அத்தியாயம் இருபது

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 20மிகவும் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் எங்களைப் படுத்தி எடுத்தார்கள். நாங்கள் ஏன் தோணியிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறோம், ஏன் பகல் முழுதும் பயணம் செல்லாமல் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று தொணப்பினார்கள். இடையில் அவர்களுக்கு ஜிம்மின் மீது சந்தேகம் எழுந்தது. அவன் தப்பித்து ஓடிப்போகும் நீக்ரோவா என்று வினவினார்கள். நான் கூறினேன் "சரியாகப் போச்சு! தப்பித்து ஓடும் நீக்ரோ தெற்குப் பகுதிக்கா ஓடுவான்?" இல்லை. அங்கே அவன் போகமாட்டான் என்றார்கள். எப்படியாவது சில விஷயங்களை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதால் நான் இவ்வாறு கூற ஆரம்பித்தேன்.

"என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் வசிப்பது நான் பிறந்த மிஸ்ஸோரியில் உள்ள பைக் நாட்டில்தான். ஆனால் என் அப்பா, எனது சகோதரன் ஐக் என்னைத்தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள். நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு நாற்பது மைல் கீழாக நதியின் மேற்புறம் இருக்கும் ஒரு சிறிய குதிரைப் பண்ணை வைத்திருக்கும் எனது சித்தப்பா பென் என்பவருடன் வசிக்கச் செல்லலாம் என்று என் அப்பா முடிவெடுத்தார். வறுமையில் இருந்த என் அப்பாவுக்கு கடன் அதிகம் என்பதால் எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று அந்தக் கடனை அடைத்தபின் எங்களிடம் மீதம் பதினாறு டாலர்கள் பணம் எஞ்சியிருந்தது . அத்துடன் எங்களின் நீக்ரோ ஜிம் எங்களுடன் இருந்தான்.”

“ஆயிரத்து நானூறு மைல்கள் கடந்து செல்ல ஒரு படகின் அடிமட்ட இடத்தில் தங்குவதற்கான கட்டணத்தொகை கூட எங்களிடம் இல்லை. இருக்கட்டும். ஒரு நாள் நதி பெருகி வருகையில் அதிர்ஷ்டவசமாக அப்பாவுக்கு இந்தத் தோணி தட்டுப்பட்டது. எனவே நாங்கள அனைவரும் இந்தத் தோணியிலேயே நியூ ஆர்லியன்ஸ் புறப்படுவது என்று முடிவு கட்டினோம். ஆனால் அப்பாவின் அதிர்ஷ்டம் நிலைக்கவில்லை. ஒரு நீராவிப் படகு இந்தத் தோணியின் முன்பகுதி ஓரத்தில் ஏறியதால் நாங்கள் அனைவரும் நீருக்குள் விழுந்தோம். நீராவிப்படகின் துடுப்புச் சக்கரத்தின் கீழ் அனைவரும் விழுந்தோம் என்றாலும் நானும் ஜிம்மும் திரும்ப மேலேறி வந்து விட்டோம். ஆனால் அப்பா நன்கு குடித்திருந்ததாலும், எனது தம்பி ஐக் நான்கு வயதுக் குழந்தை என்பதாலும், அவர்களால் மேலே வர முடியவில்லை. நல்லது. அடுத்த நாள் அதிக அளவில் மக்கள் படகில் வந்து எங்களுக்குத் தொந்திரவு கொடுத்து ஜிம்மை என்னிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போகப் பார்த்தார்கள். ஜிம்மை தப்பி ஓடிப்போன நீக்ரோ என்று அவர்களும் நினைத்து விட்டார்கள். அதனால்தான் பகல் பொழுதுகளில் நாங்கள் நதியில் மிதந்து செல்வதில்லை. இரவுகளில் எங்களுக்கு எந்தத்தடையும் இருக்காது.”

"என்னைக் கொஞ்சம் தனியாக சிந்திக்க விட்டால், பகல் பொழுதிலும் நமக்குத் தேவையானால் தோணியில் பயணம் செய்ய நல்ல ஒரு வழி கண்டுபிடிப்பேன். திரும்ப ஆழமாக யோசித்து சீக்கிரமே ஒரு நல்ல திட்டம் தயாரிக்கிறேன். இன்று விட்டுவிடலாம். அந்த நகரின் வழியாக பகல் வெளிச்சத்தில் போகாதிருப்பது நல்லதுதான். அது நமக்கு ஆபத்தாகக் கூட விளையும்" பிரபுவானவர் கூறினார்.

இரவு மெதுவாக சூழ ஆரம்பித்ததும் வானம் இருண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. வானத்தில் மின்னல் வெட்ட ஆரம்பித்தது. மரத்திலுள்ள இலைகள் அனைத்தும் குளிரில் நடுங்குவது போன்றே நடுங்க ஆரம்பித்தன. நாங்கள் ஒரு மோசமான புயலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நன்றாகத் தெரிந்தது. ராஜாவும், பிரபுவும் எங்களின் கூம்புக் குடிலுக்குள் சென்று என்ன வகையான படுக்கை எங்களுக்கு உள்ளது என்று சோதித்தார்கள். என்னுடைய படுக்கை வைக்கோல் புற்களால் ஆனது. ஆனால் ஜிம்மின் படுக்கையோ மக்காச்சோள உமிகளால் ஆனது. ஜிம்மின் படுக்கைக்குள் எப்போதுமே ஒன்று அல்லது இரண்டு சிலந்திகள் அதில் மறைந்து இருந்து, உங்களைக் கடித்துக் காயப்படுத்தும். அத்துடன் அந்த உமிகள் மீது நீங்கள் புரண்டு படுக்க நினைத்தால், ஏதோ காய்ந்த சருகுகளின் குவியல் மீது புரள்வது போன்ற ஓசையை ஏற்படுத்தும். சலசவென்ற அந்த ஒலியினால் தூக்கத்திலிருந்து நீங்கள் விழித்து விடுவீர்கள். நல்லது. என்னுடைய படுக்கையை அந்த நிலப்பிரபு எடுத்துக் கொளவதாக சொன்னார். ஆனால் அந்த ராஜா அவருக்கு அது வேண்டும் என்றார்.

