ஆய்வு: பரிபாடல் காட்டும் தெய்வத்துவம்

Monday, 07 November 2016 00:08 -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது பரிபாடல் என்ற நூலாகும். 'பரிபாடல்' என்னும் பாவினத்தால் ஆகிய பாடல்களின் தொகுதி இந்நூலாகும். அதனால், பரிபாடல் என்ற பெயரை இந்நூல் பெற்றது. பண்ணமைதியான இப்பாக்களைப் பயபக்தியோடு மனமுருகிப் பாடியும் பயின்றும் வந்தனர். அதனால் இப்பாடல்களை 'ஓங்கு பரிபாடல்'  என்ற பெரும் புகழையும் பெற்றுக்கொண்டது. எட்டுத்தொகை நூல் விவரங்களை,

'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.'

என்ற வெண்பா உணர்த்துகிறது.


இப் பரிபாடல், தொகுக்கப்பட்ட காலத்தில் எழுபது (70) பாடல்களுடன் இருந்துள்ளது. இதனை,

'திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று – மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்.'

vன்னும் ஒரு பழம் செய்யுளால் அறியக்கிடக்கின்றது. இவற்றுள், இந்நாளில் 22 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. மற்றைய 48 பாடல்களும் காலத்தால் மறைந்து போயின. எஞ்சிய 22 பாடல்களையும் பண்களின் அமைப்பில் அமைத்துள்ளனர். இதன் முதற் பன்னிரு பாடல்களும் பாலையாழ் என்ற பண்ணிலும், அடுத்து வரும் ஐந்து பாடல்களும் நோதிறம் என்ற பண்ணிலும், அடுத்து வரும் நான்கு பாடல்களும் காந்தாரம் என்ற பண்ணிலும் அமைந்துள்ளன. இறுதிப்பாடலின் பண் தெரியவில்லை.

நூலின் பாடல்கள்

இப் பாடல்கள் தெய்வ வணக்கப் பாக்களாகவே அமைந்துள்ளன என்பர் பலர். குறிஞ்சியின் தெய்வம் முருகன், முல்லையின் தெய்வம் திருமால், பாலையின் தெய்வம் கொற்றவை என்னும் காடு கிழாள், மருதத்தின் மாதெய்வம் மதுரை, நெய்தற்கு வையையாகிய நீர்த்தெய்வம் ஆகியவற்றைக் கொண்டே இந்நூல் அமைந்துள்ளது என்பதும் தெளிவாகின்றது.

இந் நூலிலுள்ள இருபத்திரண்டு (22) பாடல்களில், முதற் பாடல் பாடியவர் பெயர் தெரியவில்லை, ஆறு பாடல்கள் (அவை 1, 2, 3, 4, 13, 15) திருமாலைப் பற்றியவைகளாகும். இவற்றை இளம்பெரு வழுதியார் (பாடல் 15), கடுவன் இளவெயினனார் (பாடல் 3, 4), கீரந்தையார் (பாடல் 2), நல்லெழுநியார் (பாடல் 13) என்னும் சான்றோர்கள் பாடியுள்ளனர்.
செவ்வேளைப் பற்றி எட்டுப் (5, 8, 9, 14, 17, 18, 19, 21) பாடல்கள் உள்ளன. இவற்றை கடுவன் இளவெயினனார் (பாடல் 5), நல்லந்துவனார் (பாடல் 8, 9), கேசவனார் (பாடல் 14), நல்லழுசியார் (பாடல் 17), குன்றம்பூதனார் (பாடல் 18), நப்பண்ணனார் (பாடல் 19), நல்லச்சுதனார் (பாடல் 21) ஆகியோர் பாடியுள்ளனர்.

வையை பற்றி எட்டுப் (6, 7, 10, 11, 12. 16, 20, 22) பாடல்கள் உள்ளன. அதில் 22ஆம் பாடலைப் பாடியவர் பெயர் மறைந்து விட்டது, மற்றையவற்றை நல்லந்துவனார் (பாடல் 6, 11, 20), கரும்பிள்ளை பூதனார் (பாடல் 10), நல்வழுதியார் (பாடல் 12), மையோடக் கேவனார் (பாடல் 7), நல்லழுசியார் (பாடல் 16) ஆகியவர்கள் பாடியுள்ளனர்.

பரிபாடல் பற்றித் தொல்காப்பியம்.

