(3) ரொக்கி மலை

- நடேசன் -எங்களது பஸ்பயணம் பல முக்கிய மலைசார் நகரங்களில் தரித்து இறுதியில் Banff என்ற நகரில் (அட்பேட்டா மாநிலம்) முடியும். அங்கிருந்து இரண்டு பகல் ரொக்கி மலை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து மீண்டும் வான்கூவர் சேருவது எமது திட்டம். இந்த மேற்குப் பகுதி பற்றி கனடிய பயணத்தில் எழுதுவதற்கு அதிகமில்லை.

வட அமெரிக்காவில், அலாஸ்காவில் இருந்து தென் அமெரிக்காவின் அண்டாட்டிக் முனைவரை செல்லும் இந்த கண்டங்களின் மோதலால் வட அமெரிக்காவில் ரொக்கி மலையும் தென் அமெரிக்காவின் அன்டீஸ் மலைத்தொடரும் உருவாகியது. அந்த ரொக்கியின் அழகான பகுதிகள் மலைக்கு மேற்குப்புறத்தில் உள்ளது . அதுவே பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேட்டா என நாங்கள் பயணிக்கும் பரந்த அழகான புவியியல் பரப்பாகும்.

பிரேசர் நதியின் (Fraser River ) கிளை நதியான தொம்சன் நதியருகே அரை நாள் பயணமாக சென்றபோது, சுற்றியிருந்த மலைச்சிகரங்களில் கோடையிலும் பனி படர்ந்திருந்தது.

இந்த பஸ் பயணம் பல சிறிய நகரங்களுடாக ரொக்கி மலையின் மீது தொடர்ந்தது. கனடிய பாதைகள் வாகனங்கள் செல்வதற்கு சிறப்பானவை. சுற்றி ஓடும் நதிகள் மலைகளை நெக்லஸ் ஒட்டியாணம் போன்று நீலம் வெள்ளை பச்சை என பல்வேறு நிறங்களில் தழுவிச் செல்கின்றது.

மலையின் கற்பாறைகளில் கனிப்பொருட்கள் கரைந்து அந்த நதிநீருக்கு நகைகளில் பதித்த கற்களைப்போல் வண்ணமயமான காட்சியைக் கொடுக்கிறது . அந்த நீரில் சூரிய ஒளி படரும்போது எமது கண்களை அவை நம்மிடமிருந்து வெளியே எடுத்துவிடுகின்றன .

எமது பாதையில் பிரேசர் நதி பல இடங்களில் பல பெயர்களில் செல்கிறது. மலைச் சிகரங்களில் கோடையில் உருகாத பனியிருந்தாலும் இடையே பனிப்படலம் உருகி, அருவிகளாகிப் பின்னர் வாவிகளாகவும் சிறிய நீரோடைகள்போன்றும் கண்களைப் பறிக்கும் காட்சிகள் ஊசியிலைக்காடுகளை ஊடறுத்துக் கொண்டு சென்றன. அந்த நிலத்திற்குரிய கரடிகள், மான்கள், ஆடுகள் நாம் பயணித்த பாதைகளை பல இடங்களில் கடந்தன.

பஸ்ஸில் தொடங்கிய பயணம், அல்பேட்டா மாநிலத்தில் உள்ள பான்வ் (Banff) என்ற இடத்திலிருந்து ரொக்கி மவுண்டின் எக்ஸ்பிரஸ் என்ற உல்லாச ரயிலில் இரண்டு பகல்பொழுது தொடர்கிறது. குகைகள், ஆறுகள், பாலங்கள், வயல்கள் கடந்து வான்கூவர் வந்து சேர்ந்தது.

இந்த ரயில் பயணத்தில் ராஜ உபசாரம் நடக்கும். வைன் அருந்தியபடி சாப்பாட்டை இருந்த இடத்திலிருந்தே ஒருவரால் எவ்வளவு உண்ணமுடியுமோ அவ்வளவு தாராளமாகக் கிடைக்கும் . சிங்கப்பூர் விமானத்தில், விமானத்தில் பிசினஸ் வகுப்பில் நடக்கும் விருந்தோம்பலை விட பலமடங்கு அதிகம். கண்களை நிறைத்தபடி கண்ணாடி யன்னலுடாக மலைக்காட்சிகளை பார்த்து ரசித்தவாறு வயிறு நிரம்ப விழுங்க முடியும்.

