ஆய்வு: சிவப்பிரகாச சுவாமிகள் அருளித்தந்தார் நன்னெறி

Wednesday, 02 August 2017 16:23 -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்கம் மருவிய காலத்தின் பின்தான் நீதி இலக்கியங்கள் எழுந்தன. பல நீதிநூல்களைத் தமிழில் குழந்தைகளுக்காக எழுதிப் படைத்தவர்களில் முன்னிலையில் நின்றவர் ஒளவைப் பாட்டியாவார். அவர் வழியில் நின்று செயற்பட்டோர் பலராவர். அவர்களில் ஒருவர் சிவப்பிரகாசர் என்னும் தமிழ்ப் புலவராவர். இவர் காஞ்சிபுரம் வேளாளர் மரபினருக்குக் குருவாக விளங்கிய குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாக 17ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே தமிழில் புலமை பெற்று விளங்கியதோடு கவிதை இயற்றும் திறமையும் பெற்றிருந்தார். இவர் இல்வாழ்க்கையில் ஈடுபடாது துறவறத்தை மேற்கொண்டவர். தாமிரவருணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றுத் தேர்ந்தவர். இவரைச் சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்களம் சிவப்பிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவானுபதிச் செல்வர், சைவசித்தாந்திப் புலவர், மெய்நூல் அறிஞர், அரங்கப் புலவர் ஆகிய பெயர்களைக் கொண்டு அழைப்பர். இவர் 34 நூல்களுக்கு மேற்பட எழுதியுள்ளார். இவர் தனது 32ஆம் வயதில் சிவபதம் அடைந்தார். இனி, சிவப்பிரகாச சுவாமிகள் அருளித் தந்த நன்னெறி நூலில் காட்டப்படும் கடவுள் வாழ்த்துத் தவிர 40 பாடல்களில் அமைந்த நல்ல நெறிகளை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.

கடவுள் வாழ்த்து:- நன்னெறியின் நூலாசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள் மரபுவழி நின்று, வினாயகப் பெருமானை வணங்கி, நூலின் 40 நன்னெறிப் பாடல்களையும் பாடி முடித்தார்.

'மின்எறி சடாமுடி வினாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!'

பூங்கை நாவிற்கு ஊட்டும் உணவு:- அந்த அழகிய பூங்கையானது எதிப்பார்ப்பு ஒன்றும் கருதாது, சுவை மிக்க உணவை எடுத்து நாவிற்கு ஊட்டி விடுகின்றது. இதே போன்று தீதற்ற பெரியோர் தம்மை உபசாரமொழிகள் கூறிப் புகழாதவர்களுக்கும் விருப்புடன் பொருள் கொடுத்து உதவுவர் என்று பாடல் அமைத்தார் சிவப்பிரகாச சுவாமிகள். 'என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்றுபொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்று சுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.' -- (பாடல். 1)

மாசு அற்ற நெஞ்சு:-. சிவனை ஈசன் என்பர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார். ஒருசமயம் இறைவனுக்குப் பூசை செய்ய மலர் கிடைக்கவில்லை. அதனால் சாக்கியர் சிறுகற்களை மலராக எண்ணிச் சிவனை அருச்சித்தார். உள்ளன்புடன் கூடிய அவருடைய கல் அருச்சினையை ஈசன் ஏற்று அருள் புரிந்தார்.

கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதனுக்கு மலர்கள்தான் அம்பாகும். காமத்தின் கடவுள் மன்மதன். ஒரு சமயம் இந்த மன்மதன், தன் கரும்பு வில்லில் மலர் அம்புகளைப் பூட்டி இறைவன் மேல் எய்தான். அவன் செய்கை அன்பில்லாதது. எனவே, வெறுப்புற்ற சிவன் மன்மதனைத் தம் பார்வையினால் எரித்துச் சாம்பலாக்கினான்.

எனவே, நல்லார் அன்புடைச் செயல்கள் சாக்கியரின் கல் அருச்சினையைப் போல, இனிமையையும், தீயார் தீஞ்செயல்கள் மன்மதனின் மலர் அம்பைப்போலக் கொடுமையையும் அளிப்பதாகும்.

'மாசு அற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிது என்க! - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு ' - (பாடல் 02)

ஆவின் பால் கன்றினால் கொள்ப கறந்து:- பசுவானது தன் அரிய பாலைத் தானாகவே மனிதருக்குக் கொடுப்பதில்லை. பசுவின் பாலை விரும்பும் மக்கள், அந்தப் பசுவின் கன்றைப் பயன்படுத்தி- முதலில் கன்றை ஊட்டச் செய்து, அதனால் பசுவின் மடியில் பால் சுரக்க வைத்து அதைக் கறந்து கொள்ளுகின்றனர். கன்று இல்லாவிடின் பசுவின் பாலைப் பெற முடியாது. அதுபோல், ஒருவருக்கு நன்மை தரக்கூடிய ஒரு பொருள், அவர்களுக்குத் தேவையில்லாதவர்களிடம் இருக்கலாம். ஆனால், இது நமக்கு உதவாதே என்பதினால், அதை விரும்புகிறவர்களுக்கு அவர்கள் அதைக் தாமாகவே கொடுத்து விடமாட்டார். அவர்களுக்குத் தேவையில்லாத அப்பொருளைப் பெற விரும்பினால், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களைக் கொண்டே அதைப் பெறவேண்டும். இது, பசுவிலிருந்து பாலைப் பெற, அதன் கன்றைப் பயன்படுத்துவது பேலாகும்.

'தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க – தங்கம் நெடும்
குன்றினால் செய்து அனைய கொங்கையாய்! ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.' - (பாடல். 3)

கருங்கடல் நீர் மழையாய்ப் பெய்யும்:- கடல் நீர் உப்பானது. யாரும் அதைப் பருகுவதில்லை. இப்படியான உப்பு நீரை, மேகம் ஆவியாக்கி முகந்து கொண்டு போய் மழையாகப்பெய்கிறது. மழை நீர் உப்பில்லாத் சுத்த நீர். பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவர்களிடம் பெரும் செல்வம் இருக்கலாம், கடல் நீரைப் போல, உலோபிகளின் செல்வத்தை, பிறருக்கு உதவும்படி செய்யும் நல்ல குணம் படைத்தோர் சிலர் இருப்பார்கள். இவர்களால் அந்தச் செல்வம் கொள்ளப்படும், மேகத்தைப் போல. மேகமானது கடல் நீரைக் கொண்டு மழையாகப் பெய்து, பிறருக்கு உதவுவதுபோல், பெரும் குணம் படைத்தோர், உலோபிகளின் செல்வத்தைக் கொண்டு பிறருக்கு உதவுவார்கள்.

'பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறு ஆம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல் முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.' - (பாடல். 4)

நல்ல நட்பினர் பிரிதல் கூடாது:- நெல் உமியோடு கூடியது. உள்ளே அரிசி இருக்கும். உமியோடு கூடிய நெல் தான் மீண்டும் முளைக்கும். இந்த நெல்லிலிருந்து சிறிதளவு உமி நீங்கினாலும் அது முளைக்காது. முளைத்து, வளர்ந்து, பூத்துக் கதிர் விடும் தகுதியை அது இழந்து விடும். இதே போலத்தான் நட்பும். இணைபிரியா நண்பர் இருவா,; மிகவும் அந்நியோனியமாகவும், கருத்து மாறுபடாமலும், பிரியாமலும், இருப்பதே இவர்களுக்குப் பெருமை தரும். அப்படியில்லாமல், ஏதோ காரணத்தினால் வேறுபாடு கொண்டு, நீண்ட நட்பை முறித்துக் கொண்டு பிரிகிறார்கள். பிறகு, மனம் மாறி முன்பு போலவே ஒன்றுபட்டு நண்பர்களானாலும், அந்த இடையிட்ட நட்பு சிறப்புடையதாக இருக்காது. அது அற்பமாகவே தோன்றும். ஆகவே, நல்ல நட்பை விரும்புவோர், சிறு விடயங்களில் மன வேறுபாடு கொள்ளாமல், நட்பில் உறுதியாக இருக்க வேண்டும். பகையினால் பிரிவது உமி நீங்கிய நெல் எப்படி முளைக்கும் தகுதியை இழந்ததோ அதுபோல் ஆகிவிடும். சிறந்த ஆதாரங்களுடன் நட்பின் தன்மையைப் பேசும் பாங்கினைச் சிவப்பிரகாச சுவாமிகள் சிறப்புறக் கூறுவதைக் காண்கின்றோம்.

'நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் - பூக்குழலாய்!
நெல்லின் உமி சிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினம் திண்மை நிலை போம்.' - (பாடல். 5)

கண் இரண்டு ஒன்றையே காண்:- நம் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளன. அவற்றால் நாம் காட்சிகளைப் பார்க்கின்றோம். இரண்டு கண்கள் இருந்தாலும், அவை தனித்தனியே வேறு வேறு பொருட்களைப் பார்ப்பதில்லை. இரண்டு கண்களும் சேர்ந்து ஒரு பொருளையோ, அல்லது ஒரு காட்சியையோதான் காண்கின்றன. ஒரே நேரத்தில் அவைகளால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைப் பார்க்க முடியாது. இதேபோலக் குடும்ப வாழ்க்கையில் இரு கண்கள் போன்றவர்கள் கணவனும், மனைவியும். இவர்கள் இணைந்து ஒத்த கருத்துடன் செயற்பட்டால் இல்வாழ்கையில் தர்மங்கள் நடைபெறும். இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு, nவவ;Ntறு திசைகளில் செயற்பட்டால், குடும்ப வாழ்வில் குளறுபடிகள்தான் ஏந்படும். காதலராகிய கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ்தல் அவர்கள் கடமையாகும்.

'காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றித்
தீது இல் ஒருகருமம் செய்பவே – ஓதுகலை
எண் இரண்டும் ஒன்றும் மதிஎன் முகத்தாய்! நோக்கல்தான்
கண்; இரண்டு ஒன்றையே காண்' -- (பாடல். 6)

கல்விச் செருக்குக் கூடாது:- கடல் நீர் உறைந்து போனால் அது பனிக்கடலாகும். வட துருவ, தென் துருவங்களிலுள்ள கடல் நீர் உறைந்து பனிக்கட்டியாகி விடுகின்றது. அகத்தியர் என்னும் முனிவர் குட்டையானவர், குறுமுனி என்பர், முனிவர்க்கெல்லாம் தலைமையானவர், பெரும் தவங்களை இயற்றிப் பெருமை கொண்டவர். வலிமை பெற்ற ஆண் சிங்கம் போன்றவர். கடல் ஆழமானது, அகலமானது. பேரொலி எழுப்பக் கூடியது. அதனால், கடலுக்குச் செருக்கும் உள்ளது. இவ்வாறான கடலைக் குள்ள உருவங் கொண்ட அகத்தியர் தம் கையினால் அள்ளிக் குடித்து அதை வற்றச் செய்து விட்டார். கடலை அள்ளிக் குடிக்க ஓர் அகத்தியர் இருந்தது போல, கல்வியிலும் செருக்கடையக் கூடாது. ஏனெனில், அவரையும் விட வல்லவர் ஒருவரால் அடக்கப்படுவார்.

'கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடல்ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி – விடலே
முனிக்கு அரசுகையால் முகந்து முழங்கும்
பனிக் கடலும் உண்ணப்படும்.' - (பாடல். 7)

சினம் காக்கும் பண் சிறந்தது:- பெரு மழை காலங்களில் ஆறு, ஏரிகளில் வெள்ளம் பெருகி, பெருநாசம் விளைவிக்கும். அதைத் தடுக்க, கரைகளை உயர்த்தி அமைப்பார்கள். இதை உடைக்க முடியாது வெள்ளப் பெருக்கு அடங்கிவிடும். இதனால் வெள்ளத்துக்கும் நன்மை, நமக்கும் நன்மை. இதே போல, ஒருவன் கோபம், அவன் மனத்தைத் தன் வசப்படுத்திப் பொங்கி எழக்கூடும். அப்போது அவன், தன் கோபம் மேலும் பொங்காதபடி பொறுமையைக் கடைப்பிடித்து, அதை அடங்கும்படி செய்ய வேண்டும். இதனால் அவனுக்கும், பிறருக்கும் நன்மை உண்டாம். எனவே, சினம் காக்கும் பண்பே சிறந்ததாகும்

'உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கும் சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க – வெள்ளம்
தடுத்தல் அரிதோ? தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ? விளம்பு'- (பாடல;; 8)

