சந்தேகித்தால் சந்தோசமில்லை

Monday, 12 March 2012 21:50 -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)- நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
Print

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)சந்தேகம் என்னும் ஐயம், தயக்கம், நிச்சயமின்மை, அவநம்பிக்கை, மனவுறுதியின்மை, உறுதியற்றநிலை ஆகியவை மனித வாழ்க்கையின் வளர்ச்சியைத் தகர்த்துத் தீராத் தொல்லைகளைத் தந்த வண்ணமுள்ளது. சந்தேகம் மக்களைச் செயலிலிறங்க முடியாதவாறு தயக்கம் காட்டித் துணிவும் ஊட்டி நிற்கின்றது. இவ்வாறான செயல் சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.  தரத்தில் விஞ்சிய மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாட்டில் ஐயுறவு எழுந்ததனால் பல ஆய்வறிவு சார்ந்த முன்னேற்றங்கள் உருவாகியன என்று விஞ்ஞான ரீதியில் கருதப்படுகிறது. எதிரி முறையில் அமைந்த அதிகமான சட்டத்தை மீறும் வழக்குகளில் வழக்குத் தொடுனர்  நிலை நிறுத்த வேண்டிய செய்திகளை ஐயப்பாடேதுமின்றி வாதமூலம் நிலைநாட்ட வேண்டுமென்பது சட்டக் கோட்பாடாகும்.

 மேற்கோள் வாசகம்

இனி, ஐயம் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் கூறிய மேற்கோள் வாசகங்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

• ‘தன்னடக்கமுடைய ஐயம் விவேகத்தின் கலங்கரை விளக்காகும்’ (வில்லியம் சேக்ஸ்பியர் - William Shakespear).

• ‘ஐயுறவுப் பழக்கத்திலும் பார்க்க மிக மோசமானது வேறொன்றுமில்லை. ஐயம் மக்களைப் பிரித்து வைக்கிறது. ஐயம் நட்புறவைக் கூட்டழித்தும், உறவைப்  பிரித்தும் வைக்கும் நஞ்சாகும். இது சினமூட்டித் துன்புறுத்தும் குத்தும் முள்ளாகவும்;, கொலை புரியும் குத்து வாள் போன்றதுமாகும்.’ (புத்தர் -Buddha).

• ‘ஒருவரின் வாயைத் திறந்து அவர் சந்தேகங்களை வெளிக் கொணர்வதிலும் பார்க்க ஓர் அறிவிலி என்ற நினைப்பில் அமைதியாயிருப்பது சிறந்தது.’ (ஆபிரகாம் லிங்கன்- Abraham Lincoln).

• ‘ஐயம்  எழுங்கால்  செயலில்  ஈடுபடாதிரு.’  (பென்சமின் பிறாங்லின்-  Benjamin Franklin.)
• ‘ஐயுறவை ஏற்றுக்கொள்வதுதான் என் திடநம்பிக்கை.’ (பராக் ஒபாமா – Barack Obama)

• ‘சந்தேகம் இல்லையெனில், இயந்திரஅமைப்பு, செல்வ வளமுள்ள அதிகமான சோம்பேறிகளை உருவாக்கி விடும்.’ (கார்ல் மார்க்  - Karl Marx).

• ‘ஐயம் புலன்களுக்கு இணக்கமான நிலைமையன்று. ஆனால் அது உறுதியாக நகைப்புக்குரியது,’ (வொல்ரயர் - Voltaire).

• ‘ஐயுறவு எழுங்கால் உண்மை பேசு.’ (மார்க் ருவெய்ன் - Mark Twain.).


பழமொழி

பழமொழிகள் ஒவ்வொரு நாட்டிலும் மூதுரைகளாய் அமைந்து பல செய்திகளைக் கூறி அந்தந்த நாடுகளின் செல்வத்தினை எடுத்தியம்பி நிற்கின்றன. பல்வேறு நாடுகள் ஐயம் பற்றிக் கூறும் பழமொழிகள் ஒரு சிலவற்றையும் காண்போம்.

