‘ஃபனி போய்’: நாவலும் சினிமாவும்எழுத்தாளர் தேவகாந்தன்கடந்த டிசம்பர் 04 2020இல் CBC Gem இல் தீபா மேத்தாவின் ‘ஃபனி போய்’ சினிமாவின் கனடா தழுவிய காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. நான் பார்த்தேன். ஆயினும் கணினியில் பார்த்ததில் அது போதுமான விகாசம் கிடைத்திருக்கவில்லை. அதனால் மீண்டும் Shyam Selvadurai யின் Funny Boy நாவலுக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் புகுந்து வெளியேறினேன்.

நாவலினூடு சினிமாப் பிரதியின் பிரவேசம் அவ்வளவு அவசியமில்லையென முன்பெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் பிரச்னை எழுந்துள்ள இந்தச் சூழ்நிலைக்கு அது அவசியமென்று பட்டது. ஏனெனில் ஒரு நாவலை சினிமா ஆக்குவதென்பது தழுவி எழுதுதல், அதன் பாதிப்பில் எழுதுதல், அதன் பிடித்த ஒரு பகுதியை மய்யமாக்கி மற்றவற்றை தான் புதிதாய்ப் புனைந்தேற்றல் என பல வழிகளும் தளங்களும் கொண்டது. ஆக, சினிமா நாவலை எவ்வளவு தூரம் சுவீகரித்துள்ளது என்பது சினிமாவின் ஆன்ம தரிசனத்தின் ஒரு நிலையை அறிய உதவியாயிருக்கும். ஆயினும் நாவலின் சுவீகரிப்பு எவ்வளவாயிருந்தாலும் அதன் கணிப்பு சினிமாவின் தன்மைகளைக் கொண்டே அமையவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கூடா. அதைக் கணிக்க சினிமாபற்றிய அலகுகள் தனியாகவே உள்ளன.

என் வாசிப்பும் காட்சியும் முடிந்து நான் திரும்புவதற்குள் தமிழ்ப் புலத்திலும். ஆங்கில பத்திரிகை உலகத்திலும், பிற ஊடகங்களூடாகவும் முடிந்தளவு வலிமையாக துருவ முரண் எல்லைகளில் அச் சினிமாபற்றிய அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டு விட்டிருந்தன.

‘ஷ்யாம் செல்வதுரையின் அர்த்தபூர்வமான தளங்களும், தீபா மேத்தாவின் அவற்றின் காட்சிப்படுத்தல்களும் மிக வலிமையாக சினிமாவில் வெளிப்பட்டுள்ளன’ என்பதான Andrew Parker இன் The Gate இல் வெளியான விமர்சன அபிப்பிராயம் மிக முக்கியமானதென்கிறார்கள் திரை விமர்சகர்கள். அது பின்னால் வந்த விமர்சனங்களை நெறிப்படுத்தியது என்ற குற்றச்சாட்டும் உடனடியாகச் சொல்லப்பட்டது. Los Angeles Times இன் Tracy Brown, National Post இன் Chris Knight, The Global and Mail இன் Tina Hassannia வின் கருத்துக்களும் ‘ஃபனி போய்’ சினிமாவை நிறுதிட்டமாக உயர்த்தி வைத்தியிருக்கின்றன. போதாததற்கு TIFFஇன் ஆண்டின் சிறந்த பத்து படங்களுள் ஒன்றாக இது தேர்வாகியும்விட்டது.

எப்போதும் துருவ முரண்களின் அபிப்பிராயங்கள்போலவே நடுநிலைக் கருத்து வெளிப்படுத்துகைகளிலும் ஒருவரின் அரசியல் பொருணிலை பண்பாட்டுக் கூறுகள் உள்ளன என்பது ரோலன் பார்த்தின் பின்அமைப்பியல் வாதம். இரு துருவ நிலைகளும், நடுநிலையும்கூட, அரசியல் காரணப் புலங்கள் கொண்டவை.

