- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் முப்பத்தி ஐந்து

காலை உணவு தயாராக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல இருந்தது. எனவே, வீட்டை விட்டுக் கிளம்பி அருகிலிருந்த வனத்தை நோக்கி நடந்தோம். இரவு பள்ளம் தோண்டும் வேளையில், எங்களுக்கு கொஞ்சம் வெளிச்சம் தேவைப்படும் என்று டாம் சொன்னான். லாந்தர் விளக்கின் ஒளி வெள்ளம் அதிகமாக இருந்து அதனால் நாங்கள மாட்டிக்கொள்ளக்கூடும் என்று அவன் கூறினான். நரித்தீ என்றழைக்கக்கூடிய காடுகளில் கிடைக்கும் அழுகிப் போன பூஞ்சைக் காளான்கள் இருளில் ஒளிர்ந்து வெளிச்சம் கொடுக்கும் தன்மையை கொண்டவை என்பதால் அவைகள் எங்களுக்குத் உதவும் என்று நினைத்தோம். கை நிறைய அவற்றை அங்கே சேகரித்து மரங்களுள் ஒளித்து வைத்தோம். பிறகு, அங்கே அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். நடக்கும் நிகழ்வுகள் எதிலும் டாமுக்கு திருப்தியே இல்லை.

எனவே சலித்துக் கொண்டே இவ்வாறு கூறினான் "போய் தொலையட்டும்! மொத்த சூழ்நிலையும் ரொம்ப சாதாரணமாக உள்ளது. கஷ்டமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவே முடியாது போலுள்ளது. ஒரு காவலாளி இருந்தால் அவனுக்கு ஏதேனும் மயக்க மருந்து கொடுக்கலாம். அப்படி ஒரு காவலாளி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மயக்க மருந்து கொடுக்க ஒரு நாய் கூட இங்கில்லை. அத்தோடு ஜிம்மை அவனின் படுக்கை உள்ள கட்டில் காலில் ஒரு சின்ன பத்தடி நீளம் உள்ள சங்கிலியில்தான் பிணைத்திருக்கிறார்கள். நான் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், அவனை விடுதலை செய்ய அந்தக் கட்டிலைக் கொஞ்சம் உயர்த்தி அதனடியிலிருக்கும் அந்தச் சங்கிலியை சும்மா அப்படியே இழுத்து விட்டால் போதும். சித்தப்பா சைலஸ் அனைவரையும் அதிகமாக நம்புவதால், யார் கண்காணிப்பும் இல்லாமலேயே, அந்த பரங்கித்தலை நீக்ரோவிடம் சாவியைக் கொடுத்து விடுகிறார். உயரத்திலுள்ள அந்த சன்னலின் ஓட்டை வழியாக ஜிம்மே குதித்துப் போயிருப்பான். என்ன, அவன் காலில் உள்ள பத்தடி நீளமுள்ள சங்கிலியை இழுத்துக் கொண்டு அவனால் வெகுதூரம் பயணம் செய்திருக்க முடியாது. அவ்வளவுதான்! தண்டம்! தண்டம்! இவ்வளவு கேவலமான ஏற்பாடு நான் எங்கேயும் கண்டதேயில்லை.”

 

"அனைத்து கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் தானாகவே மீண்டு வர நீ முயற்சிக்க வேண்டும். சரி, இருக்கட்டும். நம்மிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு நிலைமையைக் கடினமாக்க அதிக அளவு முயற்சி செய்வோம். ஒருவனை உடைத்து கிடப்பில் போடும் அதிக அளவிலான சிரமங்களை கடந்து வருவதில்தான் சிறந்த பெருமை இருக்கிறது. ஒருவேளை உன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு உனக்கு சிரமத்தைக் கொடுப்பது அவர்கள் வேலை இல்லை என்று ஒதுங்கி இருந்தாலும், நீயாகவே சில கடின சூழ்நிலைகளை ஏற்படுத்தி வென்று வர வேண்டும். லாந்தர் பிடித்து பள்ளம் தோண்டும் அந்த சூழ்நிலையை எடுத்துக் கொள். லாந்தர் பிடிப்பது ஆபத்து என்று நாம் சும்மா நடிப்புக்குத்தான் கூறவேண்டும். ஏன், நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கையில் விளக்கு ஏந்தி நம்மைப் பிடிக்க நின்றாலும், நமக்குத் தேவை என்றால், அவர்கள் கையில் சிக்காமல் நாம் தப்பிக்க முடியும். இவ்வாறாக, நான் நினைக்கும் வேளையில், நாம் செய்ய இருக்கும் காரியத்தில் ஒரு மரம் அறுக்கும் ரம்பம் ஒன்று முதலில் நாம் எடுத்துக் கொள்ளத் தேவை இருக்கிறது என்று யோசிக்கிறேன்."

