- ஆர். தாரணி -

1. "உங்கள் தேவை! எங்கள் சேவை!"

தங்களின் நாடு உடனடியாக பிழைக்க
நடிகர்களை அழைக்க
எண் ஒன்றை அழுத்தவும்.

தற்போது நடைபெறும் ஊடகக்காட்சிகள்,
அடிதுடிகள்அப்படியே தொடர
எண் இரண்டை அழுத்தவும்.

சாப்பாடு ஒழுங்காக கிடைக்க
மனைவியின் விருப்ப நாடகங்கள் மட்டுமே பார்க்க
எண் மூன்றை அழுத்தவும். தெய்வங்கள் எப்படி வாழ்ந்து
வெற்றி அடைந்தார்கள் என்பது காட்டும்
ராமாயணம், மஹாபாரதம் மட்டுமே காண
எண் நான்கை அழுத்தவும்.

நாட்டைப்பற்றிய காரசார விவாதம்
கடவுளுடன் நடத்த
எண் ஐந்தை அழுத்தவும்.

எதுவுமே முடியவில்லையானால்
உங்கள் மூஞ்சியிலேயே
தலையணையை வைத்து அழுத்தவும்.

மீண்டும் இதே தகவலைக்கேட்க
எண் ஆறு அழுத்தவும்.

உங்கள் தேவை!
எங்கள் சேவை!


2. மலரின் மொழி

அவள் திரும்பினாள்
ஆதவனின் பளபளத்த ஒளிக்கற்றைகள்
வீழும் திசை நோக்கி.

செண்பகநிற எழில்வதனம் பொலிவுற்று மலர
அசைத்தாள் தன் தலையை.
பின் உரைத்தாள் தன் அருகாமை நட்புக்களிடம்,
"மாரிக்காலம் முடிந்து மலர்ந்தான் மாயவன்,
மலர்ந்தேன் மயக்கத்திலிருந்து நானும்
மகிழ்த்து அழகுற்று மலர்வாய் மானுடனே"

3.

அடடே புரட்டாசி!
மண்ணைப்பொன்னாக்கும் மாமழை
எளியமானுடர்களை கூட முண்டாசுக்கவிஞனாகவும்,
முக்காட்டில் மறைந்து வாழும்
கள்வர் கூட்டமாகவும் உருவாக்குகிறதே!
குடை மறந்த கொடை வள்ளல்களின் கதி!
ரசிக்கிறேன் நான் என் முற்றத்தில்
நனையாமல் நின்று கொண்டு


4.

"எத்துணை மந்தம் இந்த இடைத்தயக்கம்
முடிவைச்செயலாற்றலாக்க ,
மெருகேற்றப்படாமல் மழுங்கித்துருப்பிடிக்க
பயன்தரு நிலையில் பிரகாசிக்காமல் "

யூலிஸிஸ் கவிதை - ஆங்கிலக்கவிஞன் டென்னிசன்

How dull it is to pause, to make an end,
To rust unburnish'd, not to shine in use!
- Lord Tennyson in Ulysseus


5.

"கடுமையாய்தான் இருக்க வேண்டியுள்ளது
என் அன்பை வெளிப்படுத்த" - வில்லியம் ஷேக்ஸ்பியர்

I must be cruel, only to be kind - William Shakespeare\


6.

முகில்கூட்டம் இடைவிடாமல் தவழ்ந்து வந்தன
இன்றைய என் வானில்,
தொடர் மழைக்கோ, சுழற்றும் சூறாவளிக்கோ
கட்டியம் கூற அல்ல.
என் வாழ்வின் இனிமைக்கு வண்ணம் சேர்த்து
என்னை வாழ்விக்க வந்த வாழ்த்து மலர்கள்.
நான் நலம் வாழ நல்ல மனதுடன்
உலகின் பலமூலைகளில் வாழ்ந்து கொண்டு
என்னை வாழ்த்திய என் அன்பு தோழர் குழாமும் \
எல்லா வளங்களும் பெற்று அமைதியான
நீண்ட வாழ்வு பெற எல்லாம் வல்லானை,
வல்லாளை பிரார்த்திக்கிறேன்.
தங்களின் அனைவரின் வாழ்த்துக்களும்
எனக்கு கணக்கிட முடியா சொத்து.
பணம் பின்னால் ஓடும் பித்தர்களுக்கு
மனதின் அருமை தெரிய வாய்ப்பு குறைவுதான்.
எனக்கு வேண்டிய அனைத்தும்
நான் வேண்டிக்கேட்காமலே
எனக்கு வழங்கி என்னுடன் துணைநிற்கும்
அந்த இறையருளுக்கும் நன்றி.
மகிழ்ச்சிப்பரவசத்தில் திளைக்க வைத்த உங்கள்
அனைவருக்கும் நன்றி.


7.

இருதய அரங்கு வன்மம் நிரப்பிய காற்றுப்பை அல்ல
காதலில் முகிழ்க்கும் நீர்மூழ்கிக்கப்பலும் அன்று
சதையும் ரத்த நாளங்களும் பிணைந்து
குருதி செலுத்தும் குழாய்ப்பொறி
ஒரு வீசை யாரிடம் இருந்து யார் எடுத்தாலும்
செந்நிறம் கொப்புளிக்கும்
கட்டிக்காக்காப்பதே கடினம்.
சுட்டுப்பொசுக்குவது சுலபம்
வெட்டி வீழ்த்த கோடாரி தேவை இல்லை.
சுட்ட கரிநாக்கு போதும்.