வன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கியம்: ஈழத்தின் வன்னி மண்ணின் பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு

Wednesday, 18 November 2015 08:11 - கலாநிதி நா. சுப்பிரமணியன் - கலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்
Print

(நோர்வேயில் வதியும் ஈழத்தமிழரான  திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் என்பாரின்  பதிப்பு முயற்சியில் 2014இல்  வெளிவந்ததான வன்னி வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பிலான பெருந் தொகுப்பில் (675 பக்கங்கள்) இடம்பெற்ற கட்டுரை. எழுதியனுப்பிய நாள் 29-03-2014)

தோற்றுவாய்
dr_n_subramaniyan.jpg - 12.37 Kbஈழத்திலே தமிழர் பெருந்தொகையினராக  வாழும் நிலப்பரப்புகளிலொன்றாகத் திகழ்வது வன்னிப் பிரதேசம் ஆகும். இப்பிரதேசமானது  பண்டைக்காலம் முதலே தமிழரின் கலைகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைச் சிறப்புற வளர்த்துவந்துள்ளது. இன்றும் வளர்த்துவருகின்றது.    ஈழத்தின் ஒட்டுமொத்த  தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலே வன்னிப்பிரதேசத்திற்;கு  ஒரு தனி இடம் உளது என்பது அழுத்திப் பேசப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.  இவ்வகையில் இம்மண்ணின் இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுப் பார்வையானது  தனியாக ஒருநூலாக விரிவுபெறக்கூடிய பொருட்பரப்புடையதாகும். இத்தொகுப்புநூலின்   இடச்சுருக்கம் கருதி பண்டைய இலக்கியங்களின் தோற்றம் தொடர்ச்சி என்பன தொடர்பான  மிக முக்கிய செய்திகளை மையப்படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டுமே  எனது இக் கட்டுரை முயற்சி அமைகிறது.1

1. வன்னி என்ற நிலப்பரப்பும் அதன் இலக்கிய வளமும்
வன்னிப் பிரதேசம் என்று இன்று நாம் குறிப்பிடும் நிலப்பரப்பானது, வடக்கில் யாழ்ப்பாணக் கடலேரியையும் தெற்கில்  வடமத்திய மாகாணப்பகுதி மற்றம் அருவியாறு ஆகியவற்றையும் கிழக்கிலும் மேற்கிலும் முறையே திருக்கோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டதாகும்.  ஏறத்தாழ 2000சதுரமைல் பரப்பளவுடையதான  இந்நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்றைய ‘வன்னி’ மற்றும்   ‘முல்லை’ மாவட்டங்களுள் அடங்கியதாகும்.

ஆயினும்,  கடந்தசில நூற்றாண்டுகளுக்கு முன்வரை-குறிப்பாக 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதிகளில்- ‘வன்னி’ என்ற அடையாளச் சுட்டானது மேற்சுட்டிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து பரந்ததாக அமைந்திருந்தது என்பது இங்கு நினைவிற் கொள்ளப்படவேண்டியதாகிறது. குறிப்பாக மன்னார் மற்றம் திருக்கோணமலை மாவட்டப் பகுதிகளையும் உள்ளடக்கி , தெற்கே புத்தளம் மற்றும்  மட்டக்களப்பு ஆகிய   மாவங்கள் வரை  விரிந்து பரந்த நிலப்பரப்புகளும்   ‘வன்னி’ என்ற  அடையாளம் அக்காலப்பகுதிகளில் பெற்றிருந்தன. வன்னிபம் அல்லது வன்னிமை எனப் பெயர்தாங்கிய குறுநில ஆட்சியாளர்களின் ஆட்சிப்பிரதேசங்களாக  இந்நிலப்பரப்புகள் திகழ்ந்துவந்துள்ளன. எனவே ஈழத்தின் வன்னிப் பிரதேசமானது பண்டைய நிலையில்  பரந்து விரிந்ததாகத் திகழ்ந்தது என்பதையும்  நாளடைவில் அதன் எல்லைகள் சுருங்கிவந்துள்ளன  என்பதையும் இங்கு கருத்துட்கொள்வது அவசியமாகும்.

