- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.  அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் பதின்மூன்று


தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)-மயங்கி விழாத குறையாக மூச்சை இழுத்துப் பிடித்து கொண்டு நான் இருந்தேன். உடைந்து மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு படகில், கொலை செய்யும் ஒரு கும்பலுடன் நாங்கள் எத்தனை வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உணர்ச்சிவசப்படும் சமயமல்ல. அந்தப் படகைக் கட்டாயம் கண்டுபிடித்தால்தான் நாங்கள் தப்பிக்க முடியும். கிடுகிடுவென நடுங்கியபடியே வலது புறமாக நாங்கள் வழி தேடிக் கொண்டு கீழ்நோக்கி நாங்கள் சென்றோம். மிகவும் மெதுவாக இருந்தது எங்கள் நடை. படகின் பின்பகுதி சென்று சேர்வதற்குள் ஒரு வார காலம் ஆனது போல ஒரு மலைப்பு. படகு இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை. ['இதற்கு மேலும் இனி தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை' என ஜிம் கூறினான். கடும் அச்சம் காரணமாக அவனின் பலம் முழுதையும் அவன் இழந்தது போல உணர்ந்ததாகக் கூறினான். ஆனால் அங்கே இருந்து பேராபத்தில் சிக்குவதை விட அங்கிருந்து தப்பிக்க முயற்சியைத் தொடர வேண்டும் என்று நான் கூறினேன். எனவே நாங்கள் மீண்டும் எங்கள் முயற்சியைத் தொடர்ந்தோம். படகின் பின்பக்க அறையை நோக்கி மெதுவாக நாங்கள் முன்னேறினோம். முன்னால் இருக்கும் வான வெளிச்சத்தைத் தவிர்க்க அறைச்சுவர்களுடன் ஒட்டி கொண்டு நகர்ந்தோம். முழுதான நிலவொளி நீரில் விழுந்து இருந்ததால், சன்னலை மூட உதவும் கண்ணாடிப் பலகையைப் பிடித்துக் கொண்டு அதன் நிழலில் நிலவொளி எங்கள் மீது படாதவாறு மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் நடந்தோம். உள்ளரங்குக் கதவின் மிக அருகே நாங்கள் சென்றபோது அந்தப்பரிசலைப் பார்த்தோம். என்னால் அதை இனம் காண முடிந்தது. அதைக் கண்டுவிட்டோம் என்றதும் நான் கடவுளுக்கு நன்றியுடையவனானேன். இன்னும் ஒரு நொடிப்பொழுதில் அந்த பரிசலில் தாவி ஏறி இருப்போம். ஆனால் அந்தச் சமயம் பார்த்து அந்தக் கதவு திறந்தது. அந்த இருவரில் ஒருவன் எனக்கு சில அடி தூரத்தில் உள்ளிருந்து தனது தலையை வெளியே நீட்டினான். நான் செத்தேன் என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் தன் தலையை மீண்டும் பின்னுக்கு இழுத்துக்கொண்டு கூறினான். "அந்த இழவு பிடித்த லாந்தர் விளக்கை அணைத்துவை, பில்!"

கையில் ஏதோ அடங்கியிருந்த ஒரு மூட்டையை அவன் பரிசலுக்குள் தூக்கி எறிந்தான். பின்னர் அதனுள் ஏறி உள்ளே அமர்ந்தான். அது பேக்கர்ட். பிறகு பில் வெளியே வந்து அவனும் அந்த பரிசலுக்குள் குதித்து ஏறினான். பேக்கர்ட் மிக மெல்லிய குரலில் கூறினான் "எல்லாம் சரி. நாம் புறப்படுவோம்."

எனது சக்தி முழுதும் இழந்தவனாக அந்த சன்னலின் அடைப்புப் பலகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். ஆனால் பில் கூறுவதையும் நான் கேட்டேன்.

"நிறுத்து. அதை நீ முடித்து விட்டாயா?"

