தொல்காப்பியர் காட்டும் ஐந்திணைகளின் அமைப்பும் அவற்றின் எழிலும்

Thursday, 08 December 2016 21:41 -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பண்டைத் தமிழ் ஆன்றோரும், சான்றோரும் தம்வாழ்வியலை அகம், புறம் என இருவகைப் படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அகம் என்ற அகவாழ்வில் எழும் காதலன்பு, அன்பின் எழுச்சி, நெறியோடு சேர்ந்த வாழ்வின் தகைமை ஆகியவை இப்பகுதியிற் பேசப்படுவதைக் காணலாம். புறம் என்ற புறவாழ்வில் மேற்கொள்ளவேண்டிய முறைகள், ஆண்மை சார்ந்த பணிகள், போரியல் மரபு, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகள் ஆகியவை இப்புறத்திற் கூறப்படுவதைக் காண்கின்றோம். அகம் என்ற பகுதியை ஒருதலைக் காமம் என்றும், அன்புடைக் காமம் என்றும், பொருந்தாக் காமம் என்றும் மூன்று பகுதிகளாகக் காட்டுவர். இன்னும் இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் தொல்காப்பியர்  (கி.மு.711) ஏழு (07) திணைகளை எடுத்துக் காட்டுவர்.

'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.'  - (பொருள். 01)

மேற்கூறப்பட்ட ஏழு திணைகளுள், நடுவென்று கூறப்பட்ட பாலைத்திணை ஒழியக், கைக்கிளை பெருந்திணைக்கு நடுவாகி நின்ற ஐந்திணைகளும், கடல்சூழ்ந்த உலகம் பகுக்கப் பட்டிருக்கும் இயல்பாகும்.

'அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.' -  (பொருள். 02)

மேற்காட்டிய 'நடுவண் ஐந்திணை' – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம்.

பெரியோரின் செய்யுளை ஆராய்ந்தால், முதற்பொருள் எனவும், கருப்பொருள் எனவும், உரிப்பொருள் எனவும் கூறப்பட்ட மூன்று பொருள்களுமே காணப்பெறும் என்று தொல்காப்பியர் சூத்திரம் கூறும்.

'முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை.' – (பொருள். 03) முதற்பொருள் என்பது, நிலமும், பொழுதும் என்னும் இவற்றினையொட்டி அமையும் ஒழுக்கங்களாகும். 'நிலம்' என்பது குறிஞ்சியும், முல்லையும், பாலையும், மருதமும், நெய்தலும் ஆகிய ஐந்தாம். பொழுது என்பது, அந்த ஐவகை நிலத்தையும் சார்ந்துள்ளோரின் காமவுணர்வினைக் கிளர்ந்து எழச்செய்யும் பெரும்பொழுதும், சிறுபொழுதும் ஆகிய இரண்டுமாம். இதைத் தொல்காப்பியர் கூறும் ஒரு சூத்திரத்தில் காண்போம்.

'முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.'  - (பொருள். 04)

கருப்பொருள் என்பது, அவ்வத் திணைகட்கு உரியனவாகவும், அவற்றின்கண் உள்ளனவாகவும் விளங்கும் தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் ஆகிய  பதினான்கும் (14) எனக் காட்டுவர் தொல்காப்பியர்.

'தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப.'  - (பொருள். 20)

உரிப்பொருள் என்பன, உள்ளத்தே மனவுணர்ச்சியின் உந்துதலால் எழும் புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் ஆகியவற்றைத் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுவர்.

'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' – (பொருள். 16)

இனி, ஐந்திணைகளின் அமைப்புகளையும், அவற்றின் சிறப்பியல்புகளையும் தனித்தனியே பிரித்து ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்காகும்.

குறிஞ்சித்திணை:- இதில் மலையும், மலைசார்ந்த இடமும,; இயற்கைச் செவ்வியிற் சிறந்தனவாய், இயற்கை வளங்கள் நிறைந்தனவாய், இளம் பருவத்தினர் உலாவும்  திணையாய்க் காட்சி தரும். முருகவேளின் காத்தலைக் கொண்ட உயர்ந்த மலையாகிய இடமெனச் 'சேயோன் மேய மைவரை உலகமும்' (தொல். பொருள். 05) என்று தொல்காப்பியம் கூறும். குறிஞ்சியில் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் நிகழ்வனவாம். தனித்து வேட்டைமேற் செல்லும் இளைஞன், புனங்காத்துத் தனித்திருக்கும் கன்னி ஒருத்தியைக் கண்டு காதலுற்று ஒன்றுபடுவான். இதற்கேற்ற நிலைக்களனும், துணிவும், அமைந்துள்ளது குறிஞ்சித் திணையிலாகும்.

