- மார்க் ட்வைன் -என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -


அத்தியாயம் நான்கு

முனைவர் ஆர்.தாரணிநல்லது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள்  நிறைவுற்ற  பின்  தற்போது குளிர்காலத்தின் தொடக்கம். பெரும்பாலான சமயங்களில் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் நான் சில வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக் கூட்டி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். ஆறும் ஏழும் முப்பத்தாறு என்ற அளவில் பெருக்கல் வாய்ப்பாடும் என்னால் சொல்ல முடிந்தது. ஆனால் என் வாழ்நாள்  முழுதும் வாழ்ந்தாலும்,  என்னால் அதற்கு மேல் போக முடியும் என்று தோணவில்லை. கணிதம் அந்த அளவுக்கு பயனுள்ளது என்று நான் கருதவில்லை.
முதலில் நான் பள்ளியை வெறுத்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதைப் பொறுத்துக்கொள்ள முடிந்தது. எவ்வளவு அதிகமாக பள்ளிக்குச் செல்கிறேனோ, அவ்வளவு சுகமாக அது இருந்தது. அலுப்புத்தட்டும் வேளைகளில் ஹாக்கி

விளையாடினேன். அடுத்தநாள் விரைவாகச்செல்லவேண்டும் என்பது எனக்கு உற்சாகமூட்டுவதாகவும் நல்ல விஷயமாகவும் இருந்தது. ஒரு வழியாக அந்த விதவை எதிர்பார்த்த வழியில் நான் நடக்க ஆரம்பித்ததால் அவர்கள் அதிகம் என்னைப் பற்றிக் கவலைகொள்வதில்லை. வீட்டில் வாழ்ந்துகொண்டு, படுக்கையில் தூங்கிக்கொண்டு என்றிருக்கும் வாழ்க்கை ஒரு சிறையடைப்பு  போன்றது.  ஆனால்  அவ்வப்போது ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு ரகசியமாக நழுவி அருகில்  இருக்கும்  வனத்தினுள் சென்று படுத்துக்கொள்வேன். அதுவும் குளிர்காலம் வரும்வரைதான். நான் வாழ்ந்த எனது பழைய வாழ்க்கைதான் மிகவும் சிறந்தது எனினும் எனது புதிய வாழ்க்கையிலும் சிறிது விருப்பம் காட்ட ஆரம்பித்தேன். அந்த விதவையும் நானும் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம். எனது நல்ல நடவடிக்கைகளால் தான் மிகவும் திருப்தி அடைந்திருப்பதாகவும், என்னால் இனி அவளுக்கு எந்த அவமானமும் உண்டாகாது எனவும் அந்த விதவை கூறினாள். ஒரு நாள் காலை சிற்றுண்டி உண்ணும் சமயம், உப்புத் தூவ வைத்திருக்கும் டப்பாவை எனது கையின் உதவியால் திறக்க முயற்சித்தேன். அதில் உள்ளதை எனது தோளின் மேற்புறமாக வீசினால் எனது துரதிஷ்டத்தை விலக்க முடியும் என்ற ஐதீகம் மனதில் கொண்டு எவ்வளவு விரைவாக அதைத்திறக்க முடியுமோ அவ்வளவு விரைவாக  அதைத்திறந்து  கொண்டிருந்தேன். ஆனால் மிஸ். வாட்ஸன் அதைச் செய்யவிடாமல் எனது கரத்தை இடைமறித்தாள்.

அவள் கூறினாள், "கையை அதிலிருந்து எடு. ஹக்கில்பெர்ரி! எப்போதும் இப்படி ஒரு குழப்படி ஏன் செய்கிறாய்?" அந்த விதவை என்னைச் சமாதானம் செய்ய சில நல்ல  வார்த்தைகளைக் கூறினாள். ஆனால் என் வாழ்வில் எனக்கு நடக்கவிருக்கும் துரதிஷ்டத்தை விலக்க அவை போதாது என்று எனக்கு நன்கு தெரிந்திருந்தது. காலைச்சிற்றுண்டிக்குப் பிறகு கொஞ்சம் நடுக்கத்துடன் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். எப்போது எனது துரதிஷ்டம் என்னைத்தாக்குமோ, எப்போது என்ன கொண்டு வருமோ என்ற பதட்டத்துடனே இருந்தேன். துரதிஷ்டத்தை விலக்கி வைக்கப் பல வழிகள் இருந்தன. ஆனால் இது அதில் ஒன்று அல்ல. எனவே எந்த உபாயத்தையும் மேற்கொள்ளாமல் மனத்தளர்ச்சியுடன், ஜாக்கிரதையாக  என்னுடைய வழியைத் தொடர்ந்தேன்.

