- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் நாற்பத்தி இரண்டு

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 42காலை உணவுக்கு முன்னதாக, அந்த முதியவர் திரும்பவும் ஊருக்குள் சென்று பார்த்தார். ஆனால், டாம் இருக்கும் இடம் பற்றி எந்தத் தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரும், சேல்லி சித்தியும் மேசையினருகே சோகமாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் உணவருந்தவில்லை. அவர்கள் முன் வைத்திருந்த காப்பியும் அருந்தப்படாமல் சில்லிட்டுப் போயிருந்தது. இருவரும் ஒன்றுமே பேசாது அமைதியாக இருந்தார்கள். இருவர் முகத்திலும் சோகம் ஒரு மெல்லிய திரை போலப் படிந்திருந்தது. சீக்கிரமே அந்த முதியவர் கேட்டார்: "நான் உன்னிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தேனா?"

"என்ன கடிதம்?"

"நேற்று அஞ்சலகத்திலிருந்து நான் பெற்று வந்த கடிதம்."

"இல்லை. எந்தக் கடிதமும் நீங்கள் எனக்குக் கொடுக்கவில்லை."

"நல்லது. ஒருவேளை நான் மறந்து போயிருக்கலாம்."

தனது சட்டைப்பைக்குள் கை விட்டுத் துழாவி எதையோ தேடினார். அது கிடைக்காது போகவே, உள்ளே எங்கோ அதை வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். பின்னர், அதை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார்.

"ஏன், இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து இருந்து வந்துள்ளது. இது சகோதரியிடம் இருந்து வந்திருக்கிறது." என்று அவள் கூறினாள்.

 

இன்னொரு நடைப்பயிற்சி செய்தால் எனக்கு நன்றாக இருக்கும் என்று அந்தக்கணம் தோன்றியது. ஆனால், அங்கிருந்து என்னால் நகரமுடியவில்லை. அந்தக் கடிதத்தை அவள் பிரித்துப் படிக்க எத்தனிக்கையில், வாயிலில் எதையோ பார்த்த அவள் கடிதத்தை அப்படியே கீழே வீசிவிட்டு, அதிர்ச்சியடைந்தவளாக வாயிலை நோக்கி விரைந்து ஓடினாள். கடிதத்தை நான் எடுத்துக் கொண்டேன். அங்கே வாயிலில், ஒரு படுக்கையில் படுத்த நிலையில் டாம் சுமந்து வரப்பட்டான். கூடவே மருத்துவர் மற்றும் ஜிம் (இன்னமும் அந்த காலிகோ உடையிலேயே இருந்தான்) இருவரும் வந்தார்கள். ஜிம்மின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அவர்களின் பின்னால் பெருத்த மக்கள் கூட்டம் அலைமோதியது. என் கையிலிருந்த கடிதத்தை வசதியான ஒரு இடத்தில் மறைத்துக் கொண்டு, வாயிலை நோக்கி விரைந்தேன். கதறி அழுதுகொண்டிருந்த சேல்லி சித்தி, ஓடிச் சென்று டாமின் மீது விழுந்து புரண்டு கொண்டே கூவினாள்:

"ஓ! அவன் இறந்து விட்டான், அவன் இறந்தே விட்டான். எனக்குத் தெரியும் அவன் இப்போது இறந்து விட்டான் என்று."

மெதுவாக தன் தலையை அசைத்துத் திருப்பிய டாம் தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தான். அந்தச் செயல் டாம் தனது சரியான சுய புத்தியில் இல்லை எனபதை எனக்கு உணர்த்தியது. பின்னர், அவள் தனது கரங்களைக் வீசியபடியே இவ்வாறு கூறினாள்:

"இறைவனுக்கு நன்றி! அவன் உயிரோடிருக்கிறான். அதுதான் எனக்குத் தேவை."

டாமுக்கு முத்தமழை பொழிந்த அவள், உடனடியாக வீட்டினுள்ளே ஓடிச் சென்று அவனுக்காக ஒரு படுக்கையைத் தயார் செய்ய ஆரம்பித்தாள். வீட்டினுள் செல்லும் போது, அவள் ஒவ்வொரு அடி தான் எடுத்து வைக்கும்போதும், அங்குள்ள நீக்ரோக்களை நோக்கி அவளின் நாக்கு அசையும் வேகத்திற்கு ஈடாக ஏதேனும் ஒரு ஆணையை பிறப்பித்தவாறு நகர்ந்து சென்றாள்.

ஜிம்மை அந்த ஆட்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அந்த மனிதர்களைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். முதிய மருத்துவரும், சைலஸ் சித்தப்பாவும் டாமைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்றார்கள். அந்த மனிதர்கள் அனைவரும் மிகுந்த உக்கிரத்துடன் இருந்தார்கள். அவர்களில் சிலர் ஜிம்மைத் தூக்கிலிட வேண்டுமென்று கூச்சலிட்டார்கள். இந்தக் குடும்பத்தைப் பயமுறுத்தியது போல அல்லது தப்பி ஓட அவன் முயற்சித்தது போல மற்ற நீக்ரோக்களும் செய்யாமலிருக்க இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று கருதினார்கள். மற்ற சில மனிதர்கள் அவ்வாறு செய்வது கூடாது என்று யோசனை கூறினார்கள், ஏனெனில், அவர்களுடைய நீக்ரோ அல்ல அவன் என்பதாலும், ஒருவேளை, ஜிம்மின் முதலாளி வந்து ஜிம்மை தூக்கிலிட்ட காரணத்திற்காக அவர்களை அவனின் இழப்புக்காகக் பணம் செலுத்த உறுதியாகச் சொல்லக் கூடும் என்று கூறினார்கள். இந்த விஷயம் மற்றவர்களைச் சிறிது சாந்தப் படுத்தியது. ஒரு நீக்ரோவைத் தூக்கிலிடும் அளவு ஆக்ரோஷமாக இருந்த மனிதர்கள், அவனை ஏதேனும் செய்தால் அதற்காக அவர்கள் பணம் செலுத்த நேரிடும் என்றதும் ஆக்ரோஷத்தைத் தொலைத்து விட்டு அமைதியானார்கள்.