குறிஞ்சிக்கு உயர்ந்தோர்- பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வேம்பன், கொடிச்சி;, தாழ்ந்தோh;-; குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், இறவுளர், குன்றுவர், வேட்டுவித்தியர், குன்றுவித்தியர், புள்- கிளி, மயில், விலங்கு- புலி, கரடி, யானை, சிங்கம், ஊர்- சிறுகுடி, நீர்- அருவிநீர், சுனை நீர், பூ- வேங்கை, குறிஞ்சி, காந்தள், மரம்- சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில், உணவு- மலைநெல், மூங்கில் அரிசி, தினை, பறை- தொண்டகப்பறை, முருகியம், யாழ்- குறிஞ்சி யாழ், பண்- குறிஞ்சிப் பண், தொழில்- வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல்,  தேனழித் தெடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், அருவிநீர் சுனைநீர் ஆடல் ஆகியவை குறிஞ்சியின் கருப்பொருள்களாம்.

குறிஞ்சித்திணைக்குப் பெரும்பொழுதாகக் கூதிரும் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்), முன்பனிக் காலமும் (மார்கழி, தை மாதங்கள்), சிறுபொழுதாக யாமமும் (இரவின் நடுக்கூறு) என்று கூறுவர் தொல்காப்பியர்.
'குறிஞ்சி,
கூதிர் யாமம் என்மனார் புலவர். – (பொருள். 07)
பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.' – (பொருள். 08)

முல்லைத்திணை:- இத்திணையில் காடும், காடு சார்ந்த இடமும் அடங்கும். இந் நிலத்து ஆயர்களில,; ஆடவர் நிரைமேய்த்தலை மேற்கொண்டு பகற்பொழுதெல்லாம் காட்டிடத்தே சென்றிருத்தலும், மகளிர் பாற்பயனைக் கொண்டு விலைமாறி வருதலும் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டி நிற்பர். ஏறு தழுவி வெல்வோனுக்கே தம் மகளைத் தரும் மரபும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான அம்சங்களாகும். இதனால், இத்திணையில் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் இங்குள்ளோர் மத்தியில் குடிகொண்டுள்ளன. திருமால் அல்லது நெடுமால் காத்தலைக் கொண்ட காடாகிய இடமென இத்திணையை 'மாயோன் மேய காடுறை உலகமும்' (பொருள். 05) என்று தொல்காப்பியர் கூறுவர்.

முல்லைக்கு உயர்ந்தோர்:- குறும்பொறைநாடன், அண்ணல், தோன்றல் மனைவி, கிழத்தி, தாழ்ந்தோர்:- இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர், பொதுவியர், கோவித்தியர், புள்:- சிவல், காட்டுக்கோழி, விலங்கு:- மான், முயல், உழை, புல்வாய், ஊர்:- பாடி, சேரி, பள்ளி, நீர்:- குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர், பூ:- முல்லைப் பூ, குல்லைப் பூ, தோன்றிப் பூ, பிடவம் பூ, மரம்:- கொன்றை, காயா, குருந்தம், உணவு:- வரகு, சாமை, முதிரை, பறை:- ஏறுகோட்பறை, ஏறங்கோட் பறை, யாழ்:- முல்லை யாழ், பண்:- சாதாரி, தொழில்:- சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல், அவற்றை அரிதல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல், மூவின மேய்த்தல், கொல்லேறு  தழுவுதல், குரவைக் கூத்தாடல், கான்யாற்றில் ஆடல் ஆகியவை முல்லையின் கருப்பொருள்களாகும்.

முல்லைத்திணைக்குப் பெரும்பொழுதாகக் காரும் (ஆவணி, புரட்டாதி மாதங்கள்.), சிறுபொழுதாக மாலையும் (இரவின் முற்கூறு) என்று எடுத்துக் காட்டுவர் தொல்காப்பியர்.

'காரும் மாலையும் முல்லை.' – (பொருள். 06) 

பாலைத்திணை:- குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல் ஆகிய திணைகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது போல், பாலைத்திணைக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை. பாலை என்பது, காலப்போக்கில் குறிஞ்சியிலும், முல்லையிலும் சில பகுதிகள் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிய நிலத்தைக் குறிப்பதாகும். இன்னும் பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரத்தில் காண்போம்.

'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்,
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.' – (காடுகாண் காதை. 64-66)

இதனையொட்டியே பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாகிய பெருந்துயரத்தை இத்திணைக்கு உரிமைப்படுத்தினர் எனலாம். ஆறலை கள்வரும், கொலையும், துன்பமும், வெம்மையும் இந்நிலத்தின் சிறப்பான தன்மைகளாம். பாலையைக் காக்கும் தெய்வமாக துர்க்கை அல்லது கொற்றவை உள்ளதையும் காண்கின்றோம்.