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4

வீட்டின் முன் புறம் உள்ள தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள கதவின் மீது ஏறி அதன் அருகில் இருந்த உயர்ந்த மதிற்சுவற்றின் மீது ஏறினேன். அங்கிருந்து பார்க்கையில் கீழே தரையின் மீது ஒரு இன்ச் அளவு பனி கொட்டிக்கிடப்பதையும் அதன் மேல் சில மனிதர்களின் கால்சுவடுகளையும் காண முடிந்தது. பக்கத்து குவாரியில் இருந்து வந்தவர்கள் வாயில் கதவின் முன் கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு பின் தோட்டத்தின் மதில்சுவர் ஓரம் சென்றிருக்கவேண்டும். உள்ளே வராமல் அங்கே சும்மா நின்று பார்த்துவிட்டு போனது எனக்கு வேடிக்கையாகத் தோன்றியது. அது உண்மையில் எனக்கு வித்தியாசமாகப் பட்டது. அது எதற்கு என்றும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மதிலைச் சுற்றி சென்ற கால்தடங்களைப் பின்பற்ற முதலில் யோசித்தேன். ஆனால் அப்படியே குனிந்து இன்னும் கொஞ்சம் பக்கம் சென்று அவைகளை ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தேன். முதலில் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதற்குப்பின்தான் சுத்தியலால் அடித்துவைக்கப்பட்ட இடது குதிகால் பூட்ஸ்ஸில்  சாத்தானை விரட்டுவதற்காக ஆணி அடிக்கப்பட்ட சிலுவைக்குறியை நான் அங்கு கண்டேன்.

வெகு வேகமாக எழுந்து தாவிக்குதித்து மலையின் கீழ் உள்ள நீதிபதி தாட்சரின் வீட்டை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அடைந்தேன். எனது தோளின் மேலாக யாரும் என்னைத் தொடர்ந்து வருகிறார்களா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். அப்படி யாரும் வருவதாகத் தெரியவில்லை.

நான் அங்கே சேர்ந்ததும் நீதிபதி தாட்சர் கேட்டார், "ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி வருகிறாய் தம்பி?  நீ கொடுத்து வைத்திருந்த பணத்திற்கு வட்டி வாங்கத்தானே வந்துள்ளாய்?"

"இல்லை சார்." நான் கூறினேன் "ஏதேனும் வட்டி சேர்ந்துள்ளதா?"

"ஆம். அரைவருடத்துக்கான தொகை நேற்று இரவுதான் வந்துசேர்ந்தது. நூற்றி ஐம்பது டாலருக்குப் பக்கமாக வந்துள்ளது. அது உண்மையில் மிகப்பெரிய சொத்து. என்னிடம் நீ கொடுத்து வைத்துள்ள ஆறாயிரம் டாலருடன் சேர்ந்து இதையும் முதலீடு செய்துகொள்ளக் கூறினால் நல்லது. அதனால் அதை நீ வீணாக செலவழிக்க இயலாது."

"இல்லை சார்." நான் கூறினேன். "நான் அதைச் செலவழிக்க விரும்பவில்லை. எனக்கு அது எதுவுமே தேவையில்லை, அந்த ஆறாயிரமும் சரி, அதன் வட்டியும் சரி. அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதை அனைத்தையும் உங்களுக்கே நான் கொடுக்கிறேன்."

அவர் மிகுந்த வியப்படைந்தார். ஆனாலும் நான் சொன்னது அவருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை.

அவர் சொன்னார் " ஏன்? என்ன கூற வருகிறாய், தம்பி?"

"தயை கூர்ந்து என்னை எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள்." நான் கூறினேன் "நீங்கள் அதை எடுத்துக் கொள்வீர்கள், இல்லையா?"

