பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை  முன்வைத்து …dr_n_subramaniyan.jpg - 12.37 Kbதமிழ் ஆய்வுலகின் தலைமைப் பேராசிரியராகவும் ‘விமர்சன மாமலை’ என்ற கணிப்புக்குரியவராகவும் திகழ்ந்தவர், கலாநிதி  கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்கள்(1932-2011). ஒரு கல்வியாளருக்குரிய  ‘சமூக ஆளுமை’யானது  எத்தகையதாக அமையவேண்டும் என்பதைத் தமிழ்ச் சூழலிலே இனங்காட்டிநின்ற முக்கிய வரலாற்றுப் பாத்திரம்,அவர்.  அப்பெருமகன் நம்மைவிட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. 06-07-2014 அன்று அவர் நம்மைப் பிரிந்த மூன்றாவது நினைவுதினம் ஆகும். அந்நாளையொட்டி அவரது நினைவுகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும்   முன்னெடுப்புகளுள்   ஒன்றாக  இச் சிந்தனை உங்கள் பார்வைக்கு வருகிறது. பேராசிரியர் பற்றி விரிவானதொரு ஆய்வுநூல் எழுதும் ஆர்வத்துடன் தகவல் தேட்டங்களில் ஈடுபட்டுவரும் நான் அத்தொடர்பில் கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது   வெளிப்படுத்திவந்துள்ள சிந்தனைகளின்  ஒரு பகுதியை இங்கு கட்டுரை வடிவில் உங்கள் கவனத்துக்கு  முன்வைத்துள்ளேன்.    பேராசிரியரைப் பற்றிய இக் கட்டுரையைத் தொடங்குவதற்கு முதற்படியாக அவரைப்பற்றிய பொது அறிமுகக் குறிப்பொன்றை இங்கு முன்வைப்பது அவசியம் எனக்கருதுகிறேன்

 பொது அறிமுகம்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியவர்கள்  ஈழத்தின்  வடபுலத்தின் வடமராட்சி மண்ணின் மைந்தன் ஆவார்.   இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற  இவர்  பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் “பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்” என்ற தலைப்பில்  மார்க்ஸிய ஆய்வாளர் Dr.George Thomson அவர்களின் வழிகாட்டலில் ஆய்வு நிகழ்த்தி டாக்டர் பட்டம் பெற்றவர்.  ஈழத்தில் வித்தியோதயா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் பணியை மேற்கொண்டவரான  இவர்,  ஈழத்தின்  கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்  தமிழகத்தின்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் , சென்னைப் பல்கலைக்கழகம்   சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும்  ‘வருகைதரு சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார். அத்துடனமையாது தமிழ்நாட்டிலும் அனைத்துலக நிலையிலும்  பல்வேறு  தமிழியல் ஆய்வரங்குகளில் பங்குகொண்டு சிறப்பித்தவர். இவ்வாறான இயங்கு நிலைகளினூடாக, தமிழியலின் உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும்  ‘ஆய்வறிவுப் பாங்கானதாக’க்  கட்டமைப்பதில் அவர் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் அவர்.

இந்த ஈடுபாட்டுக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய மார்க்ஸிய அடிப்படையிலான ‘உலகநோக்கு’ (Vision) ஆகும். மார்க்ஸியம் என்ற ‘சமூக-அரசியல்’ தத்துவமானது சமூகநிலையிலும் பொருளியல் தளத்திலும் அடக்கியொடுக்கப்பட்ட மக்கட்பரப்பின் விடுதலையை  நோக்காகக் கொண்டு ‘இயங்கியற் பார்வை’யுடன் உருவானதாகும். பேராசிரியரவர்கள் மேற்படி ‘இயங்கியற் பார்வை’யின் ஒளியில்  தமிழரின் ஒட்டுமொத்த ‘சமூக- பண்பாட்டு’ வரலாற்றை அதன்    வரலாற்றியக்கத்தையும் புரிந்துகொள்ளவும் எடுத்துப் பேசவும்   முற்பட்டவராவார். அவ்வகையில் சமூக-பண்பாட்டு ஆய்வளர் மற்றும் தினாய்வாளர் ஆகிய இரு நிலைகளில் அவர் இயங்கிநின்றுள்ளார். .இவ்வகையில் கடந்த அரை நூற்றாண்டுக்காலத்துக்கு மேலான  தமிழியல்  வரலாற்றிலே ஆழமாகத் தடம்பதித்துச் சென்றவர் அவர்.

பேராசிரியரவர்களுடைய  மேற்படி இயங்குநிலைகள் மற்றும்   அவற்றின் ஊடாகத் தமிழியல்  வரலாற்றுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்பன தொடர்பான அம்சங்கள் மிக  விரிவான நிலையில் நூல்வடிவில் எடுத்துப்பேசவேண்டிய பொருட்பரப்புடையனவாகும். அவ்வாறான  விரிநிலைப் பார்வைகள் மேற்கொள்ளப்படும் சூழலில்  கவனத்திற் கொள்ளப்படவேண்டிய முக்கிய அம்சங்களை மையப்படுத்தியதாக  எனது இக்கட்டுரையாக்கம் அமைகின்றது. குறிப்பாக அவருடைய பன்முக ஆளுமையின்   முக்கியமான பகுதியான திறனாய்வியல் திறன் என்ற குறித்த ஒரு  அம்சத்தை மையப்படுத்தியதாக  எனது இக்கட்டுரையாக்கம் அமைகின்றது. அவ்வகையில் தமிழ்த் திறனாய்வியல் வரலாற்றுக்கு  அவர் ஆற்றியுள்ள பங்களிப்பின் முக்கியத்துவம் என்ற அம்சமே  இங்கு வாசகர்களது  கவனத்துக்கு இட்டுவரப்படுகிறது.

தமிழ்த் திறனாய்வியல் வரலாற்றில் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பியவர்களின் இயங்குநிலை. 

பேராசிரியர் சிவத்தம்பியவர்களின்  திறனாய்வியல் இயங்குநிலை பற்றி நோக்க முற்படும் இம்முயற்சியிலே  முதற்கண் தமிழில் இலக்கியத் திறனாய்வியல் உருவாகிவளர்ந்த வரலாற்றின் பின்புலம், அதில்  சிவத்தம்பியவர்கள் கால்பதித்த சூழல்  என்பன  சாரந்த பொதுச் செய்திகள் நமது முதற்கவனத்துக்குரியனவாகின்றன.  

