- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் மூன்றாவது  அத்தியாயம் 'பிரயாண முஸ்தீபுகள் ' என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -


"முன்கூட்டியே மனக்கலக்கம் அடைவதே முன்கூட்டியே யோசிப்பதும் திட்டம் வகுப்பதுமாக மாறும்" -  வின்ஸ்டன் சர்ச்சில் [ " Let our advance worrying become advance thinking and planning. "  -  Winston Churchill ]

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்என் வாழ்வின் மிகப்பெரிய வரப்பிரசாதங்கள் என்றால் என்றும்  நான் முன்வைப்பது என் குடும்பம் மற்றும் என் தொழில். அதிலும் என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரம் என் தோழிகள் மற்றும் என் காலகட்டத்தில் என்னுடன் இருந்த எத்தனையோ பெண்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய சிறகுகளை விரித்து சுதந்திரமாக வானவீதியில் பயமின்றிப் பறக்க வழிவகை செய்தவர்கள் அவர்களே. என் அப்பாவின் பயண ஆசையின் வெளிப்பாட்டின் விளைவுதான் நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது புது நாடு செல்லும் பயணங்களின் மூலகாரணம். ஆனால் என் அம்மாவிற்கும் எனது கணவருக்கும் பிரயாணம் செய்வது என்பது விருப்பம் அதிகம் இல்லாத நிகழ்வு. தேவைப்பட்டால் மட்டுமே பயணம் செய்வார்கள். சுற்றுப்பிரயாணம் செய்வதில் அதிக நாட்டம் இல்லாதவர்கள். இந்தக் குணாதிசயத்தில் என் அப்பாவுக்கும் எனக்கும் அவர்கள் வேறுபடுவார்கள். அப்படியே பிரயாணம் மேற்கொண்டாலும் வீட்டுக்கு எப்போது திரும்புவோம் என்ற நினைப்புதான் அதிகம் இருக்கும். ஆனால்  என் அப்பாவின் 'பாஸ்போர்ட்' மூன்று புத்தகங்கள் பல நாடுகள் சென்று வந்த காரணத்தால்  பக்கங்கள் முழுதும் 'ஸ்டாம்ப்'களால் நிரம்பி வழியும். இப்போதும் பயணம் செய்வதில் அவரது ஆர்வம் எள்ளளவும் குறையவில்லை. ஜனவரி மாத வாக்கில் என்னிடம் இந்தக் கோடை விடுமுறைக்கு ஏதாவது நாடு பக்கத்தில் சென்று வரலாம் என்று ஆலோசனை கேட்டார். அதே சமயம்தான் என் ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் செல்ல திட்டம் வகுத்ததும் சேர்ந்தது. ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க முடிவு செய்த காரியம் என் கனவு தேசங்களுக்கு செல்ல வழிவகுத்தது என்பதும் விதியின் ஒரு வினை என்றால் மிகையாகாது.

Club7 holidays அனுப்பிய மின்னஞ்சல் இணைப்பில் பல்வேறு விதப் பயணத்திட்டங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த பயணங்களுக்காகச் செலுத்த வேண்டிய தொகையும் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் முதல் பயணத்திட்டமாக பதினைந்து நாட்கள்  ஒன்பது நாடுகளுக்குப் பயணம் செய்யும் குறிப்பு எனக்கு மிகுந்த ஆசையை உருவாக்கியது. லண்டனில் ஆரம்பித்து பாரிஸ் நகரம் சென்று, பின் பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், ஜெர்மனி வழியாக ஸ்விட்ஸ்ர்லாண்ட் சென்று மூன்று நாட்கள் அங்கே கழித்து, அதன் பின் ஆஸ்ட்ரியா நாட்டுக்குள் கால் பதித்து பின் இத்தாலி,  வாடிகன் சிட்டி மற்றும் ரோம் நகரத்தில் முற்றுப்பெறும் இந்த பிரயாணக் குறிப்பு மிகவும் கவர்ந்தது. இதற்கான தொகை ஒருவருக்க்ச் சுமார் 2  லட்சத்து 40 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. என் அப்பாவிடம் இந்தத் திட்டம் பற்றி கூறியபோது இதற்காகத் தொகை அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற தயக்கம் அவருள் இருந்தது. எனக்கும் இது பற்றி ஒரு முடிவு செய்ய அந்தச் சமயம் இயலவில்லை.

எனினும் ஆழ்மனதில் அடங்கிக்கிடந்த கனவுத்தாரகைகள் தற்போது சுதந்திரமாக மனதில் நடனம் செய்ய ஆரம்பித்தனர். லண்டன் சென்று திரும்ப தேம்ஸ் நதியை சந்திப்பது, பாரிஸின் ஐஃபெல் டவரின் மேல் உலவுவது, துலிப் மலர்களுக்கிடையே அணிவகுப்பு நடத்துவது, ஆல்ப்ஸ் மலைகளின் ஐஸ் கட்டிகளை இருகைகளிலும் அள்ளுவது வாடிகன் சிட்டியில் வெண்ணிற புடவையில் உலவுவது என மனக்கண்ணின் முன் பல்வேறு கனவுப்பிம்பங்கள் காட்சி  அளித்தன. மனம் உடனே ஒரு நீதிமன்றமாக மாறி இப்பயணம் மேற்கொள்ளுவதால் என்ன நடக்கும் அல்லது பயணம் செல்லாவிட்டால் என்ன ஆகும் என்று இருபக்கத் தரப்பு வாதங்களையும் பரிசீலிக்க ஆரம்பித்தது. பயணம் மேற்கொள்ளத் தேவை பணம். இப்பிரபஞ்சம் முழுமையும்  பணம் என்ற ஒரு சாத்தான் அல்லது கடவுளைச் சுற்றித்தானே இயங்குகிறது. கரன்சி நோட்டுகள் இல்லாவிட்டால் கடவுள் தான் ஏது? சாத்தான்தான் ஏது? மனிதனின் எந்தத் தேவைக்கும் அல்லது பேராசைக்கும் பணம் என்ற காகிதத்தாள் காரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். என் வாழ்வில் பணம் என்ற ஒரு விஷயத்திற்காக என் ஆசைகளையோ அல்லது கொள்கைகைளையோ நான் என்றுமே மாற்றிக்கொண்டதில்லை. இந்தப்பயணம் மேற்கொள்ள நான் என் அப்பா மற்றும் என் மகன் மூவருக்கும் சேர்த்து தோராயமாக  ஏழு அல்லது எட்டு லட்சம் செலவாகும். அடுத்து வரும் சில மாதங்களில் ஜூலை மாத வாக்கில் என் மகன் மேற்படிப்புக்காக அமெரிக்கா பல்கலைக்கழகம் செல்ல இருப்பதால் அதற்கான செலவுகள் கைமேல் காத்து இருப்பது நிதர்சனமான உண்மை. என் கணவர் கூறியது அடுத்த முறை செல்லுங்கள். இந்த முறை இந்தச் செலவு செய்தால் பணம் தட்டுப்பாடு ஆனால் என்ன செய்வது என்பதே. ஆனால் மனம் கூறியது பணம் சம்பாதிக்கலாம் வாழ்வின் இறுதிவரை ஆனால் அடுத்த முறை என்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் என்ன நிச்சயம்? வாழ்வில் கழிந்த ஒவ்வொரு நொடியும் திரும்ப கிடைக்குமா என்ன? அல்லது அடுத்த முறை இப்படியே நடக்கும் என்பதும் உறுதியாகுமா?

காலம் காலமாக நான் கடை பிடித்து வரும் ஒரே கொள்கை "மனம் விரும்புவதை  அடுத்தவர்க்கு பாதகம் இல்லாத  விஷயத்தை உடனே  செய்து முடித்து விடு" என்ற ஒன்று. நம் ஒவ்வொரு நாளையும் சேமித்து வைப்பதாக நினைத்து வாழ்வை செலவழிக்கிறோம். இன்று இந்த கஷ்டம், நாளை இன்னும் ஒரு கஷ்டம் வரலாம். பின் என்றுதான் நம் வாழ்வை முழுதாக வாழ்ந்து ரசிப்பது?

பணம் சம்பந்தமான  இந்த வாதம் உடனே தள்ளுபடி செய்யப்பட்டது. பணம் சமாளிக்கமுடியும் என்று தோன்றியது. எனவே, என் கணவரிடம் அவரின் சேமிப்பை மகனுக்காக வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, முதல் அட்வான்ஸ் இந்தப் பயணத்துக்கு வழங்கினேன். ஒரு பெண் பொருளாதார ரீதியில் வலிமை பெற்று இருந்தால் அது குடும்ப உயர்வுக்கு மட்டும் அல்ல, தன் விருப்பங்களை யாரிடமும் கையேந்தாமல்  தீர்த்துக்கொள்ளலாம் அல்லவா? எனக்கு மிக உயர்ந்த படிப்பை கொடுத்து, எனக்கு திருமணம் செய்த பிறகும் எனக்கு, என் மகனுக்கு செலவு செய்து பல நாடுகளுக்கு அழைத்து சென்ற என் தந்தைக்கு ஒரு நன்றிக்கடன் காட்ட எனக்கு ஒரு வாய்ப்பு என்பது எனக்கு மனதில் உறுதியாக தோன்றியது. அடுத்த விஷயம் நான் விரும்பும் இடங்கள். நான் வாழ்நாளில் என்றேனும் பார்க்க முடியுமா என்று ஏங்கிய நாடுகள் இன்று என் முன்னே கைக்கெட்டும் தூரத்தில்.  இவ்வளவு நல்ல விஷயங்களை அடங்கிய இந்த பயணத்தை தவற விடுவதா? மனம் அடித்துக்கூறியது இப்பயணம் மேற்கொள் என்று. மனம் போல் மார்க்கம். எனவே முதல் படி பயணத்தை உறுதி செய்ததுதான். இந்த இடத்தில்தான் நான் உளவியல் ஆராச்சியாளர் சிக்மாண்ட் பிராய்ட் அவர்களின் கோட்பாட்டை உறுதியாக நம்புகிறேன். என் ஆழ்மன ஆசைகள் எனக்கு தூண்டுதல் அளித்தன. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே எழாமல் ஆழ்மனதில் தேங்கிக்கிடந்த கனவுகள் எனக்கு தேவையான ஊக்கத்தையும் உறுதியையும் அளித்தன.

