- மார்க் ட்வைன் --  என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -


அத்தியாயம் ஒன்று: காட்சி : மிஸ்ஸிஸிபி பள்ளத்தாக்கு - காலம் : நாற்பதில் இருந்து ஐம்பது வருடங்கள் முன்பு

முனைவர் ஆர்.தாரணிடாம் சாயரின் சாகசங்கள் என்ற பெயரில் உள்ள  புத்தகத்தை நீங்கள் வாசித்திராவிடில், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. திரு. மார்க் ட்வைன் என்பாரால் அந்த புத்தகம் தயாரிக்கப்பட்டு இருந்தது. அவர் அதில் சத்தியத்தையே கூறி இருந்தார். சில விஷயங்களை அவர் கொஞ்சம் இழுத்துக்கொண்டு சொல்லி இருந்தபோதிலும் உண்மையையே முதன்மையாகக் கூறி இருந்தார். அது ஒன்றுமே இல்லை. போல்லி அத்தை, அந்த விதவை மற்றும் மேரி இவர்களை விடுத்து, ஒரு சமயம் இல்லாவிட்டாலும் இன்னொரு சமயம் பொய் சொல்லாமல் இருப்பவர்களை நான் கண்டதே கிடையாது. நான் முன்னமே உரைத்ததுபோல உண்மையை விளம்பும் அந்த புத்தகத்தில், கொஞ்சம் இழுவையுடன் அதிகம் சொல்லப்பட்டது  போல்லி அத்தை, அதாவது டாமின் அத்தை போல்லி,  மேரி, பிறகு டக்லசின் விதவை ஆகியோரைப் பற்றி மட்டுமே.

அந்த புத்தகம் கடைசியில் இவ்வாறாக முடிவடைகிறது.  கொள்ளையர்கள் குகைக்குள் மறைத்து வைத்திருந்த செல்வத்தைக் கண்டுபிடித்த டாமும், நானும் செல்வந்தர்கள் ஆகிறோம். ஒவ்வொருவர் பங்கும் சேர்த்து, அத்தனையும் தங்கமாக ஆறாயிரம்டாலர்கள் எங்களுக்குக்கிடைக்கிறது. அவ்வளவு செல்வம் கொட்டி வைத்திருக்கும் அந்தக் காட்சி காணக்கிடையாத காட்சி. நல்லது!

நீதிபதி தாட்சர் எங்களிடம் இருந்து அதை வாங்கி வட்டி வரும்படி செய்ததால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பங்காக ஒரு டாலர் என வருடம் முழுதும் கிடைக்க வழி வகுத்தது. உண்மையில் அதை வைத்து என்ன  செய்வது என்று முழுதாக உணராத நிலைதான். டக்லசின் விதவை என்னைத் தனது மகனாக சுவீகாரம் செய்து, என்னை நல்வழிப்படுத்துவதற்காக தீர்மானம் மேற்கொண்டாள். ஆனால் வீட்டினுள்ளேயே அடைந்து கிடப்பதும், அந்த விதவை வாழும் ஒழுக்கமான,  வழக்கமான அவள் வாழ்க்கையைக் கடைப்பிடிப்பதும் எனக்கு மிகவும் கடுமையாக இருந்தது. ஒரு கட்டத்தில் எனக்கு அது தாங்க முடியாது சென்றபோது, அந்த வாழ்க்கையை விடுத்து வெளியேறத்துணிந்தேன். என்னுடைய கந்தல் துணிகளையும், சர்க்கரை நிரப்பும் பீப்பாயையும் மீண்டும் பெற்று சுதந்திரத்தையும்,  திருப்தியையும் அடைந்தேன். ஆயினும் டாம் என்னை விடாமல் துரத்தி, நான் திரும்பவும் அந்த விதவையின் மதிப்பிற்குரிய மகனாக வாழ்ந்தால், அவன் ஆரம்பிக்கவிருக்கும் கொள்ளையர் கூட்டத்தில், நான் விரும்பினால் சேர்ந்துகொள்ளமுடியும் என்று வற்புறுத்தினான். எனவே நான் மீண்டும் திரும்பிச் செல்ல நேர்ந்தது.