1.தமிழில் இலக்கியத் திறனாய்வியலின் வரலாற்றுப் பின்புலமும்  அதில் சிவத்தம்பியவர்கள்  கால்பதித்த சூழலும்

தமிழிலே பண்டைக்காலம் முதலே திறனாய்வுசார் எண்ணக்கருக்களும் செயன்முறைகளும் நிலவிவந்துள்ளனவெனினும் அவை கடந்த நூற்றாண்டுவரை திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய  பெயர்களிலான ஒரு முறையியலாக உருவாக்கம் பெற்றிருக்கவில்லை. கோட்பாட்டுநிலையிலே பொருளிலக்கணம் என்பதாக அது வழங்கிவந்தது.  பாயிரம், அரங்கேற்றம், உரை மற்றும் கண்டனம் முதலான செயன்முறைகளில் அது பயிற்சியிலிருந்துவந்தது. தமிழிலக்கியத் திறனாய்வியலின்  19ஆம்நூற்றாண்டிறுதிவரையிலான  வரலாற்றுநிலை இததான்.கடந்த ஒரு நூற்றாண்டுக்குட்பட்ட காலப்பகுதியிலேயே அது ‘திறனாய்வியல்’ என்பதான திட்டப்பாங்கான ஒரு ஆய்வுமுறைமையாக உருவாக்கம் பெற்றது..  தமிழகத்திலே திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864-1921) மற்றும் வரகனேரி வேங்கடசுப்பிரமணிய ஐயர் (1881-1925) ஆகியோருடைய  எழுத்துகளிலிருந்தே இவ்வாறன ஆய்வுமுறைமை தமிழ்ச் சூழலில் உருவாகத் தொடங்கியது என்பது வரலாறு..

இவ்வாறு உருவாகத் தொடங்கிய திறனாய்வியல் தொடக்கத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகள்வரை இலக்கியத்தை ‘உணர்வுகளுக்கு விருந்தளிக்கும் கலையாக்கமாகக் கண்டு நயப்பதான’  நோக்கை மையப்படுத்தியதாகவே அமைந்ததாகும். நயப்புக்கான காரணிகளை கட்டமைப்புநிலையிலே, ‘தொனிப்பொருள்’   ‘உள்ளடக்கம்’,  ‘உணர்த்து முறை’,    ‘உருவம்’  முதலியனவாகக்  பகுப்பாய்வுசெய்து இனங்காட்டுவதே அக்காலப்பகுதித் திறனாய்வியலின் முக்கிய செயன்முறைகளாக அமைந்திருந்தன. இவ்வாறான வரலாற்றிலே  1940களிலிருந்து உள்ளடக்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலான   ஒரு புதிய பார்வையாக  மார்க்ஸிய நோக்கு என்ற   அணுகுமுறை அறிமுகமாகியது.

மார்க்ஸியம் என்ற‘சமூக-அரசியல்’ தத்துவமானது,   இலக்கியம் மற்றும் ஏனைய கலை வகைகளை,  ‘உணர்வுகளுக்கு விருந்தளிப்பதான  கலையாக்கங்களாகத்  தரிசித்து நயப்ப்பதன்று’ என்பதை இங்கு முதலில் குறிப்பிடுவது அவசியமாகிறது.  மாறாக அது,  அவற்றை  ‘சமுதாயவரலாற்றை இயக்கிநிற்கும் கருவிக’ளாகவும் சமூக-பண்பாட்டுச் சூழல்களின் விளைபொருள்களாக’வும்   தரிசிப்பதாகும். மார்க்ஸியத்தின்  இவ்வாறான தத்துவப்பார்வையானது   இந்திய மண்ணிலே  1930களின் நடுப்பகுதியில்(1935-36 காலப்பகுதியில்) காலூன்றியதாகும். அக்காலப்பகுதியிலே அம்மண்ணிலே  ‘அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பு  உருவாகியது. அதன் தொடர்பால் 1940 களில் தமிழகச்சூழலிலும் ஈழத்திலும்   ‘முற்போக்குஇலக்கியம்  என்ற கருத்தியல் பரவியது. இதன்தொடர்ச்சியாக 1946இல் ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகியது.

இவ்வாறான மார்க்ஸியநோக்குசார் முற்போக்கு சிந்தனையின் வரலாற்றியக்கத்தில், தமிழகச் சூழலிலே தோழர்கள் ம. சிங்காரவேலர் ப. ஜீவானந்தம், எஸ் . இராமகிருஷ்ணன,தொ. மு. சி. ரகுநாதன் , ஆர் .கே. கண்ணன், தி.க. சிவசங்கரன், நா. வானமாமலை முதலிய பலர் தீவிர ஈடுபாடுகொண்டு செயற்படத் தொடங்கினர். சமகாலத்தில் ஈழத்திலே தோழர்கள் மு. கார்த்திகேயன் ,கே. கணேஷ், கே. ராமநாதன், அ.ந.கந்தசாமி முதலியவர்கள் இவ்வாறான முற்போக்குப் பார்வையை முன்னெடுத்தனர். இவ்வாறு இவர்கள் இயங்கிநின்ற சூழலில், இவர்களுடன்இணைநது 1950களில் முற்போக்குத் தளத்தில் அடிபதித்தவர்,கா. சிவத்தம்பி அவர்கள். அவருடன் இணைந்து அடிபதித்த இன்னொருவர், காலஞ்சென்ற கலாநிதி  க. கைலாசபதி அவர்கள்.(1933-1882).
 
2. சிவத்தம்பி மற்றும் கைலாசபதி ஆகியோரின் திறனாய்வியல்சார்ந்ந்த ஆளுமை அம்சங்கள்  

மார்கஸிய இலக்கிய நோக்கைத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்துநின்ற சம காலத்தவர்களான மேற்சுட்டிய  பலருள்ளும் சிவத்தம்பி மற்றும் கைலாசபதி ஆகிய இருவரும் ஒப்பீட்டு நிலையிலே  குறித்த சில அம்சங்களில் சிறப்பு ஆளுமைகளுடனும் வாய்ப்புகளுடனும் திகழ்ந்தவர்களாவர். மார்க்ஸியஇலக்கியநோக்கை ஆய்வுமுறையியலூடாக எடுத்துரைக்க வல்ல ‘ஆய்வு - விமர்சகர்க’ளாக(Scholar – Critics ஆக)த்திகழ்ந்தவர்கள் இவர்கள். உலகப் புகழ்பெற்ற மார்க்ஸியவியல் அறிஞரான ஜோர்ஜ் தொம்ஸன் என்பாரின் வழிகாட்டுதலில் தத்தம் கலாநிதிப்பட்டங்களுக்கான ஆய்வுப் புலமையை வளர்த்துக் கொண்டவர்கள் இவர்கள் என்பது இத்தொடர்பில் நாம் மனங்கொள்ளவேண்டிய செய்தியாகும்.

 ‘ஆளுமை’ என்றவகையில் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறப்பம்சம், பண்டைய சங்கப் பாடல்கள் முதல்  அற இலக்கியம், பக்தி இலக்கியம், காவியம், சிற்றிலக்கியம் நாவல், சிறுகதை,  நவீன  கவிதை,  நாடகம் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் என்பனவரையான  அனைத்திலக்கியப் பரப்iயும்  முழுநிலையில் திரட்டிப்பார்த்துக் கருத்துக் கூறக்கூடிய அளவுக்கு இவர்கள் பெற்றிருந்த பார்வை விரிவு ஆகும்.

