ஆய்வு: பண்டைத் தமிழர் ஆடிப் பாடிக் களித்த துணங்கையும் குரவையும்

Sunday, 04 September 2016 05:07 -- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- - நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

நம் பண்டைத் தமிழர்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் மிக்க ஆர்வங்கொண்டு தாமனைவரும் ஆடிப் பாடிக் களிப்புற்றிருக்கக் கூத்துக்களை அமைத்துக் கூத்தும் ஆடிக் குலாவி மகிழ்ந்திருந்தனர். அன்று துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் அவர்கள் மத்தியில் நிலவியிருந்தன. இவற்றில் துணங்கைக் கூத்து முன்னிலையில் சிறப்புற்றிருந்தது. துணங்கைக் கூத்து:-  மகளிர் பலர் ஒன்று சேர்ந்து இரு கைகளையும் மடக்கி விலாவிடத்து அடித்துக் கொண்டு ஆடுவர். இவர்களுக்குத் தலைக்கை கொடுத்துத் தொடங்கி வைப்பர் ஆடவர்.  இதனைப் பேய்க் கூத்தென்றும், சிங்கிக் கூத்தென்றும் கூறுவர். 'நிணந்தின் வாயள் துணங்கை தூங்க.' (திருமுருகு. 56) என்னும் அடிக்கு 'பழுப்புடையிருகை முடக்கியடிக்க, துடக்கிய நடையது துணங்கையாகும்' என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுதான் துணங்கையின் இலக்கணமாகும்.  குரவைக் கூத்து:-  துன்பம் வந்தவிடத்தும், இன்பம் பெருகிய பொழுதும், பக்தி மேலிட்டாலும் ஆயர்கள், வேடர்கள், குறவர்கள் முதலானோர் குரவைக் கூத்தாடுவது வழக்கம். மகளிர் பலர் சேர்ந்து கைகோத்து ஆடும் கூத்தைக் குரவைக் கூத்தென்பர். புதுமலர் மாலை சூடிய ஆடவர் வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தைத் தொடக்கி வைப்பர்.

இனி, தமிழ் இலக்கியங்களில் துணங்கை, குரவை ஆகிய இருவகைக் கூத்துக்களும் எவ்வாறு பேசப்படுகின்றன என்பது பற்றி ஆராய்வாம். புறநானூறு கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு எனும் நூலில், வெம்மையான மதுவை விரும்பி உண்ட ஆடவர் புன்னைமரப் புதுமாலை அணிந்து, வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தும் ஆடுவர் என இப்பாடலை யாத்த மாங்குடி மருதனார் (இவரை மதுரைக் காஞ்சிப் புலவர் எனவும், மாங்குடி கிழார் எனவும் உரைப்பர்) என்ற புலவர் கூறியுள்ளார்.

'வெப் புடைய மட் டுண்டு,
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;' - (பாடல்  24-5-9)   மேலும், அதே புலவர் பின்வரும் பாடலில், மனிதவளம் நிறைந்த நாட்டிலே, கள் நிறைந்த வீட்டினராக வாழும் கோசர் மதுவுண்டு குரவையாடும் ஒலி என்றும் முழங்கும் எனவும்,  இவ்வாறான நீர்வளம் மிக்க நாட்டிற்கு உரியவன் எழினியாதன் என்பவனாவான் என்றும், அவன் பகைவரை அழிக்கும் வன்மையோன் எனவும், வெல்லும் வேலினையுடைய தலைவன் என்றும் பாடியுள்ளார்.

'மென் பறையாற் புள் இரியுந்து;
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீந் தேறல் நறவு மகிழ்ந்து
தீங்குரவைக் கொளைத்தாங் குந்து;
உள்ளி லோர்க்கு வலியா குவன்,
கேளி லோர்க்குக் கேளா குவன்.' -  (பாடல். 396-6-11)

குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 'தோழீ! பயிற்சி மிக்க வீரர்விழா இடங்களிலும், மகளிர் துணங்கையாடும் இடங்களிலும் மற்றைய இடங்களிலும் தேடியும் தலைவனைக் கண்டிலேன். அவனைத் தேடிப் பல இடங்களுக்கும் சென்றதால், யானும் ஓர் ஆடுகளத்து மகளே! என்னை மெலிய வைத்த தலைவனும் ஓர் ஆடுகளத்து மகனே!' எனத்   தோழிக்குத் தலைமகள் கூறியது என்ற பாடலில் காண்கின்றோம்.

