சங்க இலக்கியக் களவியற் பாடல்கள் வெளிக்கொணரும் அம்பலும் அலரும்

Saturday, 06 February 2016 20:03 -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

ஓத்த காதலர்கள் பிறர் அறியாதவாறு தங்கள் திருமணத்திற்கு முன்பாகத் தனியிடத்திற்; கூடி இன்புற்று மகிழ்வதைக் காதற் களவியல் எனக் கூறுவர். ஓத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படும் நிலையில் காதற்களவு ஏற்படும். இதிற் தொடர்புடைய தலைமகன், தலைமகள் ஆகிய இருவரின் இயல்பினை நன்கறிந்து, அவர்களுக்கு இவ்வண்ணம் இலக்கணம் அமைத்துத் தந்துள்ளார் தொல்காப்பியர். தலைமகன் இலக்கணமாக 'பெருமையும் உரனும் ஆடூஉ மேன'- (பொருள்.95) என்று – 'பழிபாவங்களுக்கு அஞ்சி, குற்றச் செயல் புரியாது, அறிவுடையவனாய் இருத்தல் தலைவனுக்குரிய இயல்பாகும்' என்று   கூறுகின்றார். இதனால், தலைமகள் வேட்கைக் குறிப்பை உணர்ந்த தலைமகன், அந்நிலையில் புணர்ச்சியை உடன் நிகழ்த்தாது வரைந்து கொண்டதன் பின்பே அதை நிகழ்த்துவோம் என்பதும் தெளிவாகின்றது. தலைமகளுக்கும் இவ்வாறு இலக்கணம் அமைத்துத் கூறுகின்றது தொல்காப்பியம்.

'அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.' -  (பொருள்- 96)

அச்சம், நாணம், மடம் (பேதைமை) ஆகிய முக்குணங்களும் தலைவியருக்கு என்றும் முந்தி நிற்றல் மகளிர்க்குரிய ஒரு சிறப்பாகும். அதனால் அவர்கள் வேட்கையுற்றவிடத்தும் புணர்ச்சிக்கு இசையாது வரைந்தெய்தலையே  வேண்டி, ஒதுங்கி நிற்பர். தொல்காப்பியர் காலத்து மகளிர்க்கு அச்சம், நாணம், மடம் ஆகிய முக்குணங்கள் மட்டுமே இருந்துள்ளமையும் தெளிவாகின்றது. தற்கால மகளிர்க்கு உள்ள 'பயிர்ப்பு' என்ற நான்காவது குணம் பின்னெழுந்ததாகக் கருதலாம்.

தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். பகலிற் கூடுமிடம் 'பகற்குறி' என்றும்,  இரவிற் கூடுமிடம் 'இரவுக்குறி' என்றும் கூறுவர்.

'குறியெனப் படுவது இரவினும் பகலினும்
அறியக் கிளந்த ஆற்ற தென்ப.' – (பொருள். 128)

இரவுக்குறிக்குரிய இடமானது, இல்லத்துக்கு அண்மித்ததாகவும் அவர்கள் பேசுவதை வீட்டிலுள்ளோர் கேட்குமாறு அமைந்ததாகவும் இருக்க வேண்டுமென்று சூத்திரம் கூறும். 'இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான.' – (129)

பகற்குறிக்குரிய இடமானது மதிலின் புறத்தே அமையுமென்றும், அவ்விடம் தலைவிக்கு நன்றாகத் தெரிந்த இடமாகவும் அமைய வேண்டுமென்றும் கூறுவர்.
'பகற்புணர் களனே புறனென மொழிப
அவளறி வுணர வருவழி யான.' – (பொருள். 130)

தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலுமுண்டு. இது 'அம்பல்', 'அலர்' என இருவகையால் வெளிப்படும். அம்பல் என்பது சொல் நிகழா முகிழ்நிலைப் பரவாக் களவாகும். அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும். இனிச் சங்க இலக்கியப் பாடல்களில் அம்பல், அலர் ஆகிய இரு பதங்களும் பேசப்படும் பாங்கினையும் காண்போம். 