 ‘வாய்ப்பு’ என்றவகையில் குறிப்பிடத்தக்க அம்சம், இவர்கள் பல்கலைக்கழகம்சார் ஆய்வறிஞர்களாகத் திழ்ந்தநிலையாகும். இதனால் உயர்கல்விச் சூழலில், ஆய்வு மாணவர்கள் மத்தியில் - இவர்களால் தமது திறனாய்வியல் ஆளுமைகளைச் சிறப்பாகப் பதிவுசெய்யமுடிந்தது.  இவ்வாறான ஆளுமை அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள் என்பன மார்க்ஸியத் திறனாய்வியல் அணுகுமுறையைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற ஒன்றாக நிறுவுவதில் இவர்களுக்கப் பெருந்துணை புரிந்தன. இத்தொடர்பில் பெருந்தொகையான கட்டுரைகளை இவர்கள் எழுதினர். அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டனர். சமகாலத்தின் பல்வேறுவகை ஆக்க முயற்சிகளுக்கும் அணிந்துரை எழுதினர். தவிர, மார்க்ஸிய சார்பானதான சமகால ‘முற்போக்கு இலக்கிய இயக்க’த்தை வழிநடத்தும் முக்கிய தத்துவாசிரியர்களாகவும் இவர்கள்  இயங்கினர்.

 ‘முற்போக்கு விமர்சன இரட்டையர்கள்’ என்ற கணிப்பைப் பெற்றவர்களான  இவ்விருவரும் தொடர்ந்து இணைந்தியங்கிவந்த நிலையில் 1982இல் கலாநிதி  கைலாசபதியவர்கள் இயற்கை எய்தினார். அதன்  பின்னர், பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தொடர்ந்து திறனாய்வுத்துறையில் தீவிர ஈடுபாட்டுடன்  இயங்கிவந்தார். அவரது இவ்வியக்கமானது  2011இல் அவர்  இயற்கை எய்தும்வரை சீரான கதியில் தொடர்ந்தது.  

3. சிவத்தம்பியவர்கள் இயங்கிநின்ற முறைமை.

  3.1. இருகட்ட இயங்குநிலைகள்  

சிவத்தம்பியவர்கள்  தமிழ்ச் சூழலின் திறனாய்வியல் வரலாற்றிலே  அரை நூற்றாண்டுக்கு மேலாகச்  செயற்பட்டுநின்ற முறைமையைக் காலகட்ட அடிப்படையில் இருவகைப்படுத்தலாம்.

இவற்றுள் முதலாவது காலகட்டம் ஆரம்பம் முதல்  ஏறத்தாழ 1970களின் இறுதிப் பகுதி   வரையானது. அவர் மார்க்ஸியத் திறனாய்வியல் பயிற்சிபெற்று அவ்வணுகுமுறையைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற ஒன்றாக அறிமுகம் செய்வதில் முனைப்புடன் செயற்பட்ட காலகட்டம் , இது.   இக்காலப்பகுதியில்தான்(1969-70இல்) அவர் பர்மிங்ஹாமில் ஜோர்ஜ் தொம்ஸன் அவர்களின் வழிகாட்டலில் பண்டைத் தமிழர் சமூகத்தில் நாடகம் என்ற தலைப்பிலான  தமது கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொண்டு நிறைவுசெய்தார்.   இக்காலப்பகுதி  சார்ந்த இவருடைய திறனாய்வியல்சார்  முக்கிய எழுத்தாக்கங்கள் என்றவகையில் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்(1966), நாவலும் வாழ்க்கையும்(1978), ஈழத்தில் தமிழிலக்கியம் (1978) ஆகியவற்றைக்  குறிப்பிடலாம்.

சிவத்தம்பியவர்களின் இயங்குநிலையின் இரண்டாவது காலகட்டமானது, ‘1970களின் இறுதிப்பகுதி முதல் 2011இல் இயற்கை எய்தும்வரை’யிலானது. இக் காலகட்டத்தில் அவரது  ஆய்வுசார் செயற்பாடுகள்   ஈழம் என்ற புவியெல்லைக்கு அப்பால் குறிப்பாகத் தமிழகச் சூழலின் சமகால இலக்கியத் தினாய்வுச் சூழல்சார் அநுபவங்களை மையப்படுத்தி  விரிவடையலாயிற்று. தமிழக அரசு, தமிழகப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தமிழக உயராய்வு  நிறுவனங்கள் ஆகியவற்றின் அழைப்புகளுக்கிணங்க அம்மண்ணுக்குப் பலமுறை பயணங்கள் மேற்கொள்ளவும்  மாதக்கணக்கில் அங்கு தொடர்து தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவுமான  வாய்ப்புகளை அவர்  பெற்றார். அவ்வாறான சூழல்களில் அம்மண்ணின் சிந்தனையாளர்கள் படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்கள் ஆகியோருடன் நெருக்கமான உறவுகளை அவர்  திட்டப்பாங்குடன் பேணிக்கொண்டார.;  அதேவேளை   சமகாலத்தில் புலம்பெயர் சூழல்களின் இலக்கியவாதிகளுடனும் சீரிய தொடர்பகளை அவர் ஏற்படுத்திக்கொண்டார். இவ்வாறான  இந்த இரண்டாவது கட்டத்தில் அவருடைய ஆய்வியல் மற்றும் திறனாய்வியற் பார்வைகள் விரிவடைந்தன. தமிழர் பண்பாட்டின்  பல்வேறு அம்சங்களிலும் அவர் கவனம்செலுத்தித் தீவிரமாகச் செயற்பட்ட காலப்பகுதியாக இது அமைந்தது.

மேற்சுட்டிய முதலாவது கட்ட இயங்குநிலையிலே  நமது  கவனத்துக்குரிய முக்கிய அம்சம் முற்சுட்டியவாறு  மார்க்ஸியத் திறனாய்வியலைத்   தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற ஒன்றாக அறிமுகம் செய்வது என்ற அளவோடு அவருடைய செயற்பாடுகள் அமைந்தன என்பதாகும் . ஓப்பீட்டுநிலையிலே மேற்சுட்டிய முதலாவது கால கட்டத்தை விட இரண்டாவது கால கட்ட இயங்குநிலை  கடினமான ஒன்றாக அமைந்ததாகும் . இவ்விரண்டாவது கட்டத்திலே அவர் மார்க்ஸியத் திறனாய்வியல் சார்ந்து   அக்காலப்பகுதியில் உருவான  ‘கோட்பாட்டுச் சிக்கல்’கள் பலவற்றை  எதிர்கொண்டார். அத்துடன் மார்க்ஸிய நோக்கை விமர்சிக்கும் வகையில் உருவான இலக்கியச் சிந்தனைகள் பலவற்றுடன் - குறிப்பாக, இருப்பியல் , அமைப்பியல்,  பின் அமைப்பியல்  மற்றும்  பின் நவீனத்துவம்  ஆகிய  சிந்தனைகளுடன்-விவாதங்கள் மேற்கொள்ளவேண்டியதான சூழ்நிலைசார்  கடப்பாடும்  அவருக்கு ஏற்பட்டிருந்தது