"இல்லை. நீயும் செய்யவில்லையா?"

"இல்லை. அப்படியானால். இன்னும் அவனின் பங்குப்பணம் அவனிடமே உள்ளது.?"

"நல்லது. வா! கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு பணத்தை விட்டுப் போவதில் ஒரு பலனும் இல்லை."

"ஹேய்! நாம் வேறு ஏதோ மறைமுகமாகச் செய்கிறோம் என்று அவன் நம்மை சந்தேகப் பட்டால்?"

"படலாம். படாமலும் இருக்கலாம். எப்படி ஆனாலும் அதை நாம் எடுத்துக் கொண்டேயாகவேண்டும். அதை இங்கே அப்படியே விட்டுவிட்டு போக முடியாது. வா என்னுடன்."

எனவே அவர்கள் இருவரும் படகை விட்டு வந்து உடைந்துகொண்டிருந்த நீராவிப்படகின் உள்ளே ஏறி கேபின் அறைக்குள் மீண்டும் திரும்பிச் சென்றார்கள். ஒரு புறமாக படகு சாய்ந்திருந்த மேல்பக்கம் இருந்ததால் அவர்கள் உள் சென்றபின் கதவு தானாகவே அடித்துச் சாத்திக்கொண்டது. நான் ஒரு நொடி கூடத் தாமதிக்காது அந்தப் படகினுள் குதித்தேன். என் பின்னே வெகு வேகமாக வந்த ஜிம்மும் அவ்வாறே குதித்தான். எனது கையில் இருந்த குறுங்கத்தியை வைத்து அந்தப் படகு கட்டியிருந்த கயிற்றை அறுத்தேன். பிறகு அங்கிருந்து நாங்கள் சென்றோம்.

அந்தத் துடுப்புகளைத் தொடவில்லை. நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. சின்ன கிசுகிசுப்பு கூட இல்லை. மூச்சுவிடக் கூடத் தங்கினோம். கடும் மௌனத்துடனும், அவசரத்துடனும், படகு செல்லச்சுற்றும் சக்கரத்தைக் கடந்து படகின் முனைக்கு நழுவிச் சென்றோம். ஒரு நொடி அல்லது இரண்டு அல்லது அதற்கும் மேலான சில நொடிகளில் நதியின் கீழ்ப்பகுதியில் அந்த உடைந்த படகை விட்டு நூறு அடி தூரம் தாண்டிச் சென்று விட்டோம். சுற்றிலும் இருந்த அந்தகாரம் படகின் ஒவ்வொரு சிறுபகுதியையும் சேர்த்து விழுங்கியது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம்.

நாங்கள் ஒரு முன்னூறு அல்லது நானூறு அடித்தொலைவில் நதியின் கீழ்ப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகின் கேபின் அறைக் கதவு வழியாக சின்னதொரு தீப்பொறி போன்ற லாந்தர் வெளிச்சம் தூரத்தே இருக்கும் இருட்டில் தெரிந்தது. தங்களின் படகு காணாமல்ப் போனதை அறிந்த அந்தப் பாதகர்கள் தற்போது ஜிம் டர்னருக்கு இருக்கும் அதே அளவு இடர்ப்பாட்டில் சிக்கித் தவிப்பதும் தெரிய வந்தது.

ஜிம் துடுப்பு வலிக்க ஆரம்பித்தான். எங்களின் தோணியைத் தேடிப் புறப்பப்பட்டோம். உடைந்த அந்தப் படகில் இருப்பவர்களை நினைத்து நான் கவலை கொண்டேன். அவர்களைப்பற்றிச் சிந்திக்க எனக்கு முன்பு சரியான நேரம் கிடைக்கவில்லை என்றே நான் எண்ணிக் கொண்டேன். அவர்கள் கொலைகார பாவிகளாக இருந்தபோதும், அவர்களின் நிலை தற்போது எத்தனை கொடுமையாக இருக்கும் என்று நினைத்தேன். நானும் அவர்களைப்போல் ஒரு கொலைகாரனாக ஒரு நாள் ஆகிவிடக் கூடும் அல்லவா?