இருந்தபோதும், அவர்கள் ஜிம்மை அதிக அளவில் கரித்துக் கொட்டினார்கள். ஒருவர் மாற்றி ஒருவராக ஜிம்மின் தலையைப் பதம் பார்த்தார்கள். எல்லாக் கொடுமையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த ஜிம், என்னை அவனுக்கு முதலிலேயே தெரியும் என்பது போல காட்டிக் கொள்ளமுற்படவில்லை. திரும்பவும் அவனின் அறைக்கே அழைத்துச் சென்ற அந்த மனிதர்கள், அவனுடைய ஆடையை அவனுக்கு அணிவித்து, மீண்டும் சங்கிலி கொண்டு பிணைத்தார்கள். இந்த முறை அவனின் சங்கிலியின் இன்னொரு முனையை கட்டிலின் காலுடன் அல்லாது, அந்த அறையின் பிரதானமான மிகப் பெரிய மரத்துண்டின் கீழ்ப்பகுதியில் இணைத்தார்கள். அவனின் இரு கரங்களையும், கால்களையும் சங்கிலி கொண்டு அவர்கள் இறுகப் பிணைத்தார்கள்.அவனுடைய முதலாளி வந்து அவனைக் கூட்டிக் கொண்டு போகும் வரை, சிறிது ரொட்டி மற்றும் நீர் தவிர வேறு எதுவும் அவன் உட்கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டார்கள்.

அப்படி அவனின் முதலாளி விரைவில் வரவில்லையென்றால், அவனை ஏலத்தில் விற்றுவிடுவது என்றும் முடிவு கட்டினார்கள். அந்த அறையின் உள்ளே இருந்த துவாரத்தை முற்றிலுமாக அடைத்தார்கள். அவர்களில் ஒரு சில விவசாயிகள் ஒவ்வொரு நாள் இரவும் துப்பாக்கி ஏந்தியவாறு, அந்த அறைக்கு எப்போதுமே காவலிருப்பது என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பகல் பொழுதில், அச்சுறுத்தும் வேட்டை நாய் ஒன்றை அங்கே கட்டி வைப்பது என்றும் முடிவு செய்தார்கள். இப்படி தங்களின் ஆக்ரோஷத்தை பல வழிகளில் கொட்டித் தீர்த்துவிட்டு, மேலும் படு கேவலமாக ஜிம்மை சபித்து விட்டு அவர்கள் அந்த அந்த இடத்தை விட்டு நகரும் வேளையில், முதிய மருத்துவர் அங்கே வந்து சேர்ந்தார். அங்குள்ள அனைத்து விஷயங்களையும் பார்வையிட்ட அவர், கீழ்கண்டவாறு கூற ஆரம்பித்தார்:

"எப்போதும் இருப்பது போல அவனிடம் இத்தனை முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அவன் ஒரு மோசமான நீக்ரோ அல்ல. அடிபட்ட அந்தச் சிறுவனை நான் சோதிக்கும் வேளை, என் ஒருவனால் மட்டும் அந்தத் துப்பாக்கிக் குண்டை அவன் காலிலிருந்து எடுத்து விட முடியாது என்று கண்டு கொண்டேன். யாருடைய உதவியாவது எனக்கு மிகவும் தேவைப்பட்டது. ஆனால், அந்தச் சிறுவன் இருந்த நிலையோ மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவனை அப்படியே தனித்து விட்டுச் சென்று யாரையேனும் உதவிக்குக் கூட்டி வரவும் என்னால் இயலவில்லை. அவன் சிறிது சிறிதாகத் தன் சுய நினைவை இழந்து மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருந்தான். அத்துடன், அவன் அருகில் செல்லவும் என்னை அவன் அனுமதிக்கவில்லை. அவனின் தோணியில் சுண்ணாம்புக் கட்டியால் நான் ஏதேனும் அடையாளக் குறி போட்டால், என்னைக் கொன்று விடுவதாக மிரட்டினான். இன்னும் என்னென்னவோ பித்துக்குளித்தனமான விஷயங்களையெல்லாம் உளறிக்கொண்டே இருந்தான்.”

"என்னாலும் அவனுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை இருப்பதை நான் உணர்ந்தேன். எனவே, எனக்கு யாரேனும் உதவி கிடைத்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என்று சத்தமாக நான் கூறிக் கொண்ட அடுத்த வினாடியில், எங்கிருந்தோ ஊர்ந்தவாறு இந்த நீக்ரோ பிரசன்னமாகி, எனக்கு உதவுவதாகக் கூறினான். அப்படியே செய்யவும் செய்தான். இருந்தாலும், அவன் ஒரு தப்பி ஓடி வந்த நீக்ரோ என்பதை நான் அப்போதே நன்கு கணித்துவிட்டேன். அதுவும் உண்மைதான் என்று பிறகு தெரிய வந்தது. அந்த முழு நாளும், பகலும், இரவும் என அங்கே நான் தங்க வேண்டியிருந்தது.”