அமெரிக்க Timesஉம் மற்றும் ஏனைய கனடிய பத்திரிகைகளும் ஒருமுகமாகவே ‘ஃபனி போய்’ கலவரம் குறித்த இலங்கையின் சமூகச் சூழலில் தற்பாலினரின் ஒழுகலாறும் அதன் தொடர்ச்சியாக ஒருபாற் புணர்ச்சி நாட்டமும் கொள்வதன் தவிர்க்கமுடியாமைகள் சிறப்பாக வெளிப்பட்ட சினிமாவென சிலாகித்திருக்கின்றன.

பிரிட்டிஷ் காலத்தின் பின்னால் இலங்கையில் அரசியல் பிரச்னை தோன்றி வளர்ந்த வரலாறுபற்றிய மேற்கத்திய நோக்குடைய சிந்தனையிலும் அறிதலிலும் வெளிவந்த மேலோட்டமான அபிப்பிராயங்களே அவர்களிடமிருந்தன என்பதை விளங்கப்படுத்தத் தேவையில்லை. அவை அவ்வாறுதான் இருக்கமுடியும். அவர்களால் உண்மையில் இலங்கை அரசியலின் சிக்கலான அடியாதாரப் பிரச்னைகளை விளங்கிக்கொள்ள முடியாது. அவர்களின் அந்த வகையான கருத்து ஒருவகையான அதீதமான இடைஞ்சலைச் செய்கிறதெனில், இன்னொரு பக்கமாக மாற்று அணியினர் உருவாக்கும் இடர்ப்பாடுகள் வேறொரு தடையாக வந்து நின்றுகொண்டிருக்கின்றன. இந்த இரண்டு அணியினருமே விஷயத்தை சரியானபடி காணவில்லை என்பது நிச்சயம். ஆக இதுதான் சரியான விமர்சனத்தின் ஆரம்பப் புள்ளி.

இது தீபா மேத்தாவின் ‘ஃபனி போய்’ சினிமா அடிப்படைக் குறைபாடுகளைக்கொண்டுள்ளது என்பதை மறுப்பதாகாது. அது ஒரு மிகச் சிறந்த சினிமா அல்லவென்பதையும் ஒரு நிதானமான பார்வை உணரவைத்துவிடும். ஆனால் எல்லாவற்றையும் தாண்டிய இன்னொரு நோக்குநிலையும் உண்டு. அது தவறவிட்டுவிடக் கூடாதது.

‘ஃபனி போய்’: நாவலும் சினிமாவும்

தீபா மேத்தாவின் பதினைந்தாவது படைப்பு இது. ஆரம்பத்தில் விவரணப் படங்களில் ஆரம்பித்த இவரது முயற்சி, 1988இல் Martha Ruth and Edie மூலமாகத்தான் முழுநீளப் பட நெறியாளுகையில் இறங்குகிறது. 1996 இல் Fire வெளியாகும்வரை இவரது சினிமா எதுவும் சிறப்பான வெற்றிகளை, விருதுகள் தவிர்த்து, அடைந்திருக்கவில்லை. ஆனால் Fire சினிமா பெரு விமர்சனங்களை எதிர்கொண்டதோடு வர்த்தகரீதியிலும் வெற்றிகளை அடைந்தது. தொடர்ந்து இந்த Trilogy வரிசையில் Earth (1998) உம், Water (2005) உம் வெளிவந்து கீழ்த்திசைப் பண்பாட்டினடியான மான்மியங்களை விடுப்பாகப் பார்க்கிற மேற்குலகின் சிறந்த விமர்சனமாகவும், பரிசுகள் வகையாகவும் வெற்றிகளைக் கட்டிக்கொண்டது. என்றாலும், Fire இன் விமர்சன வெற்றியை ஏனையவை அடைந்துவிடவில்லை. ஆனால் இந்த மூன்று சினிமாக்களும் அதனதன் குறைபாடுகளுடனும் உலக சினிமா உலகில் தீபா மேத்தாவின் பெயரை நிலைநாட்டின. ‘ஃபனி போய்’ நவீனத்தின் விசை ஊற்றுக்கொண்டிருந்த ஒருபாற் பிரச்னையிலும், துய்க்கப்பட்ட காமத்தின் கணங்களிலும் வாசகன் வெகுவாக ஈர்பட்டிருந்தான். பிரதியில் வாசகன்போல், சினிமாவில் பார்வையாளன் விமர்சனமென்பதை பெருமளவு நம்புபவன் நான். தீபா மேத்தாவின் படைப்பு வெற்றிகள் இவ்வண்ணமே நிறுவப்பட்டன. ‘ஃபனி போ’யில் அந்த வெற்றிக் கணங்களை அரசியல் ஒரு மேகமாய் மூடிப்போனது.