இந்தப்பயணத்தில், காட்சிகளானவற்றில் எழுதுவதற்கு வார்த்தைகள் அதிகமில்லை எனக் குறிப்பிடும்படியான சம்பவங்களாக இருந்தவற்றையும் இங்கு தருகிறேன்.

ரொக்கி மவுண்டனில் ஒரு வாவியிலிருந்து எடுத்ததாக ஒரு பெண் காட்டிய இரண்டு கற்களைப் பார்த்தேன். அதில் கடல் வாழ் ஊரிகளின் எச்சங்கள் இருந்தன. தீவில் பிறந்து கடற்கரையில் வளர்ந்த என்னைத் தவிர மற்றவர்களுக்கு அது புரியவில்லை.

ரொக்கி மலைப்பகுதி கடலுக்குக் கீழ் இருந்ததற்கான ஆதாரமாக அவை காட்டப்பட்டது

இறுதியாக பஸ் நின்ற பான்வ் (Banff) நகரம், குளிர்காலத்தில் முக்கிய பனி விளையாட்டு பிரதேசமாகும். அங்குள்ள நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்றபோது, அங்கு ஒருவர் இந்தியர்போன்ற தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் பேசியபோது, பாகிஸ்தான் என்றார். உடனே மன்னிப்புக் கேட்டேன். பாகிஸ்தானியரை இந்தியர் என்பதோ இந்தியரை பாகிஸ்தானியர் என்பதோ அவமானப்படுத்தும் விடயமாகக் கருதப்படும் . இலங்கையரான நம்மை எல்லோரும் ‘இந்தியா?

‘ என்றால் நாம் புன்முறுவலோடு ‘இலங்கை’ என்போம். நமக்கு அப்படிச் சொன்னவர்கள் மன்னிப்பு கேட்கமாட்டார் . மேலும் இந்தியாவிலிருந்தே வந்தீர்கள் என்று வரலாற்றுப்பாடம் நடத்துவார்கள்.

நாம் அன்று சந்தித்த பாகிஸ்தானியருக்கு 75 வயதிருக்கும்.

“தனியாகவா வந்தீர்களா? “ எனக்கேட்டேன் .

“ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இங்கு வருவேன். வந்து ஒரு கிழமை இங்கு தங்கி குளித்துவிட்டுப்போவேன். ஒரு வருடத்திற்கு உடல் நன்றாக இருக்கும் “ என்றார் அவர்.

இந்துக்கல்லூரி விடுதியில் வேலணையிலிருந்து வந்த மணவன் ஒருவன் இருந்தான். ஒரு கிழமைக்கு குளிக்காதிருப்பான். அவனுக்குக் குளிக்காத மேதை எனப் பட்டமளித்தோம். அந்த பாகிஸ்தானியர் அங்கு வந்து தங்கியிருந்து ஒரு கிழமை கந்தகத் தண்ணீரில் குளிப்பவர் என்றபோது அந்தப் பழைய மாணவனை நினைத்தேன்

கோடை காலத்திலும் பலர் அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். இங்குள்ள தேசியப்பூங்காவில் பல கந்தக ஊற்றுக்கள் உள்ளன. இவற்றில் குளித்து உடல் நலம்பெறப் பலர் வருகிறார்கள்

மாலையில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதால் நானும் மனைவியும் பஸ் எடுத்து புறப்பட்டு கந்தக நீச்சல் குளம் போனோம் . கனடாவில் பஸ் - ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. இரண்டு டொலரில் அந்த நீச்சல் குளம் சென்றோம் . மிகவும் வசதியானது. பணம் கொடுத்துப் போனால் எவ்வளவு நேரமும் நிற்கலாம். கந்தகம் கலந்த சூடான நீர் குளமாகக் கட்டப்பட்டுள்ளது. பலர் மணிக்கணக்கில் அங்கிருந்தார்கள். நாங்களும் இரண்டு மணித்தியாலங்கள் அந்த தடாகத்திலிருந்து விட்டு மீண்டும் எங்கள் இடத்திற்கு புறப்படவும் மழை வந்தது. தொப்பலாக நனைந்தோம்.

என்னை கனடாவில் அதிசயிக்க வைத்தது கரடிகளே. கரடிகளின் உருவமல்ல அவை அந்த குளிரான பிரதேசத்திற்கு எப்படி பரிணாமமடைந்துள்ளன என்பதே அந்த அதிசயிப்பு . கருப்பு கரடிகள் அதிகமாக கனடாவிலும் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன. அதிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒன்றரை இலட்சம் கறுப்பு கரடிகள் உள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவை தனிநாடு கேட்கலாம்.