“நான் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன் என்று நான் உங்களுக்கு இப்போது கூறுகிறேன். ஊரில் இருந்த எனது மருத்துவமனையில், சில நோயாளிகள் குளிர் சுரத்துடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் காட்சி என் மனதில் நின்று கொண்டேயிருந்தது. அவர்களைச் சென்று பார்த்து மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும் என்ற நினைவில் நான் இருந்தேன். இருந்தாலும், நான் அகன்று விட்டால் இந்த நீக்ரோ ஓடிச் சென்று விடுவான் என்ற அபாயத்தை நான் கையிலெடுக்க விரும்பவில்லை. பிறகு அந்தத் தவறு முழுக்க என்னைச் சார்ந்ததாகி விடும்.”

"ஆயினும், அந்த சமயத்தில் எனக்கு உதவ என்று எந்த ஒரு படகும் நான் இருக்கும் இடம் அருகே வரவேயில்லை. எனவே, இன்று அதிகாலை வரை நான் அங்கேயே அமர்ந்து கொள்ளவேண்டியதாகிற்று. ஆனால், வியாதிஸ்தர்களை அருமையாகக் கவனித்துக் கொள்ளும் இந்த நீக்ரோ போன்ற வேறு ஒருவனையோ அல்லது தன் வழியில் நேர்மையாக இருக்கும் வேற்று ஒரு நீக்ரோவையோ நான் இதுவரை கண்டதில்லை. அவன் மிகுந்த களைப்படைந்திருந்தான். அவனுடைய சுதந்திரத்தையே பணயம் வைத்து உதவி செய்ய முன் வந்திருக்கிறான். கடந்த சில காலமாக அவன் கடுமையாக உழைத்ததால் இவ்வாறு களைப்புற்றிருக்க வேண்டும் என நான் கருதினேன். அவனின் மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. உங்கள் அனைவருக்கும் நான் சொல்கிறேன், கனவான்களே! இப்படிப்பட்ட ஒரு நீக்ரோ ஆயிரம் டாலர் மதிப்பு மிக்கவன். அவனை நல்ல அன்பான முறையில் நாம் நடத்த வேண்டும்.”

"எனக்குத் தேவைப்பட்ட அனைத்தும் அங்கே கிடைத்தது. இந்த சிறுவனுக்கும் வீட்டில் கிடைக்கும் கவனிப்பு போலவே அங்கும் கிடைத்ததால், நன்கு தேறி வந்தான். அந்த இடம் மனிதர்கள் இல்லாது அமைதியாக இருந்ததால், வீட்டை விட மிகவும் சிறந்ததாகவே இருந்தது. ஆனால், அங்கே, ஒரு பக்கம் நோயாளிச் சிறுவன், இன்னொரு பக்கம் என் கையில் வைத்திருந்த நீக்ரோ என்று நான் இருந்தேன். அதிகாலை விடியும் வரை நான் பேசாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று. பின்னர், ஒரு ஓடத்தில் நிறைய மனிதர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் தோணியின் ஒரு பக்கத்தில் , இந்த நீக்ரோ ஒதுங்கி அமர்ந்து, முழங்கால் முட்டிகளுக்குள் தனது தலையைப் புதைத்தவாறு அசந்து உறங்கி கொண்டிருந்தது எனக்கு அதிர்ஷ்டமாகப் போயிற்று. ஓடத்திலுள்ள மனிதர்களிடம் நான் சைகை காட்டி எங்கள் தோணிக்கு வரச்செய்து, அவர்களும் குதித்து வந்து இந்த நீக்ரோவைப் பிடித்து விட்டார்கள்.”

“என்ன நடக்கிறது என்று அவன் உணரும் முன்னரே, அவனைப் பிடித்து கயிற்றால் நன்கு கட்டிவிட்டார்கள். எங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. சிறுவனும் நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்ததால், சத்தமிடாமல் துடுப்பை வலித்துக் கொண்டு, தோணியை ஓடத்துடன் சேர்த்துக் கட்டியவாறு, மெதுவாக இழுத்து வந்தோம். அத்தனை நேரமும், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாது, தப்பி ஓடுவதற்காக எத்தனித்து சண்டை எதுவும் போடாது, அவ்வளவு ஏன், ஒரு வார்த்தை கூடப் பேசாது இந்த நீக்ரோ எங்களுடன் வந்தான். அவன் ஒரு கெட்ட நீக்ரோ கிடையாது, கனவான்களே! அப்படித்தான் அவனைப் பற்றி நான் கருதிக் கொண்டிருக்கிறேன்."

"நல்லது! இவ்வாறு கேட்பது மிகவும் நன்றாக உள்ளது என்றுதான் நான் கூற வேண்டும்" யாரோ சொன்னார்கள்.

அதன்பின், மற்றவர்கள் அனைவரும் கொஞ்சம் நிதானமடைந்து விட்டார்கள் போல இருந்தது. இவ்வாறு, ஜிம்மைப் பற்றி நல்ல விஷயங்கள் கூறி அவனைக் காப்பாற்றிய அந்த முதிய மருத்துவருக்கு நான் மிகவும் நன்றிக் கடன்பட்டவனாக இருந்தேன். என்னுடைய உள்ளுணர்வு எனக்குக் கூறியது சரிதான் என்று நான் மகிழ்ச்சி கொண்டேன். அந்த மருத்துவரை முதன்முதலில் நான் பார்த்தபோதே நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மனிதர் என்று யூகித்தது தவறாகவில்லை. மிகவும் உன்னதமான வகையில் ஜிம் நடந்து கொண்டான் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டதுடன், பாராட்டும் பரிசும் பெறத் தகுதியானவன் அவன் என்றும் கூறினார்கள். எனவே, அங்கிருந்த மனிதர்கள் அனைவரும் இனி ஜிம்மை தாங்கள் சபிக்கவோ, கேவலமாகப் பேசவோ, மோசமாக நடத்தவோ போவதில்லை என்ற உறுதிமொழியை அந்த இடத்திலேயே எடுத்துக் கொண்டார்கள்.