நாவலை சினிமாவாக்கும் விஷயத்தில் தீபா மேத்தா நிறைய யோசித்திருக்கவேண்டும். அவர் 2012இல் வெளியிட்ட சல்மான் ருஷ்டியின் ‘மிட்நைற் சில்ட்ரன்’ தீவிர பார்வையாளனால் மட்டமாக உணரப்பட்டது. நாவல்களைச் சினிமாக்குவது, ஒரு நல்ல சினிமாவை எடுப்பதைவிடச் சிரமமானது. அது தன் சொந்தக் கதையை சினிமாப் பிரதியாக்கும் திறமைமட்டும் கொண்டதில்லை. அதற்கு மேலாக அது இன்னொரு படைப்பாளியின் உணர்வை தான் கொள்ளுதலும் ஆகிவிடுகின்றது.

சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ 1929இல் வெளிவந்த விபூதிபூஷன் பந்தோபாத்யாயின் நாவலைத் தழுவியது. 1962இல் வெளிவந்த Harper Lee இன் ‘To Kill a Mockingbird’, Mario Pazoவின் ‘The God Father’ (1972), மற்றும் Kazuo Ishiguroவின் ‘The Remains of the Day’ (1993) ஊடாக Greta Gerwigஇன் Little Women (2019) வரை பன்னூறு நாவல்களை ஆதாரமாகக்கொண்ட சினிமாக்கள் வெளிவந்து வெற்றியடைந்திருக்கின்றன. ஆனாலும் ஷ்யாம் செல்லதுரையின் The Funny Boy (1994) ஐ சினிமாவாக்கும்போது அரசியல், சமூகம், கலாச்சாரம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறுக்கிடக்கூடிய வாய்ப்பிருந்ததை முன்னடியாக அவர் அனுமானித்துக்கொண்டிருக்க வேண்டும்.

‘ஃபனி போய்’ உண்மையில் ஆறு கதைகளால் இணைக்கப்பட்ட ஒரு நாவல் வடிவமாகும். 2007இல் அடூர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட ’நாலு பெண்ணுகள்’ அவரின் ஏனைய சினிமாக்களான ‘எலிப்பத்தாயம் (1981)’, ‘ஸ்வயம்வரம்’ (1972), ‘மதிலுகள்’ (1990), ‘விதேயன்’ (1994), ‘நிழல்குத்து’ (2002) போன்றவைபோல் அமையாவிட்டாலும், தகழியின் நான்கு சிறுகதைகளின் நாயகிகளை ஊடாடவிட்டதான இது சிறந்த பார்வையாளன் சினிமாவாக இருந்தது.

ஆறு கதைகளை உள்ளடக்கிய ‘ஃபனி போ’யில் ஆர்ஜியின் கதை முக்கியமானதெனினும், அவ் வீட்டு வேலைக்காரியான ஜானகியிடத்திலும் ஒரு கதையைக் கொண்டிருந்தது. அந்தக் கதை சினிமாவில் விகாசம் பெறவில்லை. அம்மாச்சியிடம் ஒரு கதை இருந்தது. அது 1958க் கதை. ராதா-அனிலிடம் ஒரு காதல் கதையென பல கதைகளின் கூடமாயிருந்தது ‘ஃபனி போய்’ நாவல்.

