ஆய்வுக்கட்டுரை படிப்போமா?

முன்னுரை
வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றச் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கருவிகளைக் கொல்லர்கள் வடிவமைத்துத் தந்துள்ளனர். அவ்வாறு கொல்லர்கள் கருவிகளை வடிவமைப்பதற்கும், தாம் வடிவமைத்தக் கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்கும் பட்டைத் தீட்டுவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லர்கள் – அறிமுகம்

கொல்லர்கள் பொற்கொல்லர், இரும்பு கொல்லர் என இருவகைப்படுவர். இவர்களில் இரும்பு கொல்லர்கள்,

“வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”        புறம். 312.3

என்பதற்கு ஏற்ப மன்னன் மற்றும் வீரர்களுக்கு தேவையான இரும்பாலாகிய போர்க்கருவிகளைச் செய்து கொடுப்பது கடமையாகும். இக்கருவிகளைச் செய்தவர்கள் “கருங்கை வினைஞர்”, “கருங்கைக் கொல்லன்” என அழைக்கப்பட்டுள்ளனர்.

பெயர்க்காரணமும் வேறுபெயரும்
கொல்லன் தனது உலைக்களத்தில் தீ மூட்டும் போது கரியை அடுத்து உலையிலே போடுவதனால் அவன் கை எப்போதும் கரிய நிறம் உடையதாக இருக்கும். அதோடு இரும்பைக் காய்ச்சி அடுத்து சம்மட்டியால் அதனை ஓங்கி அடித்துக் கொண்டேயிருப்பதால் அவன் கைகள் காய்ந்து உரம்(வலிமை) ஏறியதாக சுரசுரப்பாகக் காணப்படும். இதனைக் கண்ட அக்காலப் புலவர், ”கருங்கைக் கொல்லன்” (புறம்.170.15) என்று குறிப்பிட்டுள்ளார்.

“இரும்பு பயன்படுக்குங் கருங்கை கொல்லன்
விசைத்தறி கூடமொடு பொடரூஉம்”            (புறம். 170. 15-16)

“இரும்பு வடித்தன்ன மடியாமென் தோற்
கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅர்”          (பெரும்பாண். 22-23)

இரும்புத் தொழில் செய்யும் கொல்லனுக்கு மேற்கூறப்பட்ட பெயர்கள் மட்டுமின்றி,

“கருங்கை கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே”        (புறம். 180. 12-13)

என “வேல் வடிப்பவன்” என்ற பெயரும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

கொல்லர்களின் கடமைகள்
புறநானூற்றில் மகனைப் பெற்று வளர்த்து விடுதல் தாயின் கடமையாகவும் அவனை நற்பண்புகளினால் நிறைந்தவன் ஆக்குவது தந்தையின் கடமையாகவும் குறிப்பிடும் புலவர், அடுத்ததாக அவன் போர் புரிவதற்கு வேண்டிய, “வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லர் கடனே” (புறம். 312. 3) என்று குறிப்பிட்டுள்ளார். தாய் தந்தையர்க்கு அடுத்த இடத்தில் கொல்லன் இடம் பெற்றிருப்பது அவனது பணி முக்கியத்துவம் வாய்ந்ததை அறியமுடிகிறது.

புதுப்படைக்கருவிகளை ஆக்குவது மட்டும் இவர்களின் கடமையன்று. மாறாக சிதைந்து போன படைக்கருவிகளைப் பழுதுபார்ப்பதும் அவர்களது கடமை என்பதை,

“பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்”         புறம் 95. 4-5

என்ற பாடலடி விளக்குகின்றன. அதோடு அரத்தால் கோடரியைச் செப்பம் செய்து கொடுத்து வந்ததையும்,

“கருங்கைக் கொல்லன் அரஞ்செயல் வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் இலையழிந்து”        புறம். 36. 6-7

என்ற பாடல் கூறுகிறது. கொல்லர்கள் பணிபுரியும் இடம் “கொற்றறை” (புறம். 95.5) என்று அழைக்கப்பட்டுள்ளது.