முதலாவது கட்டத்திலே  கைலாசபதியவர்களுடன் இணைந்து செயற்பட்டுநின்றவர், அவர். ஆனால் இந்த இரண்டாவது கட்டத்திலே ,(கைலாசபதி அவர்கள் 1982இல் இயற்கை எய்தியதன் பின்னர்)  தனியொருவராகவே அவர் செயற்படவேண்டியநிலை ஏற்பட்டது.  என்பது நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய முக்கிய வரலாற்றம்சமாகும். இவ்வாறான பிரச்சினைகள் சார் சூழ்நிலை யை  அவர் பொறுப்புணர்வுடன் எதிர்கொண்டார்.   மார்க்ஸியத்தின்  உள்ளார்ந்த ‘வீரிய’த்தைத் தமிழ்ச் சூழலில் நிலைநிறுத்தும் ஒரு தத்துவவாதியாக  அவர் அயராது செயற்பட்டார்.  அவ்வகையில், ‘முற்போக்கு இலக்கிய அணியின்  தளகர்த்தராக’  அவர் தம்மைத் தெளிவாக இனங்காட்டிநின்றார்.

இவ்வாறான இவரது இரண்டாவது காலகட்டச் செயற்பாட்டின்  முக்கிய பதிவுகள் என்றவகையில், இலக்கியமும் கருத்துநிலையும்(1982),தமிழில் இலக்கிய -  வரலாறு எழுத்தியல் ஆய்வு (1988,2007),மதமும் கவிதையும் (1999), ஈழத்துத் தமிழிலக்கியத் தடம் - பார்வையும்  விமர்சனங்களும்(2000),  நவீனத்துவம் - தமிழ் - பின் நவீனத்துவம்(2001) விமர்சனச் சிந்தனைகள்(2001), தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (2004), தொல்காப்பியமும்  கவிதையும் (2007);,  தமிழின் கவிதையியல்  (2007) முதலியன  குறிப்பிடத்தக்கனவாகும். அவருடனான நேர்காணல்களின் பதிவுகளாக அமைந்த  கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்(2003) கார்த்திகேசு சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும்(2005)ஆகியனவும் இவ்வகையில் முக்கியத்துவமுடையவையாகும்.

சிவத்தம்பியவர்களின் திறனாய்வுசார் இயங்குநிலையின் மேற்படி  இரு கட்டங்களும்  தரும்  பொதுக் காட்சிகள் இவைதான்.  இவ்வாறான  அவருடைய  இருகாலகட்ட இயங்குநிலைகளைக் கோட்பாட்டுநிலைகளில்  உரியவாறு  தெரிந்துகொள்வதற்கும், குறிப்பாக  இரண்டாவது கட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பின் முக்கியத்துவத்தை மதிப்பிட்டறிவதற்கும்  முதற்கண்  மார்க்ஸிய இலக்கிய நோக்கானது தமிழ்ச்சூழலில் அறிமுகமாகித் தொடர்ந்ததான வரலாற்றைச் சுருக்கமாகவேனும் இங்கு சுட்டவேண்டியது அவசியமாகின்றது.

3.2. தமிழ்ச் சூழலில்  மார்க்ஸிய இலக்கிய நோக்கு அறிமுகமெய்திய வரலாறும் அதன் தொடர்ச்சியும்

 மார்க்ஸிய தத்துவ மூலவர்களான கார்ல் மார்க்ஸ்; மற்றும் பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் கலை, இலக்கியம் என்பன தொடர்பாகத் திட்டப்பாங்கான கோட்பாடுகளை உருவாக்கியவர்களல்லர். அவை தொடர்பான சில கருத்துகளை மட்டுமே அவர்கள் அவ்வப்போது முன்வைத்து வந்துள்ளனர். அக்; கருத்துகள் அவர்களின் கடிதங்கள், விமர்சனங்கள் முதலானவற்றில்  பதிவுபெற்றிருந்தன. அக்கருத்துக்களின் தொடர்ச்சியாக அவர்களின் வழிவந்த சிந்தனையாளர் பலர் முன்வைத்த கருத்தாக்கங்களினூடாக நமக்குக் கிடைத்துள்ள சிந்தனைப்பரப்பே மார்க்ஸிய கலை இலக்கியக் கோட்பாடுகளாகப் பின்னாளில் வடிவம் எய்தின என்பது இங்கு முதலிற் பதிவுபெறவேண்டிய செய்தியாகும் .

இவ்வகையில் உருவான முக்கிய    கோட்பாட்டு பார்வைகள் இருவகைப்படுவன.  இவற்றுள் ஒருவகைப்பார்வைகள்  விமர்சன யதார்த்தம் என்ற பொதுப்பெயரில் வழங்கப்படுவன.   இலக்கியத்தை ஒரு கலையாக்கமாக ஏற்றுக்கொண்டு அதனூடாகப் புலப்படும் சமூக இயங்குநிலைகளை இனங்கண்டு மதிப்பிடும் முறைமையாகும். இவ்வகையில், படைப்பாளியின் அநுபவ அம்சத்துக்கும் அது படைப்பாக உருவம் எய்தும்  நிலையான அழகியலுக்கும் உரிய மதிப்பளித்து விமர்சிப்பதான அணுகுமுறையாக  அமைவது, இது.

மார்க்ஸிய இலக்கிய நோக்கின் இன்னொருவகைக்  கோட்பாடானது  சோசலிஸ யதார்த்தவாதம் என்ற பெயரில் வழங்கப்’படுவதாகும். கலை மற்றும் இலக்கியம் என்பன ‘உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை யூட்டிச் சோசலிஸக் கட்டமைப்பை முன்னெடுக்கும்’ வகையில்  உருவாக்கம் பெறவேண்டும் என்பதே இதன் அடிநாதமான அம்சமாகும். இவ்வகையில் படைப்பினுடைய உள்ளடக்கத்தின் வர்க்கச்சார்புக்கு அழுத்தம்  தரும் நோக்குடையது இது. இவ்வகையில் படைப்பாளியின் அநுபவம் மற்றும் படைப்பின்  அழகியற்கூறுகள் என்பவற்றை இது பின்தள்ளுகின்றமை என்பது வெளிப்படை. இக்கோட்பாடு  ரஷ்யாவில் மார்க்ஸிய அரசியல் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்திலே அவ்வாட்சியமைப்பைக் கட்டிக்காப்பதான முனைப்புடன் ஸ்டாலினுடைய ஆசியோடு   1934 இல் உருவாக்கம் பெற்றதாகும் .