பாதையில் பயணித்தபோது எங்களால் நான்கு தடவைகள் அவற்றைக் காணமுடிந்தது. ஆனால் ஒரு தடவை மட்டுமே படமெடுக்கமுடிந்தது. நாய்களிலும் பார்க்க அதிக மோப்ப சக்தியுள்ளன . அத்துடன் வேகமாக ஓடக்கூடியவை. அதிகமாக உள்ளதால் கருப்பு கரடிக்கு குறிப்பிட்ட பிரதேசமில்லை. இலங்கையில் யானைகள் இந்தியாவில் புலிகள்போல் மனிதர்கள் மத்தியில் வந்து விடும் . சின்ன மிருகமில்லை 80-300 கிலோவிலிருக்கும். அதிக எதிரிகளில்லை 30 வருடங்கள் சீவிக்கும் . 80 வீதமான உணவு இலை கிழங்கு என்றாலும் செமன் மீனை விரும்பிச் சாப்பிடும்.

எனக்குப் புதுமையாக இருந்தது. கரடிகள் நவம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம்வரை பிறந்த குழந்தைபோல் தனது குகைகளுக்குள் தூங்கும். எவரும் தொந்தரவுசெய்யமுடியாத குகைகள் மலையுச்சியில் உள்ளது .

அப்படி தூங்குவதற்கு முன்பாக உணவைச் சாப்பிட்டு தனது உடலில் சேகரித்துக்கொள்ளும். அக்காலத்தில் மலம் சலம் விடுவதே இல்லை. இக்காலத்தைக் குகை வாழ்வுக் காலமென்கிறார்கள்- Denning time. அக்காலத்தில் 30 வீதம் உடல் நிறை குறையும். ஜூன் மாதத்தில் உடலுறவு கொண்டாலும் மேலும் சில மாதங்கள் அந்த முட்டை வளரத் தொடங்காது தாமதிக்கும். 220 நாட்கள் அதில் கருத்தங்கும். சின்னக் குட்டிகளை இரண்டு வருடங்கள் பாதுகாக்கும்.

பிறவுன் கரடியை எங்கும் பார்க்க முடியவில்லை. கடைசியாக வன்கூவரில் பார்த்தேன் . வழிதவறியவையாக சரணாலயத்தில் வளர்கின்றன. மிருகக் காட்சி சாலைகளில் மிருகங்களை பார்ப்பது எனக்கு எப்பொழுதும் கஷ்டமான விடயம்.

4) வன்கூவர் நகரம்

எனது வீட்டில் உள்ள லாபிரடோர் சின்டியும் கனேடியக் கரடிகளும், வன்கூவர் துறைமுகத்தைச் சுற்றியுள்ள கற்பாறைகளில் குடும்பங்களாக குளிர்காய்ந்துகொண்டிருந்த சீல்களும் உறவினர்களாக இருக்கவேண்டும் என்ற கணிப்பு, கனடாவிற்கு போன பின்பே மிருக வைத்தியனாகிய எனக்குத் தெரிந்தது .

வன்கூவரின் துறைமுகம் சார்ந்த பகுதிகளை ஒரு மோட்டார் வள்ளத்தில் சுற்றிப்பார்த்தபோது, அங்கே கடலுக்குள் பெரிய கப்பல்கள் தரித்து நின்றதை அவதானித்தேன். கரையோரப் பாறைகளில் அமைதியாக கூட்டம் கூட்டமாகச் சீல்கள் படுத்து உறங்கின . அந்தச் சீல்களைப் பார்த்தபோது அவற்றில் எனது வீட்டில் வளரும் லாபிரடோரின் முகச்சாடை கொஞ்சம் இருந்தது என்பது மட்டும் எனது கணிப்பு. எனது வழிகாட்டி அந்தச் சீல்கள் நாய்களின் குடும்பத்தைச் சேர்ந்தவையென்றான்.

கனிபோர்மியா (Caniformia) என்ற குடும்பத்திலிருந்து நாய்கள், கரடிகள், ஓநாய்கள் முதலான பிராணிகள் யாவும் 47 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டன. சின்னத்தம்பி வாத்தியாரின் பிள்ளைகள் கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி எனப்பிரிந்து குடிபெயர்ந்தது போன்றது அந்த பிராணிகளின் பிரிவு. இயற்கையில் பரிணாம வளர்ச்சி எப்படியானது..? என்பதை இந்த உதாரணத்தால் புரிந்து கொள்ளமுடியும். இந்தக் குடும்பத்தின் முக்கியமான இயல்பு தீவிரமான மோப்ப சக்திதான். மனிதர்கள் சூழலைக் கண்ணால் அறிந்துகொள்வதுபோல் இவை நாசியால் நுகர்ந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன.