"ரம்பம் எதற்கு நமக்குத் தேவைப்படும்?"

"எதற்கு நமக்கு ரம்பம் தேவையா? ஜிம்மின் கால் கட்டப்பட்டிருக்கும் கட்டிலின் மரக்காலை அறுத்து அந்த சங்கிலியை விடுவிக்க வேண்டாமா?"

"ஆனால், கட்டிலின் ஒரு முனையை கொஞ்சம் தூக்கிப் பிடித்தால் அந்தச் சங்கிலி அப்படியே இழுத்துக் கொண்டு வந்து விடும் என்று இப்போதுதானே நீ கூறினாய்?"

"அது உன்னைப் போன்ற ஆட்களுக்கு. மிகவும் குழந்தைத்தனமாகவே நீ யோசித்து செயல்படுகிறாய். ஏன், நீ எந்த சாகசப் புத்தகங்களும் படித்ததே இல்லையா? பெரோன் ட்ரான்க் அல்லது காஸநோவா அல்லது பென்வெனூடோ செல்லனி அல்லது நாலாம் ஹென்றி அல்லது இது போன்ற சிறந்த கதாநாயகர்களைப் பற்றிய புத்தகங்கள் நீ படித்ததில்லையா? அவர்களில் யாரவது இப்படி பழையபாணியில் கிழட்டுத்தனமாக ஒரு கைதியை விடுவிப்பார்களா, என்ன? இல்லவே இல்லை. இப்படிப்பட்ட அனைத்துக் கதாநாயகர்களும், கட்டிலின் காலை இரண்டாக அறுத்து எடுத்துவிட்டு, பின், அறுத்தது தெரியாதபடிக்கு பழையபடி அப்படியே வைத்து விடுவார்கள். அறுக்கும் போது விழும் மரத் துகள்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு நீ அப்படியே விழுங்கி விடவேண்டும். அறுத்த இடத்தில் கொஞ்சம் குப்பை மற்றும் கிரீஷ் போட்டு மறைத்து விட்டால், சிறையின் தலைமைக் காவலர் வந்தால் கூட கட்டிலின் கால் அறுக்கப் பட்ட விஷயத்தைக் கண்டுபிடிக்கவே முடியாதது மட்டும் அல்லாது அது நன்றாக உள்ளது என்று கூட எண்ண வைத்துவிடும். பிறகு, தப்பிக்க வேண்டிய அந்த இரவு, தயாரானதும் அந்தப் படுக்கையை நோக்கி நீ ஒரு உதை விடவேண்டியதுதான் பாக்கி. அந்தக் கால் சரிந்து விடும். சங்கிலியை இழுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக நீ ஓடி விடலாம்."

“பின் மிச்சமிருக்கும் ஒரே வேலை கயிற்று ஏணியை மதிற்சுவற்றின் மீது கட்டவேண்டியதுதான். அதில் இறங்கி கீழே வரும்போது பத்தொன்பது அடி ஆழமுள்ள அகழியில் ஏணியின் நீளம் பற்றாமல் குதித்து காலை முறித்து என்று இன்னும் நிறைய சாகசங்கள் உள்ளன, தெரியுமா! உனக்கு விசுவாசமாக இருப்பவரின் நிலத்தில் நிற்கும் உன் குதிரை உன்னை அள்ளி எடுத்துத் தன் சேணத்தில் அமர்த்திச் சுமந்து கொண்டு உனது சொந்த நாடான பிரெஞ்சு நாட்டில் லாங்டக் அல்லது நவார் அல்லது நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே கொண்டுபோய் சேர்த்து விடும். எத்தனை அறிவார்ந்தது இது, ஹக்! ஜிம் இருக்கும் குடிசைஅறையைச் சுற்றி ஒரு அகழி இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தப்பிச் செல்லும் அந்த இரவில், நேரமிருந்தால் நாம் ஒரு அகழி தோண்டலாம்."

"அறையின் அடிப்பகுதியில் பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாகச் செல்லும் நமக்கு அகழி எதற்குத் தேவை?" நான் கூறினேன்.



ஆனால், அவன் நான் கூறியதைக் கேட்கவில்லை. அவன் என்னை மட்டுமல்ல சுற்றியுள்ள மொத்த விஷயங்களையும் சுத்தமாக மறந்தது போல இருந்தான். தாடையில் தனது கரத்தை வைத்துத் தாங்கியபடியே அமர்ந்தவாறு அவன் கற்பனை செய்துகொண்டிருந்தான். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் இவ்வாறு கூறினான்:

"இல்லை . அது நடக்காது. அதை நாம் செய்ய வேண்டிய தேவை இருக்காது."