‘ஃபனி போய்’: நாவலும் சினிமாவும்

‘பதேர் பாஞ்சாலி’, ‘நாலு பெண்ணுகள்’ போன்ற வெற்றிச் சினிமாக்களை எண்ணிக்கொண்டு சென்றதுபோல் தமிழ் நாவல்களிலிருந்து சினிமாவானவை பற்றியும் தீபா மேத்தா யோசித்திருக்கலாம். 50களிலிருந்து இம்மாதிரி முயற்சிகள் தமிழ்ச் சினிமாவுலகில் பெரு வெற்றியின்றித் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நாமக்கல் கவிஞரின் ‘மலைக்கள்ளன்’, கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியின் ‘கள்வனின் காதலி’, மு.வரதராசனின் ‘பெற்ற மனம்’, தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ போன்ற நாவல்கள் அதே பெயர்களில் 1954, 1955, 1960, 1995 ஆகிய ஆண்டுகளில் சினிமாக்களாக வெளிவந்ததைக் குறிப்பிடலாம். பூமணியின் ‘வெக்கை’மட்டும் ‘அசுரன்’ என்ற பெயரில் 2019இல் வெளிவந்தது. இவற்றில் வர்த்தகரீதியில் வெற்றிபெற்றவை கலைத்துவத் தோல்வியிலும், கலைத்துவத்தில் வென்றவை வர்த்தத் தோல்வியிலும் சிக்கிக்கொண்டன.

ஷ்யாம் செல்வதுரையின் ‘ஃபனி போய்’ தீவிரமான ஓர் இலக்கியப் படைப்பு. அது ஆறு கதைகளை ஓர் இணைகரத்தில் சொல்லவந்ததோடு, மிகவும் சிக்கலான இலங்கையின் இனக் கலவரத்தை கதைப் பின்புலத்திலும் ஆழமாகக் கொண்டிருந்தது. அதே காலகட்டத்தின் இளந் தலைமுறையினரின் மனவுளைச்சலையும் அது வெளிப்படுத்தத் தவறவில்லை. ஆனால் சினிமாவில் நாவல் குறித்த ஒரு பாலின கருதுகோள் பின்தள்ளப்பட்டு அரசியல் முன்னிலைப்பட்டுவிட்டது. அது சினிமாவில் வரவேண்டிய கதையின் புனைவுத் தன்மையை மழுங்கடித்தது.

இதுவரை சினிமாவில் உளதாகச் சொல்லப்பட்ட தமிழர் தரப்புக் குறைபாடுகளுள் இது அடங்கியிருக்கவில்லை. ஆனால் முக்கியமானது. ‘ஃபன் போ’யின் சினிமாத் தனத்தைக் கேள்விக்குள்ளாக்கிய இடமும் இது. சினிமாவில் சொல்லப்பட்ட குறைபாடுகளில் பேச்சுமொழியின் குறைபாடு முதன்மையானதாக இருந்தது. அதில் சமரசமெதுவும் இல்லையென்பது மெய்யே. ஆனால் அதை உரையாடல் மறுஒலிப்பதிவில் தகுந்த குரல்வளம் உள்ளோரால் சரிசெய்திருக்கமுடியும். மொழிக்கேற்ற உதட்டசைவுகள் சரியாக படப்பிடிப்பாகியிருந்தால் அதை மிகத் துல்லியமாக நவீன தொழில்நுட்பப் பொறிகளின் வாயிலாக சிறப்பாகவே சீர்செய்திருக்க முடியும். அம்மம்மா பாத்திரத்திற்கு அவ்வாறு பொருத்தமான ஒரு குரல் காணப்பட்டு இரவல் ஒலி கொடுக்கப்பட்டதே! இவ்வாறாக நிவர்த்திக்கப்படக்கூடிய குறைபாடுகளும் தீர்க்கப்படாமல் மிண்டிக்கொண்டு நின்றால் சினிமா ‘மோச’மாகப் பாதிக்கப்படத்தான் செய்யும். அவ்வாறே அது நடந்தது.