ஏழூர்க்கு ஒரு கொல்லுலை
ஒவ்வொரு ஊரிலும் கொல்லுலைகள் இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை. மாறாக ஏழு ஊர்க்கும் பொதுவான ஒரு கொல்லுலை மட்டுமே இருந்ததாகக் குறுந்தொகை (172. 5-6) கூறுகின்றது.

”ஏழுர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போல”               (குறுந். 172. 5-6)

அக்காலத்தில் போர்கள் அடிக்கடி நடைபெற்றதால் போர்க்கருவிகள் அதிகம் தேவைப்பட்டன. இவை தவிர பயிர்த்தொழில் மற்றும் பிற பயன்பாட்டுக் கருவிகளையும் கொல்லர்களே செய்து தந்துள்ளனர்.

சமூகத்தில் கொல்லர்க்களுக்கிருந்த மதிப்பு
வேல் வடிப்பது கொல்லனின் கடமை என்றாலும் ஈர்ந்தூர் கிழான் என்னும் மன்னன் தனக்கு வேண்டிய கருவிகளைச் செய்து தருமாறு தானே நேரடியாகச் சென்று (புறம். 180. 10-13) வேண்டி நிற்கும் அளவிற்குக் கொல்லனுக்கு அக்கால சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளது.

“ஆந்தன் விரக்குங் காலை தானெம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்
கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே”        (புறம். 180. 10-13)

என மன்னனே நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளதனால் சமூகத்தில் அவனுக்திருந்த மதிப்பை உணர முடிகிறது.

அதோடு மன்னன் ஆள் அனுப்பாமல் தானே நேரடியாக சென்று கொல்லனிடம் வேண்டுவதன் மூலம் கொல்லன் உடனே பணிந்து உடனடியாக போர்க் கருவிகளைச் செய்து கொடுப்பான் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கொல்லர்களின் அறிவியல் அறிவு
கொல்லர்கள் இரும்பின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். கிடைத்த தாதுக்களை உலையிலிட்டு அதனோடு கரியையும் நீரையும் (இரும்பு உண்நீர் – புறம். 21.8) விட்டு நன்றாக காய்ச்சி இரும்பைத் தனியாகப் பிரித்து எடுத்து வேண்டிய வடிவங்களுக்கு ஏற்ப சம்மட்டியால் (புறம். 170. 15-17) கருவிகளைத் தட்டி உருவமைத்து விட்டு (புறம். 312.3) அவற்றை நீரில் அமிழ்த்து குளிரச் செய்திருக்க வேண்டும். இரும்பைப் பழுக்கக் காய்ச்சி, வேண்டிய வடிவில் சம்மட்டியால் தட்டிய பின்பு, நீரில் குளிர வைப்பதைப்  போல அன்றும் இவ்வாறு செய்திருக்க வேண்டும்.

இரும்புக் கருவி செய்வதின் பல்வேறு தொழில் நுட்பங்களை அறிந்த கொல்லர்கள் தாங்கள் உருவாக்கிய இரும்புப் பொருள்களுக்குச் சாணைப் பிடிக்கும் தொழிலையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று படம்பிடித்துக் காட்டுகிறது.

“கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் இலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்”        (புறம். 36. 6-8)

இப்பாடலில் கொல்லன் அரத்தால் கோடாரிக்குச் சாணைப் பிடித்த செய்தியும், அவ்வாறு சாணைப் பிடிக்கப்பட்ட நீண்ட கையையுடைய கோடாரி வெட்டுதலால் சோலைகளில் உள்ள காவல் மரங்கள் அனைத்தும் சாய்ந்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாகச் சங்க காலத்தில் கோடாரியானது அரத்தால் சாணை ஏற்றப்பட்ட உண்மை தெளிவாகிறது.