"எதைச் செய்ய வேண்டியதில்லை?"

"ஏன், ஜிம்மின் காலை அறுப்பதுதான், வேறென்ன?" அவன் கூறினான்.

"ஐயோ, கடவுளே!" நான் அதிர்ந்தேன், "அது செய்யவேண்டிய தேவையே நமக்குக் கண்டிப்பாக இருக்காது. அது இருக்கட்டும். எதற்காக ஜிம்மின் காலை அறுக்க நீ யோசிக்கிறாய்?"

"நல்லது. மிகச் சிறந்த கதாநாயகர்கள் அவ்வாறுதான் செய்திருக்கிறார்கள். சங்கிலியில் இருந்து தன்னை விடுவிக்க முடியாவிட்டால், அவர்களின் கரத்தையே வெட்டி அந்த கைவிலங்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வார்கள். கால் என்பது இன்னும் கொஞ்சம் சிறந்தது. ஆனால், அந்த சாகசத்தை நாம் விட்டுவிடுவோம். அதற்கான தேவை இந்த வழக்கில் பெரிதாக இருக்காது. மேலும், ஜிம் ஒரு நீக்ரோ. இது ஐரோப்பியக் கலாச்சாரமாதலால், அவன் காலை நாம் ஏன் வெட்டினோம் என்று அவனுக்குப் புரியாது. எனவே அதை அப்படியே தவிர்த்து விடுவோம். ஆனால், ஒரு விஷயம் - அவனுக்கு கயிற்று ஏணி கொடுக்க வேண்டும். நமது போர்வைகளைக் கிழித்து அவனுக்காக ஒரு நூல் ஏணி சுலபமாகத் தயாரித்து விடலாம். சாப்பிடும் பழக்கேக்கினுள் அந்த நூல் ஏணியை வைத்து அவனுக்குத் தந்துவிடுவோம். பொதுவாக, அப்படித்தான் கதைகளில் நடக்கும் . அத்துடன், மிகவும் மோசமான பழக்கேக்குகளை எல்லாம் நான் சாப்பிட்டிருக்கிறேன்."

."சொல்வதை நீ முதலில் நன்றாகப் புரிந்து கொள், டாம் சாயர்!" நான் கூறினேன், "நூல் ஏணி எதுவும் ஜிம்முக்குத் தேவையில்லை."

"அவனுக்குக் கண்டிப்பாக அது தேவைப்படும். நீ முதலில் புரிந்து கொள். சரியாகப் பேசு. உனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. ஜிம்முக்கு கண்டிப்பாக ஒரு நூல் ஏணி தேவைப்படும். அந்தக் கதாநாயகர்கள் மாதிரி."

"அதை வைத்துக் கொண்டு அவன் என்னதான் செய்வான்?"

"அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வானா? அவனின் படுக்கையில் அவன் அதை ஒளித்து மறைத்துக் கொள்ளவேண்டும். அப்படித்தான் அவர்கள் எல்லோரும் செய்வார்கள். அதேபோல்தான் ஜிம்மும் செய்ய வேண்டும், ஹக்! அவர்கள் எப்படிச் செய்திருக்கிறார்களோ அதே போன்றே நீயும் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மறுக்கிறாய். நாம் செய்யும் காரியங்களை புதுப் புது வகைகளாக எல்லா நேரத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதை அவன் எதுவும் செய்யவில்லையென்றால்? அவன் தப்பி ஓடியபின், அவனின் படுக்கையிலேயே அது தடயமாக விட்டுவிட வேண்டும். தேடி வரும் ஆட்களுக்கு ஏதேனும் தடயம் தேவைப்படும் என்று நீ நினைக்கவில்லையா? கண்டிப்பாக அவர்களுக்கு அது தேவைப்படும். எனில், அந்தத் தடயத்தை நீ விட்டு செல்ல மாட்டாயா? அவ்வாறு செய்தால் அது நன்றாக இருக்காது, இல்லையா? இப்படி அறியாமல் நீ இருப்பது போன்ற ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை, ஹக்!"