பின்னர், அவனை அறையில் விட்டுவிட்டு அந்த அறையின் கதவைப் பூட்டினார்கள். அவனைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளில் ஒன்றிரண்டு நீக்குவது பற்றி யாரேனும் சொல்லுவார்கள் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், அந்தச் சங்கிலிகள் மிகுந்த கனத்துடன் அவனை அழுத்திக் கொண்டிருக்கும் என்பது எனக்கு வருத்தம். அத்துடன், அவனது சாப்பாட்டில் ரொட்டி, நீர் தவிர மாமிசம், காய்கறிகள் கூட சேர்த்துக் கொடும்படியும் யாரேனும் சொல்லி இருக்கலாம். ஆனால், அந்த மனிதர்கள் யாரும் அவ்வாறு செய்ய நினைத்ததாகக் கூடத் தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையில் என் மூக்கை நுழைப்பது வீண் வம்புக்கு வழி வகுக்கும் என்பதையும் நான் நன்கு அறிந்திருந்தேன்.

எனினும், சேல்லி சித்தி இந்நேரம் முழுக் கதையையும் மருத்துவர் மூலம் எப்படியாவது தெரிந்து கொண்டிருப்பாள் என்பதும் இனி என் தலையில் இடி போலத் தொல்லைகள் இறங்கக் கூடும் என்பதும் நன்கு புலப்பட்டது. அவளிடம் நான் முன்பு கூறிய கதையில், சிட்டும் நானும், தப்பி ஓடிய நீக்ரோவைத் துரத்திக் கொண்டு துடுப்பு வலித்துச் சென்றபோது எப்படி சிட் துப்பாக்கிக் குண்டுகளால் காயம் அடைந்தான் என்பது பற்றி நான் சொல்ல மறந்தது போல நடித்து அவளுக்கு நிறைய விளக்கம் கூறவேண்டியிருக்கும்.

ஆனால், இது பற்றி யோசிக்க எனக்கு அதிக நேரம் இருந்தது. இரவும், பகலும் என முழுநேரமும் சேல்லி சித்தி நோயாளியின் அறையிலேயே இருந்து கொண்டாள். அத்துடன், ஒவ்வொரு முறையும் சித்தப்பா சைலஸை நான் எதிர்கொள்ள நேரும் தருணம் ஏற்பட்டால், உடனடியாக நான் திரும்பி வேறு வழியில் செல்ல முற்பட்டேன்.

அடுத்த நாள் காலை, டாம் கொஞ்சம் தேறியுள்ளான் என்ற செய்தியை நான் கேள்வியுற்றேன். அத்தோடு, சேல்லி சித்தியும் சிறிது நேரம் உறங்கி ஓய்வெடுக்கச் செல்கிறாள் என்றும் கூறினார்கள். எனவே, யாருக்கும் தெரியாது, நோயாளி அறைக்குள் நுழைந்தேன். அவன் மட்டும் கண் விழித்திருந்தால், அனைவரும் நம்பக் கூடிய ஒரு கதையை இருவரும் இணைந்து தயாரிக்க வேண்டும் என்று நான் யோசனை செய்திருந்தேன். ஆனால், அவன் மிகவும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். முதலில் மருத்துவர் கொண்டு வந்த போது இருந்தது போல சிவந்து போன முகத்துடன் அல்லாது இப்போது நிறம் கொஞ்சம் வெளுத்துக் காணப்பட்டது. எனவே நான் அங்கேயே அமர்ந்து அவன் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தேன்.

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 42

அரை மணி நேரம் கழித்து சேல்லி சித்தி உள்ளே நுழைந்தாள். பொறியில் அகப்பட்டது போல நான் உணர்ந்தேன். என்னை எதுவும் பேச வேண்டாமென சைகை காட்டிவிட்டு எனதருகில் அவள் அமர்ந்தாள். டாம் முழுமையாக தேறி வந்துகொண்டிருப்பதற்கான அனைத்து அடையாளங்களும் தென்படுவதால், நாங்கள் அனைவரும் இனி சந்தோசமாக இருக்கலாம் என எனது காதில் கிசுகிசுக்க ஆரம்பித்தாள். நீண்ட நேரமாக அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் எனவும், முழு நேரமும் அவன் அமைதியுடனும், நல்ல உடல்நிலையுடனும் தென்படுவதாகவும். விழித்து எழும் சமயம் நூறு சதவிகிதம் நல்ல மனநிலையுடன், சுயபுத்தியுடன் எழுவான் என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் அவள் ரகசியம் கூறினாள்.

எனவே நாங்கள் அங்கேயே அமர்ந்து அவனைக் கவனித்துக் கொண்டேயிருந்தோம். விரைவிலேயே அவன் உடலில் ஒரு அசைவு தெரிந்தது. வெகு இயல்பாக தனது கண்களைத் திறந்த அவன் சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டான்:

"ஹேய்! நான் வீட்டில் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? தோணி எங்கே?"

"அது பரவாயில்லை" நான் பதில் கூறினேன்.

"அப்போ ஜிம்?"

"அதே மாதிரிதான்" நம்பிக்கை குறைந்த தொனியில் நான் கூறினேன். எனினும் அதைக் கவனிக்காத அவன் கூறினான்:

"நல்லது. சிறப்பு! இப்போது நாம் சரியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம். சித்தியிடம் எல்லாம் சொல்லிவிட்டாயா?"

ஆமாம் என்று சொல்ல நான் வாயெடுக்கும் முன் சேல்லி சித்தி இடைமறித்துக் கேட்டாள், "எதை பற்றி, சிட்?"