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 20

பின்னர் "நம்முடைய பதவிகளின் மதிப்பு வித்தியாசத்தை வைத்துப் பார்க்கும்போது, ராஜாவாகிய நான் மக்காச்சோள உமியில் படுத்துறங்குவது சரியாகாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்குமே. அந்த மக்காச்சோள உமிப் படுக்கையை தாங்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாமே, கருணை மிக்க பிரபுவே! என்று ராஜா கூறினார்.

ஒரு நிமிடம் அவர்களுக்குள் இது பற்றி கடுமையான வாக்குவாதம் வந்துவிடும் என்று ஜிம்மும், நானும் அஞ்சினோம். ஆனால் அந்த நிலப்பிரபு கீழ்க்கண்டவாறு கூறியதும் நாங்கள் நிம்மதியடைந்தோம்.

"கொடுங்கோலாட்சியின் இரும்புப் பிடிகளுக்குள், தரையில் உள்ள மண் படுக்கையில் கிடப்பதே எப்போதுமே என் தலை எழுத்தாக உள்ளது. எனக்கு தொடர்ந்து நேர்ந்த துரதிஷ்டங்கள் என்னுடைய கோபதாபங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதால் நான் இனிமேல் இறுமாப்பாக இருக்கப்போவதில்லை. நீங்கள் வெற்றியடைந்தீர்கள். நான் விட்டுக்கொடுக்கிறேன். அது என்னுடைய விதி. இந்த உலகத்தில் நான் தனிமைப்பட்டவனாக இருக்கிறேன். நானே வேதனையை ஏற்றுக் கொள்கிறேன். அதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

நன்கு இருட்டியதும் நாங்கள் புறப்பட ஆயத்தம் ஆனோம். எங்கள் தோணியை நடுஆற்றில் கொண்டு செலுத்துமாறும், கரையிலிருந்த நகரைத் தோணி தாண்டிச் செல்லும்வரை விளக்குகள் ஏற்றவோ அல்லவோ தீ மூட்டவோ வேண்டாம் என்று அந்த ராஜா கட்டளையிட்டார். வெகு விரைவிலேயே நகரின் கொத்தான விளக்குகளைக் கண்டு அதைத் தாண்டி அரை மைல்தூரம் எந்த நிகழ்வும் நேராது சறுக்கிச் சென்றோம். அடுத்த நகரைக் கடந்து ஒரு முக்கால் மைல் தூரம் சென்றவுடன் எங்களின் அடையாள லாந்தரை ஏற்றினோம். ஒரு பத்து மணி வாக்கில் புயல் அடிக்க ஆரம்பித்தது. சூறாவளிக்காற்று, பலத்த இடி, கண்களைக் கூசவைக்கும் மின்னல் ஒளி, சோவென்று பெய்யும் மழை இன்னும் அத்தனையையும் புயல் கொண்டு வந்து சேர்த்தது.

ராஜாவும், பிரபுவும் கூம்புவடிவக் குடிலுக்குள் எங்களின் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டிருந்தார்கள். வானிலை நல்ல நிலைக்கு மாறும்வரை எங்கள் இருவரையும் அதைக் கவனிக்கச் சொல்லி ராஜா எங்களிடம் ஆணையிட்டார். நானும் நள்ளிரவு வரை வானிலையை கவனித்துக் கொண்டிருந்தேன். என் படுக்கை காலியாக இருந்திருந்தால் கூட நான் உறங்கச் சென்றிருக்க மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு கம்பீரமான புயலை தினமும் பார்க்கமுடியாது. வெகு நாட்களுக்கு ஒருமுறைதான் காணமுடியும்.

ஆஹா, அம்மா! அந்தக் காற்று எப்படித்தான் அவ்வாறு கூச்சலிடுகிறது! அதனுடன் ஒரு நொடிக்கொரு தடவை மின்னல் கீற்று நதியின் மேல்திசையில் வெள்ளைத் தொப்பி போட்டது போன்றதொரு வெளிச்சத்தை அரைமைல் சுற்றளவுக்கு ஒவ்வொரு திசையிலும் வீசுகிறது. தூரத்தே இருக்கும் தீவுகளையும், காற்றின் உதவியால் பேயாட்டம் ஆடும் அங்குள்ள மரங்களையும் நீங்கள் கொட்டும் மழையிலும் நன்கு காண முடியும்.

 

பிறகு வந்தது சிலீரென்ற சத்தம் - பாம் - பாம் - பாம்- அம்பில் - அம்- பாம் - பாம் - பாம் - மறைந்து போகுமுன்னே இடி முழங்கி கொண்டும் உறுமிக் கொண்டும் செல்லும்போது கேட்ட ஓசைதான் இது. பின்னர் இறந்து போன இடியின் ஆத்மா சாந்தியடையட்டும். அதனைத் தொடர்ந்து இன்னொரு மின்னல் கீற்றும், வானத்தை உடைக்கும் ஓசையாக இன்னுமொரு பிரம்மாண்டமான இடியும் சேர்ந்து வரும். நதியின் அலைகள் தோணியை முழுதுமாய் புரட்டிப் போடுவது போல பலமுறை அலைக்கழித்தது. ஆனால் நான் எந்த ஆடையும் அணியாது இருந்தேன். அது பற்றி நான் பொருட்படுத்தவும் இல்லை. நதியில் தடைகள் பல இருந்தாலும், அவற்றை எந்த கஷ்டமும் இல்லாது எங்கள் தோணி கடந்தது. அடிக்கடி தோன்றிய பளீரென்ற மின்னல் ஒளியில் எங்கள் தோணியைத் திசை திருப்பக் கூடிய கணக்கிலடங்கா தடைகள் நதியில் வந்ததை நாங்கள் காண முடிந்தது.