மெலியோர் வலியோரைச் சார்ந்து வாழ வேண்டும்:- சிவபிரான் பக்தர்களின் பூசைகளை ஏற்றுக் கொள்பவர். அவர் மிக்க வல்லமை கொண்டவர். பாம்புக்குக் கண்களே செவியாகும். அவற்றைக் கட்செவி என்பர். பாம்பைக் கண்டு நாம் பயப்படுவோம். ஆனால் அது ஒரு பயந்த பிராணி. கருடனைக் கண்டால் பாம்பு நடுங்கும். சிவன் முடிமேல் பாம்பு இருக்கும் போது அது அஞ்சுவதில்லை. 'என்ன கருடா! சௌக்கியமா?' என்று கேட்குமாம். எனவே 'மெலியோர் வலியோரைச் சார்ந்து வாழ வேண்டும்' என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

'மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர்சிறை அப்புள் அரசைப் பார்த்து.' - (பாடல். 9)

திங்கள் கறை இருள்:- வானத்தில் பவனி வரும் சந்திரனிலே உள்ள கறையை (இருளை) நீக்குவதற்கு அவன் கவலைப்படுவதில்லை. ஆனால், அவன் உலகின் இருளை நீக்கி, ஒளியைத் தருகிறான். உயர்ந்த குணமுடைய மேலோரிடமும் சில குறைகள் இருக்கலாம். அதைப் போக்கிக் கொள்ளும் ஆற்றலும் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், அதைப் போக்க அவர்கள் நினைப்பதில்லை. தம் மேலான ஆற்றலைக் கொண்டு, பிறர் துன்பங்களைப் போக்குகிறார்கள். தம் குறைகளைப் பொறுத்துக் கொண்டு சந்திரனைப் போல, பிறர் குறைகளை நீக்குவதே பெரியோரின் கடமையாகும்.

'தம்குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கும் உறூஉம்
வெம்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறை இருளை நீக்கிக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று.' - (பாடல். 10)

ஐம்புலன்கள்:- சூறாவளி என்றால் சுழல் காற்று. துப்பு என்றால் வலிமை. சுவை, ஒளி, ஓசை, மணம், ஊறு என்பவை ஐம்புலன்கள். அற்பமான அறிவுடையவரை புல்லியர் என்று கூறுவர். உண்மையான அறிவுடையோர் மெய்ப்புலவர் ஆவார். சுழல் காற்றான சூறாவளிக்கு வலிமை அதிகம். சிறிய புல் போன்ற துரும்புகளைத் தூக்கிச் சுழற்றி வீசி விடும். ஆனால், அதனால் கல்தூணைத் தூக்கி வீச முடியாது. சூறாவளிக் காற்றை விட வலிமை மிக்கது கல்தூண். இதேபோல்தான், மெய்யாகிய ஐம்புலன்களும், தங்கள் திறமையினால் குறைந்த அறிவுடையவரிடையே நோயினை உண்டாக்கும். ஆனால், இந்த ஐம்புலன்களினால், மெய்யறிவுடைய பெரியவர்களிடம் நோயினை உண்டாக்க முடியாது – கல்தூண்களைப் போல். இங்கு 'நோய்' என்பது புலன்களின் பாதிப்பைக் குறிக்கும்.


'பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பால் அன்றியே
மெய்ப் புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும்கொல் கல்தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.' - (பாடல். 11)

ஒன்பது வாயில் உடம்பு:- கட்டுப்பாடு இல்லையானால் தண்ணீர் ஓரிடத்தில் தங்கி நிற்காது. தங்கு தடையின்றி ஓடக்கூடிய நீரை, சிறிய துவாரமுள்ள குடத்தில் வைத்திருக்க முடியாது. அது ஒழுகி ஓடி விடும். இது ஆச்சரியமில்லை. ஆனால் ஓட்டைக் குடத்தில் அந்த நீர் ஒழுகி ஓடாதிருந்தால் அது வியப்புக்குரியதாகும். நம் உடலில் உள்ள உயிரும் நீரைப் போல் ஓரிடத்தில் நிற்பதில்லை. உடலுக்குத் தீங்கு வருங்கால், உயிர் உடம்பிலிருந்து நீக்கி விடும். நம் உடல் ஒன்பது துவாரங்களைக் கொண்டது. இந்த உடலில் உயிர் தங்கியிருப்பதுதான் ஆச்சரியமானது. 'உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டதே' என்று வியப்பதோ, வேதனைப்படுவதோ அறியாமையாகும்.

'வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை – திருந்து இழாய்!
சீதம் நீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.' - (பாடல். 12)

மதியின் கலை அளவு நின்ற கதிர்:- சந்திரனை மதி என்பர். கதிர் என்றால் கிரணம். சூரியன் கிரணத்துக்கும் கதிர் என்று பெயர். அதன் கதிர் வெப்பமானதும், மிகுதியானதும் ஆகும். சந்திரன் கதிர் குளிர்ச்சியானது, சந்திரனின் கிரணங்கள் வளருவதும், தேய்வதுமானவை. சந்திரன் தேயும் பொழுது அதன் கிhணங்களும் குறையும். இதே போல், கொடைக் குணம் கொண்ட மேலோரின் வள்ளத் தன்மை, செல்வம் பெருகும் பொழுது கொடையும் அதிகரிக்கும், செல்வம் குறையுமானால் வள்ளத் தன்மையும் குறையும் என்கின்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

'பெருக்கமொடு சுருக்கம்பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலை அளவுநின்ற முலைமாதே! மதியின்
கலை அளவுநின்ற கதிர்' - (பாடல். 13)

செல்வச் செருக்கு கூடாது:- உயரத்திலும் வலிமையிலும் இமயத்துக்கு அடுத்தது மேரு மலையாகும். அதை அசைக்க யாராலும் முடியாது. அப்படியான மேரு மலையைச் சிவபிரான் முப்புரங்களை எரிக்க வில்லாக வளைத்தார். ஒருவர் பெருஞ் செல்வராக இருக்கலாம். இச் செல்வத்தினால் அவர் ஒரு பொழுதும் கர்வம் கொள்ளக் கூடாது. அவர்கள் செருக்கடைந்தால் அவர் செல்வம் அழிந்து போகும். மேருவையும் வளைக்கக் கூடிய ஒரு சிவன் இருப்பது போல, செல்வச் செருக்குடையயோரின் கர்வத்தை அடக்க ஒருவர் வருவார் என்று மலரும் பூக்களைசு; சூடுகின்ற பெண்ணுக்கு ஆசிரியர் கூறுகின்றார்.

'தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்கும் சார்தல் - இலையால்
இரைக்கும் வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.' - (பாடல். 14)

அன்புடையார் அறம், புகழ் பெறுவர்,-பேச இயலாத ஊமைகள் கல்வி கற்பது கடினம். கற்றாலும் அதை எடுத்துரைக்க முடியாது. பார்வையற்ற குருடர்களுக்கு விளக்கு இருந்தாலும் பொருள்களைக் காண முடியாது. அன்புடையவர்களால் அறத்தையும், புகழையும் அடைய முடியும்.

'இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் – நல்லாய்!
மொழி இலார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
வழி இலார்க்கு ஏது விளக்கு'- (பாடல்.15)

கழியினும் செல்லாதோ கடல்:- கடலை அடுத்துள்ள உப்பங்கழி சிறியது. கடலோ பெரியது. ஆனாலும் கடல் தன் பெருமையை எண்ணி உப்பங்கழியிலும் பாயாமல் இருப்பதில்லை. கழி சுருங்காதபடி அதனிலும் பாயும். அதே போலப் பெரியவர்கள் தாம் பெரியோர் என்ற கர்வமின்றித் தாழ்ந்தவர்களைத் தேடிச் சென்று உதவுவார்கள்.

'தம்மையும் தங்கள் தலைமையும் பார்த்து உயர்ந்தோர்;
தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பார் அங்கு
கழியினும் செல்லாதோ கடல்.' - (பாடல். 16)

வாழை மரம்:- வாழை மரத்துக்கு அரம்பை என்றும் ஒரு பெயர் உண்டு. வாழை மரத்தின் அடியில் பல குட்டிகள் முளைத்திருக்கும். இவற்றைக் கீழ்க்கன்று என்றும் கூறுவர். சுவை மிக்க வாழைப்பழத்தை மக்களுக்கு அளித்து பிறகு, வாழை அழிந்து விடும். அதன் அடியில் குருத்து விட்டு முளைத்துள்ள வாழைக் குட்டிகள், தாய் வாழை பழங்களை அளித்துத் தான் அழிந்ததை அறிந்திருந்தும், தாங்கள் வளர்ந்து மக்களுக்குப் பழங்களைக் கொடுக்கக் கூடாது என்று வளராதிருப்பதில்லை. அது போல, இரப்பவர்களுக்கு இல்லை என்று கூறாது கொடுத்து, வறுமையடைந்து, இறந்து போய்விடுகிறான் ஒருவன். அவனுக்குப் பின் அவன் குழந்தைகள் பெரியவர்களாகின்றனர். தன் தந்தை கொடைத் தன்மையால் வறுமையடைந்து இறந்துபட்ட நிலை தங்களுக்கும் வரக் கூடாது என்று அவன் குழந்தைகள் இரந்து வருவோருக்கு ஈயாதிருப்பதில்லை. அறிவுடையோர் வாழைக் குட்டிகள் போல் வாழ்வார்கள்.

'எந்தை நல் கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ – பைந்தொடீ
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி.' - (பாடல். 17)

இன்சொல் பேச வேண்டும்:- சூரியனை அழல் கதிரோன் என்றும், சந்திரனை தண்கதிரோன் என்றும் அழைப்பர். இருநீர் என்பது கடல். குளிர்ச்சியான சந்திர கிரணங்களால் கடல் பொங்குகிறது, வெப்பமான சூரிய கிரணங்களால் கடல் பொங்காது, வற்றிப் போகும். குளிர்ச்சி பொருந்திய சந்திர கிரணங்களைப்போல இன்சொற்களை உடையவனைக் கண்டு, அவன் பேச்சைக் கேட்டு இவ்வுலகோர் மகிழ்ச்சி அடைவர். வன்சொற்கள் உடையவனைக் கண்டு, அவன் பேச்சைக் கேட்டு, உலகோர் முகம் சுளித்து, அவனை வெறுப்பர். எனவே அனைவரும் இன்சொற்களையே பேசுதல் வேண்டும்.

'இன் சொல் அன்றி இருநீர் வியன் உலகம்
வன் சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண் என்
கதிர் வரவால் பொங்கும் கடல்.' - (பாடல். 18)

நல்லோர் வரவே நலம் அளிக்கும்:- தென்றல் காற்று மென்மையானது. சுழல் காற்று கடுமையானது. கல்வி அறிவுடையோர் நல்லவர்கள். கல்வி அறிவற்றோர் தீயோர். மாமரம் தென்றல் வீசும் காலத்தில் துளிர்விடும். சுழல் காற்று வீசும் போது, அதன் கிளைகள் முறிந்து வருந்தி நிற்கும். இதே போல நல்லோர் வரும்போது மக்கள் மகிழ்ச்சி அடைவர். கல்வியறிவற்ற தீயோர் வரும்போது மக்கள் சோர்ந்து துன்பமடைவர். எனவே, நல்லோர் வரவே நலம் அளிக்கும்.

'நல்லோர் வரவான் நகை முகங்கொண்டு இன்பு உறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர் காட்டித் தென்றல் வரத்தேமா
வருந்தும் சுழல்கால் வர.' -- (பாடல் 19)

பெரியவர் செயல்கள்:- மண்டு என்றால் நோய். கலுழ்தல் என்றால் அழுதல; எரி என்பது நெருப்பு. இழுது என்பது வெண்ணெய். நம் உடல் உறுப்புகளில் சிறந்தவை கண்ணளே. மற்ற உறுப்புகள் நோயினால் துன்புறும் பொழுது, நம் கண்கள் தானே நோயுற்றதுபோலக் கண்ணீர் சொரிந்து அழுகின்றன. அதே போல, பெரியோர், மற்றவர்களுக்கு வரும் நோயை, துன்பங்களை, தங்களுக்கு வந்ததாகவே கருதுவார்கள். அவர்கள் துன்பம் கண்டு, நெருப்பில் இட்ட வெண்ணெய் போல மனம் உருகுவார்கள், கண்ணீர் வடிப்பார்கள்.

