- - மார்க் ட்வைன் -என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -


அத்தியாயம் இரண்டு

முனைவர் ஆர்.தாரணிஅந்த விதவையின் தோட்டத்தின் கடைசிக்கு அழைத்துச் செல்லும் அடர்ந்த மரங்களினூடே உள்ள பாதையில், மரத்தில் உள்ள கிளைக்கொம்புகள் எங்களது தலையை பதம் பார்த்துவிடாவண்ணம், வளைந்தவாறே நாங்கள் இருவரும் பூனை நடை போட்டுகொண்டு  சென்றோம். நாங்கள் அவ்வாறு வீட்டைக் கடக்கும் வேளை, சமையலறை அருகே நகரும்போது, மரவேர் தடுக்கி, அதன் மேல்  விழுந்ததால்  சிறிது  சப்தம் ஏற்பட்டது. உடனடியாக பதுங்கிய நாங்கள் சிறிது நேரம் அசைவற்று இருந்தோம். ஜிம் என்ற பெயர் கொண்ட மிஸ்.வாட்ஸனின் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த முதன்மைச் சமையல்காரன்  சமையலறைக் கதவின் அருகே உறங்கிக்  கொண்டிருந்தான்.

அவனின் பின்புறமாக விளக்கு வெளிச்சம்  இருந்ததால் அவனை  நாங்கள் நன்கு கவனிக்க முடிந்தது. அவன் எழுந்து, கழுத்தைக் கீறியபடியே ஒரு நிமிடம் அமைதியாக கவனித்துப் பின் கூவினான்,  "யாருடா அது?" இன்னும் சிறிது நேரம் அமைதியாக இருட்டைக் கவனித்த அவன், எந்த பதிலும் வராததால், மெதுவாக பூனை நடை போட்டு வந்து கதவின் வெளியே இருட்டில் நின்றிருந்த எங்கள் இருவருக்கும் இடையில் நாங்கள் கொஞ்சம் ஏமாந்தால் அவரைத் தொட்டுவிடும் தொலைவில்  நின்றான்.. அந்த வேளை பார்த்துத்தானா எனது குதிகாலில் ஏதோ அரிப்பு வரவேண்டும்? நான் அதைப்பொருட்படுத்தவில்லை. ஆயினும் அதன் தொடர்ச்சியாக எனதுகாதுகளிலும், பின் எனது இரண்டு தோள்பட்டைகளுக்கிடையேயான முதுகிலும் கடுமையாக அரித்தது.

அரிப்பு எடுத்த இடங்களில் கைகளை வைத்து சொறியவில்லை என்றால் இறந்து போய்விடுவேன் என்ற அளவுக்குக் கடுமையாக இருப்பதாகத் தோன்றியது. நல்லது. நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். நல்ல விசேஷ இடங்களில் உள்ளபோது அல்லது ஒரு இறுதிச்சடங்கு நிகழ்வின்போது, தூக்கம் கொஞ்சம் கூட வராதபோது, தூங்கச்செல்லும்போது, எந்த இடத்திலெல்லாம்  இருக்கும்போது  சொறிய இயலாதோ, அந்த சமயத்தில் எல்லாம் கீழிருந்து மேலாக ஏன் இப்படி ஆயிரம் இடங்களில் அரித்துத் தொலைக்கிறது என்று புரிபடவில்லை.

வெகு சீக்கிரமாகவே ஜிம் சத்தம் போட்டான், "யார் நீ? ஒழுங்காகக் கூறிவிடு. நாசமத்துப் போக! நான் கேட்ட சப்தம் பொய்யல்ல. நான் என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கு  நன்றாகத் தெரியும். நான் இங்கேயே அமர்ந்து மீண்டும் அந்த சத்தம் வரும்வரை காத்திருக்கப் போகிறேன்." இதைக் கூறிய ஜிம் அங்கேயே தரையில் அமர்ந்தான். ஒரு மரத்தின் தண்டில் வாகாய்ச்  சாய்ந்து கொண்டு அவன் நீட்டிய கால்கள் என்னை தொடும் அளவுக்கு நீண்டது. அப்போது எனது மூக்கு மீண்டும்  கடுமையாக அரிக்க ஆரம்பிக்க எனக்கு  அழுகை  பீறிட்டு வந்தது. ஆயினும் சொரிவதால் வரும்  ஆபத்தை எண்ணி முயற்சிக்காது பொறுமை காத்தேன். மூக்கின் உள்புறம், அடிப்புறம்  என .அரிப்பு தொடர்ந்தது. எவ்வாறு அரிப்பைக்   கவனிக்காமல் அங்கே அப்படியே இருக்கப்போகிறேன் என்று தெரியாத அளவு நிலைமை கேவலமாக இருந்தது.