"ஏன், நாங்கள் செய்த எல்லாக் காரியங்களையும் பற்றித்தான், வேறு என்ன!"

"என்ன அது எல்லாக் காரியங்கள்?"

"எல்லாச் செயல்களும்தான். ஒரே ஒரு முக்கிய காரியம் நாங்கள் செய்து முடித்தோம். உங்களுக்குத் தெரியுமா, தப்பி ஓடி வந்த அந்த நீக்ரோவை நாங்கள், நானும், டாமும் சேர்ந்து என்ன ஜோராக விடுவித்தோம் என்பது."

"அடங்கொப்புரானே! அடக் கடவுளே! விடுவித்தீர்களா? இந்தக் குழந்தை எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது? ஓ, தங்கமே! ஓ! கண்மணியே! அவனின் புத்தி மீண்டும் பிசகி விட்டது போலும்."

"இல்லை. என்னுடைய புத்தி ஒன்றும் பிசகிப் போகவில்லை. நான் என்ன பேசுகிறேன் என்று எனக்கு நன்கு தெரிந்துதான் இருக்கிறது. சுதந்திரமனிதனாக அவனை விடுவிக்க நாங்கள்தான் உதவினோம். டாமும், நானும் தான்! மொத்த நாடகத்தையும் நாங்கள்தான் திட்டமிட்டோம். அதை மிக அழகாக நடத்தியும் முடித்தோம்." பேசிக் கொண்டே அவன் மெல்லப் புரண்டான். சித்தி அவனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆணி அடித்தாற்போல் அப்படியே அமர்ந்து அவனை வெறித்தபடி பார்த்துக் கொண்டு அவன் மேலே பேச அனுமதிக்கும் வகையில் அமைதியாய் இருந்தாள். இனி இடைமறித்துத் தடுப்பதில் எந்தப் பலனும் இல்லை என்று நான் கண்டு கொண்டேன்.

"சித்தி! இந்த வேலையை நாங்கள் செய்து முடிக்க பல காலம் எடுத்துக் கொண்டது. பல வாரங்கள், மணிக்கணக்கில் ஒவ்வொரு இரவும் நீங்கள் உறங்கும் தருணத்தில் நாங்கள் இதைச் செய்தோம். மெழுகுதிரிகளை, மேசை விரிப்பை, மேல் சட்டையை, உங்களின் ஆடையை, மேசைக் கரண்டிகளை, தட்டுக்களை, பேனாக்கத்திகளை, அப்புறம் அந்த பெரிய பாத்திரத்தை, அத்தோடு அந்த பெரிய பாறாங்கல்லை இன்னும் இது போல எத்தனையோ பொருட்களை நாங்கள் திருட நேர்ந்தது.

பாறையில், சட்டையில் பொறிக்கத் தேவையான அந்த ரம்பம் மற்றும் எழுதுகோல் தயாரிக்க, மற்றும் உள்ள வேலைகளை செய்து முடிக்க எத்தனை சிரமம் ஏற்பட்டது என்பது பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அதே போல் அது எத்தனை வேடிக்கையான விஷயம் என்பதும் உங்களுக்குப் புரியாது. அத்துடன் சவப்பெட்டி, மேலும் அது போன்ற படங்கள் நாங்கள் வரைய வேண்டி வந்தது, கொள்ளையர்களிடமிருந்து வந்த அநாமதேயக் கடிதங்கள் எழுதியது, இடிதாங்கிக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலமுறை ஏறி, இறங்கியது, அறைக்குள் மிகப் பெரிய அந்த துவாரத்தைத் தோண்டியது, நூல் ஏணி தயாரித்து அதை கேக்குள் வைத்து ஜிம்மிடம் சேரும்படி அனுப்பியது அத்துடன் மேசைக் கரண்டி போன்ற சமாச்சாரங்களை உங்களின் மேல் கோட்டுப் பையில் வைத்தது.........."

"அட ஆண்டவனே!"

".....அப்புறம் அந்த அறை முழுக்க ஜிம்முக்கு துணையிருக்க எலிகள், பாம்புகள் வேறு என்னென்ன உயிரினங்கள் உண்டோ அவை அனைத்தையும் கொண்டு நிரப்பினோம். தலையின் தொப்பிக்குக் கீழ் வெண்ணை வைத்துக் கொண்டிருந்த டாமை நீங்கள் இங்கே வெகு நேரம் பிடித்து வைத்துக் கொண்டதன் மூலம், எங்களின் மொத்தத் திட்டத்தையும் பாழ்படுத்தும் அளவு நெருங்கி விட்டீர்கள். அதனால்தான், நாங்கள் ஜிம்மைக் கூட்டிக் கொண்டு அந்த அறையை விட்டுக் கிளம்புவதற்குள் அந்த மனிதர்கள் அறைக்குள் நுழைந்து விட்டார்கள். எனவேதான் நாங்கள் அவசரப்பட்டு ஓட நேர்ந்தது. அவர்களும் எங்களின் சத்தத்தைக் கேட்டு எங்களைத் துரத்தி வந்து சுட்டதால்தான் என் காலில் குண்டு பாய்ந்தது. ஓடும் பாதையை விட்டு விலகிச் சிறிது நேரம் புதருக்குள் இருந்ததால் அவர்கள் எங்களைக் காண இயலாது எங்களை விட்டுத் தாண்டிச் சென்றுவிட்டார்கள். நாய்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சத்தம் எழும்பிய திசையைத் தொடர்ந்து நாங்களும் ஓடிச்சென்று எங்களின் சிறிய படகை அடைந்தோம். அதைச் செலுத்திச் சென்று, எங்களின் தோணியினுள் ஏறி பாதுகாப்பாக உணர்ந்தோம். ஜிம் இனி மேல் சுதந்திர மனிதன். அதற்கான அனைத்தையும் நாங்களாகவே கனஜோராக செய்து முடித்தோம். அது எத்துணை வேடிக்கை,, தெரியுமா, சித்தி!"