பரிபாடலாவது தொகைநிலை வகையால்  பா இது என்று சொல்லப்பெறும் இலக்கணம் இல்லாமல் எல்லாப் பாவிற்கும் பொதுவாக நிற்பதற்கும் உரியதாய், இன்பப் பொருளைப்பற்றிக் கூறும் என்பர்.

 

'பரிபா டல்லே தொகைநிலை வகையின்
இதுபா என்னும் இயல்நெறி  இன்றிப்
பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப.' -  (பொருள். 425)

பரிபாடல், பாட்டுப் பொதுவாய் நிற்றலே யல்லாமல் கொச்சகமும், அராகமும், சுரிதகமும், எருத்தும் என்று கூறப்பட்ட நான்கும் தனக்கு உறுப்பாகக் காமப்பொருளைக் கூறும் தன்மையை உடைத்தாம். அது, அறத்தினும் பொருளினும் வராது. கொச்சகம் என்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும், ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்னும் அறுவகை அடியானும் அமைந்த பாக்களை உடைத்தாகி, வெண்பாவியலாற் புறப்படத் தேன்றுவதாம். அராகம் என்பது ஈரடியானும், பல வடியானும் குற்றெழுத்து நெருங்கிவரத் தொடுப்பது. பெருமைக்கு எல்லை ஆறடியாம். சுரிதகம் என்பது ஆசிரியவியலானாதல், வெண்பாவியலானாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது. எருத்து என்பது இரண்டடி யிழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோர் உறுப்பாம்.

'கொச்சகம் அராகஞ் சுரிதகம் எருத்தொடு
செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக்
காமங் கண்ணிய நிலைமைத் தாகும்.' – (பொருள். 426)

பரிபாடற் செய்யுள் நானூறடி (400) உயர்வாகவும், இருபத்தைந்தடி (25) இழிபாகவும் வரும் என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.
'பரிபா டல்லே
நாலீ ரைம்ப துயர்படி யாக
ஐயைந் தாகும் இழிபடிக் கெல்லை.'  -  (பொருள். 464)

பரிபாடல் பற்றி இவ்வாறான தொல்காப்பியர் கூற்றால; எழுபது (70) பாடல்களுடன் தொல்காப்பியர் காலத்தில் ஒரு பரிபாடல் நூல் இருந்துள்ளமை புலனாகின்றது. மேலும், தலைச் சங்க காலத்தில் 4,449 புலவர்கள் இருந்து அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகியவை அவர்கள் யாத்த நூல்களிற் சிலவாகும். தலைச் சங்கத்தில் எழுந்த நூல்கள் அத்தனையும் கடலன்னையுடன் சங்கமம் ஆகியுள்ளது.

'பரிபாடற்கண் மலையும், யாறும், ஊரும் வருணிக்கப்படும்.' என்பர் இளம்பூரணர்.

'அறம், பொருள், இன்பம், வீடென்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள், இன்பத்தையே பொருளாகக்கொண்டு கடவுள் வாழ்த்து, மலைவிளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வரும்.' என்பர் பேராசிரியர்.

'தெய்வ வாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து உலகியலே பற்றி வரும்.' என்பர் நச்சினார்க்கினியர்.

மதுரையின் சிறப்பு

இப் பரிபாடல்கள் மதுரையையும், மதுரைக்கு வளமும், அழகும், காப்பும் கொடுக்கும் வையையையும், மதுரையை அண்டிய திருப்பரங்குன்றத்துச் செவ்வேளையும், திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும், கொற்றவையையும் பாடுவனவாக அமைந்துள்ளதையும் காண்கின்றோம்.

வையையே! ஆரவாரமும் பழமைச் சிறப்பும் கொண்ட மதுரைப் பேரூர் மக்களுக்கு இன்பமும் அழகுமாகிய நன்மைகள் பலவற்றைத் தருகின்றனை. அதனால், பரந்த இடத்தையுடைய இவ்வுலகும் நின் புகழின் பரப்புக்கு அடங்காததாகும்!. வையை நதி மதுரை நகருக்கும் பாண்டிய நாட்டுக்கும் வளத்தையும், இன்பத்தையும் தருகின்ற புகழை உடையது எனலாம்.