அடுத்ததாக என் முன்னே எழுந்த பிரச்சினை அரசாங்கத்திடம் நான் பெற வேண்டிய தடை இல்லாச் சான்றிதழ். அரசாங்க வேலை பார்ப்பதால் நம் நாட்டை விட்டு வெளி நாடு செல்ல முறையான அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். கல்லூரியில் பணி புரிவதால் சென்னையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் அவர்களின் அனுமதிக்காக கல்லூரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே. அதற்கான முறையான படிவங்கள் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரிடம் பணிந்தனுப்ப வேண்டிக் கடிதம்  எழுதி அவர்கள் மூலம் அனுப்ப வேண்டும். இது கொஞ்சம் சிரமான ஒரு படி முறை. மூன்று படிவங்கள் பூர்த்தி செய்து தேவையான புகைப்படங்கள் ஒட்டி, பிரயாணம் செய்யவிருக்கும் நாடுகள் மற்றும் பிரயாணத்திற்கான காரணம் என அனைத்தையும் குறிப்பிட வேண்டும். மேலும், பயணம் செய்யும் அரசாங்க அலுவலரின் பணி விவரங்கள், வேலையில் சேர்ந்த நாள், ஒய்வு பெறும் நாள், பணி புரிந்த நாட்கள் என ஒரு பயோடேட்டா தயாரித்து அனுப்ப வேண்டும். இது சம்பந்தமாக எனக்கு முன்னரே அனுபவம் இருந்ததால் உடனடியாக இந்த வேலையை முழுமூச்சுடன் செய்தேன்.

அடுத்த முக்கிய வேலை தேதிகளை முடிவு செய்வது. மூன்று தேதிகள் பயண அமைப்பாளர்கள் அனுப்பினார்கள். ஏப்ரல் மாதத்தில் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பயணம் ஆரம்பிக்கிறது அல்லது மே மாதத்தில் 5, 10 மற்றும் 15 தேதிகளில் பிரயாணம் ஆரம்பிக்கிறது என்றும் கூறப்பட்டது. தேதிகளை தேர்வு செய்வதில் அடுத்த சிக்கல் எழுந்தது. கல்லூரியின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 10 என்பதால் 21 -ம் தேதி எடுத்துக்கொள்ளலாம் என நான் முடிவு செய்தபோது என் மகன் ஒரு திடீர் பீதியைக் கிளப்பினான். அமெரிக்கா மேற்படிப்புக்கு ஜூலை மாதம் செல்வதற்கான விசா அழைப்பிதழ் ஏப்ரல் மாத கடைசியில் வரக்கூடும் என்பதே அது. மே மாதம் தேதிகள் தேர்வு செய்ய முதலிலேயே பயண ஏற்பாட்டாளரிடம் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் மே மாதம் நிறைய பேர் பதிவு செய்ய காத்திருக்கிறார்கள் என்ற காரணம். மே மாதம் பயணம் மேற்கொள்ளுவதில் இரண்டு சிக்கல்கள் எனக்கு தென்பட்டன. மிக முக்கியமான ஒன்று நெதர்லாண்ட்ஸில் உள்ள  என் மனதிற்கினிய துலிப் பூங்கா கியூகேநெப் (keukenhof ) மே 10 முதல் பார்வைக்கு இல்லை என்பது. இரண்டாவது மே மாதம் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு கல்லூரியில் அட்மிஷன் வேலை இருக்கும் மேலும் உறவினர்கள் திருமணம் வைகாசி மாதம்  முழுதும் நிறைய இருக்கும். இவற்றையும் தவிர்க்க முடியாது. இந்த காரணங்களுக்காக ஏப்ரல் 21  சரியாக வரும் என முடிவு செய்தாலும், என் மகனின் அமெரிக்க விசா பற்றின உறுதியான தகவல் தெரியாமல் குழப்பமே நிலவியது. பயண அமைப்பாளர்கள் வேறு அவர்கள் பங்குக்கு, குறிப்பிட்ட தேதியில் குறைந்தபட்சமாக 30 நபர்கள் சேராவிட்டால்அந்த தேதியில் பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றப்படுவார்கள் என்று ஒரு சிக்கலை முன்வைத்தார்கள். பிப்ரவரி மாதம் முழுதும் இந்த நிலையே நீடித்தது.

கடைசியாக பிப்ரவரி மாத இறுதியில் ஒரு வழியாக மே மாதக்கடைசியில் தான் அமெரிக்க விசாவிற்கான அழைப்புக்கடிதம் வரும் என்பதை உறுதி படுத்திய பிறகு, ஏப்ரல் 21 பயணம் புறப்படும் நாள் என முடிவு செய்யப்பட்டது. அப்போதும் பயண ஒருங்கிணைப்பாளர் அந்த நாளை உறுதி செய்யவில்லை. காரணம் தேவைப்படும் அளவு நபர் சேரவில்லை என்ற காரணம். எனவே ஒன்று ஏப்ரல் 21 அல்லது மே 5 என்று இரு வேறு தேதிகள் தேர்வில் இருந்தன. மே 5 -ம் தேதிக்கு என மனம் உடன் படவில்லை எனினும்   வேறு வழி தெரியாமல் அதை ஒரு தேர்வாக வைத்துக்கொள்ளவேண்டி இருந்தது

இந்த முதற்கட்டமே இன்னும் தீர்வு நிலைக்கு வராவிடினும், அடுத்த கட்ட நிலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அது நமது நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு செல்லும்போது அங்கே நமக்கு நுழைய அனுமதி வழங்கும் விசா வாங்கும் பணி. லண்டன் செல்வதால் UK விசாவும், பிரான்சு, ஜெர்மனி, ஸ்விட்ஸ்ர்லாண்ட்போன்ற ஐரோப்பா நாடுகளுக்கு செல்வதால் ஷெங்கன் (Schengen ) விசாவும் தனித்தனியே வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விசா வாங்குவதற்கு முன்னேற்பாடாக சில படிவங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். சென்னையில் இருந்து எங்கள் பயண ஏற்பாட்டாளர் முதலில் UK விசாவிற்கான படிவங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்கள். அந்த படிவங்கள் பூர்த்தி செய்ய நம்மிடம் நமது பாஸ்போர்ட் கண்டிப்பாக கையில் இருக்க வேண்டும்.
ஒரு 58 கேள்விகள் அடங்கிய கேள்விப்படிவம் நல்ல முறையில் பூர்த்தி செய்யப்படவேண்டும். அதிலும் நமது பெயரை நாம் நமது நாட்டில் பயன்படுத்துவது போல் கூறமுடியாது. முதல் கேள்வி குடும்ப பெயர் என்ன என்பது (Family Name ) இரண்டாவதாக கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் அல்லது முதல் பெயர் (Given name / Fore name ) என்ற ஒன்று. முதல் கேள்விக்கு நமது பெயரின் இனிஷியலை விரிவாக சொல்லவேண்டும். இரண்டாவது கேள்விக்கு நமது பெயர் சொல்ல வேண்டும். உதாரணமாக என பெயரின் இனிஷியல் R . அது என அப்பாவின் பெயர். எனவே முதல் கேள்விக்கு என பதில் Rathnasaamy எனவும் இரண்டாம் கேள்விக்கு என் பெயரான தாரணி எனவும் குறிப்பிட வேண்டும். இதே மாதிரித்தான் நமது பாஸ்ப்போர்ட்டிலும் காணப்படும். இது போன்றே நமது பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வாங்கிய இடம், அது தீரும் நாள் என பல தகவல்கள் சரியாக பூர்த்தி செய்யவேண்டும்.  

லண்டன்  செல்ல வேண்டிய அவசியம் என்ன, சென்றால்  தங்கும்  இடம், அங்கே செலவு செய்ய வேண்டிய பணம் உள்ளதா? அதற்கான வருமானம் எப்படி என்ற பல கேள்விகள் படிவத்தில் இருக்கும். அதை பூர்த்தி செய்து அதனுடன் அதற்குத்தேவையான ஆதாரச்சான்றுகளையும் இணைத்தனுப்பவேண்டும்.   கடந்த மூன்றாண்டுகளில் வருமான வரி கட்டி கிடைத்த ITR -1 படிவங்கள், சம்பளம் வாங்கிய ரசீதுகள், நாம் வேலை செய்யும் இடத்தில இருந்து தடையின்மை சான்று மற்றும் வங்கிக்கணக்கு விவரம், கடந்த ஒரு வருடம் நடந்த வரவு செலவு ஸ்டேட்மெண்ட் அல்லது வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் என இவை அனைத்தும் தயார் செய்ய வேண்டும். கொஞ்சம் விட்டால் நமது சொத்து விவரம் முழுதும் கொடுக்க வேண்டி வரும் போல மிக்க எரிச்சல் ஏற்படும். இதனுடன் uk விசா அதிகாரிக்கு ஒரு விசா அனுமதி வேண்டும் கடிதம் ஒன்றும் தயார் செய்ய வேண்டும். அதில் அவர்களுக்கு நம்மிடம் அங்கே செலவு செய்ய போதுமான பணம் இருக்கிறது எனவும் உறுதி கொடுக்க  வேண்டும்.

