கீழ்க்கணக்கின் அகநூல்கள் கூறும் அகவாழ்வியல்

Friday, 13 January 2017 05:44 -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் ஒரு நான்கடி வெண்பாவில் அமைத்திருக்கும் சீரினையும் காண்போம்.

'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிசைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு நூல்களை நீதி கூறும் அறம் சார்ந்த நூல்களாகவும், ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது என்ற ஆறு நூல்களை அகம் சார்ந்த நூல்களாகவும், களவழி நாற்பது என்ற ஒரு நூலைப் புறம் சார்ந்த நூலாகவும் வகுத்துள்ளனர்.

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்கு அடிக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். 'அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
ஆறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்;' -  (பன். பாட்டியல் 348)

எனப் பன்னிரு பாட்டியல் கூறுவது காண்க. இனி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகம் சார்ந்த நூல்கள் அக வாழ்வில் அன்பின் நெறியோடு வாழ்ந்ததன் தகைமை பற்றிக் கூறுவதையும் காண்போம்.

ஐந்திணை ஐம்பது   
முல்லைத் திணை.
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஒவ்வொரு திணைக்கும்

பத்துப் பத்துப் பாடல்களாக ஒருமித்து ஐம்பது பாடல்களைப் பாடியுள்ளார் மாறன் பொறையன் என்ற புலவர். கார் காலத்தில் வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் திரும்பி வரவில்லையே என வருந்திய தோழிக்குத் தலைவி 'தோழியே! நீர் மிக்க மேகக் கூட்டத்தைக் காணும் போதெல்லாம் என் தோள்கள் பீர்க்கம் பூவைப் போன்ற பசலை படர்ந்;துள்ளதே!' என்று உரைத்தாள். பிரிதலும் பிரிதல் நிமித்தமும் முல்லைக்குரிய ஒழக்கமாகும்.

'அணிநிற மஞ்ஞை யகவ விரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து – பணிமொழி
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்டொறும்
பீர்நீர்மை கொண்டன தோள்.'  - (பாடல் 02). 

கார் காலம் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வராதது கண்டு வருந்தும் தலைவியைத் தோழி நோக்கி 'வளையலை அணிந்த பெண்ணே! கதிரவன் மேற்கு மலைத் தொடரில் மறைவதால் ஏற்படும் செவ்வானச் சிறிய பொழுதான மாலைக் காலத்தில், பசுக்களுடன் வரும் இடையன் மகிழ்ந்து ஊதும் புல்லாங்குழல் ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் துன்பத்தைத் தருகின்றது.' என்று கவலையுடன் கூறினாள்.

'தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
யாரான்பின் ஆய னுவந்தூதுஞ் - சீர்சால்
சிறுகுழ லோசை செறிதொடி வேல்கொண்டு
எறிவது போலு மெனக்கு.' -  (பாடல். 07)

தலைவியைப் பிரிந்து வினை மேற்சென்று திரும்பி வரும் தலைவன் தேர்ப்பாகனை நோக்கி,   'தேர்ப்பாகனே! என் வரவை எதிர்பார்த்திருக்கும் கற்புத் தலைவி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நிலையை அறிந்து, அதற்கேற்பத் தேரை விரைவாக ஓட்டுவாயாக!' என்று கூறினான்.

' நூனவின்ற   பாக தேர் நொவ்விதாச்;  சென்றீக 
தேனவின்ற கானத்து எழினோக்கித் - தானவின்ற
கற்புத்தாள் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி
நிற்பாள் நிலையுணர்கம் யாம்.'  -  (பாடல். 10)   
குறிஞ்சி.
புணர்தலும், புணர்தல் நிமித்தமும் குறிஞ்சியின் ஒழுக்கமாகும். பகற் குறியில் தலைவன், தலைவி களவுப் புணர்ச்சியில் பல நாட்கள் ஈடுபட்டிருந்தனர். தோழியானவள் 'தலைவியே! வேங்கை மரங்கள் நிறைந்த அழகிய பொழிலில் நீ புரியும் களவுப் புணர்ச்சி இடையூடின்றி இன்பத்தில் மகிழ்ந்திருந்த சில நாட்கள் நன்றே கழிந்தன. இனி எவ்வாறாமோ! யாம் அறியோம்!' என்று தலைவியைப் பார்த்துக் கூறினாள்.

'பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலுள்
நுன்மலை நாடன் நலம்புனை – மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினா ரின்றி யினிது.'  -  (பாடல் 11)

'நம் அன்னையான செவிலி, என் தலைவன் களவுப் புணர்ச்சியால் என் மேனியில் ஏற்பட்ட மாற்றத்தை அறியாது, தெய்வக் குறையென்று நினைத்து, பூசாரியை வரவழைத்து, ஆட்டுக் குட்டியைப் பலி கொடுத்து, முருக பூசை செய்யவுள்ளாள். நீ அதைத் தடுத்து, செவிலிக்கு உண்மையை உணர்த்துவாய்!' எனத் தலைவி தோழிக்குச் சொன்னாள்.

'வெறிகமழ் வெற்பனென் மெய்ந்நீர்மை கொண்டது
ஆறியாண்மற் றன்னோ அணங்கணங்கிற்று என்று
மறியீர்த் துதிரந்தூய் வேலன் தரீஇ
வெறியோ டலம்வரும் யாய்.' -  (பாடல். 20)

தலைவியை இற்செறிப்புச் செய்தல் - (பாடல்.12,18), தலைவியை மணந்து கொள்வாய் - (பாடல். 15,16,17,19) ஆகிய துறைகளிலும் பாடல்கள் உள்ளன.

மருதம்.
ஊடலும், ஊடல் நிமித்தமும் மருதத்துக்குரிய ஒழுக்கமாகும். காதல் மிகுதியால் வாயில் புக்க தலைவன் ஊடலில் நிற்கும் தலைவியைக் கூடிச் சென்றான். அவன் சென்றதும் தோழி தலைவியிடம் வந்தாள். அப்பொழுது அத்தலைவி தோழிக்குக் கூறியவை:-

'அணிகளை அணிந்த தோழியே! தலைவன் மார்பைத் தழுவேன் என்று அவனைப் பார்ப்பதற்கு முன் சொன்னேன். யான் அவனுக்குத் தொண்டு புரிந்து நடக்கவேண்டியவள். அவனைக் கண்டதும் காதல் வயப்பட்டுச் செயலற்றுப் போனேன்.' என்றாள் தலைவி.

'ஒல்லென் ஒலிபுன லூரன் வியன்மார்பம்
புல்லேன்யா னென்பேன் புனையிழையாய் - புல்லேன்
எனக்கோர் குறிப்பு முடையனோ வூரன்
தனக்கேவல் செய்தொழுகு வேன்.'  -  (பாடல். 29)

'ஒளியுடை அணியினை அணிந்த தோழியே! குளிர் காலமே என்றாலும், தென்றற் காற்று வீசின் நம் உடலுக்கு இன்பமாகும். அதுபோல் நான் தலைவனுடன் ஊடல் கொண்டாலும், அவனின் நல்ல வடிவத்துடன் புணர்தலானது எனக்கு மிக்க இன்பத்தைத் தருகின்றது.' என்று கூறினாள்.

'குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல்
வளியெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளியிழாய்
ஊடியிருப்பினும் ஊரன் நறுமேனி
கூட லினிதா மெனக்கு.'  -   (பாடல். 30)

தலைவனுக்கு வாயில் மறுத்தல்- (பாடல் 21,22,23,24,25,26,27,28) என்பதில் பல பாடல்கள் உள.