தமிழ் சூழலில மார்க்ஸியம்; ஒரு  ‘சமூக-அரசியல் தத்துவமாக   1940களில்  அறிமுகமாகத் தொடங்கியபோது சோவியத் ரஷ்யச்சூழல் சார்ந்த  அநுபவங்களின் ஊடாகவே அது கால்பதித்தது.  அவ்வகையில் அத்தத்துவம்சார்  கலை மற்றும் இலக்கியக் கோட்பாடு என்ற  நிலையிலே,  சோ~லிஸ யதார்த்தவாதம் சார்ந்ததான  பார்வையே - அதாவது சோசலிஸக் கட்டமைப்பை மனங்கொண்டதும் அவ்வகையில் வர்க்கச்சார்பு என்ற அணுகுமுறையை முன்னிறுத்துவதுமான பார்வையே –தமிழக மற்றும் ஈழச் சூழல்களில் அறிமுகம் எய்தியது. ஏறத்தாழ ஒருதலைமுறைக்காலம் வரை  இந்த அறிமுக நிலைப் பார்வையே தொடர்ந்தது.

மேலே முற்குறித்த விமர்சன யதார்த்தவாதம் சார் சிந்தனைகள்   தமிழ்ச் சூழலில் 1960களின் பிற்பகுதியிலிருந்தே அறிமுகமாகத் தொடங்கின. ‘வாழ்வின் அநுபவ  அம்சங்களிலிருந்தே இலக்கியம் பிறக்கின்றது என்பதன் அடிப்படையில் படைப்பின் கலைத்தன்மைக்கு உரிய இடமளிக்கும் பார்வைகள் இவை என்பதை முன்னரே நோக்கியுள்ளோம்.

இவ்வாறான விமர்சன யதார்த்தவாதம் சார்ந்த நெகிழ்வான சிந்தனைகளை அறிமுகமாகிக் கொண்டிருந்த கால கட்டத்திலே மார்க்ஸிய இலக்கியப்பார்வைசார்ந்த அடிப்படை அம்சங்களையே  கேள்விக்குட்படுத்தும் வகையிலமைந்தவையான இருப்பியல்  மற்றும் அமைப்பியல, பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம்  ஆகிய   ஐரோப்பிய சிந்தனைகள்  ஒன்றன் பின்னொன்றாகத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாயின. இவற்றுள் முதலாவதான இருப்பியல் மார்க்ஸியத்துக்கு நேரெதிர்த் தளநிலையான நவீனத்துவ சார்பானதாகும். ஏனையவை  மார்க்ஸியத்தின் வர்க்கப் பார்வை என்ற உள்ளடக்க அம்சத்தையும் நவீனத்துவத்தின் படைப்பாளுமை அம்சத்தையும் ஒருசேர விமர்சிப்பதான சிந்தனைகளாக வெளிப்பட்டவையாகும். தமிழ்ச் சூழலில் இவற்றை முன்வைத்தோருட் பலரும் - குறிப்பாக,எஸ். வி.ராஜதுரை மற்றும் தமிழவன்  முதலியோர்- இலக்கியவுலகில் தொடக்கத்தில் மார்க்ஸியராகவே அடிபதித்துப் பின்னர் அதிலிருந்து தளமாற்றம் எய்தியவர்களாவர்.

மேற்சுட்டியவாறான விமர்சன யதார்த்தவாதம் முதலியனவாக 60-70களுக்குப் பின் அறிமுகமான   திறனாய்வியற்    சிந்தனைகள் மார்க்ஸியத்தின் வர்க்கப் போராட்ட உணர்வெழுச்சியை மழுங்கடிக்கக் கூடியவை என்ற வகையிலான கருத்தோட்டம் மார்க்ஸிய இலக்கியவாதிகளுள் ஒருசாராரிடையே அக்காலப்பகுதியில் நிலவியது. அவர்களிடம் அச்சிந்தனை இன்றுவரை தொடர்கின்றது. இதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை மார்க்ஸியருள் இன்னொருசாரார் மேற்கொண்டனர். இவர்கள் இவ்வாறான   புதியசிந்தனைகள் மார்க்ஸியத்துக்குப் புதுவாழ்வளிக்கக் கூடிய ‘இயங்கியல் நிலையிலான வளர்ச்சி மற்றும் மாற்றம்’  எனக் கருதி வரவேற்றனர். முன்னைய நிலைப்பாட்டினரை ‘மரபு மார்க்ஸியர்’ எனவும் பின்னைய போக்கினருள்  ஒருசாராரை ‘நவ மார்க்ஸியர்’ எனவும் சுட்டி  வேறுபடுத்தி நோக்கும் பார்வைகளும் தமிழிலக்கியச் சூழலில் 80 - 90 களில் உருவாகின. (பார்க்க:முனைவர் சு. துரை,தமிழ் இலக்கிய ஆய்வில்  மார்க்ஸிய நோக்கு-2000.பக்.25-28)

   3.3. சிவத்தம்பியவர்கள் மேற்கொண்ட அணுகுமுறை

மேற்சுட்டியவாறான வரலாற்றிலே மேற்சுட்டிய முதலாவது கட்டத்தில் 1950களில் மார்க்ஸிய விமர்சகராக அடிபதித்த சிவத்தம்பி அவர்கள் அச்சூழலின் சோசலிச யதார்த்தவாத  சிந்தனையால் வழிநடத்தப்பட்டவர் என்பது வெளிப்படை. அறுபதுகளின் பிற்பகுதியில் விமர்சன யதார்த்தவாதம் சார் புதிய சிந்தனைகள் அறிமுகமானபோது மார்க்ஸியத்தின் அடிப்படைகளினின்று விலகாமலே அவற்றை உரியவாறு புரிந்துகொள்ள முற்பட்டவர், அவர். அவ்வகையில் அவர்  புது வரவுகளை ‘இயங்கியல் நிலையிலான வளர்ச்சி மற்றும் மாற்றம்’ என்பனவாகக் கருதி   அவற்றின் பயன்பாட்டு அம்சங்களைக் கவனத்திற்கொள்ள முற்பட்டவருங்கூட. இத்தொடர்பிலே சோசலிச யதார்த்தவாதம் மற்றும் விமர்சன யதார்த்தவாதம்  ஆகியவற்றுக்கிடையிலான  முரண்பாட்டிலே இரண்டினதும் ‘சாதக – பாதக’ அம்சங்களை ஒரு ‘கொள்கைத் தெளிவுள்ள’ மார்க்ஸியவாதியாக நின்று நிதானித்து வரலாற்றுப் பார்வையுடன் விளக்கியுரைக்கும் பணியை சிவத்தம்பியவர்கள்  மேற்கொண்டார். இத் தொடர்பில்  இலக்கியப் படைப்பில் அழகியலுக்குரிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இவ்வகையில் ,
   
     “இலக்கியம்  என்பதுவெறும் கருத்துக் கோவையன்று. அது
      அழகுணர்ச்சியுடன்சம்பந்தப்பட்டது. கருத்தாழமற்ற, ஆனால்
      கலையழகுள்ள ஒரு ஆக்கம் இலக்கியமாகக்கருதப்படலாம்.
      ஆனால் கலையழகற்ற கருத்தாழமுற்ற ஆக்கம் இலக்கியமாகாது.”
                   ( இலக்கியமும் கருத்துநிலையும் -1982. ப.19)

என்ற அவருடைய கருத்து   முக்கியமானது. இலக்கிய ஆக்கம்பற்றிய பார்வையிலே கவனத்துக்குரிய முதன்மை அம்சம் அதன் அழகியலே என்பதை இக்கூற்று உறுதிபட உணர்த்திநிற்கின்றமை வெளிப்படை. அவருடைய இக்கூற்று வெளிப்பட்ட விவாதச்  சூழல் இங்குநமது கவனத்துக்குரியது.

