பொழுதுபோக்கு ஆகியவற்றையும் தெரிந்து கொண்டோம். அவர்கள் அணிந்த அணிகலன்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள் மக்களின் விளையாட்டு ஆகியவற்றையும் அறிந்து கொண்டோம். அவர்களின் குலமுறை, அவர்கள் விரும்பி உண்ட பாலமிர்தம் ஆகியவற்றையும் புரிந்து கொண்டோம். இவை போன்றவற்றால் அக்கால மக்களின் சீரும் சிறப்பும் அமைந்த வாழ்வியல் எம்மையும் ஆற்றுப்படுத்தி நிற்கின்றது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Tuesday, 01 December 2015 22:25