இந்தப் பரிதாபம் ஆறு அல்லது  ஏழு நிமிடங்களுக்குத்தான் தொடர்ந்தது. ஆயினும், அது என்னவோ பலவருடகாலம் நான் சகித்துக் கொண்டு நிற்பதைப்  போன்று எனக்குத் தோன்றியது. வெகு விரைவிலேயே தொடர்ந்து பதினோரு இடங்களில் ஒட்டுமொத்தமாக அரிப்பு தோன்றியது. இனி இதை சகிக்கவே முடியாது என்று தோன்றினாலும், பற்களை இறுக்கிக் கடித்துக்கொண்டு பொறுமையாய் இருக்கும்படி எனக்கு நானே மனதில் கூறிக்கொண்டேன். அந்த சமயத்தில்தான் ஜிம் நீண்ட நெடிய மூச்சையும், மெல்லிய குறட்டையையும் வெளிப்படுத்திக்கொண்டு உறங்க ஆரம்பித்ததைக்கவனித்து  உறுதி செய்தபின் முதல் வேலையாக உடல் முழுதும் சொரிந்து கொண்டபின்தான் மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

வாயினால் மெல்லியதாக  ஒரு ஒலி  எழுப்பி டாம் எனக்கு ஒரு சமிக்ஞை செய்தான். கரங்கள் மற்றும் கால்முட்டி உதவி கொண்டு குழந்தைகள் போல் தவழ்ந்தோம். அவ்வாறாக பத்து அடி தூரம் சென்றபின், தூங்கும் ஜிம்மை மரத்தில் கட்டி வைத்து ஒரு குறும்பு செய்யலாம் என்று டாம் எனது காதில் கிசுகிசுத்தான். அப்படிச்செய்யும் வேளை அவன் விழித்து விட்டால் கத்தி வீட்டில் உள்ளவர்களை எழுப்பிவிட்டால் நான் நழுவி வந்தது பிறருக்குத் தெரிந்துவிடும் என்பதால் அவ்வாறு செய்யாதிருப்பது நலம் என்று கூறினேன். அதன் பின்னரும் டாம் தன்னிடம் மெழுகுவர்த்திகள் குறைவாக உள்ளதால், யாரும் அறியாமல் சமையலறைக்குச்சென்று அங்குள்ள சில மெழுகுவர்த்திகளை எடுத்துக் கொள்ளலாம் என்றான்.

நான் அவனை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை. ஜிம் விழித்துக்கொண்டு அதுபற்றி விசாரணை செய்யக்கூடும் என்று அவனிடம் கூறினேன். ஆனால் டாம் அந்த காரியத்தை செய்தே தீருவதெனத்  துணிந்தான். எனவே நாங்கள் இருவரும் சப்தம் செய்யாமல் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று மெழுகுவர்த்திகளை எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து வெளியேறும் முன், டாம் பெரிய நாணயஸ்தனாக மூன்று சென்டுகளை மெழுகுவர்த்திகளுக்கான விலையாக அங்கே வைத்தான். அங்கிருந்து உடனே நான் வெளியேற நினைத்தேன். ஆனால் டாம் ஜிம்மிடம் ஒரு விளையாட்டு நடத்தியே தீருவதென முடிவு செய்தான். டாம் அவனிடம் தவழ்ந்து சென்ற வேளையில், மிக நீளமானதாகத் தோன்றிய அந்த தனித்த இரவில்  நான்அசையாது நின்று அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