இத்தனை சீர்கள் செய்ய நமக்கு கொஞ்சம் நேரமும், நிறைய பொறுமையும், கணினியில் பூர்த்தி பண்ணும் விசய ஞானமும் இருந்தால் ஒண்ணும் கஷ்டம் இல்லை. எனக்கு நேரமின்மைதான்  கொஞ்சம் பிரச்னை கொடுத்தது. இரவு விழித்து படிவங்கள் பூர்த்தி செய்து முடித்துவிட்டேன். பலபேருக்கு இது தொடர்பான வினாக்கள் எழும். படிக்காதவர்கள் அல்லது கணினி உபயோகிக்க தெரியாதவர்கள் வெளிநாட்டு விசா எப்படி வாங்குவார்கள் என்று யோசிக்கத்தோன்றும். பதில் மிகவும் சுலபம்தான். ஒன்று விசா படிவம் பூர்த்தி செய்ய தன் வீட்டில் உள்ள விசய  ஞானம் உள்ள நண்பர்களை அணுகி அவர்களுடன் அமர்ந்து அல்லது ஒரு கணினி வைத்து இருக்கும் நிலையத்தை அணுகி அவர்கள் நன்கு தெரிந்தவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் இந்த படிவங்கள் நிரப்பலாம். அல்லது இதற்கென்றே சேவை செய்யும் ட்ராவல் ஏஜென்சியை அணுகி அவர்கள் மூலம் ஒரு சேவை பணம் கட்டி செய்யலாம். ஆனால் இதில் மிக கவனமாக நாம் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் நமது வருமானம் முதல் வருமான வரி கட்டிய விவரம் மற்றும் நமது வங்கியில் உள்ள இருப்பு விவரம் பற்றி அதில் பூர்த்தி செய்ய வேண்டும் ஆதலால் நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் செய்வது சாலச்சிறந்தது என்பது எனது எண்ணம். எங்களது எல்லா வெளிநாட்டு பயணங்களிலும் நாங்களே இந்த வேலையை செய்து முடித்து விடுவோம்.

முதலில் லண்டன் செல்லத் தேவையான விசா படிவங்கள் பூர்த்தி செய்து அதற்க்கு தேவையான ஆவணங்களையும் தயார் செய்து பிரயாண ஏற்பாட்டாளருக்கு அனுப்பி வைத்த பின் விசாவுக்கான கட்டணம் செலுத்தி (அதை ஒரு குறிப்பிட்ட வங்கியில் செலுத்த வேண்டும்) நேர்காணலுக்கு ஒரு தேதியும் நேரமும்  முன்பதிவு செய்யவேண்டும். பயணத்துக்காக நாங்கள் செலுத்தும் தொகையில் விசாவுக்கான கட்டணமும் உள்ளடக்கம் என்பதால் பயண ஏற்பாட்டாளர் அப்பணத்தை செலுத்தி நேர்காணலுக்காக தேதி மற்றும் நேரம் எங்களை கலந்தாலோசித்து முடிவு செய்தார். தனிப்பட்ட முறையில் விசா நாம் வாங்குவது என்றால் இந்த வேலையையும் நாமே செய்ய வேண்டி இருக்கும். பொதுவாக வெளிநாடு செல்லும் நபர்கள் பண வசதியுடன் இருப்பதால் இந்த வேலைகளுக்கு எதாவது ட்ராவல்ஏஜென்சி மூலம் அல்லது அவர்கள் காரியதரிசி மூலம் முடித்துக்கொள்வார்கள். எனவே இப்படி ஒரு நீண்ட நடைமுறை இருப்பது அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.

நேர்காணலுக்குச் சென்னை செல்ல மூவருக்கும்  போவதற்கும் வருவதுற்கும் ரயில் டிக்கெட்டுக்காக முன்பதிவு செய்து, வார நாட்களில்தான் விசா அலுவலகம் இயங்கும் என்பதால் கல்லூரிக்கு விடுப்பு அனுமதி கொடுத்து விட்டு UK  விசா வாங்க தயாராகினோம். சென்னையில் எத்திராஜ் கல்லூரி அருகே அமைந்துள்ள FAGUN TOWERS என்ற கட்டிடத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள அலுவலகம் சென்றோம். விசா வாங்க செல்லுபவர்கள் தன் கையில் தேவை இல்லாத பொருட்கள் தவிர்ப்பது நலம். அதுவும் கூர்முனை உள்ள கத்தி அல்லது கத்தரி அல்லது பென் ட்ரைவ் போன்றவற்றை தங்கியுள்ள விடுதியில் வைத்து விட்டு செல்வது நல்லது. கைபேசி கூட சுவிட்ச் ஆப் செய்து வைத்துக்கொள்ளலாம். அமெரிக்க விசா இன்னும் கடுமையாக இருக்கும்.

நேர்காணல் ஒன்றும் பயமூட்டும் விஷயம் அல்ல. எதற்கு போகிறீர்கள், எங்கே தங்குவீர்கள், பணம் போதுமான அளவு உள்ளதா என்று ஒரு விசாரணை செய்து பின் நமது ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் வாங்கி வைத்து கொள்வார்கள். நமக்கு கூரியர் மூலம் பாஸ்போர்ட் அனுப்பி வைப்பதற்காக நம்மிடம் இருந்து ஒரு பாஸ்போர்ட்டுக்கு இவ்வளவு என்ற அளவில் பணம் வாங்கி ரசீது அளிப்பார்கள். அந்த ரசீது பத்திரமாக இருந்தால்தான் பாஸ்போர்ட் கூரியரில் வரும் பொழுது வாங்க முடியும். சரியான விலாசம் அங்கே கேட்பார்கள். அதுவும் விளங்கும் முறையில் எழுதி அளிக்க வேண்டும். இந்த நேர்காணலுக்குப்பிறகு கொஞ்சம் காத்திருந்து அவர்கள் நம்மை அழைக்கும் போது அங்கேயே உள்ள மற்ற அறைகளில் பயோமெட்ரிக் என்னும் கைரேகை பதிவு மற்றும் நமது புகைப்படம் அவர்களே பதிவு செய்வார்கள். அத்துடன் நமக்கு அங்கே வேலை முடிந்து விடும். கிளம்பி வந்து விடலாம். பாஸ்போர்ட் பத்து வேலைநாட்களுக்குள் நாம் எழுதி அளித்த முகவரிக்கு ப்ளூ டார்ட் கூரியர் மூலம் வந்து சேரும்.

இந்த விசாவின் வேலை முடிந்து பத்து நாட்கள் கழித்து  பாஸ்போர்ட் கையில் கிடைத்த பிறகு அடுத்த விசாவான ஷெங்கன் விசாவுக்கான வேலைகளை ஏறக்குறைய UK விசாவுக்கு செய்வது போலவே செய்து முடிக்க வேண்டி இருந்தது. ஷெங்கன் என்பது ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள லக்ஸம்பேர்க்கில் அமைத்துள்ள சிறிய நகரத்தின் பெயர்  ஆகும். 1985 -ம் வருடம் ஷெங்கன் நகரில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பா யூனியனைச் சார்ந்த 26  மாநிலங்கள் உள்ளடக்கிய பிரதேசங்களில் எங்கும் பயணிக்க சுதந்திரம் கொடுப்பதே ஷெங்கன் விசாவின் அதிகாரம் என தீர்மானிக்கப்பட்டது. எனவே ஷெங்கன் விசா வாங்கினால் பிரான்சில் ஆரம்பித்து ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஆஸ்ட்ரியா, ஸ்விட்ஸ்ர்லாண்ட் என நாம் பார்க்க விரும்பும் நாடுகளுக்கு செல்லலாம். பொதுவாக ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுப்பிரயாணம் செய்ப்பவர்கள் இந்த விசாதான் வாங்க வேண்டும். ஆனால்  இந்த விசாவின் மூலம் UK மற்றும் அயர்லாந்து செல்ல இயலாது. UK விசா மட்டும் வைத்துக்கொண்டு இந்த நாடுகளுக்குள் பிரவேசிக்க இயலாது.

