நாகரத்தினம் கிருஷ்ணாகண்விழிப்பதுமுதல் கண்ணுறங்குவம்வரை மேற்கத்தியர் முதலீடு செய்த அறிவு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய மனித வாழ்க்கை மேற்கத்தியர்களால் எழுதப்படுவது. கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. "இன்றைய மனிதன் உண்மையில் செய்யவேண்டியது என்ன? என்ற கேள்வியைக் கேட்கிற அல்பெர் கமுய் " அபத்த உலகில் பிறந்த மனிதனுக்குள்ள பங்கு,  வாழ்க்கையை ஏற்பதும், அதனுடன் முரண்படுவதும், அதற்கு அடிமையாகாமிருப்பதும்" என்கிறார். அல்பெர் காமுய் ஒத்த எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கலாம், ஆனால் அவனையொத்த சுய சிந்தனைவாதிகள் நமிடம் இல்லை. படைப்பிலக்கியம் என்பது இட்டுக்கட்டுவதும், வார்த்தை விளையாட்டுகளுமல்ல, ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி, வாசகனுக்கு இலைபோடுவது,  விவாசகனோடு விவாதிப்பது, தன்னைக்கடந்து செல்லவும் வெல்லவும் வாசகனை அனுமதிப்பது.  நவீன இலக்கியத்தின் இன்றைய பரிணாமம் என்பது வாய்ச் சவடால்களால் கண்டதல்ல,  சோர்வுறாத சிந்தனைச் சவடால்களால் உருப்பெற்ற்வை. சந்தைப்படுத்துதல் என்ற சொல்லுக்கு உளவியல் நோக்கில் பொருள்தேடவேண்டும், ஒவ்வொருமுறையும் நுகர்வோரிடத்தில் உபயோகிக்கும் பொருள் புதியது, கூடுதற் பயனை அளிக்கவல்லது என்ற நம்பிக்கையை அளிக்கவேண்டும். இதற்கு என்ன வழி? உற்பத்தியாளருக்குத் தனது பொருளைபற்றிய முழுமையான அறிவும் தெளிவும் வேண்டும், அதன் பின்னரே நுகர்வோரை நெருங்கவேண்டும். புரட்சியைத் தொழில்களில் மட்டுமல்லை சிந்தனைகளிலும் செய்துகாட்டுபவர்கள் மேற்குலகினர். நவீன இலக்கியத்தின் பல படிநிலைகள் இந்திய இலக்கிய மரபிற்குப் புதிதல்ல. அவற்றின் தடங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பீடு அளவில் ஆய்வு செய்து கீழைத் தடத்தில் ஓர் இலக்கிய மரபைக் கட்டமைக்க தவறி இருக்கிறோம்.

நோக்கு நிலை என்றால் என்ன?