ஏறத்தாழ சமகாலத்தில் சற்று முன்பாக இவருடைய தோழரான கலாநிதி கைலாசபதியவர்கள்  “முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்” என்ற தலைப்பிலான  தமது கட்டுரையிலே, ‘அழகியல் பற்றிப் பேசுவது வர்க்கமுரண்பாட்டின் பிரதிபலிப்பே’ என்பதான  கருத்தைப் பதிவுசெய்திருந்தார்.

                    “ஆழமாக நோக்கினால் கலைவாதிகள் அறிந்தோ அறியாமலோ
         சமுதாய மாற்றத்துக்காகப் பாடுபடும் எழுத்தாளனின் ஆக்கங்களையே
         அழகியலின் பெயரில் நிராகரிக்கின்றனர். இது தற்செயல்
          நிகழ்ச்சியல்ல வர்க்கமுரண்பாட்டின் பிரதிபலிப்பாகவே உள்ளது.”
                      (சமர். முற்போக்குக் கலைஇலக்கிய இதழ்  2வது வெளியீடு.-ஜுலை1979)

என்பதே கைலாசபதியவர்களின்  அப்பதிவாகும். சோசலிஸ யதார்த்தவாதம் சார்ந்த கருத்தாக்கம் ,இது.

இக்கூற்று அக்கால கலைவாதிகளின் அதாவது அழகியலை முன்னிலைப்படுத்து வோருட் சிலரின் அணுகுமுறை பற்றிய விமர்சனம் என்பது வெளிப்படையாகத் தெரிவது. சற்று ஆழமாக நோக்கினால் அழகியலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதான ஒருகருத்தாக்கமாகவும் இது திகழ்கின்றமையை உய்த்துணரமுடியம். அழகியலின் பெயரால் ஒரு இலக்கிய ஆக்கம் நிராகரிக்கப்படலாகாது என அவர் வாதிட முற்பட்டுள்ளமை இதில் தெளிவாகவே புலனாகின்றது. மேலும், கலைவாதிகள் மட்டும் தான் அழகியல் பற்றிப் பேசுகிறார்கள் என்பதான ஒரு எண்ணப்பாங்கையும் இக் கூற்று புலப்படுத்திநிற்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் உண்மையில் மார்க்ஸிய சிந்தனைச் சார்புள்ள முற்போக்கு இலக்கிய வாதிகளுங்கூட இலக்கிய ஆக்கத்திற் கலையின் முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை அன்று(1970களின் பிற்பகுதியில்) நிலவியது. இதற்கு ஒரு முக்கிய சான்றாக, மேற்படி சமர் 2   இதழில் சித்திரலேகா மௌனகுரு அவர்கள் “ஈழத்து இலக்கியமும் இடதுசாரி அழகியலும் - சில குறிப்புகள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள  கட்டுரையில் தந்துள்ள,

                 “சுத்த கலைவாதிகளே அழகியல் பற்றிப் பேசுபவர்கள் என்ற
                வகையில் நிலவிவரும் கருத்தால் இளம் எழுத்தாளர்களும்
                இலக்கியமாணவர்களும் தெளிவான பின்னணியில் காலூன்ற
                முடியாதநிலை உளது”.

என்ற குறிப்பு அமைகின்றது. இவ்வாறான சூழலில்தான்  மேற்சுட்டியவாறு  கைலாசபதியவர்கள் முன்வைத்ததான சோசலிஸ யதார்த்த வாதத்தளம்சார்ந்த கருத்தை விமர்சித்து எழுந்த  ஒரு எதிர்ப்புக்குரலாகவே சிவத்தம்பியவர்களின் மேற்சுட்டியஅழகியற் சார்பான  கூற்று அமைந்துள்ளமை உய்த்துணரக்கூடியதாகும். மேற்சுட்டிய வாறான கைலாசபதியவர்களின் கருத்து தொடர்பாக  சித்திரலேகா மௌனகுரு அவர்கள் எழுப்பிநின்ற பிரச்சினை அம்சத்துக்கும் விடையளிப்பது போல – அதாவது விவாத மொன்றை முடித்து வைப்பது போலச்  சிவத்தம்பியவர்களின் மேற்படி கூற்று திகழ்கின்றமை உய்த்துணரக் கூடியதாகும்.

இதனை நோக்கும்போது  எழுபதுகளின் ஈற்றில் சிவத்தம்பியவரகள்  விமர்சனயதார்த்த சார்பான நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார் என்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். இதன் தொடர்ச்சியாக, விமர்சன யதார்த்தவாதம்  சார்ந்த  சிந்தனைகள் பலவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியன என்பதை   அவர் அவ்வப்போது  வெளிப்படுத்திவந்துள்ளார். 

 ‘சோசலிஸ யதார்த்தவாதம் என்ற அணுகுமுறையானது ‘சோசலிஸப்புரட்சி ஏற்பட்டு அது அரசியல் அதிகாரநிலையில் நடைமுறைப் படுத்தப்படும்நாடுகளுக்கே பொருந்தக் கூடியது. அவ்வாறான புரட்சிகள் நிகழாத  இந்தியா மற்றும் இலங்கை முதலிய நாடுகளுக்கு அது  பொருந்தாது  அவ்வகையில்,  இந்நாடுகளில்மார்க்ஸியம் அறிமுகமான ஆரம்பக் கட்டத்தில் சோசலிஸ  யதார்த்தவாதம்  முன்னிறுத்தப்பட்டமை ஒரு வரலாற்றுத் தவறு ஆகும். இந்நாடுகளில்  முதலில் சமூகத்தின்அடிமட்டத்தில் சோசலிஸம் தொடர்பான  விழிப்புநிலை தோற்றவிக்கப்படவேண்டும் அதற்கேற்றவகையில் அழகியலுக்கும்  அத்தொடர்பில் அநுபவ அம்சங்களுக்கும்  முதன்மையளிப்பனவான விமர்சன  யதார்த்தவாத சார்பான பார்வைகளே  இந்நாடுகளில் மார்க்ஸியநோக்காக முதலில் முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.’