"நல்லது. என் வாழ்நாள் முழுதிலுமே இது போன்றவற்றை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை. அப்போ, இத்தனைக்கும் காரணம் நீங்கள், திருட்டு போக்கிரிகள் இருவர், இல்லையா? இத்தனை தொல்லைகள் கொடுத்தவர்கள் நீங்கள் இருவரும். எங்கள் அனைவரின் மனதிலும் கிலியை உண்டாக்கி மனம் குழம்பச் செய்து, மடிந்து விடுவோம் என்று என்னும் அளவுக்கு பயமுறுத்தியிருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் அடிவெளுத்து வாங்க வேண்டுமென்று இந்த நொடியில் நினைத்தாலும், அரை மனத்துடன்தான் இருக்கிறேன். நான் இங்கேயே இருக்கும் வேளையில் ஒவ்வொரு நாள் இரவும் நீங்கள் செய்த காரியத்தை நினைக்கையில் ...........நீ முதலில் உடல்நிலையை சரி செய்து கொண்டு வந்து சேர். மோசடிப் பேர்வழிகளே! அதன் பிறகு உங்களின் தோலை உரித்து தொங்கவிடப் போகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்."

ஆனாலும், டாம் மிகவும் பெருமையாகவும், சந்தோசமாகவும் இருந்தான். அவனின் உணர்ச்சிகளை அவனால் கட்டுப்படுத்தி வைக்கவே இயலவில்லை. ஓயாமல் பெருமை பேசிக் கொண்டே சென்றான். அவள் இடைமறித்து அவனைத் திட்டினாலும், ஒரு கட்டத்தில் இருவருமே சேர்ந்து பேச ஆரம்பித்து, பூனைகளின் சண்டை போலக் கத்திக் கொண்டார்கள். பின்னர் அவள் கூறினாள்:

"நல்லது. உனக்கு என்னென்ன வேடிக்கையோ அதை இத்துடன் இப்போதே முடித்து மூட்டை கட்டி வைத்துக் கொள். ஏனெனில், இன்னொரு முறை அவன் விஷயத்தில் நீ மூக்கை நுழைத்து குழப்புவதை நான் கண்டுபிடித்தால், நான் சும்மா இருக்க மாட்டேன். நன்றாகக் கேட்டுக் கொள்."

"அவன் விஷயத்தில் குழப்புவதா, யார் அவன்?" முகத்தில் இருந்த சிரிப்பை நிறுத்திவிட்டு, ஆச்சர்யமான முகபாவனையில் டாம் கேட்டான்.

"யாருடனா? ஏன், தப்பி ஓடி வந்த அந்த நீக்ரோதான். வேறு யார் என்று நீ நினைத்தாய்?"


தீவிரமான முகபாவனையுடன் என்னை நோக்கி டாம் கேட்டான்: "டாம்! அவன் விஷயத்தில் எல்லாம் சரியாக உள்ளது என்று நீதானே கூறினாய்? அவன் தப்பிச் செல்லவில்லையா?"

"அவனா?" சேல்லி சித்தி கேட்டாள். "அந்த தப்பி ஓடி வந்த நீக்ரோவா? கண்டிப்பாக அவன் தப்பி ஓடவில்லை. நல்ல நிலையில், பாதுகாப்பாக அவனைப் பிடித்து அவர்கள் இங்கே திரும்பக் கொண்டுவந்து விட்டார்கள். திரும்பவும் அவன் அந்த அறையில் சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளான். அதே நிலையில்தான் அவன் இருப்பான். அவனின் முதலாளி வந்து கூட்டிப் போகும் வரை அல்லது ஏலத்தில் அவனை விற்கும் வரை, சிறிது ரொட்டியும், நீரையும் தவிர அவனுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்கப் போவதில்லை."

கண்களில் கோபம் கொப்பளிக்க, படுக்கையை விட்டு தடாலென்று டாம் நேராக எழுந்து நின்றான். மீனின் செதில்கள் போல அவனின் மூக்குத் துவாரங்கள் விடைத்து நிற்க, என்னை நோக்கிக் கோபத்தில் கத்தினான்.

"அவனை அவ்வாறு அடைத்துக் கட்டி வைக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நாசமாய் போக! ஒரு நொடி கூட இனித் தாமதிக்காதே. இப்போதே, அவனை விடுதலை செய். அவன் ஒன்றும் அடிமை அல்ல. இந்த உலகத்தில் நடக்கும் எல்லா உயிரினங்கள் மாதிரியே அவனும் ஒரு சுதந்திர மனிதன்."

"இந்தக் குழந்தை எந்த அர்த்தத்தில் பேசுகிறான்?"

"நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று அர்த்தம், சேல்லி சித்தி! அப்படி யாரும் இப்போதே சென்று அவனை விடுவிக்கவில்லையென்றால், அந்த வேலையை நானே சென்று இப்போது செய்யப் போகிறேன். அவன் வாழ்ந்த வாழ்க்கை முழுதும் எனக்கு நன்கு தெரியும். அதே போலத்தான் இங்கு இருக்கும் டாமுக்கும் தெரியும். முதியவள் மிஸ். வாட்ஸன் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போய்விட்டாள். நதியின் கீழ் பகுதியை சேர்ந்த வணிகனுக்கு ஜிம்மை விற்க எண்ணிய தன்னுடைய மோசமான பேராசையை நினைத்து மிகவும் அவமானப்பட்டாள். அதை அவள் வெளிப்படையாகக் கூறவும் செய்தாள். எனவே, சாகும் முன் அவள் எழுதிய உயிலில் ஜிம்மை சுதந்திர மனிதனாக தன்னிடமிருந்து விடுவிப்பதாக எழுதியும் வைத்து விட்டாள்."