டாம் திரும்ப வந்தவுடன்,  தோட்டத்தின் வேலியை சுற்றி வந்த பாதையில் நாங்கள் நடந்து, வீட்டின் பின்புறம் உள்ள சிறிய குன்றை நோக்கிச் சென்றோம். ஜிம்மின் தொப்பியை எடுத்து ஜிம் சாய்ந்து தூங்கும் மரத்தில் ஜிம்மின்  தலைக்கு மேல் உள்ள சிறிய கிளையில் மாட்டிவிட்டு வந்ததாக டாம் கூறினான். அவன் அப்படி செய்யும்போது ஜிம் சிறிது அசைந்து கொடுத்தாலும், தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை என்றும் கூறினான். பின்வரும் நாட்களில், சூனியக்காரிகள் ஏதோ மாயம் செய்து ஆழ்நிலைத் தூக்கத்தில் தன்னை வைத்ததாக, மரக்கிளையில் தொப்பி இருந்ததற்கு ஜிம் காரணம் ஒப்புவித்தான். அத்துடன் அந்த மாயக்காரிகள் தன்னை மரத்தின் கீழ் தூக்கத்தில் ஆழ்த்தும் முன்னர் அந்த மாகாணம் மொத்தமும் குதிரையில் பயணம் செய்ய வைத்ததாகவும் கூறினான். அவர்கள்  தொப்பியை அந்த மரக்கிளையில் வைத்ததன் காரணம் அவர்கள் ஜிம்முக்கு என்ன செய்தார்கள் என்று நினைவூட்டுவதற்காத்தான் என்றும் சொன்னான்.

அடுத்த முறை அவன் அந்த கதை சொல்லும் போது குதிரையில்  அவன் நியூ ஆர்லியன்ஸ் வரை செல்லும்படி அந்த சூனியக்காரிகள் பணித்தார்கள் என்று உரைத்தான். இவ்வாறாக ஒவ்வொரு முறை அவன் அந்தக் கதையைக் கூறும்போதும் அவன் குதிரைப்பயணம்  செய்த இடங்கள் அதிகமாகிக்கொண்டே சென்று கூடிய விரைவில் அவனை  உலகம் முழுதும் குதிரையில் பயணிக்க அந்த சூனியக்காரிகள் பணித்ததால் அவன் உடலில் சேணத்தினால் ஏற்பட்ட புண்களால்  அவனுக்கு கொடுந்துயர் ஏற்பட்டது என்று கூட  கூற ஆரம்பித்தான்.

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2ஒருவகையில் ஜிம்முக்கு இது பெருமை தரும் விஷயமாக இருந்தது. இவ்வாறான ஒரு பெருமை சேர்க்கும் கதையை பல மைல் தொலைவிலிருந்து இதைக் கேட்கவெனவே  வந்த அவனைப் போன்ற கறுப்பின ஆட்களிடம் இட்டுக்கட்டிச் சொல்ல அவன் பெரிதும் விரும்பினான். அவன் இக்கதையினால் அந்த நாட்டிலேயே மிகவும் மதிக்கப்படும் கறுப்பினத்தவன் அவன் ஆனான். முன்பின் தெரியாத கறுப்பினத்தவர்கள் கூட, தங்கள் வாயைப் பிளந்தபடி அவன் உலகின் மிகப் பெரிய அதிசயம் என்பது போல அவனைப் வைத்த கண் வாங்காது  பார்த்துக்கொண்டிருப்பார்கள். சமையலறையில் இருட்டில் கணப்பு மூட்டும் தீ அருகே அமர்ந்து கொண்டு இவ்வாறான மாயப் பிசாசுகளைப் பற்றி பேசுவதை கறுப்பர்கள் பெரிதும் விரும்புவார்கள். எப்போதாவது ஜிம் அந்த அறைக்குள் நுழையும்போது யாராகிலும் அவ்வாறான விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால், அவன் உடனே "ஹ்ம்ம்!உங்களுக்கு என்ன தெரியும் அவைகளைப் பற்றி?" என்று கூறுவான். அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்த கறுப்பர்கள் அங்கே பேசாமல் அமரும்படி ஆகி  விட்ட நிலையில்,  ஜிம் தலைமைப் பேச்சாளனாக மாறுவான். டாம் விட்டுச் சென்ற நிக்கல் நாணயத்தை சாத்தான் தனக்கு பரிசளித்த மந்திர நாணயம் என்று பறைசாற்றிக் கொண்டபடியே ஜிம் எப்போதும் தன் கழுத்தில் ஒரு சிறிய கயிற்றில் கோர்த்து அணிந்திருப்பான்.