இவ்வாறாக கொல்லர்கள் இரும்பு தாதுக்களை உலையிலிட்டு துருத்தி மூலம் காற்று செலுத்தி உருக்குவது முதல் அதற்கு உருவம் கொடுத்து சாணேற்றுதல் வரை உள்ள அனைத்தையும் செய்தது அவர்களது அறிவியல் அறிவைப் புலப்படுத்துகின்றன.

கொல்லர்களுக்கான கருவிகள்
பழந்தமிழர்கள் வீரத்தின் வழியே எதையும் அறிந்திருந்தனர். வீரத்தை நிலைநாட்ட படைகளும் படைக்கருவிகளும் தேவைப்பட்டன. அவற்றில் படைக்கருவிகளைச் செய்து கொடுப்பவர்கள் கொல்லர்களே ஆவர். எனவே கொல்லர்களுக்கு அக்காலத்தில் அதிக செல்வாக்கு இருந்துள்ளது.

வேல் போன்ற போர்க்கருவிகளைச் செய்வதற்குக் கொல்லர்களுக்குச் சில கருவிகள் தேவைப்பட்டுள்ளன. அந்நிலையில் தங்களது தொழிலுக்குத் தேவையான மிகவும் இன்றியமையாத கருவிகளை இரும்பிலேயே செய்துள்ளனர்.
அக்கருவிகளில் குறிப்பிடத்தக்கன துருத்தி, உலைமூக்கு, குறடு, சுட்டுக்கோல், சம்மட்டி, உலைக்கல், அரம் என்பனவாகும்.

இவற்றில் துருத்தி, உலைமூக்கு, சம்மட்டி, உலைக்கல், அரம் பற்றிய செய்திகள் மட்டுமே புறநானூற்றில் காணப்படுகின்றன.

துருத்தி
துருத்தி என அழைக்கப்படும் கருவி இரும்பு வேலை செய்யும் கொல்லர்கள் உலையிலுள்ள நெருப்பின் வெப்பத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தும் ஒருவகை தோற்கருவியாகும்.

தோலால் ஆக்கப்பட்டிருக்கும் இக்கருவி பொதுவாக உலையோடு பொருத்தப்பட்டிருக்கும். தோல் பாகத்தில் துருத்தியின் குழாய் ஒன்று களிமண்ணால் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும். அக்குழாயின் மறுபக்கம் உலையோடு இணைக்கப்பட்டிருக்கும்.
துருத்தி என்பதற்கு “ஆற்றிடைக்குறை, வீசி ஆடும் சூதாட்டம், தோல்பை, இசைக்கருவி வகை, நெருப்பினை ஊதி எரித்திட உதவும் தோல் அல்லது ரப்பரால் ஆன கருவி, நீர் வீசும் கருவி, வயிறு, துட்டப் பெண்” 1 என தமிழ் தமிழ் ஆங்கில  அகராதி விளக்கம் தந்துள்ளது.

துருத்தி பொதுவாக கையினாலோ அல்லது கால்களினாலோ இயங்கும் தன்மையுடையது. இக்கருவியைக் கையினாலோ கால்களினாலோ அமுக்கும் பொழுது காற்று உலைக்குழாயின் வழியாக உலைக்குள் சென்று எரிந்து கொண்டிருக்கும் கரி மேன்மேலும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கச் செய்கிறது. தொடர்ந்து பல மணி நேரம் துருத்தியை இயக்க வேண்டியிருப்பதால் கைகளால் இயக்குவதை விட கால்களால் இயக்குவதே சோர்வு ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் புறநானூற்றில்,

“பிடி உயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின்
ஓவு உறழ் இரும்புறம் காவல் கண்ணிக்”        புறம். 345.8-9

என கைகளால் பற்றி ஊதப்படும் துருத்தி பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

இதன் வாயிலாக துருத்தி என்னும் கருவி விரிந்து சுருங்கும் தன்மை உடையது என்பதையும் அவை கைகளால் இயக்கப்பட்டுள்ளமையையும் அறியமுடிகின்றன.