மூன்று நாட்கள் வான்கூவர் நகரின் மத்தியில் தங்கினோம் . ஒரு விதத்தில் அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரை ஒத்த பசுபிக் கடலருகே உள்ள துறைமுக நகரம் .

உலகத்தில் வாழ்வதற்குச் சிறந்த நகரங்கள் என்ற கணிப்பில் மெல்பன் - சிட்னியோடு போட்டி போடும் நகரமென அறிவேன். ஆனால், மெல்பன் - சிட்னிபோன்று பந்திப்பாயை உதறி விரித்து கால் ஏக்கர் காணியில் கத்தரிக்காய் வைக்கமுடியும் என்பது போலில்லாதது, முக்கியமான இடங்களில் மாத்திரம் உயரமான கட்டிடங்கள் அமைத்து மக்கள் அடர்த்தியாகக் குடியேறுகிறார்கள். இதன் மூலம் அந்த கடற்கரைப் பிரதேசங்களில் தேவையற்று மக்கள் தொடர்ந்து பரவுவதும் அதன் பின்பு அங்கெல்லாம் பாடசாலை, பாதைகள் என நகரவாக்கம் நடப்பதும் குறையும் . இயற்கை வளங்களான காடழிந்து, தண்ணீர் , காற்று அசுத்தமாவதும் தடுக்கப்படும்.

கனடாவில் வாழ்வதற்குப் பணம் அதிகம் தேவையான நகரமாக வன்கூவர் உள்ளது. இங்கு பணமதிகமிருக்கும் எந்த நாட்டவர்களும் மேக்ன் இளவரசர் ஹரி போன்று வந்து தங்கலாம். பணமிருந்தால் எத்தனை வீடுகளும் வாங்கலாம் . இதனால் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முடியும். சிகரட்போல் கஞ்சா குடிக்கவும் இங்கே பல காலமாக அனுமதியுண்டு. வட அமெரிக்காவின் மேற்குக்கரையில் ஒரு ஆம்ஸ்ரடாம் எனலாம்.

நகரின் மத்தியில் நின்றதால் பல விடயங்களுக்கு வசதியாக இருந்தது . நாங்கள் பல அமெரிக்க குடும்பங்களைச் சந்தித்தோம் . சியாட்ரலில் இருந்து வாரவிடுமுறைக்கு வந்து போவார்கள்.

காலை பத்து மணியளவில் எழுந்து மக்டொனால்ட்ஸின் காலை உணவை உண்பதற்காக அங்கே சென்றபோது ஒரு இளைஞனும் அவனது நாயும் அன்னியோன்னியமாகக் கடைவாசலருகே ஆழமான உறக்கத்திலிருந்தார்கள். முக்கியமாக வாரவிடுமுறைநாளில் பல இடங்களில் கடைகளின் முன்பு உறங்குபவர்களைப் பார்க்க முடிந்தது. கனடாவில் குளிர் குறைந்த இடமென்பது வன்கூவர் என்பது உண்மைதான். டொரண்டோவில் படுத்திருந்தால் பனிக் கட்டியாக உறைந்திருப்பார்கள் .

பசுபிக் சமுத்திரத்தில் இருப்பதால் கனடாவில் பெரியதாகவும் வட அமெரிக்காவிலே மூன்றாவது பெரிய துறைமுகமாகவும் வான்கூவர் விளங்குகிறது . இங்கிருந்து இறக்குமதியான பொருட்கள், கிழக்கு நகரங்களுக்கு ரயிலில் போகின்றன. அதேபோல் மூலப்பொருட்கள் வான்கூவருடாக மற்றைய நாடுகளுக்குச் செல்கின்றன .

வான்கூவரில் நான்கு நாட்கள் சுற்றுலா சென்றபோது, ஏராளமான உல்லாசக்கப்பல்களை கண்டோம். அந்தக்காட்சி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பேருந்துகள் தரித்து நிற்கும் காட்சியை நினைவுபடுத்தியது. அந்தக்கப்பல்கள் இங்கிருந்தே அலாஸ்கா போய் வருகின்றன. மிக இலகுவில் கப்பல் மாறி, வரிசையில் நிற்பதற்கான சாத்தியமும் உண்டு. அமெரிக்காவிற்கான விசா உள்ளதா எனப் பார்த்து அனுப்பிவிடுவார்கள்.