இலக்கியம் என்ற  அடையாளத்துக்க உட்பட்ட ஆக்கங்களை, வாய்மொழி இலக்கியம் ,  எழுத்திலக்கியம என  இருவகைப்படுததும் மரபு உளது.  இவற்றுள் முதல்வகையின சமூகமத்தியில்   வாய்மொழியாக வழங்கிவந்து  பின்னர் ஒரு குறித்த காலகட்டத்திலே  எழுத்தில் பதிவாகி,  நிலைத்த வாழ்வுபெற்றவையாகும். இவற்றைமக்கள் இலக்கியம் ,நாட்டார்  இலக்கியம் முதலான பெயர்களிலும்  வழங்குவது மரபு. இவ்வகைப்படைப்புகள்   ‘யாரால் படைக்கப்பட்டன?’ என்பதை அறியமுடியாதவை. இரண்டாவது வகையின குறித்த ஒருவரின் அல்லது சிலரின்  படைப்புகள்  என்றவகையில் எழுத்தில் பதியப்பட்டுப் பேணப்பட்டுவருவனவாகும். ஈழத்தின் மேற்சுட்டிய வன்னிப்பிரதேசமானது  மேற்படி இருவகை இலக்கியங்ளையும் தோற்றுவித்துள்ளது என்பது இங்கு நமது கவனத்துக்குரிய செய்தியாகும்.   

2. வன்னியின்  வாய்மொழி இலக்கியம்
இவ் வகைமைச்குச் சான்றாகப் பேணப்பட்டனவாக நமக்குக் கிடைப்பவை பள்ளு ,சிந்து, கும்மி முதலான நாட்டார் பாடல்கள் என்பதான வகைமையில்  அமைந்தனவாகும்  இவ்வகைப் பாடல்களை அவற்றின் உள்ளடக்க நிலை சார்ந்து   தொழில்சார் பாடல்கள், சமயச் சார்பான பாடல்கள், மற்றும் வரலாற்றுக்கதைப் பாடல்கள் என மூவகைப்படுத்தலாம்.

தொழில்சார் பாடல்கள்:
பன்றிப்பள்ளு, குருவிப்பள்ளு, குருவிச் சிந்து, கமக்காரன் வயந்தன்

சமயம் சார் பாடல்கள்:
பிள்ளையார் சிந்து, பரமசிவன் சிந்து, அம்மன் சிந்து, நாகதம்பிரான் சிந்து, ஐயனார் சிந்து, வீரபத்திரன் சிந்து,  அண்ணமார் சிந்து, வதனமார் சிந்து,நாச்சிமார் சிந்து,
முறிகண்டியான் சிந்து, ஐவர்சிந்து, கல்லடியான் காதல், கொட்டுக்கிணத்தடி பிள்ளையார் கும்மி.

வரலாற்றுக்கதைப் பாடல்கள்:
வேலப்பணிக்கன்ஒப்பாரி, குளக்கோட்டன்சிந்து.

மேற்சுட்டிய  நாட்டார் பாடல்கள் என்ற வகைமையில் அமைந்த ஆக்கங்களுட்பலவும் வன்னிப் பிரதேசத்தின் விவசாயக் களம் மற்றும் சமய நம்பிக்கைகள் என்பன சார்ந்தவை யாகும். விவசாயச் சூழலின் பல்வேறு தொழில் நிகழ்வுகளில் உணர்வு பூர்வமாக இணைந்து உற்சாகத்துடன் பங்குகொள்வதற்கும் சமய வழிபாட்டுநிகழ்வுகளின்போது அத்தொடர்பிலான  நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமாக இவ்வகைப்பாடல்கள் பலவும் காலங்காலமாகப் பாடப்பட்டுவந்துள்ளன.