என்னைக் கண்டதும் அந்த விதவை கதறி அழுததுடன், என்னை " தொலைந்து போன பாவப்பட்ட ஆட்டுக்குட்டி" எனவும் வேறு பல பெயர்களிலும் அழைத்தாள். ஆயினும் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய அவள் முற்படவில்லை. திரும்பவும் எனக்கு புது ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தாள். எனக்கு மூச்சடைத்து திணறி வேர்த்து விறுவிறுத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

நல்லது . மீண்டும் அதே பழைய முறைகள் திரும்ப ஆரம்பிக்கப்பட்டன. அந்த விதவை இரவு உணவுக்கு என்று மணி அடித்தால் சாப்பிட சரியான நேரத்திற்கு உணவருந்தும் மேசைக்கு வரவேண்டும். அங்கே சாப்பிட அமர்ந்தபின்னும் அந்த நொடியே சாப்பிட ஆரம்பித்துவிட முடியாது. அந்த விதவை தனது தலையை மேசையின் மீதுள்ள உணவுப் பதார்த்தங்களின் மேல் குனிந்து ஏதோ முணுமுணுத்து முடியும்வரை காத்திருக்கவேண்டும்.. என்னசெய்தாலும் அந்த உணவுப்பண்டங்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல - அதாவது எப்படி இருந்தாலும் அவை சாப்பிடுவதற்காகச் சமைக்கப்பட்டவை. இதில் எதற்கு இந்தத்தேவையற்ற முமுணுப்பு என்று புரியவில்லை.

இரவு உணவுக்குப் பின் அவள் அவளுடைய புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு மோசஸ் பற்றியும் புல்ரஸ்ஸஸ்  எனப்படும் நீர் நாணலையும் பற்றி எனக்குப் படிப்பித்தாள். நானும் மோசஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக  வியர்த்து வழிந்துகொண்டு இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் கணிசமான நாட்களுக்கு முன்பே  மோசஸ் இறந்து விட்ட செய்தியை அவள் வெளியிட்டாள்.. அதன்பின், அதைப்பற்றி தெரிந்து கொள்ள நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ஏனெனில் இறந்துவிட்ட மனிதர்கள் மேல் நான் அதிக அளவில் கவனம் செலுத்துவது வழக்கம் இல்லை.   இரவு உணவுக்குப் பின் அவள் அவளுடைய புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு மோசஸ் பற்றியும் புல்ரஸ்ஸஸ்  எனப்படும் நீர் நாணலையும் பற்றி எனக்குப் படிப்பித்தாள். நானும் மோசஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக  வியர்த்து வழிந்துகொண்டு இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் கணிசமான நாட்களுக்கு முன்பே  மோசஸ் இறந்து விட்ட செய்தியை அவள் வெளியிட்டாள்.. அதன்பின், அதைப்பற்றி தெரிந்து கொள்ள நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ஏனெனில் இறந்துவிட்ட மனிதர்கள் மேல் நான் அதிக அளவில் கவனம் செலுத்துவது வழக்கம் இல்லை.   

வெகு சீக்கிரமாகவே எனக்கு புகைப்பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு வந்ததால், அந்த விதவையை என்னை புகைப்பிடிக்க அனுமதி வழங்கும்படி வேண்டினேன்.. ஆனால் அதற்கு அவள் என்னை அனுமதிக்கவில்லை. புகைப்பிடிப்பது மிகவும் கேவலமான மற்றும் சுத்தமற்ற செயல் என்பதால் அதை இனி நான் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினாள். இதுதான் சில மனிதர்களின் பிரச்சினையே. அவர்களுக்கு எதுவுமே தெரியாத  விஷயத்தில் அவர்கள் மிகவும் தீவிரமாக இறங்குகிறார்கள். இங்கே அவள் பூவுலகை விட்டுப்போன, யாருக்கும் பயன் இல்லாத,  அவளுக்கும்  எந்த வகையிலும் உறவே இல்லாத மோசஸ் பற்றி அவ்வளவு கவலைப்படுகிறாள் பாருங்கள். ஆனால் எனக்குப்பிடித்த எனக்கு ஏதோ நன்மை தரும் என நான் நம்பும் செயல் பற்றி குற்றம் காண்கிறாள். அந்த அம்மாளே அவ்வப்போது மூக்குப்பொடி நுகர்வது எனும் பழக்கம் உடையவள். அவளே செய்வதால் அதில் தவறு ஒன்றுமில்லை போலும்.

சமீபகாலமாக  அவளுடன் வசிக்க வந்திருக்கும் அவளின் வயதான சகோதரி பார்க்க கொஞ்சம் ஒல்லியாக, கண்ணாடி அணிந்த மிஸ். வாட்ஸன் அடுத்ததாக எனக்கு ஸ்பெல்லிங் (எழுத்துக்கூட்டிப் படிப்பது) பற்றிய வகுப்பு எடுக்க வந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எனக்கு கடுமையான பயிற்சி கொடுத்த பிறகு அவரது விதவைச் சகோதரி அவரை ஓய்வெடுக்கப் பணித்தார். என்னால் வெகு நேரம் நிற்கவே முடியவில்லை. மீண்டும் ஒரு மணி நேரம் எனக்கு மந்தமாகவே  கழிந்த நிலையில் நான் பொறுமை இழந்தவனாக நின்றிருந்தேன். "கால்களை அங்கே வைக்காதே, ஹக்கில்பெர்ரி! அதை அப்படி கசக்காதே, நேராக நிமிர்த்தி வை. கால்களை அப்படி நீட்டாதே! ஏன் ஒழுங்காக நடந்து கொள்ள மறுக்கிறாய்?” என்றெல்லாம் என்னை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தாள்.