"நல்லது" நான் கூறினேன் "நூல் ஏணி வேண்டுமென்று சட்ட புத்தகத்தில் இருந்தால், அவன் அவ்வாறு ஒன்று வைத்துக் கொள்ளட்டும். அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு சட்ட விதிகளையும் உடைக்க நான் விரும்பவில்லை. ஆனால் ஒரு முக்கியமான விஷயம், டாம் சாயர்! நமது போர்வைகளைக் கிழித்து துணிகளால் ஜிம்முக்கு ஏணி செய்ய நாம் முனைந்தால், கண்டிப்பாக சேல்லி சித்தியிடம் வசமாக மாட்டிக் கொள்வோம். நான் இதற்கு என்ன உத்தி சொல்கிறேன் என்றால், மெல்லிய மடங்கக் கூடிய மரப் பட்டைகள் கொண்டு ஒரு ஏணி உருவாக்கினால், அதற்கு மிகுந்த செலவும் ஆகாது. எந்தப் பொருளையும் நாசம் செய்யும் தேவையும் இருக்காது. மற்ற ஏணிகளை மறைத்து வைப்பது போலவே அதையும் பழக்கேக்கில் அல்லது கோரைப் பாயினுள் வைத்துக் கொடுக்கலாம். ஜிம்மைப் பொறுத்தவரை, இது பற்றியெல்லாம் அவனுக்குப் பெரிதாக எதுவும் அனுபவம் இருக்காது. எனவே எதைக் கொடுத்தாலும் அவன் பொருட்படுத்த.........."

"ஐயோ, ஹக்! உன்னைப் போன்ற அறிவிலியாக நான் இருந்திருந்தால், என் வாயை மூடிக் கொண்டு இருந்திருப்பேன். அப்படித்தான் நான் செய்திருப்பேன். ஒரு கைதி மரப்பட்டை ஏணி வைத்துத் தப்பித்துப் போனது பற்றி யாராவது கேள்விப் பட்டிருக்கிறார்களா? மிகவும் கேலிக்குரிய விஷயமாக இது உள்ளது."

"நல்லது, டாம்! உன் வழியிலேயே நீ செய். ஆனால் என் அறிவுரையை மட்டும் கொஞ்சம் கேட்பாயானால், என்னை அந்த துணி ஏணி செய்ய அனுமதி கொடு."

அவ்வாறே அனுமதி கொடுப்பதாக அவன் கூறினான். அது அவனுக்கு இன்னொரு யோசனையை கொடுத்தது.

"அந்த மேல் சட்டையை எடு" டாம் கூறினான்.

"மேல் சட்டை எதற்கு, டாம்?"

"அதனில் ஒரு குறிப்புப் புத்தகம் ஜிம் வைத்துக்கொள்ள அது உதவும்."

"குறிப்புப் புத்தகம்- அடக் கண்றாவியே! ஜிம்முக்கு எழுதத் தெரியாது."

"சரி. அவனுக்கு எழுதத் தெரியாது. ஆனால் பேனா அல்லது சிறு ஸ்பூன் அல்லது கறுப்பு இரும்புக் கட்டி இவற்றை வைத்து அவன் சில குறிகளை இந்த மேல்சட்டையில் இடலாம் அல்லவா? முடியாதா?

"டாம்! ஒரு வாத்தின் இறகை பிடுங்கி, அதை வேண்டுமானால் கொடுத்து அவனை ஏதேனும் எழுதச் சொல்லலாம். அது இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும்."

“கோட்டைகளின் பாதாளச் சிறையிலிருக்கும் கைதிகளைச் சுற்றி எந்த வாத்துக்கள் வலம் வருகின்றன? எப்படி அதன் இறகுகளை பிடுங்கமுடியும், முட்டாளே? சிறைக்குள் கிடைக்கும் மிகவும் கடினமான, கஷ்டமான பயன்படுத்தாது எறிந்து கிடக்கும் பொருட்களான பழைய பித்தளை மெழுகுவர்த்திபீடம், இன்னும் இது போல கைக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அவர்கள் எழுதுகோல் தயார் செய்வார்கள். அதுவும், அவற்றை சுவற்றில் உரைத்துத் தேய்த்து பயன்படுத்த வேண்டியிருப்பதால், நாள்கணக்கில், மாதக்கணக்கில் என்று அவர்கள் கஷ்டப்பட்டு எழுத வேண்டியிருக்கும். அவர்கள் கையில் மயிலிறகு இருந்தாலும்கூட அதை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அவ்வாறு செய்வது எந்த புத்தகத்திலுமே கிடையாது.”

"அப்படியானால் நல்லது. எழுதுகோலுக்குத் தேவையான மை எப்படி நாம் தயார் செய்வது?"