நள்ளிரவிலிருந்து காலை நாலு மணி வரையிலான நேரத்தில் நான் தோணியில் பாதுகாவலாய் இருப்பதாய் தீர்மானித்திருந்தேன். ஆனால் பாதியிலேயே தூக்கம் எனக்கு கண்ணைச் சுழற்றியது. எனவே ஜிம் மீதி நேரத்தை எனக்காக பார்த்துக் கொள்வதாகக் கூறினான். அப்படிப்பட்ட விஷயங்களில் அவன் மிகவும் நல்லவனாக இருந்தான். மெதுவாக கூம்புக் குடிலுக்குள் தவழ்ந்தவாறே சென்றேன். அங்கே தங்கள் கால்களை பரத்திவைத்துக் கொண்டு அந்த ராஜாவும், பிரபுவும் தூங்கியதால் எனக்கு அங்கே துளிக் கூட இடம் இல்லை. எனவே வெளியிலேயே நான் படுத்துக் கொண்டேன். தட்பவெப்பம் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருந்ததாலும், அலைகள் பெரிய அளவில் இல்லாததாலும் மழை பெய்துகொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் அங்கேயே படுத்துக் கொண்டேன்.

மீண்டும் சுமார் இரண்டு மணி அளவில் புயல்சின்னங்கள் மோசமாகத் தோன்ற ஆரம்பித்துள்ளன. ஜிம் முதலில் என்னை எழுப்ப நினைத்திருக்கிறான். பின்னர் அந்த புயல் சின்னங்கள் ஊறு செய்யும் அளவு பெரிதாக இல்லை என்று தெரிந்ததும் தன் எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறான். ஆனால் அவன் தவறு செய்து விட்டான். கூடிய விரைவில் மிகப் பெரிய அலை ஒன்று திடீரென்று தோணிமீது வந்து மோதி என்னை அதிலிருந்து கீழே அடித்துத் தள்ளியது. அதைக் கண்ட ஜிம் சிரித்ததற்கு அளவே இல்லை. நான் பார்த்த நீக்ரோக்களிலேயே இவ்வாறாக மனம் விட்டு சிரித்தவன் எவனுமில்லை.

அடுத்ததாக நான் காவலுக்கு வந்து அமர்ந்தேன். ஜிம் படுத்து குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்தான். வெகு விரைவிலேயே புயல் விலகி வானம் தெளிவாக ஆரம்பித்தது. கரையில் ஒரு விளக்கு கண்ணில் தென்பட்டவுடன் ஜிம்மை நான் எழுப்பினேன். பிறகு அந்த நாளுக்கு தோணியை மறைத்து நிறுத்த ஒரு இடத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்.

காலை உணவுக்குப் பிறகு தனது அழுக்கடைந்த சீட்டுக்கட்டுகளை ராஜா எடுத்து வைத்தார் . ராஜாவும், பிரபுவும் சிறிது நேரம் ஒரு விளையாட்டுக்கு ஐந்து சென்ட் என்று பணம் வைத்து செவன் அப் விளையாட்டு விளையாடினார்கள். பிறகு அது சலித்துப் போன பிறகு அவர்களின் பிரசங்கம் என்று கூறி ஒரு விளையாட்டு ஆரம்பித்தார்கள். தனது தடித்த கம்பளிப் பையைத் தோண்டி சில அச்சடித்த அறிவிப்புகளை எடுத்து அந்த மகாபிரபு உரக்கப் படிக்க ஆரம்பித்தார்.

பாரிஸின் கொண்டாடப்படும் டாக்டர் ஆர்மண்ட் டி மோண்டல்பன் "அறிவியல் மற்றும் மண்டை ஓடுகளும் மனிதர்களின் இயல்புகளும் சம்பந்தப்பட்ட இயல்" என்ற தலைப்பில் நிகழ்த்தவுள்ள உரை இந்த மணி நேரத்தில், இந்த இடத்தில் என்று ஒரு அறிவிப்பு கூறியது.

அனுமதி பெற பத்து செண்டுகளும், உங்களின் குணாதிசயங்களைப் பற்றிய குறிப்பு அட்டையைப் பெற மேலும் இருபத்தி ஐந்து செண்டுகள் என அறிவிப்பு கூறியது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் அவருடையதாகும் என்று பிரபு கூறினார்.

"உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் சோககாவிய நாயகன், லண்டன் ட்ருயரி தெருவைச் சார்ந்த இளம் கேரிக்" என்று இன்னொரு அறிவிப்பு கூறியது.

மந்திரக்கோல் கொண்டு நீர் மற்றும் தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிப்பது, சூனியக்காரிகளின் மந்திரவலையை கலைப்பது போன்ற இன்னும் பல வீரச்செயல்களை பல்வேறு பெயர்களில் செய்வதாக மற்றும் சில அறிவிப்புகள் கூறின.

இறுதியாக அவர் சொன்னார் "ஆஹ்! அனைத்தையும் விட இந்த நாடகமேடைக் கலை சிறப்புற்ற ஒன்று. என்றேனும் மேடையில் நீங்கள் நடித்துள்ளீர்களா, ராஜாவே?"

"இல்லை." ராஜா பதில் கூறினார்.

"நல்லது. இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் நன்கு நடிக்க ஆரம்பித்து விடுவீர்கள், வீழ்ந்த அரசே!" பிரபு கூறினார் "கரையில் அடுத்த நகரம் வரும்போது, ஒரு பொது அரங்கம் வாடகைக்குப் பிடித்து மூன்றாம் ரிச்சர்ட் நாடகத்தில் வரும் கத்திச் சண்டை அல்லது ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வரும் மேல்மாடிக் காட்சி போன்ற ஒன்றை நடித்துக் காட்டலாம். அதைப் பற்றி தங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"பணம் பெற்றுத்தரும் எதுவானாலும் நான் செய்யத் தயார், பில்ஜ்வாட்டர்! ஆனால் எனக்கு நடிப்பது என்றால் என்னவென்றே தெரியாது என்று உனக்குத் தெரியுமா? அதுமட்டும் அல்லாது நான் நாடகங்களையும் பெரிதாகப் பார்த்ததே இல்லை. என் அப்பா அரச மாளிகையில் நாடகங்களை பார்த்து ரசிக்கும் வேளையில் நான் அறியாச் சிறுவனாக இருந்தேன். உன்னால் எனக்கு அதைக் கற்றுத் தர முடியும் என்று நம்புகிறாயா?"