அவர் கூறினார், "ஓ. நான் மிகவும் குழப்பமடைந்து விட்டேன். ஏதாவது தவறாக நடந்து விட்டதா?"

"தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் சார்." நான் கூறினேன் " என்னை எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள். ஏனெனில் நான்

உங்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை."

ஒரு நிமிடம் அவர் யோசித்தார். பின் கூறினார் "ஆஹா! எனக்குப் புரிந்து விட்டது என நான் நினைக்கிறேன், நீ எனது சொத்துக்களை எனக்கு விற்க விரும்புகிறாய். சும்மா கொடுப்பது அல்ல. அதுதானே நீ கூறியது?"

பிறகு அவர் ஒரு தாளில் ஏதோ எழுதினார். ஒரு நிமிடம் அதை உற்று நோக்கினார், பின் கூறினார் "இதோ இங்கே பார்! ஒரு விளக்கஉரைக்காக -அதாவது நான் உன் சொத்தை எனக்கு வாங்கிக்கொண்டு அதற்கான பணம் உனக்குக்  கொடுத்துவிட்டேன் என்று உள்ளது. இதோ! உனக்கு ஒரு டாலர். வாங்கிக்கொண்டு இப்போது கையெழுத்திடு."

எனவே நான் அதில் கையெழுத்திட்டுவிட்டு அங்கிருந்து அகன்றேன்.

மிஸ். வாட்ஸனின் கறுப்பின வேலையாள் ஜிம் மனிதனின் கை முஷ்டி அளவிலான ஒரு பெரிய முடிப்பந்து உருண்டை வைத்திருப்பான். எருதின் வயிற்றின் நான்காம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாகும். எல்லாம் தெரிந்த ஒரு ஆவி அந்தப்பந்தினுள் இருப்பதாக அவன் கூறி அதை மாந்த்ரீகம் செய்யப்பயன்படுத்துவான். எனவே அன்றிரவு அவனிடம் சென்று எனது தந்தையின் கால் சுவடுகளை பனியில் பார்த்ததால் அவர்  திரும்பி வந்துவிட்டதாக அவனிடம் தெரிவித்தேன். அவர்  என்ன செய்யப்போகிறார், அங்கேயே தங்கப் போகிறாரா என்பது பற்றியெல்லாம் நான் தெரிந்து கொள்ள விரும்பினேன். ஜிம் அந்த முடிப்பந்தைக் கையில் எடுத்து அதனிடம் ஏதோ முணுமுணுத்தான். பிறகு அதை மேலே தூக்கிப்பிடித்து பின் தரையின் மீது விட்டான். அது ஒரு பாறையைப் போல கீழே விழுந்து ஒரு இன்ச் தூரம் நகர்ந்தது. ஜிம் மறுபடியும் அதையே முயற்சித்தான். திரும்பவும் மூன்றாம் முறையும் அப்படியே. ஒவ்வொரு முறையும் அது முதல் மாதிரியே வீழ்ந்து நகர்ந்தது. ஜிம் முட்டுக்காலில் அமர்ந்து அதன் அருகே  காது வைத்து எதையோ கேட்டான். ஆனால் அது எந்தப் பலனும் அளிக்கவில்லை. அது பேசாது என்று அவன் சொன்னான். சில சமயங்களில் பணம் தராவிட்டால் அது பேசாது என்று அவன் விளக்கினான். என்னிடம் ஒரு பழையகால மிருதுவான காலணா நாணயம் உள்ளது  எனவும்  அதில் உள்ள சாயம் கொஞ்சமாக வெளுத்திருப்பதால் அது மதிப்பில்லாது உள்ளது என்றும் கூறினேன். மேலும் வெள்ளிக்கு மேல் பித்தளை கொஞ்சமாகத் தெரிவதால் மட்டும் அல்லாது, அதன் மேற்பரப்பு மிகவும் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருப்பதால் அதைப்பயன்படுத்தும்போது பலர் பொய் நாணயம் என்று எண்ணிவிடக் கூடும் என்று கூறினேன் (நீதிபதி கொடுத்த ஒரு டாலர் பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை என்று உறுதி செய்து கொண்டேன்). அந்தக் காலணா நாணயம் கண்டிப்பாக பணத்திற்கு சரியான மாற்று இல்லை எனினும், அந்த முடிப்பந்துக்கு அந்த அளவு  வித்தியாசம் தெரியாத காரணத்தால்  அதை ஒத்துக்கொள்ளும் என்றும் நான் கூறினேன். ஜிம் அதை முகர்ந்து, கடித்து, தேய்த்துப் பார்த்துவிட்டு அவ்வாறு செய்வதால் அந்த முடிப்பந்து அதை உண்மை என்று  ஒத்துக்கொள்ளும் என்று  கூறினான்.  பச்சை அயர்லாந்து உருளைக்கிழங்கினுள் அந்த நாணயத்தை ஒட்டி  இரவு முழுதும் வைத்திருந்தால், அடுத்த நாள் காலை அந்த நாணயத்தின் பித்தளை வெளியே எட்டிப்பார்க்காமல், வழுவழுப்பும் மறைந்து விடும் என்று ஜிம் கூறினான். அதை வைத்து அந்த முடிப்பந்து என்ன, அந்த ஊரையே ஏமாத்தலாம் என்றும் கூறினான். எனக்கும் உருளைக்கிழங்கு வைத்து சரி செய்யும் முறை தெரியும். எப்படியோ அதை நான் முதலில் மறந்து விட்டேன்.