நான் எப்படி இவ்வாறு சிக்கித் தவிக்க முடியும்? எனவே நான் ஜிம்மை நோக்கித் திரும்பிக் கூறினேன் "இங்கிருந்து நூறடித் தொலைவில் கீழ்ப்பகுதி அல்லது மேல்பகுதிக் கரையில் முதல் விளக்கைப் பார்த்தவுடன் நாம்திரும்பிச்சென்று அங்கே கரை இறங்குவோம். உனக்கும் இந்த படகுக்கும் நல்ல மறைவிடம் பாப்போம். பின்னர் நம்பும்படியாக ஒரு கட்டுக்கதை ஒன்றை நான் ஜோடித்து யாரையாவது நம்பவைத்து அவரை அங்கே உடைந்த படகில் சிக்கித் தவிக்கும் கும்பலை காப்பாற்றப் போகும்படி செய்வோம். அந்த வகையில் நேரம் வரும்போது, அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் தூக்கிலிடப் படக் கூடும்."

ஆனால் அந்த யோசனை படுதோல்வியைத் தழுவியது. ஊழிக்காற்றின் வேகம் அதிகரித்து முன்பை விட மோசமாக நிலைமை மாறியது. பேய்மழை கொட்டித் தீர்த்தது. எந்த விளக்குகளும் கரையில் காண இயலவில்லை. அனைவரும் உறங்கியிருப்பார்கள் என்று நான் யூகித்தேன். ஏதேனும் விளக்கு தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே நதியின் கீழ விசையோடே எங்களின் படகுடன் சேர்ந்து மிதந்தோம். நீண்ட நேரம் கழித்து, கடைசியாக மழை விட்டது. ஆயினும் மேகமூட்டங்கள் அப்படியேதான் இருந்தன. இடையிடையே மின்னல் வெளிச்சக் கீற்று வந்து சென்றது. வெகு விரைவில் கருப்பான ஏதோ ஒன்று நதியில் எங்கள் முன் சென்று கொண்டிருந்ததைக் கண்டோம். அதை நோக்கி நாங்கள் சென்றோம்.

அது எங்களின் தோணிதான். திரும்பவும் எங்களது தோணி எங்களுக்குக் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதே சமயம் வலது புறக் கரையில் ஒரு விளக்கையும் கண்டோம். அதைநோக்கிச் செல்லவேண்டுமென நான் கூறினேன். கொள்ளையர்கள் படகு அவர்கள் அடித்த கொள்ளைப்பொருட்களினால் பாதிக்கும் மேல் நிறைந்திருந்தது. அவற்றை எடுத்து எங்கள் தோணியில் ஒன்றன் மேல் ஒன்றாக நிரப்பிக் கொண்டோம். தோணியிலேயே ஜிம்மை இருக்கச் சொல்லிவிட்டு, நான் கீழ்த்திசை நோக்கி இரண்டு மைலுக்கு மிதந்து சென்றேன். எங்களது தோணியின் குடிலுக்குள்ளே ஜிம் தீ மூட்டி நான் வரும்வரை அந்தத் தீயை எரியும்படி பார்த்துக் கொள்ளச் சொன்னேன். கொள்ளையர்களின் படகின் துடுப்புகளை எடுத்து வலித்துக் கொண்டே விளக்கு எரிந்த அந்தக் கரையை நோக்கிச் சென்றேன். அதன் அருகே செல்லச் செல்ல இன்னும் சில விளக்குகளை நான் காண நேர்ந்தது. பிறகுதான் அது மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம் என்று எனக்குப் புரிந்தது. நான் அந்த விளக்கு காணப்பட்ட திசையை நோக்கிச் சென்றேன். அதன் அருகே செல்லும்போதுதான் அது பயணிகள் செல்லும் படகில் மாட்டியிருந்த லாந்தர் விளக்கு என்று தெரிந்தது. அந்தப் படகின் காவலாளி எங்கேயாவது தூங்கிக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் தேடிப் பார்த்தேன். இறுதியாக, படகின் முன் பகுதியில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். தனது கால்முட்டிகள் இரண்டுக்கும் இடையே தலை வைத்து அவன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது தோளை இரண்டு அல்லது மூன்று முறை முட்டிப் பார்த்து விட்டு பின் அழத் தொடங்கினேன்.