அந்த மந்திர நாணயத்தை வைத்து அவனால் எந்த மனிதனையும் சரி செய்ய முடியும் என்றும், அவனுக்குத் தேவைப்படும் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தைச் சொல்லி அவனால் அந்த சூனியக்காரிகளை வரவழைக்கமுடியும் என்றும் தம்பட்டம் அடிப்பான். ஆனால் அது என்ன மந்திரம் என்பதை அவன் என்றுமே சொன்னதில்லை. எங்கிருந்தெல்லாமோ வரும் கறுப்பர்கள், அவர்களிடம் என்ன உள்ளதோ, அதை ஜிம்மிடம் கொடுத்து விட்டு, அந்த மந்திர நாணயத்தைத் தரிசனம் செய்வார்கள். ஆனால் அந்த நாணயம் சாத்தானின் கைபட்ட நாணயம் என்று அவர்கள் திண்ணமாய் நம்பியதால், அவர்களில் யாரும் தப்பித்தவறிக்கூட அந்த நாணயத்தைத் தொட்டதில்லை. சாத்தானைப் பார்த்த அதிர்ஷ்டம் உள்ளவன்,   மேலும் சூனியக்காரிகளால் மந்திரத்தூக்கத்துக்கு ஆட்பட்டவன் என்பதாலும் தான் மிகவும் விசேஷமானவன் என்ற நினைப்பில்  ஜிம் ஒரு பயனற்ற வேலைக்காரனாய் அதன்பின் மாறிவிட்டான்.

நல்லது! டாமும்,  நானும் மலையின் உச்சிக்கு ஏறி கீழ் நோக்கிப் பார்த்தபோது,  நீண்ட நேரம் கண் விழித்து அவதிப்படும் உடல்நலம் குன்றிய மக்கள் ஊருக்குள் வசிக்கும் வீடுகள் மூன்று அல்லது நான்கில் மட்டுமே  விளக்குகள்   மினுக்கிக்கொண்டிருந்தன. மேலே நட்சத்திரங்கள் மிக அழகாய், அபாரமாய் கண் சிமிட்டிகொண்டிருந்தன. கீழே ஊரை ஒட்டி பல மைல்களுக்கு அகன்று விரிந்து ஓடும் ஆறு உங்கள் கண்களில் நிச்சயமாய்த் தென்படும். மலையை விட்டு இறங்கி விலங்குகளை பதப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கிடங்குக்கு நாங்கள் சென்றோம். அங்கே ஜோ ஹார்பர், பென் ரோஜர்ஸ் மற்றும் இன்னும் இரண்டு அல்லது மூன்று சிறுவர்களைக் கண்டோம். நாங்கள் அங்கே கட்டியிருந்த சிறிய தோணியை விடுவித்து ஒரு இரண்டரை மைல் தூரம் ஆற்று நீரில் அதில் பயணித்து மலையின் சிறிய வடு போன்ற ஒரு வளைவுக்குள் சென்றடைந்தோம். 

பின்னர் கூட்டமாக இருந்த புதர்களைத் தாண்டிச் சென்றோம். எங்கள் எல்லோரிடமும் ரகசியம் காக்கவேண்டுமென சத்தியம் வாங்கிக்கொண்ட டாம் மலையின் அடர்ந்த புதர்களின் பின்னே அமைந்திருந்த சிறிய துவாரத்தைக் காட்டினான். மெழுகுவர்த்திகளைப் பற்ற வைத்துக்கொண்டு கைகளையும், கால் முட்டிகளையும் கொண்டு அந்த சிறிய துவாரத்தினுள்ளே நுழைந்து நகர ஆரம்பித்தோம். சுமார் இருநூறு அடித்தொலைவில் அந்த குகையின் பெரிய வாசல் ஆரம்பித்தது. டாம் இன்னும் பல பாதைகளைக் கண்டுபிடித்து கடைசியாக ஒரு சுவற்றின் கீழ் கொண்டு நிறுத்தினான். அங்கே அவ்வளவு பெரிய துவாரம் உள்ளது என்றால்  யாருமே நம்ப மாட்டார்கள். அந்த குறுகிய பாதை வழியே கடைசியாக ஒரு குளிர்ந்த சிறிய அறை போன்ற இடத்திற்கு வந்தடைந்தோம்.