மெல்பனை பூங்காக்களின் நகரமென நினைத்த எனக்கு, வான்கூவரில் நகரத்தின் மையத்தில் காணப்பட்ட பல பூங்காக்கள் அதனையும் பூங்காக்களின் நகரம்தான் எனச்சொல்லத்தோன்றுகிறது. வான்கூவர் மக்களுக்கு தேவைக்கதிகமான பிராணவாயுவும் அங்குள்ள வனங்களில் உருவாக்கப்படுகிறது என நினைத்தேன். அவர்கள் அமேசன் எரிவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை துறைமுகத்தைச் சுற்றி இயற்கை வனமாக ஸ்ரான்லி பூங்கா உள்ளது . அங்கிருந்தும் நகரத்தைப் பார்க்கமுடியும் .

நாமெல்லாம் கதை சொல்வதற்குக் காகிதத்தில் எழுதுவோம். தென்னமெரிக்கா போனபோது கயிறுகளின் முடிச்சுகளில் இன்கா மக்கள் கதை சொல்வதைப்பார்த்தேன் . அவுஸ்திரேலிய ஆதிகுடிகள் புள்ளிக்கோடுகளால் தங்கள் கதைகளை வரைவார்கள். அதே போன்று, அதற்கு இணையாக கனேடிய ஆதிக்குடிகள் (The Totem Poles) மரக்கம்பங்களில் சித்திர வேலைப்பாடுகளை செதுக்குகிறார்கள். ஒருவிதத்தில் அவை, நமது மகாபாரதம் போன்ற தொன்மைக் கதைகளுக்கு இணையானவை.
இதற்கு அவர்கள் பாவிப்பது சிவப்பு சிடர் மரங்களே .

வன்கூவர் மத்தியில் செல்லும் கபிலானோ ஆற்றுக்கு மேலே 230 அடி உயரத்தில் (Capilano Suspension Bridge ) இதன்மேல் இரும்புக்கம்பிகளால் அமைந்த 70 மீட்டர் தூரத்திற்கு ஒரு ஒரு தொங்கு பாலமுள்ளது. தொடர்ச்சியாக ஆடியபடி இருக்கும். இந்தப் பாலத்தில் வருபவர்கள் சிலர், அதன் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு பாதிவழியில் திரும்பிவிடுவாரகள் . பாலத்தைக் கடந்து முடித்தால் ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள் . செயற்கை இடுப்புடன் எனது மனைவி சியாமளா

அந்தப்பாலத்தில் நடந்தது சாதனையேதான். இந்தப் பாலத்திலிருந்து குழந்தையைத் தூக்கிப் போட்ட தாய்மார் மற்றும் தவறி விழுந்து மரணமானவர்கள் என துன்பியல் வரலாறும் உண்டு .

என்ன… நின்று நிதானமாக கடக்கமுடியாது! தொடர்ச்சியாகப் பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள் . அதைக்கடந்து சென்றால் அழகான பல உயரமான மரங்களைக்கொண்ட வனமுள்ளது. வான்கூவரின் நகரின் மத்தியிலே 4200 அடி உயரமான மலை (Grouse Mountain) தென்படுகிறது. குளிர்காலத்தில் பனி விளையாட்டுகளுக்குத் தேவையான பனியும் பெய்யும். நாங்கள் அங்கு சென்ற கோடைக்காலத்திலும் உச்சிக்குப் போனபோது குளிர்ந்தது. இங்கு கிரைண்டேர் Grinder 2001 என்ற பிரவுன் கரடி வசிக்கிறது . அல்பேட்டா மலைப்பிரதேசத்தில் தனித்து விடப்பட்டபோது 4.5 கிலோ நிறையுள்ள குட்டி பின்னர் 300 கிலோவுக்கு உருமாறியது போலிருக்கும்.