உலைமூக்கு
கொல்லுலையில் பொருத்தப்பட்டிருக்கும் துருத்தியின் குழாய்ப்பகுதிக்கு உலைமூக்கு என்று பெயர். அதாவது துருத்தியும் உலையும் இணையும் இடத்திற்கு “உலைமூக்கு” என்று பெயர். “கொல்லன் உலை நாசி” என்றும் இதனை அழைப்பர்.

தமிழ்மொழி அகராதியில், “குருகு, சிவை” 2 ஆகிய பெயர்கள் உலைமூக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

துருத்தியின் உலைமூக்கு பொதுவாக ஒரு துவாரம் உடையதாகவே காணப்படும். ஆனால் சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இருதுவாரங்கள் கொண்ட உலைமூக்கைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

”பிடி உயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின்
ஓவு உறழ் இரும்புறம் காவல் கண்ணிக்”        புறம். 345. 8-9

பிடியானை மூச்சு விட்டாற்போன்று காற்றை உலையில் செலுத்தும் உலைத்துருத்தியின் உலைமூக்கு இரு துவாரங்களை உடையது போன்று இரட்டைக் கதவமைந்து கன்னிமயம் காணப்பட்டதை மேற்கண்ட பாடல் விளக்குகின்றன.

இவற்றின் மூலம் ஒரே துருத்திக் குழாய் இரு துவாரங்களைக் கொண்ட குழாயாக அமைப்பதன் மூலம் உலையிலுள்ள வெப்பத்தை அதிகரிக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை பண்டைக் காலத்துக் கொல்லர்கள் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது.

சம்மட்டி
கொல்லர்கள் பயன்படுத்தும் ஒருவகை சுத்தியலின் பெயரே “சம்மட்டி” என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இரும்புக் கட்டிகளைச் சூடாக்கிப் பட்டைக் கல்லில் வைத்து அடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவியே சம்மட்டியாகும். இதற்குத் தமிழ்மொழி அகராதியில், ”கூடம்” 3 என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதனை, ”HAMMER” என அழைப்பர். தற்காலத்தில் இதனைச் சுத்தியல் என அழைப்பர்.

புறநானூற்றுப் பாடலொன்றில் கூடம் பற்றிய குறிப்பு உள்ளது.

”நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
இரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்”            புறம். 170. 14-16

இப்பாடலில் பிட்டங்கொற்றன் என்னும் மன்னன் பகைவர்க்குக் கூடத்தின் வலிமையைப் போன்றவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட குறிப்பு மூலம் கூடம் அதாவது சுத்தியல் கொல்லனது முக்கியமான கருவிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. பொதுவாகக் கொல்லன் உலைக்கல்லில் இரும்பைச் சூடாக்கி, தனக்கு வேண்டிய வடிவத்தில் அதனை அடித்து வடித்தெடுப்பதற்குச் சம்மட்டியைப் பயன்படுத்துவதைத் தற்காலத்திலும் காணமுடிகின்றது.

உலைக்கல்
உலைக்கல் என்பது கொல்லன் தனது தொழிலுக்குப் பயன்படுத்தும் ஒரு இன்றியமையாத கருவியாகும். காய்ந்த அல்லது சூடாக்கப்பட்ட இரும்பை ஒரு கல்லின் மேல் வைத்து கூடத்தினால்(சம்மட்டி) அடித்து கொல்லர்கள் தங்களுக்கு வேண்டிய கருவிகளைச் செய்வார்கள். காய்ந்த இரும்பை வைத்து அடிக்கப் பயன்படும் கல்லே “உலைக்கல்” என அழைக்கப்பட்டது. இதற்குத் தமிழ்மொழி அகராதியல், “அடைக்கல் அல்லது பட்டைக்கல்” 4 ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கருவியும் இரும்பிலேயே செய்யப்பட்டிருக்கக் கூடும்.