அந்த இடத்தில்  டாம் கூறியதாவது: "இப்போது நாம் அனைவரும் ஒரு கொள்ளையர் குழு உருவாக்குவோம். அதன் பெயர் டாம் சாயரின் கூட்டம். யாரெல்லாம் இதில் இணைய விரும்புகிறீர்களோ அவர்கள் ஒவ்வொருவரும் சத்தியம் செய்து தங்களின் பெயரை அவரவர்கள் ரத்தத்தில் எழுதித்தரவேண்டும்" அனைவரும் அதற்குச் சம்மதித்தார்கள். எனவே,  டாம் தான் முதலிலேயே எழுதிக் கொண்டு வந்திருந்த தாளை எடுத்து அதில் இருந்த பிரமாணத்தைப் படிக்கலானான்.      அதில் பின்வருமாறு இருந்தது: ஒவ்வொரு சிறுவனும் அந்தக் குழுவுடன் என்றும் இணைந்து இருந்து, குழுவின் ரகசியத்தை எப்போதும் வெளியிடாமல் இருக்கவேண்டும். வெளியாட்கள் யாரேனும் குழுவின் உறுப்பினர் யாருக்காவது தீங்கு இழைத்துவிட்டால், குழு மொத்தமும் சேர்ந்து அந்த எதிரி மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிடவேண்டும். அவ்வாறு எதிரியைக் கொல்லும்வரை தீங்கு இழைக்கப்பட்ட சிறுவன் சாப்பிடவோ தூங்கவோ கூடாது. ஒவ்வொருவர் மார்பிலும் சிலுவைக்குறி வரைந்து கொள்ளவேண்டும். அதுவே அந்தக் குழு உறுப்பினர்களின் அடையாளம்.

குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அந்த சிலுவைக்குறி சொந்தம். வேறு யாராகிலும் அவ்வாறு ஒரு குறி வரைந்து கொண்டால் அவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மேலும் அவர்கள் அதைச்செய்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள். குழு உறுப்பினர்கள் யாராவது குழுவின் ரகசியத்தை வெளியே கூறினால், அவர்களின் குரல்வளை நெறிக்கப்படும், உடல் எரிக்கப்பட்டு, அவனின் சாம்பல் எல்லா இடங்களிலும் சிதறடிக்கப்படும். குழுவின் பெயர்ப்பட்டியலில் இருந்து அவன் பெயர் ரத்ததாலேயே அழிக்கப்பட்டு, அந்தப் பெயர் என்றுமே மறந்து போகும் அளவு சபிக்கப்படும். 

அது ஒரு அருமையான உறுதிப்பிரமாணம் என்று அனைவரும் டாமைப் பாராட்டி, அது டாம் தன்னிச்சையாகவே  தயாரித்ததா என்று வினவினார்கள். அவற்றில் சில தானே தயாரித்ததாகவும், சிலவற்றை கடல் கொள்ளையர்கள், நிலக்கொள்ளையர்கள் பற்றிய புத்தகங்களில் இருந்து எடுத்ததாகவும் டாம் பதிலிறுத்தான். ஒவ்வொரு முதல்தரமான கொள்ளைக்குழுவும் இவ்வாறான கொள்கைகளையே பின்பற்றினார்கள் என்றும் கூறினான்.
குழுவின் ரகசியத்தை வெளியே சொல்லும் குழு உறுப்பினர் மட்டும் அல்லாது, அவனின் குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்படவேண்டும் என்ற கருத்தை  சில சிறுவர்கள் வலியுறுத்தினார்கள். அந்த யோசனை டாமுக்கும் பிடித்திருந்ததால் ஒரு பென்சிலை எடுத்து அந்தத் தாளில் அதைக் குறித்துக் கொண்டான். 

அப்போது பென் ரோஜர்ஸ் கூறினான்: "ஆனால், ஹக் விஷயத்தில் என்ன செய்ய? அவனுக்குத்தான் குடும்பம் கிடையாதே? அவனுக்கு எப்படி இது பொருந்தும்?"

"நல்லது. அவனுக்கு அப்பா உள்ளார் இல்லையா?" டாம் கூறினான்.  