பாலை.
பிரிதலும், பிரிதல் நிமித்தமும் பாலைக்குரிய ஒழுக்கமாகும். தலைவன் வருவதாகக் கூறித் தலைவியைப் பிரிந்தான். தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்தினாள். 'பாலை வழிச் சுனையில் நீர் சிறிதே உள்ளது. அந்நீரைத் தன் பிணைமான் பருகட்டும் எனக் கலைமான் எண்ணுகிறது. ஆனால் பிணைமானோ, கலைமான் பருகட்டும் என நினைக்கிறது. எனவே கலைமான் ஒரு யுக்தி செய்தது. கலைமான் நீரை உறிஞ்சிக் குடிப்பது போலப் பாவனை செய்ய, அதனை உணராத பிணைமான் நீரைக் குடித்தது.' என்று தோழி கூறினாள்.
'சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.' -  (பாடல். 38)

தலைவனோடு தலைவி உடன் செல்லல் -(பாடல் 33,37), தலைவி வருந்துவாள் என நினைத்துத் தலைவன் பொருள் தேடப் போவதை நிறுத்தினான் - (பாடல். 39,40), தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியைத் தோழி ஆற்றல் - (பாடல் 31,32,35) என்பனவும் காண்கின்றோம்.

நெய்தல்.
இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தற்குரிய ஒழுக்கமாகும். தலைவன் தலைவியைப் புணர்தல் வேண்டித் தோழியிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தான். 'பெருங்கடலானது உள்ளிடம் எல்லாம் கலங்கும்படி வலையை வீசித் தமையன்மார் கொண்டுவந்த மீன்களை வெயிலிலே உலர வைத்து வற்றல் ஆக்கும்போது, அவற்றைக் கவர வரும் பறவைகளைக் கவர விடாமல் காக்கும் அணிகளை அணிந்த அப்பெண் எமக்கு மிகவும் வருத்தும் தெய்வம் ஆவாள்.' என்று தலைவன் உரைத்தான்.

'பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ளோப்பு ஒளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற வெமக்கு.'  -  (பாடல். 47)

தலைவன் வரைவு வேண்டி நிற்றல் - (பாடல். 44,45,46,48), தலைவன் குறித்த காலத்தில் வராமையால் காதல் மிக்க துன்பம் அடைதல் - (பாடல். 42,43) என்பதும் உளவாம்.

திணைமொழி ஐம்பது.
இதைப் பாடியவர் கண்ணன் சேந்தனார் என்ற புலவராவர். திணை ஒன்றுக்குப் பத்துப் பாடலாக ஐந்து திணைகளுக்கும் ஐம்பது பாடல்களைக் கொண்டது இந்நூல். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறையில் திணைகள் அமைந்துள்ளன.

களவொழுக்கத்தில் இரவுக் குறியில் ஈடுபட்ட தலைவனும், தலைவியும் பலநாள் மறைவாகச் சந்தித்து மகிழ்ந்திருந்தனர். தலைவன் இராப்பொழுதில் வரும்போது எதிர்கொள்ளும் துன்பத்துக்கு அஞ்சுகிறாள் தலைவி. ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டால் ஒரு துன்பமும் ஏற்படாது என்ற தலைவி கருதுகின்றாள். இதைத் தோழி தலைவனிடம் கூறுகிறாள். 'தினைப்புனம் காப்போர் இரவில் வில், வேல், அம்பு ஆகியவற்றை வைத்திருப்பர். ஆதலால் நீ அவ்வழியே வராதே!' என்று கூறித் தோழி திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறாள்.


'விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்
வரையிடை வாரன்மின் ஐய! - உரைகடியர்
வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர்.' -  (பாடல் 05)

தலைவன் இரவுக்குறியில் வந்து தலைவியைக் கூடிச் சென்றான். தோழி தலைவனை நோக்கி 'ஐயனே! யாழ், குழல், முழவு ஆகியவற்றின் ஓசைகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் அருவிகளுடைய மலை நாடனே! நீ இனி இரவில் வரின் தலைவியானவள் உனக்கு வழியில் வரும் இடையூற்றை நினைத்து வருந்துவாள். ஊரில் பழிமொழிகளும் பரவும். ஆதனால் இரவுக் குறியைத் தவிர்த்து, அவளை வரைந்து கொள்வாயாக!' என்று கேட்டுக்கொண்டாள்.