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)-
அவன் தூக்கத்திலிருந்து விழித்துத் திகைத்தான். ஆனால் அது யார் என்று பார்த்ததும், சோம்பல்தனமாக நெட்டி முறித்துக் கொண்டு கொட்டாவி விட்டான். பிறகு கூறினான் "ஹேய்! என்ன ஆச்சு! அழுவதை நிறுத்து, குழந்தாய்! என்ன விஷயம் ?"

நான் சொன்னேன் " அப்பா அம்மா அப்புறம் என் சகோதரிகள் அப்புறம் .........."

பிறகு அழுகையால் உடைந்து போனேன்.

அவன் கூறினான் " இரு. இரு. இவ்வாறு அழ வேண்டாம். நம் அனைவருக்கும் பிரச்னை இருக்கிறது. உன்னுடைய கஷ்டத்தையும் தீர்த்து விடலாம். உனது குடும்பத்திற்கு என்ன ஆயிற்று?"

"அவர்கள்......அவர்கள் ....நீங்கள்தான் இந்தப்படகின் காவலாளியா?"

"ஆமாம்." மிகவும் பெருமையுடன் அவன் சொன்னான். "நான்தான் கேப்டன், முதலாளி, தோழன், மாலுமி, காவலாளி, படகைக் கையாளுபவன் எல்லாமே நான்தான். சில சமயங்களில் கப்பலின் சரக்கும் நானே. கப்பலின் பயணிகளும் நானே. நான் ஒன்றும் அந்த மனிதன் ஜிம் ஹார்ன்பாக் போன்ற பணக்காரன் அல்ல. அவனைப் போல் கண்ணில் காணும் டாம், டிக், ஹார்ரி போன்றோருக்கு பணத்தை இஷ்டம் போல் வாரி இறைப்பவனும் அல்ல, ஆனால் அவனுடன் எந்த இடத்திற்கும் செல்ல மாட்டேன் என்று அவனுக்குப் பலதடவைகள் நான் சொல்லியிருக்கிறேன் என் வாழ்வு ஒரு கடல் மாலுமியின் வாழ்வு என்று சொல்லியிருக்கிறேன். நகரை விட்டு இரண்டு மைல் கடலில் பயணம் செய்து அங்கே ஏதும் சாகசங்கள் நடைபெறவில்லையெனில் நான் நாசமாகி விடுவேன். இல்லை. உலகில் உள்ள அனைத்துச் செல்வந்தர்கள் போன்று இருக்க என்னால் முடியவே முடியாது என்று நான் சொல்லுவேன் ...."

அவனை இடைமறித்து நான் கூறினேன் " அவர்கள் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளார்கள் , அப்புறம் ......."


"யார் அவர்கள் "

"என் அப்பா, அம்மா, சகோதரிகள் மற்றும் மிஸ். ஹூக்கர். நீங்கள் மட்டும் இந்த படகை எடுத்துக் கொண்டு அங்கே சென்றால் ......"

"எங்கே செல்ல? எங்கே இருக்கிறார்கள் அவர்கள்?"

"அந்த உடைப்பில்"

"எந்த உடைப்பு?"

"நல்லது. ஒன்றே ஒன்றுதான் உடைந்திருக்கிறது."