ஜிம் அந்த பொய் நாணயத்தை முடிப்பந்தின் கீழ் வைத்து கீழே  குனிந்து அது சொல்வதைக் கேட்கலானான்.  இந்தத்தடவை அந்த முடிப்பந்து சரியாக உள்ளது என்றும் எனக்குத் தேவையானால் என்னுடைய முழு அதிர்ஷ்டம் பற்றியும் அது விளக்கும் என்று கூறினான். அதைச்  சொல்லச் சொல்லும்படி ஜிம்மிடம் நான் கூறினேன். எனவே அந்த முடிப்பந்து ஜிம்மிடம் கூற ஜிம் என்னிடம் கூறினான்.

"உன்னுடைய வயதான அப்பாவுக்கு அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது. சில சமயம் அவர் வெகு தூரம் செல்ல வேண்டும் என விரும்புகிறார். சில சமயம் தனது முடிவை மாற்றிக் கொண்டு இங்கேயே தங்கிவிட நினைக்கிறார். நீ செய்ய வேண்டிய சிறந்த விஷயம் யாதெனில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு அந்த வயதான மனிதர் செய்ய விரும்புவதைச் செய்ய அனுமதிப்பதுதான். அவரை இரண்டு தேவதைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்று வெண்ணிறத்துடன் பளபளப்பாக உள்ளது, மற்றொன்று கருப்பு. அந்த வெண்ணிற தேவதை சில சமயங்களில் நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறது. ஆனால் அந்த சமயத்தில் அந்த கருப்பு உள்ளே புகுந்து அதைக் கெடுத்து விடுகிறது. இறுதியில் அவற்றுள் எது வெற்றியடையும் என்று யாருமே கூற முடியாது. ஆனால், நீ நன்றாகத்தான் இருப்பாய். உன் வாழ்வில் கணிசமான அளவு துக்கங்களும், கணிசமான அளவு சந்தோஷங்களும் வரத்தான் போகின்றன. சில சமயம் நீ காயப்படுவாய். சில சமயம் உனது உடல்நிலை மோசமாகும். ஆனால் அவ்வாறு நடக்கும் ஒவ்வொரு முறையும் நீ உடனடியாகத்  தேறி வருவாய். உனது வாழ்வில் இரண்டு பெண்கள் உள்ளார்கள். ஒன்று ஒளி. இன்னொன்று இருட்டு. ஒன்று பணக்காரி. இன்னொன்று ஏழை. முதலில் நீ ஏழையாக இருப்பவளைத்  திருமணம் செய்வாய். பின்னர் பணக்காரியை மணமுடிப்பாய். நீர் நிலைகளை விட்டு அதிகம் விலகியே இரு. உனது விதிப்பலனின் காரணமாக ஒரு வேளை நீ தூக்குமேடை வரைகூட செல்லக் கூடும்"

அன்றிரவு  மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு  படிக்கட்டுகளில்  ஏறி நான் என் அறையை அடைந்தபோது, அங்கே ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் கண்டேன் - எனது அப்பா!- [தொடரும்]


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.