அதன் பின் உலகின் சில போகக்கூடாத இடங்களைப் பற்றிக்கூறினாள். நான் அங்கே எல்லாம் போக விரும்புவதாகக் கூறியவுடன் அவள் கடும் எரிச்சலுக்கு ஆளானாள், உண்மையில் நான் எந்தக்கெடுதலும் நினைக்கவில்லை. எனக்குத் தேவை எல்லாம் எங்கேயாவது வெளியே செல்வதுதான். மிகவும் குறிப்பாக எனக்கு ஒரு மாறுதல் தேவைப்பட்டது. நான் சொல்லியது ஒரு கொடுஞ்சொல் எனவும், அவள் வாழ்வில் என்றுமே அவள் அவ்வாறு உரைத்ததில்லை எனவும் கூறினாள். நன்று. அந்த அம்மாள் செல்லும் இடத்திற்கு நான் செல்வதில் எந்தப்பயனும் இல்லை என்பது எனக்கு நன்கு புரிந்தது. எனவே அவர்கள் காட்டும் வழியில் செல்லக்கூடாதென  எனது மனதை நான் தயார்படுத்திக் கொண்டேன். ஆனால் என் மனதில் நான் நினைத்ததை வெளியில் கூறவில்லை. அப்படிக்கூறுவதால் எந்த நன்மையும் விளையாது. மாறாக பிரச்சினைகள்தான்  உருவாகும்.

தொடர்ந்து மீண்டும் அவள் மனிதன் போய்ச்சேரவேண்டிய நல்ல இடங்களைப்பற்றி குறிப்பிட ஆரம்பித்தாள். அந்த இடங்களில் சென்று சேரும் அனைவரும் எப்போதும் யாழ் மீட்டிக்கொண்டும், ஆனந்தமாய்ப்பாடிக்கொண்டும் இருக்கலாம் என்றும் கூறினாள், நான் அதுபற்றி பெரிதாக எதுவும் நினைக்கவில்லை. ஆனால், அதை வெளியில் கூறவில்லை. டாம் சாயர் கூட அந்த இடத்திற்கு வருவானா என்று கேட்டதும் அவளுக்குத் தெரிந்தவரையில் அவனால் அங்கு வர முடியாது என்று பதிலிறுத்தாள். எனக்கு அதைக்கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் நானும் அவனும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதையே நான் விரும்பினேன்.

மிஸ் வாட்ஸன் இவ்வாறாக என்னைக் கொத்திக்கொண்டே இருந்தது எனக்கு அலுப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர் அன்றாட வழக்கத்தில் ஒன்றான வீட்டில் பணிபுரியும் கறுப்பின வேலையாட்களை உள்அமர்த்தி இரவு நேர பிரார்த்தனைகளைச் செலுத்திய பின் அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றார்கள். கையில் ஒரு மெழுகுவர்த்தியுடன் நானும் மாடியில் இருந்த என் அறைக்குச் சென்று, மேசையின் மீது மெழுகுவர்த்தியை நிறுத்தி வைத்தேன். பின்னர் ஜன்னல் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து மனதுக்கு உவகை தரும் ஏதேனும் சிந்திக்க முற்பட்டேன். ஆனால் பயனில்லை. அந்த சமயத்தில் மிகவும் தனிமையை உணர்ந்த நான் இறந்துவிடக்கூட மிகவும் ஆசை கொண்டேன்.