"மிகவும் சுலபமாக."

"சரி. நல்லது. நானும் ஒரு புதுத் திட்டத்திற்காக மிகவும் ஆவலாக இருக்கிறேன். இப்போதே நாம் அதைத் தொடங்கலாம்."

இவ்வாறாக, அந்த மகாபிரபு ரோமியோ பற்றியும், ஜூலியட் பற்றியும் ராஜாவிடம் கூற ஆரம்பித்தார். ராஜா ஜூலியட் வேடம் போடும் பட்சத்தில் தனக்கு அதிகம் பழக்கம் உள்ள வேடமான ரோமியோவை தான் எடுத்துக் கொளவதாக பிரபு கூறினார்.

"ஆனால் ஜூலியட் மிக அழகான இளம் பெண் அல்லவா, பிரபுவே! என்னுடைய வழுக்கைத் தலையும், நரைத்த மீசையும் ஜூலியட்டுக்கு பொருந்தாமல் வேடிக்கையாக இருக்கும் என்று நான் நினைக்கிறன்."

"அது பற்றி நீங்கள் எதுவும் கவலைப் பட வேண்டாம். இந்த நாட்டுப்புற பூசணிகள் அதையெல்லாம் கவனிக்கவே போவதில்லை. அதோடு நீங்களும் வேடம் புனைந்து இருப்பீர்கள். உலகிலேயே வேடதாரிகள் ஏமாற்றுவது போல வேறு எதுவும் இல்லை. ஜூலியட் மேல் மாடி பால்கனியில் இரவு உறங்கப் போகுமுன் பால்நிலவை ரசித்துக் கொண்டிருப்பாள். அப்போது நீண்டு உடலை மறைக்கும் இரவு உடை பூண்டு, கலைந்திருக்கும் இரவுத்தொப்பி அவள் தலைக்கு அணிந்திருப்பாள். உடல் முழுதுக்குமான வேடம் பூண ஆடை இதோ."

திரைச்சீலைக்காக வைத்திருக்கும் காலிகோ துணியினாலான இரண்டு மூன்று நீண்ட மேலங்கிகளை பிரபு எடுத்தார். அதில் ஒன்று இடைக்கால அரசர்கள் பயன்படுத்திய கவசம் போன்றதொரு நீண்ட அங்கி மூன்றாம் ரிச்சர்ட் மற்றும் அவனுடன் சண்டை இடுபவன் என இருவரும் பயன்படுத்த என்று அவர் கூறினார். வெள்ளை நிறத்தில் நீண்ட காட்டன் இரவு மேல் சட்டையும், கலைந்து கிடைக்கும் பெண்கள் அணியும் ஒரு இரவுத் தொப்பியும் அவரிடம் இருந்தது. ராஜாவுக்கு இப்போது முற்றிலும் திருப்தியாக இருந்தது. எனவே பிரபுவானவர் புத்தகத்தை எடுத்து அதில் உள்ள வரிகளை உரக்கப் படித்தார். அப்படிப் படிக்கும் போதே துள்ளிக் குதித்தவாறு நடிக்கவும் செய்தார். பிறகு அந்த புத்தகத்தை ராஜாவிடம் கொடுத்து அந்த வரிகளை மனப்பாடம் செய்யச் சொன்னார்.

அங்கே நதியின் வளைவில் அருகில் மூன்று மைல் தொலைவில் மிகவும் வசதி குறைந்த நாகரீகம் அதிகமற்ற ஒரு நகரம் ஒன்று இருந்தது. இரவு உணவுக்குப் பின் பகல் பொழுதில் ஜிம்முக்கு ஆபத்து வராதவாறு எப்படிப் பயணம் செய்வது என்ற திட்டம் போட அந்த நகருக்குள் சென்று ஏதேனும் அதற்கான யோசனை கிடைக்கிறதா என்று பார்த்து வரப் போவதாகப் பிரபுவாகப்பட்டவர் கூறினார். தானும் உடன் சென்று ஏதேனும் நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா என்று பார்த்து வருவதாக ராஜாவும் கூறினார். எங்களுக்கும் காப்பி தீர்ந்துவிட்டதால். நானும் அவர்களுடனே சிறு படகில் சென்று காப்பிப் பொடி கொஞ்சம் வாங்கி வருமாறு ஜிம் கூறினான்.

நாங்கள் நகருக்குள் நுழைந்தபோது அங்கே யாரும் அதிகம் காணப்படவில்லை. தெருக்கள் வெறிச்சோடி ஏதோ ஒரு ஞாயிற்றுக் கிழமை நாள் போல மயான அமைதியுடன் இருந்தன. உடல்நலம் குன்றிய ஒரு நீக்ரோ வீட்டின் பின்புறத்தில் சூரிய வெளிச்சம் படுமாறு அமர்ந்திருந்தான். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலமில்லாது இருப்பவர்களைத் தவிர அந்த ஊரில் வசிக்கும் அனைவரும் இரண்டு மைல் தொலைவில் இருக்கும் காட்டில் நடக்கும் கூட்டத்திற்கு சென்றிருப்பதாக அவன் தெரிவித்தான். அவனிடம் அங்கே செல்வதற்கான வழியை கேட்டுக் கொண்ட ராஜா , அங்கே சென்று அந்த மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றிப் பார்க்க முடியும் என்று தெரிந்து கொள்ளப் போவதாகக் கூறினார். நானும் அவருடன் வரலாம் என்று கூறினார்.