"ஆ! அப்போ எதுக்காக, முதலிலேயே சுதந்திரம் அடைந்த அவனை நீ விடுவிக்கத் திட்டம் போட்டாய்?"

"என்ன ஒரு கேள்வி இது? அம்மையே! ஏன், எனக்கு ஒரு சாகச நிகழ்வு வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆம்! அதுவும் கழுத்துக்குக் கத்தி வைக்கும் அளவு, ரத்தம் சொட்டும் அளவு வேண்டுமென்று ................... ஐயோ கடவுளே! அதோ போல்லி பெரியம்மா!"

நான் செத்தேன், அவ்வளவுதான்! கதவுக்கு உட்புறம் மிகவும் இனிமையான தோற்றத்தில், பழுத்த பழம் போல ஒரு நிறைவான தேவைதையாக அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள்.

சேல்லி சித்தி ஒரு துள்ளு துள்ளி ஒரே எட்டில் அவளை அடைந்து அவளின் தலையுடன் சேர்த்து கட்டியணைத்தாள். அழுதாள், அழுதாள். அப்படி அழுது கொண்டிருந்தாள். சூழ்நிலை மென்மேலும் தீவிரமடைவதைக் கண்ட நான் இனி அங்கே நான் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றால் கடும் ஆபத்தில் சிக்கி விடுவேன் என்று எண்ணி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி படுக்கையின் கீழ் சென்று மறைந்து கொண்டேன். படுக்கையின் கீழிருந்து கொஞ்சமாக எட்டிப் பார்த்து, என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் டாமுடைய போல்லி பெரியம்மா தன்னை விடுவித்துக் கொண்டு, நேராக நின்று டாமை அவளின் மூக்குக் கண்ணாடியின் மேல் வளைவு வழியாகக் கூர்ந்து நோக்கி, மேலிருந்து கீழாகச் கண்களாலேயே சோதனையிட்டாள். அதன் பின்னர் இவ்வாறு கூறினாள்:

"ஆம்! நான் மட்டும் நீயாக இருந்தால், தலையைத் தூரத் தள்ளி வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்., டாம்!"

"ஓ! அன்புக்குரியவளே!" சேல்லி சித்தி கூறினாள், "அந்த அளவுக்கு அவன் மாறிவிட்டானா? ஏன், அவன் டாம் இல்லை. அவன் சிட். டாம் இங்கே .......ஹேய் டாம் எங்கே? ஒரு நிமிடம் முன்பு இங்கே இருந்தானே."

"நீ தேடுவது ஹக் ஃபின்னை - அவனைத்தான் நீ குறிப்பிடுகிறாய்! டாம் மாதிரி ஒரு படவாப் பயலை என் வாழ்நாள் முழுக்க நான் வளர்ந்ததற்குப் பிரதியாக, இப்படி நான் அவனைக் காணும்போது அடையாளம் தெரியாமல் போவதற்குத்தான் என்று நான் கற்பனையில் கூட எண்ணவில்லை. ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது, கண்டிப்பாக இருக்கிறது அல்லவா! படுக்கையின் கீழ் இருந்து வெளியே வா, ஹக் ஃபின்."

அப்படியே செய்தேன். ஆயினும் எனக்கு என்ன ஆகும் என்பது பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.

இதுவரை நான் கண்ட சேல்லி சித்தி போல் அல்லாது, பேயறைந்தாற்போல் அதிர்ந்து குழப்பத்தின் எல்லையில் நின்றுகொண்டிருப்பதாக அவள் காணப்பட்டாள். நல்லது. சைலஸ் சித்தப்பா நிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். அவர் உள்ளே நுழைந்ததும், அவரிடம் எல்லாக் கதையையும் அவர்கள் கூறியதும், சித்தியை விட அதிகம் மலைப்புற்றவராகக் காணப்பட்டார். மது குடித்தவன் தடுமாறுவதைப் போல என்று கூட நீங்கள் கூறலாம். அந்த அளவு நிலை குலைந்த அவர் அன்று முழுதுமே அப்படிதான் தென்பட்டார். அதே நிலையிலேயே, அன்றிரவு அவர் பிரசங்கம் செய்ய நேர்ந்தபோது, உலகிலேயே மிக அதிக வயதான மனிதன் கூடப் புரிந்துகொள்ள இயலாத அளவு அவர் பேச்சு குழப்பமுற்று இருந்ததால், புது வகையான ஒரு பொதுக்கருத்து மதிப்பீடு மக்களிடையே அவருக்கு ஏற்படும் அளவு ஆயிற்று.