ஷெங்கன் விசாவுக்கு இதே போல் படிவங்கள், நேர்காணல், எல்லாமே. அதே இடம். எத்திராஜ் கல்லூரி  அருகில் உள்ள FAGUN TOWERS . தேதி வேறு. இரண்டாம் மாடியில் அல்லது மூன்றாம் மாடியில் இந்த விசாவுக்கான நேர்காணல். லண்டன் விசாவைவிட இந்த விசா வாங்க அதுவும் ஜெர்மன் நாட்டுக்கான சேவை முகப்பில் சரியான கூட்டம். குளிர்சாதன வசதி கொண்ட மிகப்பெரிய அறையாக இருப்பினும் கூட்டம் தாங்க முடியாமல் ஏர்கண்டிஷன் திணறியது. குறிப்பிட்ட பதிவு நேரம் தாண்டியும் வெகு நேரம் வரை அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டு காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்த போது நார்வே நாட்டுக்கு செல்ல விசா வாங்குவதற்காக "துருவங்கள் பதினாறு" என்ற தமிழ் படத்தை எடுத்த குழு அங்கே நின்று கொண்டிருந்தது இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் உள்பட இளைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மணிகண்டன் எனது மாணவர் பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் நான் பேராசிரியராக இருந்த போது சமூகவியல் படிப்பில் பயின்ற இளைஞர். மேடம் என்று அன்போடு ஓடி வந்து என்னிடம் மிகுந்த வாஞ்சையுடன் உரையாற்றினார்.     மணிகண்டன் கூறித்தான் எனக்கு தெரிய வைத்தது துருவங்கள் பதினாறு படம் நார்வே தமிழ் பிலிம் பெஸ்டிவலில் விருது வாங்கியுள்ளது என்றும் அந்த விருதை பெறுவதற்காகவே தற்போது நார்வே செல்ல விசா எடுக்க வந்ததாகக்கூறினார். வாழ்த்துகள் சொல்லிவிட்டு என் மகனிடம் வந்தபோது அவன் அந்த படம் பற்றி மிக உயர்வாகக் கூறினான். எனவே மீண்டும் ஒரு முறை என் மகனுடன் சென்று மணிகண்டன் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் உடன் உரையாடிவிட்டு வந்தோம். இதில் எனக்கு கூச்சம் என்ன வென்றால் அப்படி ஒரு படம் வெளியானதே என் அறிவுக்கு எட்டவில்லை எனவே அதை பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை நட்சத்திரங்களாக இளைஞர்கள் குழு பாராட்டை வெளிநாடுகளில் பெறப்போகிறார்கள் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்த ஐரோப்பா பயணம் முடிந்து ஊர் திரும்பிய பின் என் மகனின் தயவால் அந்த படத்தை பார்த்து மகிழ்ந்தது வேறு கதை.

இவ்வாறு ஊர் உலக நடப்புகளை வேடிக்கை பார்த்து பல மணி நேரம் கழித்து நேர்காணல் முடித்து பயோமெட்ரிக் முடித்து வெளியே வரும் போது மிகுந்த களைப்பாகி விட்டது. இதில் நான் கவனித்த விஷயம் என்னவென்றால் நீண்ட நேரம் விசாவுக்காக அந்த இடத்தில் காத்து பொறுமை இழந்து அங்கே இருக்கும் டை கட்டிய அந்த நிறுவன நபர்களிடம் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டவுடனே, அவர்கள் மிக அமைதியாக "தங்களுக்கு அவசரம் என்றால் பிரீமியம் சேவையை எடுத்துக்கொள்ளலாம். அதற்காக செலுத்த வேண்டிய தொகை ஒவ்வொரு பாஸ்போர்ட்டுக்கும் ரூபாய்  1000  அதிகம் செலுத்தினால் போதும்" என்று பதிலிருக்கிறார்கள். நான் கவனித்த வரையில் நேரம் மிக அதிகம் ஆகும் போது ரயில் அல்லது பேருந்து முன்பதிவு செய்தவர்கள் அல்லது வேறு அவசர வேலை உள்ளவர்கள் அந்த பணத்தை கட்டி விட்டு வேறு வழியில் காரியம் முடித்து புறப்படுகிறார்கள். மனிதர்களின் அவசரத்தை பணமாக்கும் ஒரு யுக்தியாக எனக்கு தென்பட்டது. நல்லவேளை. எங்கள் ரயில் இரவு நேரப்புறப்பாடு என்பதால் நாங்கள் அமைதியாக அங்கே அமர்ந்து இவற்றை எல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அடுத்த மிக முக்கிய பணி பயணத்திற்கு தேவையான  பொருட்களை  எடுத்து வைப்பது. இதுதான் மிகவும் சிரமம் கொடுக்கும் விஷயம். ஒவ்வொன்றும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும். விமானப்பயணம் நமது எல்லா பயணங்களையும் விட மாறுபட்டது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்க்கான பெட்டிகளும் தனிதான். பொதுவாக வெளிநாடு செல்லும் விமான சேவைகளில் 45  கிலோ அளவு பொருட்கள் லக்கேஜ் முறையிலும், 7  கிலோ அளவு கையில் நம்மிடம் இருக்கையின் அருகே வைத்துக்கொள்ளும் கைப்பெட்டியாகவும் கொண்டு செல்ல அனுமதிப்பார்கள். எனவே நமது பெட்டிகளை அதற்க்கு தகுந்தாற்போல் தயார் செய்ய வேண்டும். லக்கேஜ் என்பது விமான அடிப்பக்கம் போடப்படுவதால் அதில் என்ன பொருட்கள் வேண்டுமானாலும், உதாரணமாக கத்தி, கத்தரிக்கோல் அல்லது முறுக்கு சீடை, கடலை பர்பி போன்ற தின்பண்டங்கள் எல்லாம் வைத்துக்கொள்ளலாம். ஆனால் கையில் கொண்டு செல்லும் பேட்டி அல்லது பையில் அதாவது ஹாண்ட் லக்கேஜ் எனப்படும் பையில் இவைகளை வைப்பதை தவிர்ப்பது நலம். திரவப்பொருட்களையும் அனுமதிக்க மாட்டார்கள் தண்ணீர் உள்பட. விமானப்பயணத்திலேயே நாம் சாப்பிட  உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பதால் இவற்றை அனுமதிப்பதில்லை. திரவங்களில் எண்ணெய் போன்ற விஷயங்கள் அறவே அனுமதிக்கப்படுவதில்லை. லக்கேஜ் பொருட்களிலும் அனுமதி சில சமயம் மறுக்கப்பட்டு விடும். எண்ணெய் கவிழ்த்தால் மற்ற பொருட்கள் பாழாகும் என்பதும் ஒரு காரணம். அதே போல் விதை உள்ள பொருட்களும் அனுமதிக்க மாட்டார்கள். உதாரணமாக மாம்பழம், முருங்கைக்காய், கொய்யாப்பழம் போன்றவற்றை எத்தனையோ பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கோ அல்லது மகளுக்கோ கொண்டு செல்ல நினைத்து எடுத்து வந்தால் விமான நிலையத்தில் பெட்டிகள் ஸ்கேன் செய்யும் இடத்தில் வெளியே எடுத்து வைத்து விடுவார்கள். சில பயணங்களில் கைபேசி சார்ஜ்ர் கூட ஹாண்ட் லக்கேஜில் வைக்க அனுமதிக்க மாட்டார்கள். எனவே இவற்றை கருத்தில் கொண்டு சரியாக பொருட்களை முறையாக வகைப்படுத்தி வைக்கவேண்டும்.

அடுத்ததாக ஆடை ஆபரணங்களை எடுத்து வைப்பது. நமது நாட்டு ஆடைகளையே அங்கேயும் அணிவது சிறிது கடினம். காரணம் மேலைநாடுகளில் அதுவும் ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில்  பொதுவாக சீதோஷ்ண நிலை மிகவும் குளிராக இருக்கும். பகலிலும் சரி இரவிலும் சரி. சில்லென்ற ஒரு குளிர் காற்று நமது உடலை துளைத்துப்போகும். அப்படி ஒரு காற்று நாம் வசிக்கும் இந்த தமிழகத்தில் எங்குமே இருக்க வாய்ப்பு இல்லை. ஊட்டி கொடைக்கானல் குளிர் அந்த மேலைநாட்டு குளிருடன் ஒப்பிடுகையில் சும்மா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடற மாதிரிதான் இருக்கும். எனவே நமது ஊட்டி, கொடைக்கானலில் நாம் போடுவோமே ஒரு ஸ்வெட்டர் அந்த கால நடிகை சரோஜாதேவி போடுவது மாதிரி, அதெல்லாம் இந்த மேலைநாடுகளில் உறை காண முடியாது. அந்த நாடுகளுக்கு என்று சில வார்ம் ஆடைகள் உள்ளன. அது நமது நாட்டில் கண்ணிலேயே நாம் பார்த்திருக்க மாட்டோம். நமக்கு தெரிந்தது எல்லாம் மார்கழி மாத ஆரம்பத்திற்கு சில நாள் முன் இருந்து ஒரு இரண்டு மாதங்கள் ரோட்டோரம் கடை போட்டு நேபாள அல்லது பூட்டானை சார்ந்த வியாபாரிகள் விற்கும் உல்லன் ஸ்வெட்டர் மற்றும் தலையை சுற்றி மறைக்கும் கழுத்துக்குட்டை அதாவது ஸ்கார்ப் என குறிப்பிடப்படுவது மட்டும்தான்.

எங்கள் வீட்டிலும் யாருக்கும் எந்த வித குளிர்கால ஆடைகள் என ஒன்று கிடையவே  கிடையாது. இந்த ஊரின்  கொளுத்தும் வெயிலில் அதை எதற்கு நாம் இடத்தை காத்துக்கொண்டு வைத்திருக்கிறோம்? நல்ல வேளை, என் சகோதரன் அமெரிக்காவில் வசிப்பதால், அவர்கள் குடும்பம் இந்தியா வந்து திரும்பும் போது, நமது நாட்டின் பாரம்பர்ய சின்னமான கொடூர வெய்யிலை அனுபவித்த வேதனையில், அணிந்து வந்த கனமான கோட்டுகளை பாம்பு சட்டை உரிப்பது போல் இங்கே போட்டு விட்டு சென்று விடுவார்கள். அது மட்டும் அல்லாது வரும் போது உறவினர்களுக்கு கொடுக்க  நிறைய பொருட்கள் வாங்கி வைத்து வந்த பெட்டி போகும் போது வேண்டாம் என வைத்து விட்டு வேறு சில சிறிய பெட்டிகளுடன் சென்று விடுவார்கள்.

