ஆய்வு: சங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்

Monday, 11 May 2015 21:46 - சி.புவியரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46.- ஆய்வு
Print

ஆய்வுக்கட்டுரை!மகாபாரதப்போர் நடந்த காலம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பது இன்றுள்ள கோட்பாடாகும். இன்று நமக்கு கிடைத்துள்ள தொன்மையான சங்கத் தமிழ் இலக்கியம் எல்லாம் மகாபாரத காலத்துக்குப் பிற்பட்டனவாகும். ஆகவே மகாபாரதச் சங்க இலக்கியங்கள் முதலான தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்திருப்பது நம் அறிந்த ஒன்றாரும். அவை, “உலகப்பெருங்காப்பியங்களுல் மகாபாரதமும் ஒன்றாகும். உலக இலக்கியங்களுல் அளவாற் பெரியது மகாபாரதமே என்பர் மோனியர் வில்லியஸ்.”1 இவை வட நாட்டில் நடந்த மகாபாரப் போரிடைத் தென்னாட்டு மூவேந்தர்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியாகும். அங்ஙனம் வரலாற்றின் மகாபாரதக் கதை தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியத்தில் புறநானுறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை ஆகியவற்றுள் மகாபாரதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் புலவர் பெருமக்கள் கையாண்டுள்ளனர். அவற்றின் தன்மைகளைக் பற்றி விளக்குவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.

புறநானூறு

புறநானூற்றில் இரண்டாவது பாடல் மகாபாரதச் செய்தியை குறிப்பிடுகிறது. புலவார் முரஞ்சியூர் முடிநாகராயர் பெருங்சோற்றுதியஞ் சேரனைப் பாராட்டுங்கால் மகாபாரதப்போர் நிகழ்ச்சியை இணைத்துப் பாடியுள்ளார்.

“அலங்கு ளைப்புரவி யைவரொடு சினைஇ

நிலந்த லைக்கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”2

இப்பாடல் காட்டும் செய்தி குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் அறிஞர்களிடையே தோன்றுகிறது.

மகாபாரதப் போரில் உதவிப்புரிந்த சேரலாதனை போற்றி பாடியவர் தலைச்சங்கத்துப் புலவரான முடிநாகராயர் எனவும், “அலங்குளைப்புரவி” என்ற இப்பாட்டு, மகாபாரத காலத்து எனவும் பேராசிர்யர் ரா.இராகவையங்கார் குறிப்பிடுவர். “உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்தது மகாபாரத காலத்திலன்று; அவர் நினைவாக நீத்தார் கடன் செய்ததையே இப்புறப்பாடல் சுட்டுகிறது; இது கடைச்சங்ககாலப் பாட்டாகும்” என்று மயிலை சீனி. வேங்கடசாமி கருதுவார். “இப்போரில் பெருஞ்சோறு கொடுத்தான் என்பதன் கருத்து நூற்றுவார் ஒழிய ஐவருக்குத் துணைப்படை போக்கினான்” என்பா; வ. சுப. மாணிக்கம். இப்புறப்பாடலின் காலம் பற்றிய கருத்தில் வேறுபாடிருந்தாலும், மகாபாரதப்போரில் சேரற்குத் தொடர்பிருந்த கருத்தினைப் பலரும் உடன்படுகின்றனார். இப்புறப்பாடலில் ஐவராவர் பாண்டவர் அல்லார் நூற்றுவராவர் துரியோதனதியார் அல்லார் இங்கு குறிக்கப்படும் போர் மகாபாரதப் போரன்று எனவும், ஐவர் என்பது வேளிரையும் நூற்றுவர் என்பது  சாத வாகனரையும் குறிக்கும் எனவும், “வடகொங்கு நாட்டுப் போரில்  சேர அரசன் தன் குறுநில மன்னராகிய வேளிர் ஐவர்க்கு உதவிய செய்தியை இங்குச் சுட்டப்படுவது எனவும்” ந.சுப்பிரமணியம் அவர்கள் கூறிப்பிடுகிறார். எனவே பாண்டவர்களையும் கௌரவர்களையும் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் தெளிவான குறிப்புகள் காணமுடிகிறது.

புதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் கொடைச் சிறப்பினையும் குமட்டூர்க் கண்ணார் பாரட்டுவார். அங்ஙனம் பாரட்டுங்காளை, நெடுஞ்சேரலாதனின் கொடையையும் ஆற்றலையும் அக்குரன் ஆற்றலொடு ஓப்பிடுவர். அவை,

“போர்தலை மிகுத்த ஈரைம் பதின்மரோடு

துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை

அக்குரன் அனைய கைவண் மையையே”3

“அக்குரன் பாரதத்தில் கூறப்பட்டுவரும் தலை ஏழு வள்ளல்களுல் ஒருவனுமாகிய அக்குரன் போலும், கர்ணன் என்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை.” என்று உரைப்பர் டாக்டா; உ.வே. சாமிநாதையார். தமிழ்ப் பாரத நூல்களுள் அக்குரவனைப் பற்றிய ஏதுமில்லை; ஆனால் வியாசபாராதத்தில் குறிப்புண்டு.

சிறுபாணாற்றுப்படை

ஓய்மானாட்டு நல்லிக் கோடானை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்துரைப்பார். அவன் விருந்தளிக்கும் சிறப்பினைப் பாடுங்கலை மடைநூல் நெறியிற்றப்பாத பல்வேறு சுவை அடிசிலைப் பாணர்க்கு நல்கினான் என்றும், அம்மடைநூற் செய்தான் பீமன் என்றும் குறிப்பர்.

“காவரி யூட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சை புகழோன் தன்முன்

பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்

பனுவலின் வழாஅப் பல்வோறு அடிசில்”4

இதனைச் சங்கஇலக்கியத்தில் பீமனால் ஆக்கப்பட்ட சமையநூல் வழக்கில் இருந்ததை அறியமுடிகிறது. அர்ச்சுனன் காண்டவக் காட்டினை அழித்த குறிப்பும் உள்ளது. குரந்துறையுங்கால் பீமன் விராடமன்னன் அரண்மனையில் அடிசிற்கலை வல்லவனாய்ப் பணி செய்தான் என்பது ஒப்புநோக்கதாகும்.

பெரும்பாணற்றுப்படை

பெரும்பாணற்றுப்படை தொண்டைமான் இளந்திரையனின் மறச்சிறப்பைக் குறிக்குங்கால்,

“வெண்கோட் டிரும்பிணம் குருதி ஈர்ப்ப

வீரைம் பதின்மரும் பெருதுகளத் தவியப்

பேரமர்க் கடந்த கொடுஞ்சி செடுந்தோர்

ஆராச் செருவினைவர் போல

ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ

கச்சி யோனே கைவண் தோன்றல்”5

என்று எடுத்துரைப்பர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பாண்டவர்கள் நூற்றுவர்களை வெற்றி கொண்டார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

கலித்தொகை

பிறசங்க இலக்கியங்களிலும் மகாபாரதச் செய்திகள் மிகுதியாக உள்ளது. பாலை பாடிய பெருங்கடுங்கோ பாலைநிலத்தின் வெம்மையைச் சுட்டுங்கால் பாரத நிகழ்ச்சி ஒன்றினை உவமையாக்குவர். பாலையின் வெம்மையினால் மூங்கிற்காடுகள் தம்முள் உராய்ந்து தீப்பற்றி எரிகின்றன் அக்காட்டினுள் அகப்பட்ட களிறு தன் இனத்தைக் காப்பாற்றுகின்றது. அந்நிகழ்ச்சி, தீயினால் அழியும் அரக்கு வீட்டினின்றும் தன் உடன் பிறந்தவர்களை பீமன் காப்பாற்றியது போன்றது என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவை,

“வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற

முகத்தவன மக்களுள் முதியவன்; புணர்ப்பினால்

ஐவரென் றுலகேத்து மரசா;கள் அகத்தரா

கைபுனை அரக்கில்லைக் கதழொர் சூழ்ந்தாங்கு

களிதிகழ் கடாஅத்த கடங்களிறு அகத்தவா

முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல்

ஓள்ளுரு அரக்கில்லை வளிமகன் உடைத்துத்தன்

உள்ளத்துக் கிளை களோடு உயப்போகுவான் போல

எழுவுறழ் தடக்கையின் இனங்காபக்கும் எழில்வேழம்”6

அஸ்தினாபுர அரசவையில் பீமன் வஞ்சினம் மொழிந்த போது துரியோதனனை தொடையில் அவனைக் கொல்வேன் என்றான். இறுதியில் பீமன் வஞ்சினம் முடித்தான். இந்நிகழ்ச்சியை ஒரு களிறு தான் பகை யானையை மார்பிற் குத்திக்கொன்றதைக் குறிப்பிடுவது போல் ஓப்பிட்டு காட்டுகிறார் ஆசிரியர்.

“மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்

குறுங்கறுத் திடுவான்போல்; கூரிநுதி மடுதததன்;

நிறஞ்சாடி முரண்தீர்த்த நீண்மருப் பெழில்யானை”7

இதன் ஆசிரியர் ஆடவர் ஏறுதழுவுங் காச்சியினைச் சித்தரிக்கிறார். ஓர் எருது தன்னை அடக்க வந்தவனைக் கோட்டினால்(கொம்பு) குத்தி அவனை தூக்கித் திரிகின்றது. அந்த காட்சியினைப் பாஞ்சாலியின் கூந்தலைத் தொட்டுழுத்து வந்த துச்சாதனைக் கொல்வதாக வஞ்சினம் கூறிய பீமன் முடிவில் அவனைக் கொன்று தன் கைமேலே தூக்கிக்கொண்டு ஆடும் போர்க்களக் காட்சியொடு ஓப்பிடுவர்.

“நோக்கஞ்சான் பாயந்த பொதுவனைச் சாக்குத்தி

கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றங்காண்

அஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியான்

நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண்தன்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்”8

குருகுலத்தின் வில்லரசனான துரோணரைத் திட்டத்துய்மன் கொன்றதால், அவனுடைய மகனாகிய அசுவத்தாமன் மகாபாரதப்போர் முடிந்த நாள் இரவிலே பாசறையினுட்புகுந்து துய்மனை கொன்று பழி தீர்த்துக்கொண்டான். இந்நிகழ்ச்சியும் கலித்தொகையில் 101 பாடலிலேயே குறிக்கப்பெற்றுள்ளது.

“ஆரிருள் என்னன் அருங்கங்குல் லந்துதன்

தூளிற் கடந்தட்டுத் தந்தையைக் கொன்றனைத்

தோளிற் றிருகுவான் போன்ம்”9

இவைகளுக்கு உரை எழுதிய நச்சினாரிக்கினியர் “வருவதற்கரிய கங்குலிலே அரிய இருளென்று கருதானைய் வந்து துரோணசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலே வென்று கொன்று தன் தோளால் தலையைத் திருகும் அசுவத்தாமாவைப் போலும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பு, பாரதக்கதைக்கு மாறுபாடாக உள்ளது. துரோணரைக் கொன்றவன் திட்டத்துய்மன் எனவும் விடுமனைக் சிகண்டி கொன்றவன் எனவும் மகாபாரதம் கூறுகின்றது.

“துரோணரைக் கொன்றவன் திட்டத்துய்மனும்

வீடுமரைக் கெபன்றவன் சிகண்டியுமாதலால்

இங்கே சிகண்டியை என்பது திட்டத்துய்மனை

யேன்றிருக்க வேண்டியதென்று தோன்றுகிறது

என்று கலித்தொகைப் பதிப்பாசிரியர் அனந்தராமையரும் குறிப்பிடுவர்”10.

“புரிபுமேற் சென்ற நூற்றுவர் மடங்க

வரிபுனை வல்வில் ஐவர் அட்ட

பொருகளம் போலம் தொழூஉ”11

மகாபாரதப் போர்க்களம் போன்று ஏறுகளின் செயலால் அமளிதுமளிப்பட்டுத் தொழு, காட்சி அளித்தது என்பார் ஆசிரியர்.