"இரும்புத் துரு அல்லது தன்னுடைய கண்ணீரைக் கொண்டே பெரும்பான்மையான கைதிகள் எழுதுகோல் மை தயாரிப்பார்கள். ஆனாலும், அது சாதாரண மனிதர்கள் கைதிகளாக இருக்கும் போது அது பொருந்தும். உண்மையில் சிறந்த சாகச வீரர்கள் கைதிகளாக இருக்கும்போது அவர்களின் ரத்தம் கொண்டே மை தயாரிப்பார்கள். ஜிம் அந்த மாதிரி செய்யலாம். கைதியாக எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பது பற்றிய மர்மத் தகவல்களை இந்த உலகம் தெரிந்து கொள்ள அவன் அனுப்ப விரும்பும்போது இந்த வகையில் அனுப்பலாம். சாப்பிடும் தட்டின் கீழ்புறமாக, மறைவான பகுதியில் முள்கரண்டி கொண்டு எழுதி, சன்னல் வழியாக வெளியே அவன் வெளியே வீசிவிடலாம். பிரெஞ்சு கதையில் வரும் பிரபலமான இரும்பு முகமூடி மனிதன் கூட அவ்வாறுதான் செய்வான். அதுதான் உண்மையில் மிகவும் சிறந்த வழி.”

"ஜிம்முக்கு எந்த தகரத் தட்டுக்களும் இல்லை. அவனுக்கு ஒரு பாத்திரத்திலேயே உணவளிக்கிறார்கள்."

"அது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. அவனுக்கு சில தகரத் தட்டுகள் கிடைக்கும்படி செய்வோம்."

"ஆனால் அந்தத் தட்டுகளின் மீது அவன் கிறுக்குவதை யாராலும் படித்துப் புரிந்து கொள்ளமுடியாது."

"அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை, ஹக் ஃபின்! அவன் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். தட்டில் ஏதேனும் எழுதித் தூர வீச வேண்டியதுதான். அதை நீ படிக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. ஏன், பல நேரங்களில், கைதிகள் எழுதுவதை யாராவது எங்கேயாவது படித்துப் புரிந்து கொண்டிருக்கிறார்களா?"

"அப்படியென்றால், எதற்காக அவர்கள் தங்கள் தட்டில் கிறுக்கி வைத்து, தட்டுகளை நாசம் செய்ய வேண்டும்?"

"ரொம்ப கஷ்டம்! அது ஒன்றும் கைதிகளுக்குச் சொந்தமான தட்டுக்கள் கிடையாது."

"ஆனாலும், அது யாரோ ஒருவருக்கு சொந்தமான தட்டுக்கள்தானே, இல்லையா?"

"நல்லது. இருக்கலாம். ஆனால், அது பற்றி கைதிக்கு என்ன கவலை இருக்கப்............"

அதற்குள் காலை உணவுக்கான சங்கு ஒலித்ததும் அவன் பேசுவதை நிறுத்தினான். எனவே, திரும்ப நாங்கள் வீட்டை நோக்கி நடந்தோம்.

பின்னர் அதே காலைப் பொழுதில், ஒரு நீண்ட துணி மட்டும் வெள்ளைநிற மேல் சட்டை இரண்டையும் வீட்டினுள் இருந்து கடன் (திருட்டுக்கு இன்னொரு பெயர்) வாங்கினேன். ஒரு பழைய கோணிப்பையை கண்டெடுத்து அதில் அவற்றைப் போட்டு வைத்தேன். பின்னர், கீழே இறங்கிச் சென்று சேகரித்து வைத்திருந்த நரித்தீ பூஞ்சைகளை எடுத்து வந்து அவற்றையும் அந்தக் கோணிப்பைக்குள் வைத்தேன். நான் "கடன் வாங்கினேன்" என்று கூறுவது என் அப்பாவின் பாஷையில். ஆனால் அது "கடன் வாங்குவது" அல்ல, திருடுவது என்று டாம் அதைத் குறிப்பிட்டான். நாங்கள் இருவரும் கைதிகளின் பிரதிநிதிகள் என்றும், கைதிகள் தனக்குப் பொருள் கிடைத்தால் சரி, அது எந்தவகையில் கிடைக்கிறது என்பது பற்றிக் கவலைப் படமாட்டார்கள் என்றும் டாம் மேலும் கூறினான். அவர்களுக்காகத் திருடுவதற்கு யாரும் எங்களைக் குற்றம் சாட்டமாட்டார்கள் என்றான். ஒரு கைதி தான் தப்புவதற்குத் தேவையான பொருட்களைத் திருடுவது ஒன்றும் குற்றம் ஆகாது என்றும் அது அவனின் உரிமை என்றும் டாம் அடித்துக் கூறினான்.