இப்படி அவர்கள் கழித்து சென்ற குளிர்கால ஆடைகளும் பெட்டிகளும் எனது அப்பா மிகவும் பத்திரமாக சேமித்து வைத்து இருப்பார். அது இந்தமாதிரி சமயங்களில் எங்களுக்கு கைகொடுக்கும். இந்த முறையும் பயண ஆயத்தமாக முதலில் என் அம்மா வீடு சென்று என் தம்பி விட்டு சென்ற ஒரு பெரிய பெட்டி மற்றும் அவனது ஒரு கனமான மேல்கோட்டு இவற்றை எடுத்து வந்து அடுக்க ஆரம்பிக்கையில் அந்த கனமான கோட்டு தொட்டுப்பார்க்க கூட கை கூசியது.. ஏனெனில் நம் நாட்டில் வெயில் உக்கிரத்தை அள்ளி தெளித்து, நம்மை அமில வெள்ளத்தில் மிதக்க விட்ட ஏப்ரல் மாதம் அது. அந்த சமயத்தில் இந்த கனமான ஆடையை பார்க்கும் போது இதை அணிந்தால் தந்தூரி சிக்கன் ஆகிவிடுவோம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் கடவுள் என்னும் கில்லாடி ஒரு பக்கம் அமில மழையும் இன்னொரு பக்கம் பனிக்கட்டி மழையும் வைப்பவர் என்பது நமக்கு கொஞ்சம் புதிரான விஷயம்தான்.

ஆடை விஷயத்தில் சல்வார் மற்றும் ஜீன்ஸ் அணியும் நபர்களுக்கு எடுத்து வைப்பது சுலபம். இரண்டு ஜீன்ஸ் வைத்து டாப்ஸ் எனப்படும் மேல் சட்டைகள் ஒரு பத்து வைத்துக்கொள்ளலாம். என்ன உடை போட்டாலும் கனமான மேல் கோட்டு போட்டு மறைத்து விடுவதால் பெரிதாக நம் ஆடையின் ரசனை காட்ட முடியாது. மேலும் குளிர் பிரதேசம் என்பதால் வியர்வை மற்றும் அழுக்கு போன்றவைகள் இருக்காது. ஒரே உடை இரண்டு அல்லதுமூன்று நாட்கள் போட முடியும். நாம் போகும் இடங்களில் சலவை செய்ய தங்கும் விடுதிகளில் ஆட்கள் இருந்தாலும், அதற்கான நேரம் மற்றும் பணம் அதிகம் என்பதால் சலவை பற்றி கற்பனை கூட செய்ய முடியாது.

புடவை மட்டுமே அணியும் பெண்கள் காட்டன் புடவைகளை தவிர்த்து உல்லன் மற்றும் சில்க் காட்டன் புடைவைகளாக வைத்துக்கொள்ளலாம். இந்த குளிர் நாடுகளில் திடீரென மழை பெய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உடைகள் நனைந்தாலும் சீக்கிரம் காயும் மாதிரி ஆடைகள் நல்லது. காட்டன் ஆடைகள் நமது இந்தியா மாதிரி வெயில் நாடுகளுக்கே உகந்தது. மேலும் குடை ஒன்று ஒவ்வொருவர் லக்கேஜிலும் வைத்திருப்பது நல்லது. தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை எவ்வளவு குறைவாக நகை அணிகிறோமோ அவ்வளவு நல்லது. திருட்டு பயமோ என்ற காரணத்தை விட அவற்றை நாம் தொலைத்து விட வாய்ப்பு அதிகம். குளிருக்காக பல உடைகள் அணியும்போது இந்த நகைகள் வெளியே தெரியவும் வாய்ப்பு இல்லை, பிரயோஜனமும் இல்லை. கண்டிப்பாக வெளிநாடு செல்லும் அனைவரும், ஆணாகிலும் சரி, பெண்ணாகிலும் சரி, கால்களுக்கு ஒரு நல்ல ஷூ மற்றும் இரண்டு அல்லது மூன்று செட் சாக்ஸ் கொண்டு செல்ல வேண்டும். இங்கிருந்து செல்லும்போது மிதியடி போட்டு சென்றாலும், அங்கே சென்ற பிறகு மிதியடியை ஷூ பெட்டியில் வைத்து விட்டு நமது கால்களுக்கு பாதுகாப்பாக சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்தே செல்ல வேண்டும். அதனுடன் ஸ்விட்ஸ்ர்லாண்ட்போன்ற நாடுகள் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக ஒரு ஜோடி கையுறையும் கொண்டு செல்லவேண்டும். கையுறை வாங்காமல் சென்று பின் ஸ்விட்ஸ்ர்லாண்ட் செல்லும் முன் போகும் வழியில் உள்ள கடைகளில் கையுறைகள் வாங்கவேண்டியதாயிற்று.

அடுத்த முக்கியமான விஷயம் மருந்துகள். பெரியவர்கள் செல்லும்போது அவர்களின் அன்றாட மருந்துகள் நீரிழிவு மற்றும்  ரத்தக்கொதிப்பு , கொலஸ்ட்ரால் போன்றவைகளுக்கான மாத்திரைகள் மட்டும் அல்லாது, காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி மற்றும் இன்ன சில பிரயாண உபாதைகளுக்கும் மருந்து கையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ காப்பீடு நாம் கட்டும் தொகையிலேயே பிரயாண ஏற்பாட்டாளர்கள் செய்து கொடுத்தாலும், நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாத்திரைகளை வைத்து இருத்தல் நலம் பயக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நமது பாஸ்போர்ட் மற்றும் செலவு செய்ய வைத்திருக்கும் தொகை, மேலும் நமது அடையாளம் காட்டும் ஆவணங்கள் - ஆதார் அட்டை அல்லது  வேறு ஏதாவது அடையாள அட்டை அடங்கிய கைப்பை ஒன்று பத்திரமாக இருக்க வேண்டும். அடையாள அட்டை மட்டும் டிக்கெட் காட்டினால்தான் விமானநிலையம் உள்ளே நுழைய முடியும். பின் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே போர்டிங் பாஸ் என்னும் அனுமதி பெற்று விமான பயணம் செய்ய முடியும். எனவே இவற்றை கொஞ்சம் சீக்கிரம் எடுக்கும் விதமாக அதே சமயம் பத்திரமாக இருக்கும்படி வைத்து கொள்ளவேண்டும். பணம் தொலைந்தால்கூட எப்படியோ சமாளிக்கலாம் ஆனால் அந்நிய நாட்டில்  பாஸ்போர்ட் காணாமல் போய் விட்டால் நமது கதி அதோகதிதான். பாஸ்போர்ட் திருடும் கும்பல் விமான நிலையம் மட்டும் அல்லது வெளி நாடுகளிலும் பல இடங்களில் இருப்பதாக செய்தி.  

கர்ணனின் கவச குண்டலம் போல் என்னுடைய கைப்பை என்னுடன் ஒட்டிக்கொண்டேபயணம் முழுதும் இருந்தது. அதில் என் உயிர் மட்டும் அல்லது எனது அப்பா மற்றும் எனது மகனின் வாழ்வாதாரங்களும் அடங்கியே இருந்தன. அது ஒரு மாஜிக் கைப்பை. எந்த நிமிடம் என்ன வேண்டுமோ அவற்றை உடனே தரும் மாய வித்தை தெரிந்த கைப்பை. என்ன! கொஞ்ச நேரம் நன்கு துழாவ வேண்டும். அதில் நான் வைத்து இருந்த பொருட்கள் கணக்கில் அடங்கா. எங்கள் பாஸ்போர்ட்கள், அடையாள அட்டைகள், பணம் இருக்கும் பை - அந்த பையில் லண்டனில் செலவு செய்யும் பவுண்ட் ஒரு பக்கம், ஐரோப்பாவில் செலவு செய்யும் யூரோ ஒரு பக்கம், மேலும் இந்திய நாட்டு ரூபாய் மற்றும் சில்லறை காசுகள் ஒரு பக்கம், இதை தவிர என் அப்பாவின் கேமரா, எனது கைபேசிகள் மூன்று என் அப்பாவின் கைபேசிகள் இரண்டு (எங்கள் பழக்கம் என்னவெனில் புது கைபேசி வாங்கினாலும் பழைய கைபேசியை கழிக்க மனம் இல்லாமல் அதையும் ஒரு பக்கமாக வைத்து  கொண்டாடுவது). ஒவ்வொரு கைப்பேசிக்கும் தனித்தனி   வேலை உள்ளதால் அவற்றை விட   முடியாது. மேலும், குறிப்புகள் எடுக்க சின்ன நோட்டு புத்தகம், தண்ணீர் பாட்டில், கைக்குட்டை, பேனா, டிஸ்ஸு (Tissue) பேப்பர் போன்ற அனைத்து பொருட்களும் இருக்கும். மிட்டாய்கள், மாத்திரைகள், மற்றும் கண் கண்ணாடி மட்டும் அல்லது சில சமயம் கைபேசி சார்ஜ்ர் மற்றும் காதில் போட்டு கேக்கும் ஹெட் போனும் இருக்கும். இவ்வாறாக என் குழந்தை போல் என்னுடன் ஒட்டி கொண்டே பயணம் செய்த கைப்பையில்தான் எங்கள் வாழ்வே அடங்கி இருந்தது என்றால் அது மிகையாகாது.