'யாழும் குழலு முழவும் இயைந்தன
வீழும் அருவி விறன்மலை நன்னாட
மாழைமான் நோக்கியு மாற்றா ளிரவரின்
ஊரறி கௌவை தரும்.'  - (பாடல். 07)

தலைவன் தலைவியை விட்டுப் பரத்தையரிடம் சென்றான். பின் தலைவியின் எண்ணம் வர, அவளுக்கு வாயில் அனுப்பினான். அந்த வாயிலத் தலைவி மறுத்துவிட்டாள். '.... நீர் வளம் மிக்க மருத நிலத்தூர்த் தலைவன் என் தோள்களுக்கு முன் ஏற்பட்ட மணவினை தொடர்பில் 'கணவன்' என்ற உரிமையைப் பெற்றுள்ளான். ஆகவே, அந்த உரிமை ஒன்றே எனக்குப் போதும். அவன் அருள் ஒன்றும் வேண்டாம்.' என்று வாயிலாக வந்தவனிடம் தலைவி சொன்னாள்.

'பழனம் படிந்த படுகோட் டெருமை
கழனி வினைஞர்க் கெறிந்த பறைகேட்டு
உரனழிந் தோடும் ஒலிபுன லூரான்
கிழமை யுடையன்என் றோட்கு.' -  (பாடல். 31)

வரைவு வேண்டல் (பாடல். 10,42,44,45,46,50), உடன் போக்கில் தலைவனுடன் தலைவி செல்லல் (பாடம்.16), வாயில் மறுத்தல் (பாடல். 32,33,34,35,37,38,39) போன்றவற்றிலும் பாடல்கள் உள.

ஐந்திணை எழுபது.
ஐந்து திணைகளைப் பற்றிய எழுபது பாடல்களைக் கொண்டது இந்நூல். மூவாதியார் எனும் புலவர் இந்நூலைப் பாடியுள்ளார். தலைவன் தோழியின் உதவியோடு தலைவியைப் புணர்ந்து நீங்கும்போது, தோழி தலைவனைப் பார்த்துத் தலைவியை மணந்து கொள்ளுமாறு கூறுகிறாள். 'பொன் போன்ற வேங்கை மரங்கள் நறுமணம் வீசுகின்ற பூஞ்சோலை நிறைந்த மலைநாட்டின் தலைவனே! தலைவியைக் காப்பாயாக! அணிகளை அணிந்த தலைவிக்கு உன்னையல்லாது வேறொருவரும் இல்லை. ஆதலால் அவள் உயிர் தரித்திருக்கும் மருந்தைப் போன்ற மணத்தை அவளுக்கு அளித்துக் காப்பாயாக!' என்று தோழி தலைவனுக்குக் கூறினாள்.

'பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை
நன்மலை நாட மறவல் வயங்கிழைக்கு
நினனலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
இன்னுயிர் தாங்கு மருந்து.'  -  (பாடல். 06)

தலைவனுடன் தலைவி உடன்புறப்பட்டுப் பாலை வழியே சென்று விட்டாள். அதையறிந்த நற்றாய் வருந்தினாள். 'என் மகள்  ஆண் யானையைப் போன்ற தலைவன் பின்னால் சிலம்புகள் ஒலிக்க, கொடிய பாலை நிலவழியே நடந்து போவாளோ? அல்லது அவ்வழியிற் செல்ல இயலாது என்று வருந்தித் துடிப்பாளோ? யுhன் அறியேன்!' என்று கூறிக் கவலையுற்றாள்.

'ஒல்லோமென் றோங்கி உயங்கி யிருப்பாளோ
கல்லிவ ரத்தம் அரிபெய் சிலம் பொலிப்பக்
கொல்களி றன்னான் பின் செல்லுங்கொல் என்பேதை
மெல்விரல் சேப்ப நடந்து.'  -  (பாடல். 40)

வரைவு வேண்டல் (பாடல். 01,07,08,10,14,61), அறத்தொடு நிற்றல் (பாடல். 13), பருவம் வந்தும் தலைவன் வராது தலைவி வருந்தல் (பாடல். 15,16,17,18,19,20,21,22,26,66), தலைவன் பிரிவை ஏற்காத தலைவியர் (பாடல். 28,29,30,31,32,35,36,37), தலைமகன் பரத்தையரிடம் செல்வதை விரும்பாத தலைவியர் (பாடல்.42), வாயில் மறுத்தல் (பாடல்.43,44,46,48,49,53) ஆகிய துறைகளிலும் பாடல்கள் அமைந்துள்ளன.