ஏதேனும் அச்சடிக்கும் அலுவலகம் இருக்கிறதா என்று பார்க்கப் போவதாக பிரபு தெரிவித்தார். மரவேலை செய்யும் கடையின் மேற்புறம் ஒரு சிறு அச்சடிக்கும் நிலையம் இருந்தது. மரவேலை செய்பவர், அச்சடிப்பவர் என இருவருமே அந்த கூட்டத்திற்கு சென்று விட்டாலும், அவர்களின் அலுவலகம் மற்றும் கடை பூட்டப்படாமல் இருந்தது. அச்சடிக்கும் இடம் மிகவும் மோசமாக சுற்றிலும் குப்பைகள் சூழ்ந்திருக்க பார்க்கவே அருவருப்பாக இருந்தது. சுவர்களில் எங்கும் மையால் குறிகள் போடப்பட்டும், தொலைந்து ஓடிப் போன நீக்ரோக்களின் படங்கள் அச்சடித்த காகிதக் கையேடுகள் சுற்றிலும் இறைந்தவண்னம் காணப்பட்டது. பிரபுவானவர் தனது மேல் அங்கியை கழற்றி விட்டு அவர் அங்கே சில காகிதங்கள் அச்சடிக்கப் போவதாகச் சொன்னார். எனவே, ராஜாவும், நானும் அந்த கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி நடை போட்டோம்.

அது ஒரு சூடான நாள் என்பதால் முப்பது அல்லது அதற்கும் கொஞ்சம் அதிகமான நிமிடம் நடந்து அந்த இடத்தை அடைவதற்குள் எங்களின் உடலிலிருந்து வேர்வை சொட்டு சொட்டாக வழிந்தது. பல மைல்கள் தொலைவிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை அங்கே வந்து கூடியிருந்தார்கள். அந்த காடு முழுதும் குதிரைகளும், மக்களைச் சுமந்து வந்த வண்டிகளும் என முழுதுமாக நிறைந்திருந்தது. மரத் தொட்டியிலிருந்த உணவை உண்டுகொண்டு அங்கிருக்கும் பூச்சிகளை ஓட்டும் விதமாக தனது உடலை அசைத்தவாறே குதிரைகள் இருந்தன. நீண்ட குச்சிகள் கொண்டு எழுப்பப்பட்டு மரக்கிளைகளால் கூரை வேயப்பட்ட திடீர் அரங்கில் எலுமிச்சை சாறுகளும் இஞ்சிரொட்டியும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. தர்பூசணி பழங்களின் தோல்களும், பச்சை மக்காச்சோள இலைகளும் தரை முழுதும் சிதறிக் கிடந்தன.

இன்னும் பெரிய அரங்கங்கள் அங்கே பிரசங்கம் நடக்கும் இடத்தில் மக்கள் கூடிக் கேட்பதற்காகப் போடப்பட்டிருந்தன. அறுக்கப்பட்ட மரங்களைக் கொண்டு மக்களை அமர மர இருக்கைகள் தயாரித்திருந்தார்கள். கால்களை வசதியாக வைத்துக் கொள்ள அதில் உள்ள பெரிய வட்டப்பகுதியில் குச்சிகளை நுழைக்க ஓட்டையிட்டு வைத்திருந்தார்கள். அந்த பெஞ்சுகளுக்கு சாய்ந்து கொள்ள முதுகுப் பகுதி இல்லை. அந்த அரங்கின் ஒரு மூலையில் பிரசங்கம் செய்பவர்கள் உயர்ந்த மேடை மீது நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த பெண்கள் சூரிய ஒளி படாவண்ணம் பெண்கள் அணியும் பானட் தொப்பி வைத்திருந்தார்கள். சிலர் நீண்ட உல்லன் மேலங்கி அணிந்திருந்தார்கள். மற்றும் சில பெண்கள் வெள்ளை நிற காட்டன் மேலங்கி அணிந்திருந்தார்கள். ஒரு சில இளம்பெண்கள் காலிகோ மேலங்கி அணிந்து காட்சி அளித்தார்கள். சில இளைஞர்கள் காலில் செருப்பு அணியாமலும், சில குழந்தைகள் சிறு லினன் மேல்சட்டையைத் தவிர வேறு எந்த ஆடையும் அணியாமலும் இருந்தார்கள். வயதான சில மூதாட்டிகள் கையில் ஊசி வைத்து தைத்துக் கொண்டிருக்க சில இளவட்டங்கள் தங்களுக்குள் காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தன.

நாங்கள் சென்ற முதல் அரங்கத்தில், அங்கிருந்த பிரசங்கி கடவுளின் துதிப் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தார். அவர் முதல் இரு வரிகளைப் பாட அனைவரும் அவருடன் சேர்ந்து அதைத் திரும்ப இசைத்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தததால் அவர்களின் கீதம் அலைவுகளை ஏற்படுத்தி மலைக்க வைக்கும் அளவு ஒலித்தது. அடுத்த இரு வரிகளை அவர் கூறுவார். மக்கள் அதனைத் திரும்பக் கூறுவார்கள். இப்படியே சென்றது. அதனுள் மக்கள் பக்தியுடன் ஆழமாகச் சென்று இசைக்க ஆரம்பித்ததும், பாட்டின் ஒலி அதிமாகிக் கொண்டே சென்றது. துதிப் பாடல் முடியும் வேளை சிலர் வேதனைக் குரல் எழுப்பினார்கள். இன்னும் சிலர் கதறவும் ஆரம்பித்தார்கள். பின்னர் அந்தப் பிரசங்கி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். மேடையின் இருபுறமும் உணர்ச்சி வசத்தில் கைத்தறி இயந்திரம் ஆடுவதைப் போல அவர் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரின் முழுப் பலத்தையும் உபயோகித்து அவரின் பிரசங்கத்தை தொடர்ந்து கொண்டே. முன்புறம் நன்கு குனிந்து கரங்களைக் காற்றில் ஆட்டிக் கொண்டே உடலை இருபுறமும் அசைத்தார். அவ்வப்போது பைபிளைக் கையில் பிடித்து அதன் பக்கங்களைத் திறந்து அதனை நாலாதிசையிலும் சுற்றிக் காட்டிக்கொண்டே சத்தமிட்டார் "அந்த வனாந்தரத்தில் இருப்பது அந்த சாத்தனாகிய பாம்பு. அதை பார்த்து கவனித்து வாழுங்கள்." "கிருபை ஆமென்!" - மக்களும் அவருடன் சேர்ந்து கூக்குரலிட்டார்கள் அவ்வாறாக மக்கள் குரல் எழுப்பியும், அழுதும், ஆமென் சொல்லிக்கொண்டிருந்தபோதும், அவர் பிரசங்கத்தைத் தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 20