 1980- 90 காலப்பகுதியில் எழுத்திலும் மேடைகளிலும் ; பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் விரிவாக வலியுறுத்திநின்ற விமர்சன யதார்த்தவாதச்  சார்புடைய  கருத்துகளின் சாராம்சம், இது. (மேலதிகவிளக்கத்திற்கு: கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - 2003.பக் 237-38) இவ்வாறு விமர்சன யதார்த்தவாதச் சிந்தனைகளை வரவேற்றுநின்றவரான சிவத்தம்பியவர்கள் அதேவேளை, இருப்பியல் மற்றும் அமைப்பியல் முதலான மேற்சுட்டிய  புதுவரவுகளுக்கான சமூக பண்பாட்டு நிலைகளை   நுனித்து நோக்கி விமர்சிக்க முற்பட்டவராவார். அவ்வகையில் அவர் , மார்க்ஸியத்தின் உயிர்ப்பான – மானுடச்சார்பான- கூறுகளிலிருந்து மேற்படி புதுவரவுகள்  விலகிச் செல்லும் இடங்களைஅவர் கவனத்திற் கொள்ள முற்பட்டவருமாவார். இத்தொடர்பில் அவர்,மேற்படி புதிய வரவுகளின் அம்சங்கள் சில,  மார்க்ஸியத்தினுடைய ‘சமூகப்பயன்பாடு’ என்ற அடிப்படை நோக்கினை எவ்வாறு மறுதலிக்கின்றன என்பதையும் ‘முதலாளித்துவ’த்தின் ‘மறைமுகக்கரங்’களும் ‘பகுத்தறிவுக் கொவ்வாத பார்வை’களும் எந்த அளவுக்கு இவற்றில் தொழிற்படுகின்றன’ என்பதையும்   விரிவாகவே சிந்தித்தவராவார்.  அத்துடன் குறிப்பாக, அச்சிந்தனைகளை முன்வைத்தவர்களின் இலக்கியத்தள இயங்குநிலைகளையும். அவர் ஆய்வுக்குட்படுத்திவந்துள்ளார்.  இவைதொடர்பிலே அவர் பதிவுசெய்துள்ள கருத்துகள் விரிவான தனிநிலை  ஆய்வுக்;குரியனவாகும்.  இக்கட்டுரைப் பொருண்மை  அதற்கு இடந்தருவதன்று . எனவே அவரது இத்தொடர்பிலான  நிலைப்பாடுகளை  அறியத்தரும் வகையிலான  சில சான்றுகள்  மட்டும் இங்கு கவனத்திற்கு இட்டுவரப்படுகின்றன. இவை தமிழகத்தில் வெளிவரும் கணையாழி சஞ்;சிகையின் 1999 ஆகஸ்ட்  இதழில்,  “மார்க்ஸீயமும் ,இலக்கிய விமர்சனச் சமகாலச் செல்நெறியும்” என்ற தலைப்பிலே அவர் எழுதிய கட்டுரையிலே பதிவானவையாகும். (மேற்படி கட்டுரையானது  1999-மேமாதத்தில் கோவையில்நடைபெற்ற  தமிழ்நாடு முற்போக்க எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாட்டிற்காகத் தயாரிக்கப்பட்டதாகும்.மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்சிலரின் வேண்டுகோளுக்கிணங்க  இதன்  ஒருபகுதியே மாநாட்டில் வாசிக்கப்பட்டது .பின்னர் முழவடிவில் கணையாழியில் பதிவானது.); 

இக்கட்டுரையிலே அவர், ஐரோப்பியச் சூழலில் அமைப்பியல் முதல் பின் நவீனத்துவம் வரையான சிந்தனைகள் உருவான ‘சமூக- பொருளிய’ற் பின்புலங்களை விளக்கியுரைக்கிறார். அச் சூழலில் 1960களில்  உருவான அப்புதியசிந்தனைகள் பின்னர் தமிழ்ச் சூழலில் அறிமுகம் எய்தியமை ‘தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்ற நிகழ்வு’ என்றே அவர் கணித்துள்ளார்.  ஆனால் அவை அறிமுகமெய்திய முறைமையானது  தெளிவற்றதாகவும்  நிறைவற்றதாகவும்  இருந்தது என்பதே அவை தொடர்பிலான அவரதுமுக்கிய  விமர்சனமாகும்.இதனை ,

 “  …புதிய கொள்கைகளின் வரவு பற்றியும் அவற்றின் பண்புகள் பற்றியும் , எடுத்துக்கூறப்பட்டபொழுது ஒரு முக்கிய குறைபாடு இருந்தது. இந்தச் சிந்தனை மரபுகளின்  தோற்றம் வளர்ச்சி ,பரவல் பற்றிய மெய்யியற் பின்புலத்தெளிவு ,கருத்துநிலை உள்ளார்த்தங்கள் விளக்கப்படாது இவை தமிழில் வழங்கப்பட்டன. அத்துடன் ,அமைப்பியல் , பின்-அமைப்பியல் வாதங்களில் மேனாடுகளில் முக்கியத்துவம்  பெற்ற சகல இலக்கியக் கொள்கைகளையும் அவையவைக்குரிய கொள்கை விளக்கப்  பின்புலத்தில் தமிழ்வாசகர்களுக்கு ,இலக்கியப் பிரியர்களுக்குத் தராமல் இவற்றிற் சில  பற்றி மாத்திரமே அழுத்தம்பெறும் ஒரு சமூகஇலக்கியச் சூழல் இங்கு நிலவியது. இந்தக் கையளிப்பில் ஒரு தெரிந்தெடுப்பு  (ளநடநஉவiஎவைல)இருந்தது. இதனால் இவை பற்றிய மார்க்ஸீயநிலைப்பாடு பற்றிய ஒரு விளக்கமற்ற நிலையே எற்பட்டது.”

எனவரும் அவருடைய குறிப்பு (ப.25)உணர்த்தும். அதாவது தமிழ்ச் சூழல் இவற்றை உள்வாங்கிக் கொள்ளத்தக்கவகையிலும்; சரியான முறைமையிலும்  இவை அறிமுகம் எய்தவில்லை என்பதே  பேராசிரியருடைய மேற்படி கூற்றின் சாராம்சமாகும்.

இத் தொடர்பில் அவர் மேலும் விக்கம் தருமிடத்து, மேற்படி புதிய சிந்தனைகளின் உருவாக்கத்தில் மார்க்ஸியத்திலிருந்தும் பல அம்சங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பதும் சுட்டிக்காடடப்பட்டுளது.     