"ஆமாம்! அவனுக்கு அப்பா இருக்கிறார். ஆனால் அவரை எங்கே கண்டுபிடிப்பது இந்த நாட்களில் என்பது யாருக்குமே தெரியாது. தோல் பதப்படுத்தும் கிடங்குகளில்  அவர்  நன்கு குடித்துவிட்டு பன்றிகளுடன் படுத்துக் கிடப்பது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வருடமாக இங்கே யாருமே அவரைப் பார்த்தாகத் தெரியவில்லை."

அதைப்பற்றி அவர்கள் மீண்டும் மீண்டும் விவாதித்தது காண்கையில் என்னை அந்தக் குழுவிலிருந்து அடித்துத் துரத்திவிடுவார்கள் போல இருந்தது. ஒவ்வொரு சிறுவனுக்கும் குடும்பம் கண்டிப்பாக இருந்தால்தான், அவன் குழுவின் ரகசியத்தை வெளியே கூறினால், அவன் குடும்பத்தைக் கொல்ல முடியும் என்று அவர்கள் கூறினார்கள். இல்லாவிடில் மற்ற சிறுவர்களுக்கு அநியாயம் இழைத்தது போல் ஆகிவிடும் என்றார்கள். அனைவருக்கும் இது பற்றி என்ன செய்வது என்றே புரியவில்லை. நாங்கள் அனைவரும் கடுமையான குழப்பத்தில் அங்கே அமர்ந்து விட்டோம். எனது நிலை கண்டு எனக்கு அழுகை வரவிருந்த அந்த வேளையில் எனக்குத் திடீரென ஒரு யோசனை உதித்தது. நான் குழுவின் ரகசியத்தை வெளியே சொன்னால், அவர்கள் மிஸ். வாட்ஸனைக் கொன்று விடலாம் என்று கூறினேன்.

அவர்கள் அனைவரும் ஒரே குரலில் "ஓ ரொம்ப நல்லது. அவள் போதும். ஹக் இப்போது குழுவில் உள்ளான்"  என்றார்கள்.

பிறகு அனைவரும் ஒரு ஊசி மூலம் தங்களின் விரல்களில் குத்தி ரத்தம் எடுத்து அந்தத் தாளில் தங்களின் கையெழுத்திட்டார்கள்.

நான் எனது ரத்தத்தில் முத்திரை பதித்தேன்(எனக்கு கையெழுத்து இடத் தெரியாது).

"இப்போது" பென் ரோஜர்ஸ்  ஆரம்பித்தான், " இந்தக் குழுவின் முக்கியமான குறிக்கோள் என்ன?"

"கொள்ளை, கொலையைத் தவிர வேறொன்றுமில்லை"  டாம் கூறினான்.

"ஆனால் யாரைக் கொள்ளை அடிக்கப் போகிறோம்? வீடுகள் அல்லது மாடுகள் இருக்கும் கொட்டில்கள். அல்லது ........"

"முட்டாள்தனம். மாடுகள் மற்றும் அதுபோன்ற பொருட்களை எடுப்பதன் பெயர் திருட்டு." டாம் சாயர் கூறினான்.

"நாம் திருடர்கள் அல்லர். அதில் என்ன சாகசம் இருக்கப்போகிறது? நாம் நெடுஞ்சாலை மனிதர்கள். நாம் முகமூடி போட்டுக் கொண்டு மிகப்பெரிய பொட்டலங்கள் ஏற்றிச் செல்லும் குதிரை வண்டிகள், உயர்குலத்து மனிதர்கள் பயணம் செய்யும் வண்டிகள் இவற்றை சாலைகளில்  நிறுத்தி , அதில் உள்ள மனிதர்களைக் கொன்று அவர்களின் கடிகாரங்களையும், பணத்தையும் பறித்துக் கொள்வோம்,"

"நாம் எப்போதுமே மனிதர்களைக் கொல்லத்தான் வேண்டுமா?"

"கண்டிப்பாக. அதுதான் சிறந்த வழி. சில நிபுணர்கள் வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள். ஆனால்  கடத்தி வந்து  குகைக்குள்  அடைத்து வைத்து பணயத்தொகை பெறும் வரை சில மனிதர்களை வைத்திருப்பதைத் தவிர மற்றவர்களை எல்லாம்  கொல்வதே சிறந்தது என பொதுவாகக் கருதப்படுகிறது."