இனப் பிரச்னையின் மூலம் தெரிவிக்கப்படாததோடு, தெரிவிக்கப்பட்டதில் கால வழு இருந்ததாகவும் தமிழர் தரப்பில் மேலும் புகலப்பட்டது. எது சரியென்பதில் கதாசிரியர் நெறியாளுநர்கூட தம்முள் முரண்கொள்ள வாய்ப்புண்டு. ஏனெனில் தோன்றுவதுபோல் இருப்பதல்ல உண்மை. அதாவது தோன்றுவதுபோல் இல்லாமலும் இருக்கலாம் அந்த உண்மையென ரோலன் பார்த்தின் பின்அமைப்பியக் கருதுகோள். ஒரு தமிழருக்குப்போல் ஒரு சிங்களருக்கும் இன்னொரு மூன்றாம் தரப்பினருக்கும் ஒவ்வொரு உண்மை இருக்கலாம். அப்போது எந்த உண்மையைத் தேர்வுசெய்வது? உண்மை பல முகங்கள் கொண்டிருப்பதில்லை. இது அரசியல் நிலைப்பட்டதுதான். எவருக்கும். தீபா மேத்தாவுக்குமே ஏன் இது ஓர் அரசியலாக இருக்கக்கூடாது?

இந்த தெரிவுகளுக்கப்பால் ‘இனி’ என்ற தளத்திலிருந்தே நெறியாளரும் கதாசிரியரும் ஒன்றிணைந்து செயலாற்றுகிறார்கள். அந்த ‘இனி’ இல்லாவிட்டால் அவர்களும் இணைவது சாத்தியமில்லை.

ஒரு கருத்தியலானது தன் அர்த்தப்பாட்டை அப்படியே மொண்ணையாய் முன்வைப்பதில்லை. தன் அழகியல் நெறியோடும் கலா மேன்மையோடும்தான் முன்வைக்க முயல்கிறது. அதுவே தார்மீகக் கடமையாக தீபா மேத்தாவுக்கும் இருந்திருக்கிறது. ஆனால் ‘ஃபனி போய்’ இவற்றில் அர்த்தத்தையா அழகியலையா முன்னிலைப் படுத்தியதென்பது விசாரணைக்குரிய விஷயம். அப்போது அது அச் சினிமாவுக்குச் சாதகமான பதிலாக நிச்சயமாக அமையாது போகவே வாய்ப்புண்டு. நெறியாளுகையின் குறைபாடுகளையும் பலஹீனங்களையும் அது வெளிப்பட விரித்துவைக்கவே செய்கிறது. அதுவே நிஜம். ஆனால் அது எதுவுமேயில்லை, அந்தச் சினிமா அபத்தம் என்பதுமாதிரியான விமர்சனமெல்லாம் இன்னொரு அபத்தமே.

சினிமாவின் பரப்பு சுமார் ஒரு மணி நாற்பது நிமிஷங்கள். இவற்றில் முதல் இருபது நிமிஷ காட்சிகள், நடிகர்கள் தேவையான துறைசார் அனுபவமின்றி இருந்தமையை (ஓரிருவர் தவிர) வெளிப்படுத்திவிடுகின்றன. மிகவும் பிரபலமான, சிறந்த இந்திய நடிகர்கள் சபனா அஸ்மி, அனுபம் கெர், ஜோன் ஆபிரகாம் போன்றவர்களை வைத்து இயக்கிய சுலபம், அனுபவமற்ற நடிகர்களை வைத்து இயக்கும் சினிமாவில் இருந்துவிடாது. இந்தக் கவனம் நெறியாளுநரால் பேணப்பட்டிருக்கவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன். இவை வெகுஜன சினிமாவுக்கு மட்டுமல்ல, கலைப் படைப்பின் உயிர்ப்புக்கும் தேவையானவை.

கலாநேர்த்தியைக் குறைவுபடுத்தும் இவ்வகையான சில சிறு தவறுகள் தவிர்க்கப்பட்டிருப்பின், ‘ஃபனி போய்’ ஒரு சினிமாவாக நிமிர நிறைய வாய்ப்புகள் இருந்தன.