1.தொல்காப்பியம்;
(1)களவொழுக்க காலத்தில் அம்பலும், அலரும் வெளிப்படலுக்குத் தலைவனே பொறுப்பாவான்     என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

'அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்
அங்கதன் முதல்வன் கிழவ னாவான்.' -  (பொருள். 137)

களவொழுக்கத்தில் தலைவன் தலைவியர் ஒன்று சேர்ந்து களவெடுத்ததால் அம்பலும், அலரும் வெளிப்பட்டு ஊரார் கதைக்கு உரம் ஊட்டியது. இதற்கு இருவரும் பொறுப்பானவர்களென்றும் உண்மையாகத் தெரிகின்றது. ஆனால் தொல்காப்பியரோ தலைவியின் பழியையும் எடுத்துத் தலைவன் தலைமேற் சுமத்திச் சென்று விட்டார். பெண்ணைக் கழங்கப் படுத்தக் கூடாதென்ற பெருநோக்கில் இவ்வாறு செய்தாரோ? தெரியவில்லை. காரணம் கூறாத் தீர்ப்பாயிற்று.

(2)களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகியவற்றில் தலைவன் தலைவியர் ஈடுபட்டிருக்கும் பொழுது அலர் (பழி) தூற்றுதல் நிகழ்வதுண்டாம். ஆனால் அஃது ஒரு வேளை நிகழ்தலும், சில வேளை நிகழாமையும் உண்டாம்.

'களவுங் கற்பும் அலர்வரை வின்றே.' -  (பொருள். 160)

(3) பிறர் அலர் தூற்றியதால் தலைவன் தலைவியரின் காம வேட்கை அதிகரிக்கும் எனச் சூத்திரம் கூறுகின்றது. அலரினால் வரும் பயனெனத் தலைவன் தலைவியர் மகிழ்வர்.

'அலரில் தோன்றும் காமத்து மிகுதி.' -  (பொருள். 161)

(4) களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கும் வழக்கம் இல்லை. களவுக் காதல் தெய்வீகமானது. அவ்வண்ணம் அன்றைய காதலர்கள் கருத்தொருமித்துச் செயற்பட்டனர். இருந்தும் அவர்களிடையே தோன்றிய களவின் காலவரையை இரண்டு மாதம்தான் நிகழவேண்டுமென்று இறையனார் களவியலில் வரையறை விதித்துள்ளார்.

'களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப.' -   (நூற்பா.  32) 

களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியரிடையே ஒரு தவறும் நடந்தேறிவிடக் கூடாதென்ற பேரெண்ணம் கொண்ட தமிழறிஞர் இவ்வாறான வரையறையை வகுத்துள்ளமை போற்றற்குரியதாகும்.

2.அகநானூறு
(1)பரத்தையுடன் கூடியபின், வீட்டை நாடிவரும் தலைவன், தோழியின் உதவியை நாடுகின்றான். அவள் 'வெற்றி கொண்ட மன்னன் களிறுகளைக் கவர்ந்த பொழுது எழுந்த ஆரவாரம் போல நின் செயலும் ஊரலராகின்றதே!' என்று கூறி  வாயில் மறுத்து நிற்கின்றாள்.

'....களிறுகவர் கம்பலை போல,
அலர்ஆ கின்றது, பலர்வாய்ப் பட்டே!... ' – (96-17,18)

(2)அலர் கூறுதலையே தொழிலாகக் கொண்ட பெண்டிர்கள் தன் மகள் ஒழுக்கம் பற்றித் தாயிடம் வந்து பல நாள் சொல்லியும், அன்று தான் பாராமுகத்துடன் இருந்து விட்டேனே! ஏன்று கவலையுற்றாள் தாய். இன்று அத்தாய் அந்த வறிய மனையிலே தனித்து இருக்க, அவளோ அவனுடன் போயினள் என்று அறிந்து வருந்துகின்றாள்.

'... அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இளையள், நின்மகள்' எனப் பல்நாள்
ஏனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்...' – (203-3-5)

(3)பிரிந்து சென்ற தலைவன் குறித்த நேரத்தில் வராது காலந்தாழ்த்த, அதனால் தலைவி உடல் நலம் அழிய, அதனால் ஊரவர் உரைக்கும் பழிச்சொற்கள் எழ, அதுகண்டு வருந்திய தோழிக்குத் தலைமகள் தன் ஆற்றாமையினைக் கூறுகின்றாள்.

'அம்ம – வாழி, தோழி!- பல்நாள்
இவ்ஊர் அம்பல் எவனோ? – (249-1,2)

(4)தலைமகன், பரத்தையோடு வையைப் புதுப்புனலில் புனலாடிக் களித்துத் திரிந்தான் என்று அறிந்த தலைவி அவன்மேல் ஊடல் கொண்டாள். அவன், அவள் உறவைநாடி மறுநாள் வீட்டிற்கு வர 'நின் செயல் ஊர் அலர் ஆகின்றதே!' என்று வாயின் மறுத்தாள்.