திணைமாலை நூற்றைம்பது
ஏலாதி ஆசிரியர் கணிமேதாவியார் இந்நூலையும் இயற்றியுள்ளார். ஐந்திணைகளைப் பற்றிய இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன. தலைவன,; தலைவி பகற்குறியில் தடைகள் ஏற்பட்டதால், தலைவன் இரவுக்குறி வேண்டுமெனத் தோழியிடம் வேண்டினான். அதற்கு அவள் 'நாலா பக்கமும் உயர்ந்த மலைகள் சூழ்ந்தது நம் சிறிய ஊர். நீ கடந்து வரவேண்டிய அந்த எல்லையின் உட்பக்கத்தில் ஐந்து வாய்களையுடைய பாம்புகள,; யானைகள் நிறைந்த காடுகள் உள்ளன. எனவே இப்படியான இடுக்கண் உடைய வழியால் நீ வரவேண்டாம்.' என்றுரைத்தாள்.

'ஒருவரைபோ லெங்கும் பல்வரையும் சூழ்ந்த
வருவரை உள்ளதாம் சீறூர் - வருவரையும்
ஐவாய நாகம் புறமெல்லா மாயுங்காற்
கைவாய நாகஞ்சேர் காடு.'   -   (பாடல். 13)

களவொழுக்கத்தில் தலைவன் நின்றான். இதை விடுத்துத் தலைவியை மணக்குமாறு தோழி வேண்டிhள். 'அழகான கடல் துறைத் தலைவனே! தோணியை யானையாகவும், அலையைப் பாறையாகவும், பறவைகளின் உறக்கம் கெடும்படியான படையாகவும் கொண்டு,  கனவு கண்டாற் போல், களவு ஒழுக்கத்தில் வரும் வருகையை நீங்கப் பெற்று, மணச் சடங்கு முறைப்படி தலைவியை மணந்து கொள்வது உனக்கு உகந்ததாகும்'  என்று தோழி தலைவனுக்குக் கூறினாள்.

'திமில்களி றாகத் திரைபறையாய் பல்புள்
துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல்
குறியா வரவுஒழிந்து கோலநீர்ச் சேர்ப்ப
நெறியால்நீ கொள்வது நேர்.'  -    (பாடல்- 50)

தலைவியிடம் தோழி உன் ஊடலை ஒழிக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட தலைவி கடிந்து கூறியவை. 'என் தோழியே! அன்பு மிக்க காலத்திலும் நான் தலைவனுடன் இன்பம் கண்டதில்லை. எனவே, இனி என் கண்கள் அவனைக் காண விரும்பவில்லை. இந்நிலையில் என் மன வேறுபாட்டைப் பொதுவான ஊடலென்று நினைப்பது தகுமோ?' என்று கேட்டாள்.

'துனிபுலவி ஊடலின் நோக்கென் றொடர்ந்த
கனிகலவி காதலினுங் காணேன் - முனிவுஅகலில்
நாணா நடுங்கு நளிவய லூரனைக்
காணாஎப் போதுமே கண்.'  -  (பாடல். 153)

இரவுக்குறி மறுத்தல்- (பாடல். 06,07,48,49,61), வரைவு கடாயது (பாடல். 18,25,27,34,35, 36,37,43,46,52,53,54.57,59), பருவம் காட்டி வருந்தல் (பாடல்.93,94,95,96,97,99,100,101,102, 105,112,116,122), தலைவி தலைவனுடன் உடன்போக்கு (பாடல்.87,88,89,90), வாயில் மறுத்தல் (பாடல். 124,125,126,127,130,131,132,133,136,151) என்னும் பகுதிகளில் பல பாடல்கள் அமைந்துள்ளன.