இறுதியாக, நான் யார் என்பதை டாமின் பெரியம்மா போல்லி அனைவருக்கும் எடுத்துரைத்தார். மிஸஸ் பிலிப்ஸ் என்னை டாம் சாயர் என்று தவறாக நினைத்துக் கொண்டபோது அதை நானும் மறுக்கவில்லை என்பதை நான் ஒத்துக் கொண்டேன். அவ்வாறு நான் சொல்லும் வேளையில் மிஸஸ் பிலிப்ஸ் என்றபோது, "ஓ! எப்போதும் போலவே என்னை நீ சேல்லி சித்தி என்றே அழைக்கலாம். அதற்கு நான் மிகவும் பழகிவிட்டேன். அதை நீ இப்போது நிறுத்த வேண்டிய அவசியம் கிடையாது." என்று கூறினாள். என்னை சேல்லி சித்தி தவறாகப் புரிந்து கொண்டு டாம் சாயர் என்று அழைத்தபோது, எனக்கும் வேறு வழி இல்லாது போய்விட்டது என்றேன். டாமும் அதைப் பொருட்படுத்த மாட்டான் என்பதும் அவனுக்கு சாகசம் செய்வதில்தான் குறி என்பதும் நன்கு அறிந்த விஷயங்களே. எனவே, எங்கள் மாறு வேஷம் மற்றும் தொடர்ந்து வந்த சாகசங்கள் அவனுக்கு மிகுந்த ஆனந்தத்தைக் கொடுத்தது என்றும் கூறினேன். அவன்தான் சிட் என்று எல்லோரையும் நம்ப வைத்ததால், எனக்கு எல்லா விஷயங்களும் சிக்கலில்லாமல் சுலபமாக நடக்க அவன் வழி வகுத்தான் என்று முழுக் கதையையும் உரைத்து முடித்தேன்.

டாம் கூறியது போலவே, மிஸ் வாட்ஸன் உயிலில் ஜிம்மை சுதந்திர மனிதாக விடுவித்த விஷயத்தை போல்லி பெரியம்மாவும் ஆமோதித்தாள். எனவே, ஏற்கனவே சுதந்திரம் பெற்ற ஒரு நீக்ரோவை சுதந்திரம் பெற வைக்க டாம் இந்தனை துன்பங்கள் அனுபவித்தான் என்று உறுதியாகிற்று. அவனுடைய தனித்தன்மையான வளர்ப்பின் காரணமாக எப்படி ஒரு நீக்ரோவை விடுவிக்க டாம் உதவி செய்வான் என்று அப்போதுதான் எனக்கும் புரிந்தது.

நல்லது. டாமும், சிட்டும் அங்கே நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று சேல்லி சித்தி போல்லி பெரியம்மாவுக்குக் கடிதம் அனுப்பியபோது குழம்பிப் போன பெரியம்மா தான் எடுத்த முடிவைக் கீழ்கண்டவாறு கூறினாள்:

"நல்லது. இதைக் கொஞ்சம் கவனித்துப் பார். வழிநடத்த யாருமே இல்லாது தனியாக அவனை அனுப்பியபோதே இதையெல்லாம் நான் எதிர்பார்த்திருக்கவேண்டும். இப்போது, ஒரு இத்தனை தூரம் - பதினாறாயிரம் மைல் நதியின் கீழ் புறமாக நான் பயணம் செய்து வந்து இந்தக் குழந்தை என்ன செய்கிறது என்று நான் பார்க்க வேண்டியுள்ளது. இந்த முறை, இங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரிந்து கொள்ள ஒரு பதில் கடிதம் கூட உன்னால் அனுப்பப்படவில்லை."

"ஆனால், உன்னிடம் இருந்து எனக்கு எந்தக் கடிதமும் கிடைக்கவே இல்லையே." சேல்லி சித்தி கூறினாள்.

"அதுதான் ஏன் என்று நான் குழப்பத்தில் கேட்கிறேன். சிட் அங்கே இருப்பதாகச் சொல்கிறாயே, அதற்கு என்ன அர்த்தம் என்று எழுதி உனக்கு இருமுறை கடிதம் அனுப்பினேன்."

"நல்லது. எனக்கு எந்தக் கடிதமும் வந்து சேரவில்லை, சகோ!"

மெதுவாக டாமின் பக்கம் திரும்பிய போல்லி பெரியம்மா கண்டிப்புடன் அழைத்தாள், "டாம்!"

"என்ன?" ஒன்றுமே தெரியாத அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு டாம் பதிலிறுத்தான்.

"இப்படி ஒரு "என்ன" என்னிடம் கேட்காதே, திருட்டுப்பயலே! அந்தக் கடிதங்களைக் கொடுத்து விடு."

"எந்தக் கடிதங்கள்?"

"அந்தக் கடிதங்கள். உறுதியாக, உன்னைப் பிடித்து பின்னர் என்ன ..............."

"அவைகள் அந்தப் பெட்டியில் உள்ளன. அஞ்சலகத்திலிருந்து வாங்கி வந்தபோது எப்படி இருந்ததோ, அப்படியேதான் இப்போதும் உள்ளது. அவற்றை நான் கண்களால் கூடப் பார்க்கவில்லை. கைகளால் தொடக் கூட இல்லை. ஆனாலும், அவை எனக்கு தொல்லை கொடுக்கும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் அவசர படாமல் இருந்திருந்தால், நான் என்ன நினைத்தேன் என்றால், நான் ............."

"நல்லது. தோலை உரித்து உப்புக் கண்டம் போடுவதுதான் உனக்குச் சரியாக இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை. உடனே புறப்பட்டு வருவதாக நான் இன்னொரு கடிதம் கூட உனக்கு எழுதியிருந்தேனே. அதையும் அவன் ..... "

"இல்லை. அது நேற்று வந்து சேர்ந்தது. அதை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் அந்தக் கடிதம் சரியாகத்தான் வந்து சேர்ந்தது. அது என்னிடம்தான் உள்ளது."

அவளிடம் அந்தக் கடிதம் இல்லை என்பதற்கு இரண்டு டாலர் பந்தயம் கட்டுவதற்குக் கூட நான் விரும்பினேன். ஆயினும், அப்படிச் செய்வதால், எனது குற்றத்தின் சுமை கூடுமே தவிர வேறு எந்தப் பலனும் கிடையாது என்று முடிவு கட்டினேன். எனவே, எதுவுமே நான் கூறாது அமைதியாயிருந்தேன்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

 

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


42