தொழில்சார் பாடல்கள் என மேலே சுட்டப்பட்டவற்றுள் பன்றிப்பள்ளு, குருவிப்பள்ளு மற்றும்   குருவிச் சிந்து ஆகியவை  அம்மண்ணின் விவசாயச் சமூகமானது விலங்குகள் பறவைகள் முதலியவற்றால் எதிர்கொள்ளும் இழப்புகளை மையப்படுத்தியவை. விவசாயிகளின் முக்கிய உற்பத்திப் பொருளான நெல்லின் ஒருபகுதி வனவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகின்றமை தொடர்நிகழ்வாகும். இவற்றிலிருந்து நெல்லைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் இரவும் பகலும் காவல் புரிவது அவசியமாகிறது.இவ்விழப்புகளுக்குக் காரணமான முக்கிய விலங்கினமாகவும் பறவையினமாகவும் அமைபவை பன்றி மற்றும்   குருவி என்பனவாகும்.     அவ்வினங்கள் தத்தம் உறவுகளோடு சுவைபட  உரையாடும் பாங்கில் உருவானவையே    பன்றிப்பள்ளும்    குருவிப்பள்ளும் ஆகும். பன்றிப் பள்ளு என்பதை வன்னிப் பிரதேசப் பேச்சு மொழியிலே  பண்டிப்பள்ளு என்றே வழங்குவர்.(இவ்வாக்கங்கள் பள்ளு எனப்படும் சிற்றிலக்கிய வகைமைக்குள் அமையாதவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய செய்தியாகும்.)

நெல்லை உண்ணவரும் குருவிகளின் வகைமை,  அவை எவ்வௌ;விடங்க@டாக வருகின்றன   என்பன தொடர்பான விபரம் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு முயற்சிகள் என்பவற்றைப் பாடல்வடிவில் சுவைபட எடுத்துரைப்பது,   குருவிச் சிந்து என்ற ஆக்கம்.

பிள்ளையார் சிந்து முதலாக அமையும் கடவுள்பெயர்கொண்ட சிந்துப்பாடல்கள் வன்னிமண்ணின் தெய்வநம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைமைகள் என்ப வற்றுடன் தொடர்புடையவையாகும். இந்து சமயம் சார்ந்த- குறிப்பாகச் சைவசமய மரபுகளுடன் தொடர்புடைய - பல்வேறு  புராணச்செய்திகளைப உள்ளடக்கிய மேற்படி சிந்துப்பாடல்களிற் பலவும்  விவசாயச் சூழல்களில் பாடப்படுபவையாகும் . வன்னிப்பிரதேசத்தின் பல்வேற தெய்வத்தலங்கள் பற்றிய தகவல்களை இச்சிந்துப்பாடல்கள் நமக்கு அறியத்தருகின்றன.  குறிப்பாக,அம்மன் சிந்து என்ற ஆக்கம் வன்னியின் அன்னைத்தெய்வமான வற்றாப்பளைக் கண்ணகை அம்மனின் வழிபாட்டு மரபுபற்றிய செய்திகளைத் தருவதாகும். கொட்டுக் கிணத்தடிப் பிள்ளையார் கும்மி எனற பாடலானது  குமழமுனை என்ற  கிராமத்திற் கொட்டுக்கிணற்றடி என்ற இடத்தில கோயில்கொண்ட விநாயகப் பெருமானின் வரலாற்றைப் பேசும் வகையில் அமைந்ததாகும்.