எனவே, ஒரு கைதிக்காக உதவுவதில் நாங்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களைச் சிறையிலிருந்து தப்புவிக்க உதவும் எங்களைச் சுற்றியுள்ள எந்த ஒரு சிறு பொருளையும் திருடிக் கொள்ள எங்களுக்கு அதிக அளவு உரிமை உள்ளது என்று டாம் நம்பிக்கையோடு வலியுறுத்தினான். நாங்கள் சிறைக்கைதிகளாக இல்லாமலிருப்பது பற்றி ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் சிறைக் கைதிகள் அல்லாது, வேறு கேவலமான நோக்கத்தோடு, அடுத்தவர்கள் பொருளை அபகரிக்கும் எண்ணத்தில் திருடுவது கடுங்குற்றமே என்றான்.

எந்த மாதிரியான பொருட்கள் எல்லாம் சமயத்திற்கு உதவுமோ அவற்றையெல்லாம் திருடி வைத்துக் கொள்வது என்று தீர்மானித்தோம். இருந்த போதும், அதன் பின் ஒரு நாள், அந்த நீக்ரோ போட்டு வைத்திருந்த தோட்டத்தில் விளைந்திருந்த ஒரு தர்பூசணிப் பழத்தை நான் பறித்து உண்டதற்கு, டாம் மிகுந்த களேபரம் செய்து என் மானத்தை வாங்கினான். அந்த நீக்ரோவிடம் சென்று ஒரு டைம் நாணயம் கொடுத்து விட்டு அதற்கான காரணத்தைக் கூறாமல் வரச் சொல்லி எனக்கு ஆணையிட்டான். நமக்குத் தேவையான விஷயங்களை நாம் திருடிக் கொள்ள உரிமை இருக்கிறது என்றுதானே டாம் கூறினான். நல்லது. எனக்கு தர்பூசணிப் பழம் தேவைப்பட்டது. என்று நான் கூறினேன். ஆனால், சிறைக் கைதிக்கு உதவ அந்த தர்பூசணிப் பழம் தேவையில்லை என்பதுதான் வித்யாசம் என்று டாம் பெரிய நியாயவாதி போலப் பேசினான்.

ஒரு வேளை சிறையின் தலைமைக் காவலரைக் கொல்ல ஜிம்முக்கு ஒரு பேனாக் கத்தி தேவைப்பட்டதென்றால், அதை வேண்டுமானால் நான் திருடி வைத்து கொண்டுச் செல்வதில் நியாயம் உண்டு என்று டாம் கூறினான். எனவே, தர்பூசணி திருடும் காரியத்தை நான் முழுதுமாக விட்டுவிட்டேன். ஒரு சிறைக் கைதியின் பிரதிநிதியாக இருப்பதன் உபயோககம் என்று எதுவும் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொருமுறை தர்பூசணி திருட சந்தர்ப்பம் கிடைக்கும் போதும், இதனால் சிறைக் கைதிக்கு என்ன நன்மை என்று மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்க என்னால் இயலவில்லை.

நல்லது. நான் கூறியது போலவே, காலையில், அனைவரும் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டு, முன்கட்டு, பின்கட்டுகளில் என யாரும் கண்களில் தென்படாமல் இருக்கும் வரை நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். பின்னர் டாம் அந்த சாக்கு மூட்டையை எடுத்துக் கொண்டு சாளரம் வழியாக வந்து கொண்டிருந்தான். நான் கொஞ்சம் தள்ளி நின்று கண்காணித்துக் கொண்டிருந்தேன். விரைவிலேயே, டாம் அந்த சாளரத்தின் வழியாக வெளியே வந்ததும், நாங்கள் அங்கிருந்து சென்று, மரக்குவியலின் அருகில் பேசுவதற்காக அமர்ந்தோம்.

"எல்லாம் தயாராகி விட்டது. உபகரணங்கள் மட்டும்தான் இல்லை. அவை இருந்தால் சுலபமாக எல்லாம் பொருத்தி விடலாம்." டாம் கூறினான்.

"உபகரணங்கள்?" நான் வியப்புடன் கேட்டேன்.

"ஆம்."

"உபகரணங்கள் எதற்காக?"

"எதற்கா? பள்ளம் தோண்ட அவை வேண்டாமா? அவனை அப்படியே அலேக்காக கொத்திக் கொண்டு நாம் வரமுடியாது, இல்லையா?"

"ஒரு பள்ளம் தோண்டி நீக்ரோவைக் வெளியே கூட்டி வர, வளைந்து, உடைந்து கிடைக்கும் அந்த கம்பிகள் மற்றும் அங்குள்ள பொருட்கள் எல்லாம் போதாதா?"