'.. இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்
நன்பல நன்பல நன்பல வையை
நின்புகழ் கொள்ளாதிம் மலர்தலை உலகே!' – (பாடல் (12)-100-102)

அறிவியல்

'நெருப்பு, காற்று, வான், நிலம், நீர் ஆகிய ஐம்பெரும் பூதங்கள்; சூரியன், சந்திரன் என்னும் இரண்டும் ஒளிதரும் பெருஞ்சுடர்கள்; அறம், பொருள், இன்பம் என்னும் அறநெறியின் தலைவனான அறவோன்; செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பவர் ஐந்து கோள்களுக்கு உரியோர்; திதியின் பிள்ளைகள் அசுரர் என்போர்; விதியின் மக்கள் ஆதித்தர் பன்னிருவர்: வசுக்கள் எண்மரும் குற்றமற்றவர் எனப் போற்றப்படுபவர்; உருத்திரர்கள் பதினொருவர்; அசுவினி தேவர்கள் இருவர்; தருமதேவன் ஒருவர்; அவன் ஏவலை மேற்கொண்டு உயிர் உண்ணுவது கூற்றம்; மேல் கீழ் நடுவென்னும் முந்நிலைகளில் ஏழேழாக அமைந்த உலகங்கள் இருபத்தொன்று; இவ்வுலகங்களில் வாழ்வன எண்ணற்ற உயிர்கள்; இவை அனைத்துமாகத் திகழ்பவன் மாயோனே!' என்று அறிவியல் பேசுவதைப் பரிபாடலிற் காண்கின்றோம். 
'..தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்.
ஞாயிறும் திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசில் எண்மரும், பதினொரு கபிலரும்,
தாமா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூவேழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து,...' – (பாடல். (3)-4-11)

எண்ணியல்

நீரின் ஊழிக் காலத்தில் இவ்வுலகம் மூழ்கிக் கிடந்தது. திருமால் மூழ்கிக் கிடந்த உலகினை வெளிக்கொணர்ந்து மீண்டும் நிலைப்படுத்தினார். இப்படித் தோன்றிய ஊழிக் காலம் பின்னரும் பலகாலங்கள் அவ்வாறே கிடந்து வந்தது. நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், குற்றமற்ற கமலம், வெள்ளம் என்று சொல்லப்படும் பேரெண்களின் அளவான காலங்கள் பலவும் அப்படியே கழிந்தன. நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பன பேரெண்கள், கோடிக்கும் மேற்பட்டவை. எண் சார்ந்த கணக்கியல் பரிபாடலில் காண்கின்றோம்.

'.. உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்,
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழுப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய .. ..' – (பாடல். (2)-10-16)

வல்லது புனல்

'தன் கணவன்மீது, அழகுடையாள் ஒருத்தி அன்பு செலுத்தக் கண்டாள், அவன் தலைவி. கண்டதும் அவள் சினந்து கொண்டாள். மணம் வீசும் மாலையால் அவளைப் புடைத்தாள். தன் மார்பிடத்துப் பொன்னரி மாலையை எடுத்து, அவன் கைகளை இறுக்கமாகக் கட்டினாள். அவனைப் பற்றி இழுத்து 'நீதான் அவளை ஏமாற்றினை போலும்? நீ என்ன தவறு செய்தாய்?' என்று சீறினாள். அவனோ, தவறேதும் செய்யாத தூயவன். எனினும், அவன் தன் தலைவியைத் தொழுது, 'நின் சினத்துக்கு யான் செய்த தவறுதான் யாதோ?' எனப் பணிவோடு கேட்கின்றான்.'

'நின்னை ஒருத்தி காதலோடும் பார்த்தாள்.' என்று தலைவி சொன்னாள். 'அவள் என்னாற் பொய்ச்சூளுரைத்து ஏமாற்றப்பட்டவள் அல்லள். அவளை யான் கண்டும் அறியேன்' என்று கூறி, அவன் தலைவியை இரந்து நின்று, 'மெய்யாகச் சூளுரைக்கின்றேன்' என்றும் கூற, அவள் மேலும் சினங்கொண்டு அவனை ஏசினாள். அவன;, அவளை வெறுக்காது, தெளிவிக்க முயன்றும் பலன் கிட்டவில்லை. அவள் அவனைத் தழுவாது, ஊடி நின்று, வண்ணநீர் நிரம்பிய வட்டினை அவன்மேல் வீசி எறிந்தாள். இருந்தும் அவன் அவள்மேல் இரக்கங்கொண்டு, உள்ளம் சோர்ந்து, அவளருகில் நில்லாது அகன்று, தரையில் வீழ்ந்தான். இதைக் கண்டவள் வருந்தினாள், மயக்கம் கொண்டு கோபம் தணிந்து, அவன் மார்ப்பைத் தழுவிக்கொண்டாள். இவ்வாறு, ஊடியவரையும் ஒன்றாகச் சேர்க்கும் வல்லமை கொண்டது வையைப் புனல் என்று கண்டோர் பேசிக்கொண்டனர்.