நூற்றுவர்க்குத் துணைநின்ற ஞாயிற்றின் மகனாகிய கன்னனைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

“ஆயனை அல்லை பிறவோ அமரருள்

ஞாயிற்றுப் புத்தோள் மகன்”12

சங்க இலக்கியத்தில் காணப்படும் மகாபாரதச் செய்திகளைத் தொகுத்துக் காணும் பொழுது கலித்தொகையில் மிகுதியாக (6) குறிப்புகளைக் அறிய முடிகிறது. மகாபாரதச் செய்திகள் மரச்சிறப்பையும் கொடைச்சிறப்பையும் வெளிப்படுத்துவதற்கு உவமைகளாகப் பயன்பட்டுள்ளன. அவை பீமன் துரியோதனைத் தொடையிலே அடித்து விழ்த்திமை - அசுவத்தாமனின் தந்தையைக் கொன்றவனைப் பழிதீர்த்துக் கொண்டமை - பாண்டவர்கள் நூற்றுவர்களை வெற்றி கொண்டமை - மகாபாரதப் போர்க்களச்சிறப்பு போன்ற செய்திகள் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இச்செய்தி தமிழகத்தில் பரவியிருந்தமையால்தான் புலவர்கள் உவமையாக எடுத்தாண்டனர் என்பது அறியமுடிகின்றன.

மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களை நிகழ்ச்சியினாலும், வட மொழிப்பெயர் மாற்றத்தினாலும், தந்தை பெயரினாலும் சுட்டப்பெருதலை சங்க இலக்கியத்தில் காணலாம். அருச்சுனன் “பாவரியூட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன்” என்றும், துச்சாதனன் “அங்சீரசையியல் கூந்தற்கை நீட்டியான்” என்றும், பீமன் “வஞ்சினம் வாய்த்தான்” என்றும் சிகழ்ச்சியின் தொடர்பால் சுட்டப்பெறுகின்றனர். திருதராட்டிரன் என்று இயற்பெயர் குறிக்காமல் “வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன்” என்று தமிழ்ப் பெயர்ப்படுத்திக் குறிக்கப் பெயர்தலையும் காணலாம். பீமன் ‘வளிமகன்’ என்றும், கன்னனை “ஞாயிற்றுப்புத்தோள் மகன்” என்றும் தந்தை பெயரால் குறிப்பார். பாண்டவர்களைச் சுட்டுவதற்கு ஐவர் என்றும், கௌரவர்களைக் குறிப்பதற்கு நூற்றுவர், ஈரைம்பதின்மர் என்றும் பெயர்களே காணமுடிகின்றன.

எனவே சங்ககாலத்தில் மகாபாரதக் கதையும், கதை மாந்தர்களும் நன்கு அறிய இப்பெயர்க் குறிப்புக்களே சான்றாதாரமாகும். இக்குறிப்புகள் குறைவாக இருப்பினும் சங்கப் புலவர்கள் செறிவாகச் சொல்லியிருக்கும் முறையே நோக்கும் போது, மகாபாரதக்கதை சங்க காலத்திலேயே பரவியிருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது.

துணை நின்றவை

1. Indian Wisdom p. 371

2. History of Tamilnad I 52-53

3. பதிற்றுப்பத்து பாட்டு 14: 5-7

4. சிறுபாணாற்றுப்படை அடி : 238-241

5. பெரும்பாணாற்றுப்படை அடி : 414-420

6. கலித்கொகை பா, 25 : 1-9

7. கலித்கொகை பா, 52 : 2-4

8. கலித்கொகை பா, 101 : 16-20

9. கலித்கொகை பா, 101 : 30-32

10. கலித்கொகை 11 ப 624-625 அனந்தராமையா; பதிப்பு

11. கலித்கொகை பா, 104 : 57-59

12. கலித்கொகை பா, 108 : 12-13

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 12 May 2015 02:00