மிகவும் பரிதாபத்துடன் என்னை நோக்கித் திரும்பிய அவன் விட்டால் அழுதுவிடுவான் போலக் காணப்பட்டான்.

"ஹக் ஃபின்! தனக்காகப் பள்ளம் தோண்டிக் கொள்ள, மண்வெட்டிகள், கோடாரிகள் மற்றும் அது போன்ற நவீன உபகரணங்களை தன் ஆடைஅலமாரியில் ஒரு சிறைக் கைதி வைத்துக் கொண்டு இருப்பது பற்றி எப்போதாவது நீ கேள்விப் பட்டிருக்கிறாயா? இப்போது நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். உனக்கு மட்டும் புத்தி என்று ஒன்று இருந்தால், ஜிம்மை கதாநாயகனாக்க உன்னுடைய யோசனை எப்படிப் பொருத்தமாகும்? ஏன், அதற்கு பதிலாக, தன்னைத் தானே விடுவிக்கச் சொல்லி அவன் கையிலேயே அவர்கள் சாவியைக் கொடுத்து வேலையை முடித்து விடலாமே. மண்வெட்டிகள், கோடாரிகள் - ஹ்ம்ம் - ஏன் - ஒரு ராஜாவுக்கு இந்த உபகரணங்களை எல்லாம் ஏன் அவர்கள் கொடுக்கப் போகிறார்கள்?"

"சரி. நல்லது" நான் சொன்னேன் "அந்தக் கோடாரிகளும், மண்வெட்டிகளும் நாம் எடுக்கப் போவதில்லையெனில், வேறு என்ன நமக்குத் தேவை?"

"கொஞ்சம் பேனாக் கத்திகள்."

"அந்த அறையின் கீழ் ஒரு பெரிய பள்ளம் தோண்டுவதற்கா?"

"ஆம்."

"நாசமா போச்சு! டாம்! அது கேனத்தனம்."

"அது எவ்வளவு கேனத்தனம் என்பதல்ல இங்கே பேச்சு. அதைச் செய்ய சரியான வழி அதுதான் என்பதே முடிவு. சாதாரணமான ஒரு செயலும் கூட. வேறு எந்த ஒரு வழியும் நான் கேள்விப்பட்டதில்லை. நான் படித்த அனைத்துப் புத்தகங்களிலும் அப்படிப்பட்ட வழியே அதிகம் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சட்டைப்பையில் வைத்திருக்கும் சிறு கத்தி கொண்டே பள்ளம் தோண்டுவார்கள். அதுவும் குப்பைகூளங்களுக்குள் அல்ல. நன்றாக கவனி. பொதுவாகப் பேசுகையில், கடும் பாறைகளினூடே அவர்கள் தோண்டுவார்கள். அப்படித் தோண்டும் காரியத்திற்கு அவர்களுக்குப் பல வாரங்கள், ஏன், பல காலம் கூடப் பிடிக்கும். எடுத்துக்காட்டாக, பிரெஞ்சுக் கதையில், மார்செய்ல் துறைமுகத்தில் உள்ள பாதாளச் சிறையில் அடைபட்டுக் கிடைக்கும் சாட்டோ டிப் என்பவன் அவ்வாறாகப் பள்ளம் தோண்டி, அதன் மூலமாக தப்பித்து விடுவான். அதற்கு அவனுக்கு எத்தனை நாள் எடுத்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்?

"எனக்குத் தெரியவில்லையே."

"சும்மா, ஒரு யூகம் பண்ணிச் சொல்லு, பார்க்கலாம்."

"தெரியலையே! என்ன ஒரு ஒன்றரை மாதம் இருக்குமா?"

"முப்பத்தியேழு வருடங்கள். அவன் வெளியே வந்தது சீனாவில். அப்படித்தான் அதைச் செய்யவேண்டும். இந்த கோட்டை அறையின் கீழ் கடும் பாறைகள் இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்."

"ஜிம்முக்கு சீனாவில் யாரையும் தெரியாதே."

"அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? சீனா சென்ற அந்த மனிதனுக்கும் அங்கே யாரையும் தெரியாது. ஆனால், எல்லா நேரத்திலும் நீ நம்முடைய பேச்சை திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கிறாய். நாம் பேசிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயத்தை ஒட்டிப் பேச ஏன் உன்னால் முடிவதில்லை."