வரலாற்றுக்கதைப்பாடல்களில் முதலாவதான  வேலப்பணிக்கன் ஒப்பாரியானது சின்னவன்னியன் என்ற வன்னி மன்னனின் ஆட்சிச் சூழலில் ஒரு பெண்ணின் வீரம் வெளிப்பட்ட பாங்கை உள்ளடக்கமாகக் கொண்டது. யானைப்பணிக்கர்களால் கட்டுப்படுத்தமுடியாதிருந்த கொம்பன் யானையொன்று  அரியாத்தை என்ற பெண்ணால்  அடக்கப்பட்டது என்பதே இங்கு பேசப்படும் வீரச்செய்தியாகும். குளக்கோட்டன் சிந்து என்ற பாடல் வன்னிப் பிரதேச வரலாற்றுடன் தொடர்புடைய குளக்கோட்டன் என்ற மன்னனைப்பற்றிய தகவல்களைத் தருவது. அவன் குளங்கட்டிய செய்திமற்றும் அக் குளக்கட்டில்  ‘தென்கோண நாதர்’ என்ற இறைவருக்கு சிலை நிறுவிய செய்தி என்பன  இச்சிந்துப்பாடலில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு பலவகைகளிலும் எழுந்த இவ் வாய்மொழி இலக்கியப்பரப்பை  ஒன்றுதிரட்டி நூல்வடிவில் அச்சேற்றி வெளிக்கொணர்வதற்கான முயற்சிகள் இலக்கிய ஆர்வலர் சிலரால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டுவந்தன. முள்ளியவளை என்ற  கிராமத்தைச் சார்ந்த திரு.  சி.ச. அரியகுட்டிப்பிள்ளை என்பார் 20ஆம்நூற்றாண்டின் முற்பகுதியில் அருவிச்சிந்து ,கதிரையப்பர் பள்ளு, பண்டிப் பள்ளு, குருவிப் பள்ளு என்ற தலைப்பில் ஒருநூலை வெளியிட்டார்.( இந்நூலில் இத வெளிவந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை). வேலப்பணிக்கன் ஒப்பாரியானது    கீழ்கரவை திரு. வ. கணபதிப்பிள்ளை என்பாரால் ‘பவ வரு~’த்தில் (1934) வெளியிடப்பட்டது.

இவ்வாறு முன்னோர் வெளியிட் நூல்களையும் வாய்மாழியில் மட்டும் வழங்கியவையும் கையெழுத்துப்படிகள் மற்றும் ஏட்டுப் பிரதிகள் ஆகியவற்றில் இருந்தவையையும் தொகுத்து ஒப்புநோக்கிப் பதிப்பிக்கும்   முயற்சியை பின்னாளில்  திரு. செல்லையா மெற்றாஸ்மயில் என்பார் மேற்கொண்டார். இதற்கான ஆய்வுநிலை உதவிகளை முல்லைமணி வே. சுப்பிரமணியன் மற்றும் கலாநிதி நா.சுப்பிரமணியன் (இக்கட்டுரையாளர்)ஆகியோர் வழங்கினர். வன்னிவளநாட்டுப்பாடல்கள் என்ற தலைப்புடனான இத் தொகுப்புநூல் ஒட்டுசுட்டான் முல்லை இலக்கியவட்ட வெளியீடாக 1980இல் வெளிவந்தது. அதன்பின்னர் இத்தகு தொகுப்புகள் எவையும் வெளிவந்தனவா என்பது பற்றித் தெரியவில்லை.

3. வன்னிமண்ணின் எழுத்திலக்கியம்: தோற்றமும் உருவாக்கப் பின்புலமும்
வன்னி சார்ந்த எழுத்திலக்கியம் என்ற வகைமையில் அமைந்தவற்றுள் காலத்தால் முற்பட்டவையாக எமக்குக் கிடைப்பவை கண்ணகி வழக்குரை,தக்~pண கைலாச புராணம், திருக்கரசைப்புராணம்,  கதிரைமலைப் பள்ளு,  வெருகல் சித்திரவேலாயுதர் காதல்  வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, என்பனவாகும்.இவை ஏறத்தாழ 14-17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் எழுந்தனவாக அறியப்படுவன. இவற்றுள் முதல் ஐந்து ஆக்கங்களே  இலக்கியம் என்ற சொல்லுக்குச் சிறப்புரிமை பூண்டனவாகும். னின்னைய இரண்டும்  பொதுவாக இலக்கியம் எனப் பேசப்படினும் அவை மொழியமைப்பைக் கருவியாகக் கொண்ட  வரலாற்றுப் தகவற்பதிவுகளாக மட்டுமே கணிபக்கப்படுவனவாகும்.