•  ‘ஒருவனை ஐயப்படுவதற்குமுன் அதனை ஏழு முறை தீர விசாரிக்க வேண்டும்’   - (யப்பான்)

• ‘ஆழ்ந்த ஐயம், ஆழ்ந்த மெய்யறிவு. சிறிய ஐயம், சிற்றளவான மெய்யறிவு.’  (சீனா)

• ‘ஒன்றும் தெரியாதவனுக்கு ஐயப்படவும் தெரியாது.’ (ஆங்கிலம்)

• ‘ஐயம் செயலாற்றுத் தொடக்கம், மெய்யறிவின் முடிவன்று.’ (ஆங்கிலம்)

• ‘ஐயுறவென்பது ஒருவனின் செயலில் அரைப் பங்கை முன்னதாகவே இழந்ததற்கு ஒப்பாகும்.’ (செக்கொஸ்லேவாக்கியா)

• ‘ஐயம் தீர்ந்தும் நெஞ்சாரவில்லை.’ (தமிழ்)

• ‘ஐயமான காரியத்தைச் செய்யலாகாது,’ (தமிழ்)

இலக்கியப் பார்வை

காலத்தால் மூத்த இலக்கியங்கள் சந்தேகத்தால் ஏற்பட்ட நன்மை தீமைகளை எவ்வண்ணம் விபரித்துக் கூறுகின்றன என்பதையும் ஈண்டுக் காண்போம்.

மகாபாரதம்

‘பாண்டவர்களின் செல்வம் நாள்தோறும் வளர்கிறது. நமது செல்வமோ குறைந்து கொண்டு போகின்றது. அவர் புகழ், வீரம் யாவும் பெருகுகின்றன. அவர்களைப் போரில் வெல்ல முடியாது.’ என்று சந்தேகங் கொண்டான் துரியோதனன். தன் மாமன் சகுனியின் உதவியுடன் பாண்டவர்களைச் சூதாட்டத்தில் வென்று, அவர்களைப் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் அனுப்பி, அதன்பின் பாண்டவர்கள் வந்து நிபந்தனையின்படி இழந்த நாட்டைத் தரும்படி கேட்க, துரியோதனன் மறுத்தரைக்கப் போர் மூண்டு துரியோதனன் ஆகிய அனைவரும் போரில் மடிய, பாண்டவர் தருமர் தலைமையில் அரசாட்சி புரிந்து வந்தனர். துரியோதனன் கொண்ட சந்தேகம், சந்தோசமின்மையிலும் பார்க்க அவனை இந்நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

கம்பராமாயணம்

(1) இலங்கையில் இராவணனைப் போரில் மாய்த்து வென்ற இராமன் வீடணனை அழைத்து ‘நீ சென்று சீதையைக் கொண்டு தருக’ என்றான். சீதை வந்ததும், இராமன் அவளைக் கண்டு கடிந்து பேசினான். ‘நீதியற்ற இராவணனின் இலங்கை நகரில் நெடுங் காலம் அவனுக்கு அடங்கி இருந்து அறுசுவை உணவை உண்டாய். உன் ஒழுக்கம் கெட்டும் நீ சாகவில்லை. நான் உன்னை விரும்புவேன் என்று நினைத்தாய் போலும். உன்னை மீட்பதற்காக நான் இராவணனை போரில் அழிக்கவில்லை. தன் மனைவியைக் கவர்ந்தவனைக் கொல்லவில்லையே என்ற பழி என்னைச் சூளாதிருக்கவே அவனைக் கொன்றொழித்தேன். இனியும் நீ எனக்குப் பணிவிடை செய்யும் தகுதியுண்டோ? எனவே நீ செத்தொழி, அல்லது உனக்கேற்ற இடத்துக்குப் போய்விடு.’ என்று சந்தேகம் கொண்ட இராமன் சொன்னான். சீதை கலங்கினாள், அழுதாள், சிந்தினாள், வருந்தினாள், உயிர் துறக்கத் துணிந்து இலக்குவனை அழைத்து, ‘நீ தீயை உண்டாக்குவாய்’ எனக் கூறினாள். எரியும் தீயில் சீதை பாய்ந்தாள். சீதையின் கற்புத் தீயினால் அந்நெருப்பு, பாலில் நனைந்த பஞ்சு போல் அணைந்தது. இதன்பின் இராமன் சீதையை ஏற்றுக்கொண்டான். ஆனால் இராமனிடம் எழுந்த சந்தேகம் தீர்ந்து விட்டதா? என்பது சந்தேகமே. இனி அதையும் பார்ப்போம்.