வெளிநாடு சென்றால் நமது சிம் கார்ட் வேலை செய்யாது. எனவே அங்கே சென்று இன்டர்நேஷனல் சிம் கார்டு ஒன்று வாங்கி போட்டுக்கொள்ளலாம். ஆனால் அது மிகவும் அதிக விலை என்பதால் என் மகன் அகில் அது வேண்டாம் என கூறி விட்டான். அதற்குப் பதிலாக wifi இருக்கும் இடங்களில் எல்லாம் Skype கால் செய்து பேசிக்கொள்ள சொல்லிக்கொடுத்தான். வாட்ஸாப்ப் காலும் பண்ணி கொள்ளலாம். நாங்கள் தங்கியிருந்த எல்லா விடுதிகளிலும் இலவச wifi சேவை கிட்டும் ஆதலால், இந்தியாவுக்கு அழைக்க காலை எழுந்தவுடன் skype கால் இலவச wifi மூலம் செய்து பேசிக்கொள்வோம். ஐந்து கைபேசிகள் கைகளில் இருந்தாலும், எங்களுக்கு இந்தியாவுக்கு பேசும் செயல் திறனை கொடுத்தது என் மகனின் கைபேசி மட்டுமே. மற்ற அனைத்தும் பொட்டென உயிரை விட்டன.

இந்த இடத்தில்  மிகவும் முக்கியமான ஒரு விஷயம் பதிவு செய்ய விருப்பம். முன்பே கூறியது போல எத்தனை முன்னேற்பாட்டுடன், திட்டத்துடன் பயணம் ஆரம்பித்தாலும், சரியாக ஒரு தேவை மிகுந்த இடத்தில் அது கிடைக்காமல் சிக்கிக்கொள்வோம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது! ஆனால் எனக்கு அது கண்டிப்பாக அரங்கேறும் என்பது நான் பலமுறை அனுபவத்தில் உணர்ந்த கதை. அதற்காக நானும் மனம் சளைக்க மாட்டேன். எப்போது எது நமக்கு இன்றியமையாத தேவையோ அது அப்போது நமக்கு கிடைக்கக்கூடாது என்பது சாபமோ என்னமோ? அதில் சுவையான விஷயம் என்னவென்றால் அந்த பொருள் நம்மிடம் இருக்கும், ஆனால் சமயத்துக்கு பயன்படாது. இந்த மாதிரி சமயங்களில் சிறு மூளையின் உறங்கிக்கிடக்கும் செல்கள் சிலிர்த்தெழுந்து இப்போது நிலைமையை எப்படி சமாளிப்பது என்று அதி வேகமாக செயல்படும். விளையாட்டாக கூறினாலும் இது மறுக்க முடியாத உண்மை.

அப்படிதான் கைபேசி வைத்து அதற்கான சார்ஜ்ர் என பார்த்து பார்த்து எடுத்து வைத்த     எங்களுக்கு சார்ஜ்ர் பின் எனப்படும் யூனிவேர்சல் அடாப்டர் பிளக் மற்றும் பவர் கன்வெர்ட்டர்  எனப்படும் பின் எடுத்து வைக்க நினைவு இல்லை. நமது நாட்டில் நாம் பயன்படுத்தும் பிளக் பாயிண்ட் மாதிரி வெளி நாடுகளில் இருக்காது. மேலும் மின்னழுத்த வேறுபாடுகள் வெளி நாடுகளில் உண்டு. இந்தியாவில்  உள்ள எலக்ட்ரிக் சாக்கெட் டைப் C , D ,மற்றும் M வகையை சார்ந்ததாக இருக்கும். ஆனால் லண்டனில் உள்ள சாக்கெட் டைப் G  வகையாகவும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் C , E , F , K என பலதரப்பட்ட வடிவங்களில் இருக்கும். எனவே நாம் தங்கும் விடுதியில் நுழைந்தவுடன் நமது கைப்பேசிகளை சார்ஜ் செய்யலாம் என்று முயற்சிக்கும்போதுதான் எங்கள் முட்டாள்தனம் புரிந்தது. ஏற்கனவே அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வந்த எங்களுக்கு இந்த விஷயம் நன்றாகவே மனதில் இருந்தாலும், இதைப்பற்றி மூன்று பேருமே யோசிக்கவில்லை. மேலும் தேவைப்படும் அடாப்டர் பின்கள் போதிய அளவு இந்தியாவில் இருந்தாலும் அங்கே சென்று கைபேசி மற்றும் கேமரா சார்ஜ் செய்ய முடியாமால் முழித்துக்கொண்டிருந்தோம். அங்கே ஒரு அடாப்டர் வாங்கலாம் என்றால் எங்கள் பிரயாண வழிகாட்டிய வந்த நண்பர் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் விலை லண்டனில் பத்துபவுண்டுகள். அப்படி என்றால் தோராயமாக நமது இந்திய ரூபாயின் மதிப்பின் படி சுமார் 825 ரூபாய். நம் ஊரில் சும்மா 50 அல்லது 100 ரூபாய்க்கு சுலபமாக கிடைக்கும்.

இப்படிப்பட்ட வடிகட்டிய முட்டாள்தனத்தின் விளைவாகவே எங்கள் கைபேசிகள் தடாலென உயிரை விட்டன. அதைவிட கொடுமை கேமரா சார்ஜ் பண்ண முடியாமல் போனதுதான். என்ன செய்வது  என்று லண்டனில் விடுதியில்  ஒவ்வொரு  பிளக் பாயிண்ட் ஆக முயற்சித்து தோல்வியுற்று, செய்வதறியாமல் மூளையை கசக்கி யோசிக்கும் போது, மூளை கசங்கியது மட்டுமே புலப்பட்டது. வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. சரி, நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது எத்தனை ஆனாலும் பரவாயில்லை ஒரு அடாப்டர் வாங்கி விட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்த போது குளியலறைக்கு சென்று இருந்த என் அப்பா "யுரேகா! கண்டுபிடித்துவிட்டேன்" என்று கூவிக்கொண்டே குஷியாக வந்தார். விஷயம் என்னவென்றால், குளியலறையில் தலை உலர்த்தும் கருவி (Hair Dryer)  வைக்கப்பட்டுள்ள பிளக் பாயிண்ட் அடாப்டர் உடன் உள்ளது என்பதே அவரின் மாபெரும் கண்டுபிடிப்பு. ஆனால் அந்த அடாப்டர் அந்த பிளக் பாயிண்டில் மட்டும் தான் செயல் படும்  என்பதால். கேமரா மற்றும் wifi இணைப்புடன் உள்ள கைபேசிகள் என  சார்ஜ் செய்யப்பட வேண்டியவை முன்னுரிமை பட்டியலில் இடப்பட்டு தலா ஒவ்வொரு மணி நேரம் போட்டு எடுத்து விட்டு,  என் மகனின் பவர் வங்கி எனப்படும் ஒரு சாதனம் முற்றுமாக சார்ஜ் செய்ய போட்டு விட்டோம். என் மகனுக்கு இரவு முழுக்க கண் விழித்து இதே வேலையாக ஒவ்வொரு கைபேசியாக மாற்றி மாற்றி சார்ஜ் செய்யும் தொழில்தான்.  பின் அந்த பவர் வங்கியில் இருந்து அடுத்த நாள் பேருந்து பிரயாணத்தில் மற்ற கைப்பேசிகளை சார்ஜ் செய்து கொண்டோம் . எந்த கைபேசிகள் மட்டும் இணையதள இணைப்பில் இருக்கிறதோ அவற்றை மட்டும் இவ்வாறு சரி செய்து கொண்டோம்.

இந்த விஷயம் இங்கே கூறுவதற்கு காரணம் இந்த மாதிரி சிறு விஷயங்களில் நாம் தடுக்கி விழுந்து விடுகிறோம். இன்றைய காலகட்டத்தில், கைபேசி மற்றும் கேமரா இல்லாமல் எந்த பயணமும் சிறக்காது. நிறைய பேருக்கு கைபேசியே காமெராவாக மாறி நம் நினைவுகளை தேக்கி வைக்க உதவுகிறது. எனவே அவற்றை சார்ஜ் செய்ய நமது கைபேசி சார்ஜ்ர் மட்டும் போதாது என்ற அடிப்படை உண்மை கூட பலமுறை இதே அனுபவம் பெற்ற எங்களுக்கே சரியான முறையில் புரியாமல் போனது மறதியா, முட்டாள்தனமா அல்லது வேறு என்ன என்று கூறுவது? புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த தகவல் உதவும் என்பது திண்ணம். பலமுறை மேநாட்டுப்பயணம் சென்று வந்தவர்கள் அவர்கள் பயணப்பெட்டியிலே இதெல்லாம் நிரந்தரமாக வைத்து இருப்பார்கள். நமக்கு அப்படி அல்லவே! ஆனால் அதையும் சமாளித்தோம் என்பது குறித்து ஒரு சபாஷ் எங்களுக்கு நாங்களே கொடுத்துக்கொண்டு மனதை தேற்றிக்கொண்டோம்.