கண்ணகி வழக்குரை என்பது தமிழகத்தின் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தின்  கதையம்சத்தைத் தழுவி ஈழத்தில் உருவானதாகும்.இப் பேரிலக்கியமானது சிலப்பதிகார மூலக்கதையினின்று குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடுகளைக் கொண்டதாகும். சிலப்பதிகாரக் கதையானது  மானிடப்பெண்ணொருத்தி தனது கற்பின் திறனால் தெய்வநிலை எய்துவதைப் பேசுவதாகும். இதன்   கதையம்சம்மானது தெய்வமே மானுடமாக வருவதான - அதாவது சைவசமயத்தின் அன்னைத் தெய்வமாகிய உமையம்மையே கண்ணகியாக அவதரிப்பதான -  செய்தியை;  தருவதாகும்.

கிழக்குமாகாணத்திலே கண்ணகி வழக்குரை என்ற பெயரில் வழங்கப்பட்டுவரும் இவ்விலக்கியமானது யாழ் குடாநாட்டுச் சூழலில்;   கோவலனார் கதை என்ற பெயரிலும் வன்னிமண்ணிலே    சிலம்பு கூறல் என்ற பெயரிலும்  வழங்கப்பட்டுவருவது.  வன்னியில் முள்ளியவளைக் காடடுவிநாயகர் ஆலயத்திலும் வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா நாட்களில் சிலம்பு கூறல் ஏடுகள் அவற்றுக்கரிய தனி வாசிப்பு முறையுடன் படிக்கப்படுவது மரபாக வழங்கிவரும் வழிபாடுசார் நிகழ்வாகும். அவ்வகயில் இது வன்னிமண்ணுடன் மிகநெருக்கமான தொடர்புடையதாகிறது.

மேற்சுட்டிய  புராண நூல்கள் தலபுராணம் என்ற வகைமை சார்ந்தனவாகும்.இவை முறையே ஈழத்தின் கீழ்த்திசைச் சிவதலங்களான  திருக்கோணமலை (கோணேஸ்வரம்)மற்றும் திருக்கரைசை ஆகியவற்றைச் சார்ந்து உருவான வையாகும். தக்~pண கைலாச புராணம்என்ற ஆக்கத்தின் கதையம்சம்  வடமொழியிலமைந்த மச்சேந்திய புராணம் என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். கோணேசர் கோவிலின் தோற்றம் பற்றிய புராணநிலைப்பட்ட  வரலாற்றை இது எடுத்துரைக்கிறது. மேருமலையின் சிகரமொன்றும் கயிலைமலையின் சிகரமொன்றும் காற்றினால் பறித்து தென்கடல்நோக்கி வீசப்பட்டபோது அவை முறையே ஈழமாகவும் திருக்கோணமலையாகவும் அமைந்தன என்பதும் கயிலையிலிருந்து இராவணனால் கொணரப்பட்டு நிறுவப்பட்ட இலிங்கமே கோணேஸ்வரத்தில் பூசனைக்குரியதாகத் திகழ்கிறது என்பதுமமே இப்புராணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையான செய்திகளாகும். பின்னாளில் கயவாகு  மற்றும் குளக்கோட்டன் ஆகியோர் செய்த திருப்பணிகள் தொடர்பான செய்திகளையும்  இவ்வாக்கம் பேசுகிறது.

கிழக்கிலங்கையிலுள்ள ‘திருக்கரசை’ என்ற தலம் சார்ந்து உருவான புராணமே  திருக்கரசைப்புராணம். இத்தலம் அகத்தியமுனிவரால் நிறுவப்பட்டது என்பதான புராணச்செய்தியை இவ்வாக்கம் எடுத்துரைக்கிறது.