மனிதர்கள் ஒரு மாதம் படுக்கையில் கிடந்தால் எலும்பு தசை போன்றவை தளர்ந்துவிடும். ஆனால் கரடிகள் ஆறுமாதம் பனிக்குளிரில் இருக்கும்போது எப்படி எலும்பு, தசையை பராமரிக்கின்றன என்ற கேள்விக்கு கிரைண்டரும் கூலாவும் பதில் தருகின்றன. குளிர் காலத்திற்கான குகையை உருவாக்கி அவைகளுக்கு கொடுத்தபோது அங்கு கெமரா வைக்கப்பட்டது. பகல் நேரத்தில் இந்தக் கரடிக்குட்டிகள் நித்திரையில் நடக்கும் மனிதரைப்போல் எழுந்து நடந்துவிட்டு மீண்டும் படுக்கின்றன. அக்கரடி இதை ஒவ்வொரு நாளும் செய்ததாக கமெராவால் கண்டு பிடிக்கப்பட்டது . கரடிக் குகைக்குள் போய் அறிந்துவர முடியாத விடயத்தை அறிய இந்த இரண்டு குட்டிகளும் உதவின என்றார்கள்.

வனத்தில் பார்க்க முடியாத பிரவுன் கரடியை இந்த மலையில் பார்த்தபோது எனது சின்டியின் உறவினர்களைப் பார்த்தேன் என்று வீட்டில் சொல்லமுடியும்.



5)அலாஸ்கா

காலம் காலமாக காதல்சோடிகள் காதலுக்காக உயிர்விடுவது காவியங்களாகியிருக்கிறது. அத்தகைய மரணங்களை ரோமியோ – ஜூலியட்டிலிருந்து அவதானிக்க முடிகிறது.

சில பறவைகள் இணைபிரிந்தால் மரணிக்கின்றன. நான் நேபாளம் சென்றபோதும் ஒருவகை நீர்ப் பறவைகள் ( Ruddy Shelducks அப்படியானவை என அறிந்தேன் . இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் மனிதருக்கு முன்பே உயிரினங்கள் சோடியாக இணைந்திருந்ததை அறிவோம். ஒரு காலத்தில் மனிதர்களிலும் ஆண் – பெண் இருபாலர்களும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் இயல்பு (serial monogamy) இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆதாம் - ஏவாளுக்கு முன்பே  வாழ்வின் இருபாலருக்கும் பாதுகாப்புக் கூறாக, பரிணாம வளர்ச்சியில் இந்த இயல்பு உருவாகியிருக்கலாம் . ஆனால், பசுபிக் சமன் மீன்கள் காதலுக்காக உயிரையே இழக்கின்றன என்ற செய்தியை அறிந்திருக்கிறீர்களா..? அவை பல நூறு கிலோமீட்டர்கள் ஆழ்கடலையும் நதிகளையும் தாண்டி வந்து, தாம் பிறந்த இடத்தில் முட்டையிட்டுவிட்டு அடுத்தநாள் இறக்கின்றன. இதுவரையும் சமனை உணவுத்தட்டிலும் சான்விச்சிலும் வைத்து உண்ட எனக்குச் சமனின் வாழ்க்கை வட்டம் புதுமையாக இருந்தது.

அலாஸ்காவில் உள்ள நதி, குளம், குட்டை போன்ற நன்னீர்த் தேக்கங்களில் முட்டையிலிருந்து வெளிவந்த சமன் மீன்கள், பல உருமாற்றங்களுடாக இளம் மீனாகப் பசுபிக் சமுத்திரத்தில் ( 2—4 வருடங்கள் ) வாழ்ந்து பருவமடைந்ததும், இனப்பெருக்கத்திற்காக தாங்கள் பிறந்த ஆறு, குளங்களுக்கு எதிர் நீச்சலடித்து வரும். அப்படி வந்தவை தங்களது முட்டைகளுக்குப் பாதுகாப்பான இடத்தில் முட்டையிடும். அதனருகே ஆண் மீன் விந்துகளைப் பீச்சிய பின் அடுத்த நாட்களில் இறந்துவிடும்.

இப்படி இறக்கும் சமன் மீன்கள் அங்குள்ள கரடிகள் பறவைகளுக்கு விருந்தாகும். மற்றவை அந்த இடங்களில் சேதன உரமாகும். நாங்கள் அலாஸ்கா சென்ற கடந்த செப்டம்பர் மாதத்தில் முட்டையிட வந்த பசுபிக் சமன் மீன்கள் ஏரிகளை நிறைத்திருந்தன. (அட்லாண்டிக் சமன் பல தடவை முட்டை இடும்) பனி மலைகள் நிறைந்த பிரதேசமாக, முன்னர் படங்களில் பார்த்து ரசித்த அந்த இடத்தில் கால் பதிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் போவதற்கு சில நாட்கள் முன்பாக அலாஸ்காவின் காடுகளில் தீ பரவியதாக அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன்.