மற்றும்படி கதை நிகழ் காலத்துக்குரிய பிற்புலம் சரியாகத் தேர்வாகியிருந்தமையை முக்கியமாகச் சொல்லவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மனை அசைவின்மை கொண்டிருந்தாலும் தானே நடித்ததுபோன்ற ஒரு பிரமிப்பைத் தந்துகொண்டிருந்தது. பழைமை, வரலாற்றுப் புலம், வாழும் மனிதர்களின் பண்புநிலையென பலவற்றை அதுவே அசலனத்திலிருந்தும் மௌனத்திலிருந்தும் புலப்படுத்தியிருக்கிறது. அதற்காக ஒளிப்பதிவுக்கு ஒரு கைதட்டல் செய்யலாம். மனையின் சூழலும் மிக்க கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

வடக்கிலிருந்து பிரிட்டிஷ் காலத்தில் மேலும் வளமான வாழ்வு தேடி பல தமிழ்க் குடும்பங்கள் கொழும்பைநோக்கி நகர்ந்தன. தேடி வந்த வாழ்வுக்கேற்ப கிறித்துவராய் மதம் மாறி, அரச உத்தியோகம் தேடி, தம் மக்களை ஆங்கிலம் படிக்கவைத்தாலும் கறுவாக்காட்டுப் பகுதியில் வந்து குடியேறி நிரந்தர வாசிகளாகிவிட்ட இம் மக்களின் வாழ்முறையானது வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை, இரத்மலானை, வத்தளை போன்ற பகுதிகளில் வசித்தோரது வாழ்வு போன்றதாய் இருக்கவில்லை. அவர்கள் விரைவு விரைவாக ஆங்கிலேயராக மாறிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் ஆங்கிலம் பேசும் அந்த தமிழ்க் குடும்பங்கள் சிங்களத்தையும் சுளுவாகப் பேசின. பேச்சுவழக்கில் கறுவாத்தோட்ட தமிழரது முறை வெள்ளவத்தைத் தமிழரினதுபோல் இருக்கவில்லை. எழுபதுகளில்கூட கறுவாத்தோட்ட வீட்டுக் கொல்லைகளில் தகராறுகளில் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. இன்னும் அறுபதுகளில் விபசாரத்தின் கூடாரமாக கறுவாத்தோட்ட இரவுகள் இருந்திருந்தன. இவையெல்லாம் அதன் பேச்சு மொழியின் உந்நதத்தையோ இழிவையோ காட்டுவனவல்ல என்றாலும், வித்தியாசத்தைப் புலப்படுத்தும் என்பதுமட்டும் நிஜம். மேலும் சினிமாவில் வரும் கறுவாத் தோட்ட அம்மம்மாபோல் ஒரு வெள்ளவத்தை அம்மம்மா அயல்வீட்டுச் சிங்களவரோடு தகராறு பிடிக்கப் போயிருக்கவே மாட்டரென்பதும் திண்ணம். கறுவாத் தோட்டம் தனித்துவமானது. ஒரு காலத்தில் அதன் பெயரும் கறுவாக்காடுதான்.

சினிமாவில் சில பாத்திரங்கள் இயல்பில் நன்றாகச் செய்திருந்தன என்பதை நிச்சயமாகக் குறிப்பிடவேணண்டும். சின்ன ஆர்ஜி, ராதா, ராதாவின் காதலனாக வரும் அனில் (அனில் பாத்திரத்தை நடிப்பவரின் பெயர்கூட சினிமாவின் இறுதியில் காட்டப்படவில்லை), ஆர்ஜியின் அப்பா, அம்மா ஆகிய பாத்திரங்களைச் செய்திருந்தவர்களைக் குறிப்பிடலாம்.

அர்த்தத்தாலும், காலத்தாலும் இச் சினிமா பறக்கத் துடிக்கிறது. ஆனால் அந்நியப்படுத்தும் மொழி, 1961இல் வெளிவந்த தமிழ்ப் படமான ‘தேன்நிலவு’ படத்தின் ‘பாட்டுப் பாட வா’ பாடலை ‘ஃபனி போ’யில் கதை தொடங்கும் காலமான 1974இல் பாடவைப்பது, அதையே ஆர்ஜி வளர்ந்து வந்த பின்னாலும் பாடிக்கொள்ள வைப்பதுபோன்ற சிறு கவனயீனங்களால் பறக்கும் சிரமத்தை எதிர்கொள்கிறது.

இது தீபா மேத்தாவின் நெறியாளுகையினால் மட்டும் வந்த குறைபாடுகளில்லை, பிரதியாக்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவராலும் நேர்ந்ததுதான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.