கதிரைமலைப்பள்ளு மற்றும்  வெருகல் சித்திரவேலாயுதர் காதல் ஆகியன முறையே பள்ளு மற்றும் காதல் ஆகிய சிற்றிலக்கிய வகைசார்ந்த ஆக்கங்களாகும். கதிரைமலைப்பள்ளு என்ற ஆக்கம்    கதிரையப்பர் பள்ளு எனவும் வழங்கப்படுவதாகும். இது  கதிர்காமத் தலத்தின்  வேலவப் பெருமானைப்  பாட்டுடைத்தலைவராகக் கொண்டதாகும். பள்ளு என்ற இலக்கிய வகையானது விவசாயச் சூழலின் குடும்ப சமூக உறவுள் சார்ந்துதாகும். விவசாய நிலவுடைமையாளர் ,அவரது பண்ணைக்காரன் மற்றும் அவனது இருமனைவியர் ஆகியோரைக் கதைமாந்தராகக் கொண்ட நாடகப்பாங்கான இலக்கியவகையே, இது.   இல்விலக்கிய வகைசார்ந்த முதலாவது ஆக்கமாக இக்கதிரைமலைப்பள்ளு நூலே ஆய்வாளர்களாற் கணிக்கப்படுகிறது.

இவ்வாக்கமானது  ஈழத்தின் விசாயச் சூழலொன்றை எமது கவனத்துக்கு இட்டுவருகின்றது. இச்சூழலானது முல்லை மாவட்டம் சார்ந்ததென ஊகிக்க முடிகின்றது.    இதன் பாடல்கள்சில இம்மாவட்டத்தின் முள்ளியவளைக் கிராமத்தின் காட்டுவிநாயகப் பெருமானைக் குறிப்பிடுகின்றன. இக்கிராமப் பகுதியிலேயே இது வாய்மொழியாகப் பாடப்பட்டும் வந்துளது. இதன் ஏட்டுப்பிரதிகள் சிலவும் இச் சூழலிலேயே கிடைத்துள்ளன. இவற்றால் இவ்விலக்கிய ஆக்கமானது இப்பிரதேசம் சார்ந்து உருவாகியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.   

திருக்கோணமலைக்குத் தென்பகுதியிலுள்ள ‘வெருகல்’ என்ற கிராமத்தில் உறைந்துள்ள  சித்திரவேலாயுதப் பெருமான் மீது பாடப்பட்ட ஒரு அகப்பொருள் தழுவிய ஆக்கமே வெருகல் சித்திரவேலாயுதர் காதல் ஆகும். 421 கண்ணிகளையுக் கொண்ட  .இவ்வாக்கம்  தம்பலகாமத்தைச் சேர்ந்த வீரக்கோன் முதலி என்பவரால் பாடப்பட்டதாகும். இவ்வாக்கம்  16 அல்லது 17ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படுகிறது. 

வரலாற்றுப் பதிவுகளாக அமைந்தவற்றுள்    வையாபாடல் என்ற ஆக்கம், முல்லைத்தீவு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டப் பகுதிகளிலும் அவற்றோடு மருவியுள்ள  வடமாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம் ஆகியவற்றின்  பகுதிகளிலும் வன்னியர் குடியேற்றங்கள் நிகழ்ந்தமை பற்றிய செய்திகளைத் தொல்நினைவுகளிலிருந்த மீட்டளிக்கும் பதிவாக அமைந்ததாகும்.  வையாபுரி ஐயர் என்பாரால் இயற்றப்பெற்றதாக அறியப்படும் இவ்வாக்கம் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்கருத்தாகும்.

கவிராஜவரோதயர்  என்பாரால் இயற்றப்பெற்றதாக அறியப்படும்  கோணேசர் கல்வெட்டு என்ற ஆக்கமானது கோணேஸ்வரம் கோயிலுக்குச் சோழவேந்தன் வரராமதேவன் மகன்  குளக்கோட்டனும் இலங்கை மன்னனான கயவாகு  என்பானும் மேற்கொண்ட திருப்பணிகளை எடுத்துரைப்பதாகும். இது 17ஆம்நூற்றாண்டில் எழுந்திருக்கலாம் என ஆய்வாளர் கருதுவர்.