"பணயத்தொகை கேட்பது?  என்ன அது?"

"எனக்குத் தெரியாது. ஆனால் நெடுஞ்சாலைக் கொள்ளையர்கள் அவ்வாறுதான் செய்வதாக புத்தகத்தில் பார்த்திருக்கிறேன். எனவே நாமும் அவ்வாறுதான் செய்ய வேண்டும்."

"ஆனால், அது என்ன என்று கூடத்தெரியாமல் அதை  எப்படி நாம் செய்வது."

"ஏன்? தயக்கமா? அதை நாம் செய்துதான் ஆகவேண்டும். புத்தகங்களில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது என்று நான் உங்களிடம் சொன்னேன் அல்லவா? புத்தகத்தில் கூறியுள்ளதை விடுத்து வித்தியாசமாக வேறு ஏதேனும் செய்து அனைத்தையும் குழப்பி விட வேண்டும்  என்ற எண்ணமா?"

"செயலை விட சொல்வது எளிது. டாம் சாயர். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த உலகத்தில்   மக்களைப் பணயக்கைதியாக்குவது என்றால் என்ன என்பது பற்றித் தெரியாமல் எவ்வாறு அந்தக் காரியத்தை நாம் செய்ய முடியும்? அதன் பொருள் என்ன என்று நீ நினைக்கிறாய்?"

"நல்லது. எனக்குத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களைக் கடத்தி வந்து அவர்களை சாகும் வரை நாம் வைத்திருக்க வேண்டும் என்ற அர்த்தமாகக் கூட இருக்கலாம்."

"இப்போது அதன் அர்த்தம் தெளிவாக உள்ளது. அது போதும். இதை ஏன் நீ முதலிலேயே கூறவில்லை? அவர்களை கடத்தி வந்து பணயக்கைகைதியாக அவர்கள் சாகும்வரை வைத்திருப்போம். எல்லாவற்றையும் சாப்பிட்டுக்கொண்டு, எப்போதும் தப்பிக்க முயற்சி செய்துகொண்டு என அதுவும் அவர்களுக்கும் மிகப்பெரிய கஷ்டம்தான்."

"உன்னை நீயே கேட்டுக்கொள், பென் ரோஜர்ஸ்!. யாரோ ஒருவர் அவர்களை சதா சர்வகாலமும் காவல் காத்துக் கொண்டு, ஒரு இம்மியளவு அவர்கள் நகர்ந்தாலும் அவர்களை சுட்டுப்பொசுக்கிவிடத் தயாராக உள்ளபோது,  எப்படி அவர்கள் தப்பிக்க முடியும்?"

"ஒரு காவல் காப்பவன்……!  நல்லது. ரொம்ப நல்ல  யோசனை. அப்படியானால்,  யாரோ ஒருவர் இரவு முழுதும் உறங்காமல் கண்விழித்து அவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையா? கேலிக்குரிய விஷயம். அவர்கள் அனைவரையும் ஒரு குழுவாக ஏன் நாம் எடுத்து பிணைக் கைதிகளாக்கக் கூடாது?"

"புத்தகத்தில் அவ்வாறுதான் உள்ளது. அதனால்தான். பென் ரோஜர்ஸ்! இப்போது, இதை நீ சரியாகச்செய்யவேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லையா? கொள்ளையர்கள் பற்றி  புத்தகங்களை  எழுதியவர்களுக்குத் தெரியாதா, எது சிறந்தது என்று.? நீ புதிதாக ஏதேனும் அவர்களுக்கு சொல்லித்தர விரும்புகிறாயா? கண்டிப்பாக இல்லை. இல்லவே இல்லை. நாம் புத்தகம் சொல்வதன்படி மக்களை பணயம் வைப்பதை செய்யத் தொடங்குவோம்."

"அப்படியே ஆகட்டும். எனக்கு அக்கறை இல்லை. ஆனால் அது ஒருவகையில் பைத்தியக்காரத்தனம்தான். ஹேய்! பெண்களையும் கூட நாம் கொல்லப்போகிறோமா, என்ன?"