இத்தனை முஸ்தீபுகள் செய்து, கடைசியாக தேதி ஏப்ரல் 21 அதிகாலை 3 .30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் என்ற முடிவு எங்களுக்கு தெரிந்த போது ஏப்ரல் மாதம் 10 -ம் தேதி வாக்கில்தான். இதற்கிடையே கல்லூரி சம்பந்தமான அனைத்து அலுவல்களையும் முடித்து உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டிய விஷயங்களை கவனித்து வீட்டை கொஞ்சம் சரி செய்து என எல்லாம் முடித்து, ஒரு ஷாப்பிங் போலாமா என்றால் கூட நேரம் இல்லை. சில பொருட்கள் வாங்க வேண்டும், அதற்கு நானே ஷாப்பிங் போக வேண்டும் என்பது என் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அது நிறைவேறவில்லை. அதற்கும் நானே மனம் சமாதானம் செய்து கொண்டேன் "போதும்! இருக்கும் பொருளை வைத்து சமாளிப்போம்" என.

செல்ல வேண்டிய விமானம் தேதி நேரம் மற்றும் கூட பிரயாணம் செய்ய இருப்பவர்கள் பெயர்கள் விவரங்கள் அடங்கிய பக்கம், நாங்கள் செல்லும் இடங்களில் தங்கப்போகும் விடுதிகள் முகவரி, எங்களுக்கு துணையாக வர இருக்கும் வழிகாட்டி (Tour Guide) என அனைத்தும்  மின்னஞ்சல் மூலம் பிரயாண ஏற்பாட்டாளர்கள் அனுப்பி இருந்தனர். அதை பார்த்த போதுதான் தெரிந்தது. இந்தியாவில் இருந்து ஐம்பத்தொரு  பேர்கள்  கொண்ட குழு இதே தேதியில் பயணப்படுகிறது என்பதும் அதில்  தமிழ் நாட்டில் இருந்து, சென்னையில் இருந்து பயணிக்கப்போவது  நாங்கள் மூவர் மட்டுமே என்பது. மற்றவர்கள் கொல்கொத்தா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து வருவார்கள் என தெரிய வந்தது. அவர்கள் பெயர் எல்லாம் முகர்ஜீ, பானெர்ஜீ என முற்றிலும் வட இந்திய பெயர்களாக இருந்ததை பார்த்து கொண்டிருந்த போது, எங்கள் பெயர்கள் மட்டும் மிகவும் வித்தியாசமாக தென்பட்டது. எங்களது பாஸ்ப்போர்ட்டில் இருப்பது போல்தான் பெயர்கள் போடப்பட்டு இருந்தது. பாஸ்போர்ட்டில் எனது பெயர் ரத்தினசாமி தாரணி என இருக்கும். அந்த அப்பாவின் பெயர் பழனிசாமி ரத்தினசாமி என இருக்கும். எனது மகனின் பெயர் சின்னசாமி அகிலேஸ்வரன் என்று காணப்படும். இதைப்பார்த்து என்னடா மூணு சாமிகள் தமிழ் நாட்டில் இருந்து கிளம்பி வருதே என அந்த வட இந்தியர்கள் யோசித்துக்கொண்டு இருப்பார்கள் என என் அப்பா ஒரு ஹாஸ்யமாக கூறினார். அது உண்மையும்தான். அவர்கள் பெயர் நமக்கு வித்யாசமாக படுவது போல்தான் நமது பெயரும் அவர்களுக்கு.

ஏப்ரல் மாதம் 19 -ம் தேதி புதன் இரவு நாங்கள் கட்டி வைத்த மூட்டை முடிச்சுகளுடன் சென்னை செல்ல சேரன் விரைவு வண்டிக்கு புறப்பட்டோம். ஆளுக்கொரு பெரிய பெட்டி, தலைக்கொரு கையில் எடுத்து செல்லும் பை, ஒன்றில் எனது மகனின் மினி லேப்டாப் மேலும் என்னுடைய கவச குண்டல கைப்பை என ரயில் பெட்டி ஒன்று பிடிக்கும் அளவு பெட்டிகள். முதலில் பெட்டிகளை கண்களால் நன்கு பார்த்து நன்கு பரிச்சயம் செய்து கொண்டோம். பிறகு பெட்டிகளின் எண்ணிக்கையை மனப்பாடம் செய்து கொண்டோம். பின்பு ரயிலில் அமரும் இருக்கையின் கீழ் திணறி, சக்தி முழுதும் பிரயோகித்து திணித்து முடித்தோம்.
வழியனுப்ப வந்த என் கணவர் மற்றும் என் உறவினர்கள் உதவி செய்து பெட்டிகளை சரியாக வைத்து முடித்தோம். இன்னும் ஒரு 18 நாட்களுக்கு தமது வாழ்க்கை நிம்மதியாக இருக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் என் கணவர் அமைதியாக இருந்து சோகமாக காட்சி அளிப்பது போல் ஒரு நாடகம் நடத்திக்கொண்டிருந்தார். . எனக்கு மட்டும் என்ன! குக்கர், அடுப்பு, சமையல் மற்றும் கல்லூரி வேலைப்பளு இவற்றிலிருந்து கொஞ்ச நாள் எஸ்கேப் என்பது ஒரு பக்கம், இந்த கொளுத்தும் வெயில், வேர்வை இவற்றை விட்டு கொஞ்சம் ஓடி விட  வேண்டும் என்ற எண்ணமும்  மேலோங்கியிருந்ததால் ஒரே குஷியாகத்தான் இருந்தது, சந்தோஷமாகவே பை பை என கூறி புறப்பட்டோம்.

அடுத்த நாள் அதாவது ஏப்ரல் மாதம் 20 -ம் தேதி காலை சென்னை சென்று அங்கிருந்து தாம்பரம் அருகே இருக்கும் எனது மகனின் கல்லூரி நண்பன் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்றடைந்தோம். அன்று நாடு இரவு விமானப்பயணம் என்பதால் அங்கேயே இரவு வரை இருந்து விட்டு பின் நாடு இரவு பன்னிரண்டு மணி அளவில் ஒரு டாக்ஸியில் செல்வதாக உத்தேசம். மாடியில் நல்ல பெரிய வீடாக இருந்தாலும் அனல் பறந்தது வீட்டுக்குள்ளும். சென்னையில் இருக்கிறோமா அல்லது செங்கல் சூளையில் உள்ளோமா என்ற சந்தேகம்தான். ஏதாவது நீர் நிரம்பிய கிணறு இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு குதித்து விடலாம் போல் ஒரு புழுக்கம். நல்ல வேளை. அந்த வீட்டில் எலுமிச்சை செடிகள் மூன்று நான்கு இருந்தன. வேண்டிய மட்டும் கனிகள் இருந்தன. நாங்கள் தங்கி இருந்த மடியிலேயே கனிகள் விழுந்து கிடந்தன. அவற்றை எடுத்து பிழிந்து என் மகனின் நண்பர்கள் வைத்திருந்த சர்க்கரை போட்டு கலக்கி, கீழ் வீட்டில் இருக்கும் வீட்டு உரிமையாளர் பெண்மணியிடம் பிரிட்ஜ் நீர் வாங்கி கலக்கி குடித்தபடி தாகம் தணித்துக்கொண்டிருந்தோம்.

நாங்கள் சென்றதால் என் மகனின் நண்பன் அவன் வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு எங்களுடனே இருந்தான். அவர்களுக்கு வெயில் தெரியவே இல்லை. பேசி சிரித்து சந்தோஷமாக இருந்தார்கள். என அப்பா டிவி பெட்டியில் மூழ்கி விட்டார். பிரயாண ஏற்பாட்டாளர்களை சந்திக்க நுங்கம்பாக்கம் கிளம்பி சென்று அங்கே அவர்கள் எங்களுக்காக கொடுத்த சில பரிசு பொருட்கள் பெரிய பைகள் இரண்டு எனக்கான ஒரு கைப்பை மற்றும் நிறைய தின்பண்ட பொருட்கள் அதனுடன் ஒரு காபி மேக்கர் என அனைத்தையும் சுமந்து தாம்பரம் வந்து சேர்ந்தேன். அப்போது மீண்டும் பெட்டிகளை பிரித்து அடுக்க வேண்டிய கட்டாயம். என் அப்பாவின் பெட்டியில் இருந்த நான்கு ஐந்து ஸ்வட்டர்களை எடுத்து என் அப்பா அந்த மகனின் நண்பனின் வீட்டிலேயே வைத்து  விட்டார். பின்பு ஒரு நாள் சென்னை வந்து எடுத்துக்கொள்கிறோம் என. பின்பு அந்த புது பைகள் தின்பங்ங்கள் மற்றும் எல்லா பொருட்களையும் அந்த அப்பாவின் லக்கேஜில் அடைத்து விட்டோம். ஒரு வழியாக இரவு 12 மணி அளவில் கிளம்புமுன் என் அப்பா ஷூ மாட்டிக்கொண்டு செருப்பை வைக்க இடம் இல்லாமல் திண்டாடினார். எனது பெரிய பெட்டியில் உள்ள வெளி அறையில் அந்த செருப்பை ஒரு காகிதப்பையில் வைத்து துணித்து வைத்தது அதோடு மறந்து விட்டது. இரண்டு நாட்கள் பிறகு அந்த செருப்பைக்காணோம் என லண்டனில் தேடியதும், என் மகனின் நண்பனுக்கு அழைத்து செருப்பு அங்கே வைத்து விட்டு வந்து விட்டோமா பார் என கூறி அவன் இங்கே எதுவுமே இல்லை இன்று கூறியதும் ஒரு தனி ட்ராக். மனம் எவ்வளவு ஞாபக மறதியில் தத்தளிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். கடைசியாக எப்படியோ பெட்டியின் வெளிப்புற பையில் இருந்த செருப்பைவேறு ஏதோ தேடும் போது எதேச்சையாக கண்டு பிடித்து ஆறுதல் அடைந்தோம் என்பதையும் கூறிக்கொள்கிறேன். வேறு பொருளை தேடும் போது முன்பு தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். எனவே பொருட்கள் தொலைந்தால் நாம் உடனே பதற்றம் கொண்டு குதிக்கக்கூடாது. அடுத்த இன்னொரு பொருள் தொலையும்வரை காத்திருத்தல் அவசியம் என்பது என் அனுபவங்களில் கண்டறிந்த உண்மை.