மேற்படி எழுத்திலக்கிய ஆக்கங்கள் வன்னிப்பிரதேசத்தின் சமயமரபுகளோடு தொடர்புடையவை என்பது வெளிப்படை. சைவசமயத்தைப் பேணிநிற்கும்  சமூக மாந்தரின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுமரபுகளுடன் தொடர்புடையவையே இவை என்பது அவற்றின் தெலைப்புகளிலிருந்தே உணர்ந்துகொள்ளக் கூடியதாகும். வன்னிப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக தமிழர் சமூகம் பண்பாட்டுவளத்துடன் வாழ்ந்துவந்துளது  என்பதை உறுதிப்படுத்திநிற்கும் வரலாற்று ஆவணங்கள் என்பதான கணிப்பு இவ்விலக்கிய ஆக்கங்களுக்கு  உரியது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கிய செய்தியாகும்.

இத் தொடர்பிலே மேற்சுட்டிய வரலாற்றுப் பதிவுகளான வையாபாடல், கோணேசர் கல்வெட்டு ஆகியன உருவாவதற்குப் பின்புலமாக அமைந்த அரசிற் சூழல் தொடர்பான    சிறப்புக் குறிப்பொன்றையும் இங்கு  அவசியமாகிறது.

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள் என்பதும் அவர்கள் தொப்புள்கொடி உறவு கொண்டவர்கள் என்பதும் ஏலவே நிறுவப்பட்டுவிட்ட வரலாற்றுச் செய்திகளாகும். காலத்துக்குக் காலம் தமிழகத்திலிருந்து இம்மண்ணுக்கு படையெடுத்து வந்த  தமிழக வேந்தர்களில் ஒருசாரார் (சோழர்கள்)    ஒருகாலகட்டத்தில் - கிபி.1017 இல் - ஈழம் முழுவதையும் தம் ஆதிக்கத்துள் கொணர்ந்தனர். இவ்வாறு ஈழத்தில்  சோழர்கள் நிறுவிய ஆதிக்கமானது  கி.பி 1070இல் சிங்கள இளவரசனான முதலாம் விஜயபாகுவால் முடிவுக்குக் கொணரப்பட்டது. இவை வரலாற்றில் பதியப்பட்ட செய்தியாகும் .

இவ்வாறு சோழருக்கெதிராக முதலாம் விஜயபாகு பெற்ற வெற்றியைத்  தெடர்ந்து  பல கட்டங்களில் ஈழத்தின் அன்றை தலைநகராகத் திகழ்ந்த பொலநருவைக்கு வடபகுதியிலமைந்த தமிழ்ப் பிரதேசங்கள் பலவும் சிங்களவர்களின் ஆக்கரமிப்புகளுக்கு  உட்பட்டிருக்க வேண்டும் என்பது உய்த்துணரக்கூடியதாகும். அவ்வப்பிரதேசங்களின் தமிழர் தத்தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் போராட்டங்களையும் பண்பாட்டுப் பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பர். அதே வேளை சோழர் ஆட்சியிலும் அதற்கு முன்னும் பின்னும் தமிழகத்தினின்ற புலம்பெயர்ந்து ஈழத்தின் பல்வேறு பாகங்களில் குடியேறிக்கொண்டிருந்த தமிழர்கள் தத்தம் ஆட்சியதிகார எல்லைகளை வலுப்படுத்திக்கொள்ள முயன்றிருப்பர்.