"ஒரு பனுவலில் கதையென ஒன்று கதைசொல்லியின் மூலமாய்  ஒரு காட்சிகோணத்தின் ஊடாகசொற்களால் முன்வைக்கபடுகிறது" (பக்கம் 207 ந.இ.கோ.) என்று எளிமையாகக் கட்டுரை ஆசிரியர் நமக்கு  நோக்குநிலையை விளக்குகிறார். ஆங்லேயர்களாலும் அமெரிக்கர்களாலும் ஒரு கோணத்தில் பார்த்தல் எனக்கூறியதையே ழெரார்ட் ழெனெத் (Gérard Genette) என்ற பிரெஞ்சு இலக்கிய கோட்ப்பாட்டாளர் நோக்குநிலை என அழைப்பதாக தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ழெரார் ழெனெத் ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால் அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைச் செய்வது நல்லதென நினைக்கிறேன். 1930ல் பிறந்த ழெனெத் அமைப்பியல்வாதிகளில் ஒருவர், இலக்கிய விமர்சகர் அனைத்துக்கும் மேலாக பல இலக்கிய கருத்துருவாக்கங்களை முன்வைத்த மொழிஅறிஞர்.  அவருடைய Palimpsestes. La Littérature au second degré ( Editions Seuil -1982) முக்கியமானதொரு நூல். 'பாலம்செஸ்ட்' ( Palimsests) என்பது என்ன? ஒரு பனுவலில் சில சொற்களை அல்லது சில வரிகளை மாற்றிச்சொல்ல நினைக்கிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள்,  என்ன செய்கிறோம், ஏற்கனவே எழுதிய சொற்களை அல்லது வாக்கியங்களைக் கலைத்துவிட்டு அதன் மீது புதிய சொற்களை அல்லது புதிய வரிகளை எழுதுகிறோம், அவ்வாறு எழுதுகிறபோதும் பழைய சொற்களின் அல்லது வாக்கியங்களின் தடம் சரியாக கலைபாடமல் இருக்கிறதில்லையா அதன் பெயரே பாம்செஸ்ட்.  ழெனெத்திற்கு இந்த பாம்செஸ்ட்போலவே ஒவ்வொரு பனுவலிலும் ஏதோவொரு பனுவல் ஒட்டிக்கிடக்கிறது. சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் இக்கருத்துருவாக்கத்தை ஜெனெத் முன்வைத்தபோது மேற்குலக விமர்சனதளம் பெரும் அதிர்வைக்கண்டது. இலக்கிய விமர்சனங்ளை வைக்கிறபோது ழெனெத்தின் புதிய அனுகுமுறையுடன் பனுவலை நெருங்க வேண்டியிருந்தது. 

ழெனெத்தின் நோக்கு நிலை  கோட்பாட்டின் பொருள் என்ன, எவ்வகையில் எடுத்துரைப்பை மேம்படுத்துகிறது என்பதையெல்லாம் பேராசிரியர்  விரிவாகப் பேசியிருக்கிறார். இரண்டு கேள்விகள் எழுப்பப்ட்டிருக்கின்றன. முதற் கேள்வி யார் பார்ப்பது? இரண்டாவது: யார் பேசுவது? உடனடியாகவும் வெளிப்படையாகவும் நமக்குக் கிடைக்கக்கூடிய பதில் இரண்டும் ஒருவரே - அந்த ஒருவரை கதைசொல்லியென்றோ அல்லது எடுத்துரைப்பவர் என்றோ நாம் அழைக்கலாம், கூடுதல் விளக்கங்களை அறிவதற்கு பேராசியரின் நவீன இலக்கியகோட்பாடுகள் நூல் உங்களுக்கு உதவும். ழெனெத்தின் நோக்கு நிலையைச் சற்று எளிமைபடுத்தி புரிந்துகொண்டு, அதன் பிரதான கூறுகளில் கவனத்தைச் செலுத்துவோம். கதைசொல்லல் அல்லது எடுத்துரைத்தல்  என்ற சொற்களில் இடம்பெறும் சொல்லல், உரைத்தல்  இரண்டும் பேசுதல் குடும்பத்தைச் சேர்ந்தவை இதனை Dégès என்ற கிரேக்க சொல்லால் அழைக்கிறார்கள். நோக்கு நிலையில் இரண்டாவதாக இடம்பெறும் பார்த்தல் என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் Mimèsis என்று பெயர். ஆக நோக்கு நிலை என்ற சொல்லை இருவகையில் பொருள் கொள்ளலாம். முதலாவது நோக்குநிலையை ஓர் அறிவியல் கலைச்சொல்லாக அணுகும் வழிமுறை. அதன் படி இங்கே எடுத்துரைப்பின் பணி, வாசகரின் கவனத்தை ஒரு பொருள் அல்லது கதைமாந்தர் அல்லது இப்படி ஏதோ ஒன்றைப்பற்றிய விபரத்தின்மீது திருப்புவது - இதுவே யார் பார்ப்பது ( Mimèsis) என்ற கேள்விக்கான பதில். நோக்குநிலை பற்றிய இரண்டாவது அணுகுமுறை காட்சிவெளி சார்ந்த எடுத்துரைப்பு (la perspective narrative) .