கல்லாக இருந்தால் அதன்மீது இரும்பை வைத்து கூடத்தினால்(சம்மட்டி) ஓங்கி அடிக்கும் பொழுது அது உடைந்து போகக் கூடும். அதனால் மிகவும் உறுதியும் வலிமையும் வாய்ந்த இரும்பினால் செய்யப்பட்ட கல் போன்ற வடிவுடைய கருவியையே பழந்தமிழர்கள் உலைக்கல்லாகப் பயன்படுத்தி வந்திருக்கலாம். புறநானூற்றில்,

“விசைத்தெறி கூடமொடு பொரூஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே”            புறம். 170. 16 – 17

என்று பிட்டங்கொற்றன் என்னும் மன்னனின் ஆண்மை உலைக்கல்லின் உறுதிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிட்டங்கொற்றன் இரும்பைப் பயன்படுத்தும் கருங்கைக் கொல்லனின் உலையில் உள்ள உலைக்கல்(பட்டைக்கல்) போன்று பகைவர்க்கு வலிய ஆண்மை உடையவன் என்பதாகும்.

இரும்புக் கருவிகள் பயன்படுத்தும் போது நாள் ஆக ஆக அவற்றின் கூர்மைத் தன்மை குறைந்து மழுங்கியும், நுனி்ப்பகுதி சிதைந்து ஒடிந்தும் விடுவதுண்டு. அப்படிப்பட்டவை கொல்லன் உலைக்கலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் உலைக்கல்லானது, சூடாக்கப்பட்ட இரும்பைப் பட்டைக் கல்லில் வைத்து, சம்மட்டியால் மாறி மாறி அடித்து, விரும்பிய வடிவில் மாற்றி அமைப்பதற்குப் பயன்பட்டு உள்ளதை அறிய முடிகின்றது.

அரம்
உலோகங்களை அறுக்கும் கருவி அரம் என்று அழைக்கப்படுகிறது. அராவும் கருவியாக இது பயன்படுத்தப்படுவதால் இதற்கு இப்பெயர் வழக்கில் வந்திருக்க வேண்டும்.

அரம் என்பதற்கு, “சங்கு அறுக்கும் கருவி, கைவாள், மரம் அறுக்கும் இரம்பம், வானரம், வாளரம் முதலியவற்றிற்குக் கூர்மை வைக்க உதவும் கருவி, சக்கராயுதத்தின் பல், அரம் போன்ற கூர்மையுடைய பரற்கல், படைக்கல வகை” 5 என பெருஞ்சொல் அகராதி விளக்கம் தந்துள்ளது.

பொதுவாக இக்கருவி கொல்லர்கள் பயன்படுத்தும் கருவியாகும். இரும்புப் பொருட்களைக் கூர்மை செய்வதற்குப் பயன்படும். இதனை ஆங்கிலத்தில், “rasp” என அழைப்பர். புறநானூற்றில்,

“முழாஅரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையொடு சுறுக்கி”            புறம். 375. 4 – 5

என்ற பாடலடிகள் அரத்தின் அமைப்பை விளக்குகின்றன. அதாவது அரத்தின் வாய் முழவினைப் போன்று பருத்த அடியினை உடைய பனை மரத்தின் மடலிலுள்ள கருக்கு போன்று காணப்பட்டதாக அறிய முடிகின்றது.

அறத்தின் பயன்பாடு குறித்த செய்தியும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
“கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்ப”                புறம். 36. 6-8

என்ற பாடலடிகள் கொல்லன் அரத்தால் கோடாரியைக் கூர்மை செய்த செய்தியை விளக்குகின்றன.

“எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே”            புறம். 87. 3-4

என ஒரே மாதத்தில் எட்டுத் தேர்களைச் செய்யக் கூடிய தச்சர்களும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளனர்.