"ஓஹ்! துக்கிக்கிறவர்கள் அனைவரும் இந்த பெஞ்சுக்கு வாருங்கள். யாரெல்லாம் பாவப்பட்ட கருப்பு நிறத்தால் இதயத்தை வைத்திருக்கிறீர்களோ (ஆமென் ) அவர்கள் வாருங்கள் இங்கே! யாரெல்லாம் பிணியுற்று வெறுப்புற்றவர்கள் உள்ளீர்களோ (ஆமென்) வாருங்கள் இங்கே! யாரெல்லாம் முடமாய் , நொண்டியாய், கண்ணில்லாது இருக்கிறீர்களோ (ஆமென்) அவர்கள் இங்கே வாருங்கள். யாரெல்லாம் வேதனைப் பட்டு வலுவிழந்து வாடி நிற்கிறீர்களோ - அவர்கள் உங்களின் உடைந்த ஆத்மாவை எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள். உங்களின் குற்ற உணர்ச்சியை ஏந்திக்கொண்டு இங்கே வாருங்கள். உங்கள் கந்தலுடனும், பாவங்களுடனும், குப்பைகளுடனும் வாருங்கள். உங்களைச் சுத்தம் செய்ய இருக்கும் ஆண்டவனின் நீர் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். கடவுள் படைத்த சொர்க்கத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறந்திருக்கிறது. வந்து அமைதியுடன் வசியுங்கள் (ஆ ஆமென்_ கிருபை, கிருபை ஹல்லேலூயா)."

இப்படியாக அது போய்க் கொண்டே இருந்தது. அதன்பின் அந்த பிரசங்கி என்ன சொல்கிறார் என்று கேட்க முடியாத அளவுக்கு கூட்டம் அழுது கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தது. அந்த அப்பாவி கிராமமக்கள் ஒருவரை ஒருவர் பலம் கொண்டமட்டும் தள்ளிக் கொண்டு அந்த துக்கித்தவர்கள் பெஞ்சை நோக்கி அடித்துப் பிடித்துப் போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் கண்ணீர் வழிந்தவாறு இருந்தது. அனைத்து துக்கக்காரர்களும் அந்த பெஞ்சின் அருகே சென்றவுடன், பாடிக் கொண்டும், கத்திக்கொண்டும், ஏதோ வெறி பிடித்தவர்கள் போல அந்த வைக்கோல் தரையில் உருண்டுகொண்டும் இருந்தார்கள்.

நல்லது. என்ன என்று சரியாக நான் உணரும் முன்பே, ராஜா அந்தக் கூட்டத்தில் குதித்து மக்களுடன் கலந்து விட்டார். அவரின் குரல் மட்டும் மற்றவர்களின் குரலை அழுத்திக்கொண்டு உரக்க ஒலித்தது. கண்ணிமைக்கும் நொடிக்குள்ளாகவே அவர் மேடையின் மேல் ஏறிச் சென்று விட்டார். ராஜாவை மக்களிடம் பேசும்படி அந்த பிரசங்கி கேட்டுக் கொண்டார். ராஜாவும் பேசினார். முப்பது வருடங்களாக இந்தியப் பெருங்கடலில் ஒரு கடற்கொள்ளையனாக தான் வாழ்ந்து வந்ததாகவும், கடந்த வசந்த காலத்தில் நடந்த ஒரு போரில் அவரது கூட்டம் மொத்தத்தையும் இழந்து விட்டதாகவும் தெரிவித்தார். தற்போது வீடு திரும்பியுள்ள அவர் மீண்டும் சில புது மனிதர்களைக் கொள்ளைக் கூட்டத்திற்குச் சேர்க்க இருந்ததாகவும் ஆனால் அதற்குள்ளாக கடந்த இரவில் நடந்த கொள்ளையில் அவரிடம் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு நீராவிப் படகிலிருந்து அவர் கீழே தள்ளிவிடப் பட்டதாகவும் கூறினார்.

தற்போது அவர் ஒரு நயாபைசா கூட இல்லாதவர் என்றாலும் அப்படி நடந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். உண்மையில் அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளிலேயே இதுதான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட விஷயம் என்று கூறினார். தான் இப்போது முற்றிலும் திருந்திய ஒரு புது மனிதன் என்றும் வாழ்வில் முதல்முறையாக இறைவனின் அருட்கொடையை உணர்வதாகத் தெரிவித்தார். தான் ஏழையாக இருந்தாலும், திருந்திய ஒரு மனிதனாக மீண்டும் இந்தியப் பெருங்கடலுக்கு திரும்பிச் செல்வதாக ஆனந்தத்துடன் கூறினார்.

அங்கே கடலின் மீது கொள்ளையர்களாக இருக்கும் மனிதர்களை நல்வழிப்படுத்துவதே இனி அவரின் வாழ்நாள் லட்சியம் என்றுரைத்தார். அவரே ஒரு கொள்ளையர் என்பதாலும், கடலின் மீதுள்ள கொள்ளையர் கூட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பதாலும், அவர்களை நல்லவர்களாக மாற்றும் பணிக்கு தன்னை விடத் தகுதியானவர்கள் யாரும் இருக்க முடியாது என்றார். தற்போது அவர் மனம் உடைந்திருந்தாலும், அங்கே திரும்பச் செல்ல மிகுந்த கால அவகாசம் தேவைப்படும் என்றாலும், அவர் எப்படியாவது அங்கே சென்று விடுவதாக உறுதி அளித்தார். ஒவ்வொரு முறையம் ஒரு கடற்கொள்ளையனை அவர் திருத்தி நல்வழிப் படுத்தும்போதும், "எனக்கு நன்றி சொல்லாதே. எனக்கு இந்தப் பெருமை சேராது. அங்கே போக்வில் மக்களின் கூட்டத்தில் இருந்த மக்களுக்கு - உலகிலேயே அன்பு நிறைந்த வெள்ளை நிற மக்கள் வசிக்கும் ஊர் அது- மற்றும் அந்த அன்புக்குரிய பிரசங்கி அவருக்கும்தான் இந்தப் பெருமை சாரும். அந்த அன்புள்ளம் கொண்ட பிரசங்கிதான் ஒவ்வொரு கடற்கொள்ளையனுக்கும் எப்போதுமே கை கொடுக்கும் உண்மையான நண்பன்" என்று இவர் கூறப்போவதாய்ச் சொன்னார்.