"என்ன ? வால்டர் ஸ்காட்டின் நீராவிப் படகையா நீ குறிப்பிடுகிறாய்?"

"ஆம்"

"நல்லது , நல்லது . தெரியாமல்தான் கேட்கிறேன். அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?"

"நல்லது. அவர்கள் வேண்டுமென்றே அங்கே போகவில்லை."

"கண்டிப்பாக யாரும் அப்படிப் போக மாட்டார்கள். கடவுளே! நான் மட்டும் வெகு விரைவில் சென்று அவர்களை அங்கிருந்து கொண்டு வரவில்லையானால், அவர்கள் பிழைப்பது துர்லபம். ஏன், எப்படி அவர்கள் அந்த பேராபத்தில் சென்று சிக்கினார்கள்?

"நல்லது. மிஸ். ஹூக்கர் அங்குள்ள நகருக்கு வந்திருக்கிறாள்."

"நீ பூத் லேண்ட் பகுதியை சொல்கிறாயா? சரி மேலே சொல்லு."

அவள் பூத்தின் லேண்டிங் பகுதிக்கு வந்து சுற்றிப்பார்த்து விட்டு இரவு தனது குதிரைப் படகில் அவளது நீக்ரோ பணிப்பெண் உடன் நதியின் குறுக்கே கடந்து அவளது தோழி - அவள் பெயர் என்ன .... எனக்கு மறந்துவிட்டதே ----- இருக்கட்டும் - அவள் வீட்டுக்குத் தங்கச் சென்றார்கள். வழியில் அவர்கள் தங்கள் படகின் துடுப்பை எப்படியோ இழந்ததால், படகு கட்டுப்பாடற்று சுழன்று நதியின் விசையினூடே அடித்துச் செல்லப்பட்டது. படகின் பின்புறம் மூழ்கிய நிலையில் இரண்டு மைல்கள் மிதந்து இறுதியாக உடையும் நிலைக்கு வந்தது. படகில் இருந்த மனிதர்கள், அந்த நீக்ரோ பெண் மற்றும் அதில் இருந்த குதிரைகளும் ஆற்று வெள்ளத்தில் காணாமல் போய்விட்டன. ஆனால் மிஸ்.ஹூக்கர் மட்டும் எப்படியோ உடைந்த கட்டைகளைப் பிடித்து மேலேறி வந்து விட்டாள். அதன்பின் சுமார் ஒரு மணிநேரம் கழித்து பின்னிரவு நேரத்தில் எனது குடும்பத்துடன் நானும் எங்களது வணிகத்துக்கான படகில் வந்து கொண்டிருந்தோம். கும்மிருட்டு கவிழ்ந்திருந்ததால் வழியில் இருந்த அந்த உடைந்த படகை நாங்கள் கவனிக்காமல், அந்த உடைப்பின் மீது எங்கள் படகும் மோதியது. பில் விப்பிலைத் தவிர மற்ற அனைவரும் பிழைத்து விட்டார்கள். ஓ! என்ன ஒரு அருமையான மனிதன்! அவனுக்கு பதிலாக நான் இறந்திருக்க வேண்டும்."

"ஐயகோ! இத்தனை நாள் நான் கேட்டதிலேயே இதுதான் மிகவும் கிறுக்குத்தனமான விஷயம். அதன் பிறகு நீ என்ன செய்தாய்?"