மன்னர்களுக்குரியது, படைத்தலைவர்களுக்குரியது, படைவீரர்களுக்குரியது என பல்வேறு விதமான தேர்களைப் பண்டை காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு அவர்கள் மன்னர்கள் மற்றும் பிறருக்குரிய தேர் போன்றவற்றைச் செய்யும் போது மரப்பலகைகளை அறுப்பதற்கு அரத்தினைப் பயன்படுத்தி இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது.

தனிப்பாடல் உணர்த்தும் கொல்லர்களின் வாழ்வியல்

தனிப்பாடல் திரட்டில் கம்பர் பாடியதாகக் கூறப்படும் வெண்பா ஒன்று இடம்பெற்றுள்ளது.

“ஆழியான் ஆழியயன் எழுத்தாணி யென்பார்
கோழியான் குன்றெறிய வேலென்பான் – ஊழியான்
அங்கை மழுவென்பானருள் பெரிமா வண்டூர்ச்
சிங்கன் உலைக்களத்தி்ற் சென்று”   

(தனிப்பாடல் திரட்டு, கம்பர் பாடல் எண் . 27)

என்ற பாடலில் கருணையால் சிறந்த மாவண்டூரிலுள்ள சிங்கனது உலைகளத்திற்குச் சென்று திருமாலும் பிரமனும் தங்களுக்குச் சக்கரமும், எழுத்தாணியும் செய்து தர வேண்டுமென்று முறையிட்டுள்ளனர். கோழி கொடி உடையவனாகிய முருகன் கிரவுஞ்ச மலையை எறிவதற்குத் தனக்கு வேல் செய்து தருமாறும், சிவபெருமான் தன் கையில் தாங்குவதற்குரிய மழுவாயுதம் செய்து தருமாறும் வேண்டிய செய்தி கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிவபெருமான், முருகன், திருமால், பிரமன் ஆகிய தெய்வங்களை் கூட கொல்லர்களிடம் வந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களைச் செய்து தருமாறு கேட்டிருப்பதன் மூலம் சமுதாயத்தில் கொல்லர்களுக்கிருந்த மதிப்பும் செல்வாக்கும் நன்கு விளங்குகிறது.

முடிவுரை
பழந்தமிழர்கள் தம் வீரத்தை நிலைநிறுத்த போர்களை விரும்பிச் செய்துள்ளனர். இப்போர் செய்வதற்குத் தேவையான கருவிகளைக் கொல்லர்களே செய்து கொடுத்துள்ளனர். அக்கொல்லர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் உவமைகளாகவே எடுத்தாளப் பெற்றுள்ளன. அவற்றின் தன்மைகளைப் புலவர்கள்   தெரிந்த பொருள் கொண்டு விளக்கியுள்ளனர்.     கொல்லர்கள் சங்ககால சமுதாயத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையுடனும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து வந்துள்ளனர். அக்காலக் கட்டத்தில் கொல்லர்கள் எல்லாராலும் அறியப்பட்டவர்களாக இருந்து வந்தனர் என்பது ஆய்வின் மூலம் அறிய முடிகின்றது.

அடிக்குறிப்புகள்
1. சுரா, தமிழ் தமிழ் ஆங்கில அகராதி, ப. 568
2. நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ப.49
3. நா.கதிரைவேற்பிள்ளை, மு.நூ., ப.98
4. நா.கதிரைவேற்பிள்ளை, மு.நூ. ப.935
5. பெருஞ்சொல்லகராதி (தொகுதி-1), ப.333

துணைநூற்பட்டியல்
1. புறநானூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, சென்னை
2. சுரா, தமிழ் தமிழ் ஆங்கில  அகராதி, சென்னை
3. கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை.
4. பெருஞ்சொல் அகராதி, சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - முனைவர் வி. அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) சிவகாசி – 626 123 -