அங்கு சென்ற போது புவி வெப்பமடைவதை மிகவும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இப்படியே போனால் அலாஸ்காவில் ஒரு போகம் கோதுமை விளைந்தாலும் ஆச்சரியமில்லை.

குறூஸ் லைனர் கப்பலில் செல்லும்போது கரையோரமாக உள்ள அலஸ்காவின் மூன்று நகரங்களில் கப்பல் ஒவ்வொரு நாட்கள் தரித்திருக்கும். குறூஸ் லைனர் பயணம் இதுவே எமக்கு முதலானபடியால் - ஆவலுடன் எதிர்பார்த்த பயணம். நான் நினைத்ததுபோல் கப்பலுக்குள் ஒரு கிழமை அடைந்திருப்பது என் மனைவிக்கு இலகுவாக இருக்கவில்லை. தடிப்பான இரண்டு புத்தகங்களும் தொலைக்காட்சியும் எனக்கு இலகுவாக நேரத்தைப் போக்க உதவியது. ஆனால் எனது மனைவிக்கு ஆரம்ப நாட்கள் அங்கு கடினமாகக் கழிந்தது.

150 வருடங்களுக்கு முன்பாக ரஷ்ஷியாவின் பகுதியாக அலாஸ்கா இருந்தது. தொடர்ச்சியாகப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் கடினம் என்று கருதிய ரஷ்ஷியா அதனை 7.2 மில்லியன் டொலருக்கு (2Cents /kM) அமெரிக்காவிற்கு விற்றது.
சமீபத்தில் கிறீன்லாந்தையும் வாங்குவதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி தயாராக இருந்தாரெனச் செய்திகள் தெரிவித்தன.

வன்கூவரில் இருந்த அலாஸ்காவிற்குப் பயணக் கப்பலில் 2000 இற்கு மேற்பட்டவர்களோடு போய் வருவதற்கு ஏழு நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அலாஸ்கா அமெரிக்காவின் , முக்கால் மில்லியனுக்கு குறைவான மக்கள் வாழும் பெரிய மாநிலம்.

குளிர்காலத்தில் துறைமுகங்கள் , பனிப்பாறைகளால் அடைத்திருக்கும். கோடை காலத்தில் மட்டுமே கப்பல்கள் போய் வரமுடியும் . அக்காலத்தில் ஒரு மில்லியன் உல்லாசப்பயணிகள் செல்வார்கள். இதனால் வான்கூவர் குறூஸ் லைனர் கப்பல்களுக்கு முக்கிய துறைமுகமாகும்.

ஜுனியோ (Juneau) அலாஸ்காவின் தலைநகர்.

ஏற்கனவே துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன . அங்கு இறங்கியவுடன் திட்டமிட்டபடி பனிக்கட்டி உருகுவதால் தோன்றிய ஒரு வாவியில்( Mendenhall Glacier) சிறிய படகொன்றில் புறப்பட்டு, திமிங்கிலங்களை பார்க்கச் சென்றோம் . நாங்கள் அங்கு சென்றவேளையில் திமிங்கிலங்களைப் பார்க்க முடிந்தது. அத்துடன் சில கரடிகளையும் காணமுடிந்தது. 25 பிரயாணிகள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரப்பயணம். அந்த வாவியைச் சுற்றி மலைகள். குளிர் காலத்தில் நீக்கமற மென்னீல உறைபனியால் நிறைந்திருக்கும்.

GlacierBay

எங்கள் கப்பல் போகும்போது அலாஸ்காவின் பாதுகாக்கப்பட்ட 2000 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தின் அருகே பல மணிநேரம் தரித்து நின்றது. இதுவரை கவிதைகளில் பூ மலரும் ஓசை என்பதுபோல் பனி உடையும் சந்தமென்பது புனைவுதான். அதை நினைத்தபோது, நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பனி உடையும் ஒலி தீபாவளி வெடி மாதிரி கேட்டது . நிலப்பிரதேசத்தில் துருவ மிருகங்களான துருவக்கரடிகள் , நரிகள் , ஓநாய்கள் போன்று காடுகளில் குளிருக்கு இசைவாக்கமடைந்த மிருகங்கள் வாழும் . எங்களைப்பொறுத்தவரை எல்லாப் பக்கமும் பனியாகத் தெரிந்தது . பலரது கூற்றுப்படி இந்தப் பிரதேசங்களில் நிரந்தர உறைபனியின் தடிப்பு புவி வெப்பமடைவதால் வேகமாக குறைந்து வருகிறது.