மேலைநாடுகளுக்கு விமானப்பயணம் மேற்கொள்ளும்போது மிகவும் முக்கியமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமானது. விமானம் புறப்படும் நேரம் என  டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக விமான நிலையம் அடைய வேண்டும். கடைசியாக ஒரு இரண்டு மணி நேரமாவது முன் சென்றால்தான் பதட்டம் இல்லாமல் அங்கே செய்யவேண்டிய நடைமுறைகளை நிம்மதியாக செய்யலாம். பின் கடைசியாக விமானம் வரும் கதவு (Gate) அருகில் நாற்காலிகளில் கொஞ்சம் மணித்துளிகள் காத்திருக்க வேண்டிதான் இருக்கும். ஆனாலும் மூன்று மணி நேரம் முன் அங்கிருப்பது உத்தமம். நம் ஊரில் ரயிலை கடைசி நிமிடத்தில் ஓட ஓட பிடிப்பது போல் எல்லாம் செய்ய முடியாது. உள்ளூர் விமான பயணத்திற்க்கு சுமார் ஒன்றரை மணி நேரம் முன்னால் சென்றால் போதுமானது.

அதிகாலை 3..30 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிப்பதற்காக உபேர் டாக்ஸியில் சென்னை பன்னாட்டு  விமான நிலையம்  சுமார்  இரவு 12 .30  மணி அளவில் சென்றடைந்தோம். கத்தார் விமான சேவையில் சென்னையில் இருந்து  கத்தாரின் தலைநகரமான தோகா  செல்லும் விமானம் அது. தோகாவில் உள்ள ஹமாத் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் காத்திருத்தல். பின் அங்கே இருந்து லண்டன் செல்லும் கத்தார் விமான சேவையில் பயணம் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் இருந்தது.எங்களது பிரயாணத்திற்கு நாங்கள் கொடுத்த தொகையிலேயே விமான டிக்கெட் தொகையும் அடங்கும் என்பதால் அவர்கள் ஏற்பாட்டின் படிதான் டிக்கெட் பதிவு செய்யப்பட்டு இருந்தது..  

காலை 3..30 மணிக்கு கிளம்பும் ஏர்பஸ் விமானம் அதே நாள் காலை 5.40 மணிக்கு தோகா சென்றடையும். பயண கால அவகாசம் நம் கணக்குப்படி 3..30 மணிக்கும்  5.40 மணிக்கும் இருக்கும் வித்தியாசம் 2 மணி 20  நிமிடங்கள்தான்.. ஆனால் பறக்கும் நேர அளவோ உண்மையில் 4 மணி 40 நிமிடங்கள் ஆகும்.. இதற்குக்காரணம் உலகத்தின் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உள்ள கால அளவு வேறுபாடு ஆகும். நம் நாட்டில் இருந்து மேற்கு நோக்கி மேலை நாடுகள் செல்லும் போது காலம் பின்னோக்கி செல்லும். நமக்கு இரவு என்றால் அமெரிக்காவில் பகல் என்பது நமக்கு தெரிந்த விஷயமே.

தோகாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கால இடைவெளி 2.30 மணி நேர அளவு. அதாவது, தோகாவில் காலை 5.40 மணி என்றால் இந்தியாவில் காலை 8.20 மணி  ஆகும். எனவே இந்திய நேரப்படி காலை 8.20 மணி  அளவிலும், தோகாவின் நேரப்படி காலை 5.40 மணி அளவில் தோகா விமான நிலையம்  சென்று அந்த ஊர் நேரப்படி மதியம் 12.30 மணி வரை அடுத்த லண்டன் செல்லும் விமானம் ஏற காத்திருக்க  வேண்டும். தோகாவில் பகல் 12.30  மணி அளவில் கிளம்பும் லண்டன் விமானமானது லண்டன் நேரப்படி மாலை  05.30 அளவில் அங்கே சென்று சேரும். இந்தியாவிற்கும் லண்டனுக்கும் உள்ள கால இடைவெளி வித்தியாசம் 04.30 மணி நேரம் ஆகும். எனவே பறக்கும் நேரம் 7  மணி  35  நிமிடங்கள் ஆகும். . லண்டனில் மாலை 05.30  மணி என்றால் இந்தியாவில் இரவு மணி   10.00 ஆக இருக்கும்.. முதலில் குழப்பம்தான் இருக்கும். பின் ஒரு தெளிந்த மனநிலைக்கு வந்து விடுவோம். ஏனெனில் நமது கைபேசி, கைக்கடிகாரம், கையில் இருக்கும் இந்திய ரூபாய், நாணயம்  என எதுவுமே நமக்கு விமானம் ஏறியவுடன் தோதுப்படாது. எனவே குழப்பம், தெளிவு எல்லாம் கலந்த அல்லது கடந்த  ஒரு ஞானியாக நாம் மாறித்தான் ஆகவேண்டிய கட்டாயம்.

இது ஒருபுறம் இருக்க, சென்னை விமான நிலையத்தில் பொருட்களை எல்லாம் கத்தார் விமான சேவை மையத்தில் லக்கேஜில் போட்டு விட்டு நமது பாஸ்போர்ட் மட்டும் டிக்கெட் பிரிண்ட் அவுட் காண்பித்து அவர்கள் கொடுத்த போர்டிங் பாஸ்  - சென்னை டு தோகா மற்றும் தோகா டு லண்டன் என இரண்டு போர்டிங் பாஸ் - இதுதான் உண்மையில் டிக்கெட்- வாங்கிக்கொண்டு கைப்பைகளை அதாவது ஹாண்ட் லக்கேஜ் மட்டும் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே அடுத்த படி சோதனையையும் முடித்துக்கொண்டு, குடியேற்றம் சம்பந்தமான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு கடைசியாக தோகா செல்லும் விமானத்திற்காக கொடுக்கப்பட்டிருந்த கதவு அருகே காத்திருந்த போது, என் மகன் என்னிடம் "தோகா விமான நிலையத்தில் தேவை இல்லாமல் காத்திருக்கும் படி டிக்கெட் போட்டு கொடுத்து உள்ளார்கள். உடனே போகும் விமானம் போடவில்லை. பிரயாண ஏற்பாட்டாளர்களிடம் பேசி இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது என்று கூற வேண்டியதுதானே" என்று ஒரே புலம்பல்.

சில சமயங்களில் இப்படி காத்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்று என எனக்கு தெரியும். எனவே அமைதி காத்தேன். அடுத்ததாக என் அப்பா  "ஆறு மணி நேரம் தோகா விமான நிலையத்தில் என்னதான் செய்வது" என்று அவர் பங்குக்கு ஆரம்பித்து விட்டார். என் தந்தை சுறுசுறுப்புக்கு பெயர் போனவர். 70 வயது கடந்த நிலையிலும் அவரால் அமைதியாக ஒரு இடத்தில அமர முடியாது. அவரின் குணம் தெரிந்ததால் என் மகன் என்னிடம் "நல்ல வேளை!  தோகாவிற்கும் லண்டனிற்கும் இடையே கடல் இருக்கிறது. இல்லையானால் தாத்தா நீங்கள் எல்லாம் காத்திருந்து மெதுவாக வாருங்கள். நான் நடந்து போய் விடுகிறேன் என்று சொல்லி  வெகு வேகமாக நடந்து சென்று இருப்பார்" என கிண்டல் செய்தான். அதுவும் சரிதான் என்று சிரித்துக்கொண்டோம்.

விமான நிலையம் உள்ளே Free Wifi கிடைப்பதினால் Face Book, Whatsapp போன்ற பக்கங்களை பார்த்துக்கொண்டேபுரட்டி பார்த்து பொழுதை போக்கி காத்திருந்தோம். கடைசியாக  3..30 மணி அளவில் தோகா செல்லும் கத்தார் விமானத்தில் ஏறி எங்களுடைய இருக்கைகளில் அமர்ந்து காலை நீட்டி சாய்ந்த போது ஜில் என குளிர் சாதனத்தின் காற்று எங்களை வருடியது. விமானம் தன் இறக்கைகளை விரித்து மேக வானில் பறக்க ஆரம்பித்தது. சட் என்று  மாறியது வானிலை! மனோ நிலையும்தான்!!

[தொடரும்]

 

அத்தியாயம் ஒன்று

அத்தியாயம் இரண்டு

* முனைவர் ஆர்.தாரணிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.