'பெரியவர் தம்நோய்போல் பிறர்நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க – தெரி இழாய்!
மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.' - (பாடல் 20)

எழுத்து அறிவார்:- சுரநீர்- ஆகாய கங்கை. மிகை- கங்கையின் நீர்ப் பெருக்கம். எழுத்து- இலக்கண நூல். பகீரதன் ஆகாய கங்கையை மண்ணுலகத்துக்குக் கொண்டுவரக் கடும் தவம் புரிந்தவன். இதற்கு இறைவன் அருள் புரிந்தான். ஆனால், கர்வம் கொண்ட கங்கை, உலகை அழித்து விடும் நோக்குடன் விண்ணிலிருந்து இறங்கினாள். அப்போது, சிவபிரான் அவள் செருக்கு அடங்கத் தன் சடையை விரித்து, கங்கையின் வேகத்தைத் தாங்கினார். கங்கை வெள்ளம் சிவனின் சடையில் ஒடுங்கிச் செருக்கடங்கியது. அதே போல இலக்கண அறிவற்றவர் நிறையக் கற்றிருக்கலாம். ஆனால் இலக்கண அறிவுடையவர் முன், அவர்களுடைய கல்வியின் பெருக்கு, சிவனின் சடாமுடியில் செருக்குற்ற கங்கை அடங்கி ஓடுங்கியது போல, அடங்கி விடும்-

'எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார் காணின் இலைஆம் - எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை.' - (பாடல். 21)

அறிவே ஒருவன் உயர்வும், தாழ்வும்:- பாம்பின் தலையில் தோன்றுவது மாணிக்கக் கல். பாற்கடல்; தூய்மையானது. ஆனால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது. ஆலகாலம் எனப்படும் கொடிய விடம்தான் கிடைத்தது. பாற்கடலில் தோன்றியது என்று ஆலகால விடத்தை யாரும் குடிக்க மாட்டார். அதே போல, ஒருவர் தாழ்ந்த சாதியில் பிறந்து, அவர் அறிவு மாணிக்கக் கல் போல, உயர்ந்ததாக இருக்கலாம். இன்னொருவர் உயர் குடியில் பிறந்தவராக இருக்கலாம். அவர் அறிவற்றவரானால் யாரும் மதிக்கமாட்டார்கள். ஒருவன் உயர்வு, தாழ்வை அவன் சாதியைக் கருதி நிர்ணயிக்கக் கூடாது. அறிவே அதன் அளவு கேலாகும்.

'ஆக்கும் அறிவான் அலது பிறப்பினான்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க – நீக்குபவர்
ஆர் அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு.' - (பாடல். 22)


நோன்பு ஆற்றல் திகழ்ச்சி தரும்:- கல் வலிமையானது. எறும்பு மிகச் சிறிது. அக் கல்லின் மீது, சிறிய எறும்புகள் தொடர்ந்து ஊர்ந்து சென்றால், அக் கல் தேய்ந்து, குழி விழுந்து விடும். அதே போல் தவம் செய்பவன் மிக்க வலிமையுடையவனாக இருந்தாலும், அவன் பெண்களுடன் பழகினால், அவன் மன உறுதி, கல் தேய்ந்து குழி விழுவது போலத் தளர்ந்து போகும்.

'பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரும் நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும், பூரிக்கின்ற முலை பேதாய்! பலகால்
எறும்பு ஊரக் கல் குழியுமே.' - (பாடல். 23)

காக்கை விரும்பும் கனி:- சோலையில் மணம் தரும் மலர்கள், சுவை மிக்க கனிகள் பறவைகள் உள்ளன. வண்டுகள் மலர்களில் உள்ள தேனை உண்ணும். ஆனால் அங்குள்ள காக்கைகள் சுவை மிக்க கனிகளை உண்ணாது, கசப்பான வேப்பின் பழத்தை விரும்பி உண்ணும். அதேபோல, ஒருவர் நற்குணங்களைப் பெற்றிருக்கலாம். உயர்ந்தோர் அவர் குணங்களைப் பாராட்டலாம். ஆனாலும், கீழ்மக்கள், நல்ல கனியை விரும்பாத காகத்தைப் போல, அவர் குற்றங்களைப் பற்றியே என்றும் கூறுவர்.

'உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே – வண்டு மலர்
சேக்கை விரும்பும் செழும் பொழில் வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி.' - (பாடல். 24)

கல்லா அறிவின் கயவர்:- புனை என்ற தெப்பம் கனமில்லாதது, நீரில் மிதக்கும். அதில் ஏற்றப்பட்ட கனமான பொருளும் நீரில் மிதக்கும். அதே போலக் கல்வி அறிவில்லாதவர் கனமற்ற ஓடத்தைப் போல அறிவற்ற மூடர்களாக இருப்பார்கள். அறிவும் ஒழுக்கமும் உடைய கற்றோர் கனமுள்ள கல்லைப் போன்றவர்கள். கல்வி அறிவற்ற மூடர் தங்கள் பொழுதைக் கழிக்கக் கற்றோருடன் நட்புக் கொண்டு பழகினால், கற்றவர்களான அந்த நல்லவர்கள், தங்கள் கனத்தை, பெருமையை இழப்பார்கள். எனவே கற்றறிந்த மக்கள் மூடருடன் சேர்தல் கூடாதாம்.

'கல்லா அறிவின் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே, - வில் ஆர்
கணையின் பொலியும் கரும் கண்ணாய்! நொய்து ஆம்
புணையில் புகும் ஒண் பொருள்.' - (பாடல். 25)

கண்ணின் கருமணி:- பேரொளி கொண்டவன் சூரியன். கண்ணின் கருமணி, ஒளியைக் காண வல்லது. கண்மணியின் ஒளி, தன் இருப்பிடமாகிய கண்ணின் அளவோடு பொருள்களைப் பார்ப்பதில்லை. வானத்தின் எல்லை வரை சென்று, எல்லாப் பொருள்களையும் காட்சிகளையும் காண்கின்றது. அதே போலக் கல்வியானது, சூரியனைப் போல பேரறிவு மையமாக விளங்குகின்றது. சிறந்த புலவர்களின் அறிவோ அவர்களது உருவத்தைப் போலக் குறைவாக அமையாது, கண்ணின் கருமணி ஒளி போல எல்லா மெய்ப் பொருள்களையும் உணர வல்லதாக இருக்கிறது. ஒருவர் உருவம் கண்டு அவர் அறிவின் திறனை மதிக்கக் கூடாது.