பிறகு அவர் உடைந்து போய் விம்மி அழுக ஆரம்பித்தார். அவரைப் பார்த்து அந்தக் கூட்டமே அழுதது. பின்னர் கூட்டத்திலிருந்து யாரோ கூவினார்கள் "அவருக்காக நிதி திரட்டுவோம். நிதி கொடுங்கள் அனைவரும்" என்று. அரை டசன் மக்கள் தொடங்கி வைக்க முன்வந்தார்கள். ஆனால் அப்போது மீண்டும் யாரோ சொன்னார்கள் "அவரின் தொப்பி உள்ளே சுற்றி வரட்டும். உங்களின் நிதியை அதில் போடுங்கள்." அந்தப் பிரசங்கி உள்பட அனைவரும் அதற்குச் சம்மதித்தார்கள்.

எனவே ராஜா தன் தொப்பியைக் கையிலேந்தியவாறு, கண்களைத் துடைத்தபடி, மக்களை மனதார வாழ்த்திக் கொண்டும், இந்தியப் பெருங்கடலில் இருக்கும் கடற்கொள்ளையர்கள் மீது அன்பு காட்டியதற்கு நன்றி கூறிக் கொண்டும் அங்கே வலம் வந்தார். அவ்வப்போது சில அழகிய இளம்பெண்கள் தங்களின் கண்ணீரைத் துடைத்தவாறே தங்களை அவர் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள அன்போடு ஒரு முத்தம் கொடுக்கலாமா என்று அவரைக் கேட்பார்கள். அவரும் சரி என்று சொல்லிவிட, சிலர் அவரைக் கட்டியணைத்து, ஐந்து அல்லது ஆறு முறைகள் கூட முத்தம் கொடுத்தார்கள். அவர் அந்த ஊரில் ஒரு வாரமாவது தங்க வேண்டும் என்றும், அவர் தங்கள் வீட்டில் தங்குவது அவர்களுக்கு மிகப் பெரிய கௌரவம் என்றும் அந்த ஊர்மக்கள் கூறினார்கள். அன்றே அந்தக் கூட்டத்தின் கடைசி நாள் என்பதாலும், திரும்பக் கடலுக்குப் போய் அந்த கொள்ளையர்களை நல்லவர்களாக மாற்றும் மாபெரும் பொறுப்பு அவர் முன்னே இருப்பதாலும், அவர் அங்கே தங்க இயலாது என்று கூறினார்.

தோணிக்குத் திரும்பச் செல்லும்போது ராஜா அந்தக் காசுகளை எண்ண ஆரம்பித்தார். எண்பத்தேழு டாலர்களும் எழுபத்தியைந்து செண்டுகளும் சேர்ந்திருக்கிறது என்று ராஜா கூறினார். அத்துடன் காடுகளிடையே திரும்பி வரும் வேளையில் ஒரு குதிரை வண்டியின் கீழிருந்து எடுத்ததாக மூன்று காலன் விஸ்கி குப்பிகளையும் காட்டினார். மொத்தத்தில் ஒரு மதமோசடிக் கூட்டத்தில் அவர் சுருட்டிய மிகப் பெரிய கொள்ளை இது என்று மார் தட்டிக் கொண்டார். கடற்கொள்ளையர்களைத் திருத்துவது என்ற விசயத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு மாதிரி செவ்விந்தியர்களை அல்லது மற்ற காட்டுமிராண்டிகளைத் திருத்துவது என்ற விசயத்திற்குக் கிடைக்காது என்றார்.

பிரபுவானவரும் அன்றைய நாளை தனக்கான நாளாக மாற்றிக் கொண்டதாக கூறினார். ஆனால் ராஜாவின் கதையைக் கேட்ட பிறகு தான் இன்னும் வித்தியாசமாக சிந்தித்துச் செயல்படுத்தியதாகக் கூறினார். விவசாயிகளை மோசடி செய்ய குறிவைத்து, குதிரைக்கான சில வரிகளை அந்த அச்சடிக்கும் அலுவலகத்தில் அச்சடித்திருக்கிறார். அத்துடன் அங்கிருந்த நாலு டாலர் பணத்தையும் எடுத்துக் கொண்டார். அவர் அச்சடித்த செய்தித்தாள்களுக்கான விளம்பரங்களுக்கு அருகில் இருந்த செய்தித்தாள்கார்களிடம் பத்து டாலர் விலை பேசியிருக்கிறார். அவர்கள் முதலில் நாலு டாலர் முன்பணம் கொடுக்கவேண்டுமென கேட்க, அவர்களும் அப்படியே கொடுத்திருக்கிறார்கள். ஒரு செய்தித்தாளுக்கு சந்தா ஒருவருடத்திற்கு இரண்டு டாலர்கள் வீதம் செலுத்த வேண்டும். பிரபு மூன்று வருட சந்தாவாக ஒரு டாலர் என அங்கிருப்பவர்களிடம் வாங்கியிருக்கிறார். மீதம் செலுத்த வேண்டிய சந்தாவுக்கு வாடிக்கையாளர்கள் விறகுகளும், வெங்காயமும் கொடுப்பதெனச் சொல்லி இருந்திருக்கிறார்கள். அவ்வாறுதான் அவர்கள் எப்போதும் செய்வது வழக்கம். ஆனால் பணமாகச் செலுத்தினால், மொத்தத் தொகையிலிருந்து கொஞ்சம் குறைத்துக் கொடுப்பதாக பிரபுவாகப்பட்டவர் உறுதி கூறியிருக்கிறார். மிக அழகாக வார்த்தைகளிட்டு மூன்று இனிமையான மற்றும் சோகக் கவிதைகளும் கலந்து "ஆம், கசக்கிப் பிழியும் இரக்கமற்ற உலகம், இந்த உடைந்த இதயம்" எழுதி அதை செய்தித்தாளில் இலவசமாக அச்சடிக்க சரி செய்து வந்திருக்கிறார். மொத்தத்தில் அவருக்கு லாபம் ஒன்பது டாலர்களும், ஐம்பது செண்டுகளும் என்பதால், அதை ஒரு நல்ல நாளின் வரவு என்று கருதினார்.