'.. அமிர்தன நோக்கத்து அணங்கொருத்தி பார்ப்பக்
கமழ்கோதை கோலாப் புடைத்துத் தன்மார்பில்
இழையினைக் கையாத்து இறுகிறுக்கி வாங்கிப்
பிழையினை என்னப் பிழையொன்றும் காணான்
தொழுது பிழைகேட்கும் தூயவனைக் காண்மின்!
பார்த்தாள் ஒருத்தி நினையெனப் பார்த்தவனைப்
பொய்ச்சூளாள் என்பது அறியேன்யான் என்றிரந்து
மெய்ச்சூள் உறுவானை மெல்லியல் பொய்ச் சூளென்று
.. .. புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூவெழில் வண்ணநீர் பூரித்த வட்டெறிய
.. .. நில்லாது நீங்கி நிலஞ்சோர அல்லாந்து
மல்லார் அகலம் வடுவஞ்சி மம்மர்கூர்ந்து
எல்லாத் துனியும் இறப்பத்தன் காதலன்
நல்லேர் எழிலாகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
வல்லதால் வையைப் புனல்.' – (பாடல் (12)-57-75)

வையையின் இயல்பு.

ஊடுதலும். கூடுதலும், அச்சந்தரும் சிறு பிரிவும் ஆகிய இம்மூன்றுடனும் சேர்ந்த காமத்தையும் கள்ளையும் ஒன்றாகக் கலந்து, அனைவரும் பாராட்டுமாறு அளிப்பது வையைப் புது நீர்வரவு தாம் விரும்பும் அன்புடையாரோடு சென்று புனலாடும் பொருட்டு, அவரைத் தம்முள் சேர்த்து வைத்தலும் பூக்களால் மிகுந்த வையைப் புதுநீர்க்கு இயல்பாகும். 'ஆகவே, நின்னைப் பிரிந்து அப்பயனைப் பெறாது வாடியிருக்கும் நின் தலைவியை இன்புறுத்த நீயும் கருதினையானால், நீயும் இப்போதே புறப்படுவாயாக!' என்பதாம்.
'நாமமர் ஊடலும் நட்பும் தணப்பும்
காமமும் கள்ளும் கலந்துடன் பாராட்டத்
தாமமர் காதலரொ டாடப் புணர்வித்தல்
பூமலி வையைக் கியல்பு!' -  (பாடல் (20)-108-111)

முழவும் பறையும்

பரிபாடலில், தலைமகன் தலைமகளோடு வையையில் புதுப்புனலில் ஆடி மகிழ்ந்தான். ஆங்கே, உழவர்கள் களிப்பினாலே ஆடி மகிழவும், முழவுகளும;> பறைகளும் ஒலிக்கப் புதுப்புனல் விழாப் பொலிவோடு நடந்தது. ஆடற்கலை அறியா ஓர் அரிவை தாறுமாறாக ஆடிவருவதைப் போலவும், ஊடற் கலையை நன்கறியா ஓரு பெண், உவகைமிக்காளாய்ச்> செருக்கோடு செல்வதுபோலவும், புதுவெள்ளம் தன்போக்கிற் செருக்குடன் சென்றது என்று பாடல் தொடர்கின்றது.

'.. உழவர் களிதூங்க முழுவு பணைமுரல
ஆட லறியா அரிவை போலவும்
ஊட லறியா உவகைகள் போலவும்
வேண்டுவழி நடந்து  ..  .. .. ' - (பாடல் (7)-16-19)

இன்னொரு பாடலில், கார்காலத்துக்குமுன் வந்து விடுவேனென்று கூறிச் சென்ற தலைவன் வந்தானில்லை. அதனால் தலைவி துயருற்றாள். மலைப்பகுதியில் பெருமழை பெய்து, வையையில் புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடியது. காவலர்கள் உடைகரைகளை அடைக்க வருமாறு ஊரவரை அழைக்கப் பறையறைதலின் முழக்கமும் எழுந்தது.