தலைமகனைப் பிரிதலும், தலைமகளை உடன்கொண்டு தமரைப் பிரிதலுமாகிய இருவகைப் பிரிவும் பாலைக்குரிய பொருளாகும் என்று புலவர் கூறுவர். இதைத் தொல்காப்பியர் பின்வருமாறு செப்புவர்.
'இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
உரியதாகும் என்மனார் புலவர்' – (பொருள். 13)

பாலையின் கருப்பொருள்களாக உயர்ந்தோர்:- விடலை, காளை, மீளி, எயிற்றியர், தாழ்ந்தோர்:- எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், புள்:- புறா, பருந்து, எருவை, கழுகு, விலங்கு:- வலியழிந்த யானையும், வலியழிந்த புலியும், வலியழிந்த செந்நாயும், ஊர்:- குறும்பு, பறந்தலை, நீர்:- நீரில்லாக் குழி, நீரில்லாக் கிணறு, அறுநீர்க் கூவலும், அறுநீர்ச் சுனையும், பூ:- குரா அம்பூ, மரா அம்பூ, பாதிரியும், மரம்:- உழிஞை, பாலை, ஓமை, இருப்பை, உணவு:- வழியிற்பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள், பறை:- துடி, ஆறலைப் பறையும், சூறைகோட் பறையும், யாழ்:- பாலையாழ், பண்:- பாலை, பஞ்சுரம், தொழில்:- போர் செய்தல், பகற் சூறையாடுதல் ஆகியன கூறப்பட்டுள்ளன.

பாலைத்திணைக்குப் பெரும்பொழுதாக இளவேனிலும் (சித்திரை, வைகாசி மாதங்கள்), முதுவேனிலும் (ஆனி, ஆடி மாதங்கள்), பின்பனியும் (மாசி, பங்குனி மாதங்கள்), சிறுபொழுதாக நண்பகலும் எடுத்துக் காட்டுவர் தொல்காப்பியர்.

'நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.' – (பொருள். 11)

'பின்பனி தானும் உரித்தென மொழிப.' – (பொருள். 12)

மருதத்திணை:- வயல் வளமும், நீர்வளமும் மிகுந்த பகுதி மருதம் ஆகும். பெருநிலக் கிழார்களும் அவர்களைச் சார்ந்து வாழும் பிற மக்களும் வாழும் ஊர்கள் பல செறிந்தது மருதம் என்பர். இங்கு வாழும் மக்கள், தம் வளமையால், காமத்தில் இறங்கிப் பரத்தமை கொள்வதும் நிகழ்வதாம். கற்புடைய தலைவியை அவனால் மறக்கவோ, வெறுக்கவோ முடியவில்லை. அவள்தான் தன் குடிமரபை வாழ்விப்பவள், காப்பவள் என்பதை அவன் உணர்வான். இதனால், அவள் ஊடி நிற்பாள். இருந்தும், ஊடியும் கூடியும் நிற்பது சகசமாகும். இது கண்டே ஊடலையும், ஊடல் நிமித்தத்தையும் மருதத்திற்கு உரிமையாக்கினர் ஆன்றோரும், சான்றோரும். இந்திரனின் (வேந்தன்) காத்தலைக் கொண்ட நன்னீர் பொருந்திய வயலாகிய மருதத்தை 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'- (பொருள். 05) என்று சூத்திரம் அமைத்தார் தொல்காப்பியம்.

மருதத்திற்கு உயர்ந்தோர்:- ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, மனையோள், தாழ்ந்தோர்:- உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், புள்:- வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா, நீர்க்கோழி, விலங்கு:- எருமை, நீர்நாய், ஊர்:- பேரூர், மூதூர், நீர்:- கிணற்று நீர், ஆற்று நீர், பொய்கை நீர், பூ:- தாமரைப்பூ, கழுநீர்ப்பூ, மரம்:- காஞ்சி, வஞ்சி, மருதம், உணவு:- செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி, பறை:- நெல்லரி பறை, மணமுழவு, யாழ்:- மருத யாழ், பண்:- மருதப் பண், தொழில்:- விழாச் செய்தல், வயற்களை கட்டல், நெல் அரிதல், கடா விடுதல், குளம் குடைதல், புது நீராடல் ஆகியன இத்திணையின் கருப்பொருள்களாகக் காட்டப்பட்டுள்ளன.
மருதத்திணைக்குப் பெரும்பொழுதாக ஆறு பருவங்களான வைகறைக் காலமும் (இரவின் பிற்கூறு - 12 மாதங்கள்), சிறுபொழுதாக விடியலும் (பகற்பொழுதின் முற்கூறு) என்று சூத்திரம் அமைத்துக் காட்டுவர் தொல்காப்பியர்.