'………..மலிதரு கம்பலை போல,
அலர்ஆ கின்று, அது பலர்வாய்ப் பட்டே.' – (296- 13,14)
3.நற்றிணை
(1)'நம் அன்னை ஊரிலே எழுந்துள்ள பழிச்சொற்களை அறிந்துவிட்டால், இவ்விடத்தே தங்கியிருந்து களவிற் கூடிவாழும் நம் வாழ்க்கையானது, நமக்கு இனிமேல் அரிதாகிப் போய்விடும்.' என்று கவலை கொண்டாள்.

'அலரே அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை
அரிய வாகும் நமக்கு'.................. - (4-5,6)

(2)'அவன் சொல்லை நம்பினோம.; எம் நலத்தையும் இழந்தோம். அயற்பெண்டிரின் அலரும் சூழ்ந்து விட்டது. துயரும் பெருகி விட்டது. இவற்றைத் தீர்த்தற்கு அவர் என்னை மணந்து கொள்வதே சிறந்தது.' என்ற நிலைக்குத் தலைவி வந்துவிட்டாள்.

'..அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரைஇல் தீமொழி பயிற்றிய உரைஎடுத்து..' – (36-5,6)

(3)ஊர்ப் பழியிலிருந்து பிழைத்தற்பொருட்டுத் தலைவனுடன் உடன்போக்கிற் சென்று விடுதலே சிறந்ததென்று தோழியும், தலைவியும் கருத்துப் பரிமாறினர்.

'... மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்......
அலர்சுமந்து ஒழிகஇவ் அழுங்கல் ஊரே!' – (149-3,10)

(4)'ஏன்றும் களவிலே வந்து போகும் தலைவன், இன்றும் என்னை மணந்துகொண்டு போகாது, அலர் கூறும் வாயையுடைய அயல்வீட்டுப் பெண்கள் என் நெற்றியிலே தோன்றியுள்ள பசலை நோயைக் குறித்துப் பாடும் இழிவுதான் ஏற்பட்டுள்ளதே!' என்று தோழிக்குக் கூறித் தலைவி சங்கடப்படுகின்றாள்.

'............................. அலர்வாய்
ஆயலிற் பெண்டிர் பசலை பாட' -  (378-6,7)
4.ஐங்குறுநூறு
(1)     தலைவன் பரத்தையரோடு புனலாடினான். தலைவி இதைக் கேட்கத் தலைவன் மறுத்து நின்றான். 'அலரை மறைத்தல் முடிவதோ!' என்று தலைவி சினந்து நின்றாள்.  இன்னொரு தலைவி 'ஊர் அலர் கூறத் தொடங்கிற்று' என்று ஊடி நின்றாள்.

'...ஆடினை என்ப புலனே, அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந,
புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்றது ஒளியே?' – (71)

'பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந! அதனால்
அலர் தொடங்கின்றால் ஊரே- மலர...' – (75)

(2)பரத்தை தலைவனிடம் 'தலைவா! நீ உன் மனைக்குச் செல்லாது எம்முடன் கூடி வருவாயாயின், இப் பேரூரில் அலர் உண்டாக, நாம் மகிழ்ச்சியாகக் குளிர்ந்த புனலில் ஆடுவோம்' என்றுரைத்தாள்.

'... பேரூர் அலர்எழ நீரலைக் கலக்கி
நின்னொடு தண்புன லாடுதும்..' – (77)

(3)பாணன் தலைவனுக்காகத் தலைவியிடம் வாயில் வேண்டி வந்தான். தலைவி 'அவன் பரத்தையருக்கே அருள் புரிகின்றான். அதனால் அலரானது பெரிது பட்டு நிற்கிறது.' ஏன்று கூறி வாயில் மறுத்து விட்டாள்.

'....அரும்பு மலி கானல் இவ்வூர்
அலராகின்று அவர் அருளுமாறே.' – (132)

(4)'நம் துறைவன் இயல்பு நமக்கும் தீமை செய்து, தனக்கும் அலரைத் தேடிக் கொண்டானே!' என்று தலைவி தோழிக்குரைத்து மனம் நொந்து கொண்டாள்.
' ..... தண்ணம் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர் பயந்தற்றே.' -  (164)
5. குறுற்தொகை

(1)அலரஞ்சிய தலைமகள் தலைமகன் சிறப்பினைத் தோழிக்குச் சொல்லியது. 'தோழி! கடற்றுறையில் பாகன் நிறுத்தவும் நில்லாது சென்ற தேரை யான் கண்டிலேன். ஆனால் புன்னை மலரைக் கொய்யும் இடமெல்லாம் ஒருங்கே கண்டதுதான் மாத்திரம். இருந்தும் அலர் எழுந்து விட்டதே!. ஆதலின் அலர் எங்கும் ஒழிவதாக!' என்று தலைவி கூறினாள்.

'அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடல்
புலவுநாறு அகன்துறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனே பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத்
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆய மெல்லாம் உடன்கண் டன்றே.' -  (311)
6.திருக்குறள்

திருவள்ளுவர் தாம் யாத்த திருக்குறளில் காமத்துப் பால் பகுதியில் 115-ஆம் அதிகாரத்தில் பத்துக் (10) குறள்களால் அலரைப் பற்றி எடுத்துரைக்கின்றார்.

(1)எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் எம் அரிய உயிர் போகாமல் உள்ளது. எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

'அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.'  -  (குறள். 1141)

(2)மலர் போன்ற கண்களையுடைய இவளது அருமை தெரியாமல், இந்த ஊரார் அவளை எளியவளென அலர் (தூற்றுதல்) எழுப்பி விட்டனர்.

'மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.' -  (குறள். 1142)

(3)களிப்புப் பெருகப் பெருக, கள் குடிப்பவன் தொடர்ந்து குடிக்கப் புகுவதுபோல், அலரால் எம் காமம் பலர் அறிய இன்பம் அளிக்கிறது.

'களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.' -  (குறள். 1145)

(4)நான் காதலனை ஒரு நாள்மட்டும்தான் பார்த்தேன். அதனால் உண்டாகிய அலரோ பாம்பு சந்திரனை விழுங்கிய செய்திபோல் எங்கும் பரவிவிட்டது.

'கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.' -  (குறள். 1146)

(5)இக்காம நோய், அலர் தூற்றலே எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு வளர்கிறது.

'ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.'  -  (குறள். 1147)

7.நாலடியார்

அயலான் தன் பழியெடுத்துக் (அம்பல்) கூறவும், அதையறிந்த உறவினர் பயந்து வருந்தவும், பிறன் மனையாளைச் சேர்ந்து களிப்படைந்து, அவ்விருப்பமும் நிலைத்தல் இல்லாத மனமுடையான சிற்றின்ப அநுபவம், பாம்பினது தலையை நக்கினாற் போன்ற அபாயத்தை உடையது.

'அம்பல் அயலெடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வும்பலன் பெண்மரீஇ மைந்துற்று – நம்பும்
நிலைமையில் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்
தலைநக்கி யன்னது உடைத்து.' – (87)
நிறைவுரை
தலைவன் தலைவியர் களவியல் வாழ்வில் அம்பலும், அலரும் ஒன்று சேர்ந்து காதலருக்குக் கொடுத்த இன்னல்களும், அவதூறுகளும், பழிச் சொற்களும் அளப்பரியன. இருந்தும் அம்பலும், அலரும் அவர்களை வரைந்து கொண்டு சீரான வாழ்வியலுக்கு ஆற்றுப்படுத்தியுள்ளதையும் காண்கின்றோம். இவைகள,; அவர்களுக்குத் தொடக்கத்தில் சிறு தொல்லைகளைக் கொடுத்தாலும,; பின்னுக்கு அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வியலை அமைத்துக்; கொடுத்துள்ளன.

அம்பலையும், அலரையும் ஊர்ப்பெண்டிர்தான் முன்னின்று ஊரடங்கலும் பரப்பி, எண்ணை வார்த்து, திரி வைத்து, தீக்கொழுத்தி ஆரவாரத்துடன் கிராமத்துத் தெரு, ஒழுங்கை வழி நடந்து சங்கதிகளை எதிர்கொள்ளும் பெண்டிர்க்கும் இல்லா பொல்லாதன சாற்றி, அதைத் தம் அரிய தொண்டெனக் கருதி, நினைந்து, நிம்மதியுடன் வீடு சென்று, வீட்டாருடனும் கதை அளந்து, நித்திரையின்றித் தூங்காதிருப்பர். அவர்களின் ஆனந்தத்தையும் நாம் பார்க்கின்றோம். அம்பலும், அலரும் ஆண்வர்க்கத்தால் எழுந்ததென்று யாண்டும் இல்லை. அவர்கள் எதையும் சீரிய நோக்காகவே காண்பர்.
அம்பலும் அலரும் சேர்ந்த களவியலும், கற்பு இணைந்த கற்பியலும், 'ஒருத்திக்கு ஒருவன்- ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கோட்பாடும் மனித வாழ்வியலை மேம்படுத்தி நிற்கின்றன.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 06 February 2016 20:05