பின்னர் எங்களுக்காக இலவசமாக அவர் அச்சடித்த இன்னொரு அறிக்கையை எங்களிடம் காட்டினார். அதில் ஒரு நீக்ரோ அவன் தோளின்மீது ஒரு கட்டு குச்சிகள் வைத்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு புகைப் படம் இருந்தது. அதன் கீழே 200 டாலர் பரிசுத்தொகை என்றிருந்தது. அந்தத் தாளில் இருந்த வார்த்தைகள் அனைத்தும் ஜிம்மைக் குறிப்பதாகவே இருந்தது. அவர்கள் அதை மிகவும் அருமையாக விவரித்தார்கள். அவன் கடந்த குளிர்காலத்தில் நீயூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து கீழ்ப்பக்கமாக நாற்பது மைல் தொலைவிலிருக்கும் செயின்ட் ஜாக்குய்ஸ் பண்ணையிலிருந்து தப்பி ஓடியவன் என்று போட்டிருந்தது. அவன் வடக்கு நோக்கிச் சென்றிருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது. யார் அவனை பிடித்துக் கொண்டு வந்தாலும், அவர்களுக்குப் பரிசுத் தொகையும், கூட்டி வருவதற்காகச் செலவழித்த தொகையும் வழங்கப்படும் என்று காணப்பட்டது.

"இப்போது" அந்த பிரபு கூறினார் "இன்றைய இரவிலிருந்து நாம் விரும்பினால் இனிமேல் பயமின்றி பகலிலும் பயணம் செய்யலாம். அப்படிப் பயணம் செய்கையில், யாரேனும் நம்மைப் பார்த்துவிட்டால், ஜிம்மை உடனே ஒரு கயிற்றால் கட்டிவிட்டு, அந்த கூம்புக் குடிலுக்குள் தள்ளிவிடலாம். பிறகு நம்மை சந்தேகிப்பவரிடம், இந்த அறிக்கையைக் காட்டி, நாம் ஜிம்மை பிடித்துக் கொண்டு நதியின் மேல்நோக்கிப் போவதாகக் கூறலாம். நீராவிப் படகில் பணம் கொடுத்து செல்லும் அளவு வசதி இல்லாத ஏழைகள் என்று கூறிவிடலாம். இந்தத் தோணியைக் கூட பரிசுத் தொகை வந்ததும் திருப்பி தருகிறோம் என்று கூறி நண்பர்களிடம் கடன் வாங்கி வந்ததுதான் என்று கூறிவிடுவோம். ஜிம்முக்கு கைக்காப்பு பூட்டி, சங்கிலியால் பிணைத்துக் கொண்டுபோனாலும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நாம் கூறும் கதைக்கு அது பொருந்தாது. நாம்தான் கதைப்படி ஏழைகள் ஆயிற்றே. அதனால் சங்கிலி, காப்பு வாங்க நம்மிடம் காசு இருக்காது அல்லவா! கயிறுதான் சிறந்தது. நாம் நாடகக்கொட்டகைகளில் கடைப்பிடிப்பது போன்றே நாம் சொல்வதைத் தொடர்ச்சியாக கடைப்பிடிப்போம்."

பிரபு கூறிய அந்தத் திட்டத்தை மிக சாமர்த்தியமான ஒன்று என்று நாங்கள் அனைவரும் ஒத்துக் கொண்டோம். இதனால் இனிமேல் பகல் பொழுதுகளில் பயணம் செய்வதில் எந்தத்தடையும் இருக்காது என்றும் எண்ணினோம். பிரபு அந்த கிராமத்தில் செய்த அச்சடிப்பு மோசடி வெளியே தெரிந்து மக்கள் தாங்கள் ஏமாற்றப் பட்டதை உணரும் முன்பே அன்று இரவு வெகு சீக்கிரம் அங்கிருந்து நகர்ந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்று எண்ணினோம். அதன்பின் பெரிதாக கவலைப் படத் தேவையிருக்காது.

அன்றிரவு மணி பத்து ஆகும்வரை அமைதியாக ஒரு இடத்தில் பதுங்கியிருந்தோம். பிறகு மெதுவாக அந்த நகரை விட்டு நகர்ந்து அந்த ஊர் மக்களின் கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து மறையும்வரை லாந்தர் விளக்கையும் பற்றவைக்கவில்லை.

காலை நான்கு மணிக்கு ஜிம் என்னை தோணிக்குக் காவல் இருக்கும்படி எழுப்பியபோது இவ்வாறு கேட்டான் "ஹக்! நம்முடைய இந்தப் பயணத்தில் இன்னும் சில ராஜாக்களை நாம் சந்திக்க வேண்டியிருக்குமா?"

"இல்லை" நான் கூறினேன் "அப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை."

"நல்லது." அவன் சொன்னான் "எனக்கும் அது நிம்மதியே. ஒன்றோ இரண்டோ ராஜாக்கள் சரிதான். ஆனால் அது போதும். இதோ இந்த ராஜா நன்கு குடித்துவிட்டுக் கிடக்கிறான். அந்த பிரபுவோ அதற்கும் மேல்."

ஜிம் பிரெஞ்சு மொழி என்றால் என்ன என்று அறிந்துகொள்ள அந்த ராஜாவைப் பிரெஞ்சு மொழியில் பேசவைக்க முயற்சி செய்திருக்கிறான் என்று நான் கண்டுகொண்டேன். ஆனால் அந்த ராஜாவோ பிரெஞ்சு நாட்டை விட்டு அமெரிக்கா வந்து பலகாலம் ஆகிவிட்டதாலும், அவர் வாழ்வில் பல இன்னல்களை அவர் சந்தித்து மனமுடைந்து போனதாலும், பிரெஞ்சு மொழியை தான் சுத்தமாக மறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.