"பென் ரோஜர்ஸ்! நான் மட்டும் உன்னைப்போல் புத்தி கெட்டவனாக இருந்தால், பேசாமல் வாயை மூடிக்கொண்டு அமைதி காப்பேன். பெண்களைக் கொல்வது? இல்லை. எந்தப் புத்தகமும் அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி எதுவும் சொல்லவே இல்லை. அவர்களை குகைக்குள் கொண்டு வந்து அவர்களிடம் எத்தனை மரியாதையாக நடந்து கொள்ள முடியுமோ, அவ்வாறு நடக்க வேண்டும். அப்படி இருந்தால், வெகு விரைவில் அவர்கள் உன் மேல் காதல் வயப்பட்டு, பின் அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்ல ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்."

"நல்லது. அபப்டித்தான் இருக்கும் என்றால் அது எனக்கும் சரிதான். ஆனால் இவ்வாறான விஷயங்களில் நான் பங்கு எடுத்துக்கொள்ள விரும்பவில்லை." வெகு விரைவில் குகை முழுதும் பெண்களும் அவர்களைக் கவர விரும்பும் ஆண்மகன்களும் என நிரம்பி வழியும்போது, கொள்ளைக்காரர்களுக்கு அங்கே இடம் இல்லாது ஆகி விடும். ஆயினும், உன் வழியில் நீ தொடர்ந்து சொல்.  சொல்வதற்கு வேறு எதுவும் என்னிடம் இல்லை."

அந்த சமயத்தில் அந்தக் கூட்டத்தின் குட்டிப்பையன் டாமி பார்ன்ஸ் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். அவனைத் தூக்கத்தில் இருந்து மற்றவர்கள் எழுப்பிய போது, பயந்து போய் அவன் அழத்தொடங்கிவிட்டான். தான் வீட்டில் உள்ள அம்மாவிடம் செல்ல விரும்புவதாகவும், தான் இந்த கொள்ளையர் கூட்டத்தில் இனி சேரப்போவதில்லை எனவும் தெரிவித்தான்.

அனைவரும் அவனை அழுமூஞ்சி என்றழைத்து கேலி செய்யத் தொடங்கினார்கள். அது அவனுக்கு மிகவும் எரிச்சலை உண்டாக்கியது. எனவே அந்த குழுவின் ரகசியத்தை அனைவருக்கும் தெரிவித்துவிடப் போவதாக பயமுறுத்தினான்.  டாம் அவனை அமைதியாக இருக்கும் படி கூறி 5  சென்ட் நாணயங்கள் அவனுக்குக் கொடுத்தான். அடுத்த வாரம் திரும்பவும் சந்திக்கும் வரை அனைவரும் தற்போது தங்கள் வீடுகளுக்குச் செல்லலாம் எனவும் அடுத்த வாரத்தில் சிலரைக் கொள்ளையடிக்கலாம்  மற்றும் கொல்லலாம் என்றும் கூறினான்.

ஞாயிற்றுக்கிழமை மட்டுமே தன்னால் வர இயலும் என்பதால் அடுத்த ஞாயிறு சந்திக்கலாம் என பென் ரோஜர்ஸ் கூறினான். ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று கொள்ளையடிப்பதும், கொல்வதும் மிகவும் பொல்லாத விஷயம் என மற்ற சிறுவர்கள் கருதினர். அவ்வளவுதான், அந்த விஷயம் அத்தோடு நின்றுவிட்டது   மீண்டும் ஒரு நாள் வெகு விரைவில்  கூடி கொள்ளை, கொலை செய்வதற்கான நாள் குறிக்கலாம் என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அதன் பின் டாம் சாயரை குழுவின்  தலைமைக்  கேப்டன் ஆகவும், ஜோ ஹார்ப்பரை உதவிக் கேப்டன் எனவும் நாங்கள் தேர்ந்தெடுத்த பின் அனைவரும் கலைந்து அவரவர்கள் வீடு திரும்பினோம்.

நான் மீண்டும் அந்த கொட்டகையின் வழியாக ஏறி ஜன்னலில் உள்ளே புகுந்து செல்லும் சமயம் அதிகாலை தொடங்கும் வேளை  ஆகிவிட்டது.  நான் அணிந்திருந்த புதுத்துணிகள் கசங்கியும், அழுக்குப்படிந்தும் இருந்தன. நானும் மிகவும் களைப்புடன் இருந்தேன்.

[தொடரும்]


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.