'மள்ளர் குழீ இய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோ ராடுகள மகளே என்னைக்
கோடீ ரிலங்கு வளைநெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.' -   (ஆதிமந்தியார் பாடல். 31)

மேலும், இன்னொரு பாடலில் வளையல் அணிந்த மகளிர் ஆடுகளத்தில் துணங்கைக் கூத்தாடுவதையும் சிறப்பித்துக் காட்டியுள்ளார் ஒளவையார்.                            
'வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண் அவர்
மணம்கொளற்கு இவரு மள்ளர் போரே.' -  (364-5-8)

கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில், விடியும்வரை பரத்தையர் சேரியில் சுற்றிவிட்டு, அதன்பின் வீடுவந்த தலைவனை, 'நீ வந்துவிட்டாய், அதுவே போதும், நின் பரத்தையர் வருந்துவர், அங்கேயே மீண்டும் போவாயாக!' என்று தலைவி அவனை ஒதுக்கி வைத்தாள். இன்னும் கேள், 'இங்கே அணைபோன்ற என் தோள்கள் வாடி வதங்க, யானும் கிடந்து வருந்துகின்றேன். பரத்தையரோடு கூடி மகிழ்ந்து விட்டு, அச்சின்னங்களோடு நீயும் வந்துள்ளாய். பரத்தையரோடு கூடிக்கலந்து நீர் விளையாடினாயென்று பிறர் வந்து கூறினர். அது என்னைச் சுட்டு வருத்தியது. உன் மாலையை எவளுக்கோ அணிந்துவிட்டு, அவள் தலைக் கோதையை அணிந்துள்ளாய். ஏன்னைப் பிரிந்தாய். நான் வருந்திக் கிடக்க, பரத்தையரோடு துணங்கைக் கூத்தும் ஆடினாயென்றும் அறிந்தேன். உன் பரத்தையருக்கு மிகவும் வேண்டிய பாகன் தேரோடு வெளியில் காத்திருக்கின்றான். நீ காலம் கடத்தினால் அவன் உன்னையும் விட்டுச் சென்று விடுவான். அதனால் நீ பரத்தையரிடம் போய் வருக!' என்று கூறினாள்.

'அணைமென்தோள் யாம்வாட, அமர்துணைப் புணர்ந்து நீ,
மணமனையாய்! எனவந்த மல்லனின் மாண்புஅன்றோ –
பொதுக்கொண்ட கவ்வையின் பூவணிப் பொலிந்தநின்
வதுவைஅம் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை;
கனலும் நோய்த்தலையும், 'நீ கனங்குழை அவரொடு
புனல்உளாய்' எனவந்த பூசலின் பெரிதன்றோ –
தார்கொண்டாள் தலைக்கோதை தடுமாறிப் பூண்டநின்
ஈர்அணி சிதையாது, எம்இல்வந்து நின்றதை;
தணந்ததன் தலையும், 'நீ தளர்இயல் அவரொடு
துணங்கையாய்' எனவந்த கவ்வையின் கடப்பன்றோ-
ஒளிபூத்த நுதலாரோடு ஓரணிப் பொலிந்தநின்
களிதட்ப வந்தஇக் கவின்காண இயைந்ததை;
என வாங்கு;
அளிபெற்றேம், எம்மைநீ அருளினை;  விளியாது
வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனும்
'நீடித்தாய்' என்று, கடாஅம், கடும் திண்தேர்;
பூட்டு விடாஅ நிறுத்து.'  - - (மருதக்கலி. 1-9-25)

தன் தலைவி   ஏதும் அறியாதவள் என்று நினைத்த தலைவன் துணிவுடன் வந்து 'மனத்தில் தீதிலன் யான்' என்று கூறி அவளை ஏமாற்ற நினைக்கிறான். ஆனால் தலைவி 'நீ பரத்தையருடன் சென்றாய். உன் மார்பிலே தோன்றும் சந்தனம் உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டதே. நீ பரத்தையரோடு ஆடிய துணங்கைக் கூத்தினால், கரை கிழிந்துபோன உன் ஆடை உன்னைக் காட்டிக் கொடுக்கின்றதே. என்னைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னைக் காணாது பரத்தையர் வருந்துவர். எனவே நீயும் அவர்களை நாடிச் செல்வாயாக!' என்று கூறி முடித்தாள் தலைவி.