"சரி சரி. ஜிம் எந்த ஊரில் வெளி வருகிறான் என்பது பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. மொத்தத்தில் அவன் வெளியே வந்தால் சரி. அதே போல் ஜிம்மும் எந்த ஊரில் வெளி வருகிறோம் என்பது பற்றிக் கவலை கொள்ளமாட்டான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயம். ஒரு பேனாக் கத்தியை வைத்துக் கொண்டு பள்ளம் தோண்டி வெளி வர முதிய வயது ஜிம்மால் முடியாது. அவன் அத்தனை காலம் தாக்குப் பிடிக்கமாட்டான்."

"ஆம். அவன் வேண்டிய அளவு காலம் வரைத் தாங்குவான். இந்தக் குப்பை கூளத்தில் அடித்தளம் தோண்ட முப்பத்தியேழு வருடங்கள் பிடிக்கும் என்று நீ நினைக்கிறாயா?"

"சரி. அப்படியானால், அது செய்ய நமக்கு எத்தனை காலம் பிடிக்கும், டாம்?"

"நல்லது. பொதுவாக, அப்படித் தோண்ட எடுத்துக் கொள்ளும் நீண்டகாலம் வரை நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு முழிக்க முடியாது. கூடிய விரைவிலேயே சித்தப்பா சைலஸ் நாம் இங்கு இருக்கிறோம் என்று நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள என் குடும்பத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கும் முன்பே இந்த வேலையை நாம் முடித்தாக வேண்டும். ஜிம் அந்த ஊரைச் சேர்ந்தவன் அல்ல என்று அவருக்குத் தெரிந்து விடும். பின்னர் அவனைப் பற்றி தப்பி ஓடிப்போன அடிமை நீக்ரோ அல்லது அது போன்ற ஏதெனும் ஒரு விளம்பரம் பத்திரிகைகளில் கொடுப்பதுதான் அவரது அடுத்த செயலாக இருக்கும்.”

“எனவே பள்ளம் தோண்டுவதில் நீண்ட காலம் கடத்துவது நம்மை ஆபத்தில் தள்ளி விடும். உண்மையில், நாம் சில வருடங்கள் எடுத்து அந்த விஷயம் செய்ய வேண்டும். ஆனால், அது இப்போது முடியாது. நிலைமை தற்போது சரியாக இல்லாததால், எவ்வளவு விரைவாக நம்மால் முடியுமோ, அவ்வளவு விரைந்து பள்ளம் தோண்டிக் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பதை நான் பரிந்துரைக்கிறேன். அதன் பின் அது தோண்ட முப்பத்தியேழு வருடங்கள் ஆனது என்பது போல் நடித்துக் கொள்ளலாம். முதல் எச்சரிக்கை மணி அடிக்கும்போது, ஜிம்மை அங்கிருந்து வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். ஆம். அவ்வாறு செய்வதுதான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்."

"இப்போது இது ரொம்ப அறிவுப் பூர்வமாக இருக்கிறது" நான் கூறினேன் "நடிப்பது ஒன்றும் நமக்கு கஷ்டத்தையோ அல்லது நஷ்டத்தையோ கொடுத்துவிடப் போவதில்லை. எனவே, அப்படிப்பட்ட பள்ளம் தோண்ட நூற்றி ஐம்பது வருடங்கள் பிடித்தது என்று கூட மிகைப்படுத்திக் கூற எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எப்படிக் கூறுவதாக இருந்தாலும், அந்த வேலையை முடித்தபின் கூறுவதில் எந்த கஷ்டமும் எனக்கில்லை. எனவே இப்போது நான் உள்ளே சென்று சில பேனாக்கத்திகள் திருடுவதாக இருக்கிறேன்."

"மூன்று கத்திகள் திருடி வா," அவன் சொன்னான், "அவற்றில் ஒன்றை ரம்பம் போல செய்ய வேண்டும்."

"டாம்! உன்னிடம் கடுமையாக அல்லது மரியாதைக் குறைவாகப் பேசுகிறேன் என்று நீ எண்ணி விடாதே," நான் சொன்னேன், "ஆனால் அங்கே புகைபோகும் கூண்டின் பின்புறமாக நீர் உள்ளே நுழையாமல் தடுக்கும் மரப்பலகைகளின் கீழே ஒரு துருப் பிடித்த பழைய ரம்பம் செருகி வைக்கப்பட்டுள்ளது."

மனத்தளர்வுடன் சோர்ந்து போனவனாகக் காட்சி அளித்த அவன் இவ்வாறு கூறினான்:

"இனி உனக்கு பாடம் கற்பித்து எந்தப் பலனும் இல்லை, ஹக்! போ! போய் கத்திகளை - அதுவும் மூன்று கத்திகளைத் திருடிக் கொண்டுவா!"

நானும் அவன் கூறியவாறே செய்து முடித்தேன்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.