(2) இராமன் காடு சென்று வந்து அரசு மேற்கொண்டு ஆட்சி புரிகின்றான். அன்றொருநாள் இராமன் ஒற்றர்களை அழைத்து ‘இந்நகரிலும் நாட்டிலும் உள்ள மக்கள் பேசும் நன்மை தீமைகளை நீங்கள் சிறிதும் கூச்சப்படாமல் என்னிடம் கூறுவீh!;’ என்றான். ஒற்றர்கள் இராமனை வணங்கி, ‘மன்னவனான இராமன் மனைவி சீதையை இலங்கை அரசன் இராவணன் ஓர் ஆண்டாக இலங்கையில் சிறை வைத்திருந்தான். அவளை மானமில்லாது தாரமாய் ஏற்றுக் கொண்டு அவளுடன் குடும்பம் நடத்துவது பெரும் குற்றமும் தாழ்வும் ஆகும் என்று பேசுகிறார்கள்’ எனத் தெரிவித்துச் சென்றனர். இதைக் கேட்ட இராமனுக்கு மீண்டும் சந்தேகம் தலை விரித்து ஆடத்தொடங்கி விட்டது. இராமன் இலக்குவனை அழைத்து ‘சீதையைக் காட்டிற் கொண்டு சென்று வால்மீகியின் ஆச்சிரமத்தில் விட்டு வருவாய்’ என்றான். கற்பவதியான சீதை காட்டில் பட்ட பெருந் துயரங்களை யார் அறிவார்?. சீதை தீயிற் பாய்ந்து தன் கற்பை நிலைநாட்டியபின்பும், கடவுள் அவதாரங் கொண்ட இராமனுக்கு இவ்வாறான சந்தேகங்கள் எழுந்தனவே என்று சிந்திக்க வைக்கின்றது.

சிலப்பதிகாரம்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கலையரசன் கோவலன், கற்புக்கரசி கண்ணகியை மணந்து, பின் அவளைப் பிரிந்து விலைமகள் குடும்பத்தில் பிறந்த கலையரசி மாதவியுடன் காதல் வாழ்வு வாழ்ந்து, பின் ஊடல் காரணமாகக் கோவலன், மாதவி இருவரும் காதற் பொருளில் கானல் வரி பாடிய பொழுது, அதை மாதவி அயலான் ஒருவன்மேற் கொண்ட கள்ளக் காதல் என்று கோவலன் ஐயப்பட்டான். மாயமும், பொய்யும் உடைய குலத்தில் பிறந்த மாதவிக்கு இது இயல்புதான் என்று துணிந்த கோவலன் அவளையும் பிரிந்து கண்ணகியிடம் சென்று விட்டான்.

கானல் வரியால் ஏற்பட்ட சந்தேகம் தந்த விளைவுகள் இவை:- பாண்டிய மன்னன் ஆணைப்படி கோவலன் கொலை செய்யப்பட்டமை, கண்ணகி பாண்டியன் சபை நாடி நீதி கேட்டு நீதி தவறிவிட்டேனென்று பாண்டியன் உயிர் துறந்ததும், அவனுடன் பாண்டிமாதேவியும் உயிர் நீத்ததும், கண்ணகி மதுரை நகரை எரித்துத் தானும் தெய்வமானதும், கோவலன் பிரிவால் மாதவி துறவு பூண்டதும், கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையும் துறவு பூண்டு அறவாழ்வை மேற்கொண்டதும், கண்ணகியின் தாயும் மாமியும் உயிர் விட்டதும், மாமனும் தந்தையும் துறவு பூண்டதும் ஆகியனவாம்.

திருக்குறள்

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் ஐயம் பற்றிக் கூறும் செய்திகளையும் பார்ப்போம். ‘ஐயத்திலிருந்து மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட, அடைய வேண்டிய மேலுலகம் அவர்க்கு அண்மையில் உள்ளதாகும்’ - (353). ‘ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்’- (702). திருவள்ளுவர் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘தெய்வப் பெண்ணோ? மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் ஐயப்படுகிறதே!’-(1081) என மயங்கினார். ‘பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?’-(1089) என்றொரு ஐயம். ‘யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்ல, ‘யாரைவிட? யாரைவிட?’ என்று கேட்டு ஐயம் கொண்டாள். (1314). ‘நினைத்தேன்’ என்று கூறினேன்;; ‘நினைப்புக்குமுன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர்?   என்று என்னைத் தழுவாமல் ஊடி ஐயம் கொண்டாள்’. –(1316). அவளுடைய அழகை நினைத்து அமைதியாக அவளை நோக்கிப் பார்த்தாலும், ‘நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கிறீர்’ என்று சந்தேகித்துச் சினம் கொண்டாள். –(1320).