நோக்கு நிலையின் செயல்பாடுகள் எடுத்துரைப்பில் தன்னிலை மற்றும் படர்க்கை மொழியாடல்களில் நடபெறுகின்றன. இவை அனைத்திலும் சூத்ரதாரியாக இருப்பவர் கதைசொல்லி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எடுத்துரைத்தல் பற்றிய ஆய்வு என்பது ஒரு கதைக்கும் -சொல்லலுக்கும் உள்ள உறவு முறைகளை விளங்கிக்கொள்வது. நோக்கு நிலைவழி இவற்றை வகைப்படுத்தியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்:

1. கொள்கை அளவில் நோக்கு நிலையும் எடுத்துரைத்தலும் வேறு வேறு
2. படர்க்கை மாந்தரை எடுத்துரப்பவராக பயன்படுத்துதல்
3. எழுவாய் வழி கதைசொல்லல்
4. நோக்கு நிலையைப்பொறுத்தவரை தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கை நிலையில் சொல்லப்பட்டாலும் வேறுபாடுகள் இல்லை. இரண்டுமுறையிலும் பனுவல் உலகில் நோக்கு நிலைஎன்பது ஒரு கதை மாந்தரின் பண்பாடாகசெயல்படுகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள ஒரே வேறுபாடு எடுத்துரைப்பவரின் அடையாள வேற்றுமைதான்.

மேற்கண்ட அடையாள வேற்றுமையை அறிவது ழெனெத்தின் கோட்பாட்டைக் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுமென நினைக்கிறேன். ழெனெத் நான்குவகை கதை சொல்லிகளை அறிமுகப்படுத்துகிறார்

I. கதைசொல்லி இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமலும் போகலாம் என்கிற சூழலில்:

1. கதைக்கு வெளியே கதை சொல்லி

இக்கதைசொல்லியை ழெனெத் Le narrateur extra diégétique என அழைக்கிறார். இங்கே கதை சொல்லி கதைமாந்தரல்ல. கதைக்கு வெளியே இருப்பவர், வாசகனிடம் நேரடையாகப் பனுவலைப் படைத்தவர் பேசுதல். ஹோமரின் ஒடிஸ்ஸியஸ் ஓர் உதாரணம். எடுத்துக்காட்டு: "முன்பொருகாலத்தில் சிவப்பி என்றொரு பெண்ணிருந்தாள். பெற்றோர்கள் அப்பெயரிட்டு அழைக்கக் காரணம்..." எனத் தொடங்கி பாடம் எடுக்கும் முறை. பெருமாலான பழைய நூல்கள் இவகையிலேயே கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கின்றன.

2. கதைக்குள் இருந்து கதை சொல்லல்.

இக்கதை சொல்லியை ழெனெத் Le narrateur intra diégétique என அழைக்கிறார்.  கதைசொல்லி கதைக்குள் இடம்பெறும் கதை மாந்தர்களில் ஒருவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் சிம்மாசன பொம்மை பேசுவதுபோல கதைசொல்லப்படுவதை இங்கே உதராணமாகக் கொள்ளலாம்.

எடுத்துக்காடு: "என் பெயர் சிவப்பி, நான் பிறந்தபோது மிகவும் சிவப்பாக இருந்ததைவைத்து எனக்குப் பெற்றோர்கள்.. " எனக் கதைமாந்தரே கதை கூறல் இவ்வகையில் அடங்கும்.

11 கதைக்குள் கதைசொல்லி என்றொரு கதைமாந்தர் இடம் பெற்றால்

1. பிறர்கதையைக்கூறும் கதைசொல்லி

ழெனெத் இக்கதைசொல்லியை Le narrateur hétéro diégétique என அழைக்கிறார். அவர் கதையில் வரும் பிறகதைமாந்தர்களைப் பற்றி பேசுபவராக இருக்கிறார். ஹரூகி முராகாமியின் ஸ்புட்னிக்கின் காதலர்கள்  உதாரணம்.