"நல்லது. நாங்கள் கத்திக் கூச்சலிட்டு யாருடைய கவனத்தையாவது கவர முயற்சி செய்தோம். ஆனால் அகன்ற அந்த நதியில் இருட்டில் எங்களின் குரல் யார் காதுக்கும் எட்டவில்லை. எனவே யாரேனும் கரைக்குச் சென்று உதவி செய்ய ஆட்களைக் கூட்டி வந்தால்தான் முடியும் என்று என் அப்பா சொன்னார். அங்கே இருந்தவர்களில் நான் மட்டும்தான் நீந்துவேன். எனவே நான் அதை ஏற்றுக் கொண்டேன். எந்த உதவியும் கரையில் எனக்குக் கிடைக்கவில்லையானால் இங்கே வந்து அவளின் மாமாவைக் கண்டுபிடித்து உதவிக்குக் கூட்டி வரும்படி மிஸ்.ஹூக்கர் கூறினாள். ஒரு மைலுக்குக் கீழே இருக்கும் கரையை அடைந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருவரும் எனக்கு உதவத் தயாராக இல்லை. 'என்ன? நதி வலுவாகக் கரைபுரண்டோடும் இந்த இரவு வேளையிலா? முயற்சி செய்து ஒரு பலனும் இருக்காது. நீராவிப்படகு கண்டுபிடித்துச் செல்' என்று அனைவரும் சொன்னார்கள். இப்போது நீங்கள் மட்டும் செல்ல முடியுமானால் ........."

"ஓ கடவுளே! நான் உனக்கு உதவி செய்ய விழைகிறேன். சத்தியமாக. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு யார் ஊதியம் கொடுப்பார்கள்? உங்க அப்பா கொடுப்பார் என்று நீ நினைக்கிறாயா ?"

"ஓ. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மிஸ். ஹூக்கர் குறிப்பாக அவளது மாமா ஹார்ன்பாக் பற்றி என்னிடம் கூறினாள்......"

"ஐயோ கடவுளே! அவளது மாமா ஹார்ன்பாக் என்பாரா? இங்கே பாரு. அந்த விளக்கை அங்கே அடிக்குமாறு பொருத்து. மேற்குப்புறமாகத் திரும்பி ஒரு கால் மைல் ஓடினால் ஒரு சத்திரம் வரும். அவர்கள் உனக்கு ஜிம் ஹார்ன்பாக் வீட்டுக்குச் செல்ல வழி காட்டுவார்கள். ஜிம் ஹார்ன்பாக் பணத்தைச் செலுத்திவிடுவார். அங்கே சத்திரத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டு நிற்காதே. உன் வாயைக் கிண்டி செய்தியைத் தெரிந்து கொள்ள விரும்புவார். அவரின் சகோதரி மகளைப் பத்திரமாக மீட்டெடுத்து அவர் திரும்ப ஊருக்குச்செல்லும்முன் கொண்டு சேர்ப்பேன் என்று ஜிம் ஹார்ன்பாக்க்கிடம் கூறு. சீக்கிரம் செல். நான் அந்த மூலையில் உறங்கும் படகின் ஓட்டுனரை எழுப்பப் போகிறேன்."

நான் விளக்கை நோக்கிச் செல்லுவது போலச் சென்றேன். ஆனால் அவன் அந்த மூலையில் திரும்பியவுடன், நான் திரும்ப ஓடி வந்து படகில் அமர்ந்து கொண்டேன். மெதுவாகக் கரையை ஒட்டியவாறே ஒரு அறுநூறு அடித் தூரம் மிதந்து, பிறகு மற்ற மரப்படகுகளுக்கு மத்தியில் உள் அமர்த்தி என் படகை நிலைநிறுத்தினேன். உண்மையில் அந்த நீராவிப் படகு புறப்பட்டுச் செல்கிறதா என்று உறுதி செய்து கொள்ளாமல் என் மனது அமைதியடையாது என்று தோன்றியது. மொத்தத்தில், என் சக்தியை மீறி அந்த கும்பலைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சி பற்றி மனநிறைவு கொண்டிருந்தேன். பெரும்பான்மையோர் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அந்த விதவைக்கு மட்டும் நான் செய்த உதவி தெரிந்தால் மிகவும் பெருமைப் படுவாள். அவளும், அவளைப் போன்ற மற்ற நல்ல மனிதர்களும் இவ்வாறான அயோக்கிய சிகாமணிகளுக்கும், பயனற்ற வீணர்களுக்கும் உதவுவதில் அதிகம் அக்கறை காட்டுபவர்கள் என்று எனக்குத் தெரியும்.