நற்றிணை

தலைவன் பரத்தையுறவு கொண்டிருந்தான். இதைத் தலைவி தோழி மூலம் அறிந்து கொண்டாள். சின்னாளில் தலைவியின் மனைக்குத் தலைவன் வருகின்றான். தலைமகள் உள்ளத்தில் அவன்மீது ஊடல் இருந்தாலும், அவள் அவன்மேல் சந்தேகித்து ஊடியும், சினந்தும் அவனைப் பழித்துக் கூறுகின்றாள். ‘‘என் பழைய அழகு முற்றும் தொலைவதாயினும், உன்னை என் பக்கத்தில்கூட நெருங்க விடமாட்டேன். அப்படி நெருங்க விடுவேனாயின் நீ இறுகக் கட்டித் தழுவும் கையணைப்பை விலக்கி ஒதுக்க முடியாதவளாவேன். பரத்தையின் சந்தனம் உன் மார்பில் உள்ளது. அவளோடு தழுவியதால் உன் மாலை வாடிக்கிடக்கின்றது. ஆகவே என் மனை வராதே.  உன்னைத் தழுவி நிற்பவளான பரத்தையுடன் வாழ்வாயாக!.’’-(350). இதனால்  தலைவன், தலைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் சந்தோசம் குலைந்து அக் குடும்ப வாழ்க்கை பரிதாப நிலையடைந்துள்ளமையை மனத்தில் வாங்க முடியாதுள்ளது.

பரிபாடல்

தலைவியைப் பிரியேனென்று கூறிப் பிரியத் தொடங்கும்போது தலைவன்பால் ஐயம் கொண்டு ஊடிச் சீறினாள்  தலைவி.  ‘‘ நீ பரத்தையருடன் கூடி, உறவாடி இன்பமனுபவிக்கின்றாய்.  அவர் நறு மணம் உன்னிலும் நாறுகின்றது.  காலையில் சென்று மாலையில்தான் மனைக்கு வருகின்றாய்.  பகல் நேரத்தே சேரியில் பரத்தையருடன் பரவசமடைகின்றாய்.  இனியாவது  பரங்குன்றைக் குறித்துப் பொய் ஆணையிடும் உன் செயலை நிறுத்திக் கொள்வாயாக.’’ என்று கடிந்துரைத்தாள் தலைவி.- (08)

கலித்தொகை

பரத்தையர் சேரியிலே தங்கி விட்டு வீடு வந்த தலைவனைச் சந்தேகித்த தலைவி ‘‘இங்கே நான் வாடி வருந்கிக் கிடக்கின்றேன். நீ பரத்தையரோடு கூடிக் கலந்து மகிழ்ந்த களிப்புடன் என் முன் வந்துள்ளாய். அவர்களுடன் நீர்விளையாடி மகிழ்ந்திருக்கின்றாய் எனப் பிறர் வந்து கூறினர். உன் மாலையை எவளுக்கோ அணியக் கொடுத்து விட்டு, அவள் தலையில் அணியும் கோதையைச் சூடியுள்ளாய். நான் இங்கு தனித்து வருந்திக் கிடக்க, நீயோ அழகிய பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடினாய் என்ற செய்தியையும் கேட்டேன். நீயோ அந்தக் களிப்பு மங்காது என்முன் வந்துள்ளாய். ஏதோ இப்படியாவது வந்து அருள் செய்தாய். அதுவே போதும். உன் பரத்தையர் வருந்துவார்கள். அவர்களிடம் மீண்டும் போய் அவர் நலம் காப்பாயாக!’’என்று கூறி அவனை ஒதுக்கி வைத்தாள்.(மரு.1).

