அண்மையில் அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் அறிவித்திருந்தார்கள். இன்னும் இம்முடிவு முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு முன்னர் மேலும் பல பரிசோதனைகள் மேலும் பலரால் செய்யப்பட வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் மார்ச் 6, 1983. இல் நான் குறிப்பேட்டில் எழுதிவைத்த கவிதையொன்றான 'ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)' என்னும் கவிதையினை ஒருகணம் நினைவு கூர்தல் பொருத்தமானது. இக்கவிதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. அத்துடன் அண்மையில் பதிவுகளிலும் 'ஒருங்குறி' எழுத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கவிதையாகும். மேற்படி பரிசோதனை முடிவுகளான அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விஞ்சும் வேகத்தில் செல்வது நிரூபிக்கப்பட்டால் , மேற்படி கவிதையை ஒரு தீர்க்கதரிசனமிக்கதொரு கவிதையாகவும் கொள்வதற்கு சாத்தியமுண்டு என நீங்கள் கூறினால் அதிலெனக்கு ஆட்சேபனையேதுமில்லை.'

கவிதை: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!

- வ.ந.கிரிதரன் -

நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'

என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20711085&format=print&edition_id=20071108
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=384:2011-09-09-23-03-56&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54


இதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கோ எம்மையொத்த அல்லது மேலான அல்லது கீழான உயிரினமொன்றின் இருப்பிற்கான சாத்தியத்தினை நான் முழுவதுமாக நம்புகின்றேன். அது பற்றியும் அன்றைய காலகட்டத்தில் எழுதிய கவிதைகளிலொன்றான 'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..' என்னும் கவிதையினையும் ஒரு கணம் நினைவு கூர்வோம். இது உண்மையாகும் காலமொன்று ஒருநாள் வரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. இக்கவிதையும் ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்த அதே சமயம் எனது ஆரம்ப காலக் கவிதைத் தொகுதியான 'எழுக அதிமானுடா'விலும் பிரசுரமாகியுள்ளது.

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..

- வ.ந.கிரிதரன் -

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது
கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.