' .. மாந்தீந் தளிரொடு வழையிலை மயக்கி
ஆய்ந்தளவா ஓசை அறையூஉப் பறையறையப்
போந்தது வையைப் புனல், .. .. ..' – (பாடல். (10)-6-8)

கோதையும் தாரும்

மக்கள் புதுநீர் ஆடுவதற்கு வையை நதியை நாடிச் சென்றனர். மகளிர் அணிதற்குரிய கோதைகளை மைந்தர் அணிந்து கொண்டனர். மைந்தர் அணிதற்குரிய குளிர்ந்த மாலைகளை மகளிர் சூடிக்கொண்டனர். அனைவரும் தாம்தாம் முந்திச் செல்லவேண்டும் என்ற விருப்பத்தால், அணிகளை அணியும் முறைகளையும் மறந்து, முறை மாற்றி அணிந்தவராக விரைந்து சென்றனர். 

'.. மகளிர் கோதை மைந்தர் புனையவும்
மைந்தர் தண்தார் மகளிர் பெய்யவும்
முந்துறல் விருப்பொடு முறைமறந் தணிந்தவர் ..' -  (பாடல் (20)-20-22)                         

பூப்பெய்தினாள்

இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின்மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பைபோல் விளங்கிய அப் பரத்தையின் மார்பகத்தில்மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக்கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான். அவன் வருவதைத் தோழியர் கண்டனர். 'அவளைத் தழுவாதே! அவள் பூப்பெய்தினாள். அவளை விட்டு விலகு!' என்று பொய் கூறினர். அவன் இவர்கள் கூற்றை நம்பாது, அவளோடு சேர்ந்து அவள் வீட்டுக்குச் சென்றான். அங்கு சென்றதும், அவள் மார்பிடத்துச் செந்நிறக் கறையைத் துடைப்பதற்கு அவளை நெருங்கினான். அவ்வளவில் அவர்களைத் தொடர்ந்து வந்த அவள் தோழியர், மீண்டும், 'நங்கை பூப்புற்றாள்! அவள் பொலிவு பெறுக!'  என வாழ்த்தொலி செய்தனர். அதனைக் கேட்டு அவ்விருவரும் நாணி நின்றனர். இத்தகைய களிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் வையையாற்றின்கண் புதுவெள்ளம் வந்ததனாலே வாய்பதாயிற்று.

'சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பை முலைபட்ட பூநீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே
இருந்துகில் தானையின் ஒற்றிப் பெருந்தலை
பூத்தனள் நீங்கெனப் பொய்யாற்றால் தோழியர்
தோற்றமோ ரொத்த மலர்கமழ் தண்சாந்தின்
நாற்றத்தின் போற்றி   நகையொடும் போத்தந்து,
இருங்கடற்கு ஊங்கிவரும் யாதெனத் தங்கான்
மகிழக் களிப்பட்ட தேன்தேறல் மாற்றிக்
குருதி துடையாக் குறுகி மருவினியர்
பூத்தனள் நங்கை பொலிகென நாணுதல்
வாய்த்தன்றால் வையை வரவு. ..'   -  (பாடல் (16)-20-31)

முடிவுரை

பரிபாடல் நூலில்,  நூலின் பாடல்கள், பரிபாடல் பற்றித் தொல்காப்பியம், மதுரையின் சிறg;பு, அறிவியல், எண்ணியல், வல்லது புனல், வையையின் இயல்பு, முழவும் பறையும், கோதையும் தாரும், பூப்பெய்தினாள் என்ற பத்துத் தலைப்பில் பல செய்திகள் அலசப்பட்டதைப் பார்த்தோம். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய நிலத்தின் தெய்வங்களான முருகன், திருமால், கொற்றவை, மதுரை மாதெய்வம், நீர்த்தெய்வம் ஆகியவற்றையும் பார்த்தோம். தீ, வளி, விசும்பு, நிலம், நீர் ஆகிய ஐம்பெரும் பூதங்கள், ஞாயிறும் திங்களும் ஆகிய ஒளிதரும் பெருஞ்சுடர்கள், செவ்வாய், புதன், வியாளன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கோள்கள், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் ஆகிய பேரெண்கள் ஆகியவை பற்றியும் விரிவு படுத்திப் பார்த்தோம். இன்னும், தலைவன், தலைவி, பரத்தை ஆகியோர் வையையிற் புதுநீராடி, ஊடியும், கூடியும், இன்புற்றிருந்ததையும் பார்த்து மகிழ்ந்தோம். இவ்வண்ணம் பரிபாடல் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாய் மிளிர்வதையிட்டுத் தமிழர் ஆகிய நாம் பெருமைப்படல் வேண்டும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 07 November 2016 00:12