விஞ்ஞானம்

விஞ்ஞான ஆய்வுக்கும் சந்தேகத்துக்கும் மிக நெருங்கிய உறவுண்டு. எந்த விஞ்ஞானிக்கும் சந்தேகம் எழாதிருக்க முடியாது. ஆய்வின் பொழுது சந்தேகம் எழாதிருந்தால் அந்த ஆய்வு முழுநிலை பெற்றதாகக் கணிக்கப்பட மாட்டாது. ஏனெனில் ஆய்வின் போது எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தால் அந்த ஆய்வு உயர்நிலை பெற்றுள்ளதாக மற்றைய ஆய்வாளர்களால் போற்றப்படுவர். இங்கு ஆய்வின்கண் எழும் சந்தேகங்கள் ஆய்வாளர்களுக்கு ஒரு தீங்கும் தராது பாரிய நன்மைகளையே தந்து உதவுவன. இவை பற்றி இரு உதாரணங்களைப் பார்ப்போம்.

(1) பூமி தட்டையா? உருண்டையா? மனிதன் தோன்றிய காலத்தில்; பூமியைத் தட்டை என்றுதான் கருதினான். இதே கருத்தில் பல கோடி ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து வந்தான் மனிதன். கி.மு.600 ஆம் ஆண்டில் பைதகொறஸ் (Pலவாயபழசயள) என்ற விஞ்ஞானிக்குப் பூமி தட்டையா? உருண்டையா? என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. இச் சந்தேகத்தால் அவர் உந்தப்பட்டு ஆய்வுகள் பல செய்து பூமியானது உருண்டை என்று கூறினார். இதை கி.மு.330 ஆம் ஆண்டில் அரிஸ்ரோட்ல் (யுசளைவழவடந) என்ற விஞ்ஞானியும் பூமி உருண்டைதான் என்று ஒத்துக்கொண்டார். பல கோடி ஆண்டுகளாக மறைந்து கிடந்த ஒர் அரிய பேருண்மையைச் சந்தேகம் வெளிக் கொணர்ந்து மக்களை மகிழ வைத்துள்ளது.

(2) மிதிவண்டி (டீiஉலஉடந): வண்டிகள் பல வகைப்பட்டவை. இவற்றில் மூன்று, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினான்கு சக்கரங்கள் அமைந்த வண்டிகள் தற்போது பாவனையில் உள்ளன. இவை ஓடாது தரித்து நிற்கும்போது விழுந்து விடாது நிற்கக் கூடியவை. இனி, இருசக்கரவண்டி பற்றிப் பார்ப்போம். இவ் வண்டியை மிதி கட்டையுடன் 1860 ஆம் ஆண்டில் பிராஞ்சு நாட்டுப் புத்தாக்கப் புனைவாளர்களான பியர்ரி லால்லிமென் (Pநைசசந டுயடடநஅநவெ) என்பவரும், ஏனெஸ்ற் மிச்சாயுச் (நுசநௌவ  ஆiஉhயரஒ) என்பவரும்  கண்டு பிடித்தனர். இது 19 ஆம் நூற்றாண்டில் மக்கள் பாவனைக்கு வந்தது. அப்பொழுது இவ்வண்டி தரித்து நிற்க முடியாது விழுந்து விடும் என்று மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இச் சந்தேகம் கண்டு பிடிப்பாளர்களுக்கும் எழாமலில்லை. இவ்வண்டிக்கு விசையைக் கொடுத்தால் அது விழாமல் ஓடிக்கொண்டிருக்கும் என்று மக்களுக்குக் கூற அவர்களும் ஏற்றுக் கொண்டனர். இவ்வண்ணம் இவ்வண்டி பாமரமக்களின் நண்பனாகியது.

இதுகாறும், மேற்கோள் வாசகம், பழமொழி, மகாபாரதம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, விஞ்ஞானம் ஆகியவை ஐயம் பற்றியும் சந்தேகம் பற்றியும் கூறிய செய்திகளையும் அதனால் எற்படும் நன்மை தீமைகளையும் விரிவுபடுத்திப் பார்த்தோம். இவற்றால் எம் வாழ்வியல் சிறக்கும், நாமும் சிறப்போம், முன்னேறுவோம் என்ற மனத் துணிவும் பெற்று இன்பமுடன் வாழ்வோம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 09 September 2013 19:17