“உண்மை என்னவென்றால் 1960-களிலிருந்து வரத் தொடங்கிய இலக்கியச்சிந்தனைகள் பற்றிய வாத – விவாதத்தின்பொழுது,அமைப்பியல்வாதம் கட்டவிழ்ப்புவாதம் ,பெண்நிலைவாதம் ஆகியன போன்று அவற்றுடன் சேர்ந்துமார்க்ஸீயமும் ஒரு முக்கிய இலக்கியக் கொள்கையாக விவாதிக்கப்பட்டது. உண்மையில் புதிய இலக்கியக் கொள்கைகளின் உருவாக்கத்தின்  பொழுது, மார்க்ஸீயத்தின் சிந் தனைவளத்திலிருந்தும் ,தர்க்கத்திலிருந்தும் பல அம்சங்கள் எடுத்தக்கொள்ளப்பட்டன. ஃபூக்கோ , றோலன்ட் பார்த் போன்ற  பலர் தமதுபுலமையுலகுப்பிரவேசத்தின் பொழுது மார்க்ஸிஸ்டுகளாகவே இருந்தனர்.”  (ப.25)

இவ்வாறு மேற்படி புதியவற்றின் உருவாக்கப் பின்புலம்பற்றித் தனது கட்டுரையிலே  ஆய்வுநிலையில் எடுத்துப்பேசியவரான  பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் அப்புதுவரவுகளுள் குறிப்பாக, பின்-நவீனத்துவத்தைப் பற்றி அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார். அது (பின்- நவீனத்துவம் ) அனைத்துலகச்  சூழலில்  ‘பிந்திய முதலாளித்துவ’(டுயவநஊயிவையடiஅ)நிலைமையின் தர்க்கரீதியான வெளிப்பாடு என்பது பிரடெரிக் ஜேம்ஸன் என்ற அமெரிக்க ஆய்வறிஞரின் கருத்தாகும். டெர்ரி ஈகிள்டன் என்றபிரித்தானிய  ஆய்வறிஞர் இதனை மேல்வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ (LateCapitalim) நிலைமையாகக் காண்பார். இக்கருத்துகளை வழிமொழிந்து பின் நவீனத்துவத்தை விளக்கிச் செல்லும் பேராசிரியர் சிவத்தம்பியவர்கள்அது“புறக்கணிக்கப்படக் கூடியதன்று. மாறாக, எதிர்கொண்டு புறங்காணப்படவேண்டியது” என்பதான கருத்தை மேற்படி  கட்டுரையிறுதியில் முன்வைத்துள்ளார்.

     “ பின்நவீனத்துவத்தைப் புறங்காண்பதற்கான வழிஅதன் இயல்புக்கான
      காரணத்தைஅறிவதுதான் மார்க்ஸீயம் எனபது மேலே மேலே பாயும்
      நதி. அது பின்னோக்கிப் பாய்வதில்லை. பின் நவீனத்துவத்தின்
      இயல்பைக் கண்டதன்பின்னர்,நாம் எங்கே நிற்கிறோமோ  அங்கிருந்து
      மேலே செல்லல் வேண்டும் அது தான் pசழபசநளள-முற்போக்கு.” (ப.30) 

என்பது அவருடைய கூற்று. அதாவது தமிழரின் சமூகச் சூழலிலே பின் நவீனத்துவ சார்பான சிந்தனைகள் உருவாவதற்கான காரணிகளை மார்க்ஸியவாதிகள் தெளிவாக ஆராய்ந்தறிந்து அதனை வெற்றிகொண்டு முன்னேறவேண்டும் என்பதே பேராசிரியர் அவர்கள் முன்வைத்துள்ள முடிபாகும். 

இவ்வாறான அவருடைய நிலைப்பாடு சமகாலத்தில் ‘மரபு மார்க்ஸிய’ராலும்  ‘நவ மார்க்ஸிய’ராலும் பல நிலைகளில் விமர்சிக்கப்பட்டன. அவற்றுக்கு அவர் தர்க்க ரீதியாக விடையளிக்க முற்பட்டுள்;ளார்.  அவ்வகையில மேற்படி கணையாழி சஞ்சிகையின் 1999செப்டம்பர் முதல்   டிசம்பர் வரையான  இதழ்களிற் பதிவான  விவாத உரைகள் சிவத்தம்பியவர்களின் இயங்குநிலை  தொடர்பான விரிநிலை ஆய்வில் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய முக்கியத்தவமடையவையாகும்;

  3..3.1 இத்தொடர்பில் மேலும் ஒரு குறிப்பு :

பேராசிரியர் சிவத்தம்பியவர்கள்  ஒருதிறனாய்வாளர் என்ற நிலையில் ‘விருப்பு - வெறுப்பு’ளுக்கு அப்பாற்பட்ட தளத்தில் நின்று  விவாதங்களை மேற்கொண்டவராவார். அவ்வகையில் நாகரிகமான விவாத அணுகுமுறை கொண்டவர,அவர. அவரது இப்பண்பானது தமிழகத்தினரை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இதற்கு,  தமிழக விமர்சகரும் அமைப்பியலைத் தமிழ்ச் சூழலுக்கு  அறிமுகஞ் செய்தவருமான  தமிழவன் அவர்கள் அநுபவநிலையில் தந்துள்ள பின்வருங்குறிப்பு  முக்கிய சான்றாகின்றது.

   “….அவரது அந்த விளக்கத்தில் என்னைக் கவர்ந்த முதல்வி~யம் எவ்வளவு 
     நாகரிகமாக விவாதம் செய்யவேண்டும் என்று அவர் கற்பிக்கிறார் என்பது.
     வேறு கருத்துக்கள் சொல்லப்பட்ட உடன், உணர்ச்சிவசப்பட்டு ஆக்ரோஷம்
     கொள்ளும் நம் சூழலில் பேரா. கா. சிவத்தம்பி சொல்லித்தரும்
     இந்தப்பாடம்விவாதத்தில்ஈடுபடுபவர்கள்கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளத்
     தக்கது.”
     (கணையாழி டிசம்பர்.1999.ப..3)

4. நிறைவாக…

‘தமிழ்த் திறனாய்வியல் வரலாற்றில பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பியவர்களின் இயங்குநிலை’ என்ற தலைப்பிலான  இக்கட்டுரையானது அவரது திறனாய்வியல் ஆளுமை தொடர்பாக எதிர்காலத்தில்  நிகழக்கூடிய விரிநிலை ஆய்வுகளுக்கான ஒரு முன்னோடி முயற்சியாகும். தமிழ்ச் சூழலிலே  மார்க்ஸிய இலக்கிய நோக்கை  விளக்கியுரைக்கும் தத்துவவாதியாகவும்  முற்போக்கு இலக்கிய அணியின் ‘தளகர்த்த’ராகவும் அவர் சிறப்பாகச் செயற்பட்டுநின்றார் என்பதும்,  அம் முயற்சிகளை  நாகரிகமான விவாத அணுகுமுறை யுடன் அவர் மேற்கொண்டார்   என்பதுமே  இதில் கோடிட்டுக் காட்டப்பட்ட முக்கியசெய்திகளாகும். இத்தொடர்பிலான  எனது சிந்தனைகள் மேலும் அகலமும் ஆழமும்  எய்துவதற்கு வாசகர்களது பங்களிப்பை எதிர்நோக்கி இக்கட்டுரையை நிறைவுசெய்;கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
01-07-2014