நல்லது. அந்த நீராவிப் படகு புறப்படும் முன்னரே, அந்த உடைந்த படகு நீரில் அடித்துக் கொண்டு நதியோடே வந்ததை நான் கண்டேன் சில்லென ஒரு நடுக்கம் எனது நரம்புகளினூடே ஊடுருவிச் சென்றது. படகை எடுத்துக் கொண்டு நான் அந்த உடைந்து மிதந்து வரும் படகின் அருகே சென்றேன். அந்தப்படகு நன்கு ஆழத்தில் மூழ்கி இருந்தது. அந்தப்படகில் இருந்தவர்கள் அனைவரும் இறந்திருக்கக் கூடும் என்று நான் ஒரு கணம் நம்பினேன். அந்த உடைப்பைச் சுற்றி துடுப்பை வலித்துக்கொண்டு வந்து யாரேனும் உள்ளே உள்ளார்களா என்று கூப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அனைத்தும் மயான அமைதியில் இருந்தது. அந்த கும்பலை நினைத்து ஒரு சில வினாடிகளுக்கு எனது மனது கனத்தது. ஆனால் வெகுநேரம் இல்லை இந்த மாதிரியான இடர்பாடுகளைத் தைரியமாக எதிர்கொள்ளக்கூடியவர்கள் தான் அவர்கள் என்று நினைத்து நான் எனது மனதைத் தைரியப் படுத்திக்கொண்டேன். நானும் அப்படித்தானே!

அங்கே சென்று தோணியை மறைத்து வைத்து, படகை மூழ்கடித்து விட்டு பின் படுத்து இறந்தவர்கள் போன்று அசைவின்றி உறங்கலானோம்.

பிறகு காப்பாற்றுவதற்காக கரையிலிருந்து அந்த நீராவிப்படகு கிளம்பி வருவதைக் கண்டேன். எனவே நான் நதியின் மத்தியிலிருந்து குறுக்காக படகை ஒட்டி ஓரம் வந்து சேர்ந்தேன். அந்த நீராவிப்படகு பார்வையிலிருந்து மறைந்ததும் திரும்பவும் துடுப்பை வலிக்கலானேன். நான் திரும்பிப் பார்க்கையில், மிஸ். ஹூக்கரின் மிஞ்சிய உடல் பகுதிகளை அந்த நீராவிப்படகு தேடிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவளின் மாமா ஹார்ன்பாக் கண்டிப்பாக அவைகளைக் கேட்பார் என்று அந்தக் கேப்டனுக்குத் தெரியும். இறுதியாக தேடுவதைக் கைவிட்டு அந்தப் படகு கரை போய்ச் சேர்ந்தது. நான் துடுப்பு வலித்தலில் கவனம் செலுத்திக் கொண்டு இங்குமங்குமாக நதியில் அலைந்துகொண்டிருந்தேன்.

ஜிம் மூட்டி வைத்த தீ எனது பார்வையில் தென்பட நீண்ட நேரம் ஆயிற்று. கடைசியில் அதைக் கண்டுபிடித்து நான் பார்க்கும்போது ஏதோ ஆயிரம் மைல்களுக்கப்பால் அது இருப்பது போலத் தோன்றியது. நான் அங்கே சென்றடையும்போது வானத்தில் கிழக்குப் பக்கம் மெல்லியதாய் சாம்பல் நிறம் தோன்ற ஆரம்பித்து விட்டது. எனவே ஏதேனும் ஒரு தீவை நோக்கி நாங்கள் செல்ல ஆரம்பித்தோம். அங்கே சென்று தோணியை மறைத்து வைத்து, படகை மூழ்கடித்து விட்டு பின் படுத்து இறந்தவர்கள் போன்று அசைவின்றி உறங்கலானோம்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி
- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.