கைந்நிலை
திணைக்குப் பன்னிரண்டு பாடல்கள் வீதம் ஐந்திணைகளிலும் ஒருமித்து அறுபது பாடல்கள் உள்ளன. இதனால் இது 'ஐந்திணை அறுபது' என்றும் அழைக்கப்படுகிறது.  இதைப் புல்லங்காடனார் என்னும் புலவர் பாடியுள்ளார். தலைவன் மணம் செய்து கொள்வதற்குப் பொருள் தேடிச் செல்ல எண்ணினான். அதைக் கேட்ட தோழி இப்பிரிவைத் தலைவி ஆற்றிக் கொள்ள மாட்டாள் என்று தலைவனுக்குச் சொன்னாள். 'பாலை வழியில் வருவோரை விரைந்து வந்து அடித்துப் பொருள் பறிக்கும் அம்பும், வில்லும் உடைய வேடர் உள்ளனர். வழிச் செல்வோரைக் கண்டதும் ஒரு வேடன் சீழ்க்கை அடிப்பான். அதைக் கேட்ட மற்றவர் வந்து கூடுவர். இத்தகைய பாலை வனத்தில் நீ செல்ல விரும்புகிறாய். இதைத் தலைவி விரும்பாள். எனவே, நீ பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும்.' என்று தோழி தலைவனுக்குக் கூறினாள்.

'கடுகி அதர் அலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்
நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.'   -  (பாடல். 13)

தலைவன் சென்ற வினை முடித்துத் திரும்பி வருகின்றான். அதைக் கண்ட தோழி அவன் வருகையைத் தலைவிக்குக் கூறுகின்றாள். 'பூங்கொடி போன்றவளே! பகை அரசர் அஞ்சி ஓடுமாறு புறம் கண்ட ஒலியுடைய பூமாலை அணிந்த தலைவன் தேரானது, பாண்டிய மன்னன் கொற்கைத் துறையில் மேயும் குருகுகள் எல்லாம் அஞ்சி ஓடும்படி மதுரையைத் தேர் நெருங்குகின்றது. சற்று நேரத்தில் நம் இல்லத்துக்கு வந்து விடும். தலைவர் வந்ததும் பசலை நோயும் நீங்கி விடும்.' எனத் தோழி தலைவிக்குச் சொன்னாள்.
'பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி
தென்னவன் கொற்கைக் குருகு இரிய – மன்னரை
ஓடு புறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ
கூடல் அணைய வரவு.'   -   (பாடல். 60)

வரைவு நீடித்தல்- (பாடல். 01-05,09,53,54,56), உடல் வேறுபாடு- (பாடல். 08), பரத்தையிற் பிரிந்த தலைவன்- (பாடல். 37,38,39,55), வாயில் மறுத்தல்- (பாடல். 40-48) ஆகிய தரத்திலும் பாடல்கள் உள்ளன.

கார் நாற்பது.
மதுரைக் கண்ணங்கூத்தனார் இதன் ஆசிரியராவார். இதில் நாற்பது பாடல்கள் உள. கார்கால நிகழ்ச்சிகள் இந்நூலை அலங்கரிக்கின்றன. கார்காலத் தொடக்கத்தில் வருவேன் என்று சொல்லிப் பிரிந்த தலைவன் அவ்வண்ணம் வராதவிடத்துத் தலைவி கவலைப்படுதலும், அவளைத் தோழி ஆற்றுவிப்பதும், தலைவன் தலைவியை நினைந்து தேர்ப்பாகனை விரைந்து தேரைச் செலுத்துமாறு கூறுதலும் ஆகிய செய்திகளைத் திறம்படக் கூறுகின்றது இந்நூல்.

தலைவிக்குப் பருவம் காட்டித் தோழி 'கடல் நிறமான திருமால் அணியும் மாலை போன்று, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி மழை பெய்தது. வருவோமென்று கூறிச் சென்ற தலைவர், மேகம் கருக் கொண்டு மழை பெய்யும்போது வராமல் இருப்பாரா? வந்திடுவார்' என்று கூறினாள்.

'பெரருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானம்
கருவிருந் தாலிக்கும் போழ்து.' -  (பாடல் 01)

ஊடல் கொள்வதால் பசலை மிகும் என்று தலைவிக்குத் தோழி கூறி வற்புறுத்தினாள். ' மேகம் குறிஞ்சிப் பறை போல் முழங்கிட, காட்டில் குருக்கத்தி இலைகள் விரிந்தன. நம் காதலர் எம் வருத்தத்தை எண்ணிப் பாராமல் சென்றார் என்று நாம் ஊடுதல் சிறந்தது எனப் பாராட்டின் படுக்கை இடத்தில் பசலையும் பாயும்.' ஏன்று தோழி தலைவிக்குக் கூறினாள்.

'முருகியம்போல் வானம் முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவு எண்ணி
உள்ளாது அகன்றார் என்று ஊடியாம் பாராட்டப்
பள்ளியுள் பாயும் பசப்பு.' -  (பாடல். 27)

கார்ப் பருவம் வந்தது. அதனால் தவைர் வருகை உறுதியானது என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள். 'தலைவியே! தலைவர் செய்த குறிகள் தோன்றி விட்டன, ஆனால் தலைவர் வரவில்லை என்று வருந்திய உனக்கு, நோயைப் போக்கும் மருந்தாகி, அழகிய மேகம் கருநிறத்தினைப் பெற்றது. இனிமேல் உன் நெற்றி ஒளி வளரும்.' என்று தiவிக்குத் தோழி கூறினாள்.
'வந்தன செய்குறி வாரார் அவரென்று
நொந்த ஒருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் கருவண்ணங் கொண்டன்று எழில்வானம்
நந்துமென் பேதை நுதல்.' -  (பாடல். 40)

நிறைவாக
இதுகாறும் ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது என்ற ஆறு அகம் சார்ந்த நூல்களை விரிவாக ஆராய்ந்தோம். அதில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் காதலர்களான தலைவன் தலைவியர் ஒவ்வொரு நிலத்திலும் பவனி வந்து, அந்தந்த நிலங்களின் சூழலுக்கேற்ப இணைந்தும், புணர்ந்தும், இன்புற்றும், ஊடியும், கூடியும், பிரிந்தும், வருந்தியும், மீண்டும் சேர்ந்தும், பரத்தையரை நாடியும், தம் வாழ்வியலை ஓட்டிச் சென்றுள்ளதையும் கண்டு மகிழ்வுற்றோம்.

மேலும், தலைவன் தலைவியர் களவியலில் நின்று ஒழுகுவதும், இதற்குத் தோழி, பாணன் ஆகியவர்களின் உதவி பெறுதலும், பகற்குறி, இரவுக்குறி அமைத்துக் காதலர் கூடுவதும், பிரச்சினை ஏற்படின் பகற்குறி இரவுக்குறி மறுத்தலும், வரைவு வேண்டலும், தலைவியை இற்செறிப்புச் செய்தலும், எதற்கும் ஊடி நிற்கும் தலைவி, கார் காலத்தில் வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் வராதவிடத்துத் தலைவி வருந்தலும், களவுப் புணர்ச்சியில் தலைவியின் மேனியில் ஏற்படும் மாற்றமும், தலைவி தலைவனுடன் பாலை வழியில் உடன்போக்கும், தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தலைவனை வரைவு வேண்டி நிற்றல், தலைவன் பரத்தையரிடம் செல்வதை விரும்பாத தலைவி, பரத்தையரிடமிருந்து வரும் தலைவற்கு வாயில் மறுத்தல், வினைமேற் சென்ற தலைவன் வினை முடித்துத் திரும்புகையில் தேரை விரைவாக ஓட்டும்படி தேர் ஓட்டியைப் பணித்தல் ஆகிய செய்திகளையும் பார்த்தோம். இவ்வாறான அக நூல்கள் மக்கள் வாழ்வை வளப்படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

*கட்டுரையாளர்: -நுணாவிலூர்  கா.  விசயரத்தினம்  (இலண்டன்)-

Last Updated on Friday, 13 January 2017 05:48