எடுத்துக்காட்டு: "சிவப்பி என்ற எனது தோழியைப்பற்றி உங்களுக்குக் கூற வேண்டுமென நினைக்கிறேன்...."  

2. தன்கதையைக்கூறும் கதை சொல்லி

ழெனெத் இவரை le narrateur homo diégétique என அழைக்கிறார். இவ்வகைக்கு உதாரணமாக யு.ஆர். அனந்தமூர்த்தியின் பாரதிபுரத்தைக் கூறலாம்.

எடுத்துக்காட்டு: "சிவப்பியாகிய எனது கதையைச் சொல்லப்போகிறேன்.." எனத் தொடங்குவது ஆகும்.

நோக்கு  நிலை வகைபாடுகள்:
இதனை இரண்டு முக்கிய தலைப்பின்கீழ் கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார்:

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு

இத்தலைப்பின் கீழ் சிலவகை நோக்குநிலைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது அகநிலைபட்ட நோக்கு நிலை மற்றது புற நிலைபட்ட நோக்குநிலை.

புறவயப்பட நோக்குநிலை: எடுத்துரைப்பு முகவரோடு இது மிகவும் அணுக்கமானதென்று அறிகிறோம். எடுத்துரைப்பாளருக்கும் கதைமாந்தருக்கும் உள்ள உளவியல் கலந்த இடைவெளி மிகவும் குறுகிய அளவில் இருக்கிறபோது இது எழுவாய் எடுத்துரைப்பாக நிகழ்கிறது..

அகவயப்பட்ட நோக்குநிலை: இது பனுவலுக்குள் இடம்பெறுவது, பொதுவில் கதை மாந்தர்களின் நோக்குநிலையாக இது அமையுமென்றும், அதே வேளை சில நேரங்களில் அக நிலைபட்ட நோக்கு நிலைபடுத்துதல் என்பது பனுவலின் நிலை அமைதியோடு இணைந்து ஒன்றாகிவிடும் எனவும் கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்த தவறிவிடுமென்றும் சொல்லப்படுகிறது.

2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

எடுத்துரைப்பு முழுவதும் நோக்கு நிலைப்படுத்துவதென்பது தொடர்ந்து நீடிக்கிறதென்றும்; நோக்கு நிலையின் கோணத்தையும்  தன்மையினையும் இடம், களம், பல்வேறு வகைக் கூறுகள் தீர்மானிக்கின்றன என்பதையும் இப்பகுதியில் ஆசிரியர்எடுத்திரைத்திருக்கிறார்.

அ. வெளி அல்லது இடம்: இங்கே நோக்கு நிலைபடுத்துபவர் எடுத்துரைக்கும் பொருளிலிருந்து வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் இருந்துகொண்டு சொல்வதென்றும், இந்நிலைப்பாடு தொன்ம இலக்கியங்களில் அதிகம் இடம் பெற்றிருக்கிறதென்ற செய்தி கிடைக்கிறது.

ஆ. காலம்: ஒரு கதை மாந்தர் தமது கடந்தகாலத்தைப் பின்நோக்கிப் பார்ப்பதற்குக் காலம் துணை நிற்கிறது.  இங்கே கடந்தவைஅனைத்தும் ஒரு காலத்திற்கு உரியவையாக பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட வெளி காலம் ஆகியவற்றோடு உள்வியல் கூறுகள், அறிதல் கூறுகள் உணர்ச்சிக்கூறுகள் கருத்துநிலைக்க்கூறுகள் என்கிற பல்வேறு அம்சங்கள் கதைசொல்லியின் நோக்குநிலையில் சூழலுக்கு ஏற்ப இடம் பெற்று கதைசொல்லலுக்கு துணை நிற்கின்றன.

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.