'வைகறை விடியன் மருதம்.' – (பொருள். 09)

நெய்தல் திணை:- கடலும், கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். கடலை வென்று, கடல்வளத்தைப் பயன் படுத்தும் ஆற்றல் மிகுந்த மக்கள் வாழும் இடமாகும். கடற்சோலை, அதன் வளம், மணல் மேடு ஆகியன மக்களை ஈர்ந்து நிற்கின்றன. கடலிற் கப்பல் செலுத்தும் தமிழரின் பழம் பெருமையையும், கடலாற் பெறும் உப்பும், மீனும் கொண்டு தம் வாழ்வை வகுத்துள்ள இயல்பினையும், மக்கள் மத்தியில் எழும் காதல் நிலைகளையும் இங்குக் காணலாம். மீன் வளம் நாடிக் கடலிற் செல்வர் ஆடவர். அவர் குறித்த பொழுதில் வராதவிடத்தில் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் காட்டி வருந்தி நிற்பர் அவர் மகளிர். இதனால் இத்திணைக்கு இரங்கலையும், இரங்கல் நிமித்தத்தையும் உரிப்பொருளாகக் காட்டப்பட்டுள்ளது. வருணனின் காத்தலைக் கொண்ட மிகுந்த மணல்பொருந்திய கடற்கரையான நெய்தலை 'வருணன் மேய பெருமணல் உலகமும்' – (பொருள். 05) என்று சூத்திரம் அமைத்தார் தொல்காப்பியர்.

நெய்தற்கு உயர்ந்தோர்:- சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கன், துறைவன், புலம்பன், தாழ்ந்தோர்:- நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர், திமிலர், புள்:- கடற் காகம், அன்னம், அன்றில், விலங்கு:- சுறாமீன், உமண், பகடு, ஊர்:- பாக்கம், பட்டினம், நீர்:- உவர்நீர்க்கேணி, கவர்நீர், மணற்கிணற்று நீர், பூ:- நெய்தல் பூ, தாழம் பூ, மூண்டகப் பூ, அடம்பம் பூ, கைதை, நெய்தல், மரம்:- கண்டல், புன்னை, ஞாழல், உணவு:- மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள், பறை:- மீன் கோட்பறை, நாவாய்ப் பம்பை, யாழ்:- விளரி யாழ், பண்:- செவ்வழிப்பண், தொழில்:- மீன் பிடித்தல், உப்புண்டாக்கல், அவை விற்றல், மீன் உணக்கல், அவற்றை உண்ணவரும் பறவைகளை ஓட்டுதல், கடலாடுதல் ஆகியன இத்திணையின் கருப்பொருள்களாகக் காணலாம்.
நெய்தல் திணைக்குப் பெரும்பொழுதாக ஆறு பருவங்களையும் (12 மாதங்கள்),  சிறுபொழுதாக எற்படு காலமும் (பகற்பொழுதின் பிற்கூறு) என்று காட்டுவர் தொல்காப்பியர்.

'எற்பாடு, நெய்தல் ஆதல்; மெய்பெறத் தோன்றும்.' – (பொருள். 10)
நிறைவாக.
அறம், புறம் அமைத்து, ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் ஆகிய மூன்றும் காட்டி, மேலும் அவற்றைக் கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் ஏழு திணைகளை அமைத்து, அதில் அன்பின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எடுத்துரைத்து, அத் திணைகள் ஐந்திற்கும் நிலம், பொழுது (பெரும் பொழுது, சிறு பொழுது) வகுத்து, திணைகள் ஐந்திற்கும் உள்ள கருப்பொருள்களாக தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் (14) எடுத்துக் காட்டி, ஐவகை நிலங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் எழும் புணர்தலும், புணர்தல் நிமித்தமும், இருத்தலும், இருத்தல் நிமித்தமும், பிரிதலும், பிரிதல் நிமித்தமும், ஊடலும், ஊடல் நிமித்தமும்,  இரங்கலும், இரங்கல் நிமித்தமும் ஆகிய பத்துவகை உரிப்பொருள்களையும் அமைத்துக் காட்டிய தொல்காப்பியர் மக்களின் வாழ்வியலை மனத்தில் இருத்திச் செயற்பட்டார் என்பது தௌ;ளத் தெளிவாகின்றது. இதனால் அவர் இன்றும் தமிழ் மக்களின் மனத்தில் பதிவாகியுள்ளார்.

Last Updated on Thursday, 08 December 2016 21:43