'மனத்தில் தீதிலன்' என மயக்கிய வருதிமன்- 
அலமரல் உண்கண்ணார் ஆய்கோதை குழைந்தநின்
மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னைநீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி,
முன்அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன்-
நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக்,
கரையிடைக் கிழிந்தநின் காழகம் வந் துரையாக்கால்?
என வாங்கு   
மண்டுநீர் ஆரா மலிகடல் போலும்நின்
தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி;  மற்று யாம் எனின்,
தோலாமோ, நின்பொய் மருண்டு?' - - (மருதக்கலி, 8-11-22)

அங்கே ஆயர் மகளிர் மரபுகளைச் சுட்டிப்பாடிக் குரவைக் கூத்தும் ஆடித் தேயாத புகழ் வாய்ந்த தெய்வத்தைப் போற்றினர். தம் நாட்டை உரிமையோடு வந்து ஆட்சி புரிகின்ற பாண்டிய மன்னனை வாழ்த்தினர்.

'குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி,
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்-
மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொன்னிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எங;கோ வாழியர், இம் மலர்தலை உலகே!' – (முல்லைக்கலி- 3-74-78)

பதிற்றுப்பத்து
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் துணங்கை, குரவை ஆகிய இரு கூத்துக்கள் பற்றிப் பேசப்படும் பாங்கினையும் காண்போம். பசுக்கள் கூட்டமாக மேயும் இடங்கள், ஆரல் மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் நிறைந்த வயல்கள், அங்கே எருமைகள் கிடந்து புரண்டு வயலைச் சேறாக்கி விதையிட ஏற்றதாக்கி வைத்துவிடும். கரும்புப் பாத்திகளில் நெய்தல் பூக்கள் பூத்துக் குலுங்கும். இவற்றை எருமைக் கூட்டம் உணவாக்கிக் கொள்ளும். இளமகளிர் ஆடும் துணங்கைக் கூத்தின் ஆரவார ஒலி ஒருபக்கம் கேட்டபடி இருக்கும்.

'தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்,
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங் கண் எருமை நிரை தடுக்குநவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்..  .. (13-1-5)

போரில் புறமுதுகு காட்டி ஓடாத பகைமன்னர் ஆற்றல் அழிந்து வீழ்ந்தனர். அவர்கள் உடலிலிருந்து செங்குருதி, மன்னன் சேரலாதன் மேல் தெறிக்க, அவன் சூடியிருந்த பனம்பூ மாலையும்,, அணிந்திருந்த வீரக் கழலும் இரத்தம் படிந்து புலால் நாற்றம் வீசப் போர்க் களத்தில் வீரர்களோடு துணங்கை என்னும் வெற்றிக் கூத்தாடினான்.

'ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்' – (57-1-4)


விரிந்து பரந்த விளைநிலமான வயல்களில் கதிர்களைத் தின்ன வரும் நாரைகளைத் துரத்திக் கலைக்க, பொன்னாற் செய்யப்பட்ட காதணிகளைக் கழற்றாமல், இரவும் பகலும் அடுத்தடுத்துள்ள இடங்களில் புதுமையான குரவைக் கூத்தாடி இன்புறுவர்.

'மருதம் சான்ற மலர் தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்,
குறும் பல் யாணர்க்கு குரவை அயரும்' – (73-8-11)

நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில், பரத்தை காரணமாகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் சிலநாட்களின் பின் மீண்டும் தலைவிமேல் மோகங்கொண்டு, பாணனைத் தூது விடுக்கின்றான். அதற்குத் தோழி, பாணனிடம் 'தலைவி, தலைவனை ஏற்பதற்கு விரும்பாள்' என அவன் வருகைக்கு மறுபு;புத் தெரிவித்தாள். தலைவன் குண்டலம் அணிந்து, கோதை சூடி, பல வளையல்களை அணிந்து, பெண்மைக் கோலம் தாங்கிச் சேரிப் பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடியிருந்தான் என்று மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் புலவர் பாடியுள்ளார்.

'அறியா மையின், அன்னை! அஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவுஅயர் துணங்கை தழூஉகம் செல்ல, ..'   -  (50-1-3)

சிலப்பதிகாரம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், ஆயர் சேரியில் பல தீய சகுனங்கள் தோன்ற, மாதரி முதலான ஆயர்மகளிர்கள் தம்குல தெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்தை ஆடலாயினர்.

'ஆயர் பாடியில் எருமன் றத்து ,
மாய வனுடன் தம்முன் ஆடிய                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
வால சரிதை நாடகங் களில்,
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
'குரவை ஆடுதும் யாம்' என்றாள்,'  - (17-28-32)

காவல் பூதத்து வாயிலிலே அமைந்த பலிபீடுகையில் புழுக்கலும்;, நிணச்சோறும், பூவும், புகையும், பொங்கலும் படைத்து மறக்குடி மகளிர் துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் ஆடுவர்.

'காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப், -
புழுக்கலும், நோலையும், விழுக்குடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து;
துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடிப்;'  - (5-67-70)

மை தீட்டிய நம் கண்கள் சிவக்குமாறு புதுப்புனலில் குடைந்து குடைந்து நீராடி மகிழ்ந்தோம். இனி, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபதுமனைக் கொன்ற வெற்றிவேல் ஏந்திய முருகனைப் போற்றிக் குரவை தொடுத்துப் பாடிக் கூத்தும் ஆடுவாராயினர் மறக்குடி மகளிர்.

'உரை இனி, மாதராய்! உண்கண் சிவப்பப்,
புரைதீர் புனல் குடைந்து ஆடினோம் ஆயின்,
உரவு நீர் மா கொன்ற வேல் ஏந்தி, ஏந்திக்,
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா, தோழி!' -  (24-43-46)

கலிங்கத்துப் பரணி
சோழ மன்னனாகிய முதற் குலோத்துங்கச் சோழ மன்னனுக்கும் (கி.பி. 1070-1120) வடகலிங்கத்து மன்னனாகிய அனந்தவன்மனுக்கும் இடையே நடந்த கலிங்கத்துப் போரில் சோழர் படையின் வெற்றியை எடுத்துக் கூறுவது கலிங்கத்துப் பரணியாகும். கலிங்கத்துப் பரணியில் பாட்டுடைத் தலைவன் முதற் குலோத்துங்கன் ஆவான். சயங்கொண்டார் (கி.பி.1070-1118)  கலிங்கத்துப் பரணியைப் பாடுவதற்கு முதற் குலோத்துங்க சோழனுடைய தலைமைப் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் எய்திய கலிங்க வெற்றியே காரணமாம்.  

பேய்களும் துணங்கைக் கூத்து ஆடுவதாகச் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறுகின்றார். போர் தொடுத்துள்ள செய்தி, பசியால் வாடித் துடிக்கும் பிணம் தின்னும் பேய்களுக்கு உணவு கிடைத்து விட்டது என்று ஆடிப்பாடி மகிழ்ச்சியடைந்தன. சில பேய்கள் தம் கைப் பிள்ளைகள் நிலத்தில் விழுந்து விடுமாறு பெரிய துணங்கைக் கூத்தை ஆடின. வள்ளைப் பாட்டைப் பாடியும், ஆடியும், ஓடியும் மற்றப் பேய்களைத் தம்முடன் விளையாட வருமாறும் கூப்பிட்டன.

'பிள்ளை  வீழ  வீழவும்
பெருந் துணங்கை கொட்டுமே;
வள்ளை, பாடி, ஆடி, ஓடி
'வா' என அழைக்குமே.'  -  (310)

முடிவுரை
இதுகாறும், புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி ஆகிய தமிழ் இலக்கியங்களில் துணங்கை, குரவை ஆகிய இரு கூத்துக்களைப் பற்றிய செய்திகளைக் கண்டு மகிழ்ந்தோம். ஆடவர் மது அருந்தி விட்டு, மகளிர்க்கு முதற் கை கொடுத்து இக் கூத்துக்களைத் தொடக்கி வைப்பர். அளவுக்கு விஞ்சிய மகிழ்ச்சி ஏற்படுங்கால் ஆடவரும், மகளிரும் இக்கூத்துக்களை ஆடி மகிழ்வர். யுத்த காலத்தில் மாற்றானை வென்ற பொழுதும் படையினர் தம்மை மறந்து துணங்கைக் கூத்தாடுவர். அன்று கூத்தாடும் அரங்குகளும் அமைத்து வைத்திருந்தனர். அன்று, ஆயர்கள், வேடர்கள், குறவர்கள் மிகுதியாகக் கூத்தாடி வந்துள்ளனர். துணங்கை, குரவை ஆகிய கூத்துக்களை நம் பண்டைத் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆடி வந்துள்ளார்கள் என்பதையும் அறியக் கூடியதாகவுள்ளது. இக் கூத்துக்கள் அன்றைய மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை மேம்படுத்திச் சீரிய நிலைக்கு வழியமைத்துள்ளமையும் தெளிவாகின்றது.


* கட்டுரையாளர்: -- நுணாவிலூர்  கா.  விசயரத்தினம்  (இலண்டன்)- -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 04 September 2016 05:09