இவ்வாறான அரசியற் சூழலில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளைத் தொகுத்துப் பேணிக்கொள்வதற்கும் அவற்றினூடாக வரலாற்றைக் கட்டியமைத்துக் கொள்வதற்குமான ஆர்வம் உண்டாவது இயல்பே.இவ்வார்வத்தின் அடிப்படையாக அமைவது பிரதேச உரிமையுணர்வு ஆகும். இவ்வுணர்வுநிலையிலேயே வரலாற்றுப் பதிவுகள் எனத்தக்க ஆக்கங்கள் உருவாகின்றன. வையாபாடல், கோணேசர் கல்வெட்டு ஆகிய உருவான அரசியற் சூழலை இவ்வாறு நாம் ஊகிக்க வேண்டியுள்ளது.  இத்தொடர்பிலே பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையவர்கள் தந்துள்ள ஒரு கணிப்பை இங்கு பதிவுசெய்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்

“ தகராறு இருந்து உரிமை நிறுவப்படும்போது ,உறுதி எழுதிவைக்கும் எண்ணம்
ஏற்படுகிறது. இலங்கை வரலாற்றுத் தொடக்க காலத்தில் தகராற இரந்தது. உரிமை
பெற்ற சிங்களவரிடையே தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் என்பன தோன்றின.
.இடைக்காலத்திலே தகராறு இருந்து உரிமைபெற்ற தமிழரிடையே கைலாயமாலை,
வையாபாடல்,  கோணேசர் கல்வெட்டு…முதலியன தோன்றின.2

பேராசிரியரவர்களின் இவ்வுரைப்பகுதியிலே கைலாயமாலை எனப்படுவது வையாபாடல், எழுந்த காலப்பகுதியை ஒட்டி  அதைப்போலவே யாழ்ப்பாணப் பகுதியிலெழுந்த ஒரு வரலாற்றுப்பதிவு ஆகும்.

4.. நிறைவாக…
வன்னி மண்ணின பண்டைய இலக்கியங்களின் தோற்றம் தொடர்ச்சி என்பன தொடர்பான  மிக முக்கிய செய்திகளை  இதுவரை நோக்கினோம். இவற்றின் தொடர்ச்சியாக கடந்த 19ஆம்நூற்றாண்டின் இறுதி முதல் நவீன இலக்கியங்கள் என்ற அடையாளப்படுத்தப்பெறும்  நாவல்,சிறுகதை,கவிதை மற்றும் நாடகம் ஆகிய வகைகளும் வன்னிமண்ணில் உருவாகத் தொடங்கின. இவை தொடர்பான வரலாறு தனிநிலையில் நோக்கப்படவேண்டியதாகும்.  என்ற குறிப்புடன் இக்கட்டுரை நிறைவடைகிறது.


குறிப்புகளும் சான்றுகளும்
1. இக்கட்டுரைக்கான சான்றாதாரங்களாக அமையும் முக்கிய நூல்கள்

அ. லூயிஸ், ஜே.பி. இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு-‘MANUAL  OF       THE VANNI   DISTRICTS (VAVUNIYA  AND  MULLAITTIVU) OF  THE NOTHERN   PROVINCE,  CEYLON'     என்ற  நூலின் தமிழாக்கம்) வெளியீடு:வற்றாப்பளைகண்ணகி அம்மன்  ஆலய பரிபாலன சபை. சேமமடு பதிப்பகம் .சேமமடு. இலங்கை,.2012.
ஆ.சுப்பிரமணியம். முல்லைமணி வே. வன்னியின் கதை,குமரன் புத்தக இல்லம், கொழும்பு
இ. சுப்பிரமணியன், கலாநிதி நா.  கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள் பார்வைகள் பதிவுகள் - தொகுதி 2 பதிப்பாசிரியர்: கௌசல்யா சுப்பிரமணியன். சவுத் விஷன்    வெளியீடு.சென்னை .2005.(இந்நூலில் இடம்பெற்றவையான, “ஈழத்துத் தமிழிலக்கியத்தின் தோற்றமும் தொடர்ச்சியும்” (ப.1-24)மற்றும் வன்னிவள நாட்டுப் பாடல்கள்”(438-443)  ஆகிய இருகட்டுரைகள்இக் கட்டுரையாக்கத்திற்கான முக்கிய தகவல்களைத் தந்துதவின. 

2. வேலுப்பிள்ளை, பேராசிரியர் ஆ. “தொடக்க கால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்” தொடக்கப்  பேருரை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இலங்கை.1986

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 18 November 2015 08:17