'உடலின் சிறுமை கண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளி தான்
விண் அளவு ஆயிற்றே விளம்பு.' - (பாடல். 26)

முளைக்கும் எயிறு:- குழந்தைகளுக்கு முளைக்கின்ற பற்களினால் கடினமான பொருள்களை மென்று உண்ண முடியாது. சுவையான தின்பண்டங்கள் வலியனவாக இருந்தாலும், முளைக்கும் புதிய பற்கள், தங்களுக்கு எதுவித உதவியும் செய்யாத நாக்கிற்கு, தாங்கள் சிரமப்பட்டுக் கடினமான உணவுகளை மென்று கொடுத்து, நிறைந்த சுவையைத் தருகின்றன. அதே போலக் கற்றறிந்த பெரியோர் பிரதிபலன் எதிர்பாராமல், முளைக்கும் பற்கள் போல, பிறருக்கு உதவுவார்கள்.

'கைமாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.' - (பாடல். 27)

முனிவினும் நல்குவர் மூதறிஞர்:- வாழைமரம் குலையாகப் பழங்களையும், காய்களையும் தரும். அதே போல மூதறிஞர் மகிழ்ச்சியாக இருக்கும் போதும், கோபமாக இருக்கும் போதும் பிறருக்குக் கொடுத்து உதவுவர். எட்டி மரம் நஞ்சினை உடையது. அது காயானாலும், பழுத்தாலும் பிறருக்கு ஒரு பயனும் இல்லை. மூடர்கள் மகிழ்ச்சி, கோபம், சாந்தம் ஆகிய எந்நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஒன்றும் கொடுத்துதவார். அறிவுடையோர் வாழையைப் போலவும், மூடர் எட்டியைப் போலவும் இருப்பர்.

'முனிவினும் நல்குவர் மூதறிஞர், உள்ளக்
கனிவிலும் நல்கார் கயவர், - நனிவிளைவு இல்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை.' - (பாடல். 28)

மண்ணின் புலியும் மதிமானும்:- சந்திரனில் உள்ள களங்கம் மான்போன்ற தோற்றம் கொண்டது. நில உலக மான் புலியைக் கண்டு அஞ்சும; சந்திரனில் உள்ள மான் வெகுதொலைவில் உள்ள மண்ணுலகில் இருக்கும் புலியைக் கண்டு பயப்படாது. மக்கள் தம் உடலில் வரக்கூடிய துன்பங் கண்டு அஞ்சுவர். கடவுளுடன் ஈடுபாடு கொண்ட ஞானிகள், தங்கள் உடலுக்கு பல கோடி துன்பங்கள் வந்தாலும் அஞ்சுவதில்லை. அவர்கள் சிந்தனை என்றும் பரம் பொருளுடன் கூடி விடும். எனவே துன்பம் அவர்களை ஒன்றும் செய்யமாட்டாது.

'உடற்கு வரும் இடர் நெஞ்சு ஓங்கு பரத்து உற்றார்
அடுக்கும் ஒரு கோடி ஆக – நடுக்கம் உறார்
பண்ணில் புகலும் பனி மொழியாய்! அஞ்சுமோ
மண்ணில் புலியை மதிமான்.' - (பாடல். 29)

அறம் செய்து உய்கவே:- வெள்ளம் வருமுன் ஆற்றின் கரையை உயர்த்தி அழிவைத் தடுப்பர். அதேபோல, மனித உயிரைக் கவர எந்த நேரமும் கூற்றுவன் வருவான். இதைத் தடுக்க நாம் அறம் செய்ய வேண்டும். வெள்ளம் வருமுன் அணை கட்டுவது போல, தக்க நேரத்தில் தருமம் செய்தால், கூற்றுவனின் துன்பத்திலிருந்து விடுபடலாம். ஆகவே, வெள்ளம் வருமுன் அணைகட்டுவது போல, இறக்கும் நேரம் வருமுன் தருமங்களைச் செய்ய வேண்டும்.

'கொள்ளும் கொடும் கூற்றம் கொல்வான் குறுகுதல் முன்
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு.' - (பாடல். 30)

அடிதன்மேல் கை சென்று தாங்கும்:- கோலின் தாக்குதல் நடந்தால், எம் கையானது சென்று அதைத் தடுத்து, எம் உடலில் படாதவாறு பாதுகாக்கும். இதே போல ஒருவர் துன்புற்று வருந்தும்போது, பேரறிவு படைத்த மேலோர், உடலில் விழப் போகும் அடிகளைத் தடுக்கும் கைகளைப் போல, பிறர்படும் துன்பம் கண்டு விரைந்து சென்று பிறர் துன்பங்களைத் தாமே ஏற்றுக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பர்.

'பேர் அறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேர் இழாய்!
மெய் சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கை சென்று தாங்கும் கடிது.' - (பாடல். 31)

காழ் ஒன்று உயர்திண் கதவு:- வைரமான கதவின் தாழ் உறுதியாகவே இருக்கும். அதே போல நல்ல அறங்கள; சிறந்த நூல்களின் பொருளை உணரக் கூடிய அறிவுடையோரால் செய்யப்படுதல் வேண்டும். அறிவில்லாதவர் செய்யும் அறங்கள், தாழ் இல்லாத கதவைப் போல உறுதியற்றவையாகும். அறிவில்லாதவர் செய்யும் தருமங்களும் பயனைத் தராதாம்.

'பன்னும் பனுவல் பயன்தேர் அறிவு இலார்
மன்னும் அறங்கள் வலி இலவே – நல்நுதால்
காழ் ஒன்று உயர்திண் கதவு வலி உடைத்தோ
தாழ் ஒன்று இலது ஆயின் தான்.' - (பாடல். 32)

கரை காப்பு உளதோ கடல்:- குளம் சிறியது. எனவே, தன்னுள் அடங்கும்படியான குறைந்த நீரையே கொண்டிருக்கும். அந்த நீர் வெளியேறாதிருக்க கரைகளைத் தனக்கு அரணாக வைத்திருக்கும். கடல் மிகப் பெரியது. பரந்த நீர்ப்பரப்பைத் தன்னிடத்தே கொண்டுள்ளது. தன்னுடைய நீர் எங்காவது போய்விடுமோ என்று கடல் கவலையடைவதில்லை. ஆகவே, தன்னகத்து நீருக்குக் காவலாக, கடல் கரைகளைப் பெற்றிருக்கவில்லை. இதேபோல, சிறியவர்கள், குளத்தைப் போல, குறைவான குணங்களையே பெற்றிருப்பர். எனவே, இவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். பெரியோர், கடலைப்போல, நிறைவான குணங்களைப் பெற்றிருப்பர். இவர்களை ஒருவரும் இகழமாட்டார்.

'எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே – தள்ளாக்
கரைகாப்பு உளது நீர் கட்டு குளம், அன்றிக்
கரை காப்பு உளதோ கடல்? ' - (பாடல். 33)

குருட்டுக் கண் அஞ்சாது இருளுக்கு:- வாள்விழி என்றால்; வாளினைப் போன்ற ஒளி பெற்ற கண்கள். அவை இருளைக் கண்டு பயப்படும். ஒளி இல்லாத குருட்டுக் கண்கள் இருளைக் கண்டு அச்சப்படுவதில்லை. இதே போல, அறிவுடைய பெரியோர், வாள் விழிகளைப் போல, மானம் உடையவர்களாக இருப்பர். ஆகவே, பழியைக் கண்டு அஞ்சுவர். ஆனால், அறிவில்லாதவர் - மானம் அற்றவர் தம்மை நாடி வரும் பழியைப் பொறுத்துக் கொள்வர், பழிக்கு அஞ்சார். பெரியோர் பழிக்கு அஞ்சுவர். சிறியோர் பழிக்கு அஞ்சார்.

'அறிவு உடையார் அன்றி அதுபெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்!
வண்ணம் செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.' - (பாடல். 34)

அறிவினரைக் காமுறுவர்:- வாழைப்பழமும், பாலும் இனிமையான சுவையுடையன. புளித்த காடி நீர், முகம் சுளிக்க வைக்கும் தன்மையுடையது. இனிய வாழைப்பழம் சுவை மிக்க பாலுடன் சேரும். ஆனால், புளிப்பான காடிநீர், இனிப்பான வாழைப்பழத்துடன் சேராது. அதுபோல, நூல்பல கற்ற அறிவுடையவர் பல இனிய பண்புகள் பெற்றிருப்பர். இவர்கள் மேன் மக்கள். படிப்பற்ற கீழ்மக்களிடம் பண்புகள் இருக்காது. பாலும் பழமும் இணைவது போல, இனிய பண்புகள் கொண்டவர்களை, அதே போன்ற மேன்மக்கள் விரும்புவர். காடி கதலியை விரும்பாதது போல, கற்றறிந்த மேன்மக்களை, கல்லாத கீழ்மக்கள் விரும்ப மாட்டார்கள்.

'கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்னும் மதியாரே – வெற்றி நெடு
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்.' - (பாடல். 35)

தக்கார்க்கே ஈவர்:- நெல், மக்கள் உணவுக்கு அவசியம். ஆகவே, நெற்பயிருக்கு நீர் இறைப்பர் உழவர். காய்ந்த புல்லுக்கு எவரும் நீர் இறையார். மக்களுக்குப் பயன்படும் நெல்லைப் போல, இவ்வுலகத்துக்குத் தகுதியுடைய நன் மக்கள் மிகவும் தேவை. எனவே, அந்த நன் மக்களுக்கு எப்பொருளையும் கொடுப்பர். தகுதியற்ற கீழ்மக்களால் இவ்வுலகிற்கு எதுவிதப் பயனும் இல்லை. காய்ந்த புல்லைப் போலப் பயனற்ற கீழ்மக்களுக்கு எவரும் பொருள் கொடுக்கமாட்டார். மேன்மக்களுக்கே உதவுவர்.

'தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று
மிக்கார்க்கு உதவுவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீர் அன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பரோ போய்?' - (பாடல். 36)

விந்தமலை உயர்வு தாழ்ந்தது:- விந்தமலை தன் உயரத்தால் மிகக் கர்வங் கொண்டிருந்தது. அதை அறிந்த குள்ள முனி அகத்தியர், அதன் அகந்தையை அழிக்க, அம்மலையின் முடியின் மீது தம் கையை வைத்து அழுத்த, மலை உயரம் குன்றி, அமுங்கிப் போயிற்று. அதே போல, ஒருவன் தன்னை உயர்ந்தவன் என்று கூறி, கர்வம் கொண்டு, பெரியோர் முன்பாகத் தன்னைப் புகழ்ந்து கூறிக்கொள்ளல் கூடாது. அப்படி அவன் அகந்தை கொண்டால் விந்துமலைக்கு நடந்ததுதான் நிகழும்.

'பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் கொல்
பொன் உயர்வு தீர்ந்த புணர்முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.' - (பாடல். 37)

நல்லோர் நட்பு நலன் தரும்: காய்கள் நமக்குப் பயன்படுவன. காய்கள் முற்றிப் பழமானாலும் அவற்றை நாம் உண்ணலாம். அதே போல நல்லவர்களால் பலருக்குப் பலன் உண்டு. அவர்கள் நட்பு நாள்தோறும் வளர்ந்து பெரும் பலனைத் தரும். தாவரங்களின் குருத்தான இளம் தளிர்கள் உறுதியற்றவை. அவை நன்கு முற்றினால் பழுப்படைந்து விடும். இப் பழுவால் ஒருவிதப் பயனுமில்லை. இதே போல, தீயோர் உறுதியற்றவர். அவர்கள் நட்பு வளராது, நன்மை தராது, தேயக்கூடியது. நல்லோர் நட்பு நலன் தரும். தீயோர் நட்பு துன்பம் தரும்.

'நல்லார் செயும் கேண்மை நாள் தோறும் நன்று ஆகும்
அல்லார் செயும் கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்
காய் முற்றின் தின் தீங்கனி ஆம் இளம்தளிர்நாள்
போய் முற்றின் என் ஆகிபோம்.' - (பாடல். 38)

கற்றறியார் நட்பு தீமை பயக்கும்:- பச்சிளங்கொடி பரவிச் சென்று படர்ந்து, மென் பூக்கள் பூத்து மலரும். மலரும் போது மணம் வீசி நின்று, அதன் பின் மணமிழந்து வாடி உதிர்ந்து போகும். அதேபோல, கல்வியறிவற்றவர் நெருங்கி வந்து நட்புக் கொள்ளுவர். ஆனால் நாட்பட அவர்கள் நட்பு, மணமிழந்து வாடி உதிரும் மலர்களைப் போல, தீமையையே தரும்.