நட்சத்திரங்கள் வானில் ஜொலித்தன. எப்போதையும் விட அதிக அளவில் வேதனையில் புலம்புவது போல் இலைகள் வனத்தில் சலசலத்தன. எங்கிருந்தோ  வுவுவுவுஉஉஉஉ என்று இறந்துபோன ஒருவருக்காக குரல் எழுப்பும்  ஆந்தையின் ஒலியை நான் கேட்டேன். தூரத்தே இருந்து ஒரு அழைப்பொலி, சாகப்போகும் யாரோ ஒருவருக்காக  ஊளையிட்டு  அழும் ஒரு நாய், அத்துடன் என் காதில் ஏதோ ரகசியம் சொல்வது போலக் கிசுகிசுத்த காற்று. என்னால் அதை என்ன என்று சரியாகப்புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் என் உடல் முழுதும் ஒரு குளிர் சொல்லவொணா நடுக்கத்தை ஊடுருவச் செய்தது. பின் வெகு தூரத்தில் உள்ள வனத்தில் இருந்து, மனதில் மறைந்திருக்கும் என்னவென்று புரியாத ஒரு மர்மத்தைக் கூற நினைக்கும் பேய் ஒன்று  விசித்திர ஒலி எழுப்புவதும் நான் கேட்டேன். கல்லறையில் நிம்மதியாய் உறங்க இயலாத அந்தப்பேய் திகிலூட்டும் மர்மத்தை மனதில் வைத்துக்கொள்ள முடியாமல் ஒவ்வொரு இரவும் துக்கத்துடன் பிதற்றுவது போன்றதொரு ஒலி. பெரிதும் கலக்கமுற்று மனம் தளர்ந்த நான் தற்போது ஏதேனும் ஒரு துணை இருந்திருந்தால் தேவலை என்று ஏங்க ஆரம்பித்தேன். வெகு விரைவிலேயே ஒரு சிலந்தி எனது தோளின் மேல் ஊர்ந்து வந்தது. அச்சத்தில் அதை அப்படியே  வேகமாக உதறி வீசினேன். உடனடியாக அருகில் உள்ள மெழுகுவர்த்தியில் அது வீழ்ந்து கருகியது. நான் பதறி அசைவதற்குள் அது கருகிச்சுருங்கியது. அது உண்மையிலே மிக மோசமான ஒரு சகுனம் என்பதை யாரும் எனக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அது எனக்கு துரதிஷ்டம் தரும் சகுனம் என்பதை உணர்ந்து அச்சமுற்ற நான் எதையோ என்னிடம் இருந்து தூர எறிவது போல என் ஆடைகளை நன்கு உதறினேன்.

பின் எழுந்து நின்று திரும்பி மூன்று முறை நான் நடந்த வழியிலேயே மேலும் கீழும் நடந்தேன். ஒவ்வொரு முறையும் மார்பில் சிலுவை வரைந்து கொண்டேன். அதன் பின்னர், சூனியக்காரிகளை விரட்டி அடிப்பதற்காக  என் தலையில் உள்ள முடிக்கற்றைகள் சிலவற்றை எடுத்து ஒரு நூலால் கட்டினேன். அப்போதும் எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. தான் கண்டுபிடித்த ஒரு குதிரைலாடம்  தொலைந்து விட்டால், பொதுவாகவே கதவில் ஆணியில் அறைந்து வைப்பதற்கு பதிலாக இப்படிச்செய்வார்கள். ஆனால் ஒரு சிலந்தியைக் கொன்ற குற்றத்திற்காக வரப்போகும் துரதிஷ்டத்திற்கு இதைச் செய்யவேண்டும் என யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. உடலெல்லாம் நடுங்கியபடியே மீண்டும் அமர்ந்தேன்.  

முழு வீட்டிலும் தற்போது மயான அமைதி நிலவுவதால், அந்த விதவைக்குத் தெரியப்போவதில்லை என்ற தைரியத்தில் புகைப்பிடிக்கும் குழாயை கையில் எடுத்தேன். நல்லது. வெகு நாட்களுக்குப்பிறகு தூரத்தே ஊருக்குள் இருக்கும் கடிகாரம்  பூம் பூம் என்று மணி - 12 அடிகள்-  அடிப்பதை நான் கேட்டேன். . அனைத்தும் முன்னைவிட இப்போது சலனமற்று இருந்தது. வெகு விரைவிலேயே இருட்டில்  மரக்கிளை ஒன்று கீழே மரங்களுக்கிடையே முறிந்து வீழும் சப்தம் எனக்கு மெல்லியதாய் கேட்டது. ஏதோ ஒன்று அசைவதாகவும் புலப்பட்டது. சலனமற்று அமர்ந்து நான் அவற்றைக் கூர்ந்து கவனித்தேன். வெகு சன்னமாய், கீழிருந்து "மீ யோவ்"  என்ற ஒலி என் காதுகளில் விழுந்தது. "ஆ! ரொம்ப நல்லது" எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எவ்வளவு மென்மையாக முடியுமோ அவ்வளவு மெதுவாக "மீ யோவ்" என்று நானும் சப்தம் செய்தேன். பின்னர் விளக்கை அணைத்து விட்டு, ஜன்னல் வழியாக நுழைந்து வெளியேறி வெளியில் உள்ள,  கூரை போடப்பட்டுள்ள இடத்துள் புகுந்தேன். பின்னர் அங்கிருந்து மெதுவாக தரையை நோக்கி நழுவி, மரங்களினூடே தவழ்ந்து சென்றேன். நான் சரியாகக் கணித்தபடி, அங்கே டாம் சாயர் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

[தொடரும்]


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.