ஸ்கக்வே (Skagway)

இந்த அலாஸ்காவில் பெரிய துறைமுகம் உள்ளது . இதனூடாகவே கனடாவின் பகுதியான யுகூன் பிரதேசத்திலிருந்து கனிமப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அந்தக் கனிமப்பொருட்களைத் தோண்டுவதற்கான இயந்திரங்களின் இறக்குமதியும் நடக்கிறது.

இங்குள்ள யுகூன் மலைப்பகுதி 2888 அடி உயரமானது . அங்கு செல்ல ஒரு ரயில் பாதையுள்ளது . எங்களுக்குக் கிடைத்த ஒரு நாளில் அந்த ரயில் பாதையில் சென்று திரும்பும் 3 மணி நேரத்தில், மலைகள், ஆறுகள் , காடுகள் மலைக்குகைகளைக் காணமுடியும். இந்த பகுதியால் போகும்போது நாம் கண்ட காட்சிகள் அற்புதமானவை. இப்பொழுதும் எனது மனக்கண்ணில் அக்காட்சிகள் விரியும். நாங்கள் அங்கே சென்றபோது கோடை முடிந்து இலையுதிர்காலம் தொடங்கியிருந்தது. இயற்கையின்
வண்ணங்கள் ரயில் பாதையின் இருமருங்கும் ராட்சத கன்வசாக விரிந்திருந்தது.

Ketchkan

மேற்கூறிய இரு நகரங்களுக்கும் வெளியே சென்றுவிட்டு கெச்சன் என்ற மூன்றாவது நகரை அடைந்தோம். உலகத்தின் சமன்களின் (மீன்கள் ) தலைநகரமென்பார்கள். இந்த நகரத்தைப் பார்ப்பதற்கு வழிகாட்டியாக ஒரு ஃபோட்டோகிராபரை ஒழுங்கு பண்ணியதால் அவர் எம்மை நகரத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றதுடன் போட்டோ எடுக்கும் முறையையும் சொல்லித் தந்தார். இங்கு ஏராளமான சமன் மீன்கள் பிடிக்கப்படுவதால் துறைமுகம் முழுவதும் மீன்பிடிக்கப்பல்களால் நிரம்பியிருந்தது. இங்கும் பல இடங்களில் ஆதிகுடிகளது கதைகள் சீடார் மரக்கம்புகளில் செதுக்கப்பட்டிருந்து. ஆற்றில் சமன் மீன்பிடிப்பதும் சீடார் மரங்களைத் தோணிகளாகப் பயன்படுத்துவதும் அலாஸ்காவின் ஆதிக்குடிகளிடம் பார்க்கமுடிந்தது.

எழு நாளில் குறைந்த அளவே நேரம் நிலத்தில் மற்றபடி நேரமெல்லாம் பசிபிக் சமூத்திரத்தில் மிதக்கும் குருஸ் லைனரில்தான்.
குருஸ் லைனரில் மூன்றுவேளை உணவிற்குப்போகும்போது சக பிரயாணிகளை சந்தித்து உரையாடும்போது நெருங்கிப் பழக முடிந்தது. இங்கேயும் பெரும்பாலானவர்கள் கப்பல் பயணங்கள் உல்லாசப்பிரயாணமாக இருப்பதிலும் பார்க்க, தங்கள் கவலைகளை மறக்க பயணம் துணையாக இருப்பதை அறியமுடிந்தது. எமக்கு பலரது நோய்கள் சோகங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. முதியவர்களுக்கு இப்படியான பயணங்கள் தற்காலிகமான நண்பர்களையும் கவனிப்பையும் கொடுக்கிறது.. ஒரு அமரிக்க மூதாட்டி தொடர்சியாக 10 வருடங்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் குருஸ் லைனரில் சுற்றிவிட்டு தனது ஓய்வு விடுதியிலும் பணச்செலவு குறைவாகவும் கவனிப்பு அதிகமாகவும் இருந்ததாக கூறினார்.

அலைமோதும் சமுத்திரங்களில் புயல்களை சமாளித்து நடந்த குருஸ் லைனர்களின் பயணங்களை கோரோனா தலைகீழாக கவிழ்த்துவிட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.