'கற்று அறியார் செய்யும் கடும்நட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே – பொன் தொடீ
சென்று படர்ந்த செழும் கொடி மென்பூ மலர்ந்த
அன்றே மணம் உடையது ஆம்.' - (பாடல். 39)

கண் ஒக்குமோ காண்:- மனித உடலில் பல உறுப்புகள் உள்ளன. அவற்றில், சில உறுப்புகளுக்கு நாம் பொன் ஆபரணங்களை அணிகின்றோம். ஆனால், நாம் கண்ணுக்கு மட்டும் அணிகலங்களை அணிவதில்லை. (மூக்குக் கண்ணாடி அணியும் வழக்கம் அன்று இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.) அப்படி இருந்தும், கண், பிற உறுப்புகளுக்கு இல்லாத பொருள்களைக் காண்பதற்கான பார்வையைப் பெற்றுள்ளது. அணிகலங்களால் அழகுபடுத்திக் கொள்ளும் மற்ற உறுப்புகள், அணிகலம் அற்ற கண்களின் பெருமைக்கு ஈடாக மாட்டா.

அதேபோல, இவ்வுலகில் அரசர்களுடன், சிறந்தவர் பலர் உள்ளனர். இவர்கள் அணிகலங்களால் தம்மை அழகுபடுத்திக் கொள்வர். ஆனால், உலகில் சிறந்த அறிவாளிகள் எந்தவொரு அணிகலங்களையும் அணிவதில்லை. ஆனால், இவர்கள், மற்றவர்களுக்கு இல்லாத நிலையான அணிகலன்களாகிய கல்வியைப் பெற்றிருக்கிறார்கள். பொருட் செல்வமுடைய அரசர்களை விட, கல்விச் செல்வம் நிறைந்த அறிஞர்களே உயர்ந்தவர்களாவர்.

'பொன் அணியும் வேந்தர் புனையாப் பெரும் கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னும் அணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே! அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்.' - (பாடல். 40)

முடிவுரை.
சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி நூலில் உள்ள 40 பாடல்களும் தனிப் பெரும் தன்மையைப் பெற்று, யாவர் மனத்தையும் தொட்டுச் சென்று, அரிய நீதிநெறிகளை நிறைய அடுக்கி, அழகான உவமைகளைக் கையாண்ட பாங்கினைச் சிந்தைக்கு எடுப்போம், சிந்திப்போம், செயற்படுவோம்.

இனி, அப்பாடல்களில் அமைந்த சிந்தையைத் தொட்டு நிற்கும், குறும் நன்நெறிகளைக் காண்போம். 1. பூங்கை நாவிற்கு ஊட்டும் உணவு, 2. மாசு அற்ற நெஞ்சு, 3. ஆவின் பால் கன்றினாற் கொள்ப கறந்து, 4. கடல் நீர் மழையாய்ப் பெய்யும், 5. நல்ல நட்பினர் பி ரிதல் கூடாது, 6. கண் இரண்டும் ஒன்றையே காண், 7. கல்விச் செருக்குக் கூடாது, 8. சினம் காக்கும் பண் சிறந்தது, 9. மெலியோர் வலியோரைச் சார்ந்து வாழ வேண்டும், 10. திங்கள் இருளை நீக்கி ஒளியைத் தருகின்றான், 11. ஐம் புலன்களை அடக்கி ஆளும் ஆற்றல் பெற்றவர் மெய்யறிவுடையோர், 12. ஒன்பது வாயில் உடம்பு உயிரைத் தாங்குகின்றது, 13. கொடைக் குணம் கொண்டவர் மேலோர், 14. செல்வச் செருக்குக் கூடாது, 15. அன்புடையார் அறம், புகழ் பெறுவர், 16. பெரியோர் தேடிச் சென்று உதவுவர், 17. அறிவுடையோர் வாழைக்குட்டி போல் வாழ்வர், 18. இன் சொல்லே பேச வேண்டும், 19. நல்லோர் வரவு நலன் அளிக்கும், 20. பெரியோர் மற்றவர் துன்பம் கண்டு உருகுவர், 21. இலக்கணம் கற்றவர் முதல் இடம் பெறுவர், 22. அறிவே ஒருவன் உயர்வும், தாழ்வும், 23. நோன்பு ஆற்றல் திகழ்ச்சி தரும், 24. காக்கை விரும்பும் கனி, 25. கற்றறிந்தார் மூடருடன் சேரக் கூடாது, 26. ஒருவன் உருவங் கண்டு அவர் அறிவை மதிக்கக் கூடாது, 27. பெரியோர் பிரதிபலன் பாராது பிறருக்கு உதவுவார், 28. முனிவிலும் நல்குவர் மூதறிஞர், 29. ஞானிகள் துன்பங் கண்டு ஒதுங்கார், 30. அறம் செய்து உய்கவே, 31. பெரியோர், பிறர் துன்பங்களைத் தாமே ஏற்று அவர்களைப் பாதுகாப்பர், 32. அறிவில்லாதவர் செய்யும் தருமங்கள் பயனைத் தராது, 33. கடலுக்குக் கரை கிடையாது, 34. குருட்டுக் கண் அஞ்சாது இருளுக்கு, 35. கற்றாரைக் கற்றாரே காமுறுவர், 36. மேலோர் தக்கார்க்கே ஈவர், 37. கர்வம் கொண்டிருந்த விந்தமலை தன் உயர்வு தாழ்ந்தது, 38. நல்லோர் நட்பு நலன் தரும், 39. கற்றறியார் நட்பு தீமை பயக்கும், 40. பொருட் செல்வத்தை விடக் கல்விச் செல்வமே சிறந்தது.

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் சொன்ன நன்நெறிகள் மக்கள் மத்தியில் பரவிச் சென்று, அவர்கள் சிந்தையிற் பதிவாகி, அவர்தம் வாழ்வியலை மேல் நிலைப்படுத